Saturday, November 30, 2024

நிலைப்பாடு 11

'நீ என்ன படித்தாலும் என்ன? நான் என்ன படிக்காவிட்டாலும் என்ன? நீ படித்து விட்டதால் மரணம் உனக்கு இல்லை என்று ஆகிவிடுமா? நான் படிக்காததால்தான் எனக்கு மரணம் என்று உண்டா? எல்லோருக்கும் ஒரு நாள் நடக்கப் போகிறது. இதில் எதற்கு ஏகப்பட்ட விஷயங்களைப் பற்றிப் படிப்பு?’ - இப்படிக் கேட்கும் நண்பருக்குப் பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லையா இஷ்டமில்லையா.. ஏதோ ஒன்று. அதுவும் அண்மையில்தான் ஐஸி வார்டில் ஒரு வாரம். நல்ல அனுபவம். ஆளைக் கிடையாகக் கிடத்திக் குப்பி, நாளம் எல்லாம் சொருகி விட்டார்கள். நல்ல வேளை உடனேயே தேரத் தொடங்கி விட்டேன். ஆனால் மனம் மட்டும் ஆஃப் ஆகாமல் சுற்றுப்புறத்தைக் கவனித்துக் கொண்டே இருந்தது. மல்லாக்கக் கிடத்துவதில் தூக்கமும் வரவில்லை. இருபத்திநாலு மணி நேர வாட்ச் டவர் போல் ஆகிவிட்டேன். நர்ஸ் தோழிகளுக்கோ கடுப்பான கடுப்பு. ‘தூங்காமல் ஏன் முழித்துக் கொண்டிருக்கிறாய்?’ ‘டாக்டர்! இந்தப் பேஷண்ட் தூங்கறதே இல்ல. முழிச்சுக்கிட்டே இருக்காரு. இல்லைன்னா தண்ணி தண்ணின்னு நீர் குடித்துக் கொண்டே இருக்கிறார்’ என்று என்னைப் பற்றிக் குற்றப் பத்திரிக்கை வரும் டாக்டரிடம். இதில் மூன்றா நாள் இரவு 1 மணிக்கு யாரோ ஒருவருக்கு மிகவும் சீரியஸாம். அவரைக் கொண்டு வந்து என் பக்கத்தில் போடப்பட்டிருந்த கட்டிலில் கிடத்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். டாக்டரும், நர்ஸ்களும் மருத்துவ அதிரடி உடனடி நடவடிக்கைகள், அவற்றின் பெயர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு என்னுடைய பொழுது. நடுவில் ஒரு நர்ஸ் பார்த்து விட்டு என்னைச் சரியான திட்டு. ‘தூங்காமல் என்ன செய்யிறீங்க.. மணி 2. இன்னுமா தூங்கல.? எனக்கோ அந்தப் பேஷண்ட் என்ன ஆகப் போகிறார் என்று டென்ஷன். பக்கத்துக் கட்டிலில் கிடக்கும் ஒருவர் மிகவும் கிரிடிக்கலான நிலை. விளிம்பில் போராடிக் கொண்டு. இதை 70 கொடுங்கள். அடுத்து 60 அடுத்து 10 வரை பார்ப்போம். பிக அப் ஆனால் ஓகே... அந்த இஞ்ஜக்‌ஷன் எங்கே... ஒரு பத்து நி பாருங்கள். இம்ப்ரூவ் ஆகவில்லையெனில் என்னைக் கூப்பிடுங்கள். எனக்கா.. என்ன ஆகும்? இந்தப் பத்து நி. பிக் அப் ஆகுமா? ஆகணும். கடவுளே! .... அவர் எந்த விளிம்பின் மீது நின்று கொண்டிருக்கிறாரோ அதற்குச் சற்று இப்பக்கம் தள்ளிதான் நானும் நிற்கிறேன் என்பது எனக்கு நிதர்சனமாகக் காட்டியபடி நடபடிகள் துரிதம். 

எதற்கு இதை விவரிக்கிறேன் என்றால் படித்தாலும் என்ன படிக்காவிட்டாலும் என்ன மரணம் ஒன்றுதானே என்று என்னைக் கேட்டால் இந்த அனுபவத்திற்குப் பின்னர் என்ன சொல்வேன்... யாரா இருந்தாலும் ட்யூபைச் சொருகி மல்லாக்கக் கிடத்திடுவாங்க... அந்த விளிம்பின் அப்பக்கமா இப்பக்கமா எங்குக் காலத்தின் ஆடுமுள் நிற்கிறதோ.. தெரியாது என்பதை நேருக்கு நேர் கண்கூடாக நர்ஸ் தோழிகளின் கண்டிப்புக்கும் இலக்காகிப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்னும் பொழுது.. இதற்கு என்ன பதில் சொல்வது? ஆனாலும் படிப்புதான் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக ஆக்குகிறது வாழும் வரையிலாவது. ‘ஒருமைக் கண் தான் கற்ற கல்வி..’ என்று சொல்கிறார் புலவர். சொல்லும் நோக்கம் புரிகிறது. 

மக்களுக்குள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன என்ற அபிப்ராயம் நிலவுகிறது என்பதை வைத்துதான் பல மத உபதேசிகள் பக்குவமாகப் பேசுகிறார்கள். ‘நீங்கள் அதெல்லாம் எதுவும் அதிகம் படிக்க வேண்டாம். நான் சொல்லும் இந்த மூன்று நான்கு விஷயங்களை மட்டும் தவறாமல் செய்து விடுங்கள். நேர்முறையான விஷயங்கள் என்ன செய்ய முடிகிறதோ இல்லையோ, எதிர்மறையான இந்த மூன்று நான்கு விஷயங்களை மட்டும் செய்யவே செய்யாதீர்கள். பாருங்கள். ரொம்ப ஸிம்பிள். இதை மட்டும் செய்து விட்டு நிம்மதியாக இருங்கள்’ - இந்த மாதிரி தொனிக்கும்படி ஒரு மத உபதேசியார் பேசும் போது மயங்காத ஆட்கள் யார்? ‘நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்புங்கோ. அறிவு உங்களைக் கவுத்துடும். நம்பிக்கை வைங்கோ’ என்று அடித்துச் சொல்லும் போது கேட்பவர், தம் பாரம் எல்லாம் இறக்கி வைத்த நிம்மதி. இதில் நாம் ஊடாறப் போய் ‘ஐயா! படியுங்கள். இதைக் குறித்தெல்லாம் உஷாராகப் படிக்கவில்லையெனில் யார் சொல்வது சரி, தவறு என்று எப்படித் தெரியும்? படிப்புதான் மிகவும் முக்கியம்.’ என்று சொன்னால் நம்மிடம் இந்த மாதிரி மேற்கண்ட பதில்தான் வரும். அப்படி ஒரு வேளை நடைமுறையில் ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகி நிற்கும் ஒருவர் வேண்டுமானால் அந்த நேரத்திற்கு உணர்வு விழித்தவராய் நம்மிடம் ‘ஆமாம். நீங்க சொன்னது சரிதான். நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள படிப்புதான் மிகவும் முக்கியமானது’ என்று சொல்வாராயிருக்கும். அது எப்பவாவது யாருக்காவதுதான். மற்றபடி ‘படிப்பா? என்னத்துக்கு?’ என்னும் கட்டடம் இஷ்ட்ராங்தான். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, November 29, 2024

நிலைப்பாடு 10

சாதாரண இந்து என்றால் என்ன சொல்ல வருகிறேன். ஒருவர் இயல்பான முறையில் தம் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகிறார். தெய்வம் என்ற பக்தி இருக்கிறது. வாழ்க்கையில் நல்ல முறையில் வாழ வேண்டும். அனுபவத்திற்கும், அறிவுக்கும் தவறு என்று படுவதைத் தவிர்த்து சக மனிதர்களோடு நல்ல உறவில் வாழ்கிறார். மனித குலத்திற்கு நன்மை என்பதுதான் முக்கியம் என்ற எண்ணம் இருக்கிறது. இது சாதாரண நிலைமை. இந்த நிலையில் இருந்து நாம் தீவிரமாக மத நூல்கள், அதற்கேற்ற வழிமுறைகள், உபதேசங்கள், யாரோ எந்தக் காலத்திலோ எழுதி வைத்த கருத்துகளை இன்றும் சரியென்று நமக்கு நாமே வாதம் செய்துகொண்டு அப்படியே நடக்க முயல்வது என்றெல்லாம் வரும் போது அங்கு அறிவும், வாழ்க்கை அனுபவமும் முக்கியம் என்று படாமல் ஒருவரை அதாரிட்டி என்று எடுத்துக்கொண்டு அவருடைய உபதேசமும், ஒரு நூலை அப்படியே பின்பற்ற நினைத்து அதில் சொல்லியிருக்கும் கருத்துகள் வாழ்க்கை அனுபவத்திற்கு ஏற்றதா, அறிவுக்கு உகந்ததா என்றெல்லாம் யோசிக்கவே விரும்பாமல், பொதுவாழ்க்கைக்குப் பொருந்தாத பேச்சுகளும், செயல்களும் ஒருவருடைய நடத்தையில் மலிந்து, அவர் ஏதோ நிரல்படி வாழத் தொடங்கும் போது அங்கு சாதாரணத் தன்மை என்பது மறைந்து போகிறது. பொதுவாக அப்படி நடப்பவர்களிடம் நான் எதையும் அறிவுரையோ, விமரிசனமோ சொல்ல முனைவதில்லை. காரணம் பெரும்பாலும் அன்னவர்கள் நம்மைத் திருத்துவதில்தான் முனைப்புடன் இருப்பார்களே அன்றி தாங்கள் திருத்திக் கொள்ளும் நிலையில் இருப்பதாக ஒரு நாளும் நினைக்க மாட்டார்கள். நாம் ஏதாவது சொன்னாலும் மத அனுஷ்டானத்தில் நமக்குச் சிரத்தை இல்லை என்றும், இப்படி அக்கறையும், கீழ்ப்படிதலும் இல்லாத நாம் தெய்வக் குற்றத்திற்கு ஆளாகவே நேரிடும் என்றும் அலட்சியத்துடன் பதில் சொல்வார்கள். எனவே நான் இது போன்றவர்களை முதலிலேயே தவிர்த்து விடுவது வழக்கம். வாதம் செய்யக் கூடிய நண்பர்களிடம் என் கருத்தைச் சொல்வதோடு நிறுத்திக் கொள்வேன். 

மேலும் வர்ணதர்மம் என்பது ஒருவர் மனத்தில் ஏறிவிட்டால் பிறகு அது மறைவது மிகவும் கஷ்டமான விஷயம். நூல்களிலும் வர்ணக்கலப்பு என்பதைப் பெரும் அபாயம் போல் பல இடத்திலும் சொல்லி வைத்திருக்கிறார்கள். மத உபதேசிகளும் அதையே சொல்லும் போது நண்பர்கள் சிலருக்கு நாம் சொல்வது மதிக்கத் தகாததாகவும், மத அடையாளம், தோற்றம், நூல்களிலிருந்து மேற்கோள் காட்டுதல் என்று செய்யும் நபர்களின் வார்த்தைகளே பெரும் கவனத்திற்கு உரியதென்றும் தோன்றி விடுகிறது. 

அதுவுமின்றி, மத நூல்களைக் குறித்து யாரும் பெரிதும் படித்து ஆராய்ந்து தெரிந்து கொள்ளும் வழக்கம் இல்லை. அவரவர்களுக்கு யார் யாரிடம் ஈடுபாடு நம்பிக்கை மதிப்பு தோன்றுகிறதோ அவர்கள் சொல்வதே பெரும் சான்று ஆகிவிடுகிறது. இந்தச் சூழ்நிலையில் சாதாரண இந்துவாக இருக்க நினைப்பவருக்குப் பெரும் சொந்தப் பொறுப்பு ஏற்பட்டு விடுகிறது. தன்னளவிலாவது சரியான கருத்துகள், மனப்பான்மை, நிதானம் எல்லாம் இருக்க வேண்டுமென்றால் பல நூல்களைப் படித்து ஆராய்ந்து சிந்தனை செய்வதைத் தவிர்க்க இயலாது. இந்த விதத்தில் நவீன விஞ்ஞானம், பலருடைய சிந்தனை நூல்கள், மாற்றுக் கருத்து கொண்டவர்களின் பார்வைகள், உலக தத்துவ அறிஞர்களின் நூல்கள், பேச்சுகள் என்று திறந்த மனத்துடன் படிப்பதும், தெரிந்து கொள்வதும் முக்கியமாக இருக்கிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Thursday, November 28, 2024

நிலைப்பாடு 09

'பாருங்கள். சாதி உயர்வு தாழ்வுதான் பழம் நூல்களில் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறது. சமுதாய சமத்துவம் என்னும் மனநிலைக்குச் சாதகமான உபதேசங்கள், முன்மாதிரிகள் எதுவும் காணவில்லையே!’ என்ற விமரிசனம் எழுந்தால் என்ன பதில் வருகிறது? ஆஹா. நீங்கள் சரியாகப் பார்க்கவில்லை. முன்முடிவுகளோடு பார்ப்பதால் உங்கள் கண்கள் பார்க்க மறுக்கின்றன. ஸ்ரீஆதிசங்கரர் ஒருவரைத் தள்ளிப்போ என்றதும் அந்த உருவத்தில் வந்த சிவபெருமான் அவருக்கு ஆத்மாவில் ஏது தீட்டு? தள்ளிப்போ என்றால் ஆத்மாவுக்குள் ஆத்மா எங்கே தள்ளிப் போவது? யார் யாரை விட்டுத் தள்ளிப் போவது?’ என்று உணர்ச்சி பொங்க என் நண்பரே என்னிடம் பலமுறை கூறியதுண்டு. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறை? 

சரி நடைமுறைக்கு அப்புறம் வருவோம். அதே ஸ்ரீஆதிசங்கரர் எழுதிய நூல்களில் வர்ணதர்மத்தை ஆதரித்துத்தான் எழுதப்பட்டிருக்கிறதே அன்றி கண்டித்து ஒன்றும் காணவில்லையே! அவர் எழுதுவதை மொழிபெயர்க்கும் கடலங்குடி ஸ்ரீநடேச சாஸ்திரிகள் இதெல்லாம் இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவை; எனவே மொழிபெயர்க்கவில்லை என்று விட்டுவிடுகிறார். இத்தனைக்கும் கர்மங்களையே முழுமையாக எதிர்த்தவர் ஆதிசங்கரர். ஒரு வேளை ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் நடந்தது போல் வாய் வார்த்தையாக ஆதிசங்கரரும் எழுதியதற்கு மாறுபட்ட கருத்துகளை உபதேசமாகக் கூறி அதை யாரும் மணிப்பிரவாளத்தில் எழுதி வைக்கவில்லையோ தெரியவில்லை. 

 சரி. இவர் விஷயம் இப்படி என்றால் ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் நண்பரே மிகவும் ஆணித்தரமாக என்னிடம் ஒரு முறை அடித்துச் சொன்னார். அதாவது அப்பொழுது கடும் விமரிசனமாக நான் சில வார்த்தைகள் சொல்லப் போக, வர்ணதர்மம் குறித்தும், அதைப் பற்றியே பழம் நூல்களில் எங்கும் பரவியிருக்கிறதே என்றும், சரியாக நினைவில்லை, இப்படி ஏதோ ரீதியில் சொல்லப் போக, நண்பர் ஒரே பொழியாகப் பொழிந்து விட்டார். ஆஹா.. இப்படித் தவறுகளை மட்டும்தான் கண்ணில் படுமா? எத்தனை நல்ல விஷயம் இருக்கிறது! ஸ்ரீராமானுஜரை எடுத்துக் கொள்ளுங்கள். என்ன மாதிரியான உபதேசம் அவருடையது! சாதி பார்க்காமல், அனைவரையும் தன் மார்க்கத்தில் அரவணைத்து, அடியார் குலத்தில் ஒருவர் மற்றவரின் சாதி என்ன என்று யோசித்தாலே அது மிகவும் பாபம் என்றெல்லாம் உபதேசம் செய்து என்ன புரட்சி செய்து விட்டார்! என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். அப்பொழுது நான் அவருடைய வடமொழி உரை நூல்களை வைத்துக்கொண்டு கேள்வி கேட்டேன். எங்கே இருக்கிறது காட்டுங்கள் இந்த நூல்களில் எங்கும் அவர் அப்படி எதுவும் எழுதவில்லையே என்று. அதற்கு நண்பர் அருமையாகப் பதிலடி கொடுத்தார். ‘இந்த வடமொழி நூல்கள் எல்லாம் ஸ்ரீராமானுஜர் எழுதிய நோக்கம் வேறு. பிற சித்தாந்தங்களோடு வாதம் செய்து விசிஷ்டாத்வைதம் என்னும் தம் கொள்கையை நிலைநாட்ட வேண்டி முக்கிய நோக்கத்தில் எழுதினார். அதனால்தான் இந்த நூல்களில் அவர் தமக்கு முக்கியமான ஆழ்வார்களைக் குறித்தும், நம்மாழ்வார் உபதேசம் செய்த சரணாகதி நெறியைக் குறித்தும் எதுவும் எழுத்தில் காட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் சரணாகதி நெறி என்பது வெறும் சாத்திர ஞானம் இருந்தால் மட்டும் போதாது. பக்குவப்பட்டு இருக்க வேண்டும். கடவுள் அருளால்தான் பிரபத்தி நெறி என்னும் சரணாகதி மார்க்கம் புரியும். ஆனால் தன்னையே நம்பித் தன்னைப் புகலாக அடைந்த சீடர்கள் அதை உணர வேண்டும் என்றுதான் அந்தப் பிரபத்தி நெறியை விளக்கி கத்ய த்ரயம் எழுதினார். இதை நானாகச் சொல்லவில்லை. கத்ய த்ரயத்திற்கு மணிப்பிரவாள மொழிநடையில் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை ஒரு வியாக்கியானம் எழுதியிருக்கிறார்; அதில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொதுவாகவே மணிப்பிரவாள நூல்களில்தான் உண்மையான சம்பிரதாய நிலவரம் என்ன என்று தெரியவரும்’ என்று போதனை செய்த நண்பரிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை. 

அதன் பிறகு மணிப்பிரவாள நூல்களையெல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்த பொழுது அதில் பிரபத்தி நெறி குறித்தும், ஸ்ரீராமானுஜரின் நோக்கங்கள் குறித்தும், ஆழ்வார்களின் உபதேசம், சரணாகதி மார்க்கத்தில் பாகவத சமுதாயத்தில் வர்ணதர்மம் தள்ளுண்டு பிரபன்ன குல சமத்துவம் என்னும் கருத்துகள் எல்லாம் இருக்கவும், சரி, இப்படித்தான் இருக்கும் போல் இருக்கிறது. அதனால்தான் ஹைதராபாதில் ஸ்ரீராமானுஜருக்குச் சமத்துவ சிலை நிறுத்தியிருக்கிறார்கள் போல! பிரபன்னர்கள் என்னும் வட்டத்திற்குள்ளாவது வர்ணதர்மம் என்பதைப் புறம் தள்ளி சமத்துவம் என்னும் கருத்து அந்தக் காலத்தில் ஒலித்திருக்கிறதே. நல்லதுதான் என்று தோன்றியது. சமீபத்தில் நான் எழுதிய ‘ஸ்ரீராமானுஜரும் சமத்துவமும்’ என்னும் நூலைப் பார்த்திருப்பார் போல இருக்கிறது இப்பொழுது சொல்லிய நண்பர். நான் நினைத்தேன், அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று. 

ஆனால் ஆக்ரோஷாமாகக் கோபத்தில் பொரிந்து தள்ளினார். என்ன விஷயம் என்றால், ’ஸ்ரீராமானுஜரின் கருத்து என்பது அவருடைய ஸ்ரீபாஷ்யம், சம்ஸ்க்ருத பாஷ்யங்கள் இவற்றில் அவர் எழுதிய கருத்துகள் தாமாம். மணிப்பிரவாள நூல்களையெல்லாம் ஓர் ஆசாரியனை அண்டி அவர் எப்படி அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறரோ அப்படித்தான் அர்த்தம் செய்ய வேண்டுமாம். நான் பாட்டுக்குச் சமத்துவம் என்று மேலைநாட்டுக் கருத்தியல் ரீதியாக எழுதுவதெல்லாம்... இதெல்லாம் என்ன வேலை?’ என்று அதிருப்திமயமாகப் பேசினார். எனக்கு ஒரே புதிராக இருந்தது. என்ன ஆயிற்று இவருக்கு? நான் வடமொழி நூல்களை வைத்துக் கேள்வி கேட்ட போது மணிப்பிரவாள நூல்களைப் பாரென்றார். மணிப்பிரவாள நூல்களை வைத்து ஸ்ரீராமானுஜரின் கருத்துகள், செயல்கள் ஆகியவற்றை வியந்து எழுதியதைப் பார்த்துக் கொந்தளிக்கிறார். இவர் என்னதான் கருதுகிறார்? 

நான் சொன்னேன்: ‘சரி ஐயா. அப்படியென்றால் ஹைதராபாத்தில் சமத்துவ சிலை நிறுவி நாட்டின் பிரதமர் எல்லாம் வந்து, நாடு முழுக்க கொண்டாடியதே, அப்பொழுது அந்தச் சமத்துவம் என்பது என்ன? அதற்கு அடிப்படை என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் லைன் துண்டிக்கப் பட்டது மட்டும்தான். பாவம். இவர் பிரச்சனை இருக்கட்டும். சங்கரர் விஷயத்தில் மணிப்பிரவாளப் பதிவுகள் இல்லை. ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் இவர்களைப் போன்றவர்களுக்கு மணிப்பிரவாளப் பதிவுகள் இருந்தும் தொல்லை. என்ன செய்ய? இந்த மாதிரி சூழ்நிலையில் விவேகானந்தர் சொல்வதைப் படிக்கும் போது எனக்கு என்ன தோன்றும்? ஆமாம். அது என்ன மனிதகுல சமத்துவம், முன்னேற்றம், அறிவுபூர்வமான, மனிதாபிமான, ஆண்பெண் சமத்துவ - இந்த மாதிரி வார்த்தைகளைக் கண்டாலே சிலர் கடுப்படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் progressive என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டேனாம். ஒருவர் பொங்கி வழிந்து வார்த்தையெல்லாம் குளறுகிறது. மிரண்டு எழுதுகிறார். இவர்களுக்கு மத்தியில் common sense  என்பதைக் கவனமாக வைத்துக் கொள்பவர் சாதாரண இந்துவாகத்தான் இருக்க முடியும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, November 27, 2024

நிலைப்பாடு 08

ஸ்ரீராமானுஜர் சமத்துவத்தைப் போதித்தாரா, இல்லையா? பிரபத்தி நெறியும், பிரபன்ன குல சமத்துவமும் அவர் கொண்டதும், நடைமுறைப் படுத்தியதுமான கருத்தும், வழிமுறையும் என்பது நஞ்சீயர் தொடக்கமான ஆசிரியர்கள் எழுதிய மணிப்பிரவாள உரைகளிலும், நூல்களிலும், ஸ்ரீமணவாள மாமுனிகள், பிள்ளைலோகம் ஜீயர் போன்றவர்கள் தரும் விளக்கத்திலிருந்தும் படிக்கும் போது நாம் அறிய வரும் விஷயம். அதுவும் பிரபன்னர்களைப் பொருத்தவரையில்தான் அந்தச் சமத்துவமும். அதைத் தாண்டிப் பொதுவான மனித சமுதாயம் என்று வந்தால் அதே வர்ண தர்மம் என்றுதான் போதிக்கப்படும். 

ஆனால் பிரபன்னர்கள் என்ற இந்த எல்லைக்குள்ளேயே வர்ண தர்மம் செல்லாது, விசேஷ தர்மம் ஆகிய பிரபன்ன குல சமத்துவம்தான் உரியது என்பதையும், பிரபன்னர்கள் விஷயத்தில் சாதி பார்க்கக் கூடாது என்பதையுமே பாரதியார் காலத்திலும் யாரும் நடைமுறையில் ஏற்றதாகத் தெரியவில்லை என்பதைத்தான் பாரதியார் தம் வாசக ஞானம் கட்டுரையில் எழுதும் வரிகள் காட்டுகின்றன. இன்றும் யாரும் அப்படியே பிரபன்ன குல சமத்துவம் என்பதை ஏற்பதாகத் தெரியவில்லை. 'மணிப்பிரவாள நூல்களில் எழுதப்பட்டிருப்பதைப் படித்து அப்படியே அர்த்தம் கொள்ளக் கூடாது. அதெல்லாம் விதிவிலக்கான நம்மாழ்வார் போன்ற சிறப்பான சில ஞானிகள் சம்பந்தமாகச் சொல்லப்பட்டவை. பொதுவான நடைமுறை தர்ம சாத்திரப்படிதான். நீங்களாக ஏதாவது புத்தகத்தைப் படித்து அர்த்தம் செய்துகொண்டால் என்ன செய்வது? இதற்குத்தான் ஓர் ஆசார்யனை அண்டி அவரிடம் கற்க வேண்டும். அப்பொழுது உங்களுக்கு இந்தக் குழப்பங்கள் வராது' என்று சொல்கிறார்கள். 

அந்தக் காலத்தில் ஸ்ரீராமானுஜரின் பார்வையில் ஸ்ரீசங்கரரின் அத்வைதத்தில் வர்ண தர்மத்திற்கு இடமில்லை என்று சொல்கிறாரே (அத்வைதத்தின் குறையாக). ஒரு வேளை இந்த விஷயத்தை ஸ்ரீசங்கரரோ அல்லது அவருக்குப் பின் வந்தவர்களோ சொல்லுவார்களா என்று பார்த்தால் எல்லாம் மித்யை, தோற்ற மயக்கம் என்று சொல்லும் அத்வைதத்திலும் வர்ண தர்மம் அப்படியே சொல்லப் படுகிறது. கேட்டால் என்ன சொல்வார்கள்? ஸ்ரீராமானுஜர் அத்வைதத்தில் காணும் குறை என்றுதானே சொல்கிறார்? அப்படியென்றால் வைணவத்தில் பிரபத்தி நெறி குறித்து ஏன் அவர் தமது நூல்களில் நேரடியாக எதுவும் எழுதவில்லை? அவருக்குப் பின் வந்தோர் வடமொழியில் எழுதாமல் மணிப்பிரவாள மொழியில் எழுதி வைத்திருப்பதை ஸ்ரீராமானுஜரின் கருத்தாகவோ அல்லது அதுதான் வைணவத்தின் சமுதாய நெறி என்றோ, வர்ண தர்மம் பாகவத சமுதாயத்திற்கு உரியது அல்ல என்றும் அவர்கள் சொல்கிறார்களா? 

இந்த நிலையில் ஸ்ரீராமானுஜரைப் பார், ஸ்ரீசங்கரரைப் பார், அவர்கள் எல்லாம் வளர்ச்சி அணுகுமுறையைக் கையாண்டார்கள், சமுதாய சீர்திருத்தவாதிகளைப் போல் கண்டனம், விமரிசனம் என்ற முறையைக் கையாளவில்லை என்று சுவாமி விவேகாநந்தர் சொல்வதை எப்படி ஏற்க முடியும்? சமுதாய சீர்திருத்தவாதிகளின் கண்டனம், விமரிசனம் என்பதால்தானே சமுதாயம் மாறி, புதிய சட்டங்கள் வந்தன? வளர்ச்சி முறையால் சிறுகச் சிறுகத் தவறான கருத்துகள் மறையும் என்று விவேகானந்தர் கருதலாம். ஆனால் நடப்பது என்ன? 

பாரதியாரையே சாதிகளை மறுக்காமல் வெறுமனே சாதிப் பெருமையை மட்டும் மறுத்தவர் என்று சித்திரிக்கத் தொடங்கி விட்டார்கள். ‘சாதிகள் இல்லையடி பாப்பா’ என்பது அவர் காலத்திலேயே வந்த அச்சு வடிவம் அல்லவா என்பதை மறந்து விட்டார்களா அல்லது மறைக்க நினைக்கிறார்களா? சரி. இதற்கே இப்படிச் சொல்கின்றவர்கள் பாரதியார் தாமே எழுதியிருக்கிறாரே ஆங்கிலத்தில் ஒரு கட்டுரை. The Crime of Caste என்று. அதாவது சாதி என்பது க்ரைம் என்று பாரதியார் கருதியிருக்கிறார் என்பதைத் தானே அந்தத் தலைப்பு காட்டுகிறது? அதில் பாரதியார் சாதி என்னும் தீமை நீங்குவதற்கு வழி கலந்து உண்ணலும், கலப்புத் திருமணமுமே ஆகும் என்று கூறுகிறாரே. அதற்கு என்ன சொல்வார்கள்? “The sole remedy is in inter-dining and inter-marrying. The others are mere quack remedies of an anaesthetic character. There are many difficulties in the way of applying this remedy on a large scale. One very real difficulty is the fact that many members of the purely vegetarian sects cannot physically endure the smell of flesh and fish at a distance of five yards. But the vegetarian votaries, consisting of both brahmanas and non-brahmanas, can marry among themselves. There is no rational excuse for not doing that. I repeat there are many – but not insuperable – difficulties in the way of applying that remedy. But there is no other remedy that the human mind can think of.” (The Crime of Caste, pp 640, Vol 08, Kala Varisaip padutthappatta Bhaarathi padaippukal, ed Sri Seeni Visuvanathan, Ist Ed 2007) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, November 26, 2024

நிலைப்பாடு 07

பக்தி மதக்காரர்கள் உண்மையில் பக்தியின் மகத்துவத்தையும், கடவுளுக்கு முன்னர் அனைவரும் சமம் என்பதையும் சொல்ல வேண்டும். ஆனால் பிரம்ம சூத்ர ரீதியாகப் பக்தி என்றாலே அவரவர் வர்ணதர்மம் சொல்லும் கடமைகளைத் தவறாமால் நிறைவேற்றிப் பகவானுக்குப் பூஜை செய்வதுதான் பக்தி என்று அர்த்தம் என்று ஆக்கிக்கொண்டார்கள். ஆனால் பகவான், பக்தன், ஜீவன், ஜகத், சாத்திரம், உலக வியவகாரங்கள், உலகம் எல்லாமே மித்யை, வெறும் தோற்றம், கயிற்றினில் தோன்றும் பொய்ம்மை அரவு என்று சொல்லும் ஸ்ரீசங்கரர் ஏன் வர்ணதர்மத்தை விடாமல் சேர்த்துக் கொள்கிறார்? பிரம்மசூத்ரத்தின் அபசூத்ராதிகரணத்தில் அவர் எழுதுகின்ற உரை என்னவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்போம் அவருடைய கொள்கையின்படியே பார்த்தாலும்? ‘ஜகத்தே மித்யை, சாத்திரமும் அந்த மித்யையில் அடங்கியதே என்கிறேன்; என்னிடம் வந்து யாருக்குத் தகுதி வேதாந்தம் படிக்க என்று கேட்கிறாயே; போ எல்லாம் மித்யை. பிரம்மம் ஒன்றே சத்யம்’ என்று சொல்வார் என்று எதிர்பார்த்தால் அப்படி ஒன்றும் இல்லை. வேதம் கற்க அதிகாரம் இல்லை, யக்ஞம் செய்ய அதிகாரம் இல்லை என்றெல்லாம் காரணம் சொல்கிறார் ஸ்ரீசங்கரர் மற்ற சித்தாந்தக்காரர்களைப் போலவே. 

யக்ஞங்களால்தான் மோக்ஷத்திற்கு எந்தப் பலனுமில்லை, கர்மங்களால் ஒரு நாளும் முக்தி உண்டாகாது என்று கர்மங்களைக் கண்டித்தவர்தானே ஆதிசங்கரர்? பின் அவர் ஏன் வர்ணதர்மம் என்று வரும்போது வேதம் படிக்கத் தகுதி, யக்ஞம் செய்யத் தகுதி என்றெல்லாம் பேசுகிறார்? ஜகத்தே மித்யை, சாத்திரமும் அந்த மித்யையில் அடங்கியதே என்று சொன்னவருக்கு இங்கு ஏன் பேச்சு மாறுகிறது? சரி இவரைக் கேள்வி கேட்கும் ஸ்ரீராமானுஜர் தாம் எழுதும் போது அதே பிரம்மசூத்ரங்களுக்கான உரையில் பிரபத்திதான் சிறந்தது என்றும், அந்தப் பிரபத்தி நெறி நம்மாழ்வார் திருவாய்மொழியில் காட்டிய அனைவருக்கும் பொதுவான நெறி என்றும், பிரபன்னர்களின் சமுதாயத்தில் சாதி பார்த்தல் கூடாது என்றும், வெளிப்படையாக எழுதி வைக்கலாமே? இல்லை அப்படி வேதாந்த சூத்ரங்களின் உரையில் எழுத முடியாத கருத்தைச் சொல்லத்தான் கத்யத்ரயம் எழுதினார் என்று ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை தம்முடைய கத்யத்ரய உரையில் எழுதுவதைக் கொண்டால் பிரபத்திக்கு என்று உரிய சுலோகமாகிய பகவத் கீதை 18ஆம் அத்யாயம் ‘ஸர்வதர்மான் பரித்யஜ்ய’ என்னும் சுலோகத்தின் உரைக்கான தமது உரையில் எழுதலாமே.? அதற்கும் தடை இருந்த காரணத்தால்தான் திருவாய்மொழிக்கான உரைமரபைத் தோற்றுவித்தார் என்று சொன்னால் மணிப்பிரவாள நூல்களில் நஞ்சீயர் தொடக்கம், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, ஸ்ரீமணவாளமாமுனிகள், பிள்ளைலோகம் ஜீயர் ஆகியோர் எழுதியதை அப்படியே யாரும் ஏற்றுக் கொள்வதாகக் காணோமே. மீண்டும் வர்ணதர்மத்திற்கு முரணாகாத வகையில், அதுவும் விதிவிலக்குகளாக நம்மாழ்வார் போன்ற சிறப்பான ஞானிகள் விஷயத்தில் மட்டும் பொருத்திப் பொருள் காண வேண்டும் என்று வியாக்கியானிக்கப்படுகிறதே!

ஸ்ரீராமானுஜர் தம் வடமொழி நூல்களில் என்ன எழுதினாரோ அதற்குப் பொருந்திய வகையில்தான் மணிப்பிரவாள நூல்களில் எழுதப்பட்ட கருத்துகளுக்கும் பொருள் கொள்ள வேண்டும் என்று சொல்கிறார்கள். இன்று என்று இல்லை. பாரதியார் காலத்திலும் இப்படித்தான் நிலைமை போலும்! பாரதியார் எழுதுகிறார்: “விஷ்ணு பக்தியுடையோர் எந்தக் குலத்தோர் ஆயினும் எல்லாவகையிலும் ஸமானமாகப் போற்றுவதற்குரியர் என்பது ராமானுஜாசார்யருடைய பரம சித்தாந்தம்’ என்பதை நன்குணர்ந்த
தற்காலத்து வைஷ்ணவர்கள் பிராமண சூத்ர பேதங்களை மறற வகுப்பினரைக் காட்டிலும் அதிகமாகப் பாராட்டுவது மாத்திரமன்றி, இன்னும் வடகலை தென்கலைச் சண்டைகளைக்கூட விடாமல் வீண்சச்சரவுகளில் ஈடுபட்டு உழல்கின்றார்கள்.” (வாசகஞானம்). இன்னும் சொல்லப்போனால் பாரதியார் சொல்வது போல் ராமானுஜாசாரியாரின் பரம சித்தாந்தம் இதுதானா என்பதிலேயே முரண்படுகிறார்களோ என்றுதான் கருத வேண்டியிருக்கிறது. 

ஏன் சொல்கிறேன் என்றால் ஒரு சாதாரண இந்துவாக இந்தக் கருத்துகளை எதிர்கொள்ளும் எனக்கு எந்தக் கஷ்டமும் இருப்பதில்லை. நன்றாக இருக்கிறதா? நல்லது. பொருந்தவில்லையா? சரியில்லாத கருத்துகளை, தவறான கருத்துகளை விமரிசனம் செய்வதோ, ஒதுக்கிவிட்டுப் போவதோ செய்ய முடிகிறது. ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர் போன்றவர்கள் என் சிறுவயது முதலே என் ஆர்வத்தை ஈர்த்தவர்கள். அவர்கள் விஷயமாக இருந்தாலும் கூட ஒவ்வாத கருத்துகளை விமரிசனம் செய்ய முடிகிறது. இதைத்தான் இந்துமதத்தின் சிறப்பாக நான் கருதுவது. இந்தியாவில் விவேகானந்த சங்கங்கள் நடத்துவதற்கான குறிப்புகள் தருமிடத்தே சகோதரி நிவேதிதை அவர்கள் எழுதுகிறார்: “There is a danger of turning the Swami's books into a new bondage, by treating every word of the text as sacred, and reading and re-reading constantly, till the brain is dazed and the ears are deafened and we lose all chance of understanding,” 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Monday, November 25, 2024

நிலைப்பாடு 06

ஸ்ரீராமானுஜர் அத்வைத சித்தாந்தத்தை நோக்கி அதன் குறைகள் என்ற கணக்கில்தான் சொல்கிறார். என்ன சொல்கிறார்? ‘அத்வைதம் சொல்லும் ஞானத்திற்கு வர்ணதர்மம் கட்டாயமில்லை. இன்னாருக்குத்தான் அத்வைதம் சொல்லும் மோக்ஷ ஞானம் ஏற்படும் என்று வர்ணதர்ம ரீதியான நியதி ஒன்றும் இல்லை. இன்னாருக்குத்தான் உபதேசிக்க வேண்டும் என்ற கட்டாயமும் பிரம்ம ஞானம் அடைந்தவர்களை (அத்வைத சித்தாந்தத்தின்படி பார்த்தால்) கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவர்கள் தர்ம சாத்திரம் என்பதையெல்லாம் கடந்து போய்விட்டவர்கள் (அத்வைதத்தின் கருத்துப்படி)’. 

ஸ்ரீராமானுஜர் இப்படிச் சொல்கிறார் என்றால் அந்தக் காலத்தில் இருந்தவர்களுக்கு அத்வைதத்தைப் பற்றி இப்படி ஒரு பார்வை இருந்திருக்கிறது என்றுதானே பொருள்?. இதே பார்வை அத்வைத ஆசிரியர்களுக்கும் இருந்திருக்கலாமே? ஏன் யாரும் இந்த அம்சத்தைக் குறித்து எழுதவில்லை. பிரம்ம சூத்திரத்தின் எந்த அதிகரணத்தில் (அதாவது அபசூத்ராதிகரணத்தில்) ஸ்ரீராமானுஜர் இந்த மாதிரி தம் பார்வைகளைப் பதிந்து வைத்திருக்கிறாரோ, அதே அதிகரணத்திற்கு உரை எழுதும் அத்வைத ஆசிரியர்கள் இந்த அம்சத்தைக் குறித்து எதுவுமே எழுதாமல், வேதாந்த சாத்திரம் கற்றால்தான் பிரம்ம ஞானம் ஏற்படும், வேதாந்தம் கற்க இன்னாருக்குத்தான் தகுதி என்று எழுதிவிட்டுக் கடந்து போய்விடுகிறார்கள். 

இன்று நாம், அனைவருக்கும் அத்வைத ஞானம் உரியது, அதற்கு வர்ணதர்மம் தடையில்லை என்று சொன்னால் உடனே கூக்குரல் இடுவார்கள் - ‘இந்த மாடர்ன் இந்துக்களே இப்படித்தான். யாராவது நவீன சந்நியாசிகள், விவேகானந்தரோ, சித்பவானந்தரோ, அபேதானந்தரோ அல்லது யாரோ நவீனர்கள் ஆங்கிலத்தில் எழுதியதைப் படித்துவிட்டு இப்படிப் புரட்சி பண்ணுகிறேன் பேர்வழி என்று சொல்வார்கள்!’ என்று சாடுவார்கள். ஆனால் இங்குச் சொல்வதோ அந்தக் காலத்து ஸ்ரீராமானுஜர். என்ன வித்யாசம்? அவர் நேர்முகமாகச் சொல்லாமல் அத்வைதத்தின் குறைபாடுகள் என்ற கணக்கில் இவ்விதம் சொல்கிறார். சொன்னால் என்ன? அத்வைதத்தைக் குறித்து இத்தகைய பார்வை அன்றே அத்வைதத்தைக் கண்டிக்க நினைத்தவர்கள் மொழிதலில் வந்திருக்கிறது என்றுதானே பொருள்? இதோடு நிற்கவில்லை ஸ்ரீராமானுஜர். சமயத்தில், ஆதரவாளர்களை விட எதிர்த்துக் கண்டிப்பவர்கள் கூடுதல் உண்மையை வெளிக்கொணர்ந்து விடுவார்கள். 

மேலும் ஸ்ரீராமானுஜர் சொல்வது என்னவென்றால் ’அத்வைதம் சொல்லும் ஞானம் என்பது வேதாந்தம் என்ற சாத்திரப் படிப்பின் மூலமாகத்தான் ஏற்படும் என்று இல்லை. உலகின் நிலையாமையும், நிலைத்த மாறாத ஞானமயமான பரவஸ்து ஒன்று இருக்கிறது என்னும் உணர்வும் சாதாரணமான பிரத்யக்ஷம், அனுமானம் என்னும் அறிவைக்கொண்டே ஒருவர் வாழ்க்கையில் போதிய பக்குவம் அடைந்து தியானம் என்பதால் மனமும் அடங்கி இருக்கும் போது சாதாரண அறிவுக்கே எட்டக் கூடிய ஞானம்தான் அத்வைதம் சொல்லும் ஞானம் என்கிறார். இதை ஸ்ரீராமானுஜர் குறையாகச் சொன்னாலும் என் காதிற்குத் தேன் வந்து பாய்ந்தது போல் இருக்கிறது. எங்கே விவேகானந்தர் 11 ஆம் நூற்றண்டிற்குப் போனார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. ஆம். அறிவு ஆராய்ச்சிக்கு உகந்த மதம் ஒன்று உண்டென்றால் அஃது அத்வைதமே என்று விவேகானந்தர் சொன்னதற்கும், ஸ்ரீராமானுஜர் அன்று சொன்னதற்கும் அக்ஷரம் பிசகாமல் ஒத்துப் போகிறதே என்று மகிழ்ந்து போகிறேன் நான். நீ மகிழ்வதற்காக அவர் சொல்லவில்லை என்று என்னைக் கோபித்துப் பயனில்லை. சில சமயம், ஆதரவாளர்கள் குழப்புவதை விட எதிராளிகள் தெளிவாகச் சிறப்புகளை எடுத்துக் காட்டிவிடுவார்கள், சிறப்பு காட்ட வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே. 

இப்படித்தான் பாருங்கள் சைவ சமயத்தில் வர்ணதர்மம், சாதி என்னும் பிரிவினைப் பார்வை இல்லை என்று சிலர் சொல்கிறார்களே, ஆனால் சிவஞான போதம் மாபாடியம் எடுத்துப் படித்தால் வர்ணதர்மம் மிகக் கட்டாயமாக ஆதரிக்கப் பட்டிருக்கிறதே என்ற சந்தேகம் எனக்குப் பலநாள் இருந்தது. ஒரு சமயம் ஸ்ரீஆளவந்தார் எழுதிய ஆகம ப்ராமாண்யம் என்ற நூலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஸ்ரீஆளவந்தார் வைதிக நெறிக்கு ஏற்றது பாஞ்சராத்திர ஆகமம் முதலிய வைணவ ஆகமமே என்று நிறுவ நினைத்தவர், சைவ ஆகமம் அவ்வாறு வைதிக நெறிக்குப் புறம்பானது என்று குறையாகக் கூற நினைத்தவர், அதற்கு காரணமாகக் கூறுவது ‘சைவம் வர்ணதர்மத்தை ஏற்காமல் புறக்கணிக்கிறது’ என்று தம் காலத்தில் இருந்த நிலைமையையோ அல்லது அப்படி வர்ணதர்மம் ஏற்காத சைவ சமயப் பிரிவு எதையோ குறித்து எழுதுகிறார். அவர் கணக்கில் அது குற்றச்சாட்டு. ஆனால் எனக்கு ஒரு குழப்பம் தெளிவாகிவிட்டது. அவர் காலத்தில் இருந்த சைவமோ அல்லது சைவ சமயப் பிரிவு ஏதோ ஒன்றோ வர்ணதர்மம் ஏற்காமல் புறக்கணித்தது என்ற விஷயம், சைவத்திற்கு எதிர்ப்பு நிலை எடுத்தோரால் தம் நூலில் பதியப் படுகிறது. அப்பொழுது அத்தகைய கருத்திற்கு ஸ்ரீராமானுஜருக்கு முந்தையரான ஸ்ரீஆளவந்தார் நூலிலேயே ஒரு சான்று கிடைக்கிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! அதாவது எதற்கு இவ்வளவும் சொல்கிறேன் என்றால் தேடிப்பார்த்தால் சாதாரண இந்துவாய் இருப்பதற்குப் பலமான ஆதாரங்கள் பழையவர்களின் நூல்களிலேயே கிடைக்கின்றன. எனவே இன்று சொல்வார் எதையாவது சொல்லிக்கொண்டு போகட்டும். நம்ம கட்சி ஸ்ட்ராங் என்னும் திருப்திதான் என்று வைத்துக்கொள்ளுங்கள். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Sunday, November 24, 2024

நிலைப்பாடு 05

பண்டைய ஆசாரியர்கள் எல்லாம் சமுதாய சீர்திருத்தம் என்பதைக் கண்டனம், தகர்த்தல், விமரிசனம் என்ற போக்கைக் கையாளாமல் ஆதரவு போன்ற அணுகுமுறையில், ‘நல்லது. இதைவிட அது நல்லது’ என்ற பாணியில் நயமுற உபதேசம் செய்து வளர்ச்சி முறையைக் கையாண்டார்கள் என்பது சுவாமி விவேகாநந்தரின் கருத்து என்று பார்த்தோம். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல ஞானிகளும் அத்தகைய அணுகுமுறையைக் கையாண்டு வந்து என்ன பலன் விளைந்தது? 

விவேகாநந்தர் குறிப்பாக எடுத்துக் காட்டும் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீசங்கரர் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். ஸ்ரீராமானுஜரோ, ஸ்ரீசங்கரரோ, ஸ்ரீமத்வரோ அல்லது எந்த சித்தாந்த ஆசிரியரோ, மற்ற எந்த தத்துவ சித்தாந்த முடிவுகளில் மாறுபட்டாலும் ஒரு விஷயத்தில் ஒருமித்த குரலாகத்தான் அவர்களுடைய நூல்களில் எழுதிவைத்துள்ளனர். அது எந்த விஷயம்? வர்ணதர்மம் என்னும் விஷயத்தில் ஒரே மாதிரிதான் அவர்களுடைய எழுத்து பேசுகிறது. ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் அவர் வழிவந்த, அவர் காலத்தை அடுத்து அதை ஒட்டிய அண்மைக் காலத்தில் வந்த ஆசாரியர்களான நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, அவரது மகனார் நாயனாராச்சான்பிள்ளை, வடக்குத்திருவீதிப்பிள்ளை, அவருடைய குமாரர்களான பிள்ளை லோகாசாரியார், அழகியமணவாளப்பெருமாள் நாயனார், ஸ்ரீமணவாள மாமுனிகள், இவர் காலத்திற்குப் பின்னர் வந்த ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் என்னும் இவர்களின் மணிப்பிரவாள நூல்களில் ஸ்ரீராமானுஜரைப் பற்றிய பதிவுகள் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றன. நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ்வேதம் என்றும், அதன் தாத்பர்யமான கருத்து பிரபத்தி நெறி என்றும், அந்தப் பிரபத்தி நெறிக்கு ஆசையுடைய அனைவரும் உரியவர் என்றும், அந்தப் பிரபத்தி நெறியைக் கைக்கொண்ட பிரபன்னர்கள் விஷயத்தில் வர்ணதர்மம் செல்லாது, பிரபன்னர்கள் என்னும் பாகவதர்களிடத்தில் என்ன ஜாதி என்று யோசித்தல் கூட பெரும் தீமை என்றும், இந்தக் கருத்துகளே ஸ்ரீராமானுஜரால் தம் வாழ்வில் கைக்கொள்ளப் பட்ட கருத்துகளும் வழிமுறையும் ஆகும் என்றும் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த ஆசாரியர்களின் மணிப்பிரவாள நூல்களில் தெரிவிக்கப் படுகின்றன. ஆனால் ஸ்ரீராமானுஜருக்குப் பின்வந்த ஆசாரியர்களில் ஒருவரான ஸ்ரீவேதாந்த தேசிகர் பிரபன்னர்களும் வர்ணதர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களே, சாத்திரம் ஒன்று சொல்ல அதற்கு மாறாக ஒரு சம்பிரதாயம் என்று சொல்ல வழியில்லை என்று தமது ரஹஸ்யத்ரயஸாரம் முதலிய நூல்களில் சொல்கிறார். ஸ்ரீராமானுஜர் தமது நூல்களில் வெளிப்பட எழுதியுள்ள கருத்துகளுக்கு முரணாகாத வழியில்தான் மணிப்பிரவாள நூல்களின் கருத்துகளைக் கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் பொதுவான போக்காக இருக்கிறது. 

ஸ்ரீராமானுஜரின் நூல்களை எடுத்துக் கொண்டால் வர்ணதர்மத்தை முற்றிலும் உடன்பட்டு எழுதுகின்ற முறைதான் காணப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் அத்வைதத்தை எதிர்த்துக் கண்டித்து எழுதும் பகுதியில் இன்னும் ஆணித்தரமாகவே வர்ணதர்மத்தை வலியுறுத்திப் பேசுகிறார் ஸ்ரீராமானுஜர். அதாவது என்ன இடம் என்றால், முக்தி என்னும் மோக்ஷத்திற்கு ஞானமே வழி. ஞானத்தால்தான் மோக்ஷம் ஏற்படும். அத்வைதம் சொல்கின்ற ஞானம் எத்தகையது? எத்தகையது என்றால் என்ன சொல்ல வருகிறார்? இதைப் புரிந்துகொள்ள ஓர் அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பெறுகின்ற ஞானம் அல்லது அறிவு என்பது இரண்டுவிதமாக இருக்கக் கூடும். ஒரு பொருளைப் பார்க்கிறோம். உடனே அது என்ன பொருள் என்று அறிவு ஏற்படுகிறது. யாரும் நமக்குச் சொல்ல வேண்டியதில்லை. இது பொருள் சார்ந்த அறிவு. இதற்குப் பெயர் வஸ்து தந்த்ரம் (வஸ்து - பொருள்; தந்த்ரம் - சார்ந்த). இன்னொரு வகை அறிவு ஏற்படலாம். ஒரு விஷயத்தைப் பற்றி யாரோ ஒருவரிடம் சென்று அவரிடம்தான் தெரிந்துகொள்ள முடியும். அவருடைய சௌகரியம், அவருடைய விருப்பம், நமக்குத் தகுதி இருக்கிறதா என்று அவருடைய தீர்மானம் என்று பல நிபந்தனைகளின் பேரில் அவர் நமக்கு அந்த விஷயத்தைச் சொல்லி நாம் தெரிந்து கொண்டால் அஃது ஆள் சார்ந்த அறிவு என்ற வகைபடும். இதற்குப் பெயர் புருஷ தந்த்ரம். (புருஷ - ஆள்; தந்த்ரம் - சார்ந்த). பொருள் சார்ந்த அறிவில் ஒரு பொருளானது நமக்கு நிபந்தனைகள் போடாது. தன்னைக் கண்டதும் தன்னைப் பற்றிய அறிவை நல்கிவிடும். ஆனால் ஆள் சார்ந்த அறிவில் அந்த ஆளின் மனம் குளிர்ந்து ஒப்பிய பிறகுதான் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும். 

ஸ்ரீராமானுஜர் அத்வைதத்தைக் குறித்து எழுப்பும் கேள்விக்கு வருவோம். அத்வைதம் சொல்கின்ற மோக்ஷம் தரும் ஞானம் என்பது பரம்பொருளைத் தெரிந்துகொண்டதும் அந்தப் பரம்பொருளின் இயல்பால் தானாக நம்பால் உண்டாகிவிடும் ஞானம். அந்தப் பரம்பொருளோ எப்பொழுதும் இருக்கிறது. ஜீவன், ஜகத் என்னும் வேறுபாடுகள் எல்லாம் மித்யை. அவித்யையால் உண்டான வெறும் தோற்றம். பரம்பொருளைப் பற்றிய ஞானமோ என்றும் மாறாமல், மறையாமல் இருந்துகொண்டிருக்கும் அந்தப் பொருள் சார்ந்து நம்மிடம் உண்டாகும் ஞானம். அதற்கு எந்த நிபந்தனைகளும் தேவை இல்லை. தர்ம சாத்திரங்களைக் கைக்கொண்டு அவரவர் வர்ண ரீதியாகக் கடமைகளை இயற்றி அதன் மூலம் கடவுள் மனத்தைக் குளிரச் செய்து, அதன் பலனாக விளையும் கிருபையால்தான் அந்த ஞானம் ஏற்படும் என்ற நிபந்தனை எதுவும் இல்லாததால் வர்ணதர்மம், தர்ம சாத்திரம், பொதுவாகவே சாத்திரம் என்று எந்தத் தேவையும் அத்வைதம் சொல்லும் மோக்ஷ காரணமான ஞானத்திற்கு இல்லை என்பதால் அத்வைதிகளுக்குத் தர்ம சாத்திரமே தேவையில்லை. அவர்களும் சாத்திரத்திற்குப் புறம்பானவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால் விசிஷ்டாத்வைதிகளாகிய எங்களுக்கோ மோக்ஷத்திற்குக் காரணமான ஞானம் என்பது பரமபுருஷனை ஆராதித்து, அவன் மனத்தைக் குளிரச் செய்து, அவனுடைய கிருபையால் பெறுகின்ற ஞானம் என்பதால், தர்ம சாத்திரம் என்பது அவனுடைய ஆணையாக இருப்பதால், தர்ம சாத்திரம், வர்ணதர்ம அனுஷ்டானம் எல்லாம் முற்றிலும் கட்டாயமாகி விடுகிறது. அதையெல்லாம் அனுஷ்டிப்பதன் மூலம் பரம புருஷனின் மனத்தைக் குளிரச் செய்து அவன் கிருபையால் பெறும் புருஷதந்த்ர ஞானம் எங்கள் சித்தாந்தம் சொல்லும் ஞானம். 

அதாவது ஸ்ரீராமானுஜர் சொல்வதைப் பார்த்தால் அத்வைதம் என்னும் சித்தாந்தம் வர்ணதர்மத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. தன்னியல்பில் அதைக் கடந்தது. தர்ம சாத்திர நிபந்தனைக்கு உட்படாதது என்று அர்த்தமாகிறது. ஆனால் இதை அத்வைத ஆசிரியர்கள் ஏன் சொல்லவில்லை? ஸ்ரீசங்கரரே தமது நூல்களில் ஜகத்தே மித்யை, அவித்யை என்று பேசினாலும் வர்ணதர்மம் என்பதை ஏன் உடன்பட்டே எழுதுகிறார்? சரி. இவரை அப்படிக் கேள்வி கேட்ட ஸ்ரீராமானுஜர் பிரபத்தி என்னும் அனைவருக்குமான பொதுநெறி என்பதை ஏன் தம் நூல்களில் வெளிப்படையாக எழுதவில்லை? சம்பிரதாயமாக அவர் சொல்லி வந்து சேர்ந்து அவருக்குப் பின் வந்த பூர்வாசாரியர்கள் தாம் எழுதிய மணிப்பிரவாள நூல்களில் அதைப் பதிவு செய்தார்கள் என்றால், அந்தக் கருத்தை இதுவரை வந்த காலங்களிலும், ஏன் இன்றும் கூட யாரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லையே! வெறுமனே ஏட்டில் பதியப்பட்ட விஷயங்கள், ஏதோ சில ஆசாரியர்கள் தம் அளவில் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்திருக்கலாம்; ஆனால் பொதுப்பட பார்த்தால் அதே பழைய வர்ணதர்மமே அனைவருக்கும் பொருந்தியது என்ற நிலை நிலவக் காரணம் என்ன? 

சுவாமி விவேகாநந்தர் சொன்னது போல் இவர்கள் எல்லாம் சமுதாயச் சீர்திருத்தக் கண்டன முறையைக் கையாளாமல், நன்கு செய்தாய் மேலும் நல்லவிதமாகச் செய்வோம் என்ற வளர்ச்சி முறையைக் கையாண்டவர்கள்தாமே? ஒரு மாற்றமும் ஏன் கருத்தளவில் கூட ஒரு எல்லைக்குட்பட்ட வட்டத்தில் கூட ஏற்படவில்லையே! இன்னும் சொல்லப் போனால் மணிப்பிரவாள நூல்களில் சொல்லப்பட்ட கருத்தை உரக்கச் சொல்ல வேண்டியவர்களே கூட வர்ணதர்மத்தைத் தானே உரக்கச் சொல்கிறார்கள்.! ஆனால் விவேகானந்தர் மறுக்கும் முறையான சமுதாய சீர்திருத்தவாதிகளின் கண்டனப் போக்குதான் நம் காலத்தில் தோன்றிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை மறுக்க இயலாதே! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***