Saturday, January 10, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 14

உபாதி என்ற கருத்தைக் கொஞ்சம் கவனமாகப் புரிந்துகொள்ள வேண்டும். பால்கனியில் உட்கார்ந்திருக்கிறோம். நீல ஆகாயம் விரிந்து தெரிகிறது. ஆனால் இரும்புச் சன்னல் வழியாகப் பார்க்கும் போது சதுர ஆகாயம், பக்கத்தில் ஒரு சின்ன மலர் வடிவிற்கு ஓர் ஆகாயம், பக்கத்திலேயே ஒரு பறவை டிசைனில் ஓர் ஆகாயம் என்றும் நம்மால் பார்க்க முடிகிறது. உடனே நாம் யாரும் ஆகாயங்கள் பல இருக்கின்றன. ஓர் ஆகாயம் சதுரமானது. இன்னொரு ஆகாயம் வட்டமானது. இன்னொன்று பறவை போன்றது என்று நினைப்பதோ, வாதம் செய்வதோ இல்லை. இருப்பது ஓர் ஆகாயமேதான். அந்த ஆகாயம் இரும்பு ஜன்னல் என்ற உபாதியின் வழியே தெரியும் போது பலவாகத் தெரிகிறது. பேதம் உபாதிகளிலேயே அன்றி ஆகாயத்தில் அன்று. இதில் நமக்குக் குழப்பம் வருவதில்லை. இதைத்தான் பரம சத்யமான பிரம்ம விஷயத்தில் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். உபாதிகளின் பேதத்தால் பல பொருள்களாகக் காட்சியளிக்கிற அந்த ஒரே இருப்பு, ஸத் பொருள், பரம் பொருள் என்று கூறுகிறார். பொறுமையாகப் பலமுறை யோசித்தால் நமக்கு இது புரியவரும். உபாதிகளின் பன்மையால் இந்த உலகமாகக் காட்சியளிப்பது போல் அந்தப் பிரம்மம், பக்தி அனுபவங்களின் பன்மையால் பல தெய்வ வடிவுகள் தாங்கிக் காட்சியளிக்கிறது என்று சொல்கிறார். 

மிகப்பழைய காலத்திலேயே இந்தக் கருத்தை ரிக்வேத ரிஷிகள் நன்கு வலியுறுத்திச் சொல்கிறார்கள். ஆதி வேதக் கருத்தையே ஸ்ரீஆதிசங்கரர் அகலமும், ஆழமுமாக நன்கு நிறுவுகிறார்.

மிகப் பழமையானவை வேதங்கள். அதிலும் ரிக்வேதம் முக்கியமானதும், முந்தியதும் ஆகும். அதில் வரும் ஒரு ஸூக்தம் (திருமொழி) சொல்கிறது. 

“இந்திரன், மித்திரன், வருணன், அக்நி, திவ்யமான சிறகுடைய கருத்மான், அக்நி, யமன், மாதரிச்வான் எனக் கூறுவர். உள்ள்து ஒரே சத்யம். தெயவ தத்துவம் அறிந்தோர் அதைப் பலவிதமாய் விவரிப்பார்கள்” 

( இந்த்ரம் மித்ரம் வருணம் அக்நிம் ஆஹு: 

அதோ திவ்ய: ஸ ஸுபர்ணோ கருத்மாந் | 

 ஏகம் ஸத் விப்ரா பஹுதா வதந்தி 

அக்நிம் யமம் மாதரிச்வானம் ஆஹு: ||) 

(ரிக்வேதம், மண்டலம் 1, ஸூக்தம் 164, மந்திரம் 46) 

இதற்கு உரையெழுதும் ஸ்ரீசாயனர் விப்ரா என்பதற்கு ‘மேதாவிகள், தேவதா தத்வம் அறிந்தோர்’ என்று விளக்கம் தருகிறார். அதாவது Theologians. ஒன்றுதானே இருக்கும் பரம் பொருள் (ஸத் வஸ்து). அதில் பன்மையாகச் சொல்வது யாங்ஙனம்? என்று சாயனர் கேட்டுக் கொண்டே தம் உரையைத் தொடங்குகிறார். ‘கதம் ஏகஸ்ய நாநாத்வம் இதி உச்யதே’. 

ஒன்றையே பலவிதங்களில் அதன் பயன்கள் சூழ்நிலைகளைப் பொறுத்துப் பார்க்க முடியும் என்பதற்கு உதாரணமாக இரண்டு விஷயங்களை எடுக்கிறார் சாயனர். ஒன்று விண்ணில் ஒளிரும் சூரியன். மற்றொன்று மண்ணில் தழல்விடும் நெருப்பு. பரமாத்மா ஆகிய பிரம்மத்திற்குக் குறியீடுகளாக நாம் புரிந்துகொள்ளும் வகையில் நம் வாழ்வில் நிலைத்த உதாரணம் இவை. 

’ஸூர்யஸ்ய ப்ரஹ்மணோSநந்யத்வேந ஸர்வாத்ம்யம் உக்தம் பவதி’ 

‘ஜ்யோதிஷீ இதி மத்வாக்நேர் ஏவ ஸர்வாத்ம்ய ப்ரதிபாதக:’ 

கல்விக் கடலாக விளங்கும் ஸ்ரீஆதிசங்கரர் ஆதி வேதக் கருத்தை எவ்வண்ணம் அசைக்க முடியாமல் நிலைநாட்டுகிறார் என்பதை நாம் உணர வேண்டும் என்பதற்காக இவையெல்லாம் எழுதுகிறேன். அன்று ஸ்ரீஆதிசங்கரர் போட்ட அடிப்படைதான் பின்வந்த ஆசாரியர்கள் அனைவரும் பயன்பெற்றது சரித்திரம். இன்று நாம் நம் நாடு அனைத்து நெறிகளையும் மதித்துப் போற்றி நடக்கும் நாடு என்று அடையும் பெருமிதத்திற்கு முதல்கண் நன்றி ஆதிசங்கரருக்கே உரித்தானது. இந்த இடத்தில், சங்கரரைப் பற்றிக் கூறும்போது சுவாமி விவேகானந்தர் ‘சங்கரரின் இதயம் விசாலமில்லை’ என்பதுபோல் கூறிய கருத்து எனக்கு உடன்படாத கருத்தாகும் என்பதைச் சொல்லத் தோன்றுகிறது. உலகுக்கு நன்மை செய்தவர் என்று கணக்கெடுத்தால் நிச்சயம் அதில் முன்னணியில் இருப்பவர் சங்கரர். ’சங்கரம் லோகசங்கரம்’ என்று அவரைப் பற்றிய போற்றி உரை மிகவும் உண்மையானது. ரிஷிகளின் தத்துவப் பார்வையை என்றுமே நாம் இழக்க முடியாத அளவிற்கு நிறுவியவர் ஸ்ரீஆதிசங்கரர். 

மீண்டும் நாம் ஆகாயத்தைப் பற்றிச் சிந்திப்போம். ஏனெனில் ஆகாயம்தான் உணர்வுமயமான ஆத்மநிலையை நாம் புரிந்துகொள்ள நமக்கு வாய்த்த இயற்கையின் உதாரணம். காலையில் ஆகாயம் தெளிவாக ஒளிர்கிறது. இரவு கருமை பூசி, அங்கங்கே விண்மீன்கள் அந்த இருட்டை அதிகமாகக் காட்டியபடி இருக்கிறது அதே ஆகாயம். மேகங்கள் அலைந்தால் தெளிவில்லாமல் தெரிகிறது. மழை பொழியுமுன்னர்க் கார்மேகம் திரண்டு இருண்டு மின்னல் வெட்டுகிறது. இவ்வளவு நிலைமாற்றங்கள் ஆகாயத்திலா நடக்கின்றன? ஆகாயமா இவ்வளவு மாற்றங்களையும் அடைகிறது “ ஆனால் அவ்வண்ணம் சொல்கிறோம். 

கண்ணுக்குத் தெரிந்த பிரத்யக்ஷம்தானே? ஆனல் உண்மையா? தீரத் தத்வார்த்தமாக விசாரிப்பதில்தானே உண்மை தெரிகிறது? ‘கண்ணால் காண்பதும் பொய் காதால் கேட்பதும் பொய் தீர விசாரிப்பதே மெய்’ என்ற சொலவடை அத்வைதத்தைப் புரிந்துகொள்ள உதவியாக இருக்கிறது. என்ன நிலைமாற்றங்கள் தன்னில் நிகழ்ந்தாலும் தான் ஒரு விதத்திலும் மாறாமல் இருக்கிறது ஆகாயம் என்பதைப் போல் தான் தன்நிலையில் இருந்து மாறாதது என்பதால் ஆத்மா, பிரம்மம் என்பதை அச்யுதன் (தன் நிலையினின்றும் மாறாதது அச்யுதம்) என்று அறியப்படும். 

மாறாத நிலை என்றால் நெடுங்காலம் அப்படியே இருக்கலாம். ஆனால் என்றோ ஒருநாள் அதுவும் மாறித்தானே ஆகவேண்டும்? நாம் வாழும் பகுதியில் எல்லாம் மாறிவிடுகிறது. சாலைகள், வீடுகள் எல்லாம் மாறிவிட்டன. அன்று கண்ட இடமா என்றே அடையாளம் தெரியாத அளவுக்கு மாற்றம். ஆனால் அந்த மரம் இருக்கிறதே அது மாறவில்லை. சின்ன வயசில் விட்ட பட்டத்தின் கலர்கயிறு மாட்டிக் கொண்ட கிளையில் இன்னும் கொஞ்சம் பகுதி கயிறு அப்படியே இருக்கிறது. மாறும் சூழ்நிலையில் அதுமட்டும் மாறாமல்.. ஆச்சரியப் படுகிறோம். அடுத்த வாரம் அங்கே செல்கிறோம். மரம் இருந்த இடத்தில் பெரிய குழி. மரம் என்ன ஆயிற்று? அத்தனை ஆண்டு அசையாமல் நின்ற மரம். போனவாரம் அடித்த பெருங்காற்று, மழையில் விழுந்துவிட்டது. இப்படிப் பட்ட மாறாத நிலை அன்று அச்யுதம் என்பது. பெரும் ஊழிகள் நடந்தாலும் தான் மாறாதது. எனவே அச்யுதம். 

காலத்தால் ஓர் எல்லைபடுத்தப் பட்டது. இந்தக் காலத்தில் இருந்தது. இன்னொரு காலத்தில் இல்லை. நெடுநாள் இருந்தது பின் ஒரு காலத்தில் போய்விட்டது. என்று கால எல்லை இடமுடியாது. அதேபோல் இந்த இடத்தில் இருந்தது. அந்த இடத்தில் இல்லை என்பது போல் இடத்தின் எல்லை இடமுடியாது. இந்தப் பொருளில் இருக்கிறது. அந்தப் பொருளில் இல்லை என்று பொருளால் எல்லைபடுத்தப் படாதது. காலத்தால், இடத்தால், பொருளால் எல்லை இல்லாதது எதுவோ அது அநந்தம். ஆத்மா, பிரம்மம் அனந்தம் ஆனது. 

ஒளிகளுக்கெல்லாம் தலையாய ஒளி. ஒளி என்றால் கோ என்று பெயர். கோ என்னும் கதிர்களுக்கெல்லாம் இந்திரன் எனவே கோவிந்தன். அனைத்தையும் உள்ளடக்கியதால் ஹரி. நந்தம் என்றால் இன்பம். முடிவே அற்ற பேரின்பம் ஆநந்தம். ஒரு பொருளும் மிச்சமின்றித் தான் நிறைந்தது. அசேஷம். என்றும் பிறவாதது. அஜம். என்றும் மிருத்யு என்பது  இல்லாதது. அம்ருதம். 

பாடுகிறார் ஸ்ரீசங்கரர்: 

‘அச்யுதன் நான்; அநந்தன் நான்; கோவிந்தன் நான்; ஹரியே நான்; 

ஆநந்தம் நான், அசேஷம் நான்; அஜன் நான்; அம்ருதமே நானாய் இருக்கிறேன்.’ 

(அச்யுதோஹம் அநந்தோஹம் கோவிந்தோஹம் அஹம் ஹரி| 

ஆநந்தோஹம் அசேஷோஹம் அஜோஹம் அம்ருதோஸ்ம்யஹம் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

No comments:

Post a Comment