Saturday, April 4, 2020

பால பாரதியின் ராமசெயத் திருப்புகழ்

மிகவும் கொண்டாடப்பட வேண்டிய ஒரு நூல், கம்பர் தந்த பெருங்காவியத்திற்குப் பின்னர் ஸ்ரீராமகாதையைப் பாடுபொருளாகக் கொண்டு எழுந்தநூல்களுள் மிக அரிய நூல் என்றால், ஸ்ரீராமாயணத் திருப்புகழ் என்னும் ராமசெயத் திருப்புகழ் ஆகும். ஸ்ரீராமநாடகக் கீர்த்தனை செய்த ஸ்ரீஅருணாச்சலக் கவிராயர் காலம் பதினெட்டாம் நூற் முற்பகுதி. ’இராமாயணத்தைக் கம்பர் விருத்தங்களிலும், பாலபாரதி சந்தப் பாக்களிலும், பிறர் பிறபாக்களிலும் பாடினார்கள். அருணாச்சலக் கவிராயர் நாடகமாகப் பாடினார்’ என்று கூறுவர். அதற்கேற்ப 17ஆம் நூறைச் சேர்ந்த நூல் ராமசெயத் திருப்புகழ் என்னும் நூலாகும். திருப்புகழ் என்றாலே ஸ்ரீஅருணகிரியாரின் முருகன் திருப்புகழ்தான் என்னும் அளவிற்கு, திருப்புகழ் என்பதுவே சந்தப் பாக்களின் வகைப்பாட்டிற்குப் பெயராக அமைந்துவிட்டது போலும்! ஸ்ரீவில்லிப்புத்தூரில் பிறந்த ஸ்ரீவைஷ்ணவர் ஆகிய பாலபாரதியின் இயற்பெயர் ஸ்ரீராமய்யங்கார் என்று நூலின் குறிப்பு பேசுகிறது. தம் கவியாற்றலால் பாலபாரதி என்று அழைக்கப்பட்ட இவர் ஸ்ரீஅருணகிரியாரின் திருப்புகழ் நூலில் தோய்ந்தவர் என்பதும் தெரிகிறது. ஆனால் அது என்ன இராமசெயத் திருப்புகழ்?

‘ராமசெயம் என்பதன்றி யானறிவ திங்கோர் கிஞ்சில்
ஏதுமிலை அஞ்ச லென்று வருவாயே’

என்று இவரே பாடுவதற்கேற்ப சதாசர்வ காலமும் ஸ்ரீராமஜெயம் என்றே வாய்மணக்கும் பழக்கம் உடையார் என்பதனால் போலும் தாம் பாடிய ஸ்ரீராமாயணத்திற்கே இராமசெயத் திருப்புகழ் என்று பெயர் சூட்டினர்! ஆனால் யாரும் அவர் காலத்தில் தம் பெருமை பிறர் அறிய வாழும் வாய்ப்பு அரியதுதான் போலும்! ஏனெனில் நூலிறுதியில் ஒரு குறிப்பு இங்ஙனம் நினைக்கத் தூண்டுகிறது. ’வால பாரதியாகிய இராமய்யங்காரை நிந்தித்த போது ‘இந்தக் கோயிலார் முன்னே அரங்கேற்றுகிறதில்லை; இந்திரன் சபையிலே அரங்கேற்றுகிறேன்’ என்று கோயிலாருக்குச் சொல்லி இந்திரனுக்கு ஒரு சீட்டுக் கவி எழுதி அனுப்பினார்’ என்ற ஒரு குறிப்பு காணப்படுகிறது. ( அம்மாக்கண்ணு நிகழ்ச்சியில் நமது மகாகவி பாரதியும் ஏதோ ஆழ்ந்த நினைவில் இவ்வாறே ‘மாதலி! தேரை விடு’ என்று சொன்னதாகச் சொல்லுவர். கவிஞர்கள் எக்காலத்தும் ஒரு தன்மையரே போலும்!)

தேவ லோகத்திற்கு அவர் எழுதி அனுப்பிய சீட்டுக்கவியும் கிடைத்திருக்கிறது நம் அதிர்ஷ்டம்தான்.

”உந்திய செந்தமி ழான்வால பாரதி யோலையுண்மை
இந்திர ரானவ ரெல்லாங் காண்க யானுமங்கே
செந்தமிழ் பாடவும் பொன்னாடு பார்க்கவும் சீர்பெறவும்
வந்திட வேணும் விடுதியும் சோடித்து வைத்திடுமே.”

பாருங்கள் எத்தனை தமிழ்க்காதல்! வானவர் நாட்டிற்குப் போவாராம். அங்கும் போய் செந்தமிழ் பாடுவாராம். அதற்கு அவருக்கு விடுதி தயார் செய்து வைக்க வேண்டுமாம். இங்கிருந்து கட்டளை போயாகிறது இந்திரனுக்கு!

இவராவது பரவாயில்லை. நம்மாழ்வார் இருக்கிறாரே அவர் என்ன சொல்கிறார், ‘நீங்கள் திருவாய்மொழியை நன்கு உரு ஏற்றி மனப்பாடமாக ஆக்கிக் கொண்டு விடுங்கள். ஏனெனில் இங்கு விட்டு நீங்கள் என்னப்பன் ஸ்ரீவைகுண்டம் போனீர்கள் என்றால் அங்கிருக்கும் திவ்யசூரிகள் எல்லாம் உங்களைப் புடை சூழ்ந்துகொண்டு, ‘எங்கேயிருந்து? திவ்யதேசமா? திருவாய்மொழி நன்றாகத் தெரிந்திருக்குமே. எங்கே திருவாய்மொழி சொல்லுங்களேன் கேட்போம். என்று ஒரு குழு முடித்ததும் இன்னொரு குழு இப்படி மாற்றி மாற்றிக் கேட்டுக் கேட்டு உங்களைக் கொண்டாடியவண்ணம் இருப்பார்கள். அப்பொழுது பார்த்து ‘ஹி ஹி எனக்கு அவ்வளவா பாடம் இல்லை. ‘ என்று நீங்கள் சொன்னால் நன்றாகவா இருக்கும். அசிங்கமில்லையா? எனவே இப்பொழுதே ஆரம்பியுங்கள்’ என்கிறார்.’

பழைய ஓலைச்சுவடியிலிருந்து இந்த நூலைப் பதிப்பித்திருக்கிறார் திரு கோ பாலசுந்தர நாயகர், ஸ்ரீவெங்கடேஸ்வரா ஓரியண்டல் சீரீஸ் என்னும் வரிசையில். 1954ல்.

தாம் பாட அனுமனின் அருள் வேண்டும் பாட்டே அடேயப்பா!

பாரதிநெஞ் சாலு ணர்ந்து
மேல்வருமென் றேதெ ளிந்து
பாடியநன் காதை பண்டை

மொழிவேதம்

பாவவரந் தூய மந்த்ரம்
நோய்முழுதுந் தீர்ம ருந்து
பாலமிர்தந் தேனெ திர்ந்து

வினையீர்வாள்

ஈரமில்வெம் பாரை நெஞ்சும்
நேருருகும் பாட லண்டர்
ஈசனயன் பேணு மின்பம்

மறவாதோர்

யாதுநினைந் தாலு மந்த
வாழ்வுதருந் த்யாக சிந்தி
ராமசெயம் பாட வந்து

துணையாவாய்

வாரிகடந் தேகி வஞ்சி
ஆருயிர்பொன் றாது கண்டு
மாநகரஞ் சூறை கொண்டு

களமீதே

வானின்மருந் தேகொ ணர்ந்து
வீரர்மயங் காவி தந்து
மாவிருதிண் டோள்வி ளங்க

அமராடிச்

சோரர்மடிந் தேகு மன்று
தேவிபதஞ் சூடி நின்று
சோபனமுங் கூறி வந்து

சுடுதீமுன்

சூழ்பரதன் காண முந்தி
ஆவிபுரந் தேயு கந்த
தூதனெனும் பேர்பு னைந்த

பெருமாளே.

இன்று கொஞ்சம் நம் கவிராயரை வரவேற்கும் கமிட்டியில் இந்த்ரசபையில் சேர்ந்து கொள்வோமே!

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

பல ஆண்டுகளுக்கு முன்னர் ஸ்ரீரங்கத் திருவீதியில் எம்பார் ஸ்வாமியின் ஹரிகதா காலக்ஷேபம். ஓர் அரிய கருத்தைக் கூறுகிறார்; ஸ்ரீகிருஷ்ணனுக்கு ஒரு சுகர் வாய்த்தது போல் ஸ்ரீராமபிரானின் பால்ய லீலைகளை யாரும் சொன்னதாகத் தெரியவில்லை. ராம பாலன் என்ன குறும்பு பண்ணினான். குழந்தை ரகுவரன் என்ன சேட்டைகள் செய்தான். அவனைச் சமாளிக்க தாயார் கௌசலை தேவியார் என்ன தொல்லையின்பத்து அனுபவம் பெற்றாள் என்றெல்லாம் நமக்குத் தெரியவில்லை - என்று ஓர் நயத்துடன் ஆதங்கத்துடன் அவர் கூறினார். அவருடைய ஆதங்கத்தை ஓரளவு தீர்க்கும் விதத்தில் அமைந்திருக்கிறது பால பாரதியின் இராமசெயத் திருப்புகழ். வடதேசத்தில் ஸ்ரீராமலாலா என்னும் பக்தி சம்ப்ரதாயம் இருக்கிறது. அஃது முழுவதும் பாலன் ராமன் என்ற மூர்த்தியிடம் பக்தி நெறியால் ஆனது. ஆனால் இங்கு பால பாரதி பாடும் போது என்ன என்னவெல்லாம் சொல்லிவிடுகிறார்!

பயிர் இருக்கிறது. ஆனால் வேலியில்லை.
புனல் இருக்கிறது ஆனால் கரை இல்லை.
குழந்தை இருக்கிறது ஆனால் அஃது ஊட்டம் பெறத் தாயும் தாய்ப்பாலும் இல்லை.
குயில் இருக்கிறது ஆனால் இளவேனில் காலம் என்னும் வசந்தம் இல்லை.
மயில் இருக்கிறது ஆனால் அது தோகை விரித்தாட கார்மேகம் எதுவும் இல்லை.
தேசம் இருக்கிறது ஆனால் அதை ஆள வீரன் இல்லை.
படை இருக்கிறது. ஆனால் யானைகள் கிடையாது.
கடலில் செல்லும் கலம் இருக்கிறது. ஆனால் திசைக் காற்று கிடையாது.
தவம் செய்கிறார்கள் ஆனால் யாரிடமும் அரியதான அடக்கம் பொறுமை என்ற குணங்கள் இல்லை.
பூசுரர் இருந்தாலும் யாருக்கும் வேதம் தெரியவில்லை
பெரும் சபை இருக்கிறது. ஆனால் நல்ல அருங் கவிகள் யாரும் இல்லை.
கவிகள் இருக்கிறார்கள். ஆனால் அவர்களுக்கோ பல நூல் ஆய்ந்த சீலம் கிடையாது.
இல்லம் இருக்கிறது. இல்லாள் கிடையாது.
அழகான கொடியனையார் உண்டு ஆனால் நாணம் கிடையாது.
குடும்பம் இருக்கிறது ஆனால் விருந்து என்றால் விலக்கு என்கிறார்கள்.
குறை மட்டும் இருக்கிறது ஆனால் அதைக் களைய சேமிப்பு இல்லை.
இளமை இருக்கிறது ஆனால் நன்மை என்பதன்பால் ஆர்வம் இல்லை.
கமலம் குளத்தில் இருக்கிறது ஆனால் அதன் இதழை அலர்த்திச் செவ்வை உணர்த்த கதிரொளி இல்லை.

இதெல்லாம் உவமைகள். இதைப் போலே உடல் என்று பிறவியெடுத்தால் ஞானம் வாய்க்க வேண்டும். அதுவும் முழுமையான ஞானம். உடலின் பயனே பூரண ஞானத்தைப் பெறுதல். ஆனால் உடல் இருக்கிறது எனக்கு. ஞானம் எங்கே? ஞானம் இல்லா வாழ்க்கைக்கு உதாரணம்தான் முன் சொன்னதெல்லாம்.

ஐயா! ராகவா! கொஞ்சம் கருணை காட்டு. இதுதான் என் நிலைமை. இப்படிப்பட்ட எனக்கும் உன் இரு தாளிணை துணை வழங்குவது... புரிகிறது... மறைகளே தேடும் பாதங்கள் அவை. நான் அவற்றை விழைவது என்பது என் யோக்கியதையில் ஒருநாளும் கிடைக்காது. அதனால்தானே உன் காரணமற்ற பெருங்கருணையையே நம்பி மன்றாடுகிறேன். என்றோ எனக்கு உன் தாளிணை துணை தருவாய்?

காரணமற்ற அவ்யாஜ கருணைக்குப் பெரும் உதாரணமே சிறுகுழந்தைதான். பெரும் விலை உயர்ந்த ஒன்றைக் குடுகுடு என்று ஓடி முன்பின் தெரியாத யாரிடமோ கொடுக்கும். அதுபோல் ஒரு குழந்தையிடம் மன்றாடுகிறார். அந்தக் குழந்தையோ நானே இங்கு கட்டுப்பட்டுக் கிடக்கிறேன். எங்க அம்மா விட்டாத்தானே நான் வந்து தரமுடியும்? என்று சொல்கிறது.

அந்தக் குழந்தைதான் சிசுவான ஸ்ரீராகவன். ரகுகுல திலகன். அங்கு என்ன காட்சி என்று பார்ப்போம்?

தாயான கௌசலையார் பாலொடு நெய் கூட்டி ஒரு சங்கில் நிறைத்து மணிவாயிடைப் புகட்டுகிறாள். ஆனால் குழந்தையோ குடிக்காமல் திமிறுகிறது. குதப்புகிறது. வாயில் விரலை வைத்துத் தெறித்து அழுகிறது. அதற்கு ஏற்கும்படியாக இனிப்பான மதுரம் கலந்து குழைத்து விழுங்கப் பண்ணுகிறாள். பிறகு ‘அதான் பலே பலே சமத்து ‘ என்று அந்தப் பாலாடையைக் குழந்தையின் தலையைச் சுற்றித் திருஷ்டி கழிப்பது போல் சுற்றி, அதன் மூக்கு தரையில் படும்படியாக அழுத்தி எழுந்து, பிறகு கைகளை விரித்து அதனுள் குழந்தையை அகப்படுத்தி நிமிர்த்தித் தொடை மீது இட்டுக் கொண்டு தெளிந்த நீரினால் விட்டு வழித்துத் துடைத்து, மணமிக்க பொடிகளைத் தூவித் திருமேனியெங்கும் திமிர்த்து விளங்கும்படியாகத் தடவி, நெற்றியிலே நிலப்பொடியை அணிவித்துக் காப்பிட்டுச் சட்டென்று யாரும் பார்க்காத நேரத்தில் தரையில் குதிக்க முடியாத உயரத்தில் தொட்டிலைக் கட்டி அதில் விட்டு அங்கு மலரிதழ்களை நெருக்கிப் பரப்பி மிருதுவாக ஆக்கிய சயனத்தில் மிக உகக்கும் படியாகக் கிடத்தி அந்த உகப்பில் உதிர்க்கும் குழந்தைச் சிரிப்பில் களித்து, ‘என் செல்வமே! கண்வளர்வாய்’ என்று அந்தத் தாயாரான கோசலையார் சிறிதும் அங்கும் இங்கும் பராக்கு இடாமல் தொட்டில் கீழேயே கிடந்து வளர்க்கின்ற அழகான ராமனே! கமலாக்ஷனே! ரகுநந்தன! எங்கள் பெரிய பெருமாளே! மறை தேடும் இருதாள் துணை வழங்க நினைப்பது அந்த ஒரு நாள் எந்நாளோ?

பாடல் -

’வேலியடை யாப்பயிர் நெடுங்கரை யற்றபுனல்
தாய்முலைபெ றாச்சிறு குழந்தைத ருக்குமிள
வேனிலடை யாக்குயில் கரும்புய லற்றமயில்

அரசாளும்

வீரனையி லாப்புவி மதங்கய மற்றபடை
கால்விசை பெறாக்கல மரும்பொறை கெட்டதவம்
வேதமறு பூச்சுர ரருங்கவி யற்றவவை

பலநூலின்

சீலமுண ராக்கவி மடந்தையை யற்றமனை
நாணமறு கோற்றொடி விருந்துவி லக்குகுடி
சேர்பொருளி லாக்குறை பிரிந்தந லத்திளமை

கதிராளி

தேசுமரு வாக்கம லமிங்கிவை யொத்துமுழு
ஞானமறு யாக்கையொ டுழந்தவெ னக்குமறை
தேடுமிரு தாட்டுணை வழங்கநி னைப்பதுவு

மொருநாளோ

பாலொடுநெய் கூட்டியொ ருசங்குநி றைத்துமணி
வாயினிடை காட்டிவி ரல்கொண்டுதெ றித்தழுது
பாகுபடு தேக்கொடு குடைந்துகு டித்தவுடன்

முறையாலே

பால்வளைய நீட்டிமு டிநின்றுசு ழற்றியது
பூமிமிசை மூக்குற மருங்குக விழ்த்துவிரி
பாணிகொடு மீட்டுமு டலங்கமு லுக்கியிரு

தொடைமேற்கொண்

டேலமுது நீர்க்கொடு குடைந்துது டைத்துமண
மேவுபொடி போட்டுமெய் திமிர்ந்துநி லப்பொடியி
னேறுமொரு காப்பினி தணிந்துயர் தொட்டிலினுள்

வளர்வாயென்

றேடுசெறி சேக்கையி லுகந்துகி டத்திநனி
கோசலைப ராக்கற விருந்துவ ளர்க்குமபி
ராமகம லாட்சர குநந்தன நற்பெரிய

பெருமாளே.
*
விசுவாமித்திரர் கௌசல்யா ஸுப்ரஜா ராமா என்று பாடினார். கௌசல்யையின் நல்ல மகவே என்றும் பொருள் சொல்லலாம். கௌசல்யையால் நன்கு வளர்க்கப்பட்ட மகவே என்றும் பொருள் சொல்லலாம் என்று இந்தப் பாடல் விளக்கம் காட்டுகிறது போலும்!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment