'பாருங்கள். சாதி உயர்வு தாழ்வுதான் பழம் நூல்களில் ஒற்றைக் குரலாக ஒலிக்கிறது. சமுதாய சமத்துவம் என்னும் மனநிலைக்குச் சாதகமான உபதேசங்கள், முன்மாதிரிகள் எதுவும் காணவில்லையே!’ என்ற விமரிசனம் எழுந்தால் என்ன பதில் வருகிறது? ஆஹா. நீங்கள் சரியாகப் பார்க்கவில்லை. முன்முடிவுகளோடு பார்ப்பதால் உங்கள் கண்கள் பார்க்க மறுக்கின்றன. ஸ்ரீஆதிசங்கரர் ஒருவரைத் தள்ளிப்போ என்றதும் அந்த உருவத்தில் வந்த சிவபெருமான் அவருக்கு ஆத்மாவில் ஏது தீட்டு? தள்ளிப்போ என்றால் ஆத்மாவுக்குள் ஆத்மா எங்கே தள்ளிப் போவது? யார் யாரை விட்டுத் தள்ளிப் போவது?’ என்று உணர்ச்சி பொங்க என் நண்பரே என்னிடம் பலமுறை கூறியதுண்டு. கேட்க நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் நடைமுறை?
சரி நடைமுறைக்கு அப்புறம் வருவோம். அதே ஸ்ரீஆதிசங்கரர் எழுதிய நூல்களில் வர்ணதர்மத்தை ஆதரித்துத்தான் எழுதப்பட்டிருக்கிறதே அன்றி கண்டித்து ஒன்றும் காணவில்லையே! அவர் எழுதுவதை மொழிபெயர்க்கும் கடலங்குடி ஸ்ரீநடேச சாஸ்திரிகள் இதெல்லாம் இந்தக் காலத்திற்கு ஒவ்வாதவை; எனவே மொழிபெயர்க்கவில்லை என்று விட்டுவிடுகிறார். இத்தனைக்கும் கர்மங்களையே முழுமையாக எதிர்த்தவர் ஆதிசங்கரர். ஒரு வேளை ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் நடந்தது போல் வாய் வார்த்தையாக ஆதிசங்கரரும் எழுதியதற்கு மாறுபட்ட கருத்துகளை உபதேசமாகக் கூறி அதை யாரும் மணிப்பிரவாளத்தில் எழுதி வைக்கவில்லையோ தெரியவில்லை.
சரி. இவர் விஷயம் இப்படி என்றால் ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் நண்பரே மிகவும் ஆணித்தரமாக என்னிடம் ஒரு முறை அடித்துச் சொன்னார். அதாவது அப்பொழுது கடும் விமரிசனமாக நான் சில வார்த்தைகள் சொல்லப் போக, வர்ணதர்மம் குறித்தும், அதைப் பற்றியே பழம் நூல்களில் எங்கும் பரவியிருக்கிறதே என்றும், சரியாக நினைவில்லை, இப்படி ஏதோ ரீதியில் சொல்லப் போக, நண்பர் ஒரே பொழியாகப் பொழிந்து விட்டார். ஆஹா.. இப்படித் தவறுகளை மட்டும்தான் கண்ணில் படுமா? எத்தனை நல்ல விஷயம் இருக்கிறது! ஸ்ரீராமானுஜரை எடுத்துக் கொள்ளுங்கள். என்ன மாதிரியான உபதேசம் அவருடையது! சாதி பார்க்காமல், அனைவரையும் தன் மார்க்கத்தில் அரவணைத்து, அடியார் குலத்தில் ஒருவர் மற்றவரின் சாதி என்ன என்று யோசித்தாலே அது மிகவும் பாபம் என்றெல்லாம் உபதேசம் செய்து என்ன புரட்சி செய்து விட்டார்! என்று உணர்ச்சி பொங்கக் கூறினார். அப்பொழுது நான் அவருடைய வடமொழி உரை நூல்களை வைத்துக்கொண்டு கேள்வி கேட்டேன். எங்கே இருக்கிறது காட்டுங்கள் இந்த நூல்களில் எங்கும் அவர் அப்படி எதுவும் எழுதவில்லையே என்று. அதற்கு நண்பர் அருமையாகப் பதிலடி கொடுத்தார். ‘இந்த வடமொழி நூல்கள் எல்லாம் ஸ்ரீராமானுஜர் எழுதிய நோக்கம் வேறு. பிற சித்தாந்தங்களோடு வாதம் செய்து விசிஷ்டாத்வைதம் என்னும் தம் கொள்கையை நிலைநாட்ட வேண்டி முக்கிய நோக்கத்தில் எழுதினார். அதனால்தான் இந்த நூல்களில் அவர் தமக்கு முக்கியமான ஆழ்வார்களைக் குறித்தும், நம்மாழ்வார் உபதேசம் செய்த சரணாகதி நெறியைக் குறித்தும் எதுவும் எழுத்தில் காட்டிக் கொள்ளவில்லை. ஏனெனில் சரணாகதி நெறி என்பது வெறும் சாத்திர ஞானம் இருந்தால் மட்டும் போதாது. பக்குவப்பட்டு இருக்க வேண்டும். கடவுள் அருளால்தான் பிரபத்தி நெறி என்னும் சரணாகதி மார்க்கம் புரியும். ஆனால் தன்னையே நம்பித் தன்னைப் புகலாக அடைந்த சீடர்கள் அதை உணர வேண்டும் என்றுதான் அந்தப் பிரபத்தி நெறியை விளக்கி கத்ய த்ரயம் எழுதினார். இதை நானாகச் சொல்லவில்லை. கத்ய த்ரயத்திற்கு மணிப்பிரவாள மொழிநடையில் ஸ்ரீபெரியவாச்சான்பிள்ளை ஒரு வியாக்கியானம் எழுதியிருக்கிறார்; அதில் இந்த விஷயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. பொதுவாகவே மணிப்பிரவாள நூல்களில்தான் உண்மையான சம்பிரதாய நிலவரம் என்ன என்று தெரியவரும்’ என்று போதனை செய்த நண்பரிடம் நான் ஒன்றும் சொல்லவில்லை.
அதன் பிறகு மணிப்பிரவாள நூல்களையெல்லாம் எடுத்துப் படித்துப் பார்த்த பொழுது அதில் பிரபத்தி நெறி குறித்தும், ஸ்ரீராமானுஜரின் நோக்கங்கள் குறித்தும், ஆழ்வார்களின் உபதேசம், சரணாகதி மார்க்கத்தில் பாகவத சமுதாயத்தில் வர்ணதர்மம் தள்ளுண்டு பிரபன்ன குல சமத்துவம் என்னும் கருத்துகள் எல்லாம் இருக்கவும், சரி, இப்படித்தான் இருக்கும் போல் இருக்கிறது. அதனால்தான் ஹைதராபாதில் ஸ்ரீராமானுஜருக்குச் சமத்துவ சிலை நிறுத்தியிருக்கிறார்கள் போல! பிரபன்னர்கள் என்னும் வட்டத்திற்குள்ளாவது வர்ணதர்மம் என்பதைப் புறம் தள்ளி சமத்துவம் என்னும் கருத்து அந்தக் காலத்தில் ஒலித்திருக்கிறதே. நல்லதுதான் என்று தோன்றியது. சமீபத்தில் நான் எழுதிய ‘ஸ்ரீராமானுஜரும் சமத்துவமும்’ என்னும் நூலைப் பார்த்திருப்பார் போல இருக்கிறது இப்பொழுது சொல்லிய நண்பர். நான் நினைத்தேன், அவருக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் என்று.
ஆனால் ஆக்ரோஷாமாகக் கோபத்தில் பொரிந்து தள்ளினார். என்ன விஷயம் என்றால், ’ஸ்ரீராமானுஜரின் கருத்து என்பது அவருடைய ஸ்ரீபாஷ்யம், சம்ஸ்க்ருத பாஷ்யங்கள் இவற்றில் அவர் எழுதிய கருத்துகள் தாமாம். மணிப்பிரவாள நூல்களையெல்லாம் ஓர் ஆசாரியனை அண்டி அவர் எப்படி அர்த்தம் எடுத்துக்கொள்ள வேண்டும் என்று சொல்கிறரோ அப்படித்தான் அர்த்தம் செய்ய வேண்டுமாம். நான் பாட்டுக்குச் சமத்துவம் என்று மேலைநாட்டுக் கருத்தியல் ரீதியாக எழுதுவதெல்லாம்... இதெல்லாம் என்ன வேலை?’ என்று அதிருப்திமயமாகப் பேசினார். எனக்கு ஒரே புதிராக இருந்தது. என்ன ஆயிற்று இவருக்கு? நான் வடமொழி நூல்களை வைத்துக் கேள்வி கேட்ட போது மணிப்பிரவாள நூல்களைப் பாரென்றார். மணிப்பிரவாள நூல்களை வைத்து ஸ்ரீராமானுஜரின் கருத்துகள், செயல்கள் ஆகியவற்றை வியந்து எழுதியதைப் பார்த்துக் கொந்தளிக்கிறார். இவர் என்னதான் கருதுகிறார்?
நான் சொன்னேன்: ‘சரி ஐயா. அப்படியென்றால் ஹைதராபாத்தில் சமத்துவ சிலை நிறுவி நாட்டின் பிரதமர் எல்லாம் வந்து, நாடு முழுக்க கொண்டாடியதே, அப்பொழுது அந்தச் சமத்துவம் என்பது என்ன? அதற்கு அடிப்படை என்ன? இந்தக் கேள்விக்குப் பதில் லைன் துண்டிக்கப் பட்டது மட்டும்தான். பாவம். இவர் பிரச்சனை இருக்கட்டும். சங்கரர் விஷயத்தில் மணிப்பிரவாளப் பதிவுகள் இல்லை. ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் இவர்களைப் போன்றவர்களுக்கு மணிப்பிரவாளப் பதிவுகள் இருந்தும் தொல்லை. என்ன செய்ய? இந்த மாதிரி சூழ்நிலையில் விவேகானந்தர் சொல்வதைப் படிக்கும் போது எனக்கு என்ன தோன்றும்? ஆமாம். அது என்ன மனிதகுல சமத்துவம், முன்னேற்றம், அறிவுபூர்வமான, மனிதாபிமான, ஆண்பெண் சமத்துவ - இந்த மாதிரி வார்த்தைகளைக் கண்டாலே சிலர் கடுப்படிக்க ஆரம்பித்து விடுகிறார்கள். அப்படித்தான் சமீபத்தில் ஆங்கிலக் கட்டுரை ஒன்றில் progressive என்ற வார்த்தையைப் பயன்படுத்தி விட்டேனாம். ஒருவர் பொங்கி வழிந்து வார்த்தையெல்லாம் குளறுகிறது. மிரண்டு எழுதுகிறார். இவர்களுக்கு மத்தியில் common sense என்பதைக் கவனமாக வைத்துக் கொள்பவர் சாதாரண இந்துவாகத்தான் இருக்க முடியும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Duality of people in public and private is common. This runs into all, so public preaching will be for society and private sampradayams for daily routine.
ReplyDeleteWhen in Samsaram, you cannot practise sannyasam. Being a Sannyassi there is no daily routine only societal interaction.
(Difference Ramanuja vs Ramakrishnar/ Vivekanandhar)