Wednesday, January 29, 2020

வடமொழி காவியசாத்திர நூல்களில் பிராக்ருத செய்யுட்கள்

Prakrit Verses in Sanskrit Works on Poetics

in two volumes, Ed by V M Kulkarni M A Ph D

Bhogilal Leherchand Institute of Indology
Delhi, 1988

என்னும் இந்த நூல் ஒரு சிறப்பான தொகுப்பு நூலாகும். இரண்டு பகுதிகள். முதல் பகுதி வடமொழி, பிராகிருத மூலப் பனுவல். இரண்டாவது பகுதி ஆங்கில மொழிபெயர்ப்பு.. இரண்டு பகுதிகளும் சேர்ந்து சுமார் 1500 பக்கங்கள்.

தொகுப்புக்கான மையக் கருதுகோள் அரிய ஒரு கருத்து. அதாவது வடமொழி காவிய சாத்திர நூல்களில், உதாரணமாகப் பல பிராகிருத செய்யுட்கள் கையாளப்பட்டிருக்கும். கவிஞர்கள், காவிய சாத்திரக் காரர்களால் பல பிராகிருத செய்யுட்களும் புனையப் பட்டிருக்கும். அது மாதிரியான அனைத்து உதாரண பிராகிருதச் செய்யுட்களையும் ஒரு சேரத் தொகுத்து நிரல்படக் கொடுத்து, விரிவான அனுபந்தங்கள், அட்டவணைகள் முதலியனவும் தந்து, மொழிபெயர்ப்பும், அரும்பதங்களும், குறிப்புகளும் நிரம்ப கொடுத்து திரு குல்கர்னி நூலை மிகப்பெரிய ஆய்வு விருந்தாகத் தந்திருக்கிறார்.

கிட்டத்தட்ட 3000 பிராகிருத, அபப்ரம்ஸ செய்யுட்களைத் தொகுத்து, அவற்றின் ஆகரங்கள், மாறுபடு ஆட்சிகள், அவற்றிற்கான வடமொழி வடிவமான சாயா ச்லோகங்கள் ஆகியன தந்து நூலைப் பெட்டகமாக ஆக்கியிருக்கிறார் திரு குல்கர்னி. வடமொழியில் மகாகவிகள் பிராகிருதத்திலேயே நூல்கள் செய்திருப்பதும் உண்டு. பதிப்பாசிரியர் சில பிராகிருத காவியங்களைப் பட்டியல் இடுகிறார்: ஹலரின் காதா சப்தசதி, சர்வசேனரின் ஹரிவிஜயம், பிரவர்சேனரின் சேதுபந்தம், வாக்பதிராஜரின் கௌடவாஹோ, மஹுமஹ வையா, கௌஹலரின் லீலாவயி, ஆனந்தவர்த்தனரின் விஷமபாணலீலை, ராஜசேகரரின் கற்பூர மஞ்சரி.

பிராகிருத செய்யுள் படிப்பதற்கு எப்படி ஒலிக்கிறது என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு -

ஸேல அ ஸு ஆருத்தம் முத்தாணா
பத்தமுத்த ஸஸிலேஹம் |
ஸஸிபரிட்டிய கங்கம்
ஸஞ்ஜாபண அம் பமஹணாஹம் ||

இதன் வடமொழி வடிவம் வருமாறு --

சைல ஸுதாருத்தார்த்தம்
மூர்த்தாபத்த புக்ந சசிலேகம் |
சீர்ஷ பரிஷ்டித கங்கம்
ஸந்த்யா ப்ரணதம் ப்ரமதநாதம் ||

இதன் பொருளை ஆங்கிலத்தில் இரண்டாம் புத்தகத்தில் தந்திருக்கிறார். இதன் பொருள் தமிழில்

மலைகளின் மேல் பிறந்த மாநதியை
சடைமுடியால் கட்டி நிலவோடே
தலைவைத்து கங்கை தாங்கும் நாதனை
வணங்கிடல் அந்தி தொழுதபின்னே.

இந்தச் செய்யுள் வருகின்ற நூல் ருத்ரடர் என்பவரின் காவ்யாலங்காரம். இதற்கு நமிசாது என்பவர் எழுதிய டிப்பணி உள்ளது. டிப்பணி என்பது குறிப்புரை.

ருத்ரடரின் காலம் 825 கி பி முதல் 875 கி பி. டிப்பணி எழுதிய நமிசாது என்பவரின் காலம் 11 நூற் கி பி. ருத்ரடர் குறிப்பிடும் ஒரு கருத்தை நம் கவனத்திற்கு அளிக்கிறார் திரு குல்கர்னி.

ருத்ரடர் எழுதுகிறார், தம் காலத்தில் சம்ஸ்க்ருதம் தவிர, பிரகிருதம், மாகதம், பிசாச பாஷை, சூரசேனி, அபப்ரம்ஸம் ஆகிய மொழிகள் இருந்ததாகக் குறிப்பிடுகிறார்.

மேற்காட்டிய செய்யுளை போஜர் அசரீரம் என்னும் குற்றத்தை விளக்க உதாரணமாகக் காட்டுகிறார். அதாவது செய்யுளில் வினைச் சொல் இல்லாமல் இருப்பது அசரீரம் என்பதாம்.

இவ்வாறு ருத்ரடர் என்பவரின் காவ்யாலங்காரம், த்வன்யாலோகம், லோசனம், தசரூபம், அவலோகம், வ்யக்திவிவேகம், ச்ருங்கார ப்ரகாசம், சரஸ்வதி கண்டாபரணம், காவ்யப்ரகாசம், அலங்கார சர்வஸ்வம் முதலிய அனைத்து வடமொழி காவிய சாத்திரங்களில் உதாரணமாகக் கையாளப்படும் பிராகிருத அபப்ரம்ஸ செய்யுட்களையும், அவற்றின் வடமொழி வடிவங்களையும், மொழிபெயர்ப்பையும், குறிப்புகளையும் தந்து நூலைச் சிறக்க்ச் செய்துள்ள திரு குல்கர்னிக்கு நம் நெஞ்சார வாழ்த்துகளும் நன்றியும் உரித்தாகுக.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

வேதங்களில் விஞ்ஞானம்

அறிவியல் சம்பந்தமான கருத்துகள் பல வேதங்களில் விரவிக் கிடப்பதை ஒரு பண்டிதர் தம் வாழ்நாளில் பல காலமாகக் கட்டுரைகளாக எழுதிவந்தார். அவற்றைத் தொகுத்து ‘வேத விஜ்ஞானம்’ என்ற நூலாகப் பிரசுரம் செய்திருக்கிறார்கள். ஆசிரியர் நாவல்பாக்கம் தேவநாதாசார்யர் என்னும் வித்வான். திருமலை சதுர்வேத சதக்ரது தேவநாதாசார்யர் என்னும் பெயருடைய நாவல்பாக்கம் தேவநாதாசார்ய ஸ்வாமி பல சமயங்களில் பல இதழ்களுக்கு அவர் எழுதிய கட்டுரைகளில் 12 கட்டுரைகள் இந்த நூலில் இடம் பெற்றிருக்கின்றன. சுமார் 220 பக்கங்கள் கொண்ட இந்த நூல், முதல் பதிப்பு 2003, அன்று விலை ரூ125, இன்று எவ்வளவு தெரியவில்லை. பதிப்பாசிரியர் திரு பி எஸ் ராமநாதன். மிக அரிய களஞ்சியம் இந்த நூல் என்று சொல்லலாம். இத்தகைய பார்வைகள் கொண்டோர் மிக அருமை. வழி வழிக் கல்வி உள்ளவர்களுக்கு இந்த கண்ணோக்கம் அமைவது, அவ்வாறான கருத்துகளை விளக்கமாகக் குறிப்புகள், ஆதாரங்கள் இவற்றுடன் ஆற்றொழுக்கு நடையில் தருவது எல்லாம் நன்றாக இருக்கின்றன. வேதங்கள் பற்றிய கூர்த்த கவனத்தை இந்த நூல் உண்டாக்குகிறது. பல வருடங்கள் முன்பு இவரை எனது பெரியப்பாவுடன் சென்று பார்த்தது நினைவுக்கு வருகிறது. மிகவும் அமைதியான பேச்சு. ஆழமான பார்வை. பரபரப்பு இல்லாமல் கருத்துகளை விளக்கும் நேர்த்தி. பன்னிரண்டு கட்டுரைகளின் தலைப்புகளே ஆசிரியரின் வித்யாசமான பார்வையைச் சொல்லுகின்றன.

1) பூமி எரிகின்றது.

2) மரம் பயப்படுகின்றது.

3) ஒரு வருஷம் ஒரு நாள்

4) முப்பது சகோதரிகள்

5) நீருள் நெருப்பு

6) உபவாஸம்

7) அக்னியா

8) கைக்குத்தலரிசி

9) ஐந்திரவ்யாகரணம்

10) கணிதம்

11) கழுதை

12) நக்ஷத்திரங்கள்

என்பன அந்தத் தலைப்புகள். ஆரம்பிக்கும் பொழுதே, ‘பூமி எரிகின்றது’ என்னும் கட்டுரையில், ‘வேதங்களில் விஜ்ஞான ஸம்பந்தமான விஷயங்கள் பலவிடங்களில் காணப்படுகின்றன. கிருஷ்ண யஜுர் வேதம், தைத்திரீய ஸம்ஹிதை, ஐந்தாம் காண்டம், ஆறாவது ப்ரச்னம், நான்காவது அனுவாகத்தின் முடிவில்:

ஸர்வா வா இயம் வயோப்யோ நக்தம் த்ருசே தீப்யதே தஸ்மாத் இமாம் வயாம்ஸி நக்தம் நாத்யாஸதே...-

என்னும் வாக்யம் காணப்படுகின்றது. இதன் பொருள்:- “இந்த பூமி முழுதும் இரவில் பறவைகளின் கண்களுக்கு நெருப்பு போல் எரிந்து கொண்டிருப்பதாகத் தெரிகிறது. இதனால் இரவில் பறவைகள் பூமியில் தங்குவதில்லை. (மரங்களின் உச்சியிலேயே இருக்கின்றன)” என்பது.’ என்று ஆசிரியர் தொடங்கும் பொழுதே நமக்கு ஆர்வம் மிகுதி ஆகிவிடுகிறது. வேதங்கள் இது போன்ற விஜ்ஞானக் கருத்துகளைக் கூறுமிடத்துப் பெரிதும் கதைகளின் உருவத்தில் கூறுகின்றன. அந்தக் கதைகளை நன்கு ஆய்ந்து தற்கால விஜ்ஞானக் கருத்துகளின் ரீதியாக என்ன சான்றுடைமை கொள்கின்றன என்பதை ஒப்பீடு ஆய்வாகப் படிப்பது நல்லதொரு கல்வியாக அமையும். மேலும் எழுதுகிறார் நாவல்பாக்கம் ஸ்வாமி:

முதல்முதலாக இந்த பூமி தோற்றுவிக்கப்படும் போது, அது ஒரு பறவை வடிவமாகவே தோற்றுவிக்கப்பட்டது. அதுவும் தன்னுள்ளே அக்னியைக் காப்பாற்றி வைப்பதற்கேற்றதோர் ஓமகுண்ட வடிவமாகவே அமைக்கப்பட்டது. ஐந்து இஷ்டகைகளால் அமைக்கப் பெற்றது. அதனால் பூமியும் பறவைகளும் ஒரே இனத்தைச் சார்ந்தவை.

அடிக்குறிப்பில் இஷ்டகைகள் - மேற்கூறியவாறு பறவை வடிவமான ஓமகுண்டம் அமைப்பதற்காக மண்ணால் சிறு அளவில் தயாரிக்கப்படும் கட்டிகள்.

-- இவ்வாறு எழுதும் போது அடிக்குறிப்பில் சம்பந்தப்பட்ட வேத வாக்கியங்களையும் தருகிறார். தன்னுள்ளே அக்னியைத் தாங்கியவாறே பூமியானது படைக்கப்பட்டது என்பதற்கு அவர் காட்டும் வேத வாக்கியம் - யதாக்னி கர்பா ப்ருதிவீ (ப்ரு உப 6.4.21) அது போல் நூலில் நக்ஷத்திரங்கள் பற்றிய இவருடைய அரிய கட்டுரை. முதலில் 33 நக்ஷத்திரங்கள் இருந்து பின்னர் 28 ஆகக் குறைந்து, பின்னர் அபிஜித் என்னும் நக்ஷத்திரம் விழுந்து விட்டதால் இன்று 27 நக்ஷத்திரங்கள் மட்டுமே கணக்கில் இருப்பதாக மரபு நூல்களின் ஆதாரங்களுடன் கூறுகிறார். இங்கு 27 நக்ஷத்திரங்கள் என்பன நக்ஷத்திரக் கூட்டங்கள் என்று பொருள்படும் என்னும் அவரது விளக்கம் அருமை. 27 நக்ஷத்திரக் கூட்டங்களுக்கும் அவற்றின் தேவதைகள் என்ன, அந்த அந்தக் கூட்டத்தில் எத்தனை நக்ஷத்திரங்கள் உள்ளன, தாரா கணக்கு என்ன, ஆங்கிலப் பெயர் என்ன என்ற அட்டவணையும் தருகிறார்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Sunday, January 26, 2020

தமிழில் வேதாந்த நூல்கள் இரண்டு

தமிழில் விசிஷ்டாத்வைதம் தொடர்பாக வந்திருக்கும் சிறிய பெரிய நூல்கள் அதிகம். பல தரப்பான பக்குவம் உள்ள மக்களுக்கு என்று சுருக்கம், விரிவு, அறிமுகம், கையேடு என்னும் விதங்களில் பலரும் நூல்கள் இயற்றியுள்ளார்கள். இன்று பார்க்கும் பொழுதும் தமிழில் வேதாந்தம் போதிக்கும் முயற்சிகள் என்னும் விதத்தில் ஆச்சரியமாக இருக்கிறது. உதாரணத்திற்கு, ஷண்மத தர்சநீ என்னும் நூல். மொத்த பக்கங்களே 24 தான். சாங்க்ய மதம், பாதஞ்சல மதம், பௌத்தம், உட்பிரிவுகள், ஜைனம், பாஸ்கர மதம், யாதவ மதம், மாத்வ மதம், மாயாவதி மதம், விசிஷ்டாத்வைத மதம் என்று தர்சனங்கள் பலவற்றின் சுருக்கமான அறிமுகங்கள், அவற்றின் மீதான கண்டனங்கள் என்று விசிஷ்டாத்வைத நோக்கில் நூல் அமைந்திருக்கிறது. உரைநடை நூல். மீண்டும் பதிப்பித்துள்ளனர் போலும். எனவே நூல் பிழைத்தது.

*
அடுத்து முதலியாண்டான் தாசர் என்பவரால் செய்யப்பட்ட வேதாந்த ஸார ஸங்க்ரஹம் என்னும் நூல். வந்த ஆண்டு பராங்குச திரு அவதார வருஷம் 5000. (கி பி 1899) சென்னை ஸ்ரீநிகேதந அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது. இந்த நூலைத் தமிழில் கொஞ்சம் வித்யாசமாக எழுதியிருக்கிறார் ஆசிரியர். இன்று நாம் சொல்லும் ரெடி ரெக்கனர் மாதிரி கொஞ்சம், அரும்பத நிரல் பொருள் விளக்கம் மாதிரி கொஞ்சம், துணை நூல் மாதிரியான பொருள் வாரியான சிறு விளக்கங்கள், கூடவே ஷண்மத தர்சநியில் செய்திருப்பது போல் பல மதங்களைப் பற்றிய அறிமுகம், கண்டனம், பிரமாண நூல்களில் சொல்லியிருக்கும் பொருள்களைப் பற்றிய சுருக்கம் என்று 70 பக்கங்களில் கையடக்கமான ஒரு நூலில் 700 பக்கங்களுக்கான செய்திகளையும், கருத்துகளையும் ஆசிரியர் அடக்கியிருக்கிறார். நூலின் சிறப்பு விசிஷ்டாத்வைத வேதாந்த சொற்களை நிரல் இட்டு, ஒவ்வொன்றிற்கும் பொருளும் கொடுத்திருப்பது, ஆசிரியர் அந்தக் காலத்தில் தமிழின் வழி வேதாந்தம் கற்பாருக்கு உதவ வேண்டும் என்ற ஆர்வத்தில் செய்திருப்பது புலனாகிறது.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

கணபதி தியானம்

பார்த்தால் எல்லாம் வினோதம்.! ஒற்றைக் கோடு. காதுன்னா காது அப்படி ஒரு காது. அதுவும் இரு செவி. மூன்று கண். மேனியோ செம்மேனி. இப்படி ஒரு யானை பார்த்தீர்களா? ஒற்றை யானை வேறா..படுத்துகிறது. நான் தான் சிறுவயது முதல் இந்த யானையில் ஈடுபாடு என்று பார்த்தால் எனக்கு முன்னர் கபில தேவ நாயனாரும்: ’முன்னிளங்காலத்திலே பற்றினேன்’ என்கிறார். ’அவனை ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால் எப்பொழுதும்’ என்கிறார் கபில தேவர். சிறுவயதில் திருமஞ்சனக் காவிரியின் பக்கத்தில் உள்ள பிள்ளையாரைக் கண்டுகொள்ளாமல் மாலை கடந்து போகாது. அது என்னமோ ஒரு வாஞ்சை! அவர் முன்னால் அந்தக் கமபத்தடி ஓரமாக உட்கார்ந்தால் ஏதேதோ கதையெல்லாம் பேசிக்கொண்டிருப்போம். அவரும் பேசினாரோ? இருக்கலாம்... தெரியவில்லை,,, ஆனால் நிறைய பேசவிட்டுக் கேட்டுக்கொண்டிருப்பதில் அவருக்கு நிகர் அவரே. மத்தகஜம் போல் வளர்த்தாய் என்கிறார் ஸ்ரீதாயுமானவர். ஞானக் களிறு எங்கள் தலைவன். அப்புறம்தான் வேத புருஷன் சொன்னது தெரியவந்தது.. ஆனால் நாங்கள் முன்னமே அவனுக்கு வைத்த பெயர் ஞானக் களிறு.

கணாநாம் த்வா கணபதி.ம் ஹவாமஹே
கவிம் கவீனாம்

எங்கள் கூட்டத்தின் தலைவனே வா!
உன்னை அழைக்கிறோம்
கவிகளுக்கெல்லாம் கவி நீயே.

கொஞ்சம் கவிதையில் பித்து இந்த யானைக்கு. கவிதை மட்டும் நன்றாக இருந்துவிட்டால் ஒரு மத ஆட்டம் போடும் பாருங்கள்..அழகு..! ஆனால் ஐயோ! எங்களை எவ்வளவு கண்ணும் கருத்துமாய்க் காக்கும் என்கிறீர்கள்.... யாரும் முன்னரோ பின்னரோ எங்களைத் தாக்க வர முடியாது.

வரு கோட்டு அருபெருந்தீமையும்
காலன்தமர் அவர்கள் அருகோட்டரும்
அவர் ஆண்மையும் காய்பவன்

ஆனால் அன்புக்குக் கட்டுப்படும் அந்த எளிமை இருக்கிறதே அது தனி

கூர்ந்த அன்பு தரு கோட்டரு மரபில்
பத்தர் சித்தத் தறி அணையும்

ஊரை என்ன உலுத்தர்களின் உலகத்தையே இந்த ஒற்றை யானை போதும் த்வம்சம் செய்ய ஆனால் இந்த யானையைக் கட்ட ஒரு தறி உண்டு என்கிறார் கபில தேவர். - அன்பு தரு பத்தர் சித்தத் தறி, இந்தத் தறியால் நீங்கள் கட்ட வேண்டாம், காட்டினாலே போதும் தானே வந்து கட்டுண்டு நிற்கும். ஒற்றைக் களிறு, ஞானக் களிறு. அதனால் ஒண்களிறு என்கிறார் கபில தேவர். மொழியின் மறைமுதலே! முந்நயனத்து ஏறே! என்கிறார் அதிராவடிகள்.

மலம் செய்த வல்வினை நோக்கி,
உலகை வலம் வரும் அப்
புலம் செய்த காட்சிக் குமரற்கு
முன்னே, புரிசடைமேல்
சலம் செய்த நாரைப்பதி அரன்
தன்னைக் கனி தரவே
வலம் செய்துகொண்ட மதக் களிறே!
உன்னை வாழ்த்துவனே

என்கிறார் நம்பியாண்டார் நம்பி.

ஆனால் இவர்களையெல்லாம் விஞ்சுகிறார் நம் காலத்து தேசபக்தி நாயனார் ஆகிய பாரதி. கணபதியைப் பாட ஒரு பாரதிதான் என்று சொல்ல வேண்டும்.

பக்தி யுடையார் காரியத்திற்
பதறார், மிகுந்த பொறுமையுடன்
வித்து முளைக்குந் தன்மைபோல்
மெல்லச் செய்து பயனடைவார்,
சக்தி தொழிலே அனைத்துமெனிற்
சார்ந்த நமக்குச் சஞ்சலமேன்?
வித்தைக் கிறைவா கணநாதா,
மேன்மைத் தொழிலிற் பணியெனையே.

ஏன் கணபதியைப் பணிகிறீர்? என்ன நோக்கம்? என்றால் பாரதியின் உள்ளம் வெளிப்படுகிறது.

நாட்டினைத் துயரின்றி நன்கமைத் திடுவதும்
உள்ளமெனு நாட்டை யொரு பிழை யின்றி
ஆள்வதும்
பேரொளி ஞாயிறே யனைய 
சுடர்தரு மதியொடு துயரின்றி வாழ்தலும்
நோக்கமாக் கொண்டு நின்பத நோக்கினேன்;
காத்தருள் புரிக, கற்பக விநாயகா,
காத்தருள் புரிக....

அது என்னமோ... பிள்ளையார் என்றால் எல்லாருக்குமே குரலில் ஒரு தனி உரிமைதான் தொனிக்கிறது.. பாருங்கள் என்ன கட்டளை..! அன்பின் கட்டளைக்குத் தலையை ஆட்டி ஆட்டி ஆமோதனம் தெரிவிக்கும் அறிவுக் களிறு அன்றோ!

ஞானாகாசத்து நடுவே நின்று நான்
‘பூமண்டலத்தில் அன்பும் பொறையும்
விளங்குக,
துன்பமும் மிடிமையும் நோவும்
சாவும் நீங்கிச் சார்ந்த பல்லுயிரெலாம்
இன்புற்று வாழ்க’ என்பேன்!
இதனைநீ திருச்செவி கொண்டு திருவுள மிரங்கி
‘அங்ஙனே யாகுக’ என்பாய், ஐயனே!
இந்நாள், இப்பொழு தெனக்கிவ்
வரத்தினை அருள்வாய்;

அவரோடு நாமும் சேர்ந்து இந்தக் கூட்டுப் பிரார்த்தனையில் உளம் கலப்போமாக!


*

பிள்ளையாரைப் பற்றிய ஸ்ரீராமலிங்க வள்ளலாரின் அநுபவம் மிகவும் சுவையானது. அருள் பெருவெள்ளமே ஞானக் களிறின் ஒழுகு மதப் புனல் என்கிறார் வள்ளலார். எத்தகைய அருள்? உலகெலாம் தழைப்ப அருள் மதம்.

உலகெலாம் தழைப்ப அருள்மத அருவி
ஒழுகுமாமத முகமும் ஐங்கரமும்
இலகு செம்மேனிக் காட்சியும்,
இரண்டோடிரண்டு என ஓங்கு திண் தோளும்


கண்டவர் ஒன்றை விழைகிறார் அது என்ன?

உள்ளமும் உயிரும் உணர்ச்சியும் உடம்பும் உறுபொருள் யாவும் நின் தனக்கே
கள்ளமும் கரிசும் நினைந்திடாது உதவி,
கழல் இணை நினைந்து, நின் கருணை
வெள்ளம் உண்டு, இரவு பகல் அறியாத
வீட்டினில் இருந்து, நின்னோடு
விள்ளல் இல்லாமல் கலப்பனோ?

என்று விழைகிறார்.

மருள் உறு மனமும்
கொடிய வெங்குணமும்
மதித்தறியாத துன்மதியும்
இருள் உறு நிலையும் நீங்கி

நின் அடியை எந்த நாள் அடைகுவன் எளியேன்?

அந்த ஞானக் களிறு, அதன் இயல்பு என்ன? சொல்லுகிறார் வள்ளலார் -- அதுவா? அது முதலில் ஒளி. ஒளியா? இயற்கையில் எத்தனையோ ஒளிகளைப் பார்க்கிறோம். மிகவும் பிரகாசமாய் இருக்கும் பேரொளி போலும்! இல்லை. இது யாரும் இயற்கையில் காணாத ஒளி. ஒளி என்றால் பொருட்களை விளங்கச் செய்யும். இது மெய்ப்பொருளை விளக்கும், பொய்ப்பொருளை அகற்றும் அற்புத ஒளி. அது மட்டுமன்று அருளே வடிவான ஒளி. நினைத்துப் பாருங்கள். உங்களுக்கு முன்னால் ஓர் ஒளி வந்து நிற்கிறது. அது என்ன என்று நீங்கள் யோசிக்கிறீர்கள். உண்மையெலாம் விளங்குகிறது. இதுவரை ஆட்சி செய்த பொய்யுலகம் எங்கே காணவில்லை. அந்த ஒளிக்கு இதயம், பேரிதயம் இருக்கிறது. ஏன்? ஆம். அருளே ஒளியாக ஆகி நிற்கிறதோ என்று அருள் ததும்ப நிற்கிறது. ‘அருளேயாம் நல்லொளியே, ஒளி போமாயின் ஒளி போமாயின் இருளே இருளே’ என்கிறார் பாரதி. அந்த ஒளியும், அருளுமான ஒன்றுதான் பிள்ளையார் என்னும் மூர்த்தி என்கிறார் வள்ளலார்.

அருள் உறும் ஒளியாய்!
அவ்வொளிக்குள்ளே அமர்ந்த
சித் பர ஒளி நிறைவே!

ஆனால் அந்த ஒளி-அருள் வடிவ விநாயகம் நமை ஏற்க வேண்டுமே! அது என்று மறுத்தது? நாம் தானே அதை மறுத்து ஓடுகிறோம். ஆனால் ஜீவனுக்கு அது ஏற்குமோ ஏற்காதோ என்ற பதைபதைப்பு. ஏன்?

கானல் நீர் விழைந்த மான் என
உலகக் கட்டினை நட்டுழன்று அலையும்
ஈன வஞ்சக நெஞ்சகப் புலையேனை
ஏன்று கொண்டருளும் நாள் உளதோ?

ஆமாம் அது என்ன விதமான ஒளி?

ஊனம் ஒன்றில்லா உத்தமர் உளத்தே
ஓங்கு சீர் பிரணவ ஒளியே!
பெரும் பொருட்கு இடனாம்
பிரணவ வடிவில் பிறங்கிய
ஒருதனிப் பேறு!
அரும்பொருள் ஆகி
மறைமுடிக் கண்ணே அமர்ந்த
பேர் ஆனந்த நிறைவு!
தரும் பரபோக சித்தியும்
சுத்த தருமமும் முத்தியும்
சார்ந்து விரும்பினோர்க்கு அளிக்கும்
வள்ளல் சித்தி விநாயக விக்கினேச்சுரன்

என்கிறார் வள்ளலார். அவரது அநுபவம் நமக்கெலாம் ஒளியும், அருளும், ஓங்குயர் மதியும், உலகிடை அமைதியும், உள்ளத்தெழுச்சியும், உவகையும், அன்புமே தந்து சிறக்கட்டும்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

Saturday, January 25, 2020

வேதம் என்றால் என்ன?

வேதம் என்றால் என்ன என்பதற்கு மிக அழகாக ஒரு விளக்கம் தருகிறார் ஸ்ரீஸாயணாசாரியார் தமது க்ருஷ்ண யஜுர்வேதீய தைத்திரீய ஸம்ஹிதையின் வியாக்கியானத்தில். ஸாயணர் வேதங்களுக்கெல்லாம் வியாக்கியானம் எழுதி உபகரித்த மகனீயர். வேதார்த்தம் நன்கு பொலியச் செய்தவர். வேதம் என்றால் எதைக் குறிக்கும்? மனிதருக்குத் தமக்கு விருப்பமானவற்றையும், தேவையானவற்றையும் அடைய வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்கு இஷ்ட ப்ராப்தி என்று பெயர். தமக்கு வேண்டாதவற்றை விலக்கிக் கொள்ள வேண்டும், அவற்றிலிருந்து விடுபட வேண்டும் என்ற ஆர்வம் இருக்கும். அதற்கு அநிஷ்ட பரிஹாரம் என்று பெயர். மனிதர் தம் வாழ்வில் தொடக்க முதல் பலவற்றையும் விரும்பிப் பின்னர் அதுவே வேண்டாம் என்று ஆகி, சிலவற்றை வேண்டாம் என்று ஒதுக்கிப் பின்னர் ஒரு காலத்து அது வேண்டும் என்று விரும்புவதும் வழக்கம். இது மனிதர் தம்முடைய அறிவு நிலை எப்படி இருக்கிறதோ அதைப் பொறுத்து இஷ்ட ப்ராப்தியும், அநிஷ்ட பரிஹாரமும் ஏற்படும். அதற்கு உண்டான வழிமுறைகள் அவரவர் அனுபவத்தில் ஆரம்பத்தில் சாதாரணமான இஷ்டம், அநிஷ்டம் ஆகியவற்றைப் பொறுத்தவரையில் தெரிய வரலாம். சிலது பிறரைப் பார்த்தும் தெரிந்து கொள்ளலாம். ஆனால் அறிவு முதிர முதிர எது இருப்பதில் மிக உயர்ந்த இஷ்டம் என்றும், எது மிகவும் அவசரமாகவும், என்றைக்குமாகவும் விலக்கிக் கொள்ள வேண்டிய அநிஷ்டம் என்றும் தெளிவு ஏற்படும். அதனால் உயர்ந்ததும், மிகச் சிறந்ததுமான வழி எது என்ற தேட்டம் உண்டாகும். நிச்சயம் உலகில் அதுகால் அறிந்த வழிகள் எதுவும் பயன்படா என்பது புரியத் தொடங்கும். எதை எதையெல்லாம் இஷடம் என்று மயங்கினரோ அதெல்லாம் உண்மையில் வேண்டாதது என்றும், எதை இதுவரையில் தாம் நினைத்துப் பார்க்கவே இல்லையோ அதைப் பற்றிய ஓர் உள்ளுணர்வும், அதன் மீது தீவிர நாட்டமும் உண்டாகும். உலகியல் ரீதியாகப் பயன்படக் கூடியது என்பதை பிரத்யக்ஷம், அனுமானம் இவற்றைக் கொண்டு அறிந்தது போக, உலகியல் முற்றிலும் சாராத ஒன்றை எப்படி அறிவது?, அந்நிலையை அடையும் உபாயம் யாது?, அந்த உபாயம் நிச்சயம் உலகியல் கடந்த ஒன்றாய்த்தான் இருக்க முடியும். எனவே அலௌகிகம் என்பதான தேட்டம் ஏற்படும் போதுதான் வேதம் என்பதன் முக்கியத்துவம் நமக்குப் புரியவரும். வேதம் முக்கியம் என்று புரிந்தாலும் அதைக் கற்று, அதன் தாத்பர்யத்தை உணருதல் பெரும் கடினம். ஆகையாலே அனைவரும் வேதக் கருத்துகளை நன்கு அறியும் வன்ணம் தரப்பட்டதுதான் புராணங்களும், முக்கியமாக பாரதமும் என்கிறார் ஸாயணர்.


”இஷ்டப்ராப்தி அநிஷ்டபரிஹாரயோ: அலௌகிகம் உபாயம் யோ கிரந்தோ வேதயதி ஸ வேத:’

’ப்ரத்யக்ஷேண அநுமித்யா வா
யஸ்து உபாயோ ந புத்யதே|
ஏநம் விதந்தி வேதேந தஸ்மாத்
வேதஸ்ய வேததா||’

ஆனால் வாழ்க்கையில் அலைந்து, திரிந்து, விழுந்து, பதறி, ஓடிக் கடைசியில் ஏதோ அவன் புண்ணியத்தால் ஏதோ ஒரு வாய்ப்பிலே தெய்வ சிந்தனை பிறந்து நாம் முழித்து முழித்துப் பார்க்கும் அந்த நிலையை முன்னமேயே கண்டு நமக்காகப் பாவம் இரங்கி பெரியாழ்வார் சொல்லும் வழி -

‘நன்மை தீமைகள் ஒன்றும் அறியேன்
நாரணா! என்னும் இத்தனை அல்லால்
புன்மையால் உன்னைப் புள்ளுவம் பேசிப்
புகழ்வான் அன்று கண்டாய் திருமாலே!
உன்னுமாறுன்னை ஒன்றும் அறியேன்
ஓவாதே ‘நமோநாரணா’ என்பன்.’

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

அமரகோசம் - திராவிட வியாக்கியானம்

வடமொழி நிகண்டுகளில் சிறந்தது அமரசிம்ஹனின் நிகண்டு. அமரசிம்ஹனின் காலம் கி பி 375 என்பர். சந்திரகுப்த விக்கிரமாதித்யன் (II) சபையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவர் அமரசிம்ஹன் என்று விக்கியின் கூற்று. ச்லோகங்களில் பொருள் தொகையாக அமைக்கப்பட்ட நிகண்டு இது எனலாம். மூன்று பகுதிகள் கொண்டமையால் திரிகண்டம் எனவும், பெயர்ச்சொற்கள், அவற்றின் எண், பால் முதலிய அடையாளங்களுடன் வகை தொகைப் படுத்துவதால் ‘நாம லிங்க அனுசாஸனம்’ எனவும் வேறு பெயர்களும் உண்டு.

இந்த நூலுக்கு சம்ஸ்க்ருதத்தில் வியாக்கியானங்கள் பெருகியுள்ளன என்பது சொல்ல வேண்டாம். ஆனால் திராவிட வியாக்கியானம் ஒன்றும் 1873 லேயே திருவிசைநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. நூலும், வியாக்கியானமும் சேர்ந்து பெரிய சைஸ் நூலாக 1873, ஜனவரி மாதம் ஹிந்து பாஷா சங்சீவினி ப்ரஸ், எஸ் திருவேங்கடாசாருலூ, வி ராமசாமி சாஸ்திரி அண்ட் கோ என்பவர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. திருவிசநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் எழுதிய மணிப்ரவாள வியாக்கியானத்தின் பெயர் - லிங்காபட்டீய டீகா ஸர்வஸ்வாதி ஸாரஸங்க்ரஹ ரூபமான குருபால ப்ரபோதிகை என்பதாகும். அட்லாஸ் சைஸ் நூலானது 464 பக்கங்களுக்கு வருகிறது. வடமொழி மூலம் முழுவதும் கிரந்தாக்ஷரத்தில் அச்சிடப்பட்டும், தமிழ் மொழிக்கு நடுவில் வரும் வடமொழிப் பதங்கள் கிரந்தாக்ஷரத்திலும், தமிழ்ச் சொற்கள் தமிழிலும் அச்சிடப்பட்ட நூல்.

*
மற்றுமொரு வெளியீடு (50 ஆண்டுகள் கழித்து) அமரசிம்ஹம் என்னும் நிகண்டு நூல் 1924 ஆம் வருஷம் டி சுவாமிநாத சாஸ்திரி என்பவரால் சாஸ்திர சஞ்ஜீவனி முத்ராக்ஷர சாலை, 313, தங்கசாலைத் தெருவு, மதராஸ் என்னும் முகவரியிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சுருக்கமாகத் தமிழில் குறிப்புரை ‘அமரபத கல்பதரு’ என்னும் பெயருடன் தரப்பட்டிருக்கிறது. காமாக்ஷிபுர வாசியான ப்ரஹ்மஸ்ரீ வெங்கடராம சாஸ்திரி அவர்களால் நன்கு பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்படுவதாய்க் கூறப்பட்டிருக்கிறது. முன்னுரையில் ஸ்ரீ டி சுவாமிநாத சாஸ்திரிகளால் அழகிய முன்னுரை தமிழில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் அமரசிம்ஹன் சமணரா அல்லது பௌத்தரா என்னும் கேள்வியை எழுப்பி பௌத்தரே என்று முடிவு கூறுகிறார். அவரது முன்னுரையில் ஒரு பகுதி --

“ஸாராம்சம் - அமரசிம்ஹன் பௌத்த கவியேயாம் என்றும், சிலர் ஜைனமதத்தினெனச் சொல்லினும் பிரமாணங்களால் பௌத்தமதத்தினனே யென ஸ்பஷ்டமாகிறதென்றும், அமரசிம்ஹன் சக கர்த்தாவான விக்ரமார்க்கனுடைய ஸபையிலிருந்த ஆஸ்தாந பண்டிதனே என்றும், இப்போதைக்கு விக்ரம சகந்தொடங்கி 1962 வருஷங்கள் ஆயின என்றும், ஆதலால் நாமலிங்காநுசாஸனம் இயற்றப்பட்டு 1950 வருஷங்களாவது கடந்திருக்க வேண்டும் என்றும் விளக்கமாகிறது. பிற விஷயங்களை “சரித்ர சிந்தாமணி” எனும் நூலில் ஸவிஸ்தாரமாகக் காணலாம்.”

இந்த ‘சரித்ர சிந்தாமணி’ என்னும் நூல் என்னது? யார் எழுதியது? ஆர்வம் உடையோர் முனைக !. கிடைத்தால் பல தகவல்கள் கலந்து கட்டியாகவேனும் கிடைக்கலாம் அன்றோ! ஸ்ரீ டி சுவாமிநாத சாஸ்திரிகள் அமரகோசம் என்பதற்குப் பெயர்களாக நாமலிங்கானுசாஸநம், அமரம், அமரகோசம், டீகாமரம், பெயரமரம் என்று வழங்கப்பட்டது என்கிறார். பெயரமரம் - என்னும் சொல் புழக்கத்தில் இருந்தது என்னும் செய்தி தமிழகத்தில் அமரகோசம் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வந்தமையைக் காட்டுகிறதோ! சாதாரண நூல் சைஸில் உள்ள இந்த வெளியீடு 470 பக்கங்கள் கொண்டு, முதலில் வந்த (?) பெரிய நூல் வெளியிடப்பட்டு (1873) 50 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

புலரியெழப் போந்த கதிர்

புலரியெழப் போந்த கதிரின் கருவில்
புன்னிருள் சுமந்தாலொப்பக்
கலைதெரி மாந்தர்க்காகும்
கதிப்பேற்றியல்கள் தம்மில்
விதியெனச் சூல்கொள் இருளும்
வதமுற வந்த போதம்
பதமுற நிவந்த மாதம்
துதிபெறு மார்கழி ஆகி
உத்கீத ப்ரணவமே ஆம்
உத்தமர்க்கு உள்ளம் தந்தே
உயர்வற உயர்ந்த செந்நூல்
துயரறத் திளைத்த செம்மை
மயர்வற மதிகிளர்ந்த
மாதவ மாட்சிக்கே யாம்
அயர்வறும் அமரரானோம்
ஆங்கது வீடேயானோம்.

பெற்றதோர் பேற்றை ஈண்டு
பேணியுள் காத்தொளித்தே
கற்றிடும் கரவு வேண்டோம்
உற்றிடும் நரகமேனும்
உவந்து அவண் செல்வோம் என்றே
உள்ளத்தால் உயர்ந்து நின்ற
உடையவர் உடையார் ஆனோம்
கள்ளத்தைக் கடிந்து நிற்போம்
கரிய வன் நெஞ்ச வஞ்சத்துப்
பகையெலாம் பொடிந்து நிற்போம்
உரியவர் உலக மாந்தர்
அனைவரும் உயர்வுக்கென்போம்
பாரத நாட்டிலிங்கு
பிறந்தவர் வீட்டிற்கெல்லாம்
ஆண்டாள் நற்குழுவாய் ஆகி
அன்பிற்கே உரிமை பூண்டு
ஒல்லை நீ போதாய்
உனக்கென்ன வேறுடையை?
இன்னம் உறங்குதிரோ?
சிற்றஞ் சிறுகாலே
வந்தும்மை உற்றோமாய் வந்தோம்
மனிதகுல உறவினால் ஒன்றானோம்
உயிர்க்குல அன்பினால் உலகத்தை
நனைத்தில்லம் சேறாக்க
அனைத்தில்லத்தாரும் அறிந்தீரோ
என்றழைப்போம்
அதுவே யாம் பாடும்
மகிழ்ந்தேலோர் எம்பாவாய் !
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***