Monday, October 14, 2024

மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 02

’அவர் யோகத்தில் அமர்ந்தார் என்றால் உடலையே மறந்து விடுவார்’. ‘ஆன்ம உணர்வில் அப்படியே இலயமாகிப் பல நாட்கள் அன்னம், நினைவு எதுவும் இன்றி இருந்தார்’. ‘ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சமாதிப் பரவச நிலை இருக்கிறதே!’ - இப்படிப் பலவிதமான விவரணைகள் நிறைந்ததுதான் நம் பண்பாடு. இருந்தாலும் நோய், உடலுக்கு உபாதை என்று வந்ததும் ஆன்ம உணர்வாவது, ஒன்றாவது! யார் கண்டார்கள்? எல்லாம் படிக்க நன்றாக இருக்கிறதே அன்றி, நாம் அனுபவிப்பதோ வெறும் குத்து வலி, குடைச்சல் வலி, பிடிப்பு, மூச்சு வாங்கறது, ஒரே அசதி, உடல் எல்லாம் யாரோ அடித்துத் துவைத்தாற்போல் வலி. டாக்டரிடம் போனால் வலி தெரியாமல் இருக்க ஏதாவது தருகிறார். தீர்ப்பதற்கு வழி சொல்லய்யா என்றால் பொறுத்துக் கொள், பழகிவிடும் என்கிறார். இது நம் நிலை. 

உண்மையில் யோசித்தால், அப்படியெல்லாம் உடலை மறந்து ஆன்மிக நிலை என்றெல்லாம் உண்டா என்ற சந்தேகம் வரத்தான் செய்கிறது. அப்படி ஒரு நிலை உண்டு என்று நினைக்கக் கொஞ்சம் ஆசுவாசமாக இருக்கிறது என்றாலும் ... எல்லாம் யாரோ எதற்கோ எதையோ எழுதிப் பரப்பி விட்டுவிட்டார்கள். டாக்டர் கொடுக்கிறாரே.. வலி தெரியாமல் இருக்க மாத்திரை, மருந்து, அது மாதிரிதான் வாழ்க்கையின் கொடிய யதார்த்தம் மறக்கடிக்க யாரோ எழுதி வைத்திருப்பது. படிக்கும் போது கொஞ்சம் எம்பினா மாதிரி இருக்கு. அவ்வளவுதான். - இதுதானே நம்மில் பலரும் தேற்றிக் கொள்வது.! 

 இல்லையேல், புத்தம் புதிதாக யாரோ ஆன்மிகம், சாதனை என்று கிளம்பியவர் என்றால், நமக்கும் நாலு திட்டு விடுவார். எல்லாம் கிரமமாக, ஒரு குரு மூலம் தெரிந்து கொண்டு அப்யாசம் செய்தால் குரு கடாட்சத்தால் கிடைக்கும். இந்த மாதிரி தாந்தோணியா முயன்றால் இப்படித்தான் என்று நம் மூக்கில் ஒரு குத்து விட்டுப் பெருமிதம் அடைவார். அவரும் சில காலம் சென்று, கேட்டுப் பாருங்கள். அது ... நம்பிக்கை வேணும் சார். நம்பிக்கைதான் வாழ்க்கை. என்று சொல்லியபடியே நழுவுவதைப் பார்க்கலாம். 

ஆனால் 204 CE ல், எகிப்தில் பிறந்த கிரேக்க ஞானியான ப்ளோடினஸ் (Plotinus) என்பவர் சொல்லும் பொழுது பொளேர் என்று தலையில் யாரோ தட்டியது போல் உணர்வு வரத்தான் செய்கிறது. என்ன சொல்கிறார் என்று நீங்களே பாருங்கள், தமது என்னியட்ஸ் என்னும் நூலில். 

“ Many times it has happened: Lifted out of the body into myself; becoming external to all other things and self-encentered; beholding a marvellous beauty; then, more than ever, assured of community with the loftiest order; enacting the noblest life, acquiring identity with the divine; stationing within It by having attained that activity; poised above whatsoever within the Intellectual is less than the Supreme: yet, there comes the moment of descent from intellection to reasoning, and after that sojourn in the divine, I ask myself how it happens that I can now be descending, and how did the soul ever enter into my body, the soul which, even within the body, is the high thing it has shown itself to be.” (Enneads, Fourth Ennead, VIII 1) 

ஒரு தடவை இல்லை. பல தடவைகள் தமக்கு அத்தகைய அனுபூதி நிலை வாய்த்திருக்கிறது என்றும், அந்த நிலையை விட்டு மீண்டும் தேகத்தைப் பற்றிய நினைவுக்கு வருவதற்கே தமக்கு மிகவும் அயர்ச்சியாக இருந்தது என்றும் சொல்கிறார். அவர் கிரேக்க பாஷையில் பேசி, அது யாரோ பதிவு செய்து, பின்னர் அந்தப் பதியப்பட்ட சுருள்களை யாரோ கண்டு பிடித்து, 1800 ஆண்டுகளுக்கும் மேலாக உருண்டு உருண்டு வந்து, ஆங்கிலத்தில் ஏறி இன்று நம் கையில் வந்த பதிவு இது. ஆனால் நமக்கு விழுகின்ற அடி இன்றைக்கு, இப்பொழுது விழுவது போல் உறைக்கிறது. இவருக்கும், எனக்கும் என்ன தொடர்பு? நான் படிப்பேன் என்று அவர் கண்டாரா? அவர் இப்படிச் சொல்லியிருப்பார் என்று நான் தான் எதிர்பார்த்தேனா? ஆனால் என்னைச் சுற்றியுள்ள பலரைக் காட்டிலும் அவர் எனக்கு மிகவும் நெருங்கிய உறவாக ஆகிவிடுவது எதனால்? அவர் மட்டுமா உறவாக ஆகிறார்! 

’ஊனக் குரம்பையின் உள் புக்கு, இருள் நீக்கி,

 ஞானச் சுடர் கொளீஇ,..” 

என்று கூறுகிற பொய்கையார் புதிய நெருக்கத்தில் பக்கத்தில் நிற்க வில்லையா? 

“எளிதில் இரண்டு அடியும் காண்பதற்கு, என் உள்ளம்! 

தெளிய, தெளிந்தொழியும் செவ்வே!..” 

என்று அவர் சொல்லும் போது பேசுவது பொய்கையாரா அல்லது ப்ளோடினஸா .. குரல் ஒத்திசைந்து ஒலிக்கிறதே! 

”பொய்யாயின எல்லாம் போயகல வந்தருளி 

மெய்ஞ்ஞானமாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே! 

எஞ்ஞானம் இல்லாதேன் இன்பப் பெருமானே! 

அஞ்ஞானம் தன்னை அகல்விக்கும் நல்லறிவே!” (திருவாசகம்)

என்று பேசும் குரல் மணிவாசகமா அல்லது ப்ளோடினஸா? ஆனால் குரல் ஒன்றுதானே? எங்கோ, எந்தக் காலத்திலோ பிறந்த நம் ஆன்ம உறவுகள் ஒருவருக்கொருவர் தீப்பந்தம் கொளுத்திக் காட்டும் காட்சியில் காணாதிருக்க நாம் என்ன மடையரா?  

உடலில் எப்படி ஆத்மா உள் புகுந்து நிலவுகிறது என்று ப்ளோடினஸ் கேட்கும் கேள்விக்குக் காலத்தால் தள்ளி நின்றாலும் பக்கத்தில் ஒலிக்கும் குரலாய் ஸ்ரீஆதிசங்கரரின் ப்ரபோத ஸுதாகரம் சொல்கிறது: 

’சுத்தமான சைதன்யம் புத்தியில் பிரதிபலித்து ஜீவன் என்னும் தன்மையை அடைந்து, கண் முதலிய இந்திரியங்களின் வழியாக உலகப் பொருட்களைக் காட்டி நிற்கிறது’ 

சித்ப்ரதி பிம்ப: தத்வத் புத்திஷு யோ ஜீவதாம் ப்ராப்த:| 

நேத்ராதீந்த்ரிய மார்கை: பஹிரர்த்தாந் ஸோSவபாஸதி|| 

காலத்தால், தேசத்தால், பண்பாட்டால், மொழியால், சூழல்களால் வேறுபட்ட, தூரமான இவர்கள் எல்லாம் நமக்கு அந்யோந்யம் ஆக நெருக்கம் ஆனது எப்படி! 

‘அங்கிங்கெனாதபடி எங்கும் ப்ரகாசமாய், 

ஆனந்த பூர்த்தியாகி, அருளொடு நிறைந்தது எது? 

தன் அருள் வெளிக்குளே அகிலாண்ட கோடியெல்லாம் 

தங்கும் படிக்கு இச்சை வைத்து, உயிர்க்கு உயிராய்த் 

தழைத்தது எது? மன வாக்கினில் தட்டாமல் நின்றது எது?’ 

என்று எங்கள் ஊர்க்காரர், மலைக்கோட்டை ஞானதீபம், ஸ்ரீதாயுமானவர் எப்பொழுது ப்ளாடினஸோடு உறவாடினார்! 

அங்கிங்கெனாதபடி எங்கும் நிலவும் சரடில், நம் உறவுகள் உண்மையில் வலுக்கின்றன என்றுதானே அர்த்தம்!

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

 

மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 01

நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில், பண்பாட்டில், மதத்தில், மாகாணம், ஊர், கண்டம், ஆண், பெண், வசதியான சூழல், வசதியற்ற சூழல் என்று பல மாறிய, மாறும் காரணிகளுக்கு நடுவேதான் பிறக்கிறோம். உண்மையில் பார்க்கப் போனால் நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் இருக்க வேண்டும். ஆனாலும் ஒருவரை ஒருவர் கூடவோ, குறைவோ புரிந்துகொள்ள முடிகிறது. முற்றிலும் வேறு வேறு சூழல். ஆனாலும் இருவர் உள்ளமும் ஒத்திசைக்கிறது. அதே சூழலில் பிறந்து வளர்வோரால் புரிந்துகொள்ளப் படாத ஒருவர், எங்கோ முற்றிலும் மாறிய சூழலில் தோன்றிய ஒருவரால் ஆழமாகப் புரிந்துகொள்ளப் படுகிறார். எங்கோ கண்டம் விட்டுக் கண்டம், பண்பாட்டில் மிகுந்த வேறுபாடு, ஆனாலும் உள்ளம் உரையாடுகிறது. சிந்தனை ஒத்து இசைக்கிறது. இது மனித குலத்திற்கே உள்ள பெருத்த வரமும், வியப்பும் ஆகும்.

உண்மையில் மனிதர் ஒவ்வொருவருமே உலக மானிடர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அடிப்படையாக இருப்பது மனித இயல்பு. அதுவே அனைத்து நாடுகளிலும், பண்பாடுகளிலும் பிறந்து, வளர்ந்து, பல அபிப்ராயங்கள் உட்புகுந்து, பல மொழிகளிலும், பல கருத்துகளிலும் உரையாடும் மனித சமுதாயத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது. எனவேதான் நாம் பிறந்த வீடு, பிறந்த ஊர், நாடு, மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பனவற்றையெல்லாம் தாண்டி நமக்கு ஏதோ விதத்தில் பரிச்சயமான ஒருவரைச் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த ஆகுலமற்ற உட்செரிந்த உணர்வுதான் உலகத்தைத் தொகுத்து வைத்திருக்கும் சரடு. இந்தச் சரடு வலுப்பெறும் போது உலகமே ஒரு கிராமம் என்ன, ஒரே வீடாகவும் காட்சி அளிக்கலாம். இந்தச் சரடு நலிவடையும் போது ஒரு வீடே கூட பல கண்டங்களாகத் துண்டு படலாம்.

இந்த அற்புதமான மானுடச் சரடை வலுப்படுத்தும் வழிகளில் இலக்கியம், தத்துவம் போன்றவை சிறந்தவை. ஏனெனில் உணர்வு என்னும் உயிர் இயல்பையே உருப்பொலிய மெய்ப்பாடு கொள்ள வைக்கும் ஆற்றல் இலக்கியம், தத்துவம் என்னும் இவைக்கு உண்டு. இதில் இலக்கியம் என்னும் போது கவிதையும், தத்துவம் என்னும் போது சிந்தனையும் தம் இயல்பிலேயே அரியணை வீற்று அமரும் என்பது சொல்லாமலே போதரும் கூடுதல் கருத்து.

உலக அளவில் மானிடம் பொலிய வழிவகுக்கும் கருத்துகளை, உணர்வுகளை இரசிக்கும் இனிய அனுபவத் தொடர்ச்சிதான் இனி எழுதப் புகுவது. கதவுகள் இல்லா வாசல் இது. அதர்வினாச் செல்லும் ஆர்வம் மட்டுமே உங்கள் அடையாள அட்டை.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்



***

Tuesday, September 3, 2024

ஃப்ரெஞ்ச் மொழி கற்றுக் கொள்ளும் முயற்சி

சுமார் 29 ஆண்டுகளுக்கு முன் ஒரு முயற்சி ...

யம்மா! எதைத் தேடும் போது எது கிடைக்கிறது! ஏதோ ஒரு புத்தகத்துள் சுமார் 20 வருஷங்களுக்கு முன் நான் பிரெஞ்சு மொழி கற்க அல்லியான்ஸ் ஃபான்ஸே கழகத்தில் கற்கும் போது ஒரு மாத அறிமுக பிரெஞ்சு மொழிக்குப் பின்னர் எழுதிய இரண்டு பிரெஞ்சுக் கவிதைகள் கிடைத்தன. அப்பொழுது இருந்த கழக டைரக்டரிடம் நல்ல பாராட்டையும், ஊக்கச் சொற்களையும் பெற்றுத் தந்த கவிதைகள் இவை. துண்டு காகிதக் கிறுக்கல் என்றோ தொலைந்தது என்று நினைத்தால், இப்பொழுது மொட்டாட்டும் வந்து நிற்கிறது. மீண்டும் தவறும் முன் இணையத்தில் போட்டு வைப்போம்.

Au revoir


J’ai voulu apprendre de Francais

Je dois faire beaucoup, je sais

Pourquoi je travaille comme ca?

Ne sais-tu pas? Ne sais-tu pas?

Je reve de lire les romans

Les Romans? De qui, Monsieur?

De qui? Veux-tu savoir?

De Victor Hugo, celebre, au revoir!

*



A la compagne


J’ai fait une promenade a la compagne

A la compagne, oui, a la compagne!


J’ai vu une jolie femme

Elle est venue de la montagne


Elle etant souriante

Jeune et tres amusante

A la compagne..oui..a la compagne!

J’ai parle a la jolie femme

Elle mi a invite danser

Nous avons chante

Nous avons danse

Que s’est-il passé entre nous?

Nous avons oublie le temps

A la compagne...oui...a la compagne!


*


பிரெஞ்சு நன்கு தெரிந்தவர்கள் இருந்தால் கண்ணை மூடிக் கொள்ளுங்கள். ;-)



இவை தமிழில் சொன்னால் -

மீண்டும் சந்திப்போம்

பிரெஞ்சு மொழி கற்க முனைந்தேன்

நிறைய உழைக்க வேண்டும்

எனக்குத் தெரியும்

பின் எதனால் இந்தப் பாடு
பட விழைந்தேன் என்று தெரியுமா?

தெரியாதா உனக்கு?

நாவல்கள் படிப்பதில்

அவ்வளவு மகிழ்ச்சி எனக்கு

யாருடைய நாவல்கள்?

யார் நாவல்கள்?

யாரா? அறியாயோ நீ?

அவர்தாம் விக்டர் ஹ்யூகோ

ஆன்ற பெரும் எழுத்துலகச் செம்மல்.

மீண்டும் யாம் சந்திப்போம்.

*

நாட்டுப் புறத்திலே

நாட்டுப் புறத்திலே நடந்திருந்தேன்

நாட்டுப் புறத்திலே நான்

கண்களி கூட்டுமோர் அழகியைக் கண்டேன்

மலையினின்றும் அவள் இழிதரக் கண்டேன்

எழிலும் இளமையும் இன்னறும் நகையும்

தழைத்தன அவளிடம்

நாட்டுப் புறத்திலே நடந்திருந்தேன்

நாட்டுப் புறத்திலே நான்

அழகி அவளிடம் பேசத் தொடங்கினேன்

அவள் என்னைத் தன்னுடன் ஆட அழைத்தாள்

யாங்கள் பாடினோம்

யாங்கள் ஆடினோம்

எமக்குள் என்ன நிகழ்ந்தது தெரியுமா?

நிகழ்வா...காலத்தை இருவரும் மறந்து விட்டோம்

நாட்டுப் புறத்திலே நடந்திருந்தோம்

நாட்டுப் புறத்திலே யாம்.



***



Wednesday, September 6, 2023

பாரதி பாடல் ‘கண்ணம்மா என் குலதெய்வம்’ - ஒரு விளக்கம்

இப்பொழுதுதான் ஒரு குழந்தை பிறந்திருக்கிறது. உடனே அதைத் தாயே என்று கூப்பிடுகிறார் ஒரு கவிஞர். அதுவும் கண்ணனைப் பார்த்து ! கூப்பிட்டாலும் பரவாயில்லை. அதனிடம் போய் நாம் பாதுகாத்துப் போற்றிப் பேணி வளர்க்க வேண்டியிருக்க, அதனிடம் என்னைக் காப்பாற்று! உன்னைச் சரணடைந்தேன் என்றா சொல்வது?
சரணடைந்ததுதான் அடைந்தார். எதற்காகவாம்? பொன் வேண்டுமாம். உயர்வு வேண்டுமாம். புகழ் வேண்டுமாம். இதையெல்லாம் விரும்பிடும் இவரைக் கவலைகள் தின்னத் தகாது என்று அவற்றினின்றும் காக்க வேண்டிச் சரணடைகிறார்.
என்னது இது! கண்ணன் பிறந்திருக்கிறான். ஏதோ கவிஞர். அதனால் அம்மா என்று கூப்பிட்டார் என்று பார்த்தால், சரணம் என்றார். சரி பக்தி போலும் என்று பார்த்தால், பொன் வேண்டும், உயர்வு வேண்டும், புகழ் வேண்டும். இவ்வளவும் வேண்டும் என்பவர் அதையாவது கண்ணனிடம் கேட்கிறாரா? இல்லை. இதையெல்லாம் வேண்டும் தனக்குக் கவலைகளால் பாதிப்பு நேரக் கூடாது என்கிறார். கொஞ்சம் சுற்றி வளைத்து மூக்கைத் தொடுகிறார் போலும்! இல்லை. மகாகவி பாரதி என்றால் அதில் ஆழ்ந்திருக்கும் கவியுளம் இருக்குமே!
கருத்துச் சுருக்கமாக இந்தப் பாடல் ‘கண்ணம்மா எனது குலதெய்வம்’ என்பது அமைந்திருக்கிறது.
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
ஏனென்றால்,
பொன்னை உயர்வைப் புகழை விரும்பிடும்
என்னைக் கவலைகள் தின்னத் தகாதென்று
சரணடைந்ததாகத்தான் கூறுகிறார். ஆனால் அவர் பாடுவதற்கு ஆன விளக்கம் அவருடைய பாடல் பிறிதொன்றில் வழக்கமாகக் கிட்டும். இந்தப் பாடலுக்கு விளக்க உரையாக ஒரு பாடல் அமைந்திருக்கிறது. அதுதான் ‘கண்ணம்மா என் குழந்தை’ என்பது. அதில்,
பிள்ளைக் கனியமுதே - கண்ணம்மா
பேசும் பொற் சித்திரமே!
என்று பாடுகிறாரா.. இப்பொழுது புரிந்தது அவர் வேண்டும் பொன் என்ன என்பது. பிள்ளைக் கனியமுது, செல்வக் களஞ்சியம் ஆன கண்ணம்மா அவரை என்ன செய்கிறது? கண்ணம்மா வந்தவுடனே கவிஞரைக் கலி தீர்த்து உலகில் ஏற்றம் புரிய வைத்து விட்டது. உயர்வும், புகழும் தன்னைப் போல் கண்ணம்மா வந்ததுதான் தாமதம், தாமாக உண்டாகிவிட்டன. ஆனால் இந்தப் பொன்னையும், உயர்வையும், புகழையும் விரும்புவதற்கு எது தடையாக இருந்தது? கவலைகள். கவலைகள் என்பன வைரஸ் மாதிரி. வாழும் உயிரைத் தின்று பெருகும். வளத்தைத் தின்னும். ஏன்? பொன்னாகவும், உயர்வாகவும், புகழாகவும் வந்து தோன்றும் கண்ணம்மா பாதுகாத்தால்தான் கவலைகள் போகுமா? ஆம்.
ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் எழுதுகிறார். ஜீவனாகிய இவன் செய்ய வேண்டியதெல்லாம் என்ன எனில் வெறுக்காமையும், விலக்காமையுமே செய்ய வேண்டியது. மற்றபடி ஜீவனின் நன்மைக்கு உண்டான அனைத்தும் கண்ணன் செய்து கொண்டிருக்கிறான்.
ஜீவனின் சாமர்த்தியமே நித்தமும் கவலைப் பயிராக்கித் தனக்குக் கடவுள் செய்யும் நன்மையைத் திறமையாக விலக்கிக் கொண்டு தட்டழிவதே ஆகும். ஜீவன் பிரார்த்திக்க வேண்டியதே பகவானிடம், தன்னைத் தன் கையில் காட்டிக் கொடுக்காமல் இருக்க வேண்டித்தான். ஏனெனில் தனக்கு நன்மை என்று நினைத்துத் தீமையைச் சூழ்த்துக் கொள்வதில் ஜீவன் மிகவும் கைதேர்ந்தது. எனவே கவலைகள் தன்னைத் தின்னத்தகாது என்று சரணடைகிறார்.
பார் படைத்தவன் தேரோட்டியாக அமர்ந்திருக்கிறான். ஆனால் அர்ச்சுனனோ கவலையில் விழுந்து உழல்கிறான். அர்ச்சுன விஷாதம் என்றால் அர்ச்சுனனின் கவலை.
என்ன கவலை? அதன் உருவம் என்ன? ஏழ்மை, மிடிமை, உள்ளத்தின் வறுமை, அச்சம். இவை நெஞ்சில் குடி புகுந்தால் பின்னர் ஒளி போய்விடும். ஏன் இதை ஜீவன் தானே போக்கிக் கொள்ள முடியாதா? தான் என்று ஜீவன் நினைத்ததால்தானே இந்த வறுமையும், அச்சமும் உண்டாவதே. இதைத்தான் அடுத்த கண்ணியில் பாடுகிறார் கவிஞர்.
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்திங்கு
நின்செயல் செய்து நிறைவுபெறும் வணம்
நின்னைச் சரணடைந்தேன் என்கிறார். தான் என்பதில் நங்கூரம் போடும் பொழுது கவலைக் கடலில் ஆழும். அவன் செயல் என்று ஐக்கியமாகி ஒன்றும் பொழுது விண்ணாய் விரியும். விண்ணாய் விரிய வேண்டியது கவலையில் எத்துண்ணும் துரும்பாய் ஆவது என்ன மிடிமை! இதற்குக் காரணமே தான் தான் என்று அந்தரங்கத்தில் உணரும் உயிர் அச்சத்தில் நடுங்காமல் என்ன செய்யும்? தன்னிலிருந்து தன்னைக் காக்க தலைவன் தாளே சரண்.
தன் செயல் இல்லையாகி விட்டது இனி எல்லாம் அவன் செயல் என்றால் அப்பொழுது அங்கே துன்பம் என்பது ஏது? சோர்வுதான் ஏது? தோல்வி என்பதும் ஒன்றும் இல்லையே. கர்மம் நிஷ்பலம் ஆகும். ஆனால் கைங்கரியம் ஒரு நாளும் பொய்க்காதே! தன்னில் வைத்த பாரத்தை அவனில் வைத்துவிடும் போது அங்கு கர்மம் கைங்கரியத்தில் புகும் என்றல்லவோ பிள்ளை உலகாரியன் வாக்கு!
பின்னர்த் துன்பம் இல்லை, தோல்வி இல்லை, சோர்வு இல்லை என்றால் என்னதான் உண்டு அங்கே?
அன்பு ஒன்றுதான் உண்டு. சரி அது மனநிலை. ஆனால் நெறி? அந்த அன்புதான் நெறியும் ஆம்.
அன்பு நெறியாக ஆனால் அங்கே அறங்கள் தாமே வளரும். இதையே செந்நாப்போதார் வேறுவிதமாகச் சொன்னார். என்பு இல்லாத உயிரை வெயில் காயும். அதுபோல் அன்பு இல்லாத உயிரை அறம் காயும். அன்பு என்று ஒன்று இருந்தால் அது வெறுமனே இருக்காது. ஒரு குழந்தையை ஈன்றெடுக்கும். அந்தக் குழந்தைதான் அருள். அருள் இருக்கும் இடத்தில் அவ்வுலகம் தானே இருக்கும்.
அதெல்லாம் சரி. முதலில் அறம் என்றால் என்ன? திருவள்ளுவர் ‘மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்’ என்கிறார். ஓஹோ!
மனத்துக்கண் மாசு இலன் ஆதல் என்றால், அந்த மாசு என்பது யாது? ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் சீடர்களில் விசேஷமானவர் லாடு மஹராஜ் என்னும் சுவாமி அத்புதானந்தர். லாடு மஹராஜுடன் ஒப்பிட்டால் ஸ்ரீராமகிருஷ்ணர் மிக அதிகமாகக் கல்வி கற்றவர் என்று சொல்லலாம் என்றால் லாடு மஹராஜ் எவ்வளவு கல்வி வாய்ந்தவர் என்பது புரியும். ஆனால் அந்த அத்புதானந்தர்தான் மிக முக்கியமான கேள்விக்குப் பதில் சொல்கிறார். மனத்தில் மாசு என்றால் என்ன? அவரைக் கேட்டார்கள். சித்த சுத்தி என்கிறார்களே? அப்படியென்றால் சித்தத்தில் இருக்கும் அழுக்கு எது? அசுத்தி எது? லாடு மஹராஜ் சொன்னார்: அது ஒன்றுமில்லை. நான் என்று தன்னையே மையமாக நினைக்கும் அகங்காரம் இருக்கே அதுதான் மாசு, அசுத்தி. அதை நீக்கினால் சித்தம் சுத்தியாகிவிடுகிறது.
இங்கே மகாகவி என்ன சொல்கிறார்? தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து இங்கு நின் செயல் செய்து நிறைவு பெறுவது என்கிறார். இந்த மனத்துக்கண் மாசு இருக்கும் வரையில் கவலைகள் தின்னும். மிடிமை, அச்சம் நெஞ்சில் குடிகொள்ளும். அறங்கள் தேயும். அன்பிலாத உயிரை அறம் காயும். இதையெல்லாம் நாம் கவனமாக எப்படிப் பார்த்துப் பார்த்து நீக்குவது? நம்மை நாமே காப்பது? ஒரே வழி. உத்தமமான வழி.!
நல்லது தீயது நாம் அறியோம் அன்னை!
நல்லது நாட்டுக! தீமையை ஓட்டுக !
அப்படியென்றால் நீர் என்ன செய்கிறீர்?
தன் செயல் எண்ணித் தவிப்பது தீர்ந்து இங்கு
நின்னைச் சரணடைந்தேன் - கண்ணம்மா!
நின்னைச் சரணடைந்தேன்.
பாவம்! பிறந்த குழந்தைக்கு நாம் எல்லாம் செய்ய வேண்டியிருக்க அதற்கு நாம் எவ்வளவு வேலை வைக்கிறோம் பார்த்தீர்களா?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***


Wednesday, May 31, 2023

A little reed has been enough..

Henri De Regnier என்ற ஃப்ரெஞ்சுக் கவிஞரின் கவிதை ஒன்று இப்படித் தொடங்குகிறது. 

A little reed has been enough
To make the high grass shake and thrill,
The willows tall,
The meadow wide,
The brooklet and the song thereof;
A little reed has been enough
To make the forest musical. 

ஒரு சின்ன புல் போதும் காட்டையே இசை கிளரும் வடிவாய் ஆக்கி விடுகிறது என்கிறார். காடும், காடு சார்ந்த நிலமும் முல்லை. அந்த முல்லையின் தெய்வமான மாயோன் குழலூதிய வண்ணம் காட்டை நிரப்புகிறான் என்கின்றனர் பத்தர்கள். மேற்படிக் கவிதையைப் படித்தவுடன் மனம் கொஞ்சம் ரீங்காரம் போடத் தொடங்கிவிட்டது. 

புல் ஒன்று போதும் 

புலர் போதம் ஆகும் 

புல் ஒன்று போதும் 

புவி நாதம் ஆகும் 

புல் ஒன்று குழலாகப் 

பரமன் இதழ் அமுதூறப் 

பிரபஞ்சத்தின் நாதம் 

பயில் கானம் ஆகும் 

புல் ஒன்று போதும்... 

கவிதையின் தன்மையே தொற்றிக் கொள்வதும், தோன்றிப் பின் தோன்றித் தோன்றுவதும். இசையின் கார்வைகள் போல், இசைவின் போர்வைகள் போல்.. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, March 9, 2023

பெண் என்னும் பெருந்தகைக்கு ...

பெண் என்னும் பெருந்தகைக்கு

உன்னோடு நான் பிறந்தேன்
உன்னோடுதான் நான் திரிந்தேன்.
உன்னோடு விளையாடி
உன்னோடு போராடி
உன்னோடு மன்றாடி
உன்னோடுதான் வளைய வந்தேன்.
தம்பியாக உன்னுடன் நான்
பிடித்த அடங்களில்
நீதான் விட்டுக் கொடுத்தாய்.
நீயாக சில நேரம்
உனக்கு அழகு அதுதான் என்று
உற்றோரும் பெற்றோரும் உபதேசித்து 
வேண்டா வெறுப்பாய்ச்
சில நேரம்.
ஆனால் தம்பியாக நான் உனக்குச்
செய்திருக்க வேண்டிய சேவைகள்தாம் எத்துணை!
நானும் செய்யவில்லை.
நாலும் அறிந்து சூழ் மனிதர்
எவரும் அதுதான் எனக்கு அழகு
என்று உபதேசித்து உறுத்தவில்லை.
ஆண்பிள்ளையின் அழகு என்று
அனைவராலும் ரசிக்கப்பட்டது.
விரசம் என்ன என்றால்
நீயும் ரசித்தாய்
என் தம்பி ஒரு முரடனென்று.
பண்படுத்திப் படுத்திய
பண்பாட்டின் அனிச்சைவினை
அது என்று நீ அறிவாயோ
அறியேன் அறிதொறும் என்னை
நாணம் கவிகிறது.
அண்ணனாக உன்னை
ஏவிக் கூவி அடக்கி நியமித்து
அதிகாரம் செய்திருக்கிறேன்;
ஆனால் அண்ணனாக நான்
காட்ட வேண்டிய பாசம்?
அக்கறை என்ற பெயரில்
அத்தனையும் மிச்சமாகி
நிற்கிறது மோசம்.
என் அண்ணா என்னிடம்
எவ்வளவு பாசம் !
என்று நீ விதந்தோதும்
கணம் ஒன்றில்
தூக்குக் கயிற்றில்
தொங்குகிறது என் உள்ளம்.
கல்யாணமாகிப் போய்விட்ட
கண்மணிகளை இழந்து
பாசக் குருடாய்
அலைகிறது நெஞ்சம்.
அண்ணன் என்ற முகமூடி களைந்து
அலறுகிறது அன்பின் உயிர்;
தம்பி என்ற தகவிழந்து
புயல்பறவையாய்த்
தடுமாறி அழிகிறது ஏழைப் பாசம்;
அடுத்த வீட்டுத் தோழியாய்
எதிர் வீட்டு நண்பியாய்
ஒரு வகுப்புச் சகியாய்
மேல் வகுப்புப் பாச தேவதையாய்
நீ வந்த போதெல்லாம்
நான் என்னை மட்டுமே
கண்டு கொண்டிருந்தேன்;
என் ஆண் அகங்காரத்தின்
உத்யான வனமாய் உன்னைக் கருதிய
என் பிழைக்கே உன்மத்தமானேன்.
அப்பொழுது எல்லாம்
உவந்து உவந்து நீ எனக்கு
உணர்த்திய குறிப்பையெல்லாம்
என் மமகாரத்தின் முற்றத்தில்
நீ ஆடிய நடனம் எனக் களித்தேன்.
தாயாகி நீ வந்த போது
தனயனாகிச் செல்வனாகித் திமிர்ந்தேன்;
பாட்டியாகி நீ வருங்கால்
என் படாடோபத்தின் பாசறை
என மகிழ்ந்தேன்;
ஆனால் என் போலித்தனம் எல்லாம்
கருகிப் போய்ச்
சுய உணர்வின் மின் தந்தியில்
அடிபட்ட இளம் புள்ளாய்
இருட்டில் சொட்டும்
பனிமழைக்கு நடுங்கி மாயும்
என் முன்னர் 
தெய்வமாகி
வந்து விடாதே!
பெண்ணே! 
இப்படிக்கு இந்த வேதனையுடன்
இறக்க விரும்பும்
ஓர் மனித உயிர். 
(ஸ்ரீரங்கம் வி மோகனரங்கன் கவிதைகள், பக்கம் 198, தமிழினி, 2021)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


Tuesday, March 7, 2023

வாழ்வதற்கான தத்துவம் - தொடக்கம்

’என்ன இப்படி இறங்கிவிட்டாய், திடீரென்று?’ என்று பார்க்கிறீர்களோ! நியாயம்தான். வைணவம், தத்துவம், வேதாந்தம், மெடஃபிஸிகல் என்று எழுதிக் கொண்டிருந்த ஆள் திடீரென்று ‘அன்றாட வாழ்க்கையைப் பார்ப்போம் அப்பா’ என்று விரக்தியடைந்து எழுதுவது போன்று தொடங்கவில்லை. உண்மையிலேயே என்ன தத்துவம், மதம், கோட்பாடு, யோக நிலை என்றெல்லாம் யோசித்தாலும் கடைசியில் மிஞ்சுவது என்ன? இதோ இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கிறோமே, இந்த வாழ்க்கை. உணவு, பசி, தூக்கம், விழிப்பு, உடல்நலம், அலைச்சல், கவலைகள், பிறகு கொஞ்சம் ஓய்வு, ஓய்வில் படிப்பு, சிந்தனை, அதிலும் கவலை, பிறகு ஏதோ நிம்மதி, பிரச்சனை, குடைச்சல், பின்னர் தீர்வு, பெருமூச்சு, இதற்கு நடுவில் நாளுக்கு நாள் வயதாகிப் போய்க் கொண்டிருக்கும் கண்ணிற்குத் தெரியாத சன்னமான ஓட்டம் -- இதெல்லாம் கலந்த உருவமாக வாழ்க்கை. அப்படியென்றால் எந்தத் தத்துவம், ஆன்மிகம், யோகம், அதீதம் என்றாலும் எல்லாம் நாமாகி நிற்கும், நடக்கும், நகரும், ஓடும், ஓடாமல் உட்காரும், பின் தொடரும் வாழ்க்கை என்பதை எப்படி எதிர்கொள்வது என்பதற்கு ஏதாவது உதவி செய்தால்தான் அந்தத் தத்துவம், கோட்பாடு எல்லாவற்றிற்கும் அர்த்தம் ஏற்படுகிறது. இல்லையென்றால் ‘அப்பப்பா பெரிய விஷயம் எல்லாம். அப்புறம் பார்த்துக் கொள்ளலாம்’ என்று மிகவும் நாசூக்காக நம்முடைய மனமே அதை ஓரத்தில் அல்லது கைக்கெட்டாமல் பரணில் வைத்துவிட்டு ஜாக்கிரதையாகத் தள்ளிப் போய்விடுகிறது. அதாவது வாழ்க்கைக்குச் சம்பந்தம் இல்லாத ஒன்றை நம்மால் உண்மையில் அக்கறை கொண்டு ஈடுபட முடியவில்லை. இது குற்றமன்று. ஏன் எனில் இப்படித்தான் நாம் கட்டமைக்கப் பட்டிருக்கிறோம். இதுதான் நாம். மனிதர் என்று சொல்லும் போது மனம் உடையவர் என்ற பொருளில், மனம் என்பது வாழ்க்கை என்பது யாது, அதற்குத் தேவை என்ன என்பதைக் கைக்கொண்டும், தொடர்பில்லாதவற்றைத் தள்ளி வைத்தும் கரிசனமும் சிக்கனமும் காட்டி நம்மைக் கொண்டு செல்கிறது. தொடக்கத்திலேயே இந்த உண்மையைக் கௌரவமாக, வெளிப்படையாக ஏற்றுக் கொண்டுவிடுதல் நலம். 

இந்த இயல்பான உண்மையை ஏற்றுக் கொண்டான பிறகு நம் விஷயங்கள் கொஞ்சம் சுலபமானது போல் ஆகிவிடுகின்றன. வாழ்க்கையை அமுக்கி அதன் மேல் ஏறி நின்று எங்கோ வானத்தில் எட்டிப் பார்த்துக் கொண்டிருந்த மனம் தன் இயல்பான இயக்கத்திற்கு வந்து சேருவதில் நஷ்டம் எதுவும் இல்லை. லாபமே. இப்பொழுது ஒரு புதிய கேள்வி பிறக்கிறது. வாழ்வதுதானே வாழ்க்கை? பின் பேசாமல் வாழ்ந்து விட்டுப் போவதை விட்டுவிட்டு ஏன் அதற்கான தத்துவம் என்று யோசிக்க வேண்டும்? இது ஓட்டப் பந்தயத்தில் ஓடுவதற்குப் பதிலாக ஓரமாக நின்று ரன்னிங் காமண்ட்ரி சொல்வது போல் ஆகாதா? ஆம். இந்தக் கேள்வியை நாம் பதில் சொல்லியே ஆகவேண்டும். அதாவது புரியாத அதீத விஷயங்களைப் பற்றித்தான் தத்துவம் என்று நினைத்துப் பழகிய நமக்கு அன்றாடம் வந்து சேரும் வாழ்க்கையைப் புரிந்துகொண்டு வாழ்வதைப் போல் பெரிய யோகம் எதுவும் இல்லை என்று சொன்னால் நம்ப முடியாது. ஆனாலும் வாழ்க்கைக்கான தத்துவம் என்று நாம் தொடர்ந்து பார்க்கும் பொழுது இந்தக் கேள்வி பொருந்தாது என்பது தானே புரியும். அதுமட்டுமன்று. நாம் ஏதோ அப்பாற்பட்ட விஷயங்களைப் பற்றித்தான் பேசுகின்றன என்று நினைத்த பல தத்துவங்களும் உண்மையில் வாழ்க்கையைப் பற்றிச் சொல்ல வந்துவிட்டுத்தான் வார்த்தைகளில் சிக்கிக் கொண்டு எங்கோ அந்தரத்தில் நின்றுவிட்டன என்பதும் நமக்குப் போகப் போகப் புரியும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***