மனம் இப்பொழுது இன்னும் ஒரு சந்தேகம் எழுப்புகிறது. ‘பிரம்மம் மட்டும் இருக்கின்ற உண்மை. பிரபஞ்சம் எல்லாம் தோற்றம் அளவுக்கு உண்மை. அதாவது தத்வ ரீதியான ஆராய்ச்சியில் தள்ளப்படாத இறுதி உண்மையாக நில்லாது, அப்படி நிற்கும் மாறாத ஒரே உண்மை பிரம்மம் மட்டுமே அல்லது அந்த மாறாத உண்மையைத்தான் பிரம்மம் (பெரியது) என்று சொல்லலாம் என்றீர்கள். இந்த ஜீவன் உண்மையில் பிரம்மம்தான். உபாதிகளின் தொடர்பால் தனித்தனி உயிர்கள் போல் உபாதிகளுக்கு உட்பட்ட அனுபவத்தில் உண்மைபோல் தோற்றம் அளிக்கிறது. தத்வ விசாரத்தின் இறுதி உண்மையாக இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமே என்பது புரியவரும் என்றும் சொன்னீர்கள்.
‘சரி. அப்படி என்றால் இந்த உலகில் ஜீவர்கள் மட்டுமா இருக்கின்றன? அவை வாழ்வதற்குச் சூழ்நிலையாக இருக்கும் மலை, நீர், ஆகாயம், வாயு, நெருப்பு, கல் மண், செடி கொடிகள், புல், பலவித உணவுகள், சூரியன், சந்திரன், கோளங்கள், நக்ஷத்திரங்கள், என்று எவ்வளவு பொருட்கள் இருக்கின்றன! அவையெல்லாம் அனுபவத்தில் இருக்கத்தானே செய்கின்றன. உயிர்கள் எழுந்து உலவும் முன்னரே அவை தோன்றிச் சூழலாய் இருக்கின்றனவே? அப்படி இருக்கும் போது பிரம்மம் மட்டுமே சத்யம் என்றால் என்ன அர்த்தம்?’
இந்தக் கேள்விக்கு விடை சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். அவர் சொல்கின்ற விடையை அன்று புரிந்துகொள்ளும் அளவிற்கு விஞ்ஞானம் வளர்ந்து பல துணைக் கருத்துகளை நிரூபிக்காததால் அவர் காலத்தில் இதை எப்படிப் புரிந்துகொண்டார்கள் என்பது ஒரு தனி விஷயம்தான். ஆனால் இன்றைய விஞ்ஞான கருத்தாக்கங்களில் பழகிய நம் ஆராய்ச்சி மனம் ஸ்ரீஆதிசங்கரர் சொல்வதை நன்கு புரிந்துகொள்ள முடியும்.
இன்றைய விஞ்ஞானம் சொல்வதன்படி பார்த்தால் எல்லா பொருள்களுமே ஒன்றில் ஒன்று அடங்கி அதாவது ஒன்று ஒன்றாக மாறி, கடைசியில் அணுக்களாகவும், அணு உள் துகள்களாகவும், அந்தத் துகள்களும் பொருள் என்ற வடிவைக் களைந்து, ஆற்றல் என்ற அலையுருவை எய்திவிடும் என்று தேருகிறது. அதாவது ஆரம்பத்தில் இந்த அனைத்துப் பிரபஞ்சமும் சக்தி அலைகளாக இருந்து பின்னர் அலை உருவிலிருந்து பொருள் அம்சம் கொண்ட துகளாக உருவெடுக்கிறது. அதேபோல் பொருளம்சம் கொண்ட துகள் சக்தி அலையுருவாக வெடிக்கவும் முடியும். இதற்கான வாய்ப்பாடுதான் ஐன்ஸ்டீன் அவர்கள் கொடுத்தார். E =MC2 (C square). E என்பது சக்தியலை. M என்பது பொருளம்ச எடை. C என்பது ஒளியின் வேகம். (இந்த வாய்ப்பாட்டால் விளைந்த பேரழிவை இப்பொழுது நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டாம்).
விஞ்ஞானம் இத்துடன் நிறுத்திவிடுகிறது. ஆனால் ஸ்ரீஆதிசங்கரர் அதற்குள்ளும் போய் விளக்குகிறார். அவருக்கு நவீன விஞ்ஞானம் தெரியுமா என்று கேட்காதீர்கள். அவர் காலத்தில் ஐன்ஸ்டீன் இல்லை. அது சரிதான். ஆனால் ஸ்ரீஆதிசங்கரர் அவர் காலத்துக் கல்விப் பின்புலம், தம்முடைய பெரும் மேதைமை, தியானம் இதன் காரணமாக அன்று சொன்னது இன்று வரும் விஞ்ஞான விவரணத்தோடு மிகவும் இசைந்து போகிறது என்பது ஒரு விஷயத்தைக் காட்டுகிறது. எந்த விதத்தில் அணுகினாலும் உண்மை புலப்படத்தான் செய்யும் என்பது. ஸ்ரீஆதிசங்கரர் சொல்கிறார்:
’பிரம்மத்திலிருந்து அஜ்ஞானம் (மாயை) யால் நீர்க்குமிழி போன்று ஆகாயம் உண்டாயிற்று. ஆகாயத்திலிருந்து வாயு. வாயுவிலிருந்து நெருப்பு. நெருப்பிலிருந்து ஜலம். ஜலத்திலிருந்து நிலம். அதனின்று அரிசி, தான்யங்கள். ஒடுங்கும் போதும் பூமி ஜலத்திலும், ஜலம் நெருப்பிலும், நெருப்பு வாயுவிலும், வாயு ஆகாயத்திலும் ஒடுங்கி, ஆகாயம் அவ்யாக்ருதம் (வெளிப்படத் தோன்றாத நிலை) என்ற மாயையின் வடிவில் ஒடுங்கி, அந்த மாயை சுத்தமான பிரம்மத்தில் லயம் அடைந்து விடுகிறது. அனைத்தையும் கவர்ந்து தன்னுள் அடக்கிக் கொண்டதால் அந்தப் பிரம்மம் ஹரி என்று அழைக்கப்படுகிறது. அந்தச் சுத்தமான ஹரியாகவே நான் இருக்கிறேன் என்று ஆத்ம தியானம் செய்வோன் சிந்திக்க வேண்டும்.’
(அஜ்ஞானாத் ப்ரஹ்மணோ ஜாதம் ஆகாசம் புத்புதோபமம் |
ஆகாசாத் வாயுருத்பந்நோ வாயோஸ்தேஜஸ்தத: பய: ||
அத்ப்யச்ச ப்ருத்வீ ஜாதா ததோ வ்ரீஹியவாதிகம் |
ப்ருதிவ்யப்ஸு பயோ வஹ்னௌ வஹ்னிர்வாயௌ நபஸ்யஸௌ |
நபோSப்யவ்யாக்ருதே தச்ச சுத்தே சுத்தோSஸ்ம்யஹம் ஹரி: || )
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
🙏
ReplyDelete