Tuesday, September 1, 2020

ஷண்முக வழிபாடும் வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரமும்

 தெய்வ வழிபாடுகள் மிகவும் புராதனமானவை. வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரத்தில் குஹன், ஷண்முகன், கார்த்திகேயன் வழிபாடும், குஹாலயம் பற்றிய குறிப்பும் வருகிறது. புஷ்பங்கள், அப்பம், தக்ஷிணை முதலியன எடுத்துக் கொண்டு போய், பாலனையும் குஹாலயத்திற்கு அழைத்துச் சென்று நடத்தும் வழிபாடு, அர்ச்சனை, மந்திர உச்சாடனம் பற்றிப் பேசுகிறது வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரம் (ப்ரச்னம் 3 காண்டம் 22). அதே வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரம் ப்ரச்னம் 4, காண்டம் 10 ல் மிக விரிவாக விஷ்ணு பூஜையைப் பற்றிய விவரிப்பும் வருகிறது, விஷ்ணு அர்ச்சனம் என்றே அப்பகுதி தொடங்குகிறது. வைகானஸ ஸூத்ரங்கள் பற்றி போதாயனரும் குறிப்பிடுகிறார் என்பதைக் கணக்கில் கொண்டு பார்த்தால் வைகானஸரின் காலம் பொது யுகத்தின் முன் 600க்கு முந்தையதா? அல்லது காலண்டு 300 பொது யு பின் என்று கீழ் எல்லை வகுப்பதா? கால ஆய்வுகள் ஒரு புறம் இருக்க ஸ்கந்தன், ஷண்முகன், குஹன் ஆலயம் பற்றியும், அங்கு சென்று ஒரு தந்தை தன் பாலனுக்காகச் செய்யும் பூஜைகளும், அதே நேரத்தில் விஷ்ணு பூஜை என்னும் விரிவான பகுதியும் ஸநாதநமான தர்மத்தின் ஆணிவேர்க் கருத்தான ‘ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி’ என்பதையன்றோ காலம் காலமாக நமக்கு உணர்த்துகிறது.

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
பி.கு. - வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரங்களின் சம்ஸ்க்ருத மூலப் பகுதி இங்கு அதைத் தருகிறேன். அதைப் பதிப்பித்து, ஆங்கிலத்தில் மொழிபெயர்த்த டபிள்யூ காலண்டு கொடுக்கும் அடிக்குறிப்பையும் சேர்த்து - ப்ரச்நம் 3 காண்டம் 22
”ததாத்யத ப்ரவாஸாகமநம் புஷ்பாபூப தக்ஷிணாதி ஸம்பாராந் குமாரம் ச க்ருஹீத்வா கநிக்ரதாதிநா ஆலயம் குஹஸ்ய கச்சேத் ப்ரதக்ஷிணம் அர்ச்சனம் ப்ரணாமா குஹஸ்ய தச்சிஷ்டேந புஷ்பாதிநா குஹஸ்ய சேஷம் இதி தந்நாமோஹித்வா பாலம் அலங்க்ருத்ய சாந்திம் வாசயித்வா நிர்வர்தயேத் ப்ரோக்ஷ்யாகதம் ஸோமஸ்ய த்வேத்யங்கமாரோப்யாயுஷே வர்சஸ இதி..”
புஷ்பாதிநா.. பாலம் அலங்க்ருத்ய - என்னும் பகுதிக்குக் கீழ்க்குறிப்பு எழுதும் ஆசிரியர் கீழ்வரும் பகுதியைத் தருகிறார். - புஷ்பம் ததாமி வரதஸ்ய ஷண்முகாத். (வரதன் என்பது பொதுவாக பாலன் என்பதற்குத் தரும் கற்பனைப் பெயர்)
ப்ரச்நம் 4 காண்டம் 10 - அதாக்நௌ நித்யஹோமாந்தே விஷ்ணோர்நித்யார்சா ஸர்வதேவாஅர்ச்சநா பவதி
*
பொதுவாகவே ஹிந்துமதத்தின் சாத்திரங்களில் வரும் சொற்கள், அவற்றின் கருத்தாழங்கள், பொருள் விரிவுப் புலங்கள் எல்லாம் மிகவும் கவனம் கொண்டு நுண்மையாகப் புரிந்துகொள்ள வேண்டியவை. ஏதோ சராசரியாக ஒரு பொருளை ஒரு வார்த்தைக்கு நாமாகக் கொள்வது என்பது நம்மை என்றுமே தெளிவின்மையில் வைத்துவிடும். ஏனெனில் ஏதேதோ பழங்காலங்களில் தன் சமுதாயத்தில் உண்டான கருத்துகளையெல்லாம் ஒன்றையும் ஒதுக்காமல் ஹிந்து சமுதாயம் சொற்களிலும், நூல்களிலும் செறிவாகச் சேமித்து வைத்துக் கொண்டு வந்துள்ளது என்பதையே ஒரு சிறு நூலான வைகானஸ ஸ்மார்த்த ஸூத்ரம் காட்டுகிறது. வேதம் கற்கும் மாணவர்களில் எத்தனை வகை, இல்லறத்தாரில் எத்தனை வகை, அதேபோல் யோகிகளிலும் எத்தனை வகை! ஸாரங்க யோகிகள், ஏகார்ஷ்ய யோகிகள், விஸரக யோகிகள். இதில் ஏகார்ஷ்ய யோகிகள் ஐந்துவகை. தூரகர், அதூரகர், ப்ரூமத்யர், அஸம்பக்தர்கள், ஸம்பக்தர்கள் என்று ஐந்து. இதில் தூரகர் என்னும் யோகிகள் பிங்கல நாடியினால் ஆதித்ய மண்டலம் புக்கு அவ்வழிக்கிரமத்தில் ஸ்ரீவைகுண்ட ஸாயுஜ்யம் அடைவோர். அதூரகர் என்போர் க்ஷேத்ரஜ்ஞனுக்கும் பரமாத்மனுக்கும் உள்ள யோகத்தை க்ஷேத்ரஜ்ஞன் மூலமாக அடைந்து, அனைத்து பொருட்களின் நாசத்தை நன்கு தியானத்தில் கொண்டு, ‘ஆகாசத்தைப் போன்று நான் வெறும் ஸத் மாத்ரமே’ என்று ஒன்றுபவர்கள். ‘யே அதூரகாஸ் தேஷாமயம் தர்ம: க்ஷேத்ரஜ்ஞ பரமாத்மநயோர் யோகம் க்ஷேத்ரஜ்ஞ த்வாரேண காரயித்வா தத்ரைவ ஸமஸ்த விநாசம் த்யாத்வா ஆகாசவத் ஸத்தாமாத்ர: அஹம் இதி த்யாயந்தி’ (8. 11). ஆன்மிக உலகின் பெரும் ஆழ ஸமுத்ரங்களாய் இருப்பவை நம் சாத்திரங்கள்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

No comments:

Post a Comment