ஒரே ஒரு சுலோகத்தை மட்டுமே வாழ்நாள் முழுக்கவும் கற்று, நினைவில் கொண்டு தினம் சொல்லி ஒருவர் தோய்கிறார். ஆனாலும் அந்த ஒரு சுலோகத்தின் அர்த்தங்களில் தோய்வதால் மட்டுமே அவர் ஆத்ம ஞானம் என்னும் பாதையில் நெடுந்தூரம் முன்னேற்றம் கண்டுவிட முடியும் என்றால் அஃது இந்தச் சுலோகமான தன்யாஷ்டகம்தான். எத்தனை கிருபையும், யோசனையும் கொண்டு ஸ்ரீ ஆதிசங்கர பகவத்பாதர் இதை இயற்றியுள்ளார் என்பதை நோக்கும் போது நன்றியுணர்வே எழும்.
அதாவது உலகில் இந்த வார்த்தையைக் கேட்டிருப்போம். ‘அவருக்கென்னப்பா கொடுத்து வைத்தவர்!’ என்று மக்கள் பலரும் சொல்வார்கள். அதாவது அவர்களுக்குக் கிடைக்க வேண்டும் என்று விரும்பிய சிறப்பு, வளம் பிறருக்குக் கிடைக்கும் போது இந்தச் சொல் வரும். அல்லது மிகச் செல்வாக்கான நிலையை, கூட இருந்த ஒருவர் அடைந்துவிட்டால் அவரைக் குறித்தும் இதுபோல் சொல்வார்கள். இவ்வாறு சொல்வதன் உள்ளே இருக்கும் உளவியலைக் கவனிக்க வேண்டும். தாம் எந்த நிலையை இலட்சியம் என்று கருதுகிறார்களோ, தாம் எதைக் குறித்து ஏங்குகிறார்களோ அதைப் பிறர் ஒருவர் அடையும் போது இவ்வாறு சொல்லத் தோன்றும். இந்த உள இயலை நன்கு கவனித்திருக்கிறார் ஸ்ரீபகவத்பாதர். பொதுமக்களின் இந்த உள இயலை அப்படியே ஆத்ம ஞானத்திற்கு இயல்பாக மனம் செல்லுமாறும், அதற்கான மறைமுக ஊக்கம் பிறக்கும் விதத்திலும் இந்த மனோபாவத்தையே வைத்து அவர் இயற்றியதுதான் தன்யாஷ்டகம்.
ஒரே ஒரு வித்யாசம், உலக விஷயங்களைக் குறித்து இந்த அங்கலாய்ப்பை, ‘கொடுத்து வைத்தவர்ப்பா’ என்ற சொலவடையைப் பயன்படுத்தாமல் வாழ்வை முழுவதும் ஆத்ம ஞானத்தில் ஈடுபடுத்தி, அதற்கே முற்றிலும் தம்மைத் தோய்த்துக் கொண்டவர்களைக் குறித்துப் பிறர் இவ்வாறு ‘அவருக்கென்னப்பா கொடுத்து வைத்தவர்’ என்று கருதுவது போன்று அமைத்து விட்டார். இதன் விளைவை யோசித்துப் பாருங்கள்! மனம் தன்னைப் போல் இந்த ஆத்ம ஞானத்தைக் குறித்து ஏங்கத் தொடங்கும். நாம் என்னவோ செய்து ஏதோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருப்போம். ஆனால் இப்படி எண்ணிப் பழகியதன் விளைவு நம்மை அறியாமல் ஆன்மிகத்தின்பால் நம் மனம் ஈர்க்கப்பட்டு முன்னேறிக் கொண்டிருக்கும். ‘தன்ய:’ என்றால் பாக்கியசாலி, கொடுத்து வைத்தவர் என்று பொருள்படும்.
தத்ஜ்ஞாநம் ப்ரசமகரம் யதிந்த்ரியாணாம்
தத்ஜ்ஞேயம் யதுபநிஷத்ஸு நிச்சிதார்த்தம் |
தே தந்யா புவி பரமார்த்த நிச்சிதேஹா:
சேஷாஸ்து ப்ரமநிலயே பரிப்ரமந்தி ||
புலனடக்கத்தை எது தருமோ அதுவே ஞானம். உபநிஷதங்களில் ஐயம் திரிபற நிச்சயிக்கப்பட்ட அர்த்தம் எதுவோ அதுவே அறியப்பட வேண்டியதான ஞேயம். புவியில் பரமார்த்தமான ஞானத்தை அடைய ஊக்கம் கொண்டு திகழ்பவர்கள் எவரோ அவர்களே பாக்கியசாலிகள், கொடுத்து வைத்தவர்கள். எஞ்சியோர் எல்லாம் பிரமைகளின் குடியிருப்பில் சுற்றி சுற்றி வருவோராய் இருக்கின்றனர்.
*
ஆதௌ விஜித்ய விஷயாந் மதமோஹராக
த்வேஷாதி சத்ருகணம் ஆஹ்ருதயோகராஜ்யா: |
ஜ்ஞாத்வா மதம் ஸமநுபூய பராத்மவித்யா
காந்தாஸுகம் வநக்ருஹே விசரந்தி தந்யா: ||
(சாதாரண மனிதர் ஒருவரின் கனவு என்பது என்ன? வாழ்க்கையில் எதிர்ப்பான விஷயங்களை வெற்றிகொண்டு, சாதகமான வளங்களைச் சாதித்துக்கொண்டு, ஒரு நல்ல பெண்மணியை அல்லது பெண்மணி நல்ல கணவனை மணம் புரிந்து, ஒரு வசதியான வீட்டைக் கட்டிக்கொண்டு வாழ்க்கையில் செட்டில் ஆவதைத்தான் அந்தக் கனவு குறிக்கும். அந்தக் கனவுச் சித்திரத்தை எப்படிக் கையாள்கிறார் என்று இதில் பார்க்க வேண்டும்)
முதலில் புலன் விஷயங்கள் என்பதை வெற்றிகொண்டு, கர்வம், மோகம், பற்று, வெறுப்பு முதலிய பகைகளை வென்று மனத்தை அடக்கி எய்திய யோக ராஜ்யத்தைச் சம்பாதித்துக் கொண்டார்கள். அடுத்து பெரும் ஞானச் செல்வமான பரமாத்ம ஞானத்தைத் தெரிந்துகொண்டார்கள். பிறகு பரமாத்ம வித்யை என்னும் நல்ல மனையாள் சுகத்தை தினம் அனுபவிப்பவர்களாய் காட்டையே பங்களா ஆக்கிக்கொண்டு திரிகிறார்களே இவர்கள் அன்றோ பாக்கியவான்கள், கொடுத்து வைத்தவர்கள் !
*
த்யக்த்வா க்ருஹே ரதிம் அதோகதி ஹேதுபூதாம்
ஆத்மேச்சயா உபநிஷத் அர்த்தரஸம் பிபந்த: |
வீதஸ்ப்ருஹா விஷயபோக பதே விரக்தா
தந்யாச் சரந்தி விஜநேஷு விமுக்தஸங்கா: ||
வீட்டில் உள்ள தீவிர ஒட்டுதலைத் துறந்து, அது கீழ்நோக்கிய வழிகளில் ஒருவரைத் தள்ளும் காரணம் என்பதால், ஆத்ம ஞானத்தின்பால் உள்ள இச்சையின் காரணமாக உபநிஷதங்களின் அர்த்தங்கள் ஆகிய அருஞ்சுவையைப் பருகிக் கொண்டு, பற்றுதலை ஒதுக்கி, விஷயங்களின் சுகங்கள் ஆகிய வழிகளில் வைராக்கியம் பூண்டு, ஜனங்களை விட்டு ஒதுங்கி, பந்தபாசத்தினின்றும் விடுபட்டு நடப்பவர்கள், அவர்கள்தாம் எத்தனை பாக்கியசாலிகள், கொடுத்து வைத்தவர்கள்!
*
த்யக்த்வா மமாஹமிதி பந்தகரே பதே த்வே
மாநாவமாநஸத்ருசா: ஸமதர்சிநச்ச |
கர்த்தாரம் அந்யம் அவகம்ய ததர்பிதாநி
குர்வந்தி கர்மபரிபாக பலாநி தந்யா: ||
பந்தத்தை உண்டுபண்ணும் ’நான் என்னுடையது’ என்னும் இரண்டு நிலைகளையும் விட்டுவிட்டு, மானம் அவமானம் என்பனவற்றைச் சமமாகப் பார்த்துக்கொண்டு, உலகைப் படைத்த காரணன் ஒருவன் பிரபஞ்ச இயல்பினின்றும் அப்பாற்பட்டவனாய் உண்டு என்பதை உணர்ந்து, செய்யும் செயல்களால் விளையும் பலன்களை அவனுக்கே அர்ப்பணமாக ஆக்கிக்கொண்டு கடமைகளைச் செய்து போரும் அவர்கள் பாக்கியவான்கள், கொடுத்து வைத்தவர்கள்!
*
த்யக்த்வைஷணாத்ரயம் அவேக்ஷித மோக்ஷமார்க்கா
பைக்ஷாம்ருதேந பரிகல்பித தேஹயாத்ரா: |
ஜ்யோதி: பராத்பரதரம் பரமாத்மஸங்கம்
தந்யா த்விஜா ரஹஸி ஹ்ருத்யவலோகயந்தி ||
மனைவி, புத்திரர், செல்வம் ஆகியவற்றில் பற்றுகளாகிய மூவிதப் பற்றுகளையும் விட்டு, மோக்ஷமார்க்கத்தில் கருத்து செலுத்தியவராய், பிக்ஷையாகக் கிடைத்த அமுதாகிய உணவில் உடல் வாழ்க்கையை நடத்திக்கொண்டு போகின்றவர்களாய், ஆன்மிகத்தில் மறுபிறப்படைந்த அந்தப் பாக்கியவான்கள் இரகசிய இடத்தில் அமர்ந்து உயர்வற உயர்ந்ததான பரமாத்மா என்பதில் திகழும் அந்தப் பேரொளியை இதயத்தில் கண்டு தியானிக்கின்றனர்.
*
நாஸந்ந ஸந்ந ஸதஸந்ந மஹந்ந சாணு
நஸ்த்ரீபுமாந்ந ச ந பும்ஸகம் ஏகபீஜம் |
யைர்ப்ரஹ்ம தத்ஸமம் உபாஸிதம் ஏகசித்தை:
தந்யா விரேஜு: இதரே பவபாசபத்தா: ||
பிரம்மமானது ஸத் என்றோ அஸத் என்றோ சொல்ல முடியாது. ஸத்தும் அஸத்தும் என்றும் சொல்ல முடியாது. பெரியது என்றும் சொல்லவொண்ணாது. சிறிய அணு என்றும் சொல்லவொண்ணாது. பெண் என்றோ, ஆண் என்றோ, அலி என்றோ சொல்லற்கரியது. ஒரே காரணமாய், இருக்கும் அனைத்திற்கும் இயன்றது. அந்த பிரம்மம் இப்படியும் அப்படியும் சாயாத சமமானது. அந்தப் பிரம்மத்தை ஒருமுகப்பட்ட சிந்தையினால் உபாசிப்பவர்கள் சிறந்து விளங்குகின்றனர். அவர்களே பாக்யவான்கள். மற்றையாரோ பவபாசத்தினால் பிணிப்புண்டு அல்லலுறுகின்றனர்.
*
அஜ்ஞாநபங்க பரிமக்நம் அபேதஸாரம்
துக்காலயம் மரணஜன்மஜராவஸக்தம் |
ஸம்ஸாரபந்தனம் அநித்யம் அவேக்ஷ்ய தந்யா
ஜ்ஞாநாஸிநா ததவசீர்ய விநிச்சயந்தி ||
ஸம்ஸாரபந்தம் என்பது அஞ்ஞானம் என்னும் சேற்றில் புதைந்து, சாரம் எதுவும் அற்றதாய், துக்கம் அனைத்திற்கும் கொள் இடமாய், மரணம், ஜன்மம், முதுமை என்னும் இவற்றோடு கூடியதாய், அநித்தியமானதாய் இருப்பது. அதை நன்கு பூர்ணமாக உணர்ந்த பாக்கியவான்கள் தங்கள் ஞானம் என்னும் ஒள் வாளால் அந்தப் பந்தத்தை வெட்டி நீக்கிவிட்டு பிரம்மம் ஒன்றையே இலட்சியமாக நன்கு நிச்சயிக்கின்றனர்.
*
சாந்தைர் அநந்ய மதிபி: மதுரஸ்வபாவை:
ஏகத்வநிச்சித மனோபி: அபேதமோஹை: |
ஸாகம் வநேஷு விதிதாத்ம பதஸ்வரூபை:
தத்வஸ்து ஸம்யக் அநிசம் விம்ருசந்தி தந்யா: ||
மேலும் அத்தகைய பாக்யசாலிகள் செய்வது என்னவென்றால், சாந்தத்தில் நிலைத்தவர்களும், வேறொன்றில் செல்லா மதி படைத்தவர்களும், இனிய சுபாவம் உள்ளவர்களும், ஒரே தத்துவத்தில் ஊன்றிய மனம் வாய்ந்தவர்களும், மோகம் என்பது அறவே அகன்றவர்களும், ஆத்ம ஸ்வரூபத்தைத் தெள்ளத் தெளிவாக உணர்ந்து அதனுருவாய் இருப்பவர்களுமான ஞானிகளோடு சேர்ந்து காடுகளில் அமர்ந்து அந்தப் பரவஸ்துவைக் குறித்து அடிக்கடி நன்றாக விசாரம் புரிகின்றனர்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
*
No comments:
Post a Comment