Monday, January 5, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 03, 04

’அவர் சிங்கம் போன்றவர்’. ’சிங்கம் ஐயா அவரு’. என்றெல்லாம் கூறுவதைக் கேட்டிருப்போம். வாலைத் தூக்கிக்கொண்டு வலிமையான கால்கள் நான்கும், பிடரி மயிருள் கண்ணும், குதறும் வாயும் உள்ள ஒரு மிருகத்திற்கும், சாதுவாக அமர்ந்திருக்கும் இந்த நபருக்கும் ஏதாவது ஒப்புமை உண்டா? ஆனால் கேட்டோர் எல்லாம் சரி என்று கொண்டாடுகிறார்கள். அதாவது சிங்கம் எப்படி அஞ்சாமல் காட்டில் தன் இரையைத் தவறாது பாய்ந்து பிடிக்கிறதோ அப்படி இந்த நபர் சிறிதும் தடுமாறாமல் ஓர் உயர்ந்த கடினமான கார்யத்தைச் செய்திருக்கிறார். ஒருபுடை ஒப்புமையில் சில குணாதிசயங்களுக்கு உவமையாய்ச் சொல்வது அனைவருக்கும் புரிகின்ற ஒன்று. அப்படி ஏதாவது இந்த ஜீவனுக்கும் அந்தப் பிரம்மத்திற்கும் அறிவு மயமாய் இருத்தல் என்னும் விதத்தில் ஒப்புமை இருப்பதால் ஒருவிதத்தில் இந்த ஜீவனைப் பிரம்மம் என்று சொல்லலாமோ? அப்படித்தான் சொல்கிறார் போலும்! 

அறிவு இல்லாத சடப்பொருளை ஒப்பிட்டால் ஜீவன் அறிவு மயமான பொருள் அல்லவா? எனவே பிரம்மம் என்று சிறப்பாகச் சொல்வது பொருந்தும்தானே? அப்படிச் சொல்கிறாரோ சங்கரர் என்ற சந்தேகமே நமக்கு எழாத வண்ணம் நேர்முறையாகவும், எதிர்மறையாகவும் இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமாகவே இருக்கின்ற ஒன்றுதான் என்பதை வலியுறுத்துகிறார். எனவே ‘நான் உண்மையில் இந்தப் பரம் பிரம்மமாகவேதான் இருக்கிறேன்; இந்தப் பிரம்மமாக அன்றி வேறெதுவாகவும் இல்லை’ என்று ’நினைத்து’ வருவாயாக என்றுகூட சொல்லவில்லை; ’நம்பு’ என்று சொல்லவில்லை; பின்னர்? நன்கு கேள்வி கேட்டு மறுத்து மாற்றிச் சிந்தித்துப் பார்த்துத் திடமான முடிவுக்கு வந்து அதையே நன்கு உபாசனை செய்வதாகிய தியானத்தில் தோய்ந்து இரு என்கிறார். 

அதாவது மாலை மயக்கம். இருள் படரும் நேரம். போகிற வழியில் வளைந்து நெளிந்து ஒன்று கிடக்கிறது. ஐயய்யோ படம் எடுக்கப் போகிறதோ என்று பயந்து தயங்கி ஒரு நீண்ட கழியைத் தேடி எடுத்துத் தள்ளி நின்றுகொண்டு லேசாகத் தொட்டு அசக்கிப் பார்க்கிறீர்கள். ஒன்றும் சலனம் இல்லை. சரி செத்துவிட்டது போலும் என்றுதான் நினைக்கிறீர்கள். நம்பிப் போக முடியவில்லை. கடைசி நேரத்து வேகம் வந்து தாண்டும் நேரத்தில் இந்தா வைத்துக்கொள் என்று போட்டால் என்ன செய்வது என்று வயிற்றில் புளி. அப்பொழுது ஒருவர் அந்த வழியே வந்தவர் தம் வண்டியை நிறுத்தி க்ளாஸட்டிலிருந்து டார்ச் லைட்டை எடுத்து அதன் மேல் அடித்தவுடன் எல்லோரும் தைரியமாகச் சென்று பார்த்தால் வெறுமனே பழைய மணிக்கயிறு. அவ்வளவுதான். ஒருவர் வீராதிவீரராக அதை எடுத்துக் கையில் வைத்து ஆட்டி ‘வெறும் கயறு’ என்கிறார். இப்பொழுது உங்கள் நிலை என்ன? 

அதை முழுக்கவும் கயிறு என்று ஏற்பீர்களா? அல்லது கொஞ்ச சதவீதம் கயிறு. மிச்சம் இன்னும் பழைய பாம்பிற்கு வாய்ப்பு இருக்கிறது. ஓரளவிற்கு, ஒருவிதத்தில் கயிறு என்று ஏற்றுக் கொள்வேன் என்று சொல்வீர்களோ? இல்லையே. கயிறு என்ற நிச்சயம் வந்தவுடன் அது முழுக்கவே கயிறுதான். ‘கொஞ்சம் கயிறு; கொஞ்சம் பாம்பு; இரண்டும் ஒன்றாகச் சேர்ந்தால்..’ என்றெல்லாம் நீங்கள் பாட முடியாது. ஆனால் அப்படிப் பயந்தீர்களே! அக்குள் எல்லாம் வேர்த்துப் போய்விட்டதே! அந்தப் பயத்தின் பாம்பு என்ன ஆயிற்று? இந்தக் கயிறு அப்பொழுது எங்கு ஒளிந்திருந்தது? நம்முடைய விசாரமும், அதை நன்கு காட்டும் விளக்கமும் சேர்ந்து வஸ்து இன்னதுதான் என்று வெட்ட வெளிச்சமாகக் காட்டும் பொழுது percentage realisation ஆ நடக்கும்? அவ்வளவு நேரத்துக் கனத்த அஞ்ஞானம் என்றாலும் ஞானத்தின் அந்த ஒற்றைக் கணத்தில் தெறித்துத் தூளாகும் இருள் மூடிதானே அறியாமை என்பது? 

’இப்பொழுது ஓரளவிற்கு உபதேசமாகத் தெரிந்துகொண்டு விட்டாய். நல்லது. இப்படியே ஒரு மண்டலம் விடாமல் பூஜை செய்துகொண்டே இரு. உபாசனை செய். அப்படியும், அந்தக் கயிறுக்கு மனம் இரங்கி ஒரு நாள் தான் கயிறுதான் என்ற மெய்ஞ்ஞானத்தை உனக்கு நல்கினாலும் நல்கும். அப்பொழுதுதான் உனக்கு அது கயிறுதான் என்கிற மெய்யறிவு ஏற்படும்.’ என்று யாராவது கூறினால் எப்படி இருக்கும்? பரம்பொருளைப் பற்றிய ஞானத்தின் உதயமும் இப்படித்தான் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

‘நான் பரம் பிரம்மமேதான். பிரம்மத்தைத் தவிர பிறிதொன்றாய் நான் இல்லை. 

பிராம்மணன் பிரம்மத்தில் தோய்ந்து இவ்வண்ணமே நன்கு தியானத்தில் தோய்ந்திடுக.’ 

(அஹம் ஏவ பரம் ப்ரஹ்ம ந சாஹம் ப்ரஹ்மண: ப்ருதக் | 

இத்யேவம் ஸம் உபாஸீத ப்ராஹ்மணோ ப்ரஹ்மணி ஸ்தித: ||) 

இந்த இடத்தில் ஒரு சந்தேகம். என்னதான் மாயை, பிரம்மம், ஞானம் என்று பேசினாலும் பாருங்க சங்கரர் பிராம்மணன் என்று வந்துவிட்டார். அது என்ன பிராம்மணன்? ஏன் மற்ற மனிதர்களுக்கு இப்படி நடக்காதா? பிராம்மணன் தான் பிரம்மத்தில் தோயணுமா? தியானம் மற்றவர்கள் செய்ய முடியாதா? மனத்திற்குக் கொண்டாட்டம். சரியான பாயிண்ட் கிடைத்ததல்லவா? ஆனால் சங்கரர் மனத்திற்கு அந்த வாய்ப்பையும் நல்கவில்லை என்பதை அடுத்த சுலோகத்திலேயே தெளிவுபடுத்தி விடுகிறார். 

ஒருவர் வீட்டிற்குப் போகிறோம். நன்கு காற்றோட்டமாக விசாலமாக இடம் இருக்கிறது. உட்காரும் இருக்கைகளும் பாந்தமாகக் குறுக்கிடாமல் போட்டிருக்கிறார். நாம் என்ன சொல்கிறோம்? இடம் நன்றாக விசாலமாகப் பெரிதாக இருக்கிறது என்கிறோம். இன்னொருவர் வீட்டிற்குப் போகிறோம். மிகவும் சிறிய வீடு. என்ன சொல்கிறோம்? மிகவும் குறுகிய இடம். ஒருவர் போய் மற்றொருவர் எதிரில் வந்தால் இடித்துக் கொள்ள வேண்டும். இடமே இல்லை என்றெல்லாம் சொல்வோம். இங்கு இடம் ஆகிய ஆகாயமா, வெளியா சுருங்கியோ விரிவடைந்தோ ஆளைப் பொறுத்து மாறியது? கட்டுமானப் பொருட்கள், கட்டிடம் அமைந்த அமைப்பில்தான் வேறுபாடு. அதனால் ஆகாயம் எந்த விதத்திலும் மாறுவதில்லையே? ஆனால் நாம் கட்டிடம் சிறியது என்று சொல்வதில்லை. இடம்தான் சிறியது என்கிறோம். கட்டிடம் என்பது உபாதி. ஆகாயம் அந்த உபாதியால் வரையறைக்கு உட்பட்டது போல் தோன்றுகிறது. உபாதியின் வேறுபாடுகளை நாம் அப்பாற்பட்ட ஆகாயத்திற்கு ஏற்றிப் பேசுகிறோம் வாய்வழக்கத்தில். 

மழை பெய்கிறது. நின்றவுடன் வானம் தெளிவடைந்தது என்று சொல்கிறோம். வானமா குழம்பி நின்றது? மேகங்கள் வந்தன. மழை பொழிந்தது. முன்னரும் பின்னரும் வானம் இருந்தபடியேதான் இருக்கிறது. இறங்க வேண்டிய விமானம் வட்டம் இடுகிறது. கேட்டால் Sky is not clear. என்கிறார் ஓட்டுநர். அந்த வானம் பேச முடிந்தால் சொல்லும் நான் எப்படா கிளியர் இல்லாம இருந்தேன்? என்று. உபாதிகளால் ஏற்படும் தோற்றத்தை உண்மையின் மீது ஏற்றிப் பேசுவது மனிதர்களாக ஏற்படுத்திக்கொண்ட வழக்கம், பழக்கமே அன்றி உண்மைக்கும் அதற்கும் என்ன தொடர்பு? 

உடல் மனம், சமுதாயம், வழக்கம், உலகம், நெறிமுறைகள், வர்ணங்கள், ஆச்ரமங்கள், ஆசாரம், சம்ப்ரதாயம் எல்லாம் உபாதிகள். உபாதிகளைக் கடந்து இலகும் பிரம்மத்திற்கும் உபாதிகளுக்கும் ஒரு தொடர்பும் இல்லை. உபாதிகளால் ஒரு சிறிதும் தொடமுடியாத, உபாதிகளையெல்லாம் கடந்து இலகும் உணர்வே மயமாக, இடையீடன்றிப் பரந்த சித் ஆகாயமாக விளங்குவது அந்தப் பரம் பிரம்மம். அந்தப் பரம் பிரம்மமே நான் என்று அறிந்துகொண்ட பின்னர் எப்படி ஒருவர் வர்ணாச்ரமியாக இருக்க முடியும்? என்று கேட்கிறார் சங்கரர் அடுத்த சுலோகமான இதில். அப்பொழுது முன் சுலோகத்தில் சொன்ன பிராம்மணன் என்பது பிரம்மத்தை நன்கு தத்வ விசாரம் செய்து உணர்ந்து கொள்ளும் ஒருவரைக் குறிக்கும் சொல். பிரம்மத்தைத் தியானிப்பதில் ஈடுபடும் ஒருவர் பிராம்மணர். போன சுலோகத்தில் இந்தச் சொல்லைக் கண்டு மனம் கிளப்பிய கேள்விக்கு இந்தச் சுலோகத்தில் பதில். 

‘உபாதிகள் அனைத்தினின்றும் விடுபட்டதும் 

இடையீடன்றிச் சைதந்யமே தன் சுய உருவாய் ஆனதும் 

ஆன அந்தப் பரம் பிரம்மமே நான் என்று அறிந்தபின்னர் 

வர்ணாச்ரமியாய் ஆவதும் எங்ஙனமோ?” 

(ஸர்வோபாதிவிநிர்முக்தம் சைதந்யம் ச நிரந்தரம் | 

தத்ப்ரஹ்மாஹம் இதி ஞாத்வா கதம் வர்ணாச்ரமீ பவேத் || ) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

 



No comments:

Post a Comment