(கண்டன பவபந்தன ஸ்தோத்திரம் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி சுவாமி விவேகாநந்தர் அருளியது தமிழ் அர்த்தத்துடன் முழுத் தொகுப்பாக )
ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய ஸ்தோத்திரங்களில் உன்னத இடத்தை வகிப்பவை சுவாமி விவேகாநந்தர் அருளிய வங்காள மொழியில் அமைந்ததான ‘கண்டன பவ பந்தன’ என்னும் ஸ்தோத்திரம், ஓம் ஹ்ரீம் ருதம் த்வமசலோ என்னும் சம்ஸ்க்ருத மொழியில் அமைந்த ஸ்தோத்திரம் ஆகும். இவை மாலை நேரத்தில் பொதுவாக ஸ்ரீராமகிருஷ்ண மடங்களில் ஆராத்ரிக பூஜையில் பாடப் படுகின்றான. கேட்பதற்கே மிகவும் எழுச்சியூட்டும் துதியாக அமைந்தது ‘கண்டன பவ பந்தன’ என்னும் துதி. பெரும் சமுத்திர அலைகளின் அணி போல் திரண்டு எழும் நாத அலை போன்றே பாடுங்கால் அமைவது.
கண்டன பவ பந்தன ஜக வந்தன வந்தி தோமாய் |
நிரஞ்ஜன நரரூபதர நிர்குண குணமய் ||
உலகியல் கட்டுகளை வெட்டியருள்வோய்!
உலகத்தால் வணங்கப் படுவோய்!
மாசுமறுவற்றோய்! மனித உரு தரித்தோய்!
குணங்களைக் கடந்தோய்!
உயர் குணங்களின் மயமாய் நின்றோய்!
உன்னை வணங்குவம் யாமே.
பவம் என்பது உலக இயலாக இருப்பது. அதன் இயல்பிலேயே பந்திக்கும் ஒன்றாக அமைவது. கருவிகரணங்கள் அமையப் பெற்று உருவாகும் மனித உயிர் அந்த கரணங்களைப் பயன்படுத்தும் முன்பே உலக இயல் அந்த உயிரின் அந்தக்கரணங்களில், அதாவது மனத்தில் உள்புகுந்து கலந்து விடுகிறது. பிறகு அந்த உயிர் தன்னியல்பு போல் நினைத்துச் செயல் படுவதெல்லாம் மேலும் பந்தக் கட்டுகளை வலுவாக்கும் செயலாக அமைந்து விடுகிறது. ஸ்ரீவைஷ்ணவ பூர்வாசாரியர்கள் இந்த இடத்தில் மிகவும் அற்புதமான கருத்தொன்றைக் கூறுகின்றனர். அதாவது இந்த ஜீவன் தனக்கு நன்மை என்று நினைத்துச் செய்வது எல்லாமும் கூட தனக்கே தீமையைச் சூழ்த்துக் கொள்ளும் உபாயமாக ஆகிவிடுகிறது என்பது அவர்கள் கருத்து. மேலும் அந்தப் பெரியோர்கள் கூறுவது யாதெனில் ஒருவன் கட்டுண்டு நின்றால் அவன் கட்டிலிருந்து விடுபட ஒரு கத்தியை யாரேனும் தந்தால் அதைக் கொண்டு கட்டினை வெட்டிக்களையாமல் கழுத்தை அறுத்துக் கொள்வது போல இருக்கிறது இந்த ஜீவன் தான் உய்வு பெற வேண்டி இயற்கையில் தரப்பட்ட அறிவை உரிய வழியில் பயன்படுத்தாமல் மேலும் தன்னை மோசம் போக்கிக் கொள்ளும் வழிகளில் போக்கிக் கொள்ளவே அந்த அறிவு பயன்படுகிறது. வெள்ளத்தில் அகப்பட்ட ஒருவருக்கு நீஞ்சிக் கரை சேரும் படியாக ஒரு புணை ஒன்றைக் கொடுத்தால் அதைக் கொண்டு கரையை நோக்கி நீஞ்சாமல் அடித்துப் போகும் வெள்ளத்தின் ஓட்டத்தின் வழியிலேயே போவது சுலபமாக இருக்கிறது என்று கொண்டு அப்படியே கடலில் போய் மூழ்கிவிடும் அபத்தமாகத்தான் இந்த ஜீவன் தனக்கு இயற்கையில் கொடுக்கப்பட்ட திறமைகளைப் பயன்படுத்திக் கொள்கிறது என்று மிகவும் துல்லியமாக இந்த நிலைமையை விவரிக்கின்றனர் ஸ்ரீவைஷ்ணவ பெரும் ஆசிரியர்கள். எனவே கடவுளின் கிருபை எந்தக் காரணமும் இல்லாது ஒரு ஜீவனின் மேல் விழுந்தால் அன்றி இந்த உலகியல் கட்டுகள் வெட்டியெறியப்படுதல் யாங்ஙனம்? உலகியல் கட்டுகளை வெட்டியெறிவதை விட இந்த ஜீவனுக்குக் கிடைக்கக் கூடிய வரமோ, கிருபையோ வேறு எதுவும் இல்லை எனலாம்.
அவ்வாறு உலகியல் கட்டுகளைத் தம்பால் ஈடுபாடு கொண்ட மாத்திரத்திலேயே தன்னிச்சையாக நிகழும் வண்ணம் செய்துவிடும் அருள்மூர்த்தியை உலகமே வணங்கிப் போற்றுவதை விட என்ன செய்து விடமுடியும்?
உலகியல் கட்டுகள் இவ்வளவு கொடியன என்னும் பொழுது இந்த ஜீவர்களைக் காக்க வேண்டித் தானும் மனிதர்களோடு மனிதராக அவதாரம் செய்யும் பகவானின் ஜனனம் கர்மவினை என்னும் குறைபாடு எதுவும் அற்ற திவ்யமான செயலாகும். நாராயணன் நர ரூபம் தரித்தல் என்பதைப் போல திவ்யமும் அற்புதமும் ஆன செயல் என்ன இருக்கிறது? உலகமே மூன்று குணங்களான சத்வம், ரஜோகுணம், தமஸ் என்னும் மூன்றால் ஆனது போல் இருக்கிறது. எனவே பவபந்தம் என்பதும் உள்ளே நுணுக்கமாய்ப் பார்த்தால் இந்த மூன்று குணங்களின் புரிகளால் முடையப் பட்டதுதான் என்பது தெளிவாகிறது. அப்படி என்றால் இந்த மூன்று குணங்களைக் கடந்து போய்விட்டால்? பவபந்தம் என்பதிலிருந்து விடுதலைதானே? ஆம். ஆனால் அதை எப்படிச் செய்வது? அதுதானே பிரச்சனை? நம் அறிவைக் கொண்டுசெய்யும் முயற்சி மேலும் நாம் விலக்கும் திசைக்கே கொண்டு போய்ச் சொருகுவதாய்ச் சூழ்ச்சி இருப்பது போல் தோன்றுகிறது என்றால்? வெள்ளத்தில் குதித்துக் காப்பாற்றுபவர்கள் ஒன்று செய்வது வழக்கம். தம்மைக் கெட்டியாகப் பிடித்துக் கொள்ளச் சொல்லிவிட்டுத் தாம் கரையேறும் வாய்ப்பிலேயே தம்மைப் பற்றினார்களையும் கரைக்கு ஏற்றிவிட்டு மீண்டும் வெள்ளத்தில் குதித்து விடுவார்கள் அடுத்தவர்களை மீட்க. அது போல் முக்குணங்களைக் கடந்த மூர்த்தியாக இலகுபவர் தம்மை உள்ளத்தால், வாக்கால், செயலால் ஜீவர்கள் பற்றிக் கொள்வதற்கு வாய்ப்பாக அனைத்து உயர்ந்த குணங்களின் மயமாகவே இருக்கின்றார். ஜீவர்கள் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான். அவருடைய குணங்களைப் பாடி, சிந்தித்து, அவர் பெருமை விளங்கும்படியான செயல்களைச் செய்து அதிலேயே தம்மை ஈடுபடுத்திக் கொண்டாலே போதும் பவபந்தனம் கண்டிக்கப்படுவதும், முக்தியும் தம்மைப் போல் நடந்தேறிவிடும். இவ்வாறு உள்ளம், உரை, செயல் மூன்றாலும் பகவத் குணங்களில் ஈடுபடுவதைத்தான் வந்தனம் என்று சொல்லப் படுவது.
கண்டன பவபந்தன
ஜகவந்தன வந்தி தோமாய்
நிரஞ்ஜன நரரூபதர
நிர்குண குணமய்
*
மோசன அகதூஷண ஜகபூஷண சித்கனகாய் |
ஜ்நானாஞ்ஜன விமலநயந வீக்ஷணே மோஹ ஜாய் ||
பாபம் என்பது அக(4)ம். மகாபாபம் என்பது அகதூஷணம். ஓர் உயிர் தான் முக்தி அடையும் மார்க்கத்திலிருந்து உலக மயக்கத்தில் ஆழும் வழிகளில் நடப்பது என்பது அந்த உயிரைத் தனக்குச் சொந்தமான ஆத்ம ஞானத்தை மறக்கடிக்கச் செய்கிறது என்பதால் பாபம் எனப்படுகிறது. முக்தி என்னும் இலட்சியத்தை மறந்து விடுவதும், தான் தூய அறிவுருவான ஆன்மா என்பதை மறந்து தேகமே தான் என்று மயங்குவதும், அதனால் எண்ணிறந்த துன்பத்திற்கும், தொடர்ந்த சோகத்திற்கும் ஆளாவதும் பாபத்தின் விளைவுகளாம். ஆனால் முக்திக்கான வழிகளையும், ஆன்ம ஞானத்திற்கான உதவிகள், வழிகள், உபாயங்கள் என்று உய்விக்கும் வழியையே அழிக்கத் துணிவது என்பது உலக மயக்கிலிருந்து தன்னை விடுவிக்கும் உபாயங்களையே அழிக்கும் செயல் ஆகையாலே மகாபாபம் என்று கருதப்படும். பகவான் ஸ்ரீராமகிருஷ்ணர் தோன்றிய காலம் பாபம் மலிந்த காலம் மட்டுமன்று. முக்திக்கான வழிகளையே கூட மனிதர்கள் அழிக்கத் துணிந்த மகாபாபமான காலமும் கூட. அத்தகைய காலத்தில்தான் ஓர் அற்புதம் நிகழ்ந்தது. பகவானின் தரிசனத்தாலும், அவரது அமுத மொழிகளைக் கேட்பதனாலும், அவருக்குத் தொண்டு செய்வதாலும் பாபம் தெறித்து ஓடுவதோடு அன்றி, மகாபாபமும் இருந்த இடம் தெரியாமல் மறையும் அற்புதம் நிகழக் கண்டவர்கள் பலர். உலக மயக்கம் நீங்கியது பலருக்கு என்றால், முக்திக்கான வழியைப் பகைப்பவர்களுக்கோ முக்தியில் நாட்டமும், ஆன்ம ஞானத்தின் அவசியமும் நன்கு உணரும் முனைப்பு தோன்றியது பேரதிசயம்.
எப்படி இது நடந்தது? ஆம். ஆத்ம ஞானமே, சித் மயமான ஆன்ம உணர்வே வடிவெடுத்து அவதாரம் செய்தால் பின்னர் பாபங்கள் தீயில் பட்ட பஞ்சிழைதானே!. மேலும் இந்த ஆன்ம ஞானத் தீயோ தன்னிலிருந்து கொளுத்திய பந்தமாய்ப் பலரைச் சுடர வைத்துவிட்டாலோ பின்னர் பாபங்களின் வேர்களும் அன்றோ கருகிவிடுகின்றன! இதை மிக அற்புதமாக முதல் வரியில் தெரிவிக்கிறார் சுவாமி விவேகாநந்தர். ‘மோசன அகதூஷண.. சிதகன காய்’. இந்த அதிசயம் நிகழ்ந்ததும் உலகியல் மயக்கம் அகன்றதும் உலகமே அணிகலன் போன்று மிகவும் விரும்பி அணிந்து ரசிக்கத் தக்கதாய் ஆகிவிடுகிறது. ஆன்ம ஞானம் பெற்ற மகான்களோ நடமாடும் அணிகலன்களாய் இந்த உலகை அழகான இடமாக ஆக்குகின்றனர். ’மோசன அகதூஷண ஜகபூஷண சித்கனகாய்’
மை என்பது மையல் என்னும் பொருளது. கண்ணிற்குக் குளிர்ச்சியும், அழகும் ஊட்டும் அழகு சாதனமும் மை என்று கூறப்படும். கரிய நிறமும் மை என்பதன் பொருளதாகும். சில சமயம் மந்திர சாத்திரங்களில் மறைத்து வைத்த புதையல் கண்ணிற்குப் புலப்பட உரிய மை ஒன்றை அணிந்தால் மறைவான புதையல் புலப்படும் என்ற பழங்கால அபிப்ராயமும் உண்டு. மனித வாழ்க்கையில் பெரும் புதையல் என்பதோ ஒன்றே ஒன்றுதான். அதுவே ஆத்ம ஞானம். கடவுளைக் காணும் காட்சி ஒன்றுதான் பெரும் மறைப்பாய் இருக்கிறது. ஒரு அதிசய மை இருக்கிறது. அதைக் கண்ணில் பூசிக் கொண்டால் காலம் காலமாக மறைந்துபட்ட பொக்கிஷமான புதையல் என்னும் ஆத்ம ஞானம் தெள்ளத் தெளிவாகக் காட்சிப்படும். அந்த மைதான் ஞானாஞ்சனம் என்பது. இந்த மையை அவரவர் தம் கண்ணில் அணிந்தால் உண்மை புலப்படும் என்பது ஒரு புறம். ஆனால் சித்கனமே உருவாக வந்த பகவானோ காணாத கண்ணிற்கெல்லாம் உற்ற ஞானக் கண்ணாய், ஞானாஞ்சனமாய், இருள் கடியும் ஒளியாய், மருள் கடியும் மாட்சியாய்த் துலங்குகிறார். அவரது கடைக்கணோக்கம் யார் மேல் விழுகிறதோ அவர்களின் மோகம் நசித்து விடுகிறது.
ஜ்நானாஞ்ஜன விமல நயந வீக்ஷணே மோஹ ஜாய்.
*
பா(4)ஸ்வர பா(4)வஸாகர சிர உன்மத ப்ரேம பாதார் |
பக்தார்ஜன யுகளசரண தாரண பவ பார் ||
இங்கே மிக அழகிய நயத்துடன் சுவாமி விவேகாநந்தர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரைப் படம் பிடித்துக் காட்டுகிறார். பிரேமமே உருவான ஒருவர், அதுவும் பிரேமைப் பித்து தலைக்கேறிய ஒருவர், நிற்பதற்கும், தமது உடல், உடை, உரைகளை ஒரு நிதானத்தில் வைத்துக் கொள்ளவே கஷ்டப்படும் அளவிற்கு பிரேமையினால் ஆவேசமுண்ட ஒருவர் - இத்தகைய ஒருவரைப் பற்றிய சித்திரம் முதல் வரியில் காட்டப் படுகிறது. ஆனால் இத்தகைய ஒருவர்தாம் எத்தனையோ பக்தர்கள், தம்மை நாடி வந்தோர் உலகமெனும் பெருங்கடலில் கடந்து நித்தியம் என்னும் அக்கரையை அடைய ஸ்திரமான பாலமாய் நின்றவர், தம் மீது ஏந்திச் சென்று அக்கரை சேர்க்கும் பெருங்கலமாய் விளங்கியதே பிரேமையினால் கால்கள் தரையில் ஊன்றி நிற்க முடியாமல் துவண்ட திருவடிகள்தாம் திவத்திற்கு ஏற்ற திண்ணிய புணை என்று இரண்டாவது வரியில் காட்டும் பொழுது நயமும், நயக்கும் நல்லுள்ளமும் ஒருங்கே திகழக் காண்கிறோம். அதுவும் எத்தகைய பிரேமம்? சிர உன்மத ப்ரேமம் தலைக்கு ஏறிவிட்ட பித்தம் என்னும்படியான பிரேமம், பக்தி சாஸ்திரங்கள் பா(4)வ நிலை என்பதைக் குறித்துப் பேசுகின்றன. மஹாபா(4)வம் என்னும் நிலையை பக்தர்களின் உலகிலேயே மிகச்சிலர்தாம் எய்தியிருந்தனர் என்கின்றனர். (ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் அவ்வாறு மஹாபா(4)வம் என்னும் பெருநிலை எய்தப் பெற்றவர். சுவாமி நம்மாழ்வார் இத்தகைய மஹாபா(4)வம் என்னும் பெருநிலை அடைந்திருந்தார் என்பதை ஈட்டு வியாக்கியானம் முதலிய உரைகளால் நம்மால் அறிய முடிகிறது. ஸ்ரீகிருஷ்ணன் ஆய்க்குலத்தில் குழந்தையாய் வந்து தோன்றி யசோதை ஆச்சியிடம் வெண்ணைக்காகக் கெஞ்சி நெகிழ்ந்து நின்றான் என்ற செய்தியைப் பாட வந்த நம்மாழ்வார் பரமாத்மா, ஸர்வஸ்மாத்பரன் இவ்வாறு மனிச்சப் பிறவியில் தோன்றி ஆய்ச்சியர் கடைந்த வெண்ணைக்காக ஏங்கினான் என்னும் தீர்க்க முடியாத புதிரான பேரருளில் நெஞ்சைப் பறிகொடுத்தவர் ஆறுமாசம் மோகித்துக் கிடந்தார் என்னும் செய்தியை ஈடு பதிவு செய்கிறது. மேலும் நம்மாழ்வார் உற்ற பெருநிலையை அடைந்த முந்தைய உதாரணமான மகாத்மாக்களைச் சொல்லும் வாய்ப்பில் வாமதேவர், ருத்ரர் போன்றோரைக் காட்டுகிறது ஈடு வியாக்கியானம்.)
அத்தகைய பா(4)வநிலைகளின் சாகரமாகத் திகழ்ந்தவர் ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸர் என்பதைக் கூறுமிடத்து சுவாமி விவேகாநந்தர் ஒரு முக்கியமான பதத்தை இடுகிறார். அதுவே பாஸ்வர என்பதாகும். பாஸ்வர என்றால் ஒளி மிகுந்த என்று பொருள். பா(4)வம் என்பது காவ்ய சாஸ்திரம் காட்டும் பொருளில் உள்ளத்தின் உணர்ச்சியடங்கா நெகிழ்நிலை என்பதைச் சாதாரணமாகக் குறிக்கும். அதிலிருந்து சிறப்பித்துக் காட்டும் வகையில் ஞானமே பக்தியாகப் பரிணமித்து உருபொலிந்து நிற்கிறது என்பதையே பாஸ்வர பாவஸாகர என்கிறார் சுவாமிஜி. ஸ்ரீராமாநுஜர் பக்தியின் உருவை அடைந்த ஞானம் - பக்தி ரூப ஆபந்ந ஜ்நாநம் - என்பார். யுகளம் என்பது இரட்டையைக் குறிக்கும். இங்கு சரண யுகளம் என்பது திருவடிகள்.
ஸ்ரீராமகிருஷ்ண சரணம்!
*
ஜ்ரும்பித யுக ஈச்வர ஜகதீச்வர யோகஸஹாய் |
நிரோதந ஸமாஹிதமன நிரகி தவ க்ருபாய் ||
ஜகத்திற்கெல்லாம் ஈச்வரர் ஜகதீச்வரர் எனப்படுகிறார். நியமன ஸாமர்த்தியம் ஈச: என்னும் பதத்தின் வேர்ப்பொருள். புறத்தில் நின்று நியமிப்பதைவிட அகத்தில் நின்று உள்ளுயிராய், அந்தர்யாமியாய் நியமிப்பது விசேஷமானது. அந்தர் + யாமி என்னும் சொல்லே அதைச் சுட்டுகிறது. ‘உடல்மிசை உயிரெனக் கரந்தெங்கும் பரந்துளன்’ என்கிறார் நம்மாழ்வார். பரந்து உளன் என்னும் சொல் சேர்க்கையில் ஓர் உண்மை மறைந்து கிடக்கிறது. எங்கும் பரந்து இருப்பதனாலேயே எப்படி நியமிக்க முடியும்? நியமித்தல் என்னும் போது இருத்தல் என்பதை விட கூடுதலான ஓர் முனைப்பும் ஆட்சியும் அன்றோ தொனிக்கிறது! அதெல்லாம் பரந்து உளன் என்று சொன்னாலே அர்த்தம் ஆகிவிடுமா? இருத்தலும், இயக்கலும் தனித்தனி என்பது உலகியலில் உள்ள சிறுமையினால் உண்டாகும் தடைகள். உண்மையே ஆகிநிற்கும் உணர்வுப் பொருள் விஷயத்தில் அது இருப்பது என்பதே உலகையும், உலகப் பொருட்களையும் உளது என்ற உண்மை நல்குவதாய் அமைகிறது. இதைத்தான் உபநிஷதங்கள் சத்யம், சத்யஸ்ய சத்யம் என்று பிரித்துக் காட்டுகின்றன. எனவே உலகைக் கடந்த உண்மையாய் இருக்கும் பரம்பொருள் ஏன் உலகு என்பதற்கு உண்மை என்பதை நல்க வேண்டும்? உயிர்களின் பக்குவத்திற்காகவும், பரம்பொருளை அடைவதற்காகவும் என்றே உலகம் தோன்றுகிறது. உலகம் என்பதன் பொருளே பருப்பொருளோடு கலந்திருக்கும் உயிர் பரம்பொருளை அடைவிக்கும் அமைப்பு என்று சொல்லலாம். உயிர்கள் பரிபாகம் அடையும் தொடர்ச்ச்சியான காலங்கள் யுகங்கள் என்று அழைக்கப் படுகின்றன. ஒவ்வொரு யுகமும் கனியும் பொழுது அந்த யுகத்திற்கான மார்க்கத்தைத் துலக்கிக் காட்டி உயிர்களை முன்னேற்றும் அருளையும் உலகத்தின் ஈச்வரராய் இருப்பவர் செய்கிறார். அதுகால் அவர் யுக ஈச்வரர் என்று அழைக்கப் படுகிறார். யுகத்தின் ஈச்வரர் தோன்றும் பொழுது யுகம் கனிகிறதா அல்லது யுகம் கனிந்த பொழுது யுக ஈச்வரர் தோன்றுகிறாரா என்று அறிதல் கடினம். ஒன்றை ஒன்று சார்ந்து, ஒன்றிலிருந்து ஒன்று வேறிலாது நடக்கும் ஒன்றை மிக அழகாக ஜ்ரும்பித என்னும் சொல் உணர்த்துகிறது. ஜ்ரும்பித யுக ஈச்வரர் வேறு யாரும் இல்லை ஜக ஈச்வரர்தாம். பரிபாகத்திற்கு வந்த ஜீவர்களின் பரத்தை நோக்கிய நாட்டம் யோகம் எனப்படும். ஜீவர்களின் யோகத்திற்குப் பெரும் ஸஹாயமாக இருப்பவர் என்பதால் யோகஸஹாய்.
இந்த திவ்யமான ரகசிய உண்மையைச் சிலர் சமகாலத்திலும் கூடப் பார்த்துப் புரிந்து கொள்கின்றனர். அவர்கள் பார்க்கிறார்கள் என்பதை விட ஜகதீச்வரர் அவர்களுக்குத் தம் கிருபையால் பார்க்கும் கண்களை அருள்கிறார் என்பதே உண்மை. அநேகமாக அவர்களும் அவதார புருஷரின் அருட்செயலுக்குத் துணை புரிய வந்தவர்களாகவே அமைகின்றனர். ஸ்ரீராமகிருஷ்ணர் என்னும் யுக ஈச்வரருக்கு உதவியாக வந்தவர்களில் தலையாயவர் சுவாமி விவேகாநந்தர் எனலாம். ஆனால் அவரே இந்த உண்மையைத் தாம் புரிந்து கொண்டது ஸ்ரீராமகிருஷ்ணரின் அருளால் என்று கூறுகிறார். சிலர் பார்க்க முடிகிறது என்றால் அதுவும் அருளால் என்றால் அந்தப் பார்வையின் நுட்பம் எப்படி அமைந்திருக்கிறது என்பதை விளக்குகிறார் சுவாமிஜி. மனம் நம்மிடம் அலைக்கழிக்கும் உள்ளாற்றலாய் உணரப்படுகிறது. ஆனால் நெடிய யோக சாதனைகளால் மனத்தைச் சமப்படுத்தியவர்களுக்கோ சமநிலை அடைந்த மனமே ஆன்மிக உண்மைகளை நன்கு பிரதிபலிக்கும் திவ்ய சக்தியாகத் திகழ்கிறது. ஆனால் அத்தகைய மனத்திலும் அவதார புருஷர்களின் திவ்யமான லீலைகளைப் புரிந்து கொள்வது என்பது தெய்வ அருளால் மட்டுமே சாத்தியமாகின்றது.
நிரோதந ஸமாஹிதமன நிரகி தவ க்ருபாய்
நன்கு கட்டுண்டு அடங்கிச் சமநிலை உற்ற மனத்தால் உங்களுடைய அருளால் மட்டுமே இதை நான் காண்கிறேன் - என்பது சுவாமி விவேகாநந்தர் பாடும் இரண்டாவது வரியின் பொருள்.
*
பஞ்ஜன துக்க கஞ்ஜன கருணாகன கர்மகடோர் |
ப்ராணார்ப்பண ஜகத தாரண க்ருந்தன கலிடோர் ||
பெருத்த துக்கத்தை அழிப்பவராய் செயற்கரிய அதிசெயல்களைச் செய்தார். கடும் ஆத்ம சாதனைகள். என்ன காரணம்? தாம் கருணையே உருவாக இருந்த காரணம் ஒன்றுமே அமைகிறது. தம் சரிதத்தைப் படித்தாலே பக்தர்களுக்கு அதுவே ஆத்ம சாதனையாக அமையும் அளவிற்கு அவர் செய்த சாதனைகளின் கடுமை. தமது உயிரையே தந்து உலகை உய்விக்க வேண்டி அத்தகைய கருணை. அவரது அந்தத் தனிப்பெரும் கருணையே கொடிய கலியின் கட்டுகளை வெட்டிவிட்டு விடுதலை அளிக்க வல்லதாய் ஆகுகிறது.
ஸ்ரீராமகிருஷ்ணரின் ஆராத்ரிக ஸ்தோத்ரமாக வங்காள மொழியில் சுவாமி விவேகாநந்தர் அருளியதில் ஐந்தாவது சுலோகம் இதுவாகும்.
*
வஞ்சந காமகாஞ்சந அதிநிந்தித இந்த்ரியராக் |
த்யாகீச்வர ஹே நரவர தேஹ பதே அநுராக் ||
ஸ்ரீராமகிருஷ்ண ஆராத்ரிக கண்டனபவ பந்தன ஸ்தோத்திரத்தில் 6ஆவது சுலோகம்.
காமம் காஞ்சனம் என்னும் இன்பப் பற்று, பொருள் பற்று இரண்டையும் துறந்து நின்றீர்! இந்திரியங்களின்பால் ஈர்ப்பு என்பதை மிகவும் கண்டித்து ஒதுக்கி நின்றீர்! தியாகத்தின் ஈசுவரராய் மனிதரில் உயர்ந்து நின்றீர்! ஐயா! தங்கள் பதமலரில் எனக்குத் தீவிரமான பற்றையே தந்தருள்க ஐயனே!
உலகப் பற்றுகளை ஒழித்து நின்றவர், புலனிச்சைகளைக் கண்டித்து ஒதுக்கியவர், தியாகத்தின் தலைவர், ஸ்ரீராமகிருஷ்ணர். ஆனால் சுவாமி விவேகாநந்தர் அவரிடம் வேண்டுவதோ அவரது பதமாமலர்களில் தீவிரமான பற்று. இந்த நயம் அறிந்து அனுபவிக்கத் தக்கது. செந்நாப்போதாரும் சொன்னது என்ன? ‘பற்றுக பற்று அற்றான் பற்றினை’ எதற்கு? ‘பற்று விடற்கு’ என்றார். பற்று விடுவதற்கும் அவருடைய தாளே கதி.
சுவாமி நம்மாழ்வார் ’பற்றிலன் ஈசனும், முற்றவும் நின்றனன்; பற்றிலையாய் அவன் முற்றில் ஒடுங்கே’ என்று கூறினார். பற்று விட்ட பின் என்ன செய்வது? பற்று விட்டவனின் பூர்ணத்துவத்தில் ஒடுங்குவதே செயற்பாலது. பற்றின்மையை அருளி உலகியல் கடியும் வழியும் அவரது இணையடிகள்; பற்று விட்டோர்க்குப் புகலாவதும் அவருடைய திருவடிகள் என்னும் கருத்தையே சுவாமி விவேகாநந்தர் இந்த சுலோகத்தில் அமைத்துப் பாடியிருக்கிறார்.
*
நிர்பய கதஸம்சய த்ருடநிச்சய மாநஸவான் |
நிஷ்காரண பக்தசரண த்யஜி ஜாதி குல மான் ||
பயம் சிறிதும் அற்றவர்; ஐயம் அகன்றவர்; திடநிச்சயம் வாய்ந்தவர். பயமற்ற, ஐயங்களற்ற, திடநிச்சயமே உருவான மனம் உம்முடையது. பக்தர்களுக்குப் புகலிடம் ஆனீர்! ஏதோ காரணமாகவா என்றால் இல்லை காரண நிமித்தமாக அல்லாமல் இயல்பாகவே பக்தர்களுக்கான சரணமாக இருக்கின்றீர்! ஐயனே! ஜாதி, குலம் போன்றவற்றில் பெருமித எண்ணம் கொள்ளுவதை முழுவதும் அகற்றிக் கடிந்தீர் ஐயனே!
(ஸ்ரீராமகிருஷ்ன ஆராத்ரிக ஸ்தோத்ரம் கண்டனபவ பந்தன ஸ்தோத்ரத்தில் 7ஆவது சுலோகம்)
*
ஸம்பத தவஸ்ரீபத பவகோஷ்பத வாரியதாய் |
ப்ரேமார்ப்பண ஸமதரசந ஜகஜந துக்க ஜாய் ||
உம்முடைய திவ்ய பதமலர்கள் பக்தர்களுக்குப் பெருநிதியம் ஆகும். உமது பதமலர்களைப் புகலாகக் கொண்டால் பவம் என்னும் ஸம்ஸாரமானது பசுவின் குளம்படிக் குழியில் தேங்கும் நீருக்குச் சமமாய்க் கடப்பதற்கு வெகு எளிதாய் ஆகும். பகவானின் பிரேமம் என்பதற்கே அர்ப்பணிக்கப்பட்ட மூர்த்தமாய் நின்றவரே! ஸமதர்சநம் என்பதற்கே விளக்கமாய் நின்றவர் நீர்! ஜகத்தில் உள்ள ஜநங்களின் துக்கமெல்லாம் நீங்குவதற்காக அன்றோ!
(கண்டன பவ பந்தன ஸ்தோத்ரம் ஸ்ரீராமகிருஷ்ண ஆராத்ரிகம், 8ஆவது சுலோகம்)
*
நமோ நமோ ப்ரபு வாக்யமனாதீத
மநோவசனைகாதார்
ஜ்யோதிர ஜ்யோதி உஜல ஹ்ருதிகந்தர
துமி தமோபஞ்ஜனஹார் ||
வாக்கு மனம் கடந்துநிற்கும் பிரபுவிற்கு வணக்கம்
மனம் வாக்குக்கிற்கெல்லாம் ஆதாரமாய் விளங்கும்
பிரபுவிற்கு வணக்கம்
வாக்கு மனம் அனைத்தாலும் வணக்கம்
ஒளியில் சிறந்த பேரொளியாம் பிரபுவிற்கு வணக்கம்
இதயக் குகையில் ஒளிரும் பெருஞ்சுடர் ஆன பிரபுவிற்கு வணக்கம்
மருளாம் இருளைக் கடியும் ஒளிநீர் பிரபுவே!
தே தே தே லங்க ரங்க பங்க பாஜே
அங்க ஸங்க ம்ருதங்க
காயிசே சந்த பகதவ்ருந்த
ஆரதி தோமார் ||
ஜய ஜய ஆரதி தோமார்
ஹர ஹர ஆரதி தோமார்
சிவ சிவ ஆரதி தோமார் ||
தே தே தே லங்க ரங்க பங்க என்றே
பல்விதமாயின ஒலிகளுடன்
பக்க வாத்தியங்கள் தாளக் கருவிகள் முழங்க
பக்தஜனங்கள் குழுமிநின்றே
காதல் உள்ளம் கரைந்து நினக்கே
ஆரதி பூஜை செய்கின்றார்!
ஜய ஜய ஆரதிபூஜை செய்கின்றார் !
சிவ சிவ ஆரதி பூஜை செய்கின்றார் !
(ஸ்ரீஸ்ரீராமகிருஷ்ண ஆராத்ரிக கண்டன பவ பந்தன ஸ்தோத்திரம் நிறைவுற்றது. ஜய ஜய ஸ்ரீராமகிருஷ்ண !)