பிறந்ததிலிருந்து நாம் இந்த உடல்தான் என்ற நிச்சயம் கொண்டுதான் இயங்குகிறோம். வளர்கிறோம். தேவைகள், ஆசைகள், திட்டங்கள், கனவுகள், செயல்பாடுகள் அனைத்தும் இந்த உடலை அடிப்படையாக வைத்துத்தான். அப்படி இருக்கும் போது, ‘பிரம்மமே நான்’ என்று நினைவில் பழகு என்றால் எப்படி? உடலைக் கடந்த, உருவைக் கடந்த, அறிவே மயமான ஆகாயம் போன்ற நிலையோடு எப்படி நான் என்று ஐக்கிய பாவனை கொள்வது? முதலில் நான் இந்த உடல் இல்லை என்பதையே ஒரு விளையாட்டாக மனத்தில் நினைத்துப் பார்க்கலாமேவொழிய அடுத்த தேவை என்று வந்ததும் உடல் என்றுதானே ஓட வேண்டியிருக்கிறது.
வாழ்க்கை அனுபவம் அடிபட்டு நிதானம் ஏற்பட்டு, அன்றாடம், தேவைகள் எல்லாவற்றையும் விட வாழ்க்கையின் பொருள், மெய்ம்மையைக் குறித்த தேட்டம் என்பது தீவிரப்படும் பொழுது, மரணம் என்பது மிகவும் அருகில் இருக்கின்ற அதிர்வுகள், பதட்டம் மனத்தில் உண்டாகும் பொழுது ஏதோ ஆசுவாசமாகப் பிரம்மத்தைப் பற்றிய எண்ணம் மனத்தில் உவப்பாக இருக்கிறது. ஆனால் அன்றாடம் என்பதையே அவசரம், தேவை, ஆசைகள், நிர்பந்தங்கள் என்பனவற்றின் குறுகிய வட்டத்தில் சுருக்காமல், அந்தப் பிரம்மம் என்பதன் அடிப்படையிலேயே அன்றாடம் என்பதையும் அமைத்துக் கொள்ள முடிந்தால் அன்றாடத்திற்கும், ஆன்மிக நிலைக்கும் எழுந்து விழுந்து, எழுந்து விழுந்து திண்டாட வேண்டாம். இரட்டைக் கம்பத்திற்கிடையில் அல்லாடும் பந்தாக அலையவும் வேண்டாம். அதற்கு என்ன வழி?
இந்தக் கேள்விக்கான பதிலைப் புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தை நன்கு நாம் கற்பனையோடு புரிந்துகொண்டால் உதவியாக இருக்கும். சிறு பாத்திரங்கள், அதற்குள் ஒவ்வொன்றிலும் நிரம்பியிருக்கும் சின்ன சின்ன ஆகாயம் என்று கற்பனை செய்வோம். முன்னரே இதைக் குறிப்பிட்டிருக்கிறோம். இப்பொழுது சற்று விரிவாகக் கற்பனை செய்வோம். அதாவது நீங்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு பாத்திரம் என்று கற்பனை செய்து பாருங்கள். இப்பொழுது உங்களை ஒரு கேள்வி கேட்போம். ‘உங்களுக்குள் என்ன நிரம்பியிருக்கிறது?’ என்பது கேள்வி. என்ன சொல்வீர்கள்? ‘என்னுள் ஆகாயம் நிரம்பியிருக்கிறது. நான் ஆகாயத்தை முழுதும் உள்ளே கொண்ட பாத்திரமாக இருக்கிறேன்’ என்றுதானே. நல்லது.
இப்பொழுது கேள்வியைச் சற்றே மாற்றுவோம். அதற்கு முன்னர் இப்பொழுது நீங்கள் மீண்டும் ஒரு கற்பனை செய்ய வேண்டும். அதாவது இப்பொழுது நீங்கள் ஒவ்வொருவரும் அந்தச் சிறு பாத்திரம் அன்று. பதிலாக நீங்கள் ஒவ்வொருவரும் அந்த அந்தப் பாத்திரத்தினுள் இருக்கும் அந்த அந்தச் சிறு ஆகாயம் என்று கற்பனை செய்து கொள்ளுங்கள். இப்பொழுது உங்களை நோக்கி ஒரு கேள்வி கேட்கப்படுகிறது. என்ன? ‘நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள்?’ பதில் என்ன? ‘நான் சிறு ஆகாயமாக இருக்கிறேன். பாத்திரம் என்னை உள்ளடக்கிய பொருள் வடிவாக இருக்கிறது’ இதுதானே? இந்தக் கற்பனையிலிருந்து மாறாமல் அதிலேயே நில்லுங்கள்.
நீங்கள் அந்தப் பாத்திரம் இல்லை. உங்களைச் சுற்றி அந்தப் பாத்திரம் இருக்கிறது. அந்தப் பாத்திரத்தின் பயனே உள்ளே இருக்கும் ஆகாயமாகிய உங்களால்தான். ஆகாயமாகிய நீங்கள் உள்ளே இல்லையேல் பாத்திரம் வெறுமனே ஒரு சிறு தூளான பொருள் உருண்டை அவ்வளவே. நவீன விஞ்ஞானம் கூறுகிறது, பொருளிலும் அந்த அணுக்களையும், எலக்ட்ரான்களையும் தாங்கிக்கொண்டு இருப்பது வெட்ட வெளிதான் என்று. அந்த வெளியை அகற்றிவிடடால் வெறும் துகள்கள் மட்டும் திரட்டினால் கண்ணிற்கே தெரியாத சிறு தூள் அவ்வளவுதானாம். பொருளே பெரும் வடிவாகத் தெரிவதற்கே அதனுள் கரந்து தாங்கும் வெளி என்பதுதான் முக்கியம் என்று அணுவிஞ்ஞானம் சொல்லும் செய்தி. அதாவது பார்ப்பதற்குப் பருப்பொருள் முக்கியம் போல் தோன்றுகிறது. ஆனால் மெய்ம்மையில் ஆகாயம்தான் பொருள் அம்சத்தை விட மிக மிகப் பெரியதும், முக்கியமானதும் ஆன ஒன்று.
சரி போகட்டும். நீங்கள் இன்னும் ஆகாயம் என்ற நிலையில்தானே நிற்கிறீர்கள்? இப்பொழுது உங்களைச் சுற்றி இருக்கும் பாத்திரம், மற்ற பாத்திரங்கள், அவற்றுள் இருக்கும் ஆகாயங்கள் அந்த ஆகாயங்களின் உள்நிலை அனுபவங்கள் எல்லாவற்றையும் சுற்றி நோக்குங்கள். காட்சி எப்படி இருக்கிறது? இந்தச் சிறு ஆகாயம் என்பதற்குப் பதில் உங்கள் ஆன்ம நிலை என்பதை மனத்தில் ஏற்றுங்கள். ஆகாயம் போன்ற உணர்வு மயமான வெளி நீங்கள். உங்களைச் சுற்றிப் பாத்திரம் போல் உங்கள் உடல், நரம்பு, மனம் மூளை அமைப்பு. அதைப் போல் பிறர். அனைவரும் ஆன்மாக்கள். அவர்களைச் சுற்றி அவரவர் உடல்கள். பாத்திரத்திற்குள் இருக்கும் ஆகாயம் தன்னை அந்த முழுதுமாய்ப் பரந்த பெரும ஆகாயத்தினின்றும் வேறான சிறு ஆகாயம் மட்டும்தான் என்று கருதுமா? அல்லது ஆகாயம் என்ற விதத்தில் தான் அந்த முழு ஆகாயமேதான். பாத்திரத்தில் தோன்றும் தோற்றம் பாத்திரம் என்ற உபாதியால் (சுற்றுச் சூழ்நிலையால்) ஏற்படும் மேம்போக்கான காட்சி மட்டுமே என்று சொல்லுமா? இதை நன்கு நீங்கள் புரிந்துகொண்டால் ஆத்ம நிலைக்கும் பிரம்மம் என்ற முழுமைக்கும் உள்ள ஐக்கியம் நன்கு புரிந்துவிடும்.
ஆத்மா என்பதற்கும், புறப்பொருள் என்பதற்கும் ஒரு வேறுபாடு இருக்கிறது, அதுவும் நாம் புரிந்துகொள்வதில். புறப்பொருள் இருப்பது அந்தப் புறப்பொருளுக்கே அர்த்தம் ஆகும் அறிவு கிடையாது. அறிவு உள்ள உணர்வுமயமான பொருளான நமக்குத்தான் புறப்பொருள் ஒன்று இருக்கிறது என்ற அர்த்தமே விளங்கும். இவ்வாறு தனக்குத் தானே அர்த்தப்படாமல் அறிவுள்ள பிறிதொன்றுக்கே அர்த்தப்படும் பொருளுக்குப் பெயர் ’பராக்’ என்பது. தான் இருப்பது தனக்கே அர்த்தப்படும் அறிவுடைய உணர்வுப் பொருளுக்கு ‘ப்ரத்யக்’ என்று பெயர். ஆத்மா ப்ரத்யக். சடப்பொருள் பராக். ஸ்ரீஆதிசங்கரர் எழுதுகிறார்:
“நான் ஆத்மாவாக இருக்கிறேன். பிறிதொன்றாக இல்லை.
பிரம்மமே ஆக இருக்கிறேன். சோகத்தில் தொடர்புடையவன் இல்லை.
ஸத் சித் ஆனந்த உருவமாகவே இருக்கிறேன்.
நித்யமாக விடுதலையுற்று (முக்தமாக) இருப்பதுவே
என் ஸ்வபாவமாகக் கொண்டிருக்கிறேன்.”
(அஹமாத்மா ந சான்யோSஸ்மி ப்ரஹ்மைவாஹம் ந சோகபாக் |
ஸச்சிதானந்தரூபோSஹம் நித்யமுக்தஸ்வபாவவான் ||)
பாத்திரத்திற்குள் இருக்கும் ஆகாயமாக இருந்தால் தான் முழு ஆகாயமே என்பது புரிகிறது. அதுபோல் உடலுள் ஆத்மா தான் என்ற நிலையில் நின்றால் பிரம்மமே தான், தனக்கும் சோகத்திற்கும் தொடர்பு கிடையாது; சச்சிதானந்தமயமான உரு தான்; நித்யமாகவே முக்தனாக, விடுதலையுற்றவனாக இருக்கும் சுபாவம் கொண்டவன் என்பதெல்லாம் புரியும். உள்ளே ஆகாயமாக இருப்பது புறத்தில் பாத்திரத்தின் பயனுக்கு முழுவதும் இன்றியமையாத அடிப்படை என்பது புரிகிறது. அதுபோல் உடலினுள் தான் ஆத்மா என்பது புரிந்தால் ஆத்ம ஞானம் உலக வாழ்க்கைக்கு எவ்வளவு இன்றியமையாதது என்பதும் புரியவரும்.
பாபம் என்பது எப்படி ஏற்படுகிறது? பொருந்தாத ஆசை, எப்படியாவது ஒன்றை அடைந்துவிட வேண்டும் என்ற ஆத்திரம், யாரும் தன் செயலைப் பார்க்கவில்லை அல்லது பார்த்தாலும் தன்னை ஒன்றும் செய்துவிட முடியாது என்ற மூடத்தனம் இது போன்ற மனநிலை பாபத்திற்கான வசதியான களமாக அமைகிறது. இது எல்லாவற்றிற்கும் அடிப்படையாகத் தத்துவரீதியாகப் பார்த்தால் தான் இந்த உடல் என்பதில் தீவிர எண்ணம், அந்த உடலின் இச்சைகளுக்கு அடிமைப்பட்ட பழக்கம். வாழ்க்கை அனுபவங்களில் அடிவாங்கி, சிந்தனை எழுந்து தீவிரமாகத் தத்துவ சிந்தனை செய்யத் தொடங்கியவருக்கு இச்சை ஆசைகள், எதிர்பார்ப்பு, வசதி, சுகம் என்பதை விட தான் தேடும் வாழ்க்கையின் அர்த்தம், உலகின், பிரபஞ்சத்தின் மெய்ம்மை எது என்ற நாட்டம் இதுதான் மேலோங்கி இருக்கும். அந்த நிலையிலேயே கூட அவர் பாபம் என்ற வட்டத்தினின்றும் வெளியே வந்துவிடுகிறார். கவனப் பிசகினால் சில தவறுகள் நேரலாமேவொழிய நாம் பார்த்த பாபத்தின் களம் அவரிடம் மறைந்து விடுகிறது. விசாரத்தில் தீவிரமாக இறங்கியவரின் நிலையே இதுவென்றால் உணர்வின் பிழம்பான பிரம்மமே நான் என்று அறிந்தவரிடம் பாபத்தைப் பற்றிய பேச்சுக்கு இடமில்லை. ஏனெனில் அதற்கான உந்துதல்கள், காரணிகள் அனைத்தும் இல்லாமல் போய்விடுகின்றன. ஆன்ம சாதனையின் பாதையில் நிகழும் இந்த இயல்பான நிலையைச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். எனவேதான் இந்த பிரம்மத்தைத் தொடர்ந்து சிந்தித்தல் என்பதைக் குறித்தே ஒரு நூலே எழுதுகிறார்.
“சதாகாலமும் தன்னைப் பிரம்மம் என்று எண்ணியபடியே
சஞ்சரிக்கும் மனிதர் எவரோ அவர்களுக்குப் பாபம் கிஞ்சித்தும் இல்லை.
பாபத்தின் விளைவாகத் தோன்றும் துன்பமும் இல்லை”
”தன்னை எப்பொழுதும் பிரம்மமாகக் கருதியே
சுகமாய்ச் சஞ்சரிக்கத் தகும்”
(ஆத்மானம் ஸததம் ப்ரஹ்ம ஸம்பாவ்ய விஹரந்தி யே
ந தேஷாம் துஷ்க்ருதம் கிஞ்சித் துஷ்க்ருதோத்தா ந சாபத: ||
ஆத்மானம் ஸததம் ப்ரஹ்ம ஸம்பாவ்ய விஹரேத் சுகம் || )
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
, பொருளிலும் அந்த அணுக்களையும், எலக்ட்ரான்களையும் தாங்கிக்கொண்டு இருப்பது வெட்ட வெளிதான் என்று. அந்த வெளியை அகற்றிவிடடால் வெறும் துகள்கள் மட்டும் திரட்டினால் கண்ணிற்கே தெரியாத சிறு தூள் அவ்வளவுதானாம். பொருளே பெரும் வடிவாகத் தெரிவதற்கே அதனுள் கரந்து தாங்கும் வெளி என்பதுதான் முக்கியம் - This is Quantum Theory.
ReplyDelete