எல்லாப் பொருளுக்கும் அடிப்படையான இருப்பைத் தருவதும், தன்னை அறியத் தானே ஒளியாக இருப்பதும் ஆன அந்த பிரம்மமே நான் என்று நினை என்றதும் எவ்வளவு எதிர்ப்பு கிளம்புகிறது! எங்கு? நம் மனத்தில்தான். மனமே Revolt செய்யத் தொடங்கிவிடுகிறது. இந்தச் சிறு உடம்பில், இந்த அடையாளம் உள்ள, இந்தப் பெயரும், இந்தப் பிறந்து வளர்ந்து அன்றாடம் ஏதோ வாழ்க்கையில் இருக்கும் நீ அந்தப் பிரம்மமா? இதை எழுதும் போதே உனக்கு முதுகு வலிக்கவில்லை? அதிக நேரம் உட்கார்ந்ததால் கால் மரத்துப் போனது போல் ஆகவில்லை. பசி எடுக்கவில்லை? வாசலில் காலிங் பெல் சத்தம். யார் என்று பார்க்க எழுந்து போகவில்லை? இதுதான் நீ. ஏதோ அல்ப சொல்ப ஆற்றலும் ஆற்றலின்மையுமாய் அவதிப்படும், அதற்கு நடுவில் கொஞ்சம் சந்தோஷப்படும் ஒரு பிராணி. அப்படிப்பட்ட நீ எல்லாப் பொருளுக்கும் இருப்பை நல்கும் பிரம்மமே ஆவாயா? என்ன கற்பனை செய்தாலும் ஓர் அளவு வேண்டாம் - எல்லாம் நம் மனமே கிளப்பும் கடும் எதிர்ப்பு.
இவ்வாறு ஆட்சேபம் எழுப்பும் மனத்தை முழுவதும் மதித்து எதிர்கொண்டு அதன் மறுப்பை, அதற்கான தெளிவை, மனத்தோடு உரையாடிப் பேசச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். அவ்வாறு பேசவும் கற்றுத் தருகிறார் இந்தச் சுலோகத்தில். அந்தப் பரம் பிரம்மமே நான் என்று கண்ணை மூடிக்கொண்டு முரட்டுத்தனமாக நினைக்கச் சொல்லவில்லை. மனம் எழுப்பும் மறுப்புகளுக்கு விடையளித்து மனத்தைத் தெளிவுபடுத்தக் கற்றுத் தருகிறார்.
சித்தம் எழுப்பும் மறுப்பு என்ன? எலும்பு, தோல், தசை, இவ்வளவு உயரம், இவ்வளவு எடை, உணவு, உள்ளம், உரையாடுவது என்று இருக்கும் ஒரு பிராணிதானே நீ என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறது. நம் அன்றாட அனுபவமும் அதை ஆம் என்று ஏற்கிறது. ஆனால் தத்துவ விசாரமாக நாம் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தால் நாம் யார் என்று தேருகிறது? இந்த உடலா? மனமா? உறங்கி விழித்து உண்டு உலவி உரையாடி, செயல் புரிந்து பின்னர் உறங்கும் இந்தப் பிராணியா நாம் என்னும் சுய உருவம்? அன்றாடம் இதை அப்படியே ஏற்று அடுத்த வேலை என்று போனாலும், அமைதியாக ஆழமாகத் தீவிர தத்துவ ஆய்வு என்று சிந்தித்தால் என்ன கிடைக்கிறது? நாம் சித் அல்லது அறிவின் அல்லது உணர்வின் வடிவமாக அன்றோ இருக்கின்றோம்? அந்த உணர்வுமயமான நிலையில் நின்று பார்த்தால் என்ன முடிவு வருகிறது? பொருட்கள், இந்த உலகம் எல்லாம் நமக்குள் அடங்கிப் போக, அனைத்தின் அடிப்படையாகவும், ஆகப்பெரும் சத்யமாகவும் விளங்கும் அறிவு, இருப்பு என்பதுதானே நம் உண்மையான சுயம்!
’அன்றாடம்’ சொல்வதைச் சான்றாகக் கொள்வதா? ஆழ்ந்த தீர்க்கமான ஆராய்ச்சி சொல்வதைச் சான்றாகக் கொள்வதா? ’அன்றாடம்’ சொல்கிறது இந்த உலகம் தட்டையானது, நீள நடந்தால் போய்க்கொண்டே இருப்பது. ஆனால் ஆராய்ச்சி சொல்வதோ இந்த உலகம் உருண்டை. நீள நடந்தால் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர வேண்டும் என்பது அன்றோ! அன்றாடம் என்பது நடைமுறை அவசரத்துக்கு ஒத்துவரலாம். ஆனால் கடைசி உண்மை அதுதான் என்று அடம்பிடிப்பது அறிவியல் அன்றே! அறிவியல் பூர்வமான ஆன்மிக வழி என்பது அத்வைதம். அதை உலகுக்கு நல்கிய பேருபகாரி ஸ்ரீஆதிசங்கரர். அறிவியல் ரீதியாக மனத்தை எதிர்கொள் என்கிறார்.
அறிவின் மயமாக, சித்ரூபமாக இருக்கும் ஆத்மா நாம். சித் ரூபமாக, அறிவின் மயமாக நாம் உண்மையில் இருப்பதால் ஆகாயம் போன்று எங்கும் பரந்த நிலை நம் சுய நிலை. எனவேதான் சித் ஆகாசம், சிதாகாசம் என்று சொல்வதும் வழக்கம். ஆகாசத்தில் இது சின்ன ஆகாசம், அது கொஞ்சம் பெரிய ஆகாசம் என்றெல்லாம் பாத்திகட்ட முடியாது. ‘மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா? என்றான் ஸ்ரீராமகிருஷ்ண முனி’ என்கிறார் பாரதியார். எனவே நான் இந்த அன்றாடம் புழங்குகின்ற ஆளான இந்தப் பிராணி என்ற நிலையில் வைத்துப் பார்க்கவில்லை. ஆழ்ந்த தத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேரும் சான்றான பார்வையில் வைத்து நினைக்கும் போது அந்தப் பரம் பிரம்மமாகவே இருக்கின்றேன் நான் - என்று தொடர்ந்து சிந்திக்கச் சொல்கிறார் ஸ்ரீசங்கரர். ஒரு சின்ன பாத்திரத்தில் இருக்கும் ஆகாயம் தன்னை அந்தப் பெருத்த வான்வெளியே தான் என்று சொல்லுமேயானால் அதைப் பொய் என்று எப்படி மறுக்க இயலும்? சின்ன பாத்திரத்து ஆகாயம், அதைக் கடந்த பெரும் ஆகாயம் என்ற பெருமை சிறுமை, விரிவு சுருக்கம் எல்லாம் நம் பார்வையில் அன்றாடக் கருத்தில் இருக்கின்றதே அன்றி அந்த வஸ்துவில், அந்த ஆகாயம் என்ற பூதத்தில் இல்லையே! அதைப் போன்றுதான் அறிவின் உண்மையிலும் என்பதை உணர்த்த வேண்டித்தான் சித் ஆகாசம் என்று ஞானிகள் சொல்கிறார்கள். ஆகாயம் போல் எங்கும் பரந்து அறிவாகி நிற்கும் ஒன்றாய் இருப்பதால் நான் அந்தப் பரம் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்று உறுதியான நினைவைக் கைக்கொள்.
சரி. அந்த அறிவு மூளை என்ற உடலின் உறுப்பு செய்யும் வேலை அவ்வளவுதானே. மூளை இயங்கினால் அதை மனம், அறிவு, உணர்ச்சி என்றெல்லாம் சொல்கிறோம். இயக்கத்தில் உண்மையாய் இருக்கும் ஒன்று. ஆனால் இயங்குவதற்கு உடலின், உயிரியலின் திசுக்கள் அல்லவா அடிப்படை? உடல் என்ற பொருளின் சம்பந்தம் இன்றித் தனியே அறிவு என்றோ ஆத்மா என்றோ கூற முடியுமா? மனமும் விடுவதாக இல்லை. அதன் கேள்வி எதற்கும் தெளிவாகப் பதில் சொல்லச் சங்கரரும் தயங்குவதில்லை.
மூளைதான் மனம் என்றால், உடலின் இயக்கம்தான் அறிவு என்றால், உடலின் இயக்கம் அறிவை நம்பிப் பெறுகின்ற அனுபவம் ஆகவோ, கருத்தாக ஆகவோ இருக்கக் கூடாது. மூளைதான் மனம் என்றால் மூளையின் இயக்கம் அல்லது அமைப்பு மனம் என்பதைச் சாராமல் முதலில் எய்தப்பட வேண்டும். ஒருவர் மூளையில் அறுவை சிகிச்சை நடைபெறும் போது கூட அது மற்ற ஒருவரின் மனம் முன்னால் நின்று உணர்பதிவுகளை வாங்கிப் புரிந்துகொண்டு இது மூளை, மூளையில் இன்னது பிரச்சனை என்று சிகிச்சையோ ஆய்வோ நடைபெறுகிறது. யாருக்கும் வேண்டாம் என்று கருவிகள் மயமாகக் கணக்கெடுப்பு நடக்கும் போதும் கருவி, கருவிகளின் தகவல் அனைத்தையும் மனத்தின் சார்பு இல்லாமல் வெறும் மூளை என்ற உடலின் உறுப்பு தானாக இயங்கி முடிவுகளைச் சொல்வதில்லை. மனம், அறிவு என்பதுதான் உடலுக்கும் முந்தி நின்று, உடலைத் தொழில்கொண்டு பதிவுகளைப் படித்து அர்த்தப்படுத்தி முடிவுகளை எய்துகிறது. மனம், அறிவு சாராமல் உலகம் பற்றிய அறிவு என்பது தன்னளவில் சுயமுரணாக அறிஞர் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கிறது.
அதுவும் நவீன அறிவியல் உலகில் மரணித்த பொழுதிலிருந்து சில மணி நேரம்வரை ஆஸ்பத்திரி ரீதியாக இறந்துவிட்ட நிலையில் இருந்தோரை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வுகள் பலவும் உடலின் சார்பு இல்லாமல் தனித்து உணர்வின் பிரசன்னம் இருந்ததை, மரண நிலையிலிருந்து மீண்டு வந்தோரின் உடனடி மொழிவுகளைப் பதிவு செய்து ஒப்பு நோக்கிக் கண்ட தரவுகள் புதிய செய்தியைச் சொல்கின்றன. உடல் சார்ந்த உலக அனுபவம் என்பது முடிந்த முடிபு இல்லை. அதைத் தாண்டிய உணர்வுமயமான நிலை ஒன்று இருக்கிறது. அதில் சென்ற உயிர், எல்லைகளைக் கடந்த நிலைக்குப் போய்விடுகிறது என்ற கருத்து மிகவும் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது.
மதங்கள் நம்பிக்கைகள் சார்ந்தவையாய் இருக்கலாம். என்றோ யாரோ சொன்ன எழுதிய நூல்களின் சார்பு கொண்டவையாய் இருக்கலாம். ஆனால் ஆன்மிகம் என்பது அறிவியல், ஆய்வுப் பரிசோதனைகளால் மேலும் மேலும் பலம் பெறுகிறது என்பது ஒரே நேரத்தில் ஊக்கமும், புதிருமாய் விளையும் சூழல் நம் காலத்திய செய்தி. இதை நூற்பா இட்டு உரைப்பதைப் போல் கூறுகிறார் சங்கரர். எதன் தொடர்பும், எதன் சார்பும் இன்றித் தான் தனியாய்த் தனித்த நிலையாக இருப்பதால் அந்தப் பரம் பிரம்மமாகவே இருக்கின்றேன் நான் என்று கருதிப் பழகு என்கிறார்.
நம்முடைய மனம் அவ்வளவு லேசில் அடங்குமா என்ன? மேலும் கேட்கிறது. அப்படியே நான் கருதினாலும் என்ன, அந்த நேரத்திற்கு அந்த நினைவு இருக்கலாம். ஆனால் அடுத்த ஓர் அவசரத்தில் அந்த நினைவு மாறிப் போய் பழையபடியான கருத்துகள்தாமே வரப்போகின்றன? எந்தக் கருத்தும் நிலைத்து நிற்கப் போவதில்லையே. ஒரு மனநிலை அடுத்த மனநிலையால் பாதிக்கப்படத்தானே படுகிறது. அதுவும் ஒரே மட்டத்தில் இருக்கும் மனநிலைகள் மாறி மாறி வருவதால் அவ்வளவு பாதிப்பு இல்லை. ஆனால் மிகவும் தத்வார்த்தமான உயர்ந்த மனநிலையிலிருந்து அடுத்து அதளபாதாளமான ஒரு மனநிலைக்கு வருகிறது என்றால் மனநோவும் அதற்கு ஏற்றாற்போல் அதிகம் தானே? அதற்குப் பதில் சொல்கிறார் சங்கரர்.
மனநிலையின் மாற்றம் என்பது வேறு. மாறாத உணர்வுநிலை என்பது வேறு. எவ்வள்வு மனநிலைகள் மாறினாலும் அவற்றுக்கு அடிப்படையாய் இருக்கும் உணர்வின் நிலை என்பது மாறுவதே இல்லை. அந்த உணர்வுதான் விழிப்பிலும் சரி, கனவு நிலையிலும் சரி, ஆழ்ந்த துயிலிலும் சரி மாறாத அடிப்படையாய் இருப்பது. அந்த உணர்வு பாதிக்கபடாதது. மூளை பாதிப்பு அடைந்த பைத்தியம் ஒருவருக்கும் கூட உணர்வு அடிப்படையில் உணர்வு என்றபடியே இருக்கிறது. அந்த உணர்வு அடிப்படையான மாறாத் துணையாக இருப்பதால்தான் உள இயல் மருத்துவம் என்பதே இயலுகிறது. அந்த உணர்வின் மயமான சித் ரூபமான ஆத்மா அந்தப் பரம் பிரம்மமே. அந்தப் பிரம்மமே நான் என்று நன்கு துணிந்து நிச்சயம் கொண்டு நினைத்துப் பழகு என்கிறார் சங்கரர். ஆழநெடுங்காட்டின் கனத்த ஊழி இருளில் சூரியனைப் பந்தமாகப் பிடிக்கும் அன்பின் உருவாய்த் திகழ்பவர் ஆதிசங்கரர்.
”சித்தமே! சித் உருவமாய் நான் இருப்பதாலும்,
சிறிதும் பிறவற்றோடு சமபந்தமே அற்றதாலும்,
ஒருபோதும் ஒன்றாலும் பாதிக்கப்படாத ஒன்றாய் இருப்பதாலும்,
நிச்சயம்கொண்டு இவ்வண்ணமே நினைப்பாய்
நான் அந்தப் பரம் பிரம்மமேயாக இருக்கின்றேன்.”
(அஹம் ஏவ பரம் ப்ரஹ்ம நிச்சிதம் சித்த சிந்த்யதாம் |
சித்ரூபத்வாத் அஸங்கத்வாத் அபாத்யத்வாத் ப்ரயத்நத: ||)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Very nice. Acceptable truth about மனம்
ReplyDelete