இந்த உலகில் எவ்வளவு பொருட்கள் இருக்கின்றன! எவ்வளவு உயிரினங்கள், மனிதர், எவ்வளவு பன்மை! ஆனாலும் எல்லாம் இருக்கிறது என்பது சைதன்யம் என்னும் உணார்வு, அறிவு இதற்குப் புலனாகித்தான் இத்தனையும் காட்சியாக வடிவெடுக்கிறது. அந்தச் சைதன்யம் என்பதை மொத்த கணக்கிலிருந்து நீக்கிவிட்டுப் பாருங்கள். அதாவது மனிதர் என்போர் இல்லாத சூழலிலும் பொருட்கள் இருக்கின்றன. பொருள் ஒன்று இல்லை என்றாலும் மற்றவை இருக்கின்றன. எனவே இந்த மொத்தக் காட்சியில் ஏதொன்று இல்லாது போனாலும் மற்றவை இருக்கும். ஆனால் அடிப்படையான சைதன்யம் இருந்து இவ்வளவையும் அர்த்தப் படுத்திப் பார்க்கவில்லையேல் இந்தக் காட்சியே இருக்காது. உலகம் என்ற இந்தப் பெரும் மேளாவே கிடையாது. ஏனெனில் அந்தச் சைதன்யம் அதுதான் ஒற்றைப் புள்ளியாகக் கடைசியில் நின்று அர்த்தங்களை உரு ஆக்குகிறது. உரு ஆன அர்த்தங்களைக் கோவைப் படுத்திச் சேமித்துக் கேட்கும் போது எடுத்துப் போடும் ஸ்டோர் கீப்பராக மூளை இருக்கிறது எனலாம்.
இந்த இடத்தில் ஸ்ரீஆதிசங்கரர் சொல்லும் கருத்தை நாம் சற்றுப் புரிந்துகொள்ள வேண்டும். நாம் பன்மை இருக்கிறது. கூடவே அந்தப் பன்மையைக் காணும் தத்துவமாக, அர்த்தப்படுத்தும் தத்துவமாக சைதன்யம், ஆத்மா இருக்கிறது என்று நினைக்கிறோம். ஆனால் சங்கரர் சொல்வதோ ஆத்மா இருக்கிறது. ஆத்மா மட்டுமே இருக்கிறது. பன்மையும், இரண்டும் இருப்பதுபோல் நினைக்கும் நாமும் எல்லாம் உண்மையில் இல்லாதவை. ஆனால் இருப்பது போன்ற தோற்றம் இதுதான் மாயை.
தோற்றம் என்று எப்படிச் சொல்ல முடியும்? தொடமுடிகிறது. தொட்டால் சுடுகிறது. ஜில் என்று இருக்கிறது. கையில் முள் குத்தினால் வலி கடும் துன்பம். ரத்தம். வாய்கூசாமல் தோற்றம் என்றால் என்ன அர்த்தம்? என்று நாம் நினைக்கிறோம். பொதுவாக மனமே இந்த மாயை என்ற கருத்தை எதிர்க்கிறது. ஆனால் நாம் ஒரு தவறு செய்கிறோம். என்ன? நாம் மாயை என்று நினைப்பது எதை? நடைமுறையில் ஏதோ ஒன்று இருப்பது போல் நிழலாடுகிறது. கிட்டே போனால் இல்லை. யாரோ ஒருவர் காம்பௌண்ட் சுவரில் ஏறிக் குதிப்பது போல் நிழலாகத் தெரிகிறது. ஏறிக் குதிக்கத் தொடங்கிப் பாதி கவிழ்ந்து கீழே ஏதோ பார்த்தபடி இருக்கும் உருவம். நாம் பதுங்கிக் கிட்டே போய் பார்த்தால் எங்கோ எதனுடைய நிழலோ ஒரு மாறிக் கலந்து அங்கு விழுகிறது. அந்தப் பொருள் எங்கோ காற்றில் அசைய இங்கு இந்த நிழல் மனித அசைவு போல் நம்மை மருளச் செய்துவிட்டது. இது ஒரு மாயத் தோற்றம் என்றால் புரிகிறது. ஆனால் சங்கரர் சொல்வது இந்தப் பொருளில் அன்று. நாம் எதைக் கெட்டியான சத்யம், உண்மை, அனுபவம் என்று சொல்கிறோமோ அதைத்தான் அவர் சொல்கிறார்.
சைதன்யம் அல்லது ஆத்மா என்பதற்குப் புலனாகி அதற்குப் பின்னர் கிடைக்கும் ரிப்போர்ட்தான் நம் உலகம். சைதன்யம் என்பதை நம்பியிராமல் தனிப்பட ஒரு நாளும் உலகம் ‘உள்ளேன் ஐயா’ என்ற ரிப்போர்ட்டைத் தராது. ஆனால் சைதன்யம் என்பது, பொருள் எதையும் நம்பி இல்லை, தான் இருப்பதற்கும், தான் இருக்கிறேன் என்று நமக்குத் தெரிவிப்பதற்கும். அது சுதந்திரமாகத் தன்னில் தானே தன்னை இருந்து காட்டும் ஒன்று. அதனால்தான் ஸ்ரீதாயுமானவர் சொன்னார் : ‘அது ஆனால் அது ஆவர். அதுவே சொல்லும்”. தனிப்படத் தன்னளவில் உண்மை என்று தன்னைக் காட்டாத உலகை மாயையின் விளைவு என்கிறார் சங்கரர்.
யா - எது, மா - இல்லையோ, எது உண்மையில் இல்லையோ அது மாயை என்ற பொருளிலும், மாயை என்றால் விசித்திரமானது என்ற பொருளிலும் பொருத்தமாக வருவது. இதைத் தெளிவுபடச் சுவாமி விவேகானந்தர் சொன்னார்: "Maya is a statement of facts" என்று. ‘வாஸ்தவங்களை நிரல்பட வைத்த வாக்கியம் மாயை’ என்றார்.
ஆத்மா மட்டுமே இருக்கிறது. அது பிரம்மமாகவே இருக்கிறது. ஜகத் என்பது மித்யையே. ஜீவன் பிரம்மத்தைத் தவிர பிறிதொன்றாகவும் இல்லை - என்று சொல்லும் ஸ்ரீஆதிசங்கரர் தெய்வங்களைக் குறித்தும் பல பாடல்களைப் பாடியிருக்கிறார். உபாதிகளால் ஆன நடைமுறை உலகான வியாவகாரிகத்தில் (அதாவது வியவகாரம் நடைபெறும் உலகில்) எப்படி உபாதிகளால் கட்டமைத்தது போல் காட்டப்பட்டுப் பல பொருட்கள், பல உயிர்கள் என்று காட்சி தெரிகிறதோ, எப்படி பிரம்மம் அல்லது ஆத்மா ஒன்றே இருக்கிறதோ அதுபோல் சகுணமாகப் பல தெய்வ வடிவங்கள் நம் பக்திக்குப் புலப்பட்டாலும் அவை எல்லாவற்றுக்கும் அடிப்படையாக உள் சத்தியமாக என்றும் இருப்பது அதே பிரம்மம் அல்லது ஆத்மாவே என்பது அவர் கருத்து. எனவே விஷ்ணு என்றாலும், சிவன் என்றாலும், நான்முகன் என்றாலும், சக்தி என்றாலும், பிள்ளையார் என்றாலும், சுப்ரமணியன் என்றாலும் அல்லது எந்தத் தெய்வ உருவை ஒருவர் வணங்கினாலும் உண்மையில் பிரம்மத்தைத்தான் பல வடிவுகளும், பல பெயர்களும் தந்து பக்திக்கு இலக்காக ஆக்குகிறார்கள். கடைசியில் நிலைநின்ற ஒரே சத்யமான பிரம்மத்திடம் அழைத்துச் செல்வதால் அவையெல்லாம் ஒரே இலக்கை நோக்கிப் போகும் பலவித பக்தி மார்க்கங்கள் என்பது ஸ்ரீஆதிசங்கரர் காட்டும் ஒருங்கிணைந்த பார்வை. எனவே தெய்வங்களின் பெயர்களைச் சொல்லி அவர் பாடும் போதும் அவர் உணர்த்தவரும் உள்ளுறைக் கருத்து என்னவோ அதே ஏக சத்யமான பிரம்மமே. இதைப் புரிந்துகொண்டால் இந்தச் சுலோகத்தையும் நாம் புரிந்துகொள்ள முடியும்.
“அந்த விஷ்ணுவே நான் அந்த விஷ்ணுவே நான்
அந்த விஷ்ணுவே நான் ஹரியேதான்;
நான் கர்த்தா நான் போக்தா என்பதெல்லாம்
அந்த அவித்தையில் எழுந்து நிற்பவைதாம்.”
(அஹம் விஷ்ணுர் அஹம் விஷ்ணுர் அஹம் விஷ்ணுர் அஹம் ஹரி: |
கர்த்ரு போக்த்ரு ஆதிகம் ஸர்வம் தத் அவித்யோத்தம் ஏவ ச || )
விஷ்ணு - அனைத்தினுள்ளும் நுழைந்து இருப்பதால் பிரம்மம் விஷ்ணு என்று அறியப்படுகிறது. அனைத்தையும் தன்னுள் அடங்க இருப்பதால் ஹரி என்று அறியவேண்டும். கர்த்ரு - நான் செயல் புரிபவன்; போக்த்ரு - நான் போகம் அனுபவிப்பவன்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment