Friday, February 4, 2022

ஆகமம் என்பதன் பொருள்

ஆகமம் என்ற வார்த்தை அடிக்கடிப் பேசப்படுவதைக் கேட்டிருப்போம். ஆன்மிகம், கோவில், வழிபாடு, சமயச் சான்று நூல் என்னும் கருத்துகள் சமபந்தமாக இந்தச் சொல் நம் காதில் அடிக்கடி விழுந்துகொண்டிருக்கும். அதே நேரத்தில் வேதம், சாத்திரம் என்னும் சொற்களும் பிரபலமாகப் பயன்படுபவை. இந்த அளவிற்கு இல்லையென்றாலும் கொஞ்சம் நன்கு கற்றவர்கள் மத்தியில், அல்லது சமயச் சொற்பொழிவுகளில் காதில் விழக்கூடிய சொற்கள் நிகமம், பிரமாணம் என்பன. பொதுவாக இந்தச் சொற்களுக்குப் பொருள் என்ன என்பதைக் குறித்த ஒரு சின்ன தெளிவாக்க முயற்சிதான் இப்பொழுது இதில் நாம் பார்க்கப் போவது. எளிய அறிமுகம் என்பதால் அனைத்தையும் உள்ளடக்கி, மேற்கோள்களை விரித்து விரிவாகப் பார்த்தால் தொடங்கியவுடன் பலருக்கும் தூக்கம் வந்துவிடக் கூடும். எனவே பொருள் தெரியாமலேயே இந்தச் சொற்களைக் காதில் வாங்கிக் கொள்வதற்குப் பதிலாகக் கொஞ்சம் தெளிவு இருந்தால் நன்றாக இருக்கும் என்பவர்களுக்காக எழுதப்படுவது இது. எனவே பண்டிதர்கள் மன்னிக்க வேண்டும். 

வேதம் என்றால் என்ன என்று அடிப்படையாகக் கொஞ்சம் தெரிந்து கொண்டால் ஆகமம் என்பது இன்னும் புரியும். வேதம் என்பது அறிவு, அறிவது என்னும் பொருளுடையது. அப்படிப் பார்த்தால் நாம் எத்தனையோ விஷயங்களைத் தெரிந்து கொள்கிறோம். ஒவ்வொரு துறையிலும் அறிவு என்பது ஏற்படுகிறது. அந்தப் பொருளில் வேதம் என்ற சொல் பயன்படுகிறதா? என்றால் சிறிது வேறுபாடு இருக்கிறது. 

உலகில் பல துறைகளிலும் நாம் அடையும் அறிவு பிரத்தியக்ஷம் என்னும் புலனறிவு, அனுமானம், பரிசோதனை, அதைத் தொடர்ந்து பரிசோதனையின் முடிவுகளை ஒருங்குற ஆய்ந்து விளக்கம் என்னும் முறைகளால் ஏற்படக் கூடியது. ஆனால் கடவுள் என்ற விஷயத்தில் இவ்வாறு புலனறிவு, அனுமானம், பரிசோதனை என்னும் முறைகளால் அறிய முடியாது. புலன் உணர்வுகளுக்கு அப்பாற்பட்டது கடவுள். கண்ணால் ஏதோ ஒரு சமயம் கண்டதை வைத்துத்தான் அனுமானம் என்பதையும் நம்மால் செய்ய முடியும். எனவே கடவுள் விஷயத்தில் அனுமானமும் உதவாது. பரிசோதனை சொல்லவே வேண்டாம். அப்படியென்றால் கடவுளைப் பற்றி எப்படி அறிவது? அதற்குக் கடவுளே தம்மைக் குறித்து தம் அருளால் ஒவ்வொரு காலங்களில் ஒவ்வோர் இடங்களில் அருளாளர்கள் மூலமாக வெளிப்படுத்தியிருக்கிறார் என்பது உலகில் வழங்கும் பல மதங்களிலும் உள்ள நம்பிக்கையாளர்களின் கருத்து. சில நூல்கள் மனிதர்கள் மூலம் வந்திருப்பினும் அந்த நூல்கள் அவர்களால் எழுதப்பட்டவை அன்று. கடவுள் அருளால் அவர்கள் மூலமாக வெளியானவை என்பது அவர்களின் கருத்து. 

அப்படிக் கடவுள் அருளால் வெளிப்பட்ட நூல்களை இந்துமதத்தில் வேதம் என்கிறோம். சுருதி, மறை, வேதாந்தம், உபநிஷதங்கள் என்று பல பெயர்களிலும் சொன்னாலும் அடிப்படையில் வேதம் என்பது என்ன என்பதை இப்பொழுது நாம் ஒருவாறு புரிந்துகொள்ள முடியும். அதாவது இந்திரியங்களுக்கு எட்டாத தத்வார்த்தமான கடவுள் என்பதை அறிய நமக்கு வாய்த்த வழிதான் வேதம் என்பது. 

கடவுள் என்பதோ புலன்களுக்கு அப்பாற்பட்டது என்னும் போது அவரைக் குறித்து வேதம் சொல்வதுதான் நமக்கு அறுதியான அறிவு என்பதால் நிகமம் என்றும் சொல்லப்படுகிறது. என்றோ அருளாளர்களின் மூலம் வெளிப்பட்டு நமக்குக் கிடைத்த கடவுள் இயல் குறித்த அறிவு நமக்கு வழிவழியாக வந்து சேர்ந்திருப்பதால் அதை ஆகமம், (வழிவழியாக வந்து சேர்ந்தது) என்றும் நூல்களில் வித்வான்கள் சொல்வதைப் பார்க்கலாம். 

அது மட்டுமின்றி, பொதுவாக அறிவைப் பெறும் வழிகள், அளவை (epistemology) என்ன என்று நியாய சாத்திரம் சொல்லும் போது பிரத்தியக்ஷம், அனுமானம், சப்தம் அல்லது ஆப்தவசனம் அல்லது ஆகமம் என்று மூன்று என்றும் சொல்கிறது. உலக விஷயங்களை அறிய பிரத்தியக்ஷமும் அனுமானமும் பயன்படுகின்றன. உலகைக் கடந்த அறிவான கடவுள் இயலைக் குறித்து அறிய சப்தம் அல்லது ஆகமம் என்பதுதான் வழி என்று பொருளாகிறது. ஆப்த வசனம் என்றால் நம்பிக்கைக்குகந்த, சான்றாண்மை மிக்கவர்களின் வார்த்தைகள் என்று பொருள். 

இப்பொழுது ஆகமம் என்றால் வழிவழியாய் வந்த ஞானம் என்று ஒரு பொருளும், ஆப்தர்களால், நம்பிக்கைக்கு உகந்த நல்லோர்களால் சொல்லப்பட்ட உபதேசம் என்றும் இருபொருள்கள் கிடைக்கின்றன. நாளடைவில் ஆகமம் என்ற இந்தச் சொல் இந்தப் பொருள்களின் அடிப்படையில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டுப் பரவலாகப் புழக்கம் ஏற்பட்டிருக்கிறது. எனவே வேதம் என்றால் கடவுள் அருளால் அருளாளர்கள் மூலம் வெளிப்பட்ட கடவுள் இயலைக் குறித்த ஞானம் என்றும், ஆகமம் என்றால் நம்பிக்கைக்கு உகந்த சான்றோர்களால் உபதேசிக்கப்பட்டு வழிவழியாக வந்த நூல்கள் என்றும் பயன்பாடு ஏற்பட்டிருக்கிறது. 

மேலும் ஒரு வேறுபாடு. வேதம் என்றால் புலன்களுக்கு எட்டாத தத்துவ விஷயங்களைக் குறித்த விசாரங்களின் வடிவில் உண்மையைப் படிப்படியாக உணர்த்திக் கடவுள் இயலை நம் உணர்விற்குக் கொண்டு வருவது. ஆனால் ஆகமத்தில் இந்தக் கடவுளின் வடிவத்தை வழிபட வேண்டும் என்று முதலிலேயே திடமான முடிவுடன் ஆரம்பிப்பதால் எப்படி வழிபடுவது, வழிபாட்டின் நுணுக்கங்கள் என்ற விஷயங்கள்தாம் முக்கியமாக சொல்லப்படிருக்கும். ஆகமங்களைப் பெரும்பாலும் முனிவர்கள், யோகிகள் இயற்றியிருப்பார்கள். அல்லது அவரவர்கள் வழிபடும் கடவுளே ஒரு முனிவர்க்குச் சொன்ன வழிபாட்டு முறைகளாக இருக்கும். பொதுவாக இந்துமதத்தில் கடவுளின் சிவ மூர்த்தியைக் குறித்த ஆகமங்கள், விஷ்ணு மூர்த்தியைக் குறித்த ஆகமங்கள், சக்தி மூர்த்தியைக் குறித்த ஆகமங்கள் என்று இருக்கின்றன. 

ஆனால் ஆகமம் என்று பொதுவாக அருள்வாய்ந்த ஞானிகளாலும் யோகிகளாலும் உபதேசிக்கப் பட்ட வழிகள் என்னும் பொருளிலும் பயன்படுத்தியிருக்கிறார்கள். உதாரணமாக ஜினரால் உபதேசிக்கப்பட்டது ஜினாகமம், புத்தரால் உபதேசிக்கப்பட்டது புத்தாகமம். 

இந்துமத ஆகமங்களைப் பார்த்தால் பொதுவான ஓர் அமைப்பு புலனாகிறது. அதாவது தம் இஷ்டமாக ஒருவர் தேர்ந்துகொண்ட தெய்வத்தை எப்படி வழிபடுவது என்பதைப் போதிக்கின்றன ஆகமங்கள். ஒருவர் தம் வீட்டில் கடவுள் அறை ஒன்றை அமைத்து அதில் தினமும் பூஜைநெறியில் வழிபாடு செய்யலாம். மேலும் தெய்வத்திற்கான கோயிலுக்குச் சென்று பல பக்தர்களோடு வரிசையில் நின்று வழிபடலாம். பெரும்பாலான மக்கள் பின்பற்றும் வழி இது. மேலும் யாரோ ஒருவர் பக்தியில் சிறந்து ஆர்வமுடன் அமைதியாகத் தினமும் நேரம் ஒதுக்கி யோக முறையில் தன்னால் இயன்றமட்டும் ஜபம், தியானம் என்று ஈடுபட்டு வழிபடலாம். இன்னும் சிலரோ ஆன்மிகத்தில் ஆழ்ந்து ஈடுபட்டவர்களாய்த் தத்துவ விசாரச் சிந்தனைகளில் ஈடுபட்டுப் பெரும்பகுதி நேரம் தெய்வத்தைக் குறித்தும், தம் ஆத்மாவைக் குறித்தும் ஆழ்ந்த சிந்தனை, தியானம் என்று தம் வாழ்நாளை நற்போதாக ஆக்கலாம். இதில் நான்கு விதங்கள் பார்த்தோம் அல்லவா! வீட்டில் வழிபாடு, தனி மனித மற்றும் வீட்டில் உள்ளவர்க்கான ஒழுக்க நெறிகள், கோயில் வழிபாடு மற்றும் சமுதாயத்தில் கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக்க நெறிகள், தனிப்பட யோகத்தில் வழிபாடு, ஞான விசாரத்தில் ஆழ்ந்து தோய்தல் என்னும் நான்கு வித ஈடுபாடுகளையும், வழிபாட்டு நெறிகளையும், ஒழுக்க நெறிகளையும் ஆகமம் நன்கு விளக்கமுறப் போதிப்பதைப் பார்க்கலாம். 

ஆகம நூல் ஒன்றை நீங்கள் திறந்தால் அதில் நான்கு பாதங்கள் வரும். சரியா பாதம், கிரியா பாதம், யோக பாதம், ஞான பாதம் என்பன. பாதம் என்றால் பகுதி என்று பொருள். சரியா மார்க்கம், கிரியா மார்க்கம், யோக மார்க்கம், ஞான மார்க்கம் என்றும் சொல்வதுண்டு. சில ஆகம நூல்களில் இதில் சில பாதங்கள் சிறப்பாகச் சொல்லப்பட்டு மற்ற பாதங்கள் சுருக்கமாகக் கருத்துகள் தரப்பட்டிருக்கும். சரியை என்றால் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய நெறிகள், கிரியை என்பது கோயில் நிர்மாணம், உற்சவாதிகள், பூஜை நெறிகள் முதலியன. வீடு, சமுதாயம், தனி மனித மற்றும் சமுதாய ஒழுக்கம், தவம், ஞானம் என்று ஒருமித்த பார்வைதான் ஆகமம் புகட்டும் பாதை. 

சைவ ஆகமம், வைஷ்ணவ ஆகமம், சாக்த ஆகமம் ஒவ்வொன்றிலும் பல முனிவர்களும் தந்த ஆகமங்கள் உண்டு. காமிகம், யோகஜம், சிந்தியம், காரணம், அஜிதம், சுப்ரபேதம், விஜயம், வீரம், ரௌரவம் முதலிய 28 ஆகம நூல்கள் சைவத்தில் உண்டு. ஈச்வர சம்ஹிதை, ஜயாக்ய சம்ஹிதை, பரம சம்ஹிதை, பாரமேச்வர சம்ஹிதை, பௌஷ்கர சம்ஹிதை என்று பல சம்ஹிதைகள். மேலும் பாஞ்சராத்திரம், வைகானஸம் என்ற பிரிவுகள் கொண்டது வைஷ்ணவ ஆகமம். சாக்த ஆகமத்தில் தக்ஷிணம், வாமம், கௌலம் என்று பல பிரிவுகள், அவற்றுக்கான தந்திரங்கள், யாமளங்கள். 

ஆகமம் என்பது கோயில் சார்ந்த சொல்லாக நமக்குப் பழக்கத்தில் வந்துவிட்டது ஒரு விதத்தில் சரியே. ஏனெனில் கோயில் நிர்மாணம், மூர்த்திப் பிரதிஷ்டை, பூஜா விதிகள், உற்சவக் கிரமங்கள் என்று பல விஷயங்களும் நமக்கு ஆகமங்கள் போதிக்கின்றன. ஆயினும் ஆகமம் என்னும் சாத்திரம் இன்னும் விரிந்த பொருள் பொதிந்தது என்பதை நாம் உணர முடியும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment: