Sunday, November 24, 2024

நிலைப்பாடு 05

பண்டைய ஆசாரியர்கள் எல்லாம் சமுதாய சீர்திருத்தம் என்பதைக் கண்டனம், தகர்த்தல், விமரிசனம் என்ற போக்கைக் கையாளாமல் ஆதரவு போன்ற அணுகுமுறையில், ‘நல்லது. இதைவிட அது நல்லது’ என்ற பாணியில் நயமுற உபதேசம் செய்து வளர்ச்சி முறையைக் கையாண்டார்கள் என்பது சுவாமி விவேகாநந்தரின் கருத்து என்று பார்த்தோம். ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாகப் பல ஞானிகளும் அத்தகைய அணுகுமுறையைக் கையாண்டு வந்து என்ன பலன் விளைந்தது? 

விவேகாநந்தர் குறிப்பாக எடுத்துக் காட்டும் ஸ்ரீராமானுஜர், ஸ்ரீசங்கரர் விஷயத்தையே எடுத்துக் கொள்வோம். ஸ்ரீராமானுஜரோ, ஸ்ரீசங்கரரோ, ஸ்ரீமத்வரோ அல்லது எந்த சித்தாந்த ஆசிரியரோ, மற்ற எந்த தத்துவ சித்தாந்த முடிவுகளில் மாறுபட்டாலும் ஒரு விஷயத்தில் ஒருமித்த குரலாகத்தான் அவர்களுடைய நூல்களில் எழுதிவைத்துள்ளனர். அது எந்த விஷயம்? வர்ணதர்மம் என்னும் விஷயத்தில் ஒரே மாதிரிதான் அவர்களுடைய எழுத்து பேசுகிறது. ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் அவர் வழிவந்த, அவர் காலத்தை அடுத்து அதை ஒட்டிய அண்மைக் காலத்தில் வந்த ஆசாரியர்களான நஞ்சீயர், நம்பிள்ளை, பெரியவாச்சான்பிள்ளை, அவரது மகனார் நாயனாராச்சான்பிள்ளை, வடக்குத்திருவீதிப்பிள்ளை, அவருடைய குமாரர்களான பிள்ளை லோகாசாரியார், அழகியமணவாளப்பெருமாள் நாயனார், ஸ்ரீமணவாள மாமுனிகள், இவர் காலத்திற்குப் பின்னர் வந்த ஸ்ரீபிள்ளைலோகம் ஜீயர் என்னும் இவர்களின் மணிப்பிரவாள நூல்களில் ஸ்ரீராமானுஜரைப் பற்றிய பதிவுகள் ஒரு கருத்தைத் தெரிவிக்கின்றன. நம்மாழ்வாரின் திருவாய்மொழி தமிழ்வேதம் என்றும், அதன் தாத்பர்யமான கருத்து பிரபத்தி நெறி என்றும், அந்தப் பிரபத்தி நெறிக்கு ஆசையுடைய அனைவரும் உரியவர் என்றும், அந்தப் பிரபத்தி நெறியைக் கைக்கொண்ட பிரபன்னர்கள் விஷயத்தில் வர்ணதர்மம் செல்லாது, பிரபன்னர்கள் என்னும் பாகவதர்களிடத்தில் என்ன ஜாதி என்று யோசித்தல் கூட பெரும் தீமை என்றும், இந்தக் கருத்துகளே ஸ்ரீராமானுஜரால் தம் வாழ்வில் கைக்கொள்ளப் பட்ட கருத்துகளும் வழிமுறையும் ஆகும் என்றும் ஸ்ரீராமானுஜருக்குப் பின்னர் வந்த ஆசாரியர்களின் மணிப்பிரவாள நூல்களில் தெரிவிக்கப் படுகின்றன. ஆனால் ஸ்ரீராமானுஜருக்குப் பின்வந்த ஆசாரியர்களில் ஒருவரான ஸ்ரீவேதாந்த தேசிகர் பிரபன்னர்களும் வர்ணதர்மத்திற்குக் கட்டுப்பட்டு நடக்க வேண்டியவர்களே, சாத்திரம் ஒன்று சொல்ல அதற்கு மாறாக ஒரு சம்பிரதாயம் என்று சொல்ல வழியில்லை என்று தமது ரஹஸ்யத்ரயஸாரம் முதலிய நூல்களில் சொல்கிறார். ஸ்ரீராமானுஜர் தமது நூல்களில் வெளிப்பட எழுதியுள்ள கருத்துகளுக்கு முரணாகாத வழியில்தான் மணிப்பிரவாள நூல்களின் கருத்துகளைக் கொள்ள வேண்டும் என்பது ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தின் பொதுவான போக்காக இருக்கிறது. 

ஸ்ரீராமானுஜரின் நூல்களை எடுத்துக் கொண்டால் வர்ணதர்மத்தை முற்றிலும் உடன்பட்டு எழுதுகின்ற முறைதான் காணப்படுகிறது. இன்னும் சொல்லப் போனால் அத்வைதத்தை எதிர்த்துக் கண்டித்து எழுதும் பகுதியில் இன்னும் ஆணித்தரமாகவே வர்ணதர்மத்தை வலியுறுத்திப் பேசுகிறார் ஸ்ரீராமானுஜர். அதாவது என்ன இடம் என்றால், முக்தி என்னும் மோக்ஷத்திற்கு ஞானமே வழி. ஞானத்தால்தான் மோக்ஷம் ஏற்படும். அத்வைதம் சொல்கின்ற ஞானம் எத்தகையது? எத்தகையது என்றால் என்ன சொல்ல வருகிறார்? இதைப் புரிந்துகொள்ள ஓர் அடிப்படைக் கருத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பெறுகின்ற ஞானம் அல்லது அறிவு என்பது இரண்டுவிதமாக இருக்கக் கூடும். ஒரு பொருளைப் பார்க்கிறோம். உடனே அது என்ன பொருள் என்று அறிவு ஏற்படுகிறது. யாரும் நமக்குச் சொல்ல வேண்டியதில்லை. இது பொருள் சார்ந்த அறிவு. இதற்குப் பெயர் வஸ்து தந்த்ரம் (வஸ்து - பொருள்; தந்த்ரம் - சார்ந்த). இன்னொரு வகை அறிவு ஏற்படலாம். ஒரு விஷயத்தைப் பற்றி யாரோ ஒருவரிடம் சென்று அவரிடம்தான் தெரிந்துகொள்ள முடியும். அவருடைய சௌகரியம், அவருடைய விருப்பம், நமக்குத் தகுதி இருக்கிறதா என்று அவருடைய தீர்மானம் என்று பல நிபந்தனைகளின் பேரில் அவர் நமக்கு அந்த விஷயத்தைச் சொல்லி நாம் தெரிந்து கொண்டால் அஃது ஆள் சார்ந்த அறிவு என்ற வகைபடும். இதற்குப் பெயர் புருஷ தந்த்ரம். (புருஷ - ஆள்; தந்த்ரம் - சார்ந்த). பொருள் சார்ந்த அறிவில் ஒரு பொருளானது நமக்கு நிபந்தனைகள் போடாது. தன்னைக் கண்டதும் தன்னைப் பற்றிய அறிவை நல்கிவிடும். ஆனால் ஆள் சார்ந்த அறிவில் அந்த ஆளின் மனம் குளிர்ந்து ஒப்பிய பிறகுதான் அவரிடமிருந்து அறிவைப் பெற முடியும். 

ஸ்ரீராமானுஜர் அத்வைதத்தைக் குறித்து எழுப்பும் கேள்விக்கு வருவோம். அத்வைதம் சொல்கின்ற மோக்ஷம் தரும் ஞானம் என்பது பரம்பொருளைத் தெரிந்துகொண்டதும் அந்தப் பரம்பொருளின் இயல்பால் தானாக நம்பால் உண்டாகிவிடும் ஞானம். அந்தப் பரம்பொருளோ எப்பொழுதும் இருக்கிறது. ஜீவன், ஜகத் என்னும் வேறுபாடுகள் எல்லாம் மித்யை. அவித்யையால் உண்டான வெறும் தோற்றம். பரம்பொருளைப் பற்றிய ஞானமோ என்றும் மாறாமல், மறையாமல் இருந்துகொண்டிருக்கும் அந்தப் பொருள் சார்ந்து நம்மிடம் உண்டாகும் ஞானம். அதற்கு எந்த நிபந்தனைகளும் தேவை இல்லை. தர்ம சாத்திரங்களைக் கைக்கொண்டு அவரவர் வர்ண ரீதியாகக் கடமைகளை இயற்றி அதன் மூலம் கடவுள் மனத்தைக் குளிரச் செய்து, அதன் பலனாக விளையும் கிருபையால்தான் அந்த ஞானம் ஏற்படும் என்ற நிபந்தனை எதுவும் இல்லாததால் வர்ணதர்மம், தர்ம சாத்திரம், பொதுவாகவே சாத்திரம் என்று எந்தத் தேவையும் அத்வைதம் சொல்லும் மோக்ஷ காரணமான ஞானத்திற்கு இல்லை என்பதால் அத்வைதிகளுக்குத் தர்ம சாத்திரமே தேவையில்லை. அவர்களும் சாத்திரத்திற்குப் புறம்பானவர்களாக ஆகிவிடுகின்றனர். ஆனால் விசிஷ்டாத்வைதிகளாகிய எங்களுக்கோ மோக்ஷத்திற்குக் காரணமான ஞானம் என்பது பரமபுருஷனை ஆராதித்து, அவன் மனத்தைக் குளிரச் செய்து, அவனுடைய கிருபையால் பெறுகின்ற ஞானம் என்பதால், தர்ம சாத்திரம் என்பது அவனுடைய ஆணையாக இருப்பதால், தர்ம சாத்திரம், வர்ணதர்ம அனுஷ்டானம் எல்லாம் முற்றிலும் கட்டாயமாகி விடுகிறது. அதையெல்லாம் அனுஷ்டிப்பதன் மூலம் பரம புருஷனின் மனத்தைக் குளிரச் செய்து அவன் கிருபையால் பெறும் புருஷதந்த்ர ஞானம் எங்கள் சித்தாந்தம் சொல்லும் ஞானம். 

அதாவது ஸ்ரீராமானுஜர் சொல்வதைப் பார்த்தால் அத்வைதம் என்னும் சித்தாந்தம் வர்ணதர்மத்தைப் பொருட்படுத்த வேண்டியதில்லை. தன்னியல்பில் அதைக் கடந்தது. தர்ம சாத்திர நிபந்தனைக்கு உட்படாதது என்று அர்த்தமாகிறது. ஆனால் இதை அத்வைத ஆசிரியர்கள் ஏன் சொல்லவில்லை? ஸ்ரீசங்கரரே தமது நூல்களில் ஜகத்தே மித்யை, அவித்யை என்று பேசினாலும் வர்ணதர்மம் என்பதை ஏன் உடன்பட்டே எழுதுகிறார்? சரி. இவரை அப்படிக் கேள்வி கேட்ட ஸ்ரீராமானுஜர் பிரபத்தி என்னும் அனைவருக்குமான பொதுநெறி என்பதை ஏன் தம் நூல்களில் வெளிப்படையாக எழுதவில்லை? சம்பிரதாயமாக அவர் சொல்லி வந்து சேர்ந்து அவருக்குப் பின் வந்த பூர்வாசாரியர்கள் தாம் எழுதிய மணிப்பிரவாள நூல்களில் அதைப் பதிவு செய்தார்கள் என்றால், அந்தக் கருத்தை இதுவரை வந்த காலங்களிலும், ஏன் இன்றும் கூட யாரும் அப்படியே ஏற்றுக் கொள்வதில்லையே! வெறுமனே ஏட்டில் பதியப்பட்ட விஷயங்கள், ஏதோ சில ஆசாரியர்கள் தம் அளவில் தம் வாழ்க்கையில் கடைப்பிடித்திருக்கலாம்; ஆனால் பொதுப்பட பார்த்தால் அதே பழைய வர்ணதர்மமே அனைவருக்கும் பொருந்தியது என்ற நிலை நிலவக் காரணம் என்ன? 

சுவாமி விவேகாநந்தர் சொன்னது போல் இவர்கள் எல்லாம் சமுதாயச் சீர்திருத்தக் கண்டன முறையைக் கையாளாமல், நன்கு செய்தாய் மேலும் நல்லவிதமாகச் செய்வோம் என்ற வளர்ச்சி முறையைக் கையாண்டவர்கள்தாமே? ஒரு மாற்றமும் ஏன் கருத்தளவில் கூட ஒரு எல்லைக்குட்பட்ட வட்டத்தில் கூட ஏற்படவில்லையே! இன்னும் சொல்லப் போனால் மணிப்பிரவாள நூல்களில் சொல்லப்பட்ட கருத்தை உரக்கச் சொல்ல வேண்டியவர்களே கூட வர்ணதர்மத்தைத் தானே உரக்கச் சொல்கிறார்கள்.! ஆனால் விவேகானந்தர் மறுக்கும் முறையான சமுதாய சீர்திருத்தவாதிகளின் கண்டனப் போக்குதான் நம் காலத்தில் தோன்றிய நல்ல மாற்றங்களை ஏற்படுத்தியது என்பதை மறுக்க இயலாதே! 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment