'நீ என்ன படித்தாலும் என்ன? நான் என்ன படிக்காவிட்டாலும் என்ன? நீ படித்து விட்டதால் மரணம் உனக்கு இல்லை என்று ஆகிவிடுமா? நான் படிக்காததால்தான் எனக்கு மரணம் என்று உண்டா? எல்லோருக்கும் ஒரு நாள் நடக்கப் போகிறது. இதில் எதற்கு ஏகப்பட்ட விஷயங்களைப் பற்றிப் படிப்பு?’ - இப்படிக் கேட்கும் நண்பருக்குப் பதில் சொல்ல எனக்குத் தெரியவில்லையா இஷ்டமில்லையா.. ஏதோ ஒன்று. அதுவும் அண்மையில்தான் ஐஸி வார்டில் ஒரு வாரம். நல்ல அனுபவம். ஆளைக் கிடையாகக் கிடத்திக் குப்பி, நாளம் எல்லாம் சொருகி விட்டார்கள். நல்ல வேளை உடனேயே தேரத் தொடங்கி விட்டேன். ஆனால் மனம் மட்டும் ஆஃப் ஆகாமல் சுற்றுப்புறத்தைக் கவனித்துக் கொண்டே இருந்தது. மல்லாக்கக் கிடத்துவதில் தூக்கமும் வரவில்லை. இருபத்திநாலு மணி நேர வாட்ச் டவர் போல் ஆகிவிட்டேன். நர்ஸ் தோழிகளுக்கோ கடுப்பான கடுப்பு. ‘தூங்காமல் ஏன் முழித்துக் கொண்டிருக்கிறாய்?’ ‘டாக்டர்! இந்தப் பேஷண்ட் தூங்கறதே இல்ல. முழிச்சுக்கிட்டே இருக்காரு. இல்லைன்னா தண்ணி தண்ணின்னு நீர் குடித்துக் கொண்டே இருக்கிறார்’ என்று என்னைப் பற்றிக் குற்றப் பத்திரிக்கை வரும் டாக்டரிடம். இதில் மூன்றா நாள் இரவு 1 மணிக்கு யாரோ ஒருவருக்கு மிகவும் சீரியஸாம். அவரைக் கொண்டு வந்து என் பக்கத்தில் போடப்பட்டிருந்த கட்டிலில் கிடத்திப் போராடிக் கொண்டிருக்கிறார்கள். டாக்டரும், நர்ஸ்களும் மருத்துவ அதிரடி உடனடி நடவடிக்கைகள், அவற்றின் பெயர்கள் எல்லாவற்றையும் கவனித்துக் கொண்டு என்னுடைய பொழுது. நடுவில் ஒரு நர்ஸ் பார்த்து விட்டு என்னைச் சரியான திட்டு. ‘தூங்காமல் என்ன செய்யிறீங்க.. மணி 2. இன்னுமா தூங்கல.? எனக்கோ அந்தப் பேஷண்ட் என்ன ஆகப் போகிறார் என்று டென்ஷன். பக்கத்துக் கட்டிலில் கிடக்கும் ஒருவர் மிகவும் கிரிடிக்கலான நிலை. விளிம்பில் போராடிக் கொண்டு. இதை 70 கொடுங்கள். அடுத்து 60 அடுத்து 10 வரை பார்ப்போம். பிக அப் ஆனால் ஓகே... அந்த இஞ்ஜக்ஷன் எங்கே... ஒரு பத்து நி பாருங்கள். இம்ப்ரூவ் ஆகவில்லையெனில் என்னைக் கூப்பிடுங்கள். எனக்கா.. என்ன ஆகும்? இந்தப் பத்து நி. பிக் அப் ஆகுமா? ஆகணும். கடவுளே! .... அவர் எந்த விளிம்பின் மீது நின்று கொண்டிருக்கிறாரோ அதற்குச் சற்று இப்பக்கம் தள்ளிதான் நானும் நிற்கிறேன் என்பது எனக்கு நிதர்சனமாகக் காட்டியபடி நடபடிகள் துரிதம்.
எதற்கு இதை விவரிக்கிறேன் என்றால் படித்தாலும் என்ன படிக்காவிட்டாலும் என்ன மரணம் ஒன்றுதானே என்று என்னைக் கேட்டால் இந்த அனுபவத்திற்குப் பின்னர் என்ன சொல்வேன்... யாரா இருந்தாலும் ட்யூபைச் சொருகி மல்லாக்கக் கிடத்திடுவாங்க... அந்த விளிம்பின் அப்பக்கமா இப்பக்கமா எங்குக் காலத்தின் ஆடுமுள் நிற்கிறதோ.. தெரியாது என்பதை நேருக்கு நேர் கண்கூடாக நர்ஸ் தோழிகளின் கண்டிப்புக்கும் இலக்காகிப் பார்த்துக் கொண்டிருந்தேன் என்னும் பொழுது.. இதற்கு என்ன பதில் சொல்வது? ஆனாலும் படிப்புதான் வாழ்க்கையை அர்த்தம் உள்ளதாக ஆக்குகிறது வாழும் வரையிலாவது. ‘ஒருமைக் கண் தான் கற்ற கல்வி..’ என்று சொல்கிறார் புலவர். சொல்லும் நோக்கம் புரிகிறது.
மக்களுக்குள் படித்தால் என்ன படிக்காவிட்டால் என்ன என்ற அபிப்ராயம் நிலவுகிறது என்பதை வைத்துதான் பல மத உபதேசிகள் பக்குவமாகப் பேசுகிறார்கள். ‘நீங்கள் அதெல்லாம் எதுவும் அதிகம் படிக்க வேண்டாம். நான் சொல்லும் இந்த மூன்று நான்கு விஷயங்களை மட்டும் தவறாமல் செய்து விடுங்கள். நேர்முறையான விஷயங்கள் என்ன செய்ய முடிகிறதோ இல்லையோ, எதிர்மறையான இந்த மூன்று நான்கு விஷயங்களை மட்டும் செய்யவே செய்யாதீர்கள். பாருங்கள். ரொம்ப ஸிம்பிள். இதை மட்டும் செய்து விட்டு நிம்மதியாக இருங்கள்’ - இந்த மாதிரி தொனிக்கும்படி ஒரு மத உபதேசியார் பேசும் போது மயங்காத ஆட்கள் யார்? ‘நம்பிக்கைதான் வாழ்க்கை. நம்புங்கோ. அறிவு உங்களைக் கவுத்துடும். நம்பிக்கை வைங்கோ’ என்று அடித்துச் சொல்லும் போது கேட்பவர், தம் பாரம் எல்லாம் இறக்கி வைத்த நிம்மதி. இதில் நாம் ஊடாறப் போய் ‘ஐயா! படியுங்கள். இதைக் குறித்தெல்லாம் உஷாராகப் படிக்கவில்லையெனில் யார் சொல்வது சரி, தவறு என்று எப்படித் தெரியும்? படிப்புதான் மிகவும் முக்கியம்.’ என்று சொன்னால் நம்மிடம் இந்த மாதிரி மேற்கண்ட பதில்தான் வரும். அப்படி ஒரு வேளை நடைமுறையில் ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகி நிற்கும் ஒருவர் வேண்டுமானால் அந்த நேரத்திற்கு உணர்வு விழித்தவராய் நம்மிடம் ‘ஆமாம். நீங்க சொன்னது சரிதான். நாம் நம்மைக் காப்பாற்றிக் கொள்ள படிப்புதான் மிகவும் முக்கியமானது’ என்று சொல்வாராயிருக்கும். அது எப்பவாவது யாருக்காவதுதான். மற்றபடி ‘படிப்பா? என்னத்துக்கு?’ என்னும் கட்டடம் இஷ்ட்ராங்தான்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
ஆஸ்பத்திரி அனுபவம் அருமை!
ReplyDelete