Friday, October 22, 2021

உரைகளும் திருக்குறளும்

 உரைகள் மிகவும் உதவிதான் பழம் நூல்களைக் கற்பதற்கு. இல்லை என்று சொல்ல முடியாது. ஆயினும் சில இடங்களில் சில ஏதுக்கள் கொண்டு உரைகள் ஒரு வழியில் பார்க்கும் போது மூல நூலின் இணையான இடங்களே இயல்பான பொருள் தரும் வாய்ப்பும் உண்டு. மேலும் பல பழம் நூல்களில் ஒவ்விய ஆட்சிகளைக் காணும் போது இன்னும் தெளிவு பெற வழியும் பிறக்கும். உரைகளை மூடிய கதவு என்று சொல்ல முடியாது. ஊக்கிச் செலுத்தும் வழிகள் என்று நாம் கொள்ள வேண்டும். ஆனால் உரைகளின் நியாயங்களைச் சிறிதும் உணராமல் மனம் போன போக்கில் தோன்றியவாறு சிலர் பொருள் கொள்ளும் போது வெறும் நகைச்சுவைக்கு மட்டுமே இலக்காகி நிற்கும் அவலம்தான் மிஞ்சுகிறது.

திருக்குறளில், ‘அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால் பிறவாழி நீந்தல் அரிது.’ என்னும் குறளில் பிறவாழி என்னும் சொல்லை எப்படிப் பிரிப்பது என்ற பிரச்சனை உரைகளுக்கு வருகிறது. பிறவி ஆழி என்றால் பிறவியாழி என்று வரும். எனவே இஃது பிற + ஆழி = பிறவாழிதான் என்று கொண்டு பொருள் உரைக்கின்றனர். இந்நிலையை எடுத்தபின் நூலின் அமைப்பும் அவர்களுக்குத் தாம் கொண்ட பொருளுக்கு வலு சேர்ப்பது போல் படுகிறது. அற ஆழி என்பதை இறைவனுக்கு ஆக்கிவிட்டார். மிஞ்சி இருப்பது பொருளும் இன்பமும்தான். எனவே இந்த இரண்டைத்தான் பிற ஆழி என்று குறிக்கிறார் என்ற நயமும் தென்படவே பிற கடல்களாகிய பொருளையும் இன்பத்தையும் கடக்க வேண்டும் என்றால் இறைவனின் தாளே கதி. அந்த இறைவனோ அறத்தின் உருவாக இருக்கின்றான். அறத்தின் உட்கருத்தாக இருக்கின்றான். அறத்தைச் செலுத்தும் ஆற்றலாகவும் இருக்கின்றான்.
இது நல்ல பொருள்தான். இருந்தாலும் ஒரு சங்கடம். தாமே பொருட்பால் இன்பத்துப்பால் என்றெல்லாம் பாடிவிட்டு, அறத்தின் வழிப்பட்டதே பொருளும் இன்பமும், அறத்தின் வழிப்படாதது பொருளும் ஆகாது இன்பமும் ஆகாது என்று இருக்கும் போது, பொருளையும், இன்பத்தையும் விலக்கத்தக்கவையாகவும், அமிழ்த்தும் கடல் போன்று கரையேறவொட்டாக் கொடும் விஷயங்களாகவும் காட்டுவது முற்றிலும் துறவறம் என்பதற்குச் சரியாயினும் முப்பால் பாட வந்தவர் சொல்ல வந்த பொருளாகக் கூடுமா என்னும் ஐயமும் எழும். எனவே இங்கு பிறவி என்னும் கடலைக் குறிப்பதாகக் கொள்வதே நெடும் இலக்கிய மரபிற்கு அமைந்தது என்று தோன்றுகிறது. பழைய உரை ஒன்று மட்டும் பிறவி என்னும் சமுத்திரம் என்று கூறுகிறது. கவிராஜ பண்டிதர் பிறவியாகிய ஆழி என்று கூறுகிறார். தம் கருத்திற்கு அரணாகப் பழம் நூல்களாகிய பெருங்கதை, வில்லிபாரதம் ஆகியவற்றைக் காட்டுகிறார். பெருங்கதையில் யானைப் பிறவியைக் குறிக்க ‘வேழப் பிறவும்’ என்ற ஆட்சி வருகிறது. வில்லிபாரதத்தில் ‘பிறவாழி கரைகண்டோரே’ என்று பிறவாழி என்பது பிறவியாகிய கடல் என்னும் பொருளில் ஆட்சி வருகிறது. இங்கும் சுற்றி வளைத்து வரும் பொழுது ஒரே பொருளில்தான் வந்து முடியும். பிறவிக்கடல் ஏன் ஓயாமல் பெருகுகிறது? ஆசை என்னும் காரணத்தால். ஆசை என்பது மிகுதியும் பொருள் பற்றியும் இன்பம் குறித்தும் எழுவது. எனவே பொருளாசை இன்பப்பற்று இரண்டுமே பிறவிக்கடல் பெருகச் செய்யும் ஏதுக்கள். எனவே இவற்றைத் துறக்க வேண்டுமெனில் அறவாழி அந்தணன் தாளே கதி என்று வந்து முடியும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

கீர்த்தன வடிவில் நூல்கள்

 பெரும் நூல்களைக் கீர்த்தனங்களாகப் பாடி நூலியற்றும் மரபு இருந்திருக்கிறது. ஸ்ரீமத் பாகவதம், ஸ்ரீமத் ராமாயணம் போன்றவற்றை கீர்த்தனங்களாக இயற்றியவர் திருவிடைமருதூர் ஸ்ரீஅநந்தபாரதி சுவாமி அவர்கள். ஸ்ரீஅருணாசலக் கவிராயர் அவர்களின் ஸ்ரீராமநாடகக் கீர்த்தனை இவ்வகை இலக்கியத்திற்கே உந்து சக்தியாக அமைந்தது எனலாம். இராயபுரம் சுப்பராயர் அவர்களின் திருவிளையாடல் கீர்த்தனம், மஹாவைத்தியநாதய்யர் அவர்களின் தமையனார் இராமஸ்வாமி ஐயர் அவர்கள் இயற்றிய பெரிய புராணக் கீர்த்தனை என்று சிலவற்றைச் சொல்ல முடியும். இதைப் போல் கச்சியப்ப முனிவர் தமிழில் செய்த கந்த புராணத்தை அடிப்படையாகக் கொண்டு இருநூற்றிநாற்பது கீர்த்தனங்கள், முந்நூறு விருத்தங்கள் ஆகிய அளவில் ஸ்காந்த புராணக் கீர்த்தனை என்று செய்தவர் பெருங்கரை ஸ்ரீகவிகுஞ்சர பாரதி அவர்கள். (பிறந்த ஆண்டு 1810.)

இந்தக் கீர்த்தனை வடிவிலான ஸ்காந்த புராணம் நெடுங்காலம் அச்சு வடிவம் காணவில்லை. ஸ்ரீபாரதி அவர்களின் மருமகன் ஆகிய ஸ்ரீஆத்துமநாத பாகவதரின் உளம் தோய்ந்த கதா பிரசங்கங்களில் கேட்டவர்கள் பாக்கியம் செய்தோர் என்றிருந்த நிலை மாறி ஸ்ரீபாரதி அவர்களின் பேரன் ஆகிய ஸ்ரீகோடீசுவர ஐயர், (சென்னை ஹைகோர்டில் ட்ரேன்ஸ்லேட்டராக இருந்தவர்) 1914 ல் மெட்ராஸ் ஸ்காட்டிஷ் பிரஸ்ஸில் பதிப்பிக்கும் வரை இந்த நிலைமை.
சிவகங்கை, இராமநாதபுரம் என்னும் சம்ஸ்தானங்களின் அதிபதிகளால் மிகவும் கௌரவிக்கப்பட்டவராய் இருந்த ஸ்ரீபாரதி அவர்கள் தர்ம சாஸ்தா மீது பள்ளு ஒன்றும், ஸ்ரீமதுரை மீனாக்ஷியம்மை, திருப்பதி வேங்கடாசலபதி, திருமாலிருஞ்சோலை அழகர் ஆகியோர் மீதும் பிரபந்தங்கள் பாடியிருக்கிறார். அவர் கடைசியாகப் பாட எடுத்துக் கொண்டது கந்த புராணக் கீர்த்தனை. அதன் பின்னர் முற்றிலும் தெய்வ அனுபவத்திலேயே தோய்ந்து தம் வாழ்நாளைக் கடத்தியிருக்கிறார். மக்களின் வாழ்க்கையில் பக்தியும், தமிழும் எப்படிப் பிணைந்து மலர்ந்திருக்கிறது இசையுடன் !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

சித்தாந்தம் என்று சொன்னால்

 அதாவது வாழ்க்கை இருக்கிறது. வாழ்க்கையில் பிரச்சனைகள் இருக்கின்றன. நம்மைச் சுற்றியும் உலகம் இருக்கிறது. அதையும் புரிந்து கொள்கிறோம். நம்மையும் புரிந்து கொள்கிறோம். இன்னும் சொல்லப் போனால் இரண்டையும் புரிந்து கொண்டேதான் இருக்கிறோம். புரிந்து கொள்வதின் இந்தத் தொடர்ச்சிதான் வாழ்க்கையில் பயனே ஆகும். நம்மைப் புரிந்து கொள்வதிலும், உலகத்தைப் புரிந்து கொள்வதிலும் பலருடைய எழுத்துகள், ஆய்வுகள், உரையாடல்கள், பலருடைய வாழ்க்கை வரலாறுகள், நினைவுக் குறிப்புகள், அவர்களைப் பற்றியதும், கருத்துகளைப் பற்றியதுமான பல்லூடக மொழிதல் எல்லாம் நமக்குப் பல விதத்திலும் உதவியாக இருக்கின்றன.

ஆனால் அவரவர்களும் சில சமயத்தில் ஒரு சித்தாந்தத்தை முன்னிறுத்துபவர்களாகவோ, அல்லது சித்தாந்தம் ஒன்றைச் சார்ந்தவர்களாகவோ இருக்கிறார்கள் (அப்படி இல்லாதவர்களும் இருக்கிறார்கள்). நாம் சமயத்தில் சிலருடைய கருத்துகளின் அழகிலும், நேர்த்தியிலும், நெறிப்பட்ட கட்டமைப்பிலும் ஈடுபட்டு நம்மை அறிந்தோ அறியாமலோ அவர்களின் சித்தாந்தங்களுக்கும் நம்மை ஈடு கொடுப்பவர்களாக நாமாகவே நம் இச்சையின் படியே ஆகிறோம். அப்படி ஆகும் போதுதான் குழப்பம் வருகிறது. ஒரு சித்தாந்த ரீதியாக உலகைப் பார்க்கும் முயற்சி தேவையற்ற சங்கடம். நாமாகவே வருவித்துக் கொள்வது. ஆனால் எந்தச் சித்தாந்தக்காரர்களும் அவர்களின் உண்மையான எழுத்துகளின் மூலம் வாழ்க்கையின் சில அம்சங்களையும், பிரச்சனைகளையும் நோக்கி நம் கவனத்தைக் குவியச் செய்கிறார்கள். வாழ்க்கையின் சில பிரச்சனைகளுக்குத் தீர்வுகளும் அவர்களின் எழுத்து மூலம், குறிப்பிட்ட அளவிற்காகவேனும், காலத்திற்காகவேனும் நமக்குக் கிட்டுகிறது. அது நமக்கு லாபக் கணக்கு. அதோடு நாமும் பிரச்சனை ஆக்கிக் கொள்ள்ளாமல் கடந்து வாழ்க்கையை கவனம் கொண்டு போய் விட வேண்டும். அவர்கள் ஒரு சித்தாந்தவாதியார் இன்னொரு சித்தாந்தவாதியாருக்குக் கடும் எதிர்ப்பாக உரையாடிக் கொண்டே இருக்கலாம். இன்றும். என்றும். அது நமக்குத் தேவையில்லாதது. இவரிடமிருந்து நமக்கு என்ன தெளிவு, அவரிடமிருந்து நமக்கு என்ன தெளிவு என்பது குசலமான (புத்திசாலித்தனமான) அணுகுமுறை. ஏனெனில் அதுதான் நம் வாழ்க்கையை நாம் அக்கறை கொள்கிறோம் என்பதைக் காட்டுவது.
ஆனால் நம்முடன் பழகுவோருக்கு என்றும் ஒரு பிரச்சனை இருக்கும். நம்மை எப்படியாவது ஏதாவது ஒரு கோணத்திற்குள் அடைத்து வைத்து அழகு பார்ப்பது என்பது அவர்களுக்குப் பிடித்த விஷயமாக இருக்கலாம். ஆனால் அதற்கு நாம் பலியாக ஆகமுடியாது. என்ன மிஞ்சிப் போனால் குழப்பவாதி என்ற பெயர் கிடைக்கும். அதைப் பற்றி நமக்கு என்ன? வாழ்க்கையில் குழப்பம் நீங்குவதுதான் நம் அக்கறை.

அப்படியென்றால், சித்தாந்தவாதிகள் எல்லாம் மனத்தைக் குறுக்கிக் கொண்டு விட்டவர்களா, ஓர் சிந்தனைப் பள்ளி என்று அர்ப்பணிப்புடன் வாழ்க்கை முழுவதும் அதில் ஊன்றியவர்கள் உலகை முழுவதும் பார்க்கத் தவறிவிட்டார்களா என்றால் அப்படியும் சொல்ல முடியாது; அதாவது எல்லா சித்தாந்தவாதிகளையும் அப்படி ஒரு பொதுக் கருத்தில் வகைப்படுத்தி விட முடியாது. ஏனெனில் சில சமயம், சில காலகட்டங்களில் ஏதோ ஒரு சித்தாந்தத்தின் முழுதும் நிறுவப்பட்ட தெளிவாக்கமும், தொடர்ந்த பரப்புரையும் தேவை என்று சில அறிஞர்கள் காலத் தேவை என்று உணரும் போது அவர்கள் அந்த சித்தாந்தத்திற்கென்றே தம்மை முழுவதும் அர்ப்பணித்துக் கொள்வதும் உண்டு. அப்படிப் பலரும் அர்ப்பணிப்புடன் வளர்த்தெடுத்த பல சித்தாந்தங்கள்தாம் நமக்கும் பலவிதங்களிலும் பார்வைகளை வளப்படுத்துகின்றன. அவர்கள் எல்லாமும் நம்மைப் போலவே பல சித்தாந்தங்களைக் கற்று ஓர்மை கொண்டு தமக்கு வேண்டுவன கொண்டு கடந்து போகும் பாணியைக் கையாண்டிருந்தால் இன்று நமக்கும் பல சித்தாந்தங்களின் வளங்கள் இருந்திருக்குமா என்பதும் ஒரு கேள்விதான். மேலும் நாமே கூட ஒரு காலத்தில் எப்பொழுதாவது ஏதோ ஒரு சித்தாந்தத்திற்கு வந்து சேர்ந்து அல்லது மனத்தில் அப்படி ஒரு சித்தாந்தம் உருவாகவும், அதன் முக்கியத்துவம் காலத் தேவையாக வளர்த்தெடுக்கப் பட வேண்டும் என்று நமக்கே தோன்றிவிடுமானால் நாமும் அந்த சித்தாந்தத்தை ஆழமாகவும் அகலமாகவும் நிறுவி நிலைநிறுத்தும் முனைப்பில்தான் இருப்போம். எனவே இப்படி ஒரு பரிமாணமும் இதற்கு இருக்கிறது. என்னுடைய இயல்பு இதுநாள்வரை இப்படி இருந்து கொண்டிருக்கிறது என்பதற்கு மேல் பொதுப்பட மொழிதல் இதில் சொல்வது கடினம். நாம் எதைச் செய்தால் நமக்கு நிறைவான மகிழ்ச்சி, உவகை நிலவுகிறதோ அதைச் செய்துகொண்டு போவது உத்தமம் என்பதற்கு மேல் சொல்ல என்ன இருக்கிறது?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

நம்மாழ்வாருக்கு விளக்கம் சொல்லும் திருமங்கையாழ்வார்

 தமிழிலே வேதம் அருளிய நம்மாழ்வாரின் கருத்தை விளக்கும் விதமாக அமைந்தவை திருமங்கையாழ்வாரின் பிரபந்தங்கள். இவ்விருவர்தம் நூல்களுக்கும் துணையாக அமைந்தவை மற்றை எண்மர் நன்மாலைகள் என்பது ஒரு பார்வை. ஸ்ரீமதுரகவியாழ்வாரின் கண்ணிநுண்சிறுத்தாம்பு திவ்ய ப்ரபந்தத்தையே மீட்டும் அடைவதற்கு உறுதுணையாய் நின்ற உயர்நூல். ஸ்ரீஆண்டாளின் நூல்களோ தமிழ் வேதத்துக்கு அமைந்த உபநிஷதங்கள் ஆகும்.

பெரிய திருவந்தாதியில் நம்மாழ்வார் கூறுகிறார்:
‘என்றேனும் கட்கண்ணால் காணாத அவ்வுருவை
நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’
கட்கண், மயிற்பீலிக் கண் போல் புறத்தில் கண் என்று பேர் படைத்ததாய் ஆனால் காண வேண்டிய பரம்பொருளைக் காண முடியாத புறக்கண். கண் என்று உடலின் பேராய், உடலில் உள்ள கண். ஆனால் நெஞ்சென்னும் உட்கண் காணும் அந்த பரம்பொருளை. எப்படி? உணர்ந்து. அந்தப் பரம்பொருள் எங்கு இருக்கிறது என்று கேட்டால் இதே நம்மாழ்வார்தான் சொல்லியிருக்கிறார் - ‘உளன் சுடர்மிகு சுருதியுள்’ என்று. அப்பொழுது சுருதியுள் பார்த்தால் தெரியாதா? அங்குதானே உளன்? ஆனால் எப்படிப் பார்ப்பது? கட்கண் காணாது என்றால், செவி, சுவை, மூக்கு எதுவுமே காணாது. சுருதியுள் இருக்கிற விஷயத்தை எப்படிப் பார்ப்பது? நெஞ்சு என்னும் உட்கண்ணைக் கொண்டு உணர்ந்து நோக்கினால் தென்படும்.
இதை எப்படி திருமங்கையாழ்வாரின் பிரபந்தம் விளக்குகிறது என்று பார்ப்போம்.
’நாடி என்றன் உள்ளம் கொண்ட நாதன் என்றும் நான்மறைகள்
தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் என்றும்.. ‘
பார்த்தன்பள்ளி என்னும் அவன் ஊரைத் தலைவி பாடுவதாகப் பாடுகிறார் திருமங்கையாழ்வார்.
நான்மறைகள் தேடி என்றும் காண மாட்டாச் செல்வன் ஆகியவன் தனது உள்ளத்தை நாடித் தன் நீங்கா இருப்பிடமாகக் கொண்டான் என்று பாடும் பொழுது ‘நெஞ்சென்னும் உட்கண்ணேல் காணும் உணர்ந்து’ என்பதற்கு ஓர் விளக்கம் நமக்குக் கிடைக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

பாணினிதான் இலக்கணம் என்றில்லை

 மொழி என்பது இலக்கணத்தை விட பெரிய விஷயம் என்ற யதார்த்தமான பார்வை சம்ஸ்க்ருத வியாகரண அறிஞர்களிடையே இருந்து வருகிறது. அதாவது பாணினி என்பவர் இலக்கணம் செய்தால் அது மிகப் பெரும் சாதனைதான். மொழியின் அனைத்து சாத்தியப்பாடுகளையும் உள்ளடக்கும் விதத்தில் ஓரமைப்பு என்ற விதத்தில் இலக்கணம் என்பது மொழியின் இயக்கத்தை, அதன் பரவலான செயல்பாட்டை மனத்திற்குப் புரியும்படி கொணர்ந்து ஒருங்குற நிறுத்துகிறது. ஆனால் ஒருவர் ஒரு காலத்தில் ஓரமைப்பியலாக இலக்கணம் ஒன்று செய்து விட்டால் அதன் பின்னர் அது ஒன்றுதான். வேறு இலக்கணங்கள் அந்த மொழிக்கு ஏற்கனவே இருந்தாலோ, அல்லது அடுத்து வரும் காலங்களில் ஏற்பட்டாலோ அதெல்லாம் தள்ளுபடி, கொள்ளத் தக்கது அல்ல, சான்றானவை அல்ல என்று ஒதுக்கித் தள்ளும் போக்கை மறுத்து சில அறிஞர்கள் சம்ஸ்க்ருதத்தில் எழுதியுள்ளார்கள். அவர்களின் கருத்து யாதெனில் மொழி என்பது எந்த ஓர் இலக்கண அமைப்பிலும் தீர்ந்து போய்விடும் விஷயம் அன்று. அந்த இலக்கணம் எத்தனை பெருமைக்குரியதாய் இருப்பினும் என்பதே.

உதாரணத்திற்கு, பதினாறு பதினேழாம் நூற்றாண்டில் வைநதேய பண்டிதர் என்பவர் ஒரு கருத்தை முன் வைத்து தமது கட்டுரையை வடித்திருப்பார் போலும்! அதாவது பாணினியின் இலக்கணம் சம்ஸ்க்ருதத்திற்கு முடிவான அறுதியான இலக்கணம்; பதஞ்ஜலி பாஷ்யத்துடன் கூடிய மும்முனிகளின் இலக்கணம் என்று போற்றப்படும் பாணினி இலக்கணம் அன்றி வேறு ஒன்றும் சான்றானவை அல்ல என்ற கருத்தில் எழுதியிருப்பார் போலும் வைநதேயர். அதற்கு மேல்ப்புத்தூர் நாராயண பட்டத்ரி (நாராயணீயம் எழுதியவரோ) என்பவர் ‘அபாணினீய ப்ராமாண்ய சாதனம்’ என்று ஒரு சிறு கண்டன நூலை எழுதி, வைநதேயரின் பக்ஷத்தை (கருத்தை) மறுத்து, எந்த ஓர் இலக்கண நூலுக்குள்ளும் மொழி முழுவதும் அடங்கிவிடாது. வேத ரிஷிகள், வேத வியாசர், காவியக் காரர்கள் போன்ற பலரும் பாணினியின் இலக்கணத்தால் விளக்கப்படாத மொழி ஆட்சிகளைப் பயன் படுத்தியுள்ளனர் என்றெல்லாம் தமது மறுப்பை அழகுற எழுதியுள்ளார்.
தொடங்கும் போதே, தாம் நாராயணர், மறுக்கப்பட்டவர் பெயர் வைநதேயர், தம்முடைய பார்வை நல்லதும் சரியானதும் ஆன பார்வை (சுதர்சனம்) என்பதையெல்லாம் வைத்து ஒரு சுலோகம் செய்து விடுகிறார். அதில் மகாபாரதத்தில் வரும் ஒரு நிகழ்ச்சியை, அதாவது கருடனுக்கு மற்றொரு பெயர் வைநதேயர் என்பது. வினதையின் புத்திரர் என்ற பொருளுடையது. கருடனின் கர்வத்தை அடக்கி நாராயணர் ஆகிய விஷ்ணு வைநதேயன் ஆகிய கருடனின் பக்ஷத்தைத் (சிறகை) தமக்கு அடக்கமாக வைத்துக் கொண்டார் என்ற நிகழ்ச்சியை தொட்டுக் காட்டும் விதமாக எழுதியிருக்கிறார். ’அதைப் போல் இப்பொழுதும் வைநதேயரே நாராயணன் ஆகிய நான் சுதர்சனத்தின் பலத்தால் உமது பக்ஷத்தை ஆக்கிரமிக்கின்றேன்’ என்று இருபொருள்படச் செல்கிறது சுலோகம்.
’சுதர்சனத்தைக் கைக்கொண்டு இன்றும் அதே நாரணன் ஆகிய நான் வைநதேயரே உமது பக்ஷத்தை வெல்வதில் நிலையாக இருக்கிறேன்’ என்பது அதன் தமிழ் வடிவம்.
ஸுதர்சனம் ஆலம்பீ ஸோSஹம் நாராயணோSதுநா |
வைநதேய பவத்பக்ஷம் ஆக்ரம்ய ஸ்தாதும் ஆரபே ||
இலக்கண முறைகள் என்றாலும் பண்டைய அறிஞர்கள் ஒரே பார்வைதான் பார்த்தார்கள் என்று சொல்ல முடியவில்லை. ஆரோக்கியமான விவாதம் நிகழ்ந்தவண்ணம் இருந்து வந்திருக்கிறது என்பதை நாம் உணரும் போது சிந்திக்க வைக்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

சாத்திரத்தின் ஜுரம்

 ஒருவருக்கு ஜுரம் படுத்துகிறது. ஏதோ உள்ளே ஒன்றுக்கொன்று ஒவ்வாமையினால் இந்த ஜுரம் என்று புரிகிறது. மருத்துவரிடம் சென்று காட்டுகிறார். அவரும் இந்தக் காரணத்தாலோ அல்லது அந்தக் காரணத்தாலோ என்று ஆராய்ந்து பல மருந்துகளைத் தருகிறார். ஆனாலும் உள்ளூற ஜுரம் இருந்தபடி இருக்கிறது. அப்பொழுது ஒரு மருத்துவர் நல்ல வேளையாக இந்த ஜுரம் இந்தக் காரணங்களினால் ஒவ்வாமை ஏற்பட்டு அதன் காரணமாக ஏற்பட்ட விளைவுதான் என்று கண்டு பிடித்துத் தக்க மருந்து கொடுத்து விடுகிறார். ஜுரம் தணிகிறது.

உடல் வேறு உடல் ஆகிவிட்டதா? இல்லை. அதன் இயல்பின்படி உடல் எந்நிலையில் இருக்க வேண்டுமோ அந்நிலைக்கு வந்து விடுகிறது. அது தன்னிலைக்கு வருவதற்குத்தான் இவ்வளவு சோதனை, மாற்று மருந்து, நோய் நாடி நோய் முதல் நாடி அது தீர்க்கும் வாய் நாடி வாய்ப்பச் செய்த மருத்துவரின் திறமை எல்லாம். மருத்துவர் ஆரோக்கியம் என்ற புதிய வஸ்துவை வெளியிலிருந்து உடலுக்குள் செலுத்துவதில்லை. தன் இயல்பு கெடாது உள்ளபடி இருப்பதுதான் ஸ்வஸ்தம் என்பது. இதைப் பழக்கத்தில் சொஸ்தம் ஆயிற்றா என்று கேட்போம். ஸ்வ என்றால் தன்னிலை; ஸ்தம் என்றால் நிலைத்து நிற்றல். தன்னிலை அடைந்து நிலைத்து நிற்பதற்குப் பெயர்தான் ஸ்வஸ்தம் (சொஸ்தம்).
சரி. இது புரிகிறது. ஆனால் நூல்கள் சில சேர்ந்து ஒரு கருத்தைச் சொல்ல வருமேயானால் அந்த நூல்களுக்குள் ஒரு பிணைப்பு, கருத்து அதற்கான துணை வலு, அந்தக் கருத்தை விவரிக்கும் பங்கு என்ற விதத்தில் ஒரு பரஸ்பரத் தொடர்பு ஏற்பட்டு விடுகிறது. கோர்ட்டில் ஒரு வழக்கு. அது சம்பந்தமான நூல்கள், சான்று ஒப்பு நோக்கும் புத்தகங்கள் எல்லாம் சேர்ந்து Body of References என்று அமைந்து விடுகிறது. சான்று நூல்களின் சரீரம் அல்லது குறிப்புதவி நூல்களால் ஆன உடல் என்றெல்லாம் சொன்னால் விநோதமாக இருக்கும். ஆனால் சில சூழ்நிலைகளில் அப்படிக் கருதி அவற்றைக் கையாள்வது அந்தத் துறைசார் வல்லுநர்களுக்கு வசதியான ஒன்று.
இப்படி, கடவுள் என்ற கருத்தை விளக்க வந்த நூல் தொகுதிக்கு இடையிலும் பரஸ்பரம் சான்று நூல்களால் ஆகிய உடல் வடிவம் என்று கருதும் பழக்கம் நெடுங்காலமாக இறையியல் அறிஞர்கள் மத்தியில் இருக்கிறது. இவ்வாறு சான்று நூல்களின் தொகுதி வேதாந்தத்திற்கு என்று பார்த்தால் மூன்று நூல்கள் அமைகின்றன. உபநிஷதங்கள், ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீபிரம்ம சூத்ரம் என்னும் மூன்று நூல்கள் அவை. இவற்றையும் சான்று நூல்களால் ஆகிய ஓர் உடல் என்று கருதுவதுண்டு.
ஒருவர் கவித்துவமாக இதைச் சொன்னார். இந்தச் சான்று நூல்களால் ஆகிய உடலுக்குள் ஜுரம் ஏற்பட்டு விட்டதாம். பல மருத்துவர்கள் இதற்கு வைத்தியம் செய்து பார்த்தார்கள். ஆனால் மருந்து கேட்கவில்லை. ஜுரம் தணிந்தபாடில்லை. அதாவது பல சித்தாந்த ஆசிரியர்கள் இந்த நூல்களுக்கு ஒப்பும்படி தங்கள் கருத்தை வலியுறுத்தி விளக்கம் சொல்லிப் பார்த்தார்கள். ஒன்றும் அனைத்துப் பகுதிகளுக்கும் பொருந்தும் வகையில் பொருந்தி அமையவில்லை என்பதை இப்படிச் சொல்கிறார். பிறகு ஒரு மருத்துவர் வந்து பார்த்திருக்கிறார். அவருடைய மருந்து அனைத்துப் பகுதிகளுக்கும் ஒவ்வியதாய் இருந்து, சான்று நூல்களின் இடையில் அவற்றின் உள்ளர்த்தங்களுக்குள் இருந்த ஜுரம் நீங்கும் படியாக ஸ்வஸ்தப் படுத்தினார். அவர்தான் ஸ்ரீராமாநுஜர் என்கிறார். இந்தக் கவிதையைப் பாடியவர் சுதர்சன சூரி என்னும் ஆசிரியர். ஸ்ரீராமானுஜரின் உரைக்குப் பெரும் விரிவுரையாக ஒன்றைத் தாம் எழுதும் போது இவ்வாறு கூறுகிறார்.
அந்தக் கவிதையின் தமிழ் வடிவம் -
‘மிகச் சிறந்த யோகியான அந்த ஸ்ரீராமானுஜருக்கு நம் நமஸ்காரம் உரித்தாகுக. யார் சுருதி ஸ்மிருதி சூத்திரங்கள் ஆகியவற்றுக்கிடையே இருந்த உள் ஜுரத்தை முற்றிலுமாக நீக்கிச் சான்று நூல்களிடையே சமரஸம் என்னும் ஸ்வஸ்த நிலையை உண்டாக்கினாரோ அவருக்கே நம் வணக்கம்.’
அதன் வடமொழி வடிவம் -
‘தஸ்மை ராமாநுஜார்யாய நம: பரமயோகிநே |
ய: ச்ருதிர் ஸ்ம்ருதிர் சூத்ராணாம் அந்தர்ஜ்வரம் அசீசமத் ||’
சான்று நூல்களுக்குள் ஓரிடமும் முரண் ஆகாதபடிப் பொருத்தமுற விளக்கம் கண்டவர் என்னும் கருத்தை எப்படிக் கவியழகோடு சொல்லியிருக்கிறார் என்பது மிகவும் ரசிக்கத் தக்கது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***

இதுவும் சாத்திரத்தில்தான் இருக்கு

’மனத்திற்குப் பிரீதியைத் தருவது எதுவோ அது சுவர்க்கம் எனப்படும். அதற்கு நேர்மாறானது நரகம் எனப்படும். பாபம், புண்ணியம் என்பதற்குத்தான் நரகம் சுவர்க்கம் என்று பெயர்கள் அமைந்திருக்கின்றன. ஒரே பொருள்தான் ஒரு சமயம் துக்கமாகவும் மறு சமயம் சுகமாகவும் ஆகிறது. அழுக்காறு, கோபம் என்பவற்றை விளைவிக்கிறது. துக்கம் மட்டுமே வடிவாக எந்தப் பொருள் உண்டு? எது முதலில் பிரீதியை உண்டாக்குகிறதோ அதுவே பிறகு துக்கத்தைக் கொடுக்கிறது. ஒரே பொருளே கோபத்தை உண்டாக்கி, துன்பத்தைத் தந்து பின்னர் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. எனவே துக்கமே வடிவாக எந்தப் பொருளும் இல்லை; அது போல் சுகமே வடிவாகவும் எந்தப் பொருளும் இல்லை. மனம்தான் சுகம் என்றும் துக்கம் என்றும் மாறிப் பரிணாமம் அடைகிறது. எனவே ஞானம்தான் பரம் பிரும்மம். ஞானத்தால்தான் பந்தத்திலிருந்து விடுதலை உண்டாகும். இந்த விச்வம் அனைத்தும் ஞானமே வடிவாகக் கொண்டது. ஞானத்தைக் காட்டிலும் உயர்ந்தது எதுவும் இல்லை.’
(பிரம்ம புராணம்)
*
சாத்திரங்களில், புராணங்களில் ஒரே மாதிரியான மனப்பான்மை உள்ளவர்களின் கருத்துகள்தாம் இருக்கின்றன என்று நினைக்க முடியாது. ஒரு பக்கம் குறுகிய நோக்குடன் பழம் வழக்கம் என்பதையே வேறு எதையும் யோசிக்காமல் வலியுறுத்தும் மனப்பான்மை உள்ளவர்களுக்குத் தோதாக விஷயங்கள் சொல்லப் படுகின்றன என்பதைப் போலவே மானிடம், மனிதப் பண்பு என்பதை மற்ற எல்லாவற்றிலும் மேலாக வலியுறுத்திக் காட்டும் மனப்பான்மைக்கும் வலுவூட்டுவதாகவும் விஷயங்கள் காணப் படுகின்றன. அவற்றைப் பிரித்தெடுத்து நாம் ஒரு நிரல்படக் காணும் போது பழமைவாதத்தையும் தாண்டி மனிதப் பண்புகள் முக்கியமானவை என்பதை வலியுறுத்தும் கதைகள், சொல்லாடல்கள், உபதேசங்கள் என்பவை தொடர்ந்து ஒரு சிலரால் பேணப்பட்டும், வலியுறுத்தப் பட்டும் வந்திருக்கின்றன என்று புரிய வருகிறது. ஆனால் கூடுதல் அளவில் காணப்படும் பதிவுகள் எவை என்பது ஒரு முக்கியமான கேள்வியே.
உதாரணத்திற்கு, பாத்ம புராணத்தில் ஒரு கதை வருகிறது. அது சொல்லப் படும் பொழுதே பல விவரங்கள் மலிந்து சொல்ல வந்த கதையின் மையக் கருவைச் சற்றே மறைத்தாலும் கதையின் மையக் கரு பளிச்செனத் தெரிவதாக இருக்கிறது. ஒரு கோவில். அதில் சோழ ராஜா ஒருவர் பொன்னாலும் மணியாலும் முத்துக்களாலும் அலங்கரித்து விஷ்ணுவிற்கு வழிபாடு நடத்தியிருக்கிறார். அப்பொழுது விஷ்ணுதாசர் என்ற ஓர் ஏழை அந்தணரும் அங்கு வந்து துளசி இலைகளால் தாம் விரும்பிய விதத்தில் வழிபாடு நடத்தி வணங்குகிறார். இதைக் கண்ட ராஜாவுக்குக் கோபம் வருகிறது. இவ்வளவு விலையுயர்ந்த பொன்னும் மணிகளும் கொண்டு நான் வழிபாடு செய்து வைத்திருக்கும் போது அதன் மீது இப்படி துளசி இலைகளைப் போட்டு மறைக்கின்றீரே என்று கோபப் படுகின்றார். அந்தணர் தாம் மிகவும் பக்தியோடு வணங்கி அந்தத் துளசி இலைகளை இட்டு வழிபட்டதாக வாதிடுகிறார். அப்பொழுது பக்தி என்றால் என்ன என்ற பிரச்சனை வருகிறது. ராஜாவும் மிகவும் ஆர்வமாக ஈடுபாட்டுடன் தான் பொன்னும் மணியும் இட்டு வணங்கியிருக்கிறார். அவருடைய பக்தியிலும் குறை சொல்ல முடியாது. அந்தணரும் அவரால் முடிந்தது என்று துளசி இலைகளை இட்டு பக்தி செலுத்தியிருக்கிறார். இதில் எது உயர்ந்தது எது தாழ்ந்தது என்று எப்படிச் சொல்ல முடியும்? அப்பொழுது அவர்களுக்குள் ஒரு போட்டி போல் ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது. தாம் மிகச் சிறப்பாக வழிபாடுகள் நடத்தப் போவதாகவும், யாருடைய வழிபாட்டில் பக்தி அதிகம் என்பதை ஸ்ரீவிஷ்ணுவே தீர்மானிக்கட்டும் என்று.
ராஜாவின் வழிபாடுகளில் ஈடுபாட்டிற்கும் விமரிசைக்கும் குறைவேயில்லை. விஷ்ணுதாசர் பழையபடித் துளசி இலைகள் இட்டும் ஏதோ படையல் உணவு சமைத்து வந்ததை இட்டும் தம் பக்தியைத் தொடர்கிறார். ஆனால் தாம் படையல் உணவைக் கடவுளின் முன்னர் வைத்துவிட்டுச் சற்று அங்கோ இங்கோ போய் வருவதற்குள் அந்த உணவு காணாமல் போய் விடுகிறது. ஒரு நாள் மறு நாள் இதுவே தொடர்கிறது. அடுத்த நாட்களில் இந்த மர்மத்தை எப்படியும் கண்டு பிடித்து விட வேண்டும் என்று மறைந்திருந்து பார்க்கிறார். அப்பொழுது அவர் காண்பது பசியிலும், வறுமையிலும் நொந்து ஓர் எளிய ஏழைக் குடிமகன் ஒருவர் அதை எடுத்துக் கொண்டு ஒளிந்து கொள்வதைப் பார்க்கிறார். உடனே பார்க்கும் விஷ்ணுதாசரின் மனத்தில் கலக்கம் ஏற்படுகிறது. பசிக் கொடுமையால் ஓர் எளிய மனிதர் படும் துன்பம் அந்த முகத்தில் அவருக்கு அப்படியே தெரியவும், தம்முடைய பக்தி வழிபாடு என்பதையெல்லாம் மறந்துபோக, ஐயோ அவர் வெறும் சோற்றை உண்டால் என்ன பயன், தொண்டையில் அல்லவா அடைத்துக் கொள்ளும் என்று ‘அப்பா! இரு இரு. இந்தா இந்த நெய்யையும், குழம்பையும் சற்று சேர்த்துக் கொள் என்று சொல்லியபடியே அவரைத் தொடர்ந்து ஓடுகிறார். இவரது உபசரிப்பு அவருக்கு விபரீதமாகப் படுகிறது. தந்திரமாகத் தன்னைப் பிடிக்கத் திட்டம் போலும் என்று மேலும் ஓடுகிறார். பிறகு ஒரு வழியாக அவரை அமைதிப் படுத்தித் தாம் கொண்டு வந்த உணவுப் பொருட்களை அவருக்கு இட்டு உண்ணச் செய்து அதில் என்றும் தன் வழிபாட்டில் கிட்டாத ஒரு பெறும் நிறைவு தம்முள் ஏற்படுவதை உணர்கிறார் என்பது கதையின் மையக் கருவாக வருகிறது. பக்தி என்பது ஆடம்பரத்தில் இல்லை என்பது போலவே, எளிய முறையில் உள்ளம் நிறைந்து செய்வதிலும் இருக்கிறது என்று சொல்வதை விட, கூட வாழும் ஓர் எளிய மனிதரின் பசிக் கொடுமையைப் போக்கும் பரிவுணர்ச்சியில்தான் வழிபாடோ பக்தியோ நிறைவடைகிறது; தெய்வமும் அதில்தான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறது என்னும் கருத்து கதையின் மூலம் உணர்த்தப் படுகிறது. ஆனால் பொறுமையாகத் தேடி எடுக்க வேண்டியிருக்கிறது இது போன்ற அரும் மணியான பகுதிகளை.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***