Thursday, December 12, 2024

நிலைப்பாடு 14

ஏன் நீங்கள் சாதாரண இந்து என்று இவ்வளவு விளக்கிச் சொல்வதைக் காட்டிலும் சநாதன இந்து என்று சொல்லிக் கொள்ளலாமே? 

சாதாரண இந்துவாக இருப்பது என் நிலைப்பாட்டிற்கு, என் மனப்பான்மைக்குப் போதும் என்று படுகிறது. அதிலும் சாதாரண மனிதன் என்பதுதான் எனக்கு மிகவும் பிடித்த அடையாளம் பார்க்கப் போனால். சாதாரண மனிதர் என்று சொன்னால் உடனே வழிவழியாக வந்த இதற்கு எதிரா? அதற்கு முரணா? மதங்களோடு பிணக்கமா? நாத்திகரா? என்று பலவித கேள்விகள் எழும். ஒன்றை ஆதரிப்பதும், அதனோடு பிணங்கி முரண்படுவதும் ஏதோ ஒரு விதத்தில் அந்த வட்டத்திற்குள்ளேயே முடங்குவதாகத்தான் எனக்குத் தோன்றுகிறது. விஞ்ஞானமும், உலகமும் விரிந்து போகும் போது ஏன் பழைய அடையாளங்களில் மனிதர் முடங்க வேண்டும் என்று தோன்றுகிறது. பரவாயில்லை. சாதாரண இந்து என்பவர் பழமைப் பிடிப்பு மிக்கவர்களிடத்திலும், சித்தாந்தம், சம்பிரதாயம் என்று அர்ப்பணித்துக் கொண்ட தீவிரமானவர்களிடத்திலும் பொதுவாகத் திட்டு வாங்கிக்கொண்டு, கண்டிக்கப்படும் போக்கு உள்ளவராக அறியப்பட்டாலும் இன்றைய அறிவுப் பெருக்கம் நிறைந்த உலகில் மதம், பழமை என்பதற்கெல்லாம் ஒரு பண்பாடு என்ற மதிப்பை மட்டும் தந்துவிட்டு, தன் முன்னேற்றம், அறிவின் வழி, பல துறை அறிவுகளை உள்வாங்கிச் சிந்தித்தல், தவறு எனப்படுவதை விட்டு முன்னேறுதல் என்று பொதுபுத்தியுடன் நடந்து கொள்பவராகத் தெரிகிறார். இல்லை. அதுவும் இல்லை என்று மறுப்பீர்கள் என்றால் சாதாரண மனிதர் என்பதே போதும் என்பேன். 

இல்லை. அதற்குச் சொல்லவில்லை. சநாதனம், சநாதனி என்பதெல்லாம் அநாதிகாலமாக,.. பார்க்கப் போனால் சநாதனம் என்றாலே என்றும் இருப்பது என்றுதானே பொருள். 

அதிலெல்லாம் குழப்பம் இருக்கிறது ஐயா... நானும் பல நூல்களை நோண்டிப் பார்த்தேன். சநாதன தர்மம் என்றால் சமுதாயத்தில் மனிதருக்கு மனிதர், மனிதருக்குத் தனிப்பட இருக்க வேண்டிய, எந்த மனிதச் சமுதாயத்திற்கும் நன்கு நடைபெற நிலவ வேண்டிய நற்குணங்களின் பட்டியல் என்று எட்டு, பத்து, பன்னிரண்டு என்று குணநலன்களைப் பட்டியலிட்டு அதைச் சநாதன தர்மம் என்று சில ரிஷிகளும், சில புராணங்களும் குறிப்பிடுகின்றன. அப்படியென்றால் அதில் வர்ணதர்மம் சேராதுதானே என்று நாம் யோசிப்போம். அதற்கு ஏற்றாற்போல் சில பழைய தர்ம சாத்திரங்களில், உதாரணத்திற்கு ஆபஸ்தம்பர் எழுதியதில், அதற்கு உரையெழும் ஹரதத்தர் என்பவர் வர்ணதர்மம் என்பது சமயாசாரம் என்று வகைபடுத்துகிறார். சமயம் என்றால் மதம்தானே என்று நினைத்தால் அப்படி இல்லையாம். சமுதாயத்தில் பொதுவான நடைமுறைகளைப் பல மனிதர் ஒன்று கூடி விவஸ்தை ஏற்படுத்துதல், அதுதான் சமய ஆசாரமாம். இதற்குப் பெயர் ’பௌருஷேய வ்யவஸ்தை - மனிதர்களால் இயற்றப்பட்ட ஏற்பாடு’ என்று சொல்கிறார் ஹரதத்தர். அதாவது காலத்திற்குக் காலம் மாறக் கூடியது என்று பொருள் படுகிறது. ஓ அப்படியென்றால் இந்த மாதிரி மாறக் கூடிய சமுதாய வழக்கங்கள் இல்லாமல் என்றும் சமுதாயத்தில், தனிமனிதரிடத்தில் நல்வாழ்க்கைக்கு இன்றியமையாது வேண்டப்படும் நற்குணங்கள், அது உலகில் எந்த இடத்தில் மனித சமுதாயம் என்றாலும் அங்கு நிலவ வேண்டிய நற்குணங்கள் இன்ன இன்ன என்று பட்டியலிட்டு அதுதான் சநாதன தர்மம் என்னும் வார்த்தையால் குறிக்கப்படுகிறதோ என்று நினைத்தால், அதனால்தான் அதை என்றும் இருக்கும் ஒழுக்கம் என்று பொருள்பட சொன்னார்களோ என்று நினைத்தால் ஒரு கேள்வி எழுகிறது. மாறிக்கொண்டே இருப்பது மனிதர்களால் ஏற்படுத்தப்பட்ட சமுதாய வழக்கங்கள் என்று சொல்கிறார்கள். மாறாமல் என்றும் இருக்க வேண்டிய நற்குணங்கள் என்றும் சொல்கிறார்கள். பின் ஏன் வர்ணதர்மத்திற்கு இவ்வளவு நூல்கள், அதற்கு இவ்வளவு உரைகள், அந்த உரைகளுக்கு இவ்வளவு விளக்கங்கள்? ஆனால் மாறாமல் இருக்க வேண்டிய நற்குணங்களுக்கு வெறுமனே அங்கங்கே ஓரிரு சுலோகங்கள் அவ்வளவுதான். ஒரு முழு கிரந்தம், சாத்திரம் என்று எதுவும் எழுதப்படவில்லையே? இத்தனை ஆயிரம் ஆண்டுகளில் வர்ணதர்மம் முக்கியப்படுத்தப் பட்டதேயன்றி சமுதாய நற்குணங்களுக்கு என்று ஒரு முழு நூல் எங்கும் காணவில்லையே? 

இங்கு மட்டும் இல்லை. உலக அளவில்கூட சமுதாயம் சிறக்க வேண்டிப் பொதுவாக மனிதரிடையேயும், தனிப்பட ஒவ்வொரு மனிதரிடத்தும் திகழ வேண்டிய நற்குணங்கள், நீக்க வேண்டிய குற்றங்கள் என்று தனிப்பட கவனம் தந்து எழுதப்பட்ட நூல் எந்தப் பண்பாட்டிலாவது உண்டா? கிரேக்கத்தில் அரிஸ்டாடில் அறநூல் என்று எழுதியதில் இவ்வாறு குணநலன்களை எடுத்து ஆராய்கிறார். அதைத் தவிர எதையும் எங்கும் கண்ணுக்குப் படவில்லை. ஆனால் திருவள்ளுவர் எழுதிய திருக்குறளோ இத்தகைய சமுதாய, தனிமனித நற்குணங்களையும், நீக்க வேண்டிய குற்றங்களையும், ஐயம் திரிபற ஒவ்வொன்றுக்கும் பத்து பத்துக் குறட்பாக்கள் பெய்து பெரும் சாதனையாக அன்றோ உலகப் பொதுமறையாகத் திகழ்கிறது! அதற்கு உரைப்பெருக்கம் என்று தமிழில் அன்றோ பெரும் சாதனை, உலகத்தில் நடந்திருக்கிறது! 

ஏன் அவ்வளவு வியாக்கியானங்கள் எழுந்த வடமொழி இலக்கிய உலகில் இதுபோன்று இல்லையா? 

இருந்தால் காட்டுங்கள். ஒரு நூல் முழுதும் மனிதர்க்குப் பொதுவான நற்குணங்களைப் பகுத்தும், தொகுத்தும், விரித்தும் யாக்கப்பட்ட ஒரு நூல். இல்லை. எல்லாம் வர்ணதர்மத்திற்கு வியாக்கியானங்களாக அமைந்திருக்கின்றன. 

ஏன் புராணங்கள் எவ்வளவு இருக்கின்றன. அவற்றில்..? 

அதுதான் சொல்கிறேனே. வாயு புராணம், பிரம்ம புராணம், எல்லாவற்றிலும் ஓரிரு சுலோகங்கள் இந்த நற்குணங்களைப் பட்டியலிட்டு ‘இதம் தர்மம் சநாதனம்’ என்று சொல்லிச் செல்கிறதே அன்றி, அதற்கு மேல் இல்லையே. ஆனால் வர்ண தர்மம் என்று வந்தால் என்ன விரிவு, என்ன விளக்கம்... அதுவே திருக்குறளை எடுத்தால் என்ன அழகாக, அறிவுடைமை, அடக்கமுடைமை, ஒழுக்கமுடைமை, வாய்மை, ஒப்புரவறிதல், அன்புடைமை, ஆள்வினையுடைமை, இடுக்கணழியாமை, இனியவை கூறல், ஈகை, ஊக்கமுடைமை, கண்ணோட்டம், கல்வி, கேள்வி, சான்றாண்மை, செங்கோன்மை, செய்ந்நன்றியறிதல், நடுவுநிலைமை, நட்பு, நாணுடைமை, பண்புடைமை, பெருமை, மானம், வினைசெயல்வகை, வினைத்திட்பம், வினைத்தூய்மை, அருளுடைமை இப்படி நற்குணப் பட்டியல். இதுவே நீக்க வேண்டியவை குறித்து அழுக்காறாமை, இன்னாசெய்யாமை, உட்பகை, கள்ளாமை, கள்ளுண்ணாமை, சிற்றினம் சேராமை, தீவினையச்சம் - எத்தனை நுணுக்கம், என்ன விரிவு உலக மனிதப் பொதுவான நன்மைகளில்! புராணங்கள் என்று குறிப்பிட்டதற்காகச் சொல்கிறேன். இருக்கின்ற புராணங்களிலேயே பக்தி என்னும் கருத்தை நன்கு அழகாகப் பேசும் புராணம் என்று சொல்லப் படுவது பாகவத புராணம். அதில் 7ஆவது ஸ்கந்தம், 11 ஆவது அத்யாயத்தில் யுதிஷ்டிரர் நாரதரிடத்தில் ஒரு கேள்வி கேட்பதாக வருகிறது. என்ன கேள்வி? ‘மனிதருக்கான சநாதனமான தர்மம் குறித்துச் சொல்லுங்கள். கூடவே வர்ணாச்ரம ஆசாரத்தையும் பற்றிச் சொல்லுங்கள், எதனால் மனிதர் உயர்ந்த நிலையை அடைவார்களோ.’ இதில் சநாதனமான தர்மத்தைக் குறித்துச் சொல்லுங்கள் என்று முதல் பகுதியாகவும், கூடவே வர்ணாச்ரம ஆசாரம் குறித்து இரண்டாவது பகுதியாகவும் கேள்வி அமைந்திருக்கிறது. கடைசியில் எதனால் மனிதர் உயர்ந்த நிலையை அடைவார்களோ என்று அடைமொழியாகச் சொல்கிறார். மூல சுலோகத்தையும் பாருங்கள். 

‘பகவந் ச்ரோதும் இச்சாமி ந்ருணாம் தர்மம் ஸநாதனம் | 

வர்ணாச்ரம ஆசாரயுதம் யத் புமான் விந்ததே பரம் ||’ 

இப்பொழுது எனக்கு என்ன குழப்பம் என்றால், மனிதர் உயர்ந்த நிலை அடைவார் என்று அடைமொழி சொன்னது எந்தப் பகுதிக்கு? முதலில் சொன்ன ‘மனிதர்க்கான சநாதனமான தர்மம்’ என்பதற்கா? அல்லது அடுத்துக் கூடவே சொல்லச் சொன்ன ‘வர்ணாச்ரம ஆசாரம்’ என்பதற்கா? ஏன் குழப்பம் என்றால் இருபத்தியோரு நற்குணங்கள், நற்செய்கைகள் என்று பட்டியலிட்டுப் பின்பு ஒன்பது சாதனைகள் பக்திக்கென்று சொல்லிவிட்டு இந்த முப்பதும் நாராயணர் தமக்குச் சொன்ன உயர்ந்த தர்மம் என்று சொல்கிறார் நாரதர். அதில் வர்ணாச்ரமம் வரவில்லை. ஆனால் அடுத்த சுலோகமே வர்ணதர்மம், ஆச்ரம தர்மம் என்று ஆரம்பித்து விடுகிறார் அதே நாரதர் அதே யுதிஷ்டிரரிடம். சொல்லிவிட்டுப் போகட்டும். அதைப் பற்றிச் சொல்லவில்லை. ஆனால் இரண்டாவது பகுதியான வர்ண தர்மம் தான் விரிவாக முழு அத்யாயத்திலும் விளக்கப்ப்டுகிறதே அன்றி முதலில் சொன்ன 21 நற்குணங்கள், அடுத்த 9 பக்தி சாதனைகள், இந்த முப்பது வெறுமனே சுலோகத்தில் சொன்னதுதான். விளக்கம் எதுவுமில்லை. முதல் 21ல் கூட ஸ்வாத்யாயம் என்று வருகிறது. அவரவருக்கான படிப்பு என்று பொருள் சொல்லலாமா? இல்லை அதையும் பழமைப் பற்றாளர்கள் வேதப் படிப்பு, அதற்கான தகுதி வர்ணம் என்று சொல்வார்களா தெரியவில்லை. எதற்குச் சொல்கிறேன் என்றால் சநாதனம் என்றால் எதைக் குறிப்பிடுகிறது என்பது படிக்கும் நமக்கே, அல்லது எனக்கே என்று வைத்துக் கொள்ளுங்கள் குழப்பம் தருகிறது. திருக்குறளோ ஐயத்திற்கே இடமின்றி மனித சமுதாயப் பொதுவிற்கு வேண்டிய நற்குணங்கள் அனைத்தையும் ஐயம் திரிபற விளக்குகிறது. நான் சாதாரண மனிதர் என்பதால், சாதாரண இந்து என்ற நிலையில் திருக்குறளே வாழ்க்கைக்குப் போதுமான அறத்தை நன்கு விளக்கி உரைக்கும் விழுமிய நூலாக உதவுகிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

3 comments: