Friday, October 29, 2021

திருவரங்கத்தைப் பற்றி ஸ்ரீபட்டரின் அனுபவம்

நித்ய விபூதி என்கிறார்களே, விரஜா நதிக்கரையில் இருக்கிறது என்று. அங்கு போனால் கிடைக்கும் அந்தப் பேரானந்தம் இவ்வுலகிலேயே கிடைக்க வழியில்லையோ? இல்லாமல் என்ன... ஓரிடம் இருக்கிறது. காவிரி, கொள்ளிடம் என்று இரண்டினாலும் வளைக்கப்பட்ட இடம். விரஜை நதியின் கரையில், தமோகுணம் அற்றதாய், ரஜோகுணமும் இல்லாததாய், சிறந்ததான இடம், முக்தர்களுக்கு என்றே உரிய இடம் என்று யாதொன்றைச் சொல்லுகிறார்களோ அந்த விஷ்ணுவின் பரமபதம் என்று பெயர்பெற்ற உன்னத ஸ்தானம் விரஜை நதியை ஒட்டி இருக்கும் மணற்குன்றுதானே! அஃது அங்குதான் என்றில்லை. இதோ இங்கேயே இருக்கிறதே என்று சொல்லலாம்படி அமைந்திருக்கிறது காவிரி நதிக்கரையை ஒட்டி வளர்ந்திருக்கும் மணற்குன்று. காவிரியின் நடுவே விளங்கும் இந்த உன்னத ஸ்தானத்தை என்றும், என்றென்றும் கண்டுகொண்டிருக்க வேண்டும்.

ஏன் அது என்ன அவ்வளவு விசேஷம் என்றா கேட்கிறீர்கள்? அங்கிருக்கும் கோயில் சோலைப் புறங்களில்தான் விசேஷம். அந்தச் சோலைப் புறங்களில் என்ன நடைபெறுகிறது? தமிழ் வேதாந்தம், வடமொழி வேதாந்தம் என்று உபய வேதாந்தங்களும் அங்கு ஆழ்ந்து ஈடுபாட்டுடன் துய்க்கப் பெறுவதால் எப்பொழுதும் இந்த உபய வேதாந்த ஒலி கேட்ட வண்ணம் இருக்கிறது. உலக தாபங்கள் மற்ற இடங்களில் கடுமையாய் இருக்கும் என்றால் இங்கோ வலிமையற்றுப் போய்விடுகிறது. தூய்மை, பாவனம் பரவிக் கிடக்கிறது. ஸ்ரீவைஷ்ணவர்களின் புகலிடமாக இருக்கிறது. காவிரி நதியின் நீரால் போஷிக்கப்பட்டு வளர்ந்து ஓங்கிய சோலைகளாய் இருக்கின்றன. இங்கேயே எப்பொழுதும் வசிக்கக் கடவேனாக.

என்று அற்புதமாக ஈடுபடுகிறார் ஸ்ரீரங்கராஜஸ்தவத்தில் ஸ்ரீபராசர பட்டர். அந்த சுலோகங்கள் வருமாறு --

யத்விஷ்ணோ பதமதம: பரோரஜோSக்ர்யம் 
முக்தாநாமநுவிரஜம் வீதீப்ரமாஹு: | 
தத் புண்யம் புளிநமிதந்தயாSத்ய மத்யே காவேரி 
ஸ்ப்புரதி ததீக்ஷிஷீய நித்யம் ||

த்ரய்யந்தப்ரஹதி மதீஷு வைஷ்ணவாநாம் 
ப்ராப்யாஸு ப்ரசுரபவச்ரமாபஹாஸு | 
காவேரீ பரிசரிதாஸு பாவநீஷு 
ஸ்ரீரங்கோபவநதடீஷு வர்த்திஷீய ||

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

****

Thursday, October 28, 2021

இச்சையும், புரிதலும்

வேதாந்த ஸூத்ரங்கள் என்னும் ப்ரஹ்ம ஸூத்ரத்திற்குப் பல வியாக்கியானங்கள் உண்டு. ஸ்ரீஆதிசங்கரர், ஸ்ரீராமானுஜர், ஸ்ரீமத்வர் முதலிய பல ஆசாரியர்களும் தம் தம் சித்தாந்தத்திற்கு ஏற்றாற்போல் விரிவுரை செய்துள்ளனர். 

வேதாந்த ஸூத்ரங்களில் முதல் ஸூத்ரம் ‘அதாதோ ப்ரஹ்ம ஜிக்ஞாஸா’ என்பதாகும். ப்ரஹ்ம ஜிக்ஞாஸா என்றால் ப்ரஹ்மத்தை அறியுமிச்சை. பிரம்மத்தை அறியுமிச்சை என்றால் என்ன செய்ய வேண்டும் என்று வேதாந்தம் கூற வருகிறது? அறியுமிச்சையைச் செய்ய வேண்டும், இச்சை கொள்ள வேண்டும் என்று கட்டளை இடுகிறதா? விதிக்கிறதா? விதிக்கப் படுவதாய் இருக்கும் தன்மை விதேயத்வம். இச்சை அப்படிக் கட்டளை இட்டு, விதித்து அதன் மூலம் செய்யக் கூடியதா? இச்சை கொள்ள வேண்டும் என்று கட்டளையிட்டால் ஒருவர் அதற்குக் கீழ்ப்படிந்து இச்சை கொண்டுவிட முடியுமா? நமக்கு இதில் என்ன பிரச்சனை இருக்கிறது என்று தோன்றும். ஆனால் வேதாந்திகள் எவ்வளவு நுணுக்கமாகச் சொற்களுக்குப் பொருள் கொள்கின்றனர் என்பதை நாம் உணர இது ஒரு வாய்ப்பு. 

இச்சை விதேயத்வம் உடையது அன்று. அதாவது விதியாகச் சொல்லி அதை இயற்ற வைக்க முடியாது. இச்சை புரிவாய் என்று செய்யக் கட்டளையிட்டால் இச்சை வந்துவிடாது. இச்சை வந்தவர்க்கு வழிகளை விதிக்கலாம். இச்சை எப்படி வரும்? தானேதான் வரவேண்டும். அதாவது ஒரு விஷயத்தின் மகிமை, பெருமை முதலியவற்றின் காரணமாக ஒருவர்க்கு அதன்பால் இச்சை உண்டாகலாம். ஆனால் செய்து கூட்டக் கூடிய ஒன்றன்று இச்சை என்பது. எனவே ஸ்ரீபாஷ்யத்தில் ஸ்ரீராமானுஜர் முதல் ஸூத்ரத்திற்கு உரை எழுதுங்கால் ’இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால் ஞானம் என்பது விதிக்கப்படுகிறது’ என்று பொருள் வரைகிறார். இச்சை விதிக்கு உட்பட்டதன்று. ஆயினும் இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்மை கொண்டது பிரம்ம ஞானம். எனவே வேதாந்த வாதாவளியில் ஸ்ரீமைஸூர் அநந்தாழ்வான் ஸமாஸவாதத்தில் ஒரு விளக்கம் தருகிறார். அதாவது, ‘இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால் ஞானம் என்பது விதிக்கப் படுகிறது’ என்று ஸ்ரீராமானுஜர் தரும் விரிவுரையில் ‘விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால்’ என்னும் சொற்றொடர்களுக்குப் பின்னர் ‘விதிக்கபடமுடியாதது எனினும்’ என்னும் சொற்றொடரை வருவித்துப் படித்துப் பொருள் கொள்வது இன்னும் விளக்கமாக இருக்கும் என்கிறார். அப்பொழுது இதையும் இணைத்துப் படித்துப் பார்த்தால் ‘இச்சைக்கு விஷயமாக இருப்பதில் முதன்முன்னம் முதன்மை கொண்டது என்பதால், (விதிக்கபடமுடியாதது எனினும்) ஞானம் என்பது விதிக்கப் படுகிறது’ என்று ஆகும். அதாவது இச்சை என்பது சொல்லிச் செய்து வருவதன்று, ஒரு விஷயத்தின் மகிமை, பெருமை என்பதனால் ஒருவருக்குத் தன்னைப் போல் உள்ளிருந்து எழ வேண்டிய ஒன்று என்னும் உள இயல் உண்மையைக் கருத்தில் விடாமல் கொண்டு உரை எழுதவும், எழுதிய உரையைப் புரிந்துகொள்ளவும் செய்கிறார்கள் என்பதுதான் கவனிக்க வேண்டிய ஒன்று.

‘இருள்சேர் இருவினையும் சேரா இறைவன் 
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு’

என்னும் குறளில் இறைவனுடைய பொருள் நிறைந்த புகழை ஒருவர் புரிய வேண்டும் என்றால் என்ன? அப்படிப் புரிய முடியுமா? இங்கு ‘புரிந்தார்’ என்றால் ‘விரும்பியவர்’ என்ற பொருள். புரிதல் என்றால் விரும்பிய என்னும் பொருள் கொள்ளப் படுகிறது. ஏனெனில் விரும்புவதற்கு ஏற்ற மிகவும் சிறந்த, முதன்மையானது எதுவெனில் இறைவனின் புகழ். இறைவன் புகழை விரும்புக என்று கட்டளை இட்டால் அதற்குக் கீழ்ப்படிந்து ஒருவர் எந்தச் செயல் புரிந்தால் உடனே விருப்பம் வந்துவிடுமா? ஆயினும் சிறப்பையும், முதன்மையையும், முக்கியத்துவத்தையும் கருதி அவ்வாறு விதிப்பதாகவே கொள்ள வேண்டும். அதனையே மிக அழகாகத் திருவள்ளுவர் அவ்வாறு இறைவன் புகழைப் புரிந்தவர்கள், விரும்பியவர்கள் அடையும் உயர்நிலையைச் சொல்லி உணர வைக்கிறார். 
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Saturday, October 23, 2021

Czeslaw Milosz - செஸ்வா மீவாஷ்

செஸ்வா மீவாஷ் (Czeslaw Milosz) நோபல் பரிசு பெற்ற போலிஷ் கவிஞர். அவர் பிறந்த ஊர் இன்றைய லிதுவானியாவில் இருக்கிறது. கம்யூனிஸம் விரட்ட, ஃப்ரான்ஸில் அடைக்கலம். பின்பு அமெரிக்காவில் புகலிடம். பிஹெச்டி எதுவும் பெறாமலேயே ஸ்லாவிக் மொழிகளில் பேராசிரியர் வேலை. போலிஷ் மொழியில் பல தொகுப்புகள் (போலண்டில் அவருடைய நூல்களை அச்சிடுவது தடை செய்யப்பட்டிருந்த போதிலும்). அவருக்கு நோபல் பரிசு கிடைத்ததும்தான் போலண்டிலும் சரி, அமெரிக்காவில் அவருக்குப் பழகியவர்களும் சரி அவருடைய மேதைமையை உணர்ந்தனர். நகரங்கள் சரிவதையும், மனிதருக்குள் இருக்கும் வன்மங்கள் வெளிப்படுவதையும் அனுபவத்தில் பார்த்தவர். இல்வாழ்க்கையும், மனையாளும், கருவில் தம் குழந்தையும் என்ற நிலையிலும் சர்வாதிகாரங்களுக்கு அஞ்சி கண்டம் விட்டுக் கண்டம் என்று புகல் தேடி அலைந்த மனிதர். அவர் மொத்த நகரங்களை நோக்கி ஓர் உரத்த குரல் வீசுகிறார்: 

“Till not one stone, 0 city, remains
Upon a stone, and you too will pass away.
Flame will consume the painted history.
Your memory will become a dug-up coin.
And for your disasters this is your reward:
As a sign that language only is your home,
Your ramparts will be built by poets.”
(Czeslaw Milosz, New and Collected Poems 1931 to 2001) 

கல்லில் கட்டியவை காலத்தில் காணாமல் போகும். கவிஞன் சொல்லில் கட்டியவையில் இனி உங்கள் வாசம் நிரந்தரம் - என்று அவர் உரக்கச் சொல்லும் குரல் கவிஞனின் குரல். நினைத்தால் ஆச்சரியமாக இருக்கிறது. கல் கெட்டியானது. கரையாது. ஆனால் காலம் அதை ஊதிவிடுகிறது. சொல் ஓசை ஓலி. சொன்னால் போயிற்று. ஆனால் சொல்லில் வடிக்கும் கோட்டைகளைக் கடலலை போல் மோதி மோதிக் காலம்தான் தன் தோல்விக் கணக்குப் பாடிக் கொள்கிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

சொன்னது நீதானா

சொன்னது நீதானா சொல் சொல் சொல் என் உயிரே. 
என்று ஒரு சினிமா பாடல். 

சொன்னது உண்மை. எவ்வளவு உண்மை என்றால் சொல்லவில்லையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு கனத்த‌ உண்மை. இதை பெட்ரோ ஸலினாஸ் என்னும் ஸ்பானிஷ் கவிஞர் தமது காதல் கவிதைகளில் சொல்லும் விதம் : 

And what she said to me
was in a language of the world,
with grammar and a history.
So true,
that it seemed to be a lie.
(Memory in my hands, The love poetry of Pedro Salinas, tr by Ruth Katz Crispin, 2009 Peter Lang, pp 9) 

உலகத்து மொழியில்தான் சொன்னாள். இதே இலக்கணம், வரலாறு ஆகியவற்றால் கட்டமைக்கப்பட்ட மொழிதான்.. உண்மை.. அவ்வளவு உறுதியான உண்மை... எவ்வளவு உறுதி... ஒரு வேளை சொல்லவில்லையோ என்று சந்தேகப்படும் அளவிற்கு. 

சொன்னது நீதானா...... சொல் சொல் சொல்.. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

கிரேக்கத்தில் நடந்தவை

கிரேக்கத்தில் நடந்தவை 

பல நூற்றாண்டுகளுக்கு முன்பு --
கேன்வாஸில் வரையப்பட்ட ஒரு படம். லக்கோனியர்களை அதீனியர்கள் வீழ்த்துவது போல் காட்சி. பார்த்தவர் சொன்னாராம்: 'யப்பா.. பெரும் வீரர்கள் இந்த அதீனியர்கள்! '
மற்றொருவர் அதற்கு: 'ஆம். வரையும் கேன்வாஸில்'. அவர் ஒரு லக்கோனியர்.
எத்தனை காலம் எந்த நாடு.. மனிதர்கள் ஒரே மாதிரிதான். 
 

கிரேக்கத்தில் நடந்தவை : 

'கட்டடத்தைப் பார்த்தால் என்னென்னிக்கும் நிலைச்சு வாழப் போறவன் மாதிரி கட்டியிருக்கானய்யா! சாப்பாட்டில் கட்டுகட்றதைப் பார்த்தால் ஒரேயடியா செத்துருவான் போல சாப்பிடுகிறானய்யா!' 

இதைச் சொன்னது ப்ளேட்டோ. அரிஜன்டம் நகரத்து மக்கள் கட்டடங்களையும், விருந்துகளையும் பார்த்துவிட்டு இவ்வாறு சொன்னார். 


கிரேக்கத்தில் நடந்தவை: 

"ஏ முட்டாளே! அபசுரமா வாசிச்சுத் தொலைச்சியா? இல்லையென்றால் இந்த கச்சேரி கேட்ட மக்கள் இப்படிக் கொண்டாட மாட்டார்களே!"
என்று குச்சியால் சிஷ்யனை வெளுத்து வாங்கிவிட்டார் ஹிப்போமேக்கஸ் என்ற குழல் ஆசிரியர். 


கிரேக்கத்தில் நடந்தவை: 

அரிஸ்டிப்பஸ் தம் மகனை வெறுத்துத் திட்டிக்கொண்டிருந்தார். அவரது மனைவி குறுக்கே புகுந்து சொன்னாள்: 'ஏன் இப்படித் திட்டுகிறீர்கள்? அவன் உங்களைச் சேர்ந்த ஒரு பகுதியில்லையா?' அரிஸ்டிப்பஸ் உடனே காறித் தரையில் உமிழ்ந்து ' அந்த எச்சிலும் என்னைச்‌ சேர்ந்த பகுதிதான். ஆனால் என்ன பயன்?' என்றார். 

அந்தக்காலம் இந்தக் காலம் சொல்லலாம். ஆனால் ஒரே காலம்தான் இருக்கிறது. 


கிரேக்கத்தில் நடந்தவை: 

குழல் வாசிப்பதில் மிகவும் புகழ் வாய்ந்த ஒருவரைச் சிறைபிடிக்க நேர்ந்தது அடியாஸ் என்னும் மன்னனுக்கு. ஒரு பண் வாசிக்கப் சொல்லி அவரைக் கேட்டார் அடியாஸ். வாசித்ததும் அத்தனை சபையோரும் கரவொலி எழுப்பினார்கள். குழல் நிபுணர் கூறினார் : ' என்னுடைய குதிரை இதைவிட நன்கு புரிந்துகொண்டு கனைக்கும்.' 


கிரேக்கத்தில் நடந்தவை: 

ஃபிலிப் பேரரசர் ஆன்டிபேட்டரின் நண்பர் ஒருவரை நீதிபதியாக நியமித்து ஆணை பிறப்பித்துப் பின்னர் அதை நீக்கி விட்டார். காரணம், அந்த நபர் தாடிக்குக் கரு மை பூசியிருந்தார் நரையை மறைக்க. "உரோமத்தில் கூட ஒருவரை நம்ப முடியாது என்னும் போது வியவகாரங்களில் அவரை நம்புவது யாங்ஙனம்?" என்பது ஃபிலிப் பேரரசர் கருதிய‌ காரணமாம். 

என்னவோ போங்க.. டை பண்ணியதற்குப் பதவி போச்சேய்யா... 

***


அங்கேயும் இதே கஷ்டம்தானா?

துறை சார்ந்த கல்வி, ஆய்வு என்னும் நோக்கில் ஒரு விஷயத்தைப் பற்றிப் பேசும்பொழுது கேட்பவரும் அவ்வாறு துறை சார்ந்த தெரிதலும், சொற்களுக்கு உண்டான கறாரான துறை சார்ந்த அர்த்தங்களும் புரிந்துகொள்ளும் நிலையில் இருப்பது முன் எப்படியோ வரவர அபூர்வமாகவே அமைகிறது. துறை சார்ந்து படிக்கப் புகும் நபர்களே கூடக் குத்துமதிப்பாகவும், குறையாகவும் பல சொற்களுக்கும் தாங்கள் சூழ்நிலையிலிருந்து உறிஞ்சிக் கொண்ட அர்த்தங்களை விடாப்பிடியாகப் பற்றிக்கொண்டுதான் செல்கிறார்கள். யதேச்சையாகத் தொற்றிக்கொண்ட அர்த்தங்கள் பின்னர் கல்வித் தேர்ச்சியால் மாறுகிறதா திருத்தம் அடைகிறதா ஒன்றும் தெரியவில்லை. இன்னும் சொல்லப் போனால் மென்டல் க்ளீனிங் என்னும் சித்த சுத்தி ஒருகாலும் நடைபெறுவதில்லை என்றுதான் தோன்றுகிறது. மாறாகத் துறைசாராத உற்சாகங்களால் ஒவ்வொரு சொல்லும் எல்லாம் திணிக்கப்பட்ட ரப்பர் பையாக மாறிவிடுகிறது. சாஸ்திரங்களைப் படிக்கும் பொழுது இதைப் பலமுறை உணர்ந்திருக்கிறேன். உதாரணத்திற்கு, இந்த ‘சாஸ்திரம்’ என்ற சொல்லையே கூடச் சொல்லலாம். இது எப்படியோ, மேற்கத்திய மெய்யியல் படிப்புகளிலும் இந்தத் தொல்லை நிகழாமல் இல்லை. உதாரணத்திற்கு மெடஃபிஸிக்ஸ் என்னும் ‘பௌதிகம் கடந்த மெய்மையின் இயல்’ என்னும் படிப்பில் இந்தக் கஷ்டங்களை எதிர்கொள்கிறார்கள் சாதாரணமான அறிமுக நூலை எழுதும் ஆசிரியர்களும் கூட. எனவே அவர்கள் முதன்முன்னம் மெடஃபிஸிக்ஸ் என்றால் என்ன என்ன எல்லாம் இல்லை என்று சொல்லித் தீர வேண்டியிருக்கிறது. ஜான் டபிள்யூ கார்ரோல், நெட் மார்கோஸியன் என்னும் ஆசிரியர்கள் மெடஃபிஸிக்ஸுக்கான ஓர் அறிமுகம் என்னும் நூலின் தொடக்கத்தில் இவ்வாறு தெளிவுபடுத்துகிறார்கள். அது என்ன என்பது அப்புறம் இருக்கட்டும். முதலில் அது என்ன எல்லாம் இல்லை என்று சொல்வது பெரும் உதவி மட்டும் இல்லை, உரிய தற்காப்பும் ஆகும். 

“Let’s start with what metaphysics is not. Metaphysics - as we are using the term - is not the study of the occult. Nor is it the study of mysticism, or auras, or the power of pyramids. Although the word ‘metaphysics’ may indeed have all of those connotations in ordinary English, the word is used within academic philosophy in an entirely different way. And this book, as it happens, is meant to be an introduction to the branch of academic philosophy that is known as metaphysics.”
(An Introduction to Metaphysics, John W Carroll, Ned Markosian, Cambridge University Press, 2010, pp 1) 

விநோதம்தான். ஒன்று என்ன என்பதைச் சொல்லும் முன்னர் அது என்னவெல்லாம் இல்லை என்று சொல்லித்தீர வேண்டும் என்பது அறிவின் பெருக்கத்தைக் காட்டுகிறதா அல்லது அறியாமையின் பெருக்கத்தைக் காட்டுகிறதா? இன்னும் சொல்லப் போனால் நுண்தளத்தில் புழங்கும் பல சொற்களிலும் ஏகப்பட்ட குப்பைகள் கொட்டப்பட்டு ஒரு சொல்லையும் நேரடியாக எடுத்தோம் பயன்படுத்தினோம் என்று முடிவதில்லை. பயன்படுத்தலாம். ஆனால் நீங்கள் சொல்வது வேறு, போய்ச் சேரும் பொருள் வேறு என்றுதான் ஆகிவிடும். நீங்கள் சொல்லாத விதத்தில் புரிந்துகொண்டு, நீங்கள் உணர்த்தாத பொருளை உள்வாங்கி ‘பிரமாதமா சொன்னீங்க’ என்று நீங்களே பாராட்டப்படும் போது நடக்கும் உங்களுக்குள்ளேயே ஓர் அசடுவழியல்.. அதை எங்கு போய்க் கொட்ட?
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

கவிதை என்பது அலாதியான திறப்பு

கவிதை என்பது என்னமோ ஓர் அலாதியான உலகத் திறப்பாகத்தான் எனக்கு ஆகிவிடுகிறது. மற்ற ஆர்வங்கள் மனத்தை முழுவதும் கவிதைக்கு விட்டுக்கொடுத்து நகர்ந்து விடுகின்றன. தமிழினி வசந்தகுமார் சொல்வதில் ஒரு பாயிண்ட் இருக்கத்தான் செய்கிறது. ‘நீங்க கவிதையிலேயே இருங்க. எதுக்கு மற்றவை?’ ஆனாலும் ஓடுகாலி மனம் ஓரிடத்தில் நிற்குமோ? ஆடிய பாதமும், அருளிய பாதமும் ஒன்றாகும் போது நிற்கலாம். அதுவரை தேடிய நாட்டமாய் மனம் என்னும் மான் துள்ளத்தானே செய்யும். 

அமெரிக்க தேசத்தின் கவிஞர் ஒருவர் ஜான் பெர்ரியொல்ட் (John Perreault). அவர் இப்படி எழுதப் போய்த்தான் இந்தச் சிக்கல் -- 

“in front of us
where hours die
as if lived
inside your immortality” 

எங்கள் ஊர் ஸ்ரீதாயுமானவர் கூறுகிறார்: 

“நானே கருதின் வர நாடார் சும்மா இருந்தால்
தானே அணைவர் அவர் தன்மை என்னோ பைங்கிளியே.” 

வரவர எங்கோ ஏதோ மொழியில் படித்த ஞாபகத்தில் எந்த மொழியிலோ தேடும் பிழைப்பு ஆகிவிட்டது. ஒரு குரல்தான் ஆதிமுதல் பேசிக்கொண்டிருக்கிறது. அதைப் பிடித்து வைக்கும் பாத்திரமாகப் பல மொழிகளை நாம் வைத்திருக்கிறோம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***