நாம் ஒவ்வொருவரும் ஒவ்வொரு சூழ்நிலையில், பண்பாட்டில், மதத்தில், மாகாணம், ஊர், கண்டம், ஆண், பெண், வசதியான சூழல், வசதியற்ற சூழல் என்று பல மாறிய, மாறும் காரணிகளுக்கு நடுவேதான் பிறக்கிறோம். உண்மையில் பார்க்கப் போனால் நாம் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள முடியாத நிலையில்தான் இருக்க வேண்டும். ஆனாலும் ஒருவரை ஒருவர் கூடவோ, குறைவோ புரிந்துகொள்ள முடிகிறது. முற்றிலும் வேறு வேறு சூழல். ஆனாலும் இருவர் உள்ளமும் ஒத்திசைக்கிறது. அதே சூழலில் பிறந்து வளர்வோரால் புரிந்துகொள்ளப் படாத ஒருவர், எங்கோ முற்றிலும் மாறிய சூழலில் தோன்றிய ஒருவரால் ஆழமாகப் புரிந்துகொள்ளப் படுகிறார். எங்கோ கண்டம் விட்டுக் கண்டம், பண்பாட்டில் மிகுந்த வேறுபாடு, ஆனாலும் உள்ளம் உரையாடுகிறது. சிந்தனை ஒத்து இசைக்கிறது. இது மனித குலத்திற்கே உள்ள பெருத்த வரமும், வியப்பும் ஆகும்.
உண்மையில் மனிதர் ஒவ்வொருவருமே உலக மானிடர் என்றுதான் சொல்ல வேண்டும். ஏனெனில் அடிப்படையாக இருப்பது மனித இயல்பு. அதுவே அனைத்து நாடுகளிலும், பண்பாடுகளிலும் பிறந்து, வளர்ந்து, பல அபிப்ராயங்கள் உட்புகுந்து, பல மொழிகளிலும், பல கருத்துகளிலும் உரையாடும் மனித சமுதாயத்தை நமக்கு அடையாளப்படுத்துகிறது. எனவேதான் நாம் பிறந்த வீடு, பிறந்த ஊர், நாடு, மொழி, பண்பாடு, பழக்க வழக்கங்கள் என்பனவற்றையெல்லாம் தாண்டி நமக்கு ஏதோ விதத்தில் பரிச்சயமான ஒருவரைச் சந்திப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. இந்த ஆகுலமற்ற உட்செரிந்த உணர்வுதான் உலகத்தைத் தொகுத்து வைத்திருக்கும் சரடு. இந்தச் சரடு வலுப்பெறும் போது உலகமே ஒரு கிராமம் என்ன, ஒரே வீடாகவும் காட்சி அளிக்கலாம். இந்தச் சரடு நலிவடையும் போது ஒரு வீடே கூட பல கண்டங்களாகத் துண்டு படலாம்.
இந்த அற்புதமான மானுடச் சரடை வலுப்படுத்தும் வழிகளில் இலக்கியம், தத்துவம் போன்றவை சிறந்தவை. ஏனெனில் உணர்வு என்னும் உயிர் இயல்பையே உருப்பொலிய மெய்ப்பாடு கொள்ள வைக்கும் ஆற்றல் இலக்கியம், தத்துவம் என்னும் இவைக்கு உண்டு. இதில் இலக்கியம் என்னும் போது கவிதையும், தத்துவம் என்னும் போது சிந்தனையும் தம் இயல்பிலேயே அரியணை வீற்று அமரும் என்பது சொல்லாமலே போதரும் கூடுதல் கருத்து.
உலக அளவில் மானிடம் பொலிய வழிவகுக்கும் கருத்துகளை, உணர்வுகளை இரசிக்கும் இனிய அனுபவத் தொடர்ச்சிதான் இனி எழுதப் புகுவது. கதவுகள் இல்லா வாசல் இது. அதர்வினாச் செல்லும் ஆர்வம் மட்டுமே உங்கள் அடையாள அட்டை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment