’பிராம்மணன் பிரம்மத்தில் தோய்ந்து நின்று தியானத்தில் ஆழ்தல் வேண்டும்’ என்று சொல்லிவிட்டு அவர் ஒரு குறிப்பிட்ட ஜாதியைக் குறிக்கவில்லை என்று சொன்னால் எப்படி? நாம் அறிந்ததெல்லாம் பிராம்மணன் என்றால் ஒரு ஜாதிக்கு உரிய பெயர்தானே? பின்னர் அவரே அடுத்த சுலோகத்தில் ‘உபாதிகளையெல்லாம் கடந்து நிற்கும் பிரம்மமே நான்’ என்று அறிந்தவர் யார்தான் வர்ணாச்ரமியாய் இருப்பார்? என்றும் கேட்கிறாரே ஸ்ரீஆதிசங்கரர், இது எப்படிப் பொருத்தமாகும்? அப்படி என்றால் பிராம்மணர் என்றால் பிரம்மத் தியானத்தில் ஆழ்ந்தவரைக் குறிக்கும் சொல்லா?
பிராம்மணன் என்பது தர்ம சாத்திரங்கள் கணக்கிலே, சமுதாயப் பிரிவுகளைக் குறிக்கும் வர்ணங்களில் ஒன்றாகிய ஒரு பிரிவுக்கான சொல்லாக இருக்கலாம். ஆனால் சங்கரர் அந்தச் சொல்லை இங்குப் பிரம்மத்தைத் தியானிப்பவர் பிராம்மணர் என்ற பொருளில் பயன்படுத்துகிறார். தாம் குறிக்கும் பொருளுக்கும் வர்ணாச்ரமக் கருத்துக்கும் சம்பந்தம் இல்லை என்று பட்டவர்த்தனமாகச் சொல்கிறார் நான்காவது சுலோகத்தில். அவர் சொல்வதற்குச் சான்று உபநிஷதத்திலும் இருக்கிறது. உபநிஷதமும் ‘பிரம்மத்தை அறிந்தவர் பிராம்மணர்’ என்று கூறுகிறது. சரி. பிரம்மத்தை அறியாதவர், அவருக்கு என்ன பெயர்? அவரைக் கிருபணர் (miserable) என்று கூறுகிறது. பிரகதாரண்யக உபநிஷதத்தில் (3.8.10) யாக்ஞவல்க்யர் கார்க்கியிடம் கூறுவதாக வருகிறது.:
“கார்க்கீ! அழியாததும், மாறாததுமான இதனை அறியாமல் ஒருவர் வாழ்ந்து முடித்துச் செல்வாரேயானால் அவரைக் கிருபணர் என்றுதான் சொல்ல வேண்டும். ஆனால் அதுவே வாழும் போதே ஒருவர் அழியாததும், மாறாததுமான இதனை அறிந்துவிட்டார் என்றால் அவரையே பிராம்மணர் என்று சொல்ல வேண்டும்” (க்ருபணர் - தவறவிட்டவர், வருந்தத் தக்கவர்)
‘யோ வா ஏதத் அக்ஷரம் கார்க்கி அவிதித்வா அஸ்மால்லோகாத் ப்ரைதி ஸ க்ருபண:, அத ய ஏதத் அக்ஷரம் கார்க்கி விதித்வா அஸ்மால்லோகாத் ப்ரைதி ஸ ப்ராஹ்மண:’
எனவே பிரம்மத்தை அறிந்தவர் பிராம்மணர், அறியாதார் கிருபணர் என்னும் உபநிஷதக் கருத்தையே இங்குச் சங்கரர் காட்டுகிறார்.
‘பிரம்மமாகவே நான் இருக்கிறேன் உண்மையில்’ என்று உணர்ந்தவர் யாரோ அவர் எல்லாமும் ஆகத் தாமே இருப்பதை உணர்கிறார் என்கிறார் சங்கரர்.
ஒரு பொருள் கனமாக இருக்கிறது. மற்றொரு பொருள் லேசாக இருக்கிறது. ஒன்று ஒரு நிறம். மற்றது வேறு நிறம். ஒன்று திரவம். மற்றது கல். ஒன்று காற்று. மற்றது வானம். ஒன்று உயிருள்ளது. மற்றது சடம். ஒன்று மிருகம். மற்றது பறவை. ஒன்று மனிதர். மற்றது நீர்வாழ் பிராணி. ஒன்று விரைவில் செல்லக் கூடியது மற்றது ஊர்ந்து நகரும். இப்படி உலகில் உள்ள பொருட்கள் அனைத்தும் பலவிதங்களிலும் வேறுபட்ட, வேறு வேறு இடங்களில் உள்ள, வேறு வேறு காலங்களில் உள்ள பொருட்கள். ஒரு பொருள் மற்ற ஒரு பொருளாக ஒரு நாளும் ஒரே சமயம் இருக்க முடியாது. ஒன்று மற்றொன்றாக ஆனாலும் அது ஒரு காலத்தில் ஒன்றாகவும் மற்றொரு காலத்தில் மற்றதாகவும் மாறலாம். நீர், பனிக்கட்டி உதாரணம். நீர், நீராவி. அப்படி இருக்கும் பொழுது பிரம்மாகத் தம்மை உணர்பவர் எங்ஙனம் அனைத்துப் பொருளாகவும் தாம் இருப்பதை உணர முடியும்?
பொருள்கள் எல்லாம் குணத்தில், இடத்தில், கனத்தில், காலத்தில், தன்மையில் வேறு வேறாக இருக்கின்றன. ஒன்றில் இருக்கும் ஒன்று மற்ற ஒன்றில் இல்லை. ஆனால் அனைத்துப் பொருளிலும் விலக்கே இன்றி ‘இருப்பு’ என்பது இருக்கிறது. அனைத்துப் பொருளும் ‘இருப்பு’ என்ற பொதுவின் கீழ் வருவதால்தான் அவை இருக்கவே செய்கின்றன. எல்லாத் தன்மைகளும் இருந்து ஆனால் அதில் இருப்பு என்பது இல்லாது போகுமாகில் அந்தப் பொருள் இல்லாத ஒன்றேயாகும். ‘இருப்பு’ என்ற ஆகப்பெரும் தத்துவம் அதுவே ‘ஸத்’ என்பது. ‘ஸத்’ ஆக இருப்பதுதான் ஸத்யம் என்பதை முன்னரே பார்த்தோம். ‘சத்யம்’ என்பதுதான் பிரம்மத்தின் மறுபெயர். பிரம்மமாகத் தம்மை உணர்பவர் இருப்பின் மயமாகவே தம்மை உணர்கிறார். இருக்கின்ற பொருள் எல்லாம் தாமாகவே இருப்பதை அவர் உணர்வதில் என்ன ஆச்சரியம் இருக்கிறது?
நிகழ்காலம், எதிர்காலம், இறந்த காலம் அனைத்துமாய்த் தாமே இருப்பதை உணர்ந்த அவருக்கு இருக்கின்ற காலத்தில் இல்லாத எதை எதிர்காலத்தில் அடையத் தேடப் போகிறார்? நிகழ்காலத்தில் இல்லாது எதிர்காலத்தில் அடையும் ஒன்று பல காரணங்கள், பல சக்திகள், பல காரணிகள் கூடிவந்து அதன் மூலம் நடக்கும் ஒன்று. பொதுவாக இந்திரியங்கள், சக்திகள், காரணிகள் போன்றவற்றை தேவர்கள் என்று சொல்வதுண்டு. அடையப்பட வேண்டிய ஒன்று தேவர்களின் தயவில் அடையப் படுகிறது என்று சொல்வார்கள். தாம் பிரம்மமே என்று உணர்ந்தவருக்கு எந்தத் தேவரின் தயவு தேவை? எந்தத் தேவர், அவர் என்றும் அடைந்து இருக்கும் பிரம்ம நிலையைத் தடுக்க முடியும்? அந்தத் தேவர்களுள்ளும் அவர்களுக்கு ஆத்மாவாய் இருக்கும் பிரம்மமாக அன்றோ இங்ஙனம் உணர்பவர் இருக்கிறார்?
ஆனால் அந்தத் தேவர்கள் வேறு, தாம் வேறு என்று பேதமுற நினைப்பவர் யாரோ அவர்களின் நிலைமை வேறு. அவர்களைத் தேவர்களும் விடுவதில்லை. தங்களுக்குக் கிடைத்த உற்ற பசுவாகக் கருதிப் பயன் கொள்கின்றனர்.
“நான் பிரம்மமே என்று அறிந்தவர் எவரோ
அவர்கள் அனைத்துப் பொருளுமாய் ஆகிநிற்கின்றார்.
அடையும் நிலையைத் தடுக்க ஒண்ணாது எந்தத் தேவ்ர்களாலும்.
ஏனெனில் அவரே தேவர்களுக்கும் ஆத்மா ஆகி நிற்கின்றார்.”
“தாமும் வேறு தேவர்களும் வேறு என்று கருதி உபாசிப்போர்
அந்த மனிதர் அறியார் பிரம்மத்தை;
தேவர்களுக்குப் பசுவாய் ஆகிநிற்கின்றார்.”
(அஹம் ப்ரஹ்மாஸ்மி யோ வேத ஸ ஸர்வம் பவதி த்விதம் |
நா பூத்யா ஈசதே தேவா: தேஷாம் ஆத்மா பவேத் ஹி ஸ: ||
அன்யோSஸாவஹம் அன்யோSஸ்மி இதி உபாஸ்தே யோSன்ய தேவதாம் |
ந ஸ வேத நரோ ப்ரஹ்ம ஸ தேவானாம் யதா பசு: ||)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Nice
ReplyDeleteசங்கரர் பிராமணன் என்பதற்கு தரும் விளக்கம் வர்ண தர்மத்தை சார்ந்து இருக்கவில்லை என்பது தெளிவாகிறது
ReplyDelete