சித் என்பது அறியும் மெய்ப்பொருள். அஃது உயிர். எல்லையற்றது. உணர்வின் உயிர்ப்பே எண்ணங்கள். மூன்று முக்கியம். பிறப்பால் மனிதரில் உயர்வு தாழ்வு இல்லை. பெண்ணும் ஆணும் சமமான மனித உயிர். கடவுளை அடைய அன்பே வழி. மனித குலத்தை நேசிப்பவர் சிறந்தவர். உயிர்க்குலத்தை நேசிப்பவர் உத்தமர். மதம், சாதி, மொழி, இனம் எதனாலும் மனிதரில் பிரிவினைப் பகையும், வெறுப்புப் பிளவும் ஏற்படாவண்ணம் ஒழுகுதல் நல்லொழுக்கம்.
Friday, February 14, 2025
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரத்தின் கருத்துகள்
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் - தொடர்ச்சி
Wednesday, February 12, 2025
ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் - நடைமுறை வாழ்க்கையில்
இந்த உதாரணம்தான் எனக்குத் தோன்றியது ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனாரின் ஆசார்ய ஹ்ருதயம் என்ற நூலின் வழியே ஸ்ரீவைஷ்ணவத்தைப் புரிந்துகொண்ட எனக்கு, முதன்முதலில் ஸ்ரீ நிகமாந்த மஹாதேசிகர் இயற்றிய ஸ்ரீமத் ரஹஸ்யத்ரய ஸாரம் என்ற நூலைப் படித்த பொழுது. மகாத்மா காந்திஜிக்கு conscience-keeper என்று ராஜாஜி அவர்களைச் சொல்வார்கள். அதாவது சிறிதும் தயக்கமின்றி, துணிந்து தாம் என்ன நினைக்கிறோம் என்பதை, காந்தியின் கருத்துகளைக் குறித்தே காந்தியிடமே வெளிப்படையாக விவாதிக்கும் தன்மை உடையவராய் இருந்தார், அதனாலேயே காந்தி அவரைத் தமக்கு முக்கியமானவராகக் கருதினார் என்பதை இந்த கான்ஷியன்ஸ் கீப்பர் என்ற சொலவு குறிக்கிறது என்று நினைக்கிறேன். அரசியல் உதாரணத்தைக் காட்டுவதா என்று நீங்கள் தயங்கவில்லை என்றால் எனக்குத் தோன்றுவது ஸ்ரீவேதாந்த தேசிகர் ஆகட்டும், ஸ்ரீஅழகியமணவாளப்பெருமாள் நாயனார் ஆகட்டும் இருவருமே ஸ்ரீவைஷ்ணவத்தின் இருபெரும் கான்ஷியன்ஸ் கீப்பராகத்தான் தோன்றுகிறார்கள். அதாவது இருவரிடமும் உள்ள ஓர் ஒற்றுமை வெளிப்படையாக உடைத்துச் சொல்லும் அபாரமான துணிச்சல், தாம் ஏன் சொல்கிறோம் என்பதற்கு அவர்கள் வைத்திருக்கும் வாதங்கள். எனக்கு இருவரும் இன்றியமையாதவர்கள். ஏன் இனி வருங்காலத்தில் இத்தகைய மாபெரும் மனிதர்களை நாம் சந்திக்க முடியுமா தெரியவில்லை. நமக்கு இருவரில் ஒருவரிடம் சாய்வு இருக்கலாம். ஒருவர் சொல்லும் கருத்தில் நமக்கு உடன்பாடின்றி விவாதம் எழலாம். ஆனால் அவர்கள் என்ன நினைத்தார்கள் என்பதை அப்படியே சொல்லியிருக்கிறார்கள் இருவரும் 700, 800 ஆண்டுகளுக்கு முன்னர்!
ஒருவர் பிரபத்தி நெறி பாகுபாடுகள், உயர்வு தாழ்வு, அந்தஸ்து, ஆண்பெண் பேதம், இல்லறம் துறவறம் வேறுபாடு எதுவும் கணக்கில்லை, அனைவருக்கும் உரியது, அதுவே நம்மாழ்வார் வழி நின்ற அனைத்து ஆசாரியர்களின் ஹ்ருதயம் என்று கூறுகிறார். அவர் ஆசார்ய ஹ்ருதயம் எழுதிய ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார். என்னைக் கவர்ந்தவர்.
மற்றவர் சாத்திரம், நியமம் என்பதில் சிறிதும் மாற்றம் இல்லை. பிரபன்னர்களுக்கும் சாத்திர நியமங்களின் வழி நின்று சரணாகத நெறியில் தொடர்வதுதான் சரியானது என்று கொள்கையுடைய ஸ்ரீவேதாந்த தேசிகர். விசிஷ்டாத்வைத தத்வத்தை விளக்கிப் பல நூல்கள் இயற்றியவர். மணவாள மாமுனிகள் இவர் இயற்றிய ரஹஸ்யத்ரய ஸாரத்திலிருந்து ஒரு பகுதியை மேற்கோள் காட்டி அபியுக்தரால் இவ்வாறு விஸ்தரேண பிரதிபாதிக்கப்பட்டது என்று கூறுகிறார். என்ன இடம் என்றால் உலகில் அனைத்துப் பொருட்களையும் கடவுள் உள் கலந்து உண்மையாகிய இயல்பால் மட்டுமே தாங்குகிறாரா அல்லது சங்கல்பத்தாலும் தாங்குகிறாரா என்பதற்கு விளக்கமாக வேதாந்த தேசிகர் காட்டிய விளக்கத்தை எடுத்துக் காட்டுகிறார். அதைப் போல் பெரிய திருமொழியில் நாராயண நாமம் குலம் தரும் என்று பாடியதற்கு விளக்கத்தை பெரியவாச்சான்பிள்ளை வியாக்கியானத்தில் ஒரு பகுதியை எடுத்துக் காட்டி ‘என்று அபியுக்தர் நிஷ்கர்ஷித்தார் (அறுதியாக நிலைநாட்டினார்)’ என்று கூறுகிறார் வேதாந்த தேசிகர்.
இருவரையும் சரியாகப் புரிந்து கொள்வதில்தான் இனிவருங்காலத்து வைணவம் பலன் பெறும் என்று தோன்றுகிறது. ஆனால் ஒரு யதார்த்தம் பாரதி காலத்திலிருந்தே கூட. என்னதான் ஆசார்ய ஹ்ருதயம் என்றாலும் எல்லாரும் புழக்கத்தில் பின்பற்றுவது ரஹஸ்யத்ரய ஸாரத்தைத்தான் என்று தோன்றுகிறது. ஒன்றுமில்லை. ரஹஸ்யத்ரய ஸாரத்திற்கு ஐந்து வியாக்கியானங்கள் உண்டு, சாக்ஷாத் ஸ்வாமி எழுதிய உரை இன்னும் சில உரைகள். விரிவான உரை ஸ்ரீஸாரபோதிநீ (அழகியசிங்கர் 42ஆம் பட்டம்). அதில் நினைவு தோயவே ஒரு சிந்தனை.
(தொடரும்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Wednesday, January 29, 2025
திருப்பராய்த்துறை மேவிய தவமுனிவர் சுவாமி சித்பவாநந்தர்
சுவாமி சித்பவாநந்தரின் நூல்கள் தமிழில் நமக்குற்ற பெரும்பயனாகும். இந்துமதக் கருத்துகள் குறித்த சிந்தனைகளின் தெளிவு சுவாமிகளின் எழுத்து, உரை அனைத்திலும் காணலாம். சுவாமிகளின் மொழிநடை மிகவும் அமைதியானதும், ஆழ்ந்ததும் ஆன நடை. படிப்பவருடைய மனப்பாங்கை மிகக் கவனம் கொண்டு சுவாமி சித்பவாநந்தர் அருளியிருக்கும் எளிமையும், அழகும் காலத்தை வென்று நிலைப்பது. தர்ம சக்கரத்தில் பல ஆண்டுகளாகப் பல அன்பர்கள் பல நேரங்களில் எழுப்பிய வினாக்களுக்கும் ஐயங்களுக்கும் சுவாமிகள் மிகவும் பொறுமையாகவும், கனிவுடனும் அருளிய விளக்கங்களும், பதில்களும் தொகுத்து (முன்னர்ப் பல சிறு பகுதிகளாக இருந்தன) மூன்று பகுதிகளாக ‘ஐயம் தெளிதல்’ என்று ஸ்ரீராமகிருஷ்ண தபோவனம், திருப்பராய்த்துறை 1997ல் போட்டிருக்கிறது. இது ஓர் அத்யாவசியமான பொக்கிஷம். மேலும் பல வேறு தலைப்புகளில் சுவாமிகள் சிறு சிறு நூல்கள் வரைந்துள்ளார். அவை அனைத்தும் இன்றும் எவ்வளவு முக்கியமான சேகரங்கள் என்பது அவற்றைப் படித்தாலே புரியும்.
1974 க்குப் பின்னர் எண்பதுகளில் பலதடவையும் தபோவனத்திற்குப் போவதும், பொதுவாக மகாசிவராத்திரி சமயத்தில், அங்குப் பிரம்மச்சாரிகளுடனான சத்சங்கமும், அதுபொழுது சுவாமிகள் முன்னிலையில் அனைவரும் அமர்ந்து நள்ளிரவும் தாண்டி நடைபெறும் தீவேள்வியும், கடவுளின் நாமம் துலங்க வீசும் காற்றும், மூன்றாம் சாமம் அனைவரும் அணியாகச் சென்று பராய்த்துறை மேவிய சிவனாரின் ஆலயத்தில் தொழுவதும் - இன்றும் நினைவுகளில் தெய்விகமாய்ப் பதிந்த அனுபவங்கள். சுவாமிகளுடைய பகவத் கீதை உரையும், திருவாசக உரையும் தமிழுக்கும் ஆன்மிகத்திற்கும் சிறந்த வரவுகள். ஆங்கிலத்திலும் கீதைக்குச் சுவாமியின் உரை இருக்கிறது. முதலில், 60கள் அல்லது 70களாய் இருக்கலாம், சுவாமிகள் பகவத் கீதையைத் தொடர்ச் சொற்பொழிவாக நேஷனல் பள்ளி மைதானத்தில் ஆற்றியதாகவும், அதைக் கேட்பதே ஒரு தனி அனுபவமாக இருந்தது என்றும் எந்தையார் கூறியதுண்டு. சுவாமிகளின் நூல்களில் ஸ்ரீதாயுமானவரின் பாடல்களை விளக்கி எழுதிய நூல்களைக் குறிப்பிட வேண்டும். மேலும் ஞானயோகம், ராஜயோகம், பக்தியோகம், கர்மயோகம் என்று நான்கு வழிகளுக்கும் சுவாமி விவேகானந்தர் ஆற்றிய சொற்பொழிவுகளும், எழுதிய உரைகளும் தனித்தனி நூல்களாக ஆனவற்றைத் தழுவி சுவாமி சித்பவானந்தரும் ஞானயோக விளக்கம், கர்மயோக விளக்கம் என்று எழுதியிருக்கிறார். அதில் கர்மயோக விளக்கம் என்னும் தொடக்கப் பத்தியே அவருடைய நடையில் திகழும் தெளிவையும், சுருக்கத்தையும், கருத்தின் உள்பரப்பையும் காட்டக் கூடியது:
“உயிர்களை இறைவனோடு இணைத்து வைப்பதற்கு ஏதுவாயிருப்பது யோகம். கையாளும் உபாயத்துக்கு ஏற்ப யோகத்துக்குப் பெயர்கள் பல உள. கர்மத்தின் மூலம் கடவுளை அடையுங்கால் அதற்குக் கர்மயோகம் என்று பெயர். கர்ம சாதனம் செய்கின்றவன் கர்ம யோகி. இம்முறையைக் கடைப்பிடித்தவர்கள் தொண்டர் என்றும் அழைக்கப்பட்டனர். அன்னவர்களின் சிறப்பைக் கூறும் நூல் தொண்டர் புராணம் என்று வழங்கி வருகிறது. இறைவனைத் தொழுகின்ற வகைகள் பல உள. அவைகளுள் தொண்டு தலையாயது. ஏனென்றால் அது ஸ்தூலமாக எல்லார்க்கும் தென்படுகிறது.”
இங்கு சுவாமிகள் கர்மத்தை யோகமாகச் செய்வதையே தொண்டு என்ற கருத்தோடு ஒன்றாக்கி விட்டார். பழைய நூல்கள் கர்மயோகம் தனியாகவும், தொண்டு என்னும் கைங்கரியம் வேறாகவும் சொல்லும் போது சுவாமிகள் கர்மயோகம் என்பதே தொண்டு என்று சொல்வது கருத்தை எவ்வளவு சுலபமாக ஆக்கிவிடுகிறது என்று பார்க்கலாம்.
அதேபோல் ஸ்ரீமத் பகவத் கீதைக்கு உரையெழுதும் போது அவர் எழுதும் வரிகள் மிகச் சுருக்கமாக, மிக விரிந்த பிரச்சனை ஒன்றிற்கான தெளிவான பதிலைப் பதிவு செய்துவிடுவதைப் பார்க்கலாம்.:
“வேதங்களில் பல பகுதிகள் மறைந்து போய்விட்டன, ஆனால் வேதங்களினின்று தெள்ளியெடுத்த உபநிஷதங்கள் நன்கு காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கின்றன. மெய்ப்பொருள் ஆராய்ச்சியில் உபநிஷதங்களின் போக்கு எத்தகையது என்று இயம்புவது பிரம்ம சூத்திரம், இதற்கு வேதாந்த சூத்திரம் என்பது மற்றொரு பெயர். உபநிஷதங்களில் அடங்கியுள்ள கருத்துக்களையெல்லாம் தெளிவுபட விளக்குவது பகவத்கீதை. ... உபநிஷதங்கள், பிரம்ம சூத்திரம், பகவத்கீதை ஆகிய் இம்மூன்று நூல்களும் பிரஸ்தானத்திரயம் என்னும் பெயர்பெறுகின்றன, முடிவான பிரமாணமாக அமைந்த மூன்று நூல்கள் என்பது அதன் பொருள். இம்மூன்றனுள் கருத்து வேற்றுமை கிடையாது, தத்துவ விளக்கம் அல்லது மெய்ப்பொருள் விளக்கம் இவைகளுள் முறையாக அமைந்திருக்கிறது. ஹிந்து மதத்துக்கு சாஸ்திரம் எது என்னும் கேள்வி எழுமிடத்துப் பிரஸ்தானத்திரயம் என்றே பதில் அளிக்கவேண்டும்.”
’ஞானயோக விளக்கம்’ என்னும் நூலில் சுவாமி சித்பவானந்தரின் எழுத்து சுவாமி விவேகானந்தரின் கருத்தை விளக்கியுரைக்கும் பகுதி:
“பாரமார்த்திக வாழ்வே மனிதனை இந்த உயர் நிலைக்குக் கொண்டுவருகிறது. ஒவ்வொரு மனிதனிடத்தும் அளப்பரிய ஆத்ம சக்தி புதைந்து கிடக்கிறது. அந்த ஆத்ம சக்தியை இயக்குவது ஞான வாழ்க்கை ஒன்றேயாம் . அது ஜீவிதத்தைப் பண்படுத்துகிறது. நலன் அனைத்தையும் அது உண்டுபண்ணுகிறது. தனக்கும் மற்றவர்க்கும் சாந்தத்தை வழங்குவது ஞான வாழ்க்கை ஒன்றேயாம். இந்த ஞான வாழ்க்கையானது யாரோ சிலருடைய தனியுரிமை என்ற எண்ணம் நெடுங்காலம் உலகில் உலவி வந்திருக்கிறது, யாரோ சில புரோகிதர்கள்தான் இதை ரகசியமாகக் காத்து வைத்திருந்தார்கள் என்றும், தேவாலயங்களில் இது பரம ரகசியமாகப் பாதுகாத்து வைக்கப்பட்டது என்றும் , தனியுரிமையாயிருந்த சில சாஸ்திரங்களில் மட்டும் இது குறித்து வைக்கப்பட்டிருந்தது என்றும், மற்றவர்களுக்கு விளங்காத கிரியா விசேஷங்களைக்கொண்டு சில தனிக் கூட்டத்தார் இதைப் பேணி வந்துள்ளார்கள் என்றும் - இப்படியெல்லாம் எண்ணி வந்திருந்த எண்ணங்கள் அடிபட்டுப் போய்விட்டன. உண்மையான ஞான வாழ்க்கை இனி உலகெங்கும் பரந்த பாங்கில் வளர்ச்சியடையப் போகிறது.”
திருப்பராய்த்துறை மேவிய தவமுனிவரின் எழுத்துகள் நம்மை மேம்படுத்தட்டும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Monday, January 20, 2025
கயிற்றில் நடக்கும் இதயம்
(முன்னர் 2008ல் வாழ்வியலோடு பூத்த தமிழ் என்னும் தலைப்பில் நான் இட்ட பதிவை இங்கு மீள்பதிவாக இடுகிறேன். இது 2008லேயே தமிழினி இதழிலும் வெளிவந்தது)
தமிழ்ப் பாடல் வரலாற்றில் பல நெடுநிலைச் செய்யுள், தொகை நூல்கள், தனிப்பாடல்கள் இவற்றைக் காண்கிறோம். ஆனால் பெரும்பாலும் அவை மற்றொரு கதையை, ஒரு மன்னனை, அல்லது ஒரு வள்ளலை, இப்படி ஏதாவது ஒரு முனை நோக்கிய படியே இருக்கும். சாதாரண அன்றாடம் வாழும் பலவகை மக்களை வைத்துப் பாடல் எழுவது மிக மிக அருமை. அதிலும் அந்த மக்களில் ஒருவரே பாடி அது பதிவு பெறுவது, காலத்தில் கடந்து வந்து நாம் காணக்கிடைப்பது என்பது அருமையிலும் அருமை. அப்படியும் சில பாடல்கள் குனிந்து ஒதுங்கி பதுங்கி மறைந்து ஒளிந்து காலத்தின் கண்களை ஏமாற்றி வந்துவிட்டன.
இந்த மாதிரி அபூர்வமாக வந்தது என்றாலே அது எத்தனை உணர்ச்சி பூர்வமான கதை சொல்லும்? ஏனென்றால் எளிய மக்களின் பாடல் என்னும் போது வாழ்வியலின் சுமை, வேதனை, வியர்வை, ஏக்கம் இவைதானே அங்கு சுரம் போடும். பாடலைத் தொட்டாலே பளீஇர் என்று உணர்ச்சி அடிக்கிறது.
ஒரு தெரு சந்தி. மக்கள் வந்து போகும் இடம். சந்தை, வண்டிகள்(மாட்டு வண்டி பல்லக்கு, குதிரை இப்படித்தான்) அந்தக் காலம் இல்லையா? வேதனை மட்டும் தான் எல்லாக் காலத்தும் ஒன்று. மற்ற காட்சிகள் எல்லாம் காலத்துக்குக் காலம் மாறுமே?
ஒரு கழைக்கூத்து. பறை ஒலிக்கிறது. கீழிருந்து பாங்கன் உருட்டி உருட்டிக் குரல் கொடுக்கிறான். மேலே கயிற்றில் ஒரு பெண் அநாயாசமாக நடந்து, அந்தரத்தில் தன்னையே போட்டு வாங்கி, தவறாமல் திரும்ப அந்தக் கயிற்றிலேயே வந்து அடைந்து நின்று, ஒயிலாக நடை பயின்று இத்தனையும் செய்கிறாள். கூட்டம் வைத்த கண்ணை வாங்கவில்லை. பெண்ணின் அழகு என்பதெல்லாம் தாண்டிச் செய்யும் சாகசத்தின் அபாயம் திக்க் என்கிறது. குரல் கொடுப்பவன் கணக்குப்படி இன்னும் வெகு நேரம் செல்லும் அந்தப் பெண்ணின் வியத்தகு கழை ஆட்டம். கொட்டும் அதற்கு ஏற்றாற் போல் சுருண்டு சுருண்டு விழுகிறது. ஆனால் திடீரென்று அந்தப் பெண் ஆட்டத்தை நிறுத்திவிட்டு கழையின் வழி இறங்கத் தொடங்குகிறாள். பாங்கனுக்கே புரியவில்லை.
என்ன இவள்? நல்ல விறுவிறுப்பு ஏறிய தருணத்தில், மக்களெல்லாம் எதையாவது போட்டுவிட்டுத்தான் போக வேண்டும் என்று எண்ணும் போது நிறுத்திவிட்டு வருகிறாள். தன்னை மீறி அவளாக வருகிறாள் என்றும் காட்டிக்கொள்ள முடியாது. அவர்களுக்கே உள்ள சங்கேத மொழியில் பதைத்துப் போய் வினவுகிறான். அவளோ சங்கடப் படுகிறாள். வெளிப்படையாகவே வேறு கேட்கத் தொடங்கிவிட்டான். எப்படிச் சொல்வாள்?
தான் சிறுமியாக இருந்தவள், இயற்கை நேரம் கெட்ட நேரத்தில் தன்னைப் பெரியவளாக ஆக்கிவிட்டது என்று தான் உணர்வதை எப்படி உணர்த்துவது? இந்த ஆண்களோ சரியான சமயத்தில் மூளை வேலை செய்யாது, குறிப்பறிய மாட்டாத நெடுமரமாக ஆகிவிடுவார்கள். மககள் கவனம் திரும்பும் முன் தெரிவித்தாக வேண்டும். இக்கட்டான நிலைமை...ச..நம் வாழ்க்கையும் இப்படியா? தாய் இருந்தால் என்ன சீராட்டு பாராட்டு? ஒன்றுமில்லை குழந்தாய்! இது இயற்கை. அஞ்சாதே. உடனே உற்றார் சுற்றம் அனைவரும் செய்தி அறிந்து.... ம்ம் அதெல்லாம் கொடுத்து வைத்திருக்க வேண்டும். இங்கு அரைவயிற்றுக் கஞ்சிக்கே ஆடிப்பாடி குதிக்க வேண்டியிருக்கிறது. அது போகட்டும். இந்த இக்கட்டை எப்படிச் சமாளிப்பது? தாயிருந்தாலாவது துணைக்கு வருவாள். ஆகா! என்று நினைவு வந்தவளாய் ஒரு பாட்டு வடிவில் செய்தியைச் சொன்னாள்.
கல்லுருகும் காலம்
கழுகறியும் அக்காலம்
வையகம் எல்லாம் மலர்ந்த பூ வண்டறியும்
ஓங்கல் அறியும்
உயர் கடலின் உள்ளாழம்
பாங்கனுக்குப் பாங்கன்
பயனறிவான் மன்ற
அறிவார் அறிவார்
அறியார் அறியார்
ஒரு காம்பு இருதலையும் பூ.
அறிவார் அறிந்தார். அறிவித்தது தமிழ். அந்தக் கழையணங்கும் கவலை தீர்ந்தாள். ஆனால் என்னவோ இந்தப்பாடல் நெஞ்சைப் பிசைகிறது. சீராட்டிப் பாராட்ட வேண்டிய ஒரு கணம், எல்லோரும் கைவிட்ட ஒரு பெண்குழந்தை......என்ன சமுதாயம்....என்ன வாழ்க்கை.....நல்லவேளை தமிழாவது போய்க் கைகொடுத்ததே!!
(பாடல் கிடைத்த நூல், பக்கம்--- பெருந்தொகை, பக் 423, மு இராகவையங்கார் தொகுத்தது, செந்தமிழ்ப் பிரசுரம், 1935--1936)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***