Monday, February 14, 2022

ஸ்ரீ பஞ்சாயுத ஸ்தோத்ரம் - எளிய தமிழில் பொருளுடன்

மனித குலத்திற்கு இயற்கையில் அறிவுடைமை என்பது ஏற்பட்டிருப்பினும், உணர்ச்சிகள், ஆசைகள், விபரீத எண்ணங்கள், பொருந்தாத கற்பனைகள் என்று பலவிதமான தடைகள் காரணமாக மனிதர் அல்லலுறுவதைப் பார்க்கிறோம். மனத்தால் ஏற்படும் கோளாறுகள் ஒரு புறம் என்றால், இயற்கையில் எதிர்பாராமல் திடீரென விளையும் நோய்கள், விபத்துகள் ஆகியன படுத்தும் பாடு கேட்கவே வேண்டாம். மனிதர் தம் ஆற்றலையே ஒழுங்கான முறையில் கையாண்டு வாழ்க்கையை வளமும், மகிழ்ச்சியும் நிறைந்ததாக ஆக்கிக் கொள்ளத் தெய்வ சக்திகளின் துணை பெரிதும் வேண்டப்படுகிறது. நம்பிக்கைதானே என்று சிலர் நினைத்தாலும் அந்த நம்பிக்கை தரும் பலம் உள இயல் ரீதியாக மிகவும் முக்கியமானது. நம் பெரியோர்கள் இந்த உள இயலை நன்கு அறிந்தவர்கள். தெய்வ சக்திகளைக் குறித்த பிரார்த்தனைகளை எத்தனையோ அரிய சுலோகங்கள் வாயிலாக நமக்கு அளித்துள்ளனர். அதில் ஓர் அரிய சுலோகம் இந்த ஸ்ரீபஞ்சாயுத ஸ்தோத்ரம். 

திருமாலின் ஐந்து ஆயுதங்களான சக்ரம், சங்கம், கதை, கத்தி, வில் என்று பஞ்ச ஆயுதங்களைக் குறித்தும் பிரார்த்தனையாக வருவது இந்தத் துதி. பிரபஞ்ச தத்துவங்களையே திருமால் தம் ஆயுதங்களாகத் தரித்துள்ளார் என்பது முக்கியமான கருத்து. உதாரணத்திற்கு, காலம் என்ற மாபெரும் தத்துவமே திருமால் கையில் சக்கரமாகத் திகழ்கிறது. பிரகிருதி தத்துவமே அவரது சங்கமாகத் திகழ்கிறது. வித்யைகள் அனைத்தும் ஒருங்கே அவரது வாளாகத் திகழ்கிறது. புத்தி தத்துவம் அவரது கதை. அஹங்காரத்தை உட்கொண்ட இந்திரியக் கூட்டங்கள் என்னும் தத்துவமே சார்ங்கம் என்னும் வில். எனவே தெய்வத்தன்மை வாய்ந்த ஐந்து ஆயுதங்களைக் குறித்த துதியானது திருமாலுக்கே ஆன துதியாக ஆகிறது. இந்தத் துதியால் நாம் பிரபஞ்ச தத்துவங்களையே உள்ளடக்கிப் பிரார்த்திக்க முடிகிறது என்பதுதான் இந்தத் துதியின் விசேஷம். 


ஸ்புரத் ஸஹஸ்ரார சிகாதி தீவ்ரம் 
சுதர்சனம் பாஸ்கர கோடி துல்யம் | 
ஸுரத்விஷாம் ப்ராண விநாசி விஷ்ணோ: 
சக்ரம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

கூர்முனை வாய்ந்த கடும் ஆரங்கள் ஆயிரம் மின்னழல் எழும், கோடி சூரியர் போன்று ஒளி பொங்கிச் சுடரும், தேவர்களின் பகைகளை உயிர்மாயச் செய்யும் திருமாலின் ஆயுதம் சக்கரம். அதனை எப்பொழுதும் நான் சரணடைகிறேன். 



விஷ்ணோர் முகோத்தாநில பூரிதஸ்ய 
யஸ்ய த்வநிர் தானவ தர்பஹந்தா | 
தம் பாஞ்சஜன்யம் சசிகோடி சுப்ரம் 
சங்கம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

திருமாலின் வாயினால் ஊதப்பட்ட காற்றினால் நிறைந்து எந்தச் சங்கம் எழுப்பிய ஒலியானது தீயவர்களின் செருக்கை அழித்து விடுகிறதோ, அந்தச் சங்கமோ பார்ப்பதற்கு கோடி நிலவு எரித்தால் போன்று குளிர்ந்த வெண்ணொளி திகழ்கிறது. அந்தச் சங்கத்தையே எப்பொழுதும் சரணம் எய்துகிறேன். 

ஹிரண்மயீம் மேருஸமாந ஸாராம் 
கௌமோதகீம் தைத்ய குலைஹ ஹந்த்ரீம் | 
வைகுண்ட வாமாக்ர கராபிம்ருஷ்டாம் 
கதாம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

பொன்மயமாகச் சுடர்வது. வலுவில் மேருமலையை ஒத்தது. வைகுண்டநாதனாகிய திருமால் தமது இடக்கரத்தால் மெதுவாகத் தொட்டாலே சென்று தீயோரின் கூட்டங்களை வழிவழியாகத் தொலைத்து விடுவது. கௌமோதகீ என்னும் அந்தக் கதையை நான் எப்பொழுதும் சரணம் அடைகிறேன். 


ரக்ஷோSஸுராணாம் கடினோக்ர கண்டச் 
சேதக்ஷரச் சோணித திக்ததாரம் | 
தம் நந்தகம் நாம ஹரே: ப்ரதீப்தம் 
கட்கம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

தீமை புரியும் அரக்கர், அசுரர் ஆகியோரின் கடுமையானதும், உக்கிரமானதுமான கழுத்துகள் என்னும் வாதங்களையும், திரிப்புகளையும் முறியடிப்பதிலேயே எப்பொழுதும் மும்முரமாய் இருக்கும் கத்தி நந்தகம் என்னும் பெயர் கொண்டது. ஹரியின் கையில் திகழ்வது. அந்தக் கட்கத்தை நான் எப்பொழுதும் சரணம் அடைகிறேன். 


யஜ்ஜ்யாநிநாத ச்ரவணாத் ஸுராணாம் 
சேதாம்ஸி நிர்முக்த பயாநி ஸத்ய: | 
பவந்தி தைத்யாசநி பாணவர்ஷி 
சார்ங்கம் ஸதாSஹம் சரணம் ப்ரபத்யே || 

எந்த வில்லின் நாணொலியைக் கேட்டதும் தேவர்களின் உள்ளம் பயம் நீங்கித் தெளிவடைகிறதோ அந்த வில்லானது சார்ங்கம் ஆகும். தீயோரின் கூட்டத்திற்கு இடியேறென அம்புமழை வீழ்த்தி அழிக்கும் தன்மையது. அந்தச் சார்ங்கம் என்னும் வில்லைச் சரணம் அடைகிறேன். 


இமம் ஹரே: பஞ்சமஹாயுதானாம் 
ஸ்தவம் படேத் யோSனுதினம் ப்ரபாதே | 
ஸமஸ்த துக்காநி பயாநி ஸத்ய: 
பாபாநி நச்யந்தி ஸுகாநி ஸந்தி || 

தினமும் காலையில் இந்த ஹரியின் ஐந்து பெரும் ஆயுதங்களைக் குறித்த துதியை யார் படிக்கின்றார்களோ அவர்களின் அனைத்து துக்கங்கள், பயம், பாபம் எல்லாம் அழிந்து போகின்றன. சுகமே விளைகிறது. 


வநே ரணே சத்ரு ஜலாக்நி மத்யே 
யத்ருச்சயாபத்ஸு மஹாபயேஷு | 
இதம் படந் ஸ்தோத்ரம் அநாகுலாத்மா 
ஸுகீபவேத் தத்க்ருத ஸர்வரக்ஷ: || 

வனத்தில் இருந்தாலோ, போர்க்களத்தில் இருந்தாலோ, அல்லது பகைவரின் நடுவே, நீரின் நடுவே, நெருப்பின் நடுவே, எதிர்பாராது விளைந்த ஆபத்துகளின் நடுவே பெரும் பயத்தில் மாட்டிக்கொண்டாலோ இந்தத் துதியைப் படிப்பவரின் மனம் துயரகன்று அவருக்குச் சுகமே விளையும். அனைத்து விதங்களிலும் அவர் காப்பாற்றப்பட்டவர் ஆகிறார். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment