Thursday, September 17, 2020

சுருங்கச் சொல்!

 சும்மா வளவளன்னு எழுதாஅத. சுருக்கமா நாலு வார்த்தையில எழுது.

நாலு வார்த்தையில என்னங்க எழுத முடியும்
என்ன எழுத முடியுமா? உபநிஷதங்களே நாலு மகாவாக்கியங்களிலே தத்துவத்தையே சுருக்கி உரைத்து விட்டன... நாலு வார்த்தையில என்ன எழுத முடியும்னு....
எனக்கு வேலையிருக்கு நீங்க உங்க வேலையைப் பாருங்க.
நாலு வார்த்தை என்றால் இதையும் ஆறு வார்த்தையில்ல எழுதியிருக்க?
ஓ .. வேலையிருக்கு உங்க வேலையைப் பாருங்க
குட். சொன்னா தெரிஞ்சிக்கிறியே. கீப் இட் அப்.
*
’நாலு வார்த்தையில சொல்லு’ என்ற ஸ்டேடஸுக்கு ஒரு நண்பரின் கருத்து - ‘என்னதான்.. படிக்கச் சுவையாக இருக்கு... ஆனால் கொஞ்சம் ஓவர்.. அப்படியெல்லாம் மக்கள் இன்னும் ட்விட்டேரியர்களாக ஆகிவிடவில்லை.
சரி. ஒரு டெஸ்ட் பண்ணிப் பார்ப்போம் என்று இந்த ஸ்டேடஸை -
*

பழையபடி, வழிவழியாக என்ன சொல்லியிருக்கிறார்களோ அதுவே உத்தமம். அதில் தவறு இதில் தவறு என்று சொல்ல நாம் யார்? சிலது நமக்குப் புரியாமல் இருக்கலாம். ஆனால் பழைய ஆசிரியர்கள் எல்லாம் தெரியாமலா சொல்லி வைத்திருப்பார்கள்? இன்று அதையெல்லாம் கூடிய மட்டில் அப்படியே பின்பற்றிச் செல்வதுதான் ஒரே வழி. -- இது ஒரு பார்வை.
பழைய நெறிகளா? அவற்றில் சொன்னதெல்லாம் சரியாய் இருக்க வேண்டும் என்று என்ன விதத்தில் நியாயம்? இன்றைக்கு நம் அநுபவம், அறிவு ஆகியவற்றிற்குத் தகுந்தாற் போல் புதிதாக வழிகளில் போய்க் கொண்டிருக்க வேண்டியதுதான். சும்மா பழையனவற்றையே தூக்கிப் பிடிப்பதும், சிலர் அதைப் பற்றியே கண்டித்துக் கொண்டிருப்பதும் ஏன் தேவையற்ற காலவிரயம்? மனிதருக்குக் கண் முன் நோக்கி இருக்கிறதே அன்றி பின் நோக்கி இல்லை. அவர்கள் காலத்தில் அவர்களுடைய பிரச்சனைகளை அவர்கள் ஏதோ தீர்க்க முயன்றார்கள் அல்லது தோற்றார்கள், ஏதோ ஒன்று போகட்டும். இன்றைய நிஜத்தைப் பார். இனிவரும் காலத்தைப் பார். - இது ஒரு பார்வை.
இதில் பழமையையே போற்றுவது என்று முடிவு செய்தாலும் காலம் நம்மைத் தண்டிக்கிறது. நடக்கும் நிஜத்திற்குக் கண்ணை மூடிக் கொள்ளும் சாமர்த்தியத்தைக் காலம் ஆதரிப்பதில்லை. அவர் சொன்னார், இவர் சொன்னார் அதனால் நம்பினேன், என் மீது என்ன தவறு என்றெல்லாம் எவ்வளவு வாதம் செய்தாலும் காலம் சிறிதும் அதற்கெல்லாம் மதிப்பே அளிப்பதில்லை. இருக்கின்ற பிரச்சனைகளுக்கு உங்களுடைய தீர்வுகள் பொருத்தமாக இருக்கின்றனவா? நீங்கள் பாஸ். இல்லையா நீங்கள் ஃபெயில். இப்படித்தான் காலத்தின் எக்ஸாம் சிஸ்டம் போகிறது.
சரி. பழமையே வேண்டாம். புதுமை. திரும்பியே பார்க்காதே. ரேர் வ்யூ கண்ணாடியையெல்லாம் கழட்டித் தூர எறிந்துவிடு. இன்றைக்கு இருப்பது நிஜம். இனி வருவது நிச்சயம், என்று இதுவரை மனிதர் அறிந்த அனுபவங்களையும், பாடங்களையும் ஒதுக்கிவிட்டு நடந்தாலும் காலம் தண்டிக்கிறது. இன்றைய பிரச்சனையைப் போல் பழங்காலத்திலும் பிரச்சனை வந்த பொழுது அன்றே சில தீர்வுகளைக் கண்டு, அதைப் பரிசோதனை செய்து பார்த்து, அதிலிருந்து பாடம் கற்று, அந்தப் பாடத்தைத் தானே பல விதங்களிலும் வரும் தலைமுறைகளுக்கு விட்டுச் சென்றிருக்கின்றனர்? அதையெல்லாம் நீ அலட்சியம் செய்து விட்டால் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு காலத்திலும் ஒரே விதமான பிரச்சனைகளை ஒவ்வொருவாரும் புதிது புதிதாக அனுபவித்து, சோதனை செய்து போய்க் கொண்டிருந்தால் பின்னர் கல்வியினால் ஆய பயன் என்ன? என்று கேளாமல் கேட்ட கேள்வியாய்க் காலம் நம்மைத் தண்டித்துவிட்டுப் போய்விடுகிறது.
காலத்தில்தான் நம் ஜீவிதம் என்பதால் காலத்தை எதிர் நிறுத்தி நம்மால் மல்லுகட்ட முடிவதில்லை. ஒன்று இதைச் சொல் அல்லது அதைச் சொல். எப்படி முடிவு பண்ணாலும் தவறு என்றால் என்று யாரைக் கேட்பது? நம்மை நாமேதான் கேட்டுக் கொள்ள வேண்டும்.
பழையன கழிதலும் புதியன புகுதலும்
வழுவல கால வகையி னானே
என்று நன்னூலார் சொல்வதும் யோசிக்க வேண்டியிருக்கிறது. ஆங்கிலப் புலவர் டென்னிஸன் இன்னும் உடைத்தே சொல்கிறார்:
The old order changeth yielding place to new
And God fulfills himself in many ways
lest, one good custom should corrupt the world
எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்பது அறிவு
என்கிறார் பொய்யாமொழியார். யோசிப்போம் தேநீரோடு தெளிநீராக.
*
இதை வாஸ்தூபத்தில் ஒரு நண்பருக்கு அனுப்பினேன். கொஞ்சம் நேரம் கொடுத்துப் பின்னர் கேட்டேன் ‘என்ன படித்தீர்களா?’. இல்லப்பா. தெறாக்க மாட்டேங்குது. இங்க ஏதோ நெட்டு பிரச்சனை போல இருக்கு.
சரி ஒன்றும் பிரச்சனை இல்லை. சும்மா நாலு ப்ளஸ் நாலு வரிதான். கேளு என்று படித்துக் காட்டியே விட்டேன். எல்லாம் கேட்டுவிட்டுச் சொல்கிறார் - ‘என்ன சொல்லவர... பழமைதான் சிறந்தது என்கிறாயா?’ --
போப்பா நான் இந்த ஆட்டத்துக்கு வரவில்லை. ... .......இருந்தாலும் மனம் தளரா விக்கியாக -
‘அதாவது சும்மா ப்ளைண்டா பழமைன்னாலும் சரியா வராது. அதுக்குன்னு புதுமைதான்னாலும் ஓகே ஆகாது. அதுல எது பெஸ்ட். இதுல எது பெஸ்ட்ன்னு அறிவைப் பயன்படுத்திதான் புரிஞ்சுக்கணும். அப்படிப் போயிக்கினே இருந்தா விஷயம் பெரும்பாலும் சரியாஅ வரும்.’
சூப்பர். கரெக்ட்டா சொன்ன.
அப்ப... முதலில் அப்படி மாங்கு மாங்கு மன்னார்குடி சாங்குன்னு எழுதினது எல்லாம்.. ஒன்னும் ஒர்க்கவுட் ஆவல்லியா... சரிதான் ’ட்விட்டு இல்லன்னா கெட் அவுட்டு’... இதுதான் யுகம் இல்ல.. ஏண்டா ரங்கா இது தேவையா உனக்கு...
சரி சரி ஃப்ரீயா விடு...
***

No comments:

Post a Comment