Saturday, April 4, 2020

ஸநாதந தர்மம் என்றால் என்ன?

தர்மம் என்றால் என்ன? சநாதன தர்மம் என்பது எதைக் குறிக்கும்? இந்தக் கேள்விகளுக்குப் பலரும் பலவிதத்தில் சொல்லலாம். ஆனால் நம் ஹிந்துமதத்திற்கோ பொதுவான ஆசாரியர் என்று ஒருவரைச் சொல்லவேண்டும் என்றால் அவரே வியாஸ மஹரிஷியாவார். எத்தனை விதமான மக்கள், அவர்களின் பழக்க வழக்கங்கள், பல வழிபாட்டு நெறிகள், பல வேறுபட்டவர்களின் பார்வைகள், அதன் அதன் நியாயங்கள் எல்லாவற்றையும் ஒருங்கே கண்டு, உள்ளவாறு பதிந்து, அவ்வவற்றிற்கானத் தகவுகளையும் எடுத்துக் காட்டிப் பல கிளைகள் கொண்ட ஒரு நிறுவனமாக அந்த ஒற்றை மகானே விளங்குகிறார் என்றால் என்ன வியப்பான விஷயம்! வேதங்களை வகைதொகை படுத்தி, புராணங்களைப் பதியவைத்து கவனத்தில் கொண்டு வந்து, வேதாந்த நெறிக்கான ஒருங்குபடுத்தலையும் சாதித்து ஒரு மனிதர் எத்தனை விதமான சாதனைகள்! அவர் என்ன சொல்கிறார் என்பது மிகவும் யோசிக்க வேண்டிய, ஏற்க வேண்டிய விஷயம் அல்லவா!

வியாஸர் சொல்வது:

’ஸத்யம் தமஸ்தபச்சௌசம் ஸந்தோஷோ ஹ்ரீ: க்ஷமாSSர்ஜவம் | ஜ்நானம் சமோ தயா த்யாநம் ஏஷ தர்ம: ஸநாதந: இதி’

பொருள் - உண்மை பேசுதல், இந்த்ரியங்களினடக்கம், தவம், தூய்மை, ஸந்தோஷம், வெட்கம், பொறுமை, நேர்மை, ஜ்நானம், மனத்தினடக்கம், தயை, தியானம் இவை ஸநாதந தர்மம் எனப்படும்.

ப்ருஹஸ்பதி என்னும் ரிஷியும் கூறுவது - ’ஞானம், யாகம், ஸத்துக்களைப் பூஜித்தல், வேதத்தைத் தரித்தல், கபடமின்மை, என்னும் இவை இஹ பர உலகங்களில் பலனை அளிக்கும் உயர்ந்த தர்மமாக அறியத் தக்கது.’ (இஹ பர உலக நன்மை - ஹிந்துமதம் சொல்லும் அப்யுதயம், நிச்ரேயஸம்)

பஞ்சசிகர் என்னும் முனிவர் கூறுவதும் அதுவே - ‘எப்பொழுதும் போகங்களில் பற்றில்லாமையும், ஆத்மஜ்ஞாநமும் மனிதர்களுக்கு மிகவும் நன்மை.

யாஜ்ஞவல்கியரோ இன்னும் வலியுறுத்திக் கூறுவது யாதெனில் - ’யாகம், ஆசாரம், தமம், அஹிம்சை, தானம், அத்யயனம் எனும் இக்கர்மங்களை விட, யோகத்தினால் ஆத்மாவை தர்சிப்பதே பெரிய தர்மம் ஆகும்’ - இஜ்யாசார தமாஹிம்ஸா தாநஸ்வாத்யாய கர்மணாம் | அயந்து பரமோ தர்மோ யத் யோகேந ஆத்ம தர்சநம் இதி’

ஸநாதந தர்மம் யாது என்று ரிஷிகளின் கருத்து இதுவாகும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

No comments:

Post a Comment