வடமொழி நிகண்டுகளில் சிறந்தது அமரசிம்ஹனின் நிகண்டு. அமரசிம்ஹனின் காலம் கி பி 375 என்பர். சந்திரகுப்த விக்கிரமாதித்யன் (II) சபையை அலங்கரித்த நவரத்தினங்களில் ஒருவர் அமரசிம்ஹன் என்று விக்கியின் கூற்று. ச்லோகங்களில் பொருள் தொகையாக அமைக்கப்பட்ட நிகண்டு இது எனலாம். மூன்று பகுதிகள் கொண்டமையால் திரிகண்டம் எனவும், பெயர்ச்சொற்கள், அவற்றின் எண், பால் முதலிய அடையாளங்களுடன் வகை தொகைப் படுத்துவதால் ‘நாம லிங்க அனுசாஸனம்’ எனவும் வேறு பெயர்களும் உண்டு.
இந்த நூலுக்கு சம்ஸ்க்ருதத்தில் வியாக்கியானங்கள் பெருகியுள்ளன என்பது சொல்ல வேண்டாம். ஆனால் திராவிட வியாக்கியானம் ஒன்றும் 1873 லேயே திருவிசைநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் அவர்களால் எழுதப்பட்டுள்ளது. நூலும், வியாக்கியானமும் சேர்ந்து பெரிய சைஸ் நூலாக 1873, ஜனவரி மாதம் ஹிந்து பாஷா சங்சீவினி ப்ரஸ், எஸ் திருவேங்கடாசாருலூ, வி ராமசாமி சாஸ்திரி அண்ட் கோ என்பவர்களால் வெளியிடப்பட்டிருக்கிறது. திருவிசநல்லூர் மகாலிங்க சாஸ்திரிகள் எழுதிய மணிப்ரவாள வியாக்கியானத்தின் பெயர் - லிங்காபட்டீய டீகா ஸர்வஸ்வாதி ஸாரஸங்க்ரஹ ரூபமான குருபால ப்ரபோதிகை என்பதாகும். அட்லாஸ் சைஸ் நூலானது 464 பக்கங்களுக்கு வருகிறது. வடமொழி மூலம் முழுவதும் கிரந்தாக்ஷரத்தில் அச்சிடப்பட்டும், தமிழ் மொழிக்கு நடுவில் வரும் வடமொழிப் பதங்கள் கிரந்தாக்ஷரத்திலும், தமிழ்ச் சொற்கள் தமிழிலும் அச்சிடப்பட்ட நூல்.
*
மற்றுமொரு வெளியீடு (50 ஆண்டுகள் கழித்து) அமரசிம்ஹம் என்னும் நிகண்டு நூல் 1924 ஆம் வருஷம் டி சுவாமிநாத சாஸ்திரி என்பவரால் சாஸ்திர சஞ்ஜீவனி முத்ராக்ஷர சாலை, 313, தங்கசாலைத் தெருவு, மதராஸ் என்னும் முகவரியிலிருந்து வெளியிடப்பட்டிருக்கிறது. இதில் சுருக்கமாகத் தமிழில் குறிப்புரை ‘அமரபத கல்பதரு’ என்னும் பெயருடன் தரப்பட்டிருக்கிறது. காமாக்ஷிபுர வாசியான ப்ரஹ்மஸ்ரீ வெங்கடராம சாஸ்திரி அவர்களால் நன்கு பரிசோதிக்கப்பட்டு வெளியிடப்படுவதாய்க் கூறப்பட்டிருக்கிறது. முன்னுரையில் ஸ்ரீ டி சுவாமிநாத சாஸ்திரிகளால் அழகிய முன்னுரை தமிழில் அளிக்கப்பட்டிருக்கிறது. அதில் அவர் அமரசிம்ஹன் சமணரா அல்லது பௌத்தரா என்னும் கேள்வியை எழுப்பி பௌத்தரே என்று முடிவு கூறுகிறார். அவரது முன்னுரையில் ஒரு பகுதி --
“ஸாராம்சம் - அமரசிம்ஹன் பௌத்த கவியேயாம் என்றும், சிலர் ஜைனமதத்தினெனச் சொல்லினும் பிரமாணங்களால் பௌத்தமதத்தினனே யென ஸ்பஷ்டமாகிறதென்றும், அமரசிம்ஹன் சக கர்த்தாவான விக்ரமார்க்கனுடைய ஸபையிலிருந்த ஆஸ்தாந பண்டிதனே என்றும், இப்போதைக்கு விக்ரம சகந்தொடங்கி 1962 வருஷங்கள் ஆயின என்றும், ஆதலால் நாமலிங்காநுசாஸனம் இயற்றப்பட்டு 1950 வருஷங்களாவது கடந்திருக்க வேண்டும் என்றும் விளக்கமாகிறது. பிற விஷயங்களை “சரித்ர சிந்தாமணி” எனும் நூலில் ஸவிஸ்தாரமாகக் காணலாம்.”
இந்த ‘சரித்ர சிந்தாமணி’ என்னும் நூல் என்னது? யார் எழுதியது? ஆர்வம் உடையோர் முனைக !. கிடைத்தால் பல தகவல்கள் கலந்து கட்டியாகவேனும் கிடைக்கலாம் அன்றோ! ஸ்ரீ டி சுவாமிநாத சாஸ்திரிகள் அமரகோசம் என்பதற்குப் பெயர்களாக நாமலிங்கானுசாஸநம், அமரம், அமரகோசம், டீகாமரம், பெயரமரம் என்று வழங்கப்பட்டது என்கிறார். பெயரமரம் - என்னும் சொல் புழக்கத்தில் இருந்தது என்னும் செய்தி தமிழகத்தில் அமரகோசம் நெடுங்காலமாகப் பயிலப்பட்டு வந்தமையைக் காட்டுகிறதோ! சாதாரண நூல் சைஸில் உள்ள இந்த வெளியீடு 470 பக்கங்கள் கொண்டு, முதலில் வந்த (?) பெரிய நூல் வெளியிடப்பட்டு (1873) 50 ஆண்டுகள் கழித்து வெளியிடப்பட்டிருப்பது கவனிக்க வேண்டிய ஒன்று.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment