Wednesday, October 16, 2024

மாறும் கருத்துகளும், மாறாக் கருத்துகளும் 04

’ஒரு சந்தை. அங்குப் பலர். ஒரு மனிதன் அங்கு வந்து நிற்கிறான். வேலை தேடி நிற்கிறான். பெரும் வணிகன் ஒருவன் ஆடம்பர வாகனத்தில் அங்கு வருவதைக் கண்டு பிறர் ஓடி ஒளிந்து கொள்கின்றனர். வந்த வணிகன் ஓடாமல் நிற்கும் மனிதனை வேலை வேண்டுமா என்று கேட்கிறான். மனிதன் ஆம் என்று சொல்கிறான். ஆனால் அவன் கேட்கும் கூலி அதிகம். வணிகன் கட்டாது என்று யோசிக்கிறான். அப்படி என்றால் கட்டிவரும் எத்தனையோ பேர்களில் ஒருவரைத் தேடிக்கொள் என்று மனிதன் சொல்கிறான். ஓடி ஒளியும் இத்தனை பேர்களில் ஓடாமல் நின்று தான் விரும்பும் கூலி கேட்கும் மனிதனே மேல் என்று வணிகன் அவனை அழைத்துச் செல்கிறான். காடு, மலை, கடல் தாண்டி அவன் தீவு. ஓங்கி எரியும் நெருப்பு போல் சுடர்விடும் அவன் மாளிகை. அங்கு அவனுடைய மனைவி, மகள். அழகான மகள் வந்த மனிதனின் வலிமை, துணிச்சல் ஆகியன கண்டு காதல் கொள்கிறாள். அவனை இரகசியத்தில் சந்தித்து ஆபத்துக் காலத்தில் உதவும் மாயப் பொருட்களைத் தருகிறாள். வணிகன் மனிதனை எங்கோ ஆபத்தான மலைக் குன்று ஒன்றிற்கு அழைத்துச் செல்கிறான். அங்கு கடப்பாரையைக் குத்தியதுமே ஏகப்பட்ட தங்கப் பாளங்கள் காத்துக் கிடக்கின்றன. மனிதன் உழைப்பில் பல தங்க மூட்டைகளை வண்டியேற்றிய வணிகன் மனிதனை அங்கேயே நிராதரவாய் விட்டுச் செல்கிறான். இதற்கு முன்னர் பலரும் வந்து மீளாத எலும்புகள் நடந்த கதைக்குச் சாட்சிகளாய்ச் சிதறிக் கிடக்கின்றன. ஏன் வணிகனைக் கண்டதும் சந்தையில் பலரும் ஓடி ஒளிந்தனர் என்று புரிகிறது. ராட்சத காகங்கள் தாக்க வரும் போது அவற்றினின்றும் தற்காத்து மீள்கிறான். ஆனால் தப்பும் வழி என்ன என்று திகைக்கும் போது காதல் வயப்பட்ட பெண் தந்த மாயப் பொருட்கள் நினைவிற்கு வரவே அதைப் பயன்படுத்துகிறான். வீரர் இருவர் ‘கட்டளை இடுங்கள்’ என்று சொல்லியவாறு திடீரெனெத் தோன்றுகின்றனர். தன்னை அவ்விடம் விட்டு அகல்விக்குமாறு மனிதன் சொல்ல அவ்வாறே அவனை அகற்றி கடற்கரையில் சேர்க்கின்றனர். பிறகு மீண்டுவந்து அதே சந்தையில் அதே மனிதன் வேலை தேடி வந்து நிற்கிறான். அதே பெரும் வணிகன் அங்கு மீண்டும் வர, அவனிடமே மீண்டும் வேலைக்குச் சேர்ந்து தங்கமலைக்குச் சென்று வணிகனை மாட்டிவிட்டுத் தான் தங்கக் கட்டிகளை மூட்டைகட்டி, காதலித்த பெண்ணுடன் கூடிக் குடும்பம் நடத்துகிறான்.’ 

-- இது ருஷ்ய நாட்டு வாய்மொழிக் கதைகளில் ஒன்று. இந்தக் கதையை ஆராய்ந்தால் பல சூட்சுமங்கள் உட்குறிப்புகளாகக் காணக் கூடும். உழைப்பைச் சுரண்டும் பெரும் வணிகன், கூலியில் சமரசம் செய்து கொள்ளாத சந்தை மனிதன், தோண்டினால் வளம் கொழிக்கும் தங்க வயல், உரிய நேரத்தில் தப்பிக்கவில்லையென்றால் குத்திக் கிழிக்கும் பெருத்த காக்கைகள், தற்காப்புக்குக் காதலி தந்த மாயப் பொருள், மீண்டும் சந்தையில் உழைப்புக்குப் பேரம் படியும் போது வழியை மாற்றிக் கெலித்த மனிதன் - என்று பல குறிப்புகளும் அடங்கிய கதை ஒன்று வாய்மொழிக் கதையாக ருஷ்யாவில் வழிவழியாக வந்திருக்கிறது. 

இப்பொழுது நாம் பாரதியாருக்கு வருவோம். தம் வாழ்க்கையையும் பாரதியார் ஒரு சந்தையாக உருவகப்படுத்திப் பார்க்கிறார். தாம் வணிகன் இல்லை. ஆனால் வாழ வழிகாட்டும் ஒரு துணை என்னவோ தேவை. ஆயினும் வந்து நிற்பதோ ஒரு சேவகன். தன்னைக் கண்ணன் என்று அழைப்பார்கள் என்று சொல்கிறான். ‘கூலி மிகக் கேட்பார். கொடுத்ததெல்லாம் தாம் மறப்பார்.’ஆனால் வேலை மட்டும் நடக்காது என்று இருக்கும் சூழ்நிலையில் கூறி முடிக்கும் முன்னர் வேலையை முடித்து நிற்கும் இப்படி ஒரு சேவகன் அதிசயம்தானே! ஆனால் ஒரே  ஒரு கஷ்டம். இந்தச் சேவகனிடம் அதிகாரம் செய்தால் ஒன்றும் நடவாது. தன்னிடம் நாம் தோற்க வேண்டும். அந்தத் தோல்வியையும் மனம் உவந்து கைகளைத் தூக்கி ஒப்புக் கொண்டுவிட வேண்டும் என்று எதிர்பார்க்கும் அதிசயச் சேவகன் இந்தக் கண்ணன். இந்தச் சூட்சுமத்தைக் கண்டுபிடித்து விடுகிறார் பாரதியார். ஆனால் கண்டுபிடித்த பின்னர் கண்ணன் அங்கு நிற்பதில்லை. வாழ்க்கையின் இரகசியமே கண்ணன் ஆகிய தன்னிடம் உவந்து தோற்பதும், அந்தத் தோல்வியை உண்மையுடனும், உள்ளம் ஒப்பியும் ஏற்றுக் கொள்ளும் பக்குவத்திலும்தான் இருக்கிறது என்பதை உணர்த்தவே வந்தவன் போல் சென்றுவிடும் சேவகன் கண்ணன் என்று காட்டுகிறார். இது பாரதியாரின் கற்பனைக் கதை என்றோ அல்லது அவர் வாழ்வின் மீநிஜக் கதை என்றோ சொல்லலாம். 

கூலிமிகக் கேட்பார் கொடுத்ததெலாம் தாம் மறப்பார்:
வேலைமிக வைத்திருந்தால் வீட்டிலே தங்கிடுவார்; 

ஏனடா, நீ நேற்றைக் கிங்குவர வில்லை யென்றால்
பானையிலே தேளிருந்து பல்லால் கடித்த தென்பார்;
வீட்டிலே பெண்டாட்டி மேற்பூதம் வந்ததென்பார்;
பாட்டியார் செத்துவிட்ட பன்னிரண்டாம் நாளென்பார்;
ஓயாமல் பொய்யுரைப்பார்; ஒன்றுரைக்க வேறுசெய்வார்;
தாயாதி யோடு தனியிடத்தே பேசிடுவார்;
உள்வீட்டுச் செய்தியெல்லாம் ஊரம் பலத்துரைப்பார்;
எள்வீட்டில் இல்லையென்றால் எங்கும் முரசறைவார்;
சேவகரால் பட்ட சிரமமிக உண்டு கண்டீர்;
சேவகரில் லாவிடிலோ செய்கை நடக்கவில்லை. 

 
இங்கிதனால் யானும் இடர்மிகுந்து வாடுகையில்;
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதி நான் என்றான்;
''மாடுகன்று மேய்த்திடுவேன், மக்களை நான் காத்திடுவேன்
வீடு பெருக்கி விளக்கேற்றி வைத்திடுவேன்;
சொன்னபடி கேட்பேன்; துணிமணிகள் காத்திடுவேன்;
சின்னக் குழந்தைக்குச் சிங்காரப் பாட்டிசைத்தே
ஆட்டங்கள் காட்டி அழாதபடி பார்த்திடுவேன்;
காட்டுவழி யானாலும், கள்ளர்பய மானாலும்;
இரவிற் பகலிலே எந்நேர மானாலும்
சிரமத்தைப் பார்ப்பதில்லை, தேவரீர் தம்முடனே
சுற்றுவேன் தங்களுக்கோர் துன்பமுறா மற்காப்போன்;
கற்ற வித்தை யேதுமில்லை; காட்டு மனிதன்; ஐயே!
ஆன பொழுதுங் கோலடி குத்துப்போர் மற்போர்
நானறிவேன்; சற்றும் நயவஞ் சனைபுரியேன்''
என்றுபல சொல்லி நின்றான் 

''ஏது பெயர்? சொல்'' என்றேன் 

 
''ஒன்றுமில்லை; கண்ணனென்பார் ஊரிலுள்ளோர் என்னை'' என்றான். 

 
கட்டுறுதி யுள்ளவுடல், கண்ணிலே நல்லகுணம்
ஒட்டுறவே நன்றா உரைத்திடுஞ்சொல் -ஈங்கிவற்றால்;
தக்கவனென் றுள்ளத்தே சார்ந்த மகிழ்ச்சியுடன்,
''மிக்கவுரை பலசொல்லி விருதுபல சாற்றுகிறாய்;
கூலியென்ன கேட்கின்றாய்? கூறுக'' என்றேன். 

''ஐயனே!
தாலிகட்டும் பெண்டாட்டி சந்ததிக ளேதுமில்லை;
நானோர் தனியாள்; நரைதிரை தோன்றா விடினும்
ஆன வயதிற் களவில்லை; தேவரீர்
ஆதரித்தாற் போதும் அடியேனை; நெஞ்சிலுள்ள
காதல் பெரிதெனக்குக் காசுபெரி தில்லை'' யென்றான். 

 
பண்டைக் காலத்து பயித்தியத்தில் ஒன்றெனவே
கண்டு, மிகவும் களிப்புடனே நானவனை
ஆளாகக் கொண்டு விட்டேன். அன்று முதற்கொண்டு,
நாளாக நாளாக, நம்மிடத்தே கண்ணனுக்குப்
பற்று மிகுந்துவரல் பார்க்கின்றேன்; கண்ணனால்
பெற்றுவரும் நன்மையெல்லாம் பேசி முடியாது. 

 
கண்ணை இமையிரண்டும் காப்பதுபோல், என் குடும்பம்
வண்ணமுறக் காக்கின்றான் வாய்முணுத்தல் கண்டிறியேன்
வீதி பெருக்குகிறான்; வீடு சுத்த மாக்குகிறான்;
தாதியர்செய் குற்றமெல்லாம் தட்டி யடக்குகிறான்;
மக்களுக்கு வாத்தி, வளர்ப்புத்தாய், வைத்தியனாய்
ஒக்கநயங் காட்டுகிறான்; ஒன்றுங் குறைவின்றிப்
பண்டமெலாம் சேர்த்துவைத்துப் பால்வாங்கி மோர் வாங்கிப்
பெண்டுகளைத் தாய்போற் பிரியமுற ஆதரித்து
நண்பனாய், மந்திரியாய், நல்ல சிரியனுமாய்,
பண்பிலே தெய்வமாய்ப் பார்வையிலே சேவகனாய்,
எங்கிருந்தோ வந்தான், இடைச்சாதியென்று சொன்னான்.
இங்கிவனை யான் பெறவே என்னதவஞ் செய்து விட்டேன்! 

 
கண்ணன் என தகத்தே கால்வைத்த நாள்முதலாய்
எண்ணம் விசாரம் எதுவுமவன் பொறுப்பாய்ச்
செல்வம், இளமாண்பு, சீர், சிறப்பு, நற்கீர்த்தி,
கல்வி, அறிவு, கவிதை, சிவ யோகம்,
தெளிவே வடிவாம் சிவஞானம், என்றும்
ஒளிசேர் நலமனைத்தும் ஓங்கிவரு கின்றன காண்!” 

இவ்வாறு பாரதியார் கண்ணனைச் சேவகனாய் அடைந்து பெற்ற நன்மையைக் கூறியவர், அவனை அதிகாரம் செலுத்தி ஆளத் தொடங்கும் போது தாம் தோற்றதையும், அந்தத் தோல்வியைத் தாம் உவந்து உண்மையாய் ஒப்புக்கொண்ட பொழுது அதே கண்ணன் தமக்குத் தந்த வாழ்க்கைச் செய்தியையும் கண்ணன் என் சீடன் என்ற பகுதியில் கூறுகிறார். 

“மகனே, ஒன்றை ஆக்குதல் மாற்றுதல், 

அழித்திடல் எல்லாம் நின்செயல் அன்று காண். 

தோற்றேன் என நீ உரைத்திடும் பொழுதிலே 

வென்றாய், உலகினில் வேண்டிய தொழில் எலாம் 

ஆசையும், தாபமும் அகற்றியே புரிந்து 

வாழ்க நீ’ என்றான்” 

வணிகனும், மனிதனும் சந்தையில் நின்று உரைக்கும் செய்தியைச் சுமந்து ருஷ்ய நாட்டு வாய்மொழிக் கதை கூறும் குறிப்பும், பாரதியார் கண்ணனைச் சேவகனாய், தம் சீடனாய்க் கருதி அடைந்த வாழ்க்கை உபதேசமும், நன்மைகளும் ஒரே நேர்க்கோட்டில் நிற்கின்றன என்றால் இலக்கியம் ஆதிமனிதக் குரலைச் சுமந்து வரும் சரடு என்பதில் என்ன சந்தேகம்? 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment