ஒருவர் முடிவே அற்ற வாழ்நாள் வேண்டும் என்று நினைத்தாராம். கடவுளை வேண்டினார். தீவிரமாகத் தவம் செய்யவும் கடவுள் அவருக்கு அவர் கேட்டபடியே வாழ்நாள் தந்தார். கேட்டது கிடைத்தது. கொண்டாடினார். மற்றவர்கள் வியந்தார்கள். அவருக்குத் தெரிந்தோரெல்லாம் மறைந்தார்கள். அடுத்து அவரைக் கேள்விப்பட்டோரெல்லாம் மறைந்தார்கள். அடுத்து அவர் வயது என்னவாக இருக்கும் என்று சந்தேகப் படுபவர்கள்தான் இருந்தார்கள். அடுத்து வந்தவர்கள் அவர் பொய் சொல்கிறவர் என்று கருதுவோராக ஆனார்கள். அவருக்கு அலுக்கத் தொடங்கியது. உலகமே புதியது. அந்நியமானது என்று அனுபவம் ஆகியது. ஆனால் அவர் எவ்வளவு விரும்பினாலும் வாழ்நாள் முடிவுக்கு வராது. கேட்டு வாங்கிய வரம் அப்படி. அவர் நிலைமை அப்படி. அதாவது தம் நிலைமை தமக்கு உகந்ததாக இல்லை என்றாலும் தாம் வேறு ஒரு மாற்றத்தைத் தேர்ந்து எடுக்கும் வாய்ப்பு அவருக்கு இல்லை.
இவ்வாறு மாற்றத்திற்கான வாய்ப்பு என்பதற்குப் பெயர்தான் விகல்பம் என்பது. ஆதிசங்கரர் பாடுகிறார். உணர்வு மயமாக, சித்கனமாக இருக்கும் பிரம்மம், ஆத்மா என்பது தன் இயல்பில் வேறு ஒன்றாக ஒருபோதும் மாறும் வாய்ப்பே இல்லாதது. நிர்விகல்பம் என்கிறார். சரி நீண்ட காலம் இருந்துவிட்டு ஒரு முடிவுக்கு வருமோ என்றால் இல்லை என்றும் அவ்வண்ணமே இருப்பது. நித்யம் என்கிறார். ஓர் இடத்தில், ஒரு காலத்தில் ஆக்கிரமித்து இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும் ஒரு பொருள் அன்று பிரம்மம். இடத்தை, காலத்தை ஆக்கிரமிக்கும் வடிவு எதுவும் அற்றது. நிராகாரம். ஆகாரம் என்றால் வடிவு. நிர் ஆகாரம் என்றால் வடிவற்றது. அதாவது இந்த இடத்தில் இருக்கிறது. அந்த இடத்தில் இல்லை. இந்தக் காலத்தில் இருக்கிறது. அந்தக் காலத்தில் இல்லை என்று அதைப் பற்றிச் சொல்ல முடியாது. எல்லா இடத்திலும், எல்லாக் காலத்திலும் இருப்பது பிரம்மம் அதாவது ஆத்மா.
பிரம்மம் அதாவது ஆத்மா என்று எழுதுவதைப் பார்த்து உங்களுக்குத் தோன்றலாம். என்னய்யா இது.. பிரம்மம் சரி. ஆத்மா என்றால் எவ்வளவோ ஜீவாத்மாக்கள் இருக்கின்றன. நீ பாட்டுக்கு சிங்குலரில் ஆத்மா என்கிறாய் என்று?. ஆம் அத்வைதத்தில் ஆத்மா என்றாலும் பிரம்மம் என்றாலும் ஒன்றுதான். ஒன்றேதான். பல ஜீவாத்மாக்கள் என்பதெல்லாம் உபாதிகளின் பேதத்தால் வேறு வேறான தோற்றம் மட்டுமே.
சரி. நித்யமாய் இருக்கட்டும். நிர்விகல்பமாய் இருக்கட்டும். நிராகாரமாய் இருக்கட்டும். என்னதான் இருந்தாலும் மிகநீண்ட காலம் என்றால் Wear and Tear, குறைவு என்பது ஏற்படுமே? அதுதான் கிடையாது. ஒரு சிறிதும் குறையவே குறையாதது. வ்யயம் என்றால் குறைவு. பிரம்மமோ அவ்யயம்.
இதுவாக இல்லை. அதுவாக இல்லை என்றால் எதுவாக இருக்கிறது? அதைச் சொல்ல வேண்டாமா? அது இருப்பு வடிவாகவே இருக்கிறது. ஸத். It is Existence. அறிவு, உணர்வு மயமாக இருக்கிறது. சித். It is Consciousness. ஆனந்தமே முழுதுமாக இருக்கிறது. It is Ananda. ஸத் சித் ஆனந்தமாக இருக்கிறது. எது ?பிரம்மம் அதாவது ஆத்மா.
சச்சிதானந்தமா? நாம் உடலாக இருக்கிறோம். நமக்கு மனம் இருக்கிறது. மூச்சு, பிராணன் போய்வரும் வரைதான் நாம். புத்தி என்பது நமக்குள் இருந்து முடிவெடுக்கிறது. சில சமயம் பரவச நிலையில் ஆனந்தமாக இருக்கிறோம். வெறுமனே இருப்பதே உன்னத மகிழ்வாக இருக்கிறது. அது எப்பொழுதாவதுதான். இவ்வளவுதான் நமது அனுபவம். ஆம். நாம் ஓர் உடலில் அல்ல. ஐந்து உடல்களுக்குள் இருக்கிறோம் என்கிறது தத்துவம். புற உடல் உணவால் ஆனது. அதனுள் பிராண மயமான உடல். அதனுள் மனோமயமான உடல். அதனுள் விஞ்ஞானமயமான உடல். அதனுள் ஆனந்தமயமான உடல். இவற்றுக்கு ஐந்து கோசங்கள் என்று பெயர். கோசம் என்றால் உறை என்று பொருள். பஞ்ச கோசங்கள் இவை. ஆத்மா ஆகிய நாம் பஞ்ச கோசங்களுக்கும் அதிகமாக இருக்கிறோம் என்கிறது தத்துவம். அதாவது இந்த ஐந்தும் உபாதிகள்தாம் இவை நாமாகத் தோற்றம் அளிக்கின்றன. ஆனால் நம்மை உள்ளே அடக்கிக் கட்டுப்படுத்திவிடுவதில்லை. இவற்றுக்கு அதிகம் ஆக இருப்பது ஆத்மா.
‘நான் நித்யனாய் இருக்கிறேன்; நிர்விகல்பனாக இருக்கிறேன்;
நிராகாரமாய் இருக்கிறேன்; அவ்யயனாக இருக்கிறேன்;
சச்சிதானந்தமே உருக்கொண்டு இருக்கிறேன்;
ஐந்துகோசங்களுக்கும் அதிகமாக இருக்கிறேன்.’
(நித்யோஹம் நிர்விகல்போஹம் நிராகாரோஹம் அவ்யய: |
ஸச்சிதானந்த ரூபோஹம் பஞ்சகோசாதிகோSஸ்மி அஹம் ||)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
🙏
ReplyDelete