Sunday, January 4, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 02

எல்லாப் பொருளுக்கும் அடிப்படையான இருப்பைத் தருவதும், தன்னை அறியத் தானே ஒளியாக இருப்பதும் ஆன அந்த பிரம்மமே நான் என்று நினை என்றதும் எவ்வளவு எதிர்ப்பு கிளம்புகிறது! எங்கு? நம் மனத்தில்தான். மனமே Revolt செய்யத் தொடங்கிவிடுகிறது. இந்தச் சிறு உடம்பில், இந்த அடையாளம் உள்ள, இந்தப் பெயரும், இந்தப் பிறந்து வளர்ந்து அன்றாடம் ஏதோ வாழ்க்கையில் இருக்கும் நீ அந்தப் பிரம்மமா? இதை எழுதும் போதே உனக்கு முதுகு வலிக்கவில்லை? அதிக நேரம் உட்கார்ந்ததால் கால் மரத்துப் போனது போல் ஆகவில்லை. பசி எடுக்கவில்லை? வாசலில் காலிங் பெல் சத்தம். யார் என்று பார்க்க எழுந்து போகவில்லை? இதுதான் நீ. ஏதோ அல்ப சொல்ப ஆற்றலும் ஆற்றலின்மையுமாய் அவதிப்படும், அதற்கு நடுவில் கொஞ்சம் சந்தோஷப்படும் ஒரு பிராணி. அப்படிப்பட்ட நீ எல்லாப் பொருளுக்கும் இருப்பை நல்கும் பிரம்மமே ஆவாயா? என்ன கற்பனை செய்தாலும் ஓர் அளவு வேண்டாம் - எல்லாம் நம் மனமே கிளப்பும் கடும் எதிர்ப்பு. 

இவ்வாறு ஆட்சேபம் எழுப்பும் மனத்தை முழுவதும் மதித்து எதிர்கொண்டு அதன் மறுப்பை, அதற்கான தெளிவை, மனத்தோடு உரையாடிப் பேசச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். அவ்வாறு பேசவும் கற்றுத் தருகிறார் இந்தச் சுலோகத்தில். அந்தப் பரம் பிரம்மமே நான் என்று கண்ணை மூடிக்கொண்டு முரட்டுத்தனமாக நினைக்கச் சொல்லவில்லை. மனம் எழுப்பும் மறுப்புகளுக்கு விடையளித்து மனத்தைத் தெளிவுபடுத்தக் கற்றுத் தருகிறார். 

சித்தம் எழுப்பும் மறுப்பு என்ன? எலும்பு, தோல், தசை, இவ்வளவு உயரம், இவ்வளவு எடை, உணவு, உள்ளம், உரையாடுவது என்று இருக்கும் ஒரு பிராணிதானே நீ என்று நம்மைப் பார்த்துச் சொல்கிறது. நம் அன்றாட அனுபவமும் அதை ஆம் என்று ஏற்கிறது. ஆனால் தத்துவ விசாரமாக நாம் தீவிரமாக ஆராய்ந்து பார்த்தால் நாம் யார் என்று தேருகிறது? இந்த உடலா? மனமா? உறங்கி விழித்து உண்டு உலவி உரையாடி, செயல் புரிந்து பின்னர் உறங்கும் இந்தப் பிராணியா நாம் என்னும் சுய உருவம்? அன்றாடம் இதை அப்படியே ஏற்று அடுத்த வேலை என்று போனாலும், அமைதியாக ஆழமாகத் தீவிர தத்துவ ஆய்வு என்று சிந்தித்தால் என்ன கிடைக்கிறது? நாம் சித் அல்லது அறிவின் அல்லது உணர்வின் வடிவமாக அன்றோ இருக்கின்றோம்? அந்த உணர்வுமயமான  நிலையில் நின்று பார்த்தால் என்ன முடிவு வருகிறது? பொருட்கள், இந்த உலகம் எல்லாம் நமக்குள் அடங்கிப் போக, அனைத்தின் அடிப்படையாகவும், ஆகப்பெரும் சத்யமாகவும் விளங்கும் அறிவு, இருப்பு என்பதுதானே நம் உண்மையான சுயம்! 

’அன்றாடம்’ சொல்வதைச் சான்றாகக் கொள்வதா? ஆழ்ந்த தீர்க்கமான ஆராய்ச்சி சொல்வதைச் சான்றாகக் கொள்வதா? ’அன்றாடம்’ சொல்கிறது இந்த உலகம் தட்டையானது, நீள நடந்தால் போய்க்கொண்டே இருப்பது. ஆனால் ஆராய்ச்சி சொல்வதோ இந்த உலகம் உருண்டை. நீள நடந்தால் மீண்டும் புறப்பட்ட இடத்துக்கே வந்து சேர வேண்டும் என்பது அன்றோ! அன்றாடம் என்பது நடைமுறை அவசரத்துக்கு ஒத்துவரலாம். ஆனால் கடைசி உண்மை அதுதான் என்று அடம்பிடிப்பது அறிவியல் அன்றே! அறிவியல் பூர்வமான ஆன்மிக வழி என்பது அத்வைதம். அதை உலகுக்கு நல்கிய பேருபகாரி ஸ்ரீஆதிசங்கரர். அறிவியல் ரீதியாக மனத்தை எதிர்கொள் என்கிறார். 

அறிவின் மயமாக, சித்ரூபமாக இருக்கும் ஆத்மா நாம். சித் ரூபமாக, அறிவின் மயமாக நாம் உண்மையில் இருப்பதால் ஆகாயம் போன்று எங்கும் பரந்த நிலை நம் சுய நிலை. எனவேதான் சித் ஆகாசம், சிதாகாசம் என்று சொல்வதும் வழக்கம். ஆகாசத்தில் இது சின்ன ஆகாசம், அது கொஞ்சம் பெரிய ஆகாசம் என்றெல்லாம் பாத்திகட்ட முடியாது. ‘மண்ணிலே வேலி போடலாம். வானத்திலே வேலி போடலாமா? என்றான் ஸ்ரீராமகிருஷ்ண முனி’ என்கிறார் பாரதியார். எனவே நான் இந்த அன்றாடம் புழங்குகின்ற ஆளான இந்தப் பிராணி என்ற நிலையில் வைத்துப் பார்க்கவில்லை. ஆழ்ந்த தத்துவ ஆராய்ச்சியின் முடிவில் தேரும் சான்றான பார்வையில் வைத்து நினைக்கும் போது அந்தப் பரம் பிரம்மமாகவே இருக்கின்றேன் நான் - என்று தொடர்ந்து சிந்திக்கச் சொல்கிறார் ஸ்ரீசங்கரர். ஒரு சின்ன பாத்திரத்தில் இருக்கும் ஆகாயம் தன்னை அந்தப் பெருத்த வான்வெளியே தான் என்று சொல்லுமேயானால் அதைப் பொய் என்று எப்படி மறுக்க இயலும்? சின்ன பாத்திரத்து ஆகாயம், அதைக் கடந்த பெரும் ஆகாயம் என்ற பெருமை சிறுமை, விரிவு சுருக்கம் எல்லாம் நம் பார்வையில் அன்றாடக் கருத்தில் இருக்கின்றதே அன்றி அந்த வஸ்துவில், அந்த ஆகாயம் என்ற பூதத்தில் இல்லையே! அதைப் போன்றுதான் அறிவின் உண்மையிலும் என்பதை உணர்த்த வேண்டித்தான் சித் ஆகாசம் என்று ஞானிகள் சொல்கிறார்கள். ஆகாயம் போல் எங்கும் பரந்து அறிவாகி நிற்கும் ஒன்றாய் இருப்பதால் நான் அந்தப் பரம் பிரம்மமாகவே இருக்கின்றேன் என்று உறுதியான நினைவைக் கைக்கொள். 

சரி. அந்த அறிவு மூளை என்ற உடலின் உறுப்பு செய்யும் வேலை அவ்வளவுதானே. மூளை இயங்கினால் அதை மனம், அறிவு, உணர்ச்சி என்றெல்லாம் சொல்கிறோம். இயக்கத்தில் உண்மையாய் இருக்கும் ஒன்று. ஆனால் இயங்குவதற்கு உடலின், உயிரியலின் திசுக்கள் அல்லவா அடிப்படை? உடல் என்ற பொருளின் சம்பந்தம் இன்றித் தனியே அறிவு என்றோ ஆத்மா என்றோ கூற முடியுமா? மனமும் விடுவதாக இல்லை. அதன் கேள்வி எதற்கும் தெளிவாகப் பதில் சொல்லச் சங்கரரும் தயங்குவதில்லை. 

மூளைதான் மனம் என்றால், உடலின் இயக்கம்தான் அறிவு என்றால், உடலின் இயக்கம் அறிவை நம்பிப் பெறுகின்ற அனுபவம் ஆகவோ, கருத்தாக ஆகவோ இருக்கக் கூடாது. மூளைதான் மனம் என்றால் மூளையின் இயக்கம் அல்லது அமைப்பு மனம் என்பதைச் சாராமல் முதலில் எய்தப்பட வேண்டும். ஒருவர் மூளையில் அறுவை சிகிச்சை நடைபெறும் போது கூட அது மற்ற ஒருவரின் மனம் முன்னால் நின்று உணர்பதிவுகளை வாங்கிப் புரிந்துகொண்டு இது மூளை, மூளையில் இன்னது பிரச்சனை என்று சிகிச்சையோ ஆய்வோ நடைபெறுகிறது. யாருக்கும் வேண்டாம் என்று கருவிகள் மயமாகக் கணக்கெடுப்பு நடக்கும் போதும் கருவி, கருவிகளின் தகவல் அனைத்தையும் மனத்தின் சார்பு இல்லாமல் வெறும் மூளை என்ற உடலின் உறுப்பு தானாக இயங்கி முடிவுகளைச் சொல்வதில்லை. மனம், அறிவு என்பதுதான் உடலுக்கும் முந்தி நின்று, உடலைத் தொழில்கொண்டு பதிவுகளைப் படித்து அர்த்தப்படுத்தி முடிவுகளை எய்துகிறது. மனம், அறிவு சாராமல் உலகம் பற்றிய அறிவு என்பது தன்னளவில் சுயமுரணாக அறிஞர் உலகத்தைப் பார்த்துச் சிரிக்கிறது. 

அதுவும் நவீன அறிவியல் உலகில் மரணித்த பொழுதிலிருந்து சில மணி நேரம்வரை ஆஸ்பத்திரி ரீதியாக இறந்துவிட்ட நிலையில் இருந்தோரை வைத்துச் செய்யப்பட்ட ஆய்வுகள் பலவும் உடலின் சார்பு இல்லாமல் தனித்து உணர்வின் பிரசன்னம் இருந்ததை, மரண நிலையிலிருந்து மீண்டு வந்தோரின் உடனடி மொழிவுகளைப் பதிவு செய்து ஒப்பு நோக்கிக் கண்ட தரவுகள் புதிய செய்தியைச் சொல்கின்றன. உடல் சார்ந்த உலக அனுபவம் என்பது முடிந்த முடிபு இல்லை. அதைத் தாண்டிய உணர்வுமயமான நிலை ஒன்று இருக்கிறது. அதில் சென்ற உயிர், எல்லைகளைக் கடந்த நிலைக்குப் போய்விடுகிறது என்ற கருத்து மிகவும் வலுப்பட்டுக்கொண்டே வருகிறது. 

மதங்கள் நம்பிக்கைகள் சார்ந்தவையாய் இருக்கலாம். என்றோ யாரோ சொன்ன எழுதிய நூல்களின் சார்பு கொண்டவையாய் இருக்கலாம். ஆனால் ஆன்மிகம் என்பது அறிவியல், ஆய்வுப் பரிசோதனைகளால் மேலும் மேலும் பலம் பெறுகிறது என்பது ஒரே நேரத்தில் ஊக்கமும், புதிருமாய் விளையும் சூழல் நம் காலத்திய செய்தி. இதை நூற்பா இட்டு உரைப்பதைப் போல் கூறுகிறார் சங்கரர். எதன் தொடர்பும், எதன் சார்பும் இன்றித் தான் தனியாய்த் தனித்த நிலையாக இருப்பதால் அந்தப் பரம் பிரம்மமாகவே இருக்கின்றேன் நான் என்று கருதிப் பழகு என்கிறார். 

நம்முடைய மனம் அவ்வளவு லேசில் அடங்குமா என்ன? மேலும் கேட்கிறது. அப்படியே நான் கருதினாலும் என்ன, அந்த நேரத்திற்கு அந்த நினைவு இருக்கலாம். ஆனால் அடுத்த ஓர் அவசரத்தில் அந்த நினைவு மாறிப் போய் பழையபடியான கருத்துகள்தாமே வரப்போகின்றன? எந்தக் கருத்தும் நிலைத்து நிற்கப் போவதில்லையே. ஒரு மனநிலை அடுத்த மனநிலையால் பாதிக்கப்படத்தானே படுகிறது. அதுவும் ஒரே மட்டத்தில் இருக்கும் மனநிலைகள் மாறி மாறி வருவதால் அவ்வளவு பாதிப்பு இல்லை. ஆனால் மிகவும் தத்வார்த்தமான உயர்ந்த மனநிலையிலிருந்து அடுத்து அதளபாதாளமான ஒரு மனநிலைக்கு வருகிறது என்றால் மனநோவும் அதற்கு ஏற்றாற்போல் அதிகம் தானே? அதற்குப் பதில் சொல்கிறார் சங்கரர். 

மனநிலையின் மாற்றம் என்பது வேறு. மாறாத உணர்வுநிலை என்பது வேறு. எவ்வள்வு மனநிலைகள் மாறினாலும் அவற்றுக்கு அடிப்படையாய் இருக்கும் உணர்வின் நிலை என்பது மாறுவதே இல்லை. அந்த உணர்வுதான் விழிப்பிலும் சரி, கனவு நிலையிலும் சரி, ஆழ்ந்த துயிலிலும் சரி மாறாத அடிப்படையாய் இருப்பது. அந்த உணர்வு பாதிக்கபடாதது. மூளை பாதிப்பு அடைந்த பைத்தியம் ஒருவருக்கும் கூட உணர்வு அடிப்படையில் உணர்வு என்றபடியே இருக்கிறது. அந்த உணர்வு அடிப்படையான மாறாத் துணையாக இருப்பதால்தான் உள இயல் மருத்துவம் என்பதே இயலுகிறது. அந்த உணர்வின் மயமான சித் ரூபமான ஆத்மா அந்தப் பரம் பிரம்மமே. அந்தப் பிரம்மமே நான் என்று நன்கு துணிந்து நிச்சயம் கொண்டு நினைத்துப் பழகு என்கிறார் சங்கரர். ஆழநெடுங்காட்டின் கனத்த ஊழி இருளில் சூரியனைப் பந்தமாகப் பிடிக்கும் அன்பின் உருவாய்த் திகழ்பவர் ஆதிசங்கரர். 

”சித்தமே! சித் உருவமாய் நான் இருப்பதாலும், 

சிறிதும் பிறவற்றோடு சமபந்தமே அற்றதாலும், 

ஒருபோதும் ஒன்றாலும் பாதிக்கப்படாத ஒன்றாய் இருப்பதாலும், 

நிச்சயம்கொண்டு இவ்வண்ணமே நினைப்பாய் 

நான் அந்தப் பரம் பிரம்மமேயாக இருக்கின்றேன்.”  

(அஹம் ஏவ பரம் ப்ரஹ்ம நிச்சிதம் சித்த சிந்த்யதாம் | 

சித்ரூபத்வாத் அஸங்கத்வாத் அபாத்யத்வாத் ப்ரயத்நத: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Friday, January 2, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 01

தத்துவம் என்பது எது? தீவிரமாக ஆராய்ந்து பார்க்கும் பொழுது முடிவில் எது நிலைத்த உண்மையாக மிஞ்சுகிறதோ அதுவே தத்துவம். தொடக்கத்தில் பல விஷயங்களும் இருப்பது போலும், பல பொருட்களும் நிலைத்தவை போலும் தோன்றும். ஆனால் எல்லாம் ஒன்றைச் சார்ந்து ஒன்று இருப்பதாக ஆராய்ச்சியில் புரியவரும். பின்னர், தான் எதையும் சாராமல் தன்னில் தான் மாறாத மறையாத உண்மையாக நிலைத்து நிற்கும் உண்மை என்பது ஆத்மா மட்டுமே. அதைத்தான் பிரம்மம் என்றும் கூறுவது. 

அப்படியென்றால் இதையெல்லாம் தொடங்கி ஒருவர் தீவிரமாக ஆராய்ந்தாரே (அதாவது அவரவர் ஆராய்ச்சியில் அவரவர் உள்ளே) அவர் விஷயம் எப்படி? உண்மையில் இருப்பவரா அவர்? அவர்தான் ஜீவன். அவரும் உண்மையில், அதாவது தீவிர ஆராய்ச்சியின் முடிவில், இருப்பவராகத் தேருவதில்லை. அவரும் உண்மையில் இருப்பவர் இல்லை என்றால், பின்னர் மாங்கு மாங்கு என்று தேடுகின்றோமே, தீவிரமாக ஆராய்கின்றோமே, அதெல்லாம் பொய்யா? இந்த ஆராய்ச்சியில் உண்மை, பொய் என்பதை நாம் நடைமுறை உலகில் பயன்படுத்தும் உண்மை பொய் என்ற விதத்தில் புரிந்துகொள்ளக் கூடாது. ஏனெனில் நடைமுறை உலகில் நாம் நடைமுறை உலகையும், நம்மையும், பிறரையும், பொருட்களையும், செயல் மாற்றங்களையும் உண்மை என்று அடிப்படையாக ஏற்றுக்கொண்டு அதற்குள் சிலவற்றை உண்மையா, பொய்யா என்று பார்க்கிறோம். ஆனால் தத்துவ விசாரணையில் மொத்த உலகையும், நாம் உள்பட, அனைத்தையும் அடிப்படை நிஜமான இருப்பு எது என்னும் ஆய்வுக்கு உள்ளாக்கிப் பார்க்கும் பொழுது, அங்குப் போனால் போகிறதென்று நம்பிக்கை அடிப்படையில் சிலவற்றைக் கேள்வியே கேட்காமல் உண்மை என்று ஏற்றுக் கொள்ளும் நிலைமை கிடையாது. ஏனெனில் முழு இருப்புடைமை என்பதே கேள்விக்கு உள்ளாக்கப் படுகிறது. எனவேதான் முற்ற முழுக்க விசாரமயமாகக் காட்சியளிக்கிறது அத்வைதப் பெருவழி. 

ஏன் இதைப் பெருவழி என்று சொல்கிறேன் என்றால் இதற்கு உரியர் உரியரல்லாதார் என்ற வேறுபாடின்றி வாழ்க்கையை அனுபவித்த எவரும், வாழ்க்கையைப் புரிந்துகொண்ட எவரும் அல்லது வாழ்க்கை புரியவில்லை என்று சிந்திக்க முனைபவர் எவரும் இந்த வழியில் தாமாகவே தெரிந்தோ தெரியாமலோ பயணிப்பவராக இருக்கின்றனர். அதாவது ராஜபாட்டை அல்லது அரசாங்கப் பெருவழி ஒன்றின் வழியாக அனைத்து மக்களும், அனைத்து வண்டிகளும் பயணிப்பதைப் போல. இத்தகைய தத்துவப் பெருவழியான அத்வைதத்தின் மூலக்கருத்தை ஒரே வரியில் சொல்லிவிட முடியும். அது என்னவென்றால் ‘பிரம்மம் சத்யம். ஜகத் மித்யை. ஜீவன் உண்மையில் பிரம்மமாகவே இருக்கிறது. வேறாக இல்லை’ என்பதுதான் அது. 

’இப்பொழுது எனக்கு அப்படித் தோன்றவில்லையே? நான் கைகால் உள்ள இன்ன இடத்தில் இருக்கும், இன்ன இடத்தில் பிறந்து வளர்ந்து, இந்த முகவரி உள்ள ஒரு மனித ஜீவன், அதைப் போல் பிறர், பிற ஜீவன்கள், பல பொருட்கள், இயக்கம் என்று இந்தக் காட்சிதானே இயல்பாகத் தெரிகிறது!’ என்று நினைத்தால் ஆம் நடைமுறை சௌகரியம், இயல்பான புலனுணர்வுகள் சார்ந்த சார்பு மனநிலைகள் நிறைந்த நிலையில், அன்றாட அவசரம் நிறைந்த தினசரி வேகத்தில் அப்படித்தான் நாம் நினைக்கிறோம், நினைக்க முடியும். ஆனால் இது தீவிர ஆராய்ச்சியின் முடிவு இல்லை. ஓர் உதாரணம் சொல்வோம். நமது உடலையே எடுத்துக் கொள்வோம். கை கால் அசைத்து நடந்து நாம்தான் செயல்படுகிறோம். நமக்குத் தெரியாதா நம் உடல் பற்றி? ஆனால் ஏதோ கோளாறு என்று ஆஸ்பத்திரியில் கிடத்தி நம்மைக் கருவிகள் கொண்டு ஆராய்ந்து இன்ன உறுப்பில் இன்ன பகுதியில் இன்ன திசுவில் இப்படி நடக்கிறது அதுதான் கோளாறு. இந்தக் கோளாறுக்கு இன்ன சரித்திரம் என்று டாக்டர் நீள ரிப்போர்ட் தரும் போது அது நம் அனுபவத்திற்கு, அன்றாட நிஜத்திற்குப் பொருந்தி வருகிறதா? அதனால் அதைப் புறக்கணிப்போமா? அதற்கு உரிய இயல், அதன் ரீதியாக ஆராய்ந்து கண்ட முடிவுதான் நிஜமாக நிஜம் என்றுதானே கருதுகிறோம்.! உடல் சமபந்தமான ஒரு சிறு பிரச்சனைக்கே இந்த நிலைமை என்றால், உலகம் முழுவதும், அதில் நாம் அடக்கம், நம் அனுபவம் அதன் தன்மை என்று நம்மை உள்ளடக்கிய முழுமையையும் குறித்து ஆராய்ச்சி என்று வரும்போது அன்றாடம், நடைமுறை என்று நாம் அடம்பிடிக்க முடியுமா? அத்தகைய தீவிர ஆராய்ச்சிக்குப் பின்னர் இதுதான் முடிவு என்று சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். என்ன? 

‘பிரம்மம் மட்டுமே சத்யம். ஜகத் என்பது மித்யை. இந்த ஜீவன் உண்மையில் பிரம்மமாகவே இருக்கிறது. வேறாக இல்லை’ என்று. 

ப்ரஹ்ம சத்யம். 

ஜகத் மித்யா. 

ஜீவோ ப்ரஹ்ம ஏவ. 

ந அபர: 

சரி. ஒருவர் தீவிரமாக ஆராய்ந்து, விசாரம் என்று இறங்கி விடாமல் சிந்தித்துப் புரிந்து கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவருக்குப் புரியலாம் ஓர் உள்ளுணர்வாக இவ்வாறு பிரம்மம் என்ற கடைசி நிலை உண்மையைப் பற்றி. பின்னர் அவரும் நடைமுறை வாழ்க்கை என்று வந்துவிடத்தானே வேண்டும்? அப்பொழுது மீண்டும் பழையபடி அதே பழைய கச்சேரிதானே? 

இதற்குத்தான் ஸ்ரீஆதிசங்கரர் இந்தப் பிரகரண நூலை (தத்துவ உதவி நூலை) பிரம்ம அனுசிந்தனம் என்று 29 செய்யுட்கள் கொண்டதாக எழுதியிருக்கிறார். அதாவது தத்துவ ஆராய்ச்சியின் தீவிரமான தருணத்தில் புரிந்துகொண்டதைப் பின்னர் நடைமுறை வாழ்க்கைக்கு வந்த பின்பும் நினைவுக்குக் கொண்டு வந்து சிந்தித்துப் பார்த்தல், தொடர்ந்து இந்தச் சிந்தனையை மனத்தில் ஓடவிட்டுக் கொண்டே இருத்தல் என்பது ஒரு நல்ல அப்யாசம் என்று சொல்லிக் கொடுக்கிறார். அதாவது மீண்டும் நமக்கு வாய்ப்பு ஏற்பட்டு அந்தத் தீவிர தத்துவ ஆராய்ச்சியில் மறுபடியும் ஆழும்வரை இந்த அனுசிந்தனம், தொடர்ந்து சிந்தித்தல் என்பது கைகொடுக்கும். எனவேதான் இதற்கு ’பிரம்ம அனுசிந்தனம்’ என்று பெயர். எனவே இந்தச் சுலோகத்தில் சொல்லியிருக்கும் படி நம்மைப் பற்றி நாமே இப்படிச் சிந்திக்க வேண்டும் என்று சொல்லியிருப்பது நம் நடைமுறைக்கு ஒத்துப் போகவில்லையே என்று குழம்பாமல் இதுதான் தத்துவ விசாரத்தின் ஆழத்தில் வரும் உணர்வு நிலை. அதை நினைவுபடுத்திக் கொள்ளும் விதமாக அமைந்திருப்பது இந்தச் சுலோகம் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். 

*** 

தமிழாக்கம்

1) தத்துவங்களை ஆராய்ந்துகொண்டே போனால் ‘இருப்பு’ Existence என்பதுதான் கடைசியில் வந்து நிற்கிறது. ‘இருப்பு’ என்பதில் பங்குகொள்பவையாகத்தான் அனைத்துப் பொருட்களும், அவை உயிர்களோ அன்றிச் சடப்பொருள்களோ அனைத்தும் ‘இருப்பு’ என்பதில் பங்குடையவை. எனவேதான் அவை ‘இருக்கின்றன’ என்றே சொல்லப்படுகின்றன. அவ்வாறு ‘இருப்பு’ என்பதில் எது பங்குபெறவில்லையோ அஃது இல்லாததாக ஆகிவிடுகிறது. ‘இருப்பு’ என்பதற்கு ஒரு விசேஷம் உண்டு. அது என்ன? ‘இருப்பு’ என்பதில் பங்குகொண்ட பொருள், அதாவது ‘இருக்கின்ற’ பொருள் ஒன்று என்றும் இல்லாததாக ஆகவே முடியாது. அதன் வடிவம் மாறலாம். நிலை மாறலாம். இடம் மாறலாம். காலம் மாறலாம். ஆனால் ‘இருப்பு’ என்பதில் பங்குகொண்ட எந்தப் பொருளும் முற்ற முழுக்க இல்லாமைக்குப் போவதேயில்லை. அதுபோல் இல்லாத பொருள் எதுவும் ‘இருப்பதாக’ ஆவதும் இல்லை. இப்பொழுது இல்லையே. ஆனால் பின்னர்ப் புதிதாக வந்ததே என்று நாம் ஒரு பொருளைக் குறிப்பிட்டுச் சொல்ல முடியுமானால், நிச்சயம் அந்தப் பொருள் ஒரு நிலையிலிருந்து மாறி வேறோரு தோற்ற நிலைக்கு, ஒரு வடிவம் மாறி வேறொரு தோற்றத்திற்கு வந்ததாகத்தான் இருக்கும். உலகத்தில் நாம் உணரவரும் எல்லாம் ஒன்று இருந்தது, அந்தப் பொருள் அழிந்துவிட்டது, புதிதாக ஒன்று தோன்றுகிறது என்னும் எல்லாம் நுணுக்கமாகப் பார்த்தால் நம் புலனுக்குப் புலப்படாமல் நுண்ணிய நிலையில் இருந்து பின்னர்த் தோற்றம் கொள்ளும் நிலைக்கு வருகிறது என்றுதான் புரியவருகிறது. எனவே இறுதியான உண்மை, அறுதியான சத்யம் என்று தத்துவ விசாரம் செய்யும் பொழுது நமக்குக் கடைசியில் வந்து பெயராமல் நிற்பது ‘இருப்பு’ Existence, ஸத் என்பதுதான். இத்தகைய ஸத் என்பதன் மயமான ஒன்றிற்குத்தான் ஸத் + யம் ஸத்யம் என்று பெயர். எனவே அனைத்துக்கும் அடிப்படையான உண்மை ‘இருப்பு’ ஸத்யம் அல்லது Existence என்பதுவே. 

இந்த ’இருப்பு’ என்பதுதான் அனைத்துப் பொருட்களுக்கும் ‘இருக்கின்ற தன்மையை’ வழங்குகிறது. ‘இருப்பு’ என்பதில் பங்குகொள்ளாத பொருள் அதாவது ‘இருப்பு’ என்பது இருப்புடைமையை வழங்காத பொருள் இல்லாத பொருளாகவே ஆகிவிடுகிறது என்று பார்த்தோம். இந்த ‘இருப்பு’ என்பது வெறுமனே பொருட்களுக்கு இருப்புடைமையை வழங்குவது மட்டும் செய்யாமல் சில பொருட்களுக்கு, அறிவுள்ள உயிர்களுக்கு ‘இருப்பு’ ஆகிய தன்னைப் புரிந்துகொள்ளும் ஒளியையும் தருகிறது. அந்த ஒளியும் இருப்பில் பங்குகொண்ட ஒன்றாக இருந்து வழங்கப்படவில்லையேல் நாம் ஒருகாலும் இவவாறு பேசிப் புரிந்துகொள்ளும் நிலைக்கே வராமல் வெறும் சடப்பொருளாகவே இருந்திருப்போம், யாராலும் பார்க்கப்படாமல், உணரப்படாமல் அல்லவா? 

எனவே இந்தக் கடைசி உண்மையான ஸத்யம் என்பதற்கு இரண்டு தன்மைகள் இருக்கின்றன. ஒன்று, தன்னில் பங்குகொள்ளும் அனைத்திற்கும் ‘இருப்பு’ என்பதைத் தருவது. இரண்டு, தன்னைப் புரிந்துகொள்ள வேண்டிய ஒளியையும் தானே தருவது. ‘இருப்பைத்’ தரும்பொழுது அதற்குப் பெயர் ‘வாஸு’ என்பது. ஒளியைத் தரும்போது அதற்குப் பெயர் ‘தேவன்’ என்பது. எனவே இந்தச் சத்யம் ’வாஸுதேவன்’ என்று சொல்லப்படுகிறது. ‘வாஸுதேவன்’ என்று சொல்லப்படும் பிரம்மம் என்கிறார் ஸ்ரீஆதிசங்கரர். பிரம்மம் என்றால் பெரிதினும் பெரிதான பெரும் சத்யம் என்று பொருள். ‘பெரிய கடவுள்’ என்று பாரதியார் தம் கவிதையில் குறிப்பிடுகிறார். எனவேதான் மகாத்மா காந்தி ‘சத்யம்’ என்பதைத் தாம் கைக்கொண்ட தத்துவம் ஆகவும், அஹிம்சை என்பதை அந்தத் தத்துவத்திற்கான அனுஷ்டிக்கும் நெறியாகவும் கைக்கொண்டார். நாம் ஸ்ரீஆதிசங்கரருக்கு வருவோம். ஸ்ரீஆதிசங்கரர் தாம் மிகச்சிறந்த கவி என்பதையும் இங்குக் காட்டுகிறார். அத்வைத உண்மையைத்தான் சொல்கிறார். ஆனால் வாஸுதேவன் என்று கடவுள் வணக்கம் செய்யும் தொனியையும் கூடவே தொடக்கத்தில் வைக்கின்ற நயம் மிக அழகு.

‘வாஸுதேவன்’ என்று குறிப்பிடப்படும் பிரம்மம் குறைவே அற்றது என்று கூறுகிறார். இப்பொழுது பிரம்மத்திற்கு மூன்று தன்மைகள் சங்கரரால் சொல்லப்படுகின்றன. தன்னுள் அடங்கும் பொருளுக்கு ‘இருப்பு’ என்பதை நல்குவதால், தானே முழு இருப்பாகவும் இருப்பதால் ‘வாஸு’ என்றும், தன்னை உணரத் தக்க ஒளியைத் தானே தருவதால், தானே ஒளியாகவும் இருப்பதால் ’தேவன்’ என்றும் இருக்கும் ‘வாஸுதேவன்’ என்று சொல்லப்படும் பிரம்மம் தன்னுள் அடங்கும் பொருளுக்குக் குறையே இல்லாமல் ஆக்குகிறது என்றும் சொல்கிறார். 

’வாஸுதேவ ஆக்யம் அவ்யயம்’ 

ஆக்யம் - என்று சொல்லப்படும்; 

அவ்யயம் - குறைவே இல்லாதது, குறைவை நீக்குவது; 

எது? ‘பரம் ப்ரஹ்ம’ கடைசி சத்யமான பிரம்மம். 

நம்முடைய குறைவை அஃது எப்படி நீக்கும்? உண்மையில் நாம் அதுவாகத்தான் இருக்கிறோம். நம்மை அது அல்லாததாக நாம் நினைத்துப் புழங்குவது நம் அவித்யை காரணமாக, நம்முடைய பிரமை. தத்துவ விசாரத்தின் மூலம் நாம் உண்மையில் அதுதான் என்று உணரும் போது நம் குறைவு நீங்குகிறது. அது அதுவாகவே இருப்பதன் மூலமே நம் குறைவை நீக்குகிறது. நாம் அதுவாக அல்லாத ஒன்றாகப் பிரமிக்கிறோம். நம் பிரமை தத்துவ விசாரத்தால் கடைசியில் நீங்கும் போது நாம் அதுவாகத்தான் இருக்கிறோம், இருந்துகொண்டே இருக்கிறோம் என்று உணரும் போது நம் உண்மை நிலையை உணர்கிறோம். அது அதுவாகவே என்றும் எப்பொழுதும் இருப்பதன் மூலமே நமக்கு ‘இருப்பையும்’ தருகிறது; தன்னை உணரும் ஒளியையும், தானே அந்த ஒளியாகவும் ஆகிறது; நம் குறைவையும் நீக்கி நம்மைத் தானாகவே உணரும் நிலையில் குறைவற்ற நம்மையும் அளிக்கிறது. 

இவ்வாறு வாஸுதேவன் என்று சொல்லப்படும் இந்தப் பரப்பிரம்மமே நான் என்று உணர்பவர் முக்தர் ஆகிறார். முக்தி என்பது விடுதலை. மோக்ஷம். சுயநிலை உண்மையை உணர்தலே விடுதலை அதுவே மோக்ஷம். அவ்வாறு உணரும்வரை? பத்தர் அல்லது கட்டுண்டவராகவே இருக்கிறது இந்த ஜீவன். 

வாஸுதேவன் எனப்படும் பரப்பிரம்மமே நான் 

என்று நிச்சயமாய் உணர்ந்தவர் முத்தரே பிறர் பத்தரே

(அஹம் ஏவ பரம்ப்ரஹ்ம வாஸுதேவாக்யம் அவ்யயம் |

இதி ஸ்யாத் நிச்சிதோ முக்தோ பத்த ஏவ அந்யதா பவேத் ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Tuesday, December 30, 2025

தசச்லோகீ - பத்துப் பாக்களில் மொத்த அத்வைதம்

ஸ்ரீஆதிசங்கர பகவத்பாதரின் அத்வைத சித்தாந்தத்தையே பத்துச் சுலோகங்களில் அடக்கி உரைக்கும் அற்புதமான பிரகரண நூல் (தத்துவத்தைப் புரிந்துகொள்ள உதவிநூல்) தசச்லோகீ என்பது. இந்த நூல் தோன்றிய பின்னணியும் சுவாரஸ்யமானது. 

காலடியில் துறவறம் மேற்கொண்ட பின்னர்ச் சங்கரர் தம் குருவைத் தேடிப் போய் நர்மதா நதி தீரத்தில் சமாதி நிலையில் ஆழ்ந்திருந்த கோவிந்தபகவத்பாதரை அண்டி அவரைத் துதித்த போது கண்விழித்த குரு கேட்கிறார்: ‘நீர் யார்?’. அதற்குத் தான் யார் என்று சுயத்தெரிவிப்பு செய்ய வேண்டிய நிலையில் இருக்கும் சங்கரர் தாம் யார் என்று சொல்ல முனையும் போது விளையும் பதிலாக எழுந்தது இந்த ‘தசச்லோகீ’ என்பது. தசச்லோகீ என்றால் பத்துச் சுலோகங்கள், பத்துச் செய்யுட்கள் என்று பொருள். 

இந்தச் சுலோகம் எத்துணை முக்கியம் என்பது இதற்கு மட்டும் எழுந்த வியாக்கியானங்களை நோக்கினாலே புரியவரும். ஸ்ரீமதுசூதன ஸரஸ்வதி என்னும் பெரும் அத்வைத ஞானியார் (17ஆம் நூற்) இதற்குச் ‘சித்தாந்த பிந்து’ என்று ஒரு பேருரையே செய்திருக்கிறார். அத்வைத சித்தி, வேதாந்த கல்பலதிகா, ஸ்ரீபாகவதத்திற்கு ஓர் உரை, வோபதேவரின் ஹரிலீலா என்பதற்கு ஓர் உரை, சங்க்ஷேப சாரீரக வியாக்கியானம், கீதைக்குக் கூடார்த்த தீபிகை என்னும் வியாக்கியானம், சிவமஹிம்ன ஸ்தோத்திரத்திற்குச் சிவவிஷ்ணுபர டீகை, ஸ்ரீகிருஷ்ணரைப் பற்றிய ஆனந்தமந்தாகினி என்னும் ஸ்தோத்திரம், பிரஸ்தான பேதம் என்று ஆதார நூல்களைப் பற்றிய நூல், பக்தி சம்பந்தமாகப் பக்தி ரஸாயனம் போன்ற நூல்களையும் எழுதியவர் இந்த மகான் ஸ்ரீமதுசூதன ஸரஸ்வதியே ஆவார். இவர் எழுதிய தசச்லோகீ என்பதற்கான உரைதான் சித்தாந்த பிந்து. இந்தச் சித்தாந்த பிந்து என்பதற்கே ஓர் உரை அதாவது உரைக் குறிப்பு என்னும் டீகா ஒன்றை எழுதியுள்ளார் ஸ்ரீபிரஹ்மானந்த ஸரஸ்வதி என்பவர். அவர் எழுதிய டீகாவிற்கு ந்யாயரத்னாவளி என்று பெயர். எனவே பத்துச் செய்யுட்களும் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் உணர முடியும். 

உபநிஷதங்களில் முழுதத்துவ நிலைப்பாட்டையுமே ஒற்றை வரியில் அல்லது ஒரு சொற்கோவையில் சொல்லிவிடும் இடங்கள் உண்டு. அத்தகைய வரிகளை அல்லது சொற்கோவைகளை ஞானியர் ‘மஹாவாக்கியங்கள்’ என்று உரைப்பார்கள். ‘தத்வமஸி’, ‘அயம் ஆத்மா ப்ரஹ்ம’, ‘அஹம் ப்ரஹ்மாஸ்மி’, ‘ப்ரக்ஞானம் ப்ரஹ்ம’, ‘ஸர்வம் கல்விதம் ப்ரஹ்ம’ போன்றவை அவையாகும். இவற்றில் ‘தத்வமஸி’ என்னும் மஹாவாக்கியம் மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். நேரடியாக நம்மைப் பார்த்து நமக்கும் பரம தத்துவத்திற்கும் என்ன தொடர்பு என்பதை உடைத்துச் சொல்லும் வாக்கியம் இது. ‘தத்’ என்பது அந்தப் பரம தத்துவத்தைக் குறிக்கும். ‘த்வம்’ என்றால் நீ என்று நம் ஒவ்வொருவரையும் முன்னிலைப் படுத்திச் சொல்லும். ‘அஸி’ என்றால் இருக்கின்றாய் என்ற பொருளில் ஜீவனாகிய நாம் உண்மையில் என்னவாக இருக்கின்றோம் என்று நமக்கு விழிப்பை ஊட்டுவது இந்த வாக்கியம். ‘இந்தத் ‘தத்வமஸி’ என்னும் சொல் அல்லது சொற்கோவையின் பொருளை உள்ளபடிப் புரிந்துகொண்டாலே போதும் முக்திக்கான கல்வி நம் கைபுகுந்தது என்று சொல்லலாகும். 

இந்தத் தத்வமஸி என்னும் மஹாவாக்கியத்தில் த்வம் என்னும் சொல்லுக்கான உள்மறைப் பொருள் என்ன என்பதைப் பத்து சுலோகங்களில் முதல் மூன்று சுலோகங்களால் விளக்குகிறார் தசச்லோகீயில் ஸ்ரீஆதிசங்கரர். அடுத்து வரும் சுலோகங்கள் எல்லாம் தத் என்னும் பரம தத்துவமாகிய பரம்பொருள் என்ன என்பதைப் பற்றிய விவரம். இவ்வாறு பெரும் வேதாந்த விரிவையே உள்ளடக்கிய தத்வமஸி என்பதன் விளக்கமாக அமைந்த தசச்லோகீ என்னும் நூலிற்குப் பேருரைகள் எழுந்ததில் என்ன வியப்பு? 

தமது சித்தாந்த பிந்து என்ற உரையின் தொடக்கத்தில் ஸ்ரீமதுசூதன ஸரஸ்வதி கூறுகிறார்: “உலகில் ஜீவர்கள் தாமாகவே நேரடியாக விசாரத்தில் ஈடுபட்டோ அல்லது அறிந்தோர் மூலம் கேட்டறிந்தோ உலகியல் சுழற்சியினின்றும் விடுபட்டு உயர்வதற்கு ஆன வழியை பகவானான ஸ்ரீசங்கரர் ஆத்மா அல்லாதவற்றைப் பிரித்தறிந்து ஆத்மாவின் உண்மைத் தன்மையாகிய நித்தியமானதும், சுத்தமானதும், புத்தமானதும், முக்தமானதுமான இயல்பை உணர்ந்து உய்வதற்காகச் சுருக்கமாக இந்தத் தசச்லோகீயை அருளினார்” என்று கூறுகிறார். 

(இஹ கலு சாக்ஷாத் பரம்பரயா வா ஸர்வான் ஜீவான் ஸமுத்திதீர்ஷு: பகவான் ஸ்ரீசங்கரோSநாத்மப்யோ விவேகேந ஆத்மானம் நித்யசுத்தபுத்தமுக்த ஸ்வபாவம் ஸங்க்ஷேபேண போதயிதும் தசச்லோகீம் ப்ரணிநாய) 

(ப்ரஹ்மானந்த ஸரஸ்வதியின் குறிப்பு: 

நித்யம் - காலத்தால் வரையறுக்கப்படாதது 

சுத்தம் - விருப்பு வெறுப்பு முதலிய அசுத்திகள் அற்றது 

புத்தம் - தன் உள்ளார்ந்த ப்ரகாசத்தில் ஆனந்தமாய் இருப்பது 

முக்தம் - அவித்யை உருவான பந்தங்கள் அற்றது )

தமிழாக்கம்:  

நிலமல்ல நீரல்ல நெருப்பல்ல காற்றுமல்ல 

வானல்ல புலனல்ல பொறிக்கூட்டம் அவையுமல்ல 

ஒருநிலையில் நில்லாத அவையெல்லாம் ஓய்ந்திட்ட 

ஆழ்துயிலில் மிஞ்சி நிற்கும் ஒன்றான சிவம் மட்டுமே நான். 

 

வர்ணங்கள் இல்லை எனக்கோ வர்ணாச்ரம தர்மங்கள் இல்லை 

மனம் குவிக்கும் தாரணை தியான யோகங்கள் இல்லை 

நானென்ற ஒட்டும் எனதென்று பற்றும் ஆத்மா அலாதவற்றில்  

அத்யாஸம் அழிந்திட்ட படியால் அவையற்று மிஞ்சும் 

ஒன்றாகி நிற்கின்ற சிவம் மட்டுமே நான். 

 

தாயென்றும் தகப்பன் என்றும் தேவர்கள் மற்றும் லோகங்கள் என்றும் 

வேதங்கள் என்றும் வேள்விகள் தீர்த்தங்கள் என்றும் ஆழ்துயில் நிலையில் 

சொல்வதுமில்லை அந்நிலை சூனியமும் இல்லை ஆத்மாவின் உண்மையில் 

எல்லாம் அடங்கி எஞசிடும் ஒன்றான சிவம் மட்டுமே நான். 

 

 சாங்கியர் சொல்லும் படியன்று அதுவோ சைவரொடு  

பாஞ்சராத்திரியர் ஜைனர் மீமாம்சைக் கருத்தினரும் சொல்லுவதுமன்று 

சீர்மைமிகு அனுபூதிநிலையில் தூயதன் ஆத்ம நிலையாகி மிஞ்சி 

ஒன்றென்று நிற்கின்ற சிவம் மட்டுமே நான். 

 

மேலன்று கீழன்று உள்ளன்று வெளியன்று 

நடுவன்று அயலன்று திசையாய் முன்னன்று பின்னன்று 

விரிந்த வெளியெங்கும் வியாபித் தொருபடித்தாய் வரையற்று 

மிஞ்சுகின்ற அதுவாகி ஒன்றான சிவம் மட்டுமே நான். 

 

 வெளுப்பன்று கருப்பன்று சிவப்பன்று மஞ்சளன்று 

சிறிதன்று பெரிதன்று குறுக்கன்று நீளமன்று அதுவோ 

சோதிமயமாகி எங்கும் உருவற்ற ஒன்றாய் 

மிஞ்சி நிற்கின்ற அதுவான சிவம் மட்டுமே நான். 

 

 புகட்டுவோன் இல்லை புகலும் சாத்திரம் இல்லை 

சீடனுமில்லை மற்றும் புகட்டலும் இல்லை 

நீ என்பதும் இல்லை நான் என்பதும் இல்லை 

அயல்நின்ற பிரபஞ்சமும் இல்லை வேறுபடுத்துமெதுவும் 

இயலாததாகி இயலும் சொந்த இயல்பான ஞானமே மிஞ்சும் 

அதுவாகி நிற்கின்ற சிவம் மட்டுமே நான். 

 

விழிப்புநிலை இல்லை கனவொடு ஆழ்துயில் நிலையுமில்லை 

விழிப்பவன் கனவோன் துயிலன் என்றெதுவும் இல்லை 

மூநிலையும் அவித்தையின் மயமாயிருப்பதால் அவைகடந்த துரியமாய் 

மிஞ்சுகின்ற ஒன்றான சிவம் மட்டுமே நான் 

 

வியாபித்து எங்கும் இருப்பதனாலும் இதமாகி என்றும் இயல்வதனாலும் 

தன்னில் தான் என்றும் நிலைப்பதனாலும் தன்னின் வேறெதுவும் வேண்டாததாலும் 

தனக்கயலாய் உலகமெல்லாம் வெறும் தோற்றம் ஆனதாலும் 

தானாக மிஞ்சித் தன்னில் நிற்கின்ற சிவம் மட்டுமே நான். 

 

ஒன்றானதும் அன்று அதுதனக்கு வேறாய் இரண்டாவது எவ்வாறு? 

தனித்திருப்பதும் அன்று தானாய்த் தனிமைப்படாததும் அன்று 

ஒன்றலாத சூனியமன்று சூனியமலாத ஒன்றும் அன்று 

இரண்டற்ற ஒன்றாய் அத்வைதமாகி வேதாந்த சாரமாகி 

விளங்குகின்ற ஒன்றையே எவ்வண்ணம் விரித்துரைப்பேன்? 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

 

Sunday, December 21, 2025

அறியாமை என்னும் புன் நாற்றம்

அறியாமையை இருளாகச் சொல்வது வழக்கம். இருள், ஒளி, நிறம் என்னும் போதே கண்ணுக்கும், காட்சிக்கும் உரிய விவரணைகள் வருகின்றன. ஆனால் யாரேனும் அறியாமையை தீய நாற்றம், புன் நாற்றம், துர்நாற்றம் என்றபடியாக விவரித்தவர்கள் உண்டா என்று தெரியவில்லை. அறியாமை என்பது ஓர் ஆள்தன்மையின் ஒவ்வாத மணம் என்றால் ஒவ்விய நறுமணம் என்பது அறிவு என்றாகிறது. அனைத்து அறிவின் உருவாய் இருக்கும் கடவுளை மறைகள் உயர்ந்த மணங்கள் அனைத்தும் ஆன உருவம் என்று கூறுகின்றன. ஆனால் அறியாமையைக் குறித்து அருவருக்கும் நாற்றம் என்று எங்கேனும் இருக்கிறதா தெரியவில்லை.

ஆனால் நம் ஆன்ற பெரும் தமிழறிஞர் ஒருவர் அவ்வாறு அறியாமையைக் குறித்து விவரிக்கும் போது அதில் தென்படும் புதுமையும், பொருத்தமும் மிக்க உவகையைத் தரக் கூடியன. யார் அந்த அறிஞர்? 

உயர்திரு சி வை தாமோதரம் பிள்ளை அவர்கள்தாம். யாழ்ப்பாணத்தில் தோன்றிய முத்துக்குமார கவிராசரிடத்தில் தமிழ் பயின்றவர் தாமோதரனார் அவர்கள். தமது ஆசான் தமக்கு என்ன செய்தார் என்று ஒரு செய்யுளில் கூறுகிறார். தமது ஆசிரியர் கவிராசர் பெரும் கவிமேகமாய் ஆனாராம். ஆகி, தம்மீது பெருமழையாகப் பொழிந்தாராம். எதற்கு? தம்முடைய வெள்ளறிவின் முடைநாற்றத்தைப் போக்குவதற்கு. வெள்ளறிவு என்றால் வொயிட்டா, பளபளன்னு இருக்கும் என்று நினைத்தல் கூடாது. உள்ளடக்கமே இல்லாது வெளிறிப் போன அறிவு. சோகையின் வெண்மை. அந்த நன்றி என்னாளும் நெஞ்சை விட்டு அகலாது என் ஆசானை வணங்குகிறேன் என்கிறார் தாமோதரனார். 

"தெள்ளுத தமிழ்க் கடல்கடந்து செழியகலைத் துறைபடிந்து
திரிபின் ஞானக்
கொள்ளைகொண்டு நுகர்ந்தமுத்துக்குமாரகவி மேகமிதைக்
கொடிச்சுன் னாக
வள்ளலென துள்ளமதி கொள்ளநறை விள்ளுதமிழ்
மணஞ்சற் றேறி
வெள்ளறிவின் முடைநாற்றம் வீவித்தான் விரைமலர்த்தாள்
மிலைவன் மாதோ.” 

வெள்ளறிவின் முடைநாற்றம் - அரிய சொற்றொடர். 

***

Saturday, November 22, 2025

காட்டுவதை வைத்துக் காணாததை உணர்தல்

உலகில் நமக்கு எதிலும் பார்த்தால் ஒரு பகுதி தெரிகிறது. இன்னொரு பகுதி தெரிவதில்லை. கண்கள் தெரிந்த பகுதியை மட்டுமே பார்க்கும் வல்லமை உடையது. தெரியாமல் மறைந்து இருக்கும் பகுதியை எப்படிக் காண்பது? தெரிந்த பகுதியைக் கொண்டு தெரியாத பகுதியைக் காணும் முறைதான் கருதல் என்பது. அனுமானம், யூகித்தல் என்றெல்லாம் சொல்லலாம். ஆனால் ஆரம்பம் கண்ணால் கண்டதைக் கொஞ்சம் கருத்து ஊன்றிச் சிந்திப்பதன் மூலமே காணாத பகுதி விளங்குகிறது. மரத்திலிருந்து ஆப்பிள் எல்லோர் மீதும் விழுந்துகொண்டுதான் இருந்தது. அனைவரும் கண்ட காட்சிதான் அது. ஆனால் நியூட்டன் அந்தக் காட்சியில் கருத்தை நாட்டினார். எனவே தெரியாமல் இருந்த பகுதியான விதியைக் கண்டுபிடித்தார். காட்டப்ப்பட்டது என்ன? கண்டது என்ன? கரந்து இருந்த பகுதியைக் கருதிக் கண்ட பொழுது அங்குக் கண்ட காட்சி என்ன? என்பதை ஞானசம்பந்தப் பெருமான் தமது தேவாரத்தில் ஒரு பாட்டில் சொல்கிறார். 

”கண்காட்டு நுதலானும் கனல்காட்டும் கையானும்
பெண்காட்டும் உருவானும் பிறைகாட்டும் சடையானும்
பண்காட்டும் இசையானும் பயிர்காட்டும் புயலானும்
வெண்காட்டில் உறைவானும் விடைகாட்டும் கொடியானே.” 

சாதாரணமாகக் கண் என்பதைப் பார்க்கிறோம். கண்ணால் பார்க்கிறோம். கண்ணால் பார்க்கப்படுகிறோம். ஆனால் நுதல் என்ன வேலை செய்கிறது? பார்வையில்? அதுவே ஒருவர் தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருக்கிறார். அது நமக்கு எப்படிப் புலனாகிறது? அவருடைய புருவங்கள் குவிந்து, சுருங்கி அவர் ஏதோ தீவிர எண்ணத்தில் இருக்கிறார் அல்லது உணர்ச்சியில் இருக்கிறார் என்பதை நமக்குத் தடயம் சொல்கிறது. ஆனால் சிவனாரோ நுதல் விழியே உடையவர். அதாவது தியான விழியாலேயே அனைத்தையும் காண்பவர். தியானம் என்பது அனைத்து பேதங்களையும் நீக்கிக் காட்சியை ஒன்றாகக் காண்பதே காட்சி என்று ஆக்கவல்லது. எனவேதான் சிவனார் தமது நெற்றிக் கண்ணால் உலகை அழித்து விடும் வல்லமை உள்ளவர் என்கிறோம். உடனே நாம் ஏதோ உலகியல் ரீதியாக அழித்தல் என்று நினைக்கிறோம் ஆனால் அதுவோ பேதங்கள் அற்ற ஏகத்வமான பார்வையைக் குறிக்கிறது. பேதங்கள்தாமே நாம் காணும் உலகம். பேதங்கள் அற்ற பார்வைக்கு நாம் உயரவேண்டும் என்பதைத் தம் நெற்றிக் கண்ணால் உணர்த்துகிறார் முக்கண் முதல்வர். அந்தக் கண்காட்டு நுதலான் யார்? 

கனல் நாம் பார்க்கும் ஒன்று. ஆனால் ஊழித்தீ என்பது அனைத்தும் எரிந்து பின்பு சுடரும் தீ. உலகெலாம் அழிந்தபின்னர்ச் சுடரும் அந்தத் தீ என்ன? ஞானம் அல்லவோ? ‘ஞான அக்னியில் உன் கர்மங்கள் அழிந்துவிடும்’ என்கிறது ஸ்ரீபகவத் கீதை. கனலை வைத்து நாம் முடிவு செய்யலாம். அதை ஏந்தும் கை ஒன்று உண்டு என்று. ஞானம் வாய்க்கப் பெற்றால் நாம் உணரலாம் பிஞ்ஞகனராரின் பேரருள் கரத்தை. எனவே அந்தக் கனல் காட்டும் கையான் யார்? 

பெண் இருப்பது நம் காட்சிக்குப் புலனாகிறது. பெண் என்பவள் உயிரைக் கருவில் சுமந்து உருவாக்குபவள். எனவே உருவு பொலியும் பிரகிருதி, சக்தி என்பதற்கு அவளே தகுந்த குறியீடாக அமைகிறாள். ஆனால் உருவு என்பது கண்ணிற்குப் புலனாவது என்றாலும் அதற்குப் பக்கத்திலேயே புலனாகாத அருவம் என்பதுவும் இருக்கிறது. அந்த அருவத்தின் காரணமாகவே, துணைகொண்டே உருவும் தோன்றுகிறது. உண்மையில் உரு அரு என்பது நாம் காண்பதன் எல்லையையும், காணாததின் தொடக்கத்தையும் குறித்து நிற்கிறது. உரு அரு ஆக நிற்கும் சிவனாரின் கோலம் உருவருவத் திருமேனியாக பொலிகிறது. 

பிறை என்பதோ சந்திரனைக் குறிக்கிறது. இயற்கையின் பொங்கு நிகழ்ச்சிகள் பலவற்றிற்கும் தூண்டுதலாக விளங்குவது பிறை. ஆனால் சிவனாரிடத்தில் அது காட்டுவதோ பொங்குவது அனைத்தும் அமைதியாக அடங்கிய நிலையைக் குறிக்கும் சடை அல்லது தவம். உலகில் ஒரு பொருளுள்ள பிறை கடவுளிடத்தில் கடந்த பொருளைக் காட்டி நிற்கிறது. தடைப்படாத செயல்களின் நடுவே தளும்பாத அமைதியைப் பேணும் குறிப்பை நமக்குக் காட்டுவது சிவனாரின் இந்தக் கோலம். பிறை காட்டும் சடையான் யார்? 

பாடல், இனிய பாடல், சோகமான பாடல், ஆழ்ந்த பாடல் கேட்கும் போது சொல்கடந்த நிலையில் நம் மனம் இசைகிறது. அந்த நிலையில் நம் மனத்தை இசைக்கிறது அந்தப் பண். சொல்லும், பொருளுமாய், பண்ணும் இசையுமாய் நிற்பது பார்வதி பரமேசுவரர்தான் என்பது நம் உணர்வில் உறைத்தால் எத்தனை நன்மை! பண் காட்டும் இசையோன் யார்? 

பாலை. வறண்ட நிலம். பயிர் வாடிக் கருகிக் கட்டைகள்தாம் இருக்கின்றன. என்ன கொடுமை என்கிறோம். எங்கோ போய்விட்டு மீண்டும் அந்த வழியே வருகிறோம். இடைப்பட்ட காலம் சில மாதங்கள்தான் என்றாலும், அந்த வறாட்சி எங்கே போயிற்று? பச்சை பசேல் என்று செடியும் கொடியும் போர்த்து, பூத்து, புள்ளும், மாவும் திரிந்து காட்சியே மாறிப் போய்விட்டது. கண்ணுக்குப் பயிர்தான் தெரிகிறது. ஆனால் அதன் பின்னால் பெய்த மழை, புயல் நம் கருத்திற்குப் புலனாகிறது. அதுபோல் வறண்ட வாழ்வில், கருகிப் போன பொழுதுகளில் அருளின் மழை பெய்கிறது. சிவனாரின் அருள் பெருமழையாய்ப் பெய்து வறட்சியை நீக்கி, எங்கும் புத்துணர்வையும், புது எழுச்சியையும் மலர்த்திவிடுகிறது. பயிர் காட்டும் புயலோன் ஆன அவன் யார்? 

திருவெண்காட்டில் உறைபவனும், விடை ஆகிய நந்தியைக் கொடியாக உடைய சிவபெருமான் தான் அது எல்லாம் என்று கவிதை பேசுகிறார் காழிப்பிள்ளை. தமிழ், கவிதைக்கான செல்ல மொழியோ என்ற சந்தேகம் நமக்கு வலுக்கிறது. 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

Wednesday, November 12, 2025

மாயவரம் காமாக்ஷி அம்மா

மாயவரம் துபாஷி அக்ரகாரம். 1910 ஆண்டு. ஆந்திர தேசத்துக் குடும்பம் ஒன்று. ஒரு சிறுமி. தன் கணவர் யானமன்றம் ராமலிங்க ஐயர் 1871 ல் இறந்துபட அடுத்து வாழ்வில் அவள் எடுத்த முடிவும், அவள் அடைந்த புலமையும்தான் மிகவும் வியக்க வைப்பது. சம்ஸ்க்ருதத்தைக் கற்றுத் தேர்ந்தாள். அத்வைத சித்தாந்தத்தில் நெடுகப் பயின்றாள். ஆழமான புலமை. விளைவு அவள் தன் சொந்த உபயோகத்துக்கு என்று எழுதி வைத்த வடமொழிக் குறிப்புகள் அத்வைத நுணுக்கங்களைப் பற்றி, அதுவே நண்பர்கள் வற்புறுத்திப் போட வைத்தனர், அத்வைததீபிகா என்று 40 பக்கத்தில் அரிய, செறிய நூலாக ஆகியிருக்கிறது 1910ல். 

 

ஸ்ரீ டி எஸ் நடேச சாஸ்திரியார் அதை நூலாகப் பிரசுரித்துக் கூடவே ஆங்கிலத்தில் அதற்கான மொழிபெயர்ப்பும் தந்து 80 பக்க நூலாகத் தந்துள்ளார். 

துபாஷ் அக்ரகாரம் என்பது அம்மாளின் குல முன்னோரான துபாஷ்  ராமஸ்வாமி ஐயர் அவர்களால் ஏற்படுத்தப்பட்டதுவாம். துபாஷ் என்றால் த்விபாஷி. அதாவது அரசாங்கத்தில் இருமொழித் தொடர்பு நிபுணர்.  

நூலின் தொடக்கத்தில் ஏன் இந்த நூலை எழுதலாயிற்று என்று கூறுகிறார். 

“பரமபுருஷார்த்த ப்ரதாத்வைதஸித்தி க்ரந்தஸ்தாநாம் பக்ஷதாவச்சேதக விசாரமாரப்ய ப்ரத்யக்ஷஸ்யாகம பாத்யத்வ விசாராவதி கதிபயவாக்யாநாம் ஸம்யகுபபாதனாத்மக வாக்யஸமூஹரூப: அத்வைததீபிகாக்ய: ப்ரபந்த: ஸ்வபுத்திவைசத்யாய பாலாநாம் ஸுகபோதாய ச மஹாதிகாரவதா விதக்தேநாநுஜேந ஸுப்ரஹ்மண்யேநாதிஷ்டயா காமாக்ஷ்யா க்ரியதே | தஸ்மின் குணாட்யா: ஸந்த: கருணாம் க்ரியாஸுரிதி ஸவிநயம் அப்யர்த்தநா |”

அத்வைத சாஸ்திரங்களைக் கற்கும்போது சாஸ்திரம் கூறும் முடிவுகளுக்கும், பிரத்தியட்சமாகப் பார்த்துப் புரிந்து கொண்டுள்ள எண்ணங்களுக்கும் முரண் உண்டாகி ஐயங்கள் ஏற்படும்போது பலவித அனுமானங்களால்தான் அந்த ஐயங்களை நீக்கிச் சாஸ்திரங்களின் கருத்துகளில் உறுதி ஏற்பட முடியும். இந்த வழியே அத்வைதஸித்தி முதலிய நூல்களில் காட்டப்பட்டிருப்பதும் ஆகும். அந்த நூல்களை அடிப்படையாக வைத்தே சொந்த நலனுக்கும் சிறுவர்களின் நலனுக்குமாக இந்த அத்வைததீபிகா எழுதலாகிறது என்று கம்பீரமாகத் தொடங்குகிறார் காமாக்ஷி அம்மா. 

1871ல் ஆரம்பித்த கல்வி 1910ல் நூலாக வெளிவந்திருக்கிறது. இதுபோல் எத்தனை மகத்தான பெண்மணிகள்! ஸ்ரீபெரும்புதூரில் இருந்த பத்தி யதிராஜம்மாள் (இவரைப் பற்றி முன்னர் எழுதியுள்ளேன்), கல்யாணி மாமி, சாது நித்யானந்தம்மாள் (இவரைப் பற்றியும் எழுதியுள்ளேன்), இப்பொழுது மாயவரம் காமாக்ஷி அம்மா. எப்படியோ நான் தெரிந்துகொண்டு விடுகிறேனா அல்லது இந்த மகனீயர்களான மாதாக்கள் என்னைத் தேர்ந்து தம்மைத் தெரியப் படுத்துகின்றனரா? எப்படியோ வியப்புதான் ஏற்படுகிறது. பெண்களின் உலகத்தையும், அவர்கள் உலகத்தைப் பார்த்துக் கொள்ளும் அபிப்ராயங்களையும் நாம் சரிவரக் கவனம் தந்து பொருந்திக் கேட்பதில்லை என்ற வருத்தம் எனக்கு முன்னரே உண்டு. மொழிவு எல்லாம் அவசர உலகத்து ஆண்வழியாகவே அமைந்து விடுகிறதோ என்ற தயக்கமும் இருக்கிறது. நினைத்துப் பாருங்கள் அந்தக் காலத்தில், 1871ல், ஒரு சிறுமி, நமது மாயவரத்தில், துபாஷ் அக்ரகாரத்தில், வாழ்க்கை தனித்துப் போய்விட, சம்ஸ்க்ருதம், அதவைதக் கல்வி என்று தன் பயணத்தைத் தொடங்கியவர் எழுதி  வைத்திருப்பதெல்லாம் அரிய நடை வடமொழியில், பக்ஷம், ஸாதர்ம்யம், ஸாத்யதை, தோஷம், பக்ஷவிசேஷணம், அன்யதரஸித்தி, ஆச்ரயஸித்தி, சாத்யப்ரசித்தி என்றெல்லாம் நவ்யநியாயக் கடின பதங்களைப் பொழிந்து எழுதுகிறார் என்றால்... இன்னும் எவ்வளவு பெண்மணிகள் யாரும் அறியவராமலேயே... !

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

*** 

Wednesday, April 2, 2025

அசோக மன்னனின் தர்ம சாசனங்கள்

சக்ரவர்த்தி அசோகன் கி மு 304 தொடங்கி 232 கி மு வரையில் வாழ்ந்த காலத்தில் பகவான் புத்தரின் போதனைகளைக் கற்று வாழ்க்கையின் பொருள் புரிந்தவனாய் வழக்கமான தன் அரசாட்சியையே அறத்தின் மாட்சிமிக்க அரசாட்சியாக மாற்றினான். அவ்வாறு மாற்றியதற்கான சாட்சியாகக் காலத்தில் மறையாத சான்றுகளைப் பாறையில் வெட்டுவித்தான். செயலில் காட்டுகின்ற செம்மை உலகில் பாறைமீது எழுத்துப் போல் மறையாமல் நின்று இலங்கும் என்று புலவர்கள் உபமானம் பாடுகின்ற அளவிற்கு அஃது ஒரு புதுமையாக இருந்தது. அறத்தைக் குறித்தே வாழ்வில் 24 மணி நேரமும் சிந்தித்த ஒரு மன்னனைக் குறித்து நாம் பேசுகிறோம் என்பது உடலில் மயிர்பொடிக்கச் செய்யும் விஷயமாகும். அசோகன் அவ்வாறு இருந்தான் என்பது ஒரு பங்கு என்றால் அவன் அவ்வாறு இருந்தான் என்பதை இன்றும் நாம் நேரடியாகப் புரிந்துகொள்ளும் வகையில் காலத்தை மீறி நிற்கும் அவனது பாறை எழுத்துகள், அவையும் ஒரு காரணம். வேறு எந்த விதத்தில் அவன் சான்றுகளை விட்டுச் சென்றிருந்தாலும் காலத்திற்கும், ஐயத்திற்கும் இடம் இருந்திருக்கும். 1925ல் இந்தச் சாசனங்களை மொழிபெயர்த்த கும்பகோணம் காலேஜ் சரித்திரப் பேராசிரியர் திரு ராம ஐயர் தமது நூலில் முகப்பில் சொல்லும் வார்த்தைகள் முற்றிலும் உண்மை என்று நாம் உணர முடியும். 

” அசோகனது சாஸனங்கள் உலக சரித்திரத்திலேயே ஒரு புதுமை எனலாம் . ஆயிரக்கணச்கான கல்வெட்டுக்களும் வேறு பலவித புராதன விதங்களும் நமக்கு இப்புவியின் பல பாகங்களிலிருந்து கிடைத்திருக்கன்றன; ஆயினும் தன் பிரஜைகளின் க்ஷேமத்தின் பொருட்டு, தர்மோபதேசங்களை எழுதிவைத்த அரசனை நாம் வேறெங்கும் கண்டிலேம். இந்த விதங்கள் இந்திய சரித்திரத்தில் மிகவும் ஏற்றமுடைய தஸ்தாவேஜுகள், முதலாவது, இவற்றைவிடப் பழைமையான லிகிதங்கள் அநேகமாக இந்தியாவிற் கிடையா, இவற்றின் கருத்தை அறியும் பொருட்டுச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தியாவிற் சிலாசாஸன ஆராய்ச்சிக்குத் தொடக்கமாகும், இரண்டாவது, இவற்றிற் காணப்படும் லிபி எழுத்து நம் நாட்டில் தற்காலம் உபயோகப் படுத்தப்படும்
பல எழுத்துக்களின் ஆதியை விளக்குகிறது, மூன்றாவது, பெளத்தமத சரித்திரத்தை விளக்க இச்சாஸனங்கள் இன்றியமையாதன. நான்காவது, இந்த லிகிதங்களிலுள்ள பாஷை, மூன்றாவது நூற்றாண்டில் வடஇந்தியாவில் பேசம்பட்டு வந்த மொழியானது வடமொழியோடும் பிராக்ருத நடைகளோடும் எவ்வித ஒற்றுமை வேற்றுமைகளை உடையனவாயிருந்தன என்பதை விளக்கும், இலக்கியமாகக் கருதுமிடத்தும் அசோக சாஸனங்கள்
மிகச் சிரேஷ்டமானவைகளே. இவற்றிற் பெருந்தன்மையுடைய ஓர் அரசன் இதயத்தைக் காண்கிறோம்; அவனுடைய உள்ளத்தின் உயர்வும் கனிவும் எவரையும் வியப்படையச் செய்யுமென்பதிற் சந்தேகமில்லை.” 


தெ வா னம் பி யோ பி ய த ஸி லா ஜா ஏ வம் ஆ ஹ 

தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன்
இவ்விதம் கூறுகிறான் . 

என்று சொல்லித்தான் பாறை எழுத்துகள், கல்வெட்டு லிகிதங்கள் காலம் காலமாகத் தாண்டி வந்து, கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத போஸ்ட்மேனால் நமக்குத் தரப்பட்டு நாமும் அதைப் படிக்கின்றோம். தேவர்களுக்குப் பிரியன் என்று தன்னைச் சொல்லிக் கொண்டான். ஆனால் படிக்கும்தோறும் நமக்குப் பிரியமான அரசனாக அசோகன் ஆகிவிடுகிறான். அவனுடைய லிகிதங்களில் காணப்படும் இதய சுத்தமான அக்கறை, கருத்து நம்மைக் கலங்கச் செய்துவிடும். 

”தேவர்களுக்குப் பிரியனானவன் இங்ஙனம் _ஆக்ஞாபிக்கிறான் . நற்
காரியங்களில் விசேஷ ஊக்கம் செலுத்தாமல் இரண்டரை வருஷங்களுக்கு மேலளவும் நான் உபாஸகனாயிருந்தென். இப்போது ஒருவருஷமாக ஸங்கத்திற் சேர்ந்து மிகுந்த ஊக்கத்தோடு உழைத்துவர எனக்கு நேரிட்டிருக்கிறது. இது வரையும் தேவர்களை அனுசரித்து ஒழுகா மனிதர் இப்பொழுது ஜம்பூத்வீப முழுவதும் தேவர்களை அனுசரித்து ஒழுகிவருகின்றனர். இது எனது உழைப்பின் பயனாகும் . .இத்தன்மை பெருமுயற்சியின்றிக் கிடைக்கக்கூடியதன்று. ஆனால் சிறியோரும் தமது உழைப்பால் மறுமையின் க்ஷேமத்தை யடையலாம். - இதனாலன்றோ “சிறியோரும் பெரியோரும் முயன்று வரட்டும் ” என்ற முதுமொழி ஏற்பட்டுள்ளது. என் அயலாரும் இப்போதனையை உணர்ந்து இத்தகைய நன்முயற்சியை அழியாதபடி நிலைநாட்ட வேண்டும் . இவ்வுத்தேசம்
கட்டாயமாய் வளரும் . இன்னுமின்னும் பல மடங்கு பயனளிக்கும்.” 

“ தேவர்களுக்குப் பிரியனானவன் இப்படிச் சொல்லுகிறான் . தாய் தந்தையருக்குப் பணிவிடை செய்யவேண்டும். எல்லா ஜீவப் பிராணிகளுக்கும் அனுதாபம் ஸ்திரமாக ஏற்படவேண்டும் . சத்தியமே பேசவேண்டும் . தர்மத்தில்
உபதேசிக்கப்பட்டுள்ள போதனைகள் இவையே. மேலும் சீஷன் ஆசாரியனைக் கண்ணியஞ்செய்யவேண்டும், உற்றார் உறவினருக்குத் தகுந்த மரியாதை செய்யவேண்டும் . இது தீர்க்காயுளைத் தரும் . இது பிராசீன சம்பிரதாயம். இதன்படி, மனிதன் நடக்கவேண்டும்.” 

“ மகதத்து அரசன் பியதஸி, ஸங்கத்தை நமஸ்கரித்து அவர்கள் சுகமும் ஆரோக்கியமும் அடையவேண்டுமென்று விரும்பிக் கூறுவதாவது. ’புண்ணியவான்களே ! புத்தர், தர்மம்; ஸங்கம் என்பனவற்றில் எனக்குள்ள விசுவாஸ வெகுமானமும் நம்பிக்கையும் எவ்வளவு அதிகமென்று உங்களுக்குத் தெரியும். புண்ணியவான்களே! பகவான் புத்தரால் கூறப்பட்டுள்ள யாவும் மிகச் சிரேஷ்டமாகவே கூறப்பட்டிருக்கின்றன. புண்ணியவான்களே! நான் உங்களுக்கு, ஒரு வாக்கியத்தைச் சுட்டிக்காட்ட அனுமதி கொடுப்பிர்களானால் அது “ஸத் தர்மம் , சாசுவதமாய் நிலைநிற்கும் ’' என்பதே. ....” 

“தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் ஆக்கினையாக இத்தர்மலிகிதம் வரையப்பட்டது, இங்கே (என் தலைநகரத்தில் ) யாதொரு பிராணியையும் பலியாகங்களுக்காக வதை செய்யக் கூடாது. ஸமாஜங்களில் நடக்கும் விருந்தும் தவிர்க்கப்படுகிறது. ஏனென்றால் ஸமாஜங்களில் பலவித தோஷங்களுண்டென்று தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசனுக்குத்
தெரியும். ஆனால் சிற்சில ஸமாஜங்கள் நல்லவையென்று அவர் அபிப்பிராயப்படுகிறார். முன் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அாசனின்
மடப்பள்ளியில் லக்ஷக்கணக்காகப் பலவித உயிர்ப் பிராணிகள் கறிக்காக வதை செய்யப்பட்டு வந்தன. இக் கட்டளை இடப்படும் இச் சமயமும் தினமும் மூன்று பிராணிகள் கொல்லப் படுகின்றன. அவையாவன, இரண்டு மயில்களும் சிலவேளைகளில் அதிகப்படியாக ஒரு மானும். இனிமேல் இம்மூன்று பிராணிகள் கூட வதைசெய்யப்பட மாட்டா.” 

“அண்டை அரசர்கள் நாடுகளிலும் எல்லா இடத்தும் தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் சிகித்ஸைக்காக இருவித ஏற்பாடுகள் செய்திருக்கிறான்; அவையாவன, மனிதருக்கு வைத்தியசாலை மிருகங்களுக்கு வைத்தியசாலை. மேலும் மனிதருக்கு உபயோகமானதும், மிருகங்களுக்கு உபயோகமானதுமான மருந்து மூலிகைகள் எவையோ அவை கிடைக்குமிடங்களிலிருந்து எங்கெங்கு கிடைக்கவில்லையோ அவ்விடங்களுக்குக் கொண்டுவரப்பட்டு பயிர் செய்யப்படுகின்றன. கனி காய் கிழங்கு வகைகளும் வரவழைக்கப்பட்டுப் பயிராகின்றன. மனிதருக்கும் மற்றப் பிராணிகளுக்கும் செளக்கியத்தைக் கொடுப்பதற்காகப் பாதையோரங்களில் கிணறுகள் வெட்டவும் நிழல் கொடுக்கும் மரங்கள் வளர்க்கவும் செய்யப்படுகின்றன.” 

“.... தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசனது புத்திரர்களும் பெளத்திரர்களும் பெளத்திரரின் பிள்ளைகளும் கல்பாந்த காலம் வரையும் தர்மத்திலும் சீலத்திலும் வழுவாது நிலைநின்று தர்மத்தைப் போதிக்கக் கடவர், தர்மத்தைக் கற்பிப்பது உயர்ந்த காரியமே, சீலமில்லாதவன் தா்மத்தைத் தழுவி ஒழுகுவது கஷ்டமாம். ஆயினும் இவ்விஷயத்தில் மனிதன் உள்ளம் சீர்திருந்துவதும் முன்னிலும் கெடாமலிருப்பதும் இரண்டும் சிறந்ததே. மனிதர் தம் குணத்தை அதிகரிக்க முயல்வதற்கும், குணம் குன்றுவதைத் தடுப்பதற்குமே இது எழுதப் பட்டுள்ளது. தேவர்களுக்குப் பிரியமான பிரியதர்சி அரசன் முடிசூடி பன்னிரண்டு வருடங்களான பின் இங்ஙனம் வரையச் செய்தார்.” 

”தேவர்களுக்குப் பிரியனான பிரியதர்சி அரசன் இப்படிச் சொல்லுகிறான் . நன்மைகள் செய்வது மிகக் கஷ்டம் . நற்கருமங்களைத் தொடங்குகிறவன் வெகு சிரமமான காரியத்தைச் செய்கிறான். பல நற்கருமங்கள் என்னால் செய்யப் பட்டிருக்கின்றன. என்னுடைய பிள்ளைகளும் பேரரும் யுகத்தின் முடிவுகாலம் வரையும் இவ்வண்ணமே நடப்பாராகில் சுகருதம் செய்தவராவர் . எவன் ஒருவன் தனது கடமையை அசட்டை செய்கிறானோ அவன் பாபத்தைச் சம்பாதித்துக் கொள்ளுகிறான் . பாபம் செய்வது நிரம்ப சுலபம். ஆதிமுதல் இதுவரையும் தர்மமகாமாத்திரர் என்ற அதிகாரிகள் கிடையா. நான் , முடிசூடி. பதின்மூன்று வருடங்கள் சென்ற பின் தர்மமகாமாத்திரரை நியமனஞ் செய்தேன். எல்லா மதத்தினருக்கும் தர்மத்தைப் போதித்து, தர்மத்தைச் சேர்ந்த விஷயங்களைக் கவனித்து மேற்கெல்லைப் புறமுள்ள யவனர் காம்போஜர் காந்தாரர் ராஷ்டிரிகர் பிதேனிகர் முதலியோரையும் நோக்கி, இவர் பிரவிர்த்தி செய்து வருகின்றனர். சேவகர் பிராமணர் பணக்காரர் ,
அனாதைகள் , கிழவர் முதலியோருக்குத் தர்மத்தை யனுசரித்து உதவிகள் புரிந்து தர்மத்தை அனுசரித்தவர்களைக் கவலையிலிருந்து நீக்கி உதவுவதற்காகவும் இவர் பிரவிர்த்தி செய்து வருகின்றனர். வயதுசென்றவராத
லாலோ, அல்லது பிள்ளை குட்டிகளுடையவராதலாலோ, அல்லது குற்றமில்லாதவரென்று மதிக்கப்படுவதாலோ, கைதிகளையும் குற்றவாளிகளையும் விடுதலைசெய்ய சிபார்சு செய்து அவர்களைக் கவலைகளிலிருந்து நீக்கி இவர் பிரவிர்த்தித்து வருகின்றனர்.” 

“... கொஞ்சமும் காலதாமதமின்றி விஷயங்களை உடனுக்குடன் எனக்கு அறிவிக்க வேண்டும் . இதுவே எனது ஆக்ஞை. எனது ஜாக்கிரதையிலும் அரசாட்சி விஷயமான ஊக்கத்திலும் நான் ஒருபோதும் திருப்தியடைகிறதில்லை. நான் சகல ஜனங்களுடையவும் நன்மையை கருதக்கடவேன். இதற்கு மூலகாரணம் ஜாக்கிரதையும் ஊக்கமுடைமையுமே. சகல ஜனங்களுடையவும் நன்மையைக் கருதுவதைவிட மேன்மையான கருமமில்லை. எதற்காக நான் இங்ஙனம் பிரயாசையுடன் முயன்று வருகிறேன்? ஜீவராசிகளுக்கு நான் செலுத்தவேண்டிய கடன் செல்லாவதற்கும் சிலருக்கேனும் இம்மையில் சுகமும் மறுமையில் சுவர்க்கமும் கிடைப்பதற்குமேயாம் . இதற்காகவே இந்த தர்மலிபி வரையப் பட்டிருக்றெது. எதற்காக? என் கட்டளை நெடுங்காலம் நிலைபெறவும் என் புத்திரரும்
பெளத்திரரும் இவ்விதமே உலகத்தின் க்ஷேமத்திற்காக உழைத்து வருவதற்ருமே. விசேஷமான ஊக்கமிருந்தாலன்றி இது கஷ்டமான காரியம்.” 

“தேவர்களுக்குப் பிரியனான பிரியதரிசி யரசன் எல்லா இடங்களிலும் சகல மதத்தோரும் சேர்ந்து வாழவேண்டுமென்று விரும்புகிறான். ஏனெனில், எல்லா மதங்களும் அடக்கமுடைமையும், மனத்தூய்மையும் அவசியமென்று சொல்லுவதில் ஒத்திருக்கின்றன. ஆனால் , மனிதர் தம் மனப் போக்கிலும் பலவிதமாயிருக்கின்றனர்; இச்சைகளிலும் பலவிதமாயிருக்கின்றனர். சில மதத்தினர் (என் கட்டளைகளை) முற்றிலும் பின்பற்றலாம் . மற்ற வகுப்பார் சில பாகங்களைப் பின்பற்றலாம். அளவற்ற ஈகை எல்லோருக்கும் சாத்தியமில்லை; ஆனாலும் அடக்கமுடைமை, மனத் தூய்மை, செய்ந்நன்றியறிதல், ஸ்திரபுத்தி இவை எக்காலத்தும் உயர்வைத் தருகின்றனவாம்.” 

“தேவர்களுக்குப் பிரியனான பியதஸி அரசன் எல்லாமதத்தினருக்கும், இல்லறத்தார் துறவிகள் எனப் பாராட்டாமல் கொடைகள் அளித்து பூஜை மரியாதைகள் செய்து வருகிறான் . தேவர் பிரியன் வற்புறுத்துவது என்னவென்றால் , தானம் முதலிய வெளி மரியாதைகள் பாராட்டப்படவேண்டுமென்றல்ல, சகல மதங்களுக்கிடையிலும் சமரசபாவம் உண்டாக வேண்டுமென்பதே. சமரசபாவம் என்பது பலவிதமாகும். அதற்கு மூலாதாரம் சொல்நெறியே. அஃது எப்படிப்பட்டதென்றால், காரணமின்றிப் பிறர்மதங்களைத் தூஷணை செய்வதையும் சுயமதத்திற்குப் பக்ஷபாதமான
கண்யஞ் செய்வதையும் தவிர்த்தலே. சகல மதங்களிலும் ஓர் விஷயத்தில் அல்லது மற்றோர் விஷயத்தில் மேன்மையிருப்பதால் புறமதங்களுக்கு எல்லோருடைய மரியாதையும் உரியது. ... ஆனால் சமதிருஷ்டி மிகுந்த
சிலாக்கியம் அது என்னவெனின், நம் கக்ஷியைச் சேராதாரின் மதபோதனைகளுக்குச் செவிகொடுத்து நாம் அவற்றை மதிக்கவும் வேண்டும் .
தேவர்பிரியன் விருப்பம் இதுவே: எல்லா மதத்தினரும் ஆழ்ந்த கல்வி கேள்வியுடையோராய், பரஸ்பர அன்புடையோராய் வாழ்ந்துவரவேண்டும். இதுபற்றி எல்லா மதத்தினருக்கும் பின்வரும் அறிக்கை செய்யப்படுகின்றது, தேவர்பிரியன் வெளிவேஷமான தானமரியாதைகளை விட சகல சமயங்களுக்குள்ளும் சமரச பாவமும் பக்திபகுமானமுமே முக்கியமென
நினைக்கின்றான். “ 

இப்படிப் பட்ட அரசனின் வார்த்தைகளைப் படிக்கும் எவரும் வியப்பில் ஆழ்ந்து போகாமல் இருக்க முடியாது. 
(குறிப்பு - அசோகனுடைய சாஸனங்கள், கும்பகோனம் காலேஜ் சரித்திர ஆசிரியர், R ராமய்யர், சென்னை ஸி குமாரசாமி நாயுடு ஸன்ஸ், 1925)

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***