Monday, November 25, 2024

நிலைப்பாடு 06

ஸ்ரீராமானுஜர் அத்வைத சித்தாந்தத்தை நோக்கி அதன் குறைகள் என்ற கணக்கில்தான் சொல்கிறார். என்ன சொல்கிறார்? ‘அத்வைதம் சொல்லும் ஞானத்திற்கு வர்ணதர்மம் கட்டாயமில்லை. இன்னாருக்குத்தான் அத்வைதம் சொல்லும் மோக்ஷ ஞானம் ஏற்படும் என்று வர்ணதர்ம ரீதியான நியதி ஒன்றும் இல்லை. இன்னாருக்குத்தான் உபதேசிக்க வேண்டும் என்ற கட்டாயமும் பிரம்ம ஞானம் அடைந்தவர்களை (அத்வைத சித்தாந்தத்தின்படி பார்த்தால்) கட்டுப்படுத்தாது. ஏனெனில் அவர்கள் தர்ம சாத்திரம் என்பதையெல்லாம் கடந்து போய்விட்டவர்கள் (அத்வைதத்தின் கருத்துப்படி)’. 

ஸ்ரீராமானுஜர் இப்படிச் சொல்கிறார் என்றால் அந்தக் காலத்தில் இருந்தவர்களுக்கு அத்வைதத்தைப் பற்றி இப்படி ஒரு பார்வை இருந்திருக்கிறது என்றுதானே பொருள்?. இதே பார்வை அத்வைத ஆசிரியர்களுக்கும் இருந்திருக்கலாமே? ஏன் யாரும் இந்த அம்சத்தைக் குறித்து எழுதவில்லை. பிரம்ம சூத்திரத்தின் எந்த அதிகரணத்தில் (அதாவது அபசூத்ராதிகரணத்தில்) ஸ்ரீராமானுஜர் இந்த மாதிரி தம் பார்வைகளைப் பதிந்து வைத்திருக்கிறாரோ, அதே அதிகரணத்திற்கு உரை எழுதும் அத்வைத ஆசிரியர்கள் இந்த அம்சத்தைக் குறித்து எதுவுமே எழுதாமல், வேதாந்த சாத்திரம் கற்றால்தான் பிரம்ம ஞானம் ஏற்படும், வேதாந்தம் கற்க இன்னாருக்குத்தான் தகுதி என்று எழுதிவிட்டுக் கடந்து போய்விடுகிறார்கள். 

இன்று நாம், அனைவருக்கும் அத்வைத ஞானம் உரியது, அதற்கு வர்ணதர்மம் தடையில்லை என்று சொன்னால் உடனே கூக்குரல் இடுவார்கள் - ‘இந்த மாடர்ன் இந்துக்களே இப்படித்தான். யாராவது நவீன சந்நியாசிகள், விவேகானந்தரோ, சித்பவானந்தரோ, அபேதானந்தரோ அல்லது யாரோ நவீனர்கள் ஆங்கிலத்தில் எழுதியதைப் படித்துவிட்டு இப்படிப் புரட்சி பண்ணுகிறேன் பேர்வழி என்று சொல்வார்கள்!’ என்று சாடுவார்கள். ஆனால் இங்குச் சொல்வதோ அந்தக் காலத்து ஸ்ரீராமானுஜர். என்ன வித்யாசம்? அவர் நேர்முகமாகச் சொல்லாமல் அத்வைதத்தின் குறைபாடுகள் என்ற கணக்கில் இவ்விதம் சொல்கிறார். சொன்னால் என்ன? அத்வைதத்தைக் குறித்து இத்தகைய பார்வை அன்றே அத்வைதத்தைக் கண்டிக்க நினைத்தவர்கள் மொழிதலில் வந்திருக்கிறது என்றுதானே பொருள்? இதோடு நிற்கவில்லை ஸ்ரீராமானுஜர். சமயத்தில், ஆதரவாளர்களை விட எதிர்த்துக் கண்டிப்பவர்கள் கூடுதல் உண்மையை வெளிக்கொணர்ந்து விடுவார்கள். 

மேலும் ஸ்ரீராமானுஜர் சொல்வது என்னவென்றால் ’அத்வைதம் சொல்லும் ஞானம் என்பது வேதாந்தம் என்ற சாத்திரப் படிப்பின் மூலமாகத்தான் ஏற்படும் என்று இல்லை. உலகின் நிலையாமையும், நிலைத்த மாறாத ஞானமயமான பரவஸ்து ஒன்று இருக்கிறது என்னும் உணர்வும் சாதாரணமான பிரத்யக்ஷம், அனுமானம் என்னும் அறிவைக்கொண்டே ஒருவர் வாழ்க்கையில் போதிய பக்குவம் அடைந்து தியானம் என்பதால் மனமும் அடங்கி இருக்கும் போது சாதாரண அறிவுக்கே எட்டக் கூடிய ஞானம்தான் அத்வைதம் சொல்லும் ஞானம் என்கிறார். இதை ஸ்ரீராமானுஜர் குறையாகச் சொன்னாலும் என் காதிற்குத் தேன் வந்து பாய்ந்தது போல் இருக்கிறது. எங்கே விவேகானந்தர் 11 ஆம் நூற்றண்டிற்குப் போனார் என்று ஆச்சரியப்பட வைக்கிறது. ஆம். அறிவு ஆராய்ச்சிக்கு உகந்த மதம் ஒன்று உண்டென்றால் அஃது அத்வைதமே என்று விவேகானந்தர் சொன்னதற்கும், ஸ்ரீராமானுஜர் அன்று சொன்னதற்கும் அக்ஷரம் பிசகாமல் ஒத்துப் போகிறதே என்று மகிழ்ந்து போகிறேன் நான். நீ மகிழ்வதற்காக அவர் சொல்லவில்லை என்று என்னைக் கோபித்துப் பயனில்லை. சில சமயம், ஆதரவாளர்கள் குழப்புவதை விட எதிராளிகள் தெளிவாகச் சிறப்புகளை எடுத்துக் காட்டிவிடுவார்கள், சிறப்பு காட்ட வேண்டும் என்ற நோக்கம் இல்லாமலேயே. 

இப்படித்தான் பாருங்கள் சைவ சமயத்தில் வர்ணதர்மம், சாதி என்னும் பிரிவினைப் பார்வை இல்லை என்று சிலர் சொல்கிறார்களே, ஆனால் சிவஞான போதம் மாபாடியம் எடுத்துப் படித்தால் வர்ணதர்மம் மிகக் கட்டாயமாக ஆதரிக்கப் பட்டிருக்கிறதே என்ற சந்தேகம் எனக்குப் பலநாள் இருந்தது. ஒரு சமயம் ஸ்ரீஆளவந்தார் எழுதிய ஆகம ப்ராமாண்யம் என்ற நூலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். அதில் ஸ்ரீஆளவந்தார் வைதிக நெறிக்கு ஏற்றது பாஞ்சராத்திர ஆகமம் முதலிய வைணவ ஆகமமே என்று நிறுவ நினைத்தவர், சைவ ஆகமம் அவ்வாறு வைதிக நெறிக்குப் புறம்பானது என்று குறையாகக் கூற நினைத்தவர், அதற்கு காரணமாகக் கூறுவது ‘சைவம் வர்ணதர்மத்தை ஏற்காமல் புறக்கணிக்கிறது’ என்று தம் காலத்தில் இருந்த நிலைமையையோ அல்லது அப்படி வர்ணதர்மம் ஏற்காத சைவ சமயப் பிரிவு எதையோ குறித்து எழுதுகிறார். அவர் கணக்கில் அது குற்றச்சாட்டு. ஆனால் எனக்கு ஒரு குழப்பம் தெளிவாகிவிட்டது. அவர் காலத்தில் இருந்த சைவமோ அல்லது சைவ சமயப் பிரிவு ஏதோ ஒன்றோ வர்ணதர்மம் ஏற்காமல் புறக்கணித்தது என்ற விஷயம், சைவத்திற்கு எதிர்ப்பு நிலை எடுத்தோரால் தம் நூலில் பதியப் படுகிறது. அப்பொழுது அத்தகைய கருத்திற்கு ஸ்ரீராமானுஜருக்கு முந்தையரான ஸ்ரீஆளவந்தார் நூலிலேயே ஒரு சான்று கிடைக்கிறது என்பது எவ்வளவு மகிழ்ச்சியான விஷயம்! அதாவது எதற்கு இவ்வளவும் சொல்கிறேன் என்றால் தேடிப்பார்த்தால் சாதாரண இந்துவாய் இருப்பதற்குப் பலமான ஆதாரங்கள் பழையவர்களின் நூல்களிலேயே கிடைக்கின்றன. எனவே இன்று சொல்வார் எதையாவது சொல்லிக்கொண்டு போகட்டும். நம்ம கட்சி ஸ்ட்ராங் என்னும் திருப்திதான் என்று வைத்துக்கொள்ளுங்கள். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment