உலகாயதமாக நினைப்பதற்கும், ஆன்மிகமாக நினைப்பதற்கும் என்ன வித்யாசம்? பானை என்று உங்களை நீங்கள் கருதினால் உங்களுக்குள் ஆகாயம் இருக்கிறது என்று நினைக்கிறீர்கள். பானைக்குள் இருக்கும் ஆகாயம் என்று உங்களைக் கருதினால், உங்களைச் சுற்றிப் பானை இருக்கிறது என்று பார்க்கிறீர்கள். முன்னது உலகாயதத்தோடு ஒப்பிட்டால் இரண்டாவது ஆன்மிகத்தோடு ஒப்பிடலாம்.
பரிணாம வளர்ச்சியில் உயிரின் சுயக்காப்பு தேவைகளுக்காக ஆரம்ப நிலைகளில் உடலே தான் என்ற ஒன்றிப்பு தேவையாக இருந்திருக்கிறது. பரிணாமம் அடைந்து வளர்ந்து, சமுதாய மனிதராக ஆன பிற்பாடும் அந்த ஆரம்ப ஐக்கிய மனப்பான்மை உடலோடு ஒன்றியது இன்னும் அப்டேட் ஆகாமலே இருக்கிறது. மேலும் தான் ஆத்மா என்று உணர்வது நுட்பமான கருத்தாக்கம் தேவைப்படும் ஒன்று. மூளையின் ஆரம்ப கட்ட வளர்ச்சிகளில் இயலாததாக இருந்திருக்கலாம். ஆனாலும் மொழி, அனுபவம் சார்ந்து சொல்லாடல்களைப் பார்த்தால் உடல் வேறு, ஆத்மாவாகிய தான் வேறு என்பது தெளிவாக மனத்தால் பேச்சில் பதிவாகிறது. என் உடல், என் கை, என் கால், என் கண், என் தலை, என் மனம் என்றுதான் சொல்கிறோமே அன்றி அவையே நாம் என்ற ஒன்றிப்பு இருந்தால் அவற்றை நம் உடைமை போல் கருதி உரையாடும் போக்கு இருக்க வாய்ப்பில்லை. எனவே ஆத்ம ஞானம் என்பது ஏற்கனவே தெளிவில்லாமல் நம் பேச்சு உணர்வு பழக்க வழ்கக்கங்களில் மறைந்திருக்கிறது, நம்மால் கவனமாக ஓர்மைகொள்ளப் படாமல். அதை உணர்வின் கவனத்திற்குத் தெளிவாக மீட்டெடுக்கிறோம் என்பதுதான் தத்துவ விசாரத்தின் அடிப்படையே.
மேலும் ஒரு கற்பனைக் காட்சியைப் பார்ப்போம். வாஷிங் மெஷின், குக்கர் முதலிய கருவிகளைப் பயன்படுத்துகிறோம். ஒருவர் சற்று சித்தம் பேதலித்த நிலையில் இருக்கிறார் என்று நினைத்துப் பார்ப்போம். அதாவது அந்தக் கருவிகள் இயங்கும் போது, அவை இயங்குகின்றன, தாம் அவற்றை இயக்குகிறோம் என்பது மறந்துபோய், தாமே அந்தக் கருவிகள் என்று தவறான ஒன்றித்த உணர்ச்சி கொண்டு வாஷிங் மெஷின் உள்ளே சுற்றி ஆடும்பொழுது அதைத் தானே படும் அவஸ்தையாகக் கருதி ஐயோ ஐயோ என்று அலறுகிறார் என்று வைத்துக் கொள்வோம். பார்க்கின்றவர் என்ன சொல்வார்? ஐயா! அது கருவி இயங்குகிறது. நீங்கள் வெறுமனே சாட்சியாகப் பாருங்கள். ஏன் நீங்களே கறங்குவது போல் நினைத்துத் துடிக்கிறீர்கள்? இல்லை.. இல்லை நான் தான் அது என்று அவர் சொன்னால் என்ன நினைப்போம்? சரி ஏதோ மனநிலை சரியில்லை என்று மருத்துவரிடம் காட்டுவோம். கொஞ்சம் ஓவர் கற்பனைதான். ஆனால் இந்தக் கற்பனையையே, நிஜத்தில், நம் அன்றாடத்தில் எப்படிக் கடைப்பிடிக்கிறோம் என்பது ஆச்சரியம் அல்லவா?
கருவியோடு தம்மை ஐக்கியப் படுத்திக் கொண்டவர் மனநிலை சரியில்லாதவர் என்று தெரிந்த நாம் நம் உடலை நமக்கு உற்ற கருவியாகவா பார்க்கிறோம்? நாமே அந்தக் கருவி என்று ஐக்கியப் படுத்திக்கொண்டு அவதிப் படுகிறோம். நாம் சுகப்படுகிறோம் என்று நினைத்துக் கொண்டு உடலைப் பாழ்படுத்துகிறோம். உடலைக் கருவி என்று நினைக்கக் கற்றால் என்ன செய்வோம்? திறம்பட அந்தக் கருவியைக் கையாளும் விதம் என்ன, அது கெடாமல் போஷிக்கும் வகை என்ன? அதனிடமிருந்து பெரும்பயன் கொள்வது எப்படி? என்று கருத்தாக அன்றோ செயல்படுவோம். உடலையும், மனத்தையும் நாம் கருவி என்று நன்கு உணர்ந்து கையாள வேண்டும் என்றாலே நாம் ஆத்மா என்று உணர்வதைக் காட்டிலும் வேறு வழி என்ன இருக்கிறது?
மொத்த குழப்படியும் ஒரு சின்ன பிரச்சனையில் ஆரம்பிக்கிறது என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். நான் என்று அக உணர்வான ஆத்மா, இது என்று புறப்பொருளாகத் தெரியும் உடல். இரண்டிற்கும் நடுவில் ஒரு மாறாட்டம் நடக்கிறது என்கிறார். அதாவது ஆத்மாவின் தன்மைகளை நாம் உடல் மீது ஏற்றியும், உடலின் தன்மையை, அதாவது சடப்பொருளின் தன்மையை உயிர் ஆகிய ஆத்மா மேல் ஏற்றியும் மாறுபட்டுக் கருதும் இந்த மாறாட்ட மனப்பான்மையே ஆரம்பம் என்கிறார். இவ்வாறு மாறாட்டமாகக் கருதுவதை அவர் அத்யாஸம் என்று சொல்கிறார். அதாவது ஒன்றின் தன்மையை பிறிதொன்றின் மேல் ஏற்றி உணரும் மனநிலைக்கு அத்யாஸம் என்று பெயர். தன் ஆத்மாவைக் குறித்து சிந்திக்கும் ஒருவர் ஒரு கணமேனும் தாம் உண்மையில் பிரம்மமே ஆக இருக்கின்றேன் என்று உணர்வாரேயானால் அவர் பெரும் பெரும் பாபக் குவியலில் தீராத இருளில் இருந்தால் கூட அந்த இருள் அக்கணமே பொடிந்து போய், சூரியன் உதித்தது போல் ஆகிவிடுகிறது என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
“கணமேனும் நான் பிரம்மமாகவே இருக்கின்றேன்
என்று ஆத்மசிந்தனம் செய்வோன் உணர்ந்தாலே கூட
அவனில் மாபாதகங்கள் நசித்து சூரிய உதயம் போல் ஆகிவிடும்”
(க்ஷணம் ப்ரஹ்மாஹமஸ்மீதி ய: குர்யாத் ஆத்மசிந்தனம் |
தந்மஹாபாதகம் ஹந்தி தம: ஸூர்யோதயோ யதா ||)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment