Monday, February 7, 2022

பராங்குச அஷ்டகம் - நம்மாழ்வார் மீது செய்யுள் எட்டு

நம்மாழ்வார் ஆழ்வார் திருநகரி என்னும் திருக்குருகூரில் அவதரித்தவர். பிறந்த கணம் முதல் உலகியலை முற்றிலும் அகற்றிக் கடவுள் என்ற ஒரு விஷயத்திலேயே ஊறி நின்றவர். புளியமரத்தினடியில் சென்று அதே பகவத் தியானத்தில் அமர்ந்துவிட்டவர். தமிழ்ப் புலவர். கோவை இலக்கியவகையில் திருவிருத்தமும், அந்தாதி நடையில் வெண்பாவாக பெரிய திருவந்தாதியும், திருவாசிரியமும், திருவாய்மொழி ஆயிரம் பாட்டு அந்தாதியாகப் பாடியருளியவர். அந்தத் திருவாய்மொழியில் ஏதோ ஒரு பத்துப் பாசுரங்கள் தேசாந்திரிகளாக வரும் சிலர் பாட அதை உற்றுச் செவிமடுத்த நாதமுனிகள் அவர்களை வினவி, அதன் முழு ஆயிரம் பாட்டும் எங்கே கிடைக்கும் என்று தேடித் திரிந்து மீட்டது நாலாயிரத் திவ்யப் பிரபந்தம். அதிலும் திருவாய்மொழி தமிழ் வேதத்தே நடுவண் சிறப்பு பொலியும் தன்மையது. கடவுளே தமக்கு உகந்த ராஜ்ஜியமாக அந்தத் திருவாய்மொழியைக் கொண்டிருக்கிறார் என்பதால் பகவத் விஷயம் என்னும் சிறப்பும் மிக்கது. தமிழில் வெளிப்பட்ட வேதம் என்று நாதமுனிகள் தொடங்கி, ஸ்ரீராமானுஜர் வழியாக, கோயில் ஸ்ரீஸ்ரீ மணவாள மாமுனிகள் என்று அத்தனை பூர்வாசாரியர்களும் ஸ்ரீவைஷ்ணவ சம்ப்ரதாயத்தில் ‘பிரபன்ன குலமாகிய எங்கள் குலத்தின் ஆதித் தலைவன்’ என்று கொண்டாடுகிறார்கள். கொண்டாடுவதோடில்லை. வழிபடுகிறார்கள். வழிபடுவது மட்டும் இல்லை. நம்மாழ்வாரையும், அவரது சொற்களையுமே தம் உயிர்நிலையாகக் கொண்டு இறும்பூதடைகின்றனர். ஸ்ரீவேதாந்த தேசிகரோ நம்மாழ்வாரின் திருவாய்மொழியை ஓதி ‘தெளியாத மறைநிலங்கள் தெளிகின்றோமே’ என்று விம்மிப் பெருமிதம் அடைகிறார். ஏதோ ஒரு காலத்தில் சொன்னார்கள். அப்புறம் நாளாவட்டத்தில் அதெல்லாம் மாறிவிட்டது என்று ஆகக் கூடாது என்பதற்காக ஒரு வேலை செய்தார்கள் அந்தப் பெரியோர்கள். என்ன அது? 

பெரியோர்கள் பல சமயம் நம்மாழ்வார் விஷயமாகச் செய்திருக்கும் தனிச் செய்யுட்களையும், கூரத்தாழ்வான் செய்துள்ள இரண்டு செய்யுட்களையும், ஸ்ரீபராசர் பட்டர் நம்மாழ்வார் மீது செய்திருக்கும் செய்யுள் ஒன்றையும், ஜீயர் நாயனார் செய்த செய்யுள் ஒன்றையும் சேர்த்து எட்டுச் சுலோகங்களையும் பராங்குச அஷ்டகம் என்று பெயரிட்டு விட்டனர். அஷ்டகம் என்றால் எட்டுச் செய்யுள். அந்தப் பராங்குச அஷ்டகத்தைத் தினம் தினம் வைணவர்கள் யாவரும் தமது அன்றாடம் பூசையின் கடைசியில் சொல்லித் தியானிக்க வேண்டும் என்று வைத்துவிட்டனர். அஃது பல நூற்றாண்டுகளாக விடாமல் ஒவ்வொரு வைணவனின் பூஜை அறையிலும் ஒலிக்கிறது. அவர்தம் மனத்தில் தியான விஷயமாக நிலவுகிறது. பிழைப்பின் நிமித்தமாக உலகின் எந்த மூலைக்குப் போனாலும் சரி, ஒரு வைணவ வீட்டில் தினசரி பூஜையில் ஒலிக்கும் தவறாத பகுதி இந்தப் பராங்குச அஷ்டகம். 

சற்றே நின்று நிதானித்து யோசித்துப் பாருங்கள். திருமால் காதலில் ஒரு தமிழ்ப் புலவர் பாடிய பிரபந்தங்கள். திருமாலின் சிந்தையிலேயே தோய்ந்தமர்ந்த ஒரு தமிழ்க் குழந்தை. அவர்தான் திருமால் அடியார் குலத்தின் ஆதித் தலைவர் என்றும், அவர் அடி சூடுவதே தம் தலைக்கு உற்ற பெரும் பேறு என்றும், தினமும் வழிபாட்டில் அவரைப் போற்றிப் புகழ்ந்து ஓர்மை கொள்வதே பல நூற்றாண்டுகளாக விடாமல் வருகின்ற வழக்கமாகவும் ஆகி நிற்பதற்கு யார் காரணம்? நாதமுனிகளின் கனவை நனவாக்கி நன்கு நிலைப்படுத்திக் காலம் வென்ற கோலமாய் ஆக்கியது அந்தப் பெருமகன் ஸ்ரீராமானுஜர் அன்றோ! அவரை அடியொற்றி வந்து தழைத்த ஆசிரியன்மார் அன்றோ! 

முதல் சுலோகம் : 

த்ரைவித்ய வ்ருத்தஜன மூர்த விபூஷணம் யத் 
ஸம்பச்ச ஸாத்விகஜனஸ்ய யதேவ நித்யம் | 
யத்வா சரண்யமசரண்ய ஜனஸ்ய புண்யம் 
தத்ஸம்ச்ரயேம வகுளாபரணாங்க்ரி யுக்மம் ||

த்ரைவித்யா என்னும் வேதத்தில் துறைபோய வைதிகர்க்குச் சென்னியில் சூடும் அணியாகத் திகழ்கிறது. சாத்விகமான மனிதரின் நிலைத்த அருநிதியமாக விளங்குகிறது. புகலற்ற மனிதர்களின் ஒரே புகலாகவும் புண்ணியமாகவும் காக்கிறது. அது எதுவென்னில் வகுளாபரணர் என்னும் நம்மாழ்வாரின் மலரடியிணையே ஆகும். அந்தத் திருவடிகளை வணங்குவோமாக. 

இரண்டாவது சுலோகம் : 

பக்திப்ரபாவ பவதத்புத பாவபந்த 
ஸந்துக்ஷித ப்ரணயஸார ரஸௌகபூர்ண: | 
வேதார்த்த ரத்னநிதி: அச்யுத திவ்ய தாம 
ஜீயாத் பராங்குச பயோதி: அஸீமபூமா || 

பக்திப் பெருக்கெடுத்து அற்புதமான உணர்வின்பாவங்களாய் உருத்திரண்டு உன்னதத் திருமால் காதலே வெள்ளமிடச் சுவையனைத்தும் முழுமையாய் விளங்குவதும், வேதார்த்தங்கள் நன்கு விளங்கித் தோன்றும் ரத்தினநிதியாய், நிலைபெயரா அச்சுதன் மருவி மகிழும் திவ்ய நிலையமாய், அளவற்ற மகிமையுடைத்தாய்த் திகழும் பராங்குசன் என்னும் நம்மாழ்வாராகிய பெருங்கடல் என்றென்றும் விளங்குவதாகட்டும். 


மூன்றாவது சுலோகம் : 

ருஷிம்ஜுஷாமஹே க்ருஷ்ணத்ருஷ்ணாதத்வம் இவ உதிதம் | 
ஸஹஸ்ரசாகாம் யோSத்ராக்ஷீத் த்ராவிடீம் ப்ரஹ்மஸம்ஹிதாம் || 

கிருஷ்ணன்பால் வேட்கையெனும் தத்துவமே வடிவுகொண்டாலொப்பத் தோன்றியவரும், ஆயிரம் பாசுரங்கள் விளங்கும் தமிழ்மறையைக் கண்டுணர்ந்தவருமான அந்த ருஷியை நாங்கள் போற்றித் துதிக்கின்றோம். 


நான்காவது சுலோகம் : 

யத்கோஸஹஸ்ரம் அபஹந்தி தமாம்ஸி பும்ஸாம் 
நாராயணோ வஸதி யத்ர ஸசங்கசக்ர: | 
யந்மண்டலம் ச்ருதிகத ப்ரணமந்தி விப்ரா: 
தஸ்மை நமோ வகுளபூஷண பாஸ்கராய || 

மாந்தரின் புற இருட்டைத் தன் ஆயிரம் கதிர்களால் நீக்கும் சூரியன் போன்று அவர்தம் அக இருட்டை ஆயிரம் பாசுரச் சுடர்களால் யார் நீக்குகின்றாரோ, யாருடைய மொழியில் நாராயணன் சங்கசக்கரபாணியாய் எப்பொழுதும் உறைகின்றானோ, சூரியமண்டலத்தை வேதமந்திரங்களால் ஏற்றித் தொழுது கையெடுத்துக் கும்பிடுவது போன்று, மண்டலித்தல் என்னும் அந்தாதியாக அமைந்த திருவாய்மொழியைத் தந்த யாருடைய ஊர் காதில் பட்டதும் வைதிகர்கள் கையெடுத்துக் கும்பிடுகிறார்களோ அந்த வகுளபூஷணர் என்னும் நம்மாழ்வாராகிய கதிரவனை வணங்குகிறோம். 


ஐந்தாவது சுலோகம் : 

பத்யு: ச்ரிய: ப்ரஸாதேந ப்ராப்த ஸார்வக்ஞ ஸம்பதம் | 
ப்ரபந்நஜந கூடஸ்தம் ப்ரபத்யே ஸ்ரீபராங்குசம் || 

திருமால் திருவருளால் மயர்வற மதிநலம் அருளப்பெற்றவரும், பிரபன்னஜனங்களுக்கெல்லாம் நடுநாயகமாய்த் தலைவர் ஆனவரும் ஆன ஸ்ரீபராங்குசர் என்னும் நம்மாழ்வாரைச் சரணம் புகுகிறேன். 


ஆறாவது சுலோகம் : 

சடகோப முநிம் வந்தே சடானாம் புத்தி தூஷகம் | 
அக்ஞானாம் ஜ்நாந ஜனகம் திந்த்ரிணீமூல ஸம்ச்ரயம் || 

கோணல் புத்தியுள்ளவரின் துர்புத்தியை நீக்குபவர், அஞ்ஞானத்தில் இருப்பவருக்குள் ஞானத்தைப் பிறப்பிப்பவர், புளியமரத்தின் அடியில் சென்று அமர்ந்தவருமான சடகோப முநியாகிய நம்மாழ்வாரை வணங்குகிறேன். 


ஏழாவது சுலோகம் : 

வகுளாபரணம் வந்தே ஜகதாபரணம் முநிம் | 
ய: ச்ருதேருத்தரம் பாகம் சக்ரே த்ராவிட பாஷயா || 

வகுளாபரணர் (வகுளமாலையைத் தரித்தவர்) உலகிற்கே ஆபரணம் ஆனவர். வேதத்தின் உத்தரபாகம் என்னும் உபநிஷதங்களை அவரே தமிழ் மொழியில் திவ்யமான பிரபந்தமாய்த் தந்தார். அந்த ஜகத்திற்கே ஆபரணமான வகுளாபரணரை வணங்குகிறேன். 


நமஜ்ஜனஸ்ய சித்தபித்தி பக்திசித்ர தூலிகா 
பவாஹிவீர்ய பஞ்ஜனே நரேந்த்ர மந்த்ரயந்த்ரணா | 
ப்ரபன்னலோக கைரவ ப்ரஸந்ந சாரு சந்த்ரிகா 
சடாரி ஹஸ்த முத்ரிகா ஹடாத்துநோது மே தம : || 

தம்மை வணங்கும் ஜனங்களின் சித்தச் சுவரில் பக்தியின் சித்திரத்தை எழுதும் ஓவியக்கோல் போன்று இருக்கிறது, சடம் என்னும் மாயையை முனிந்த நம்மாழ்வாரின் கையில் விளங்கும் முத்திரை. மேலும் அதுவே உலகியல் ஆகிய கொடிய பாம்பின் விஷத்தை முறிக்கும் வைத்தியனின் மந்திரயந்திரம் போன்றும் இருக்கிறது. மேலும் பார்த்தால் பிரபன்னர்களாகிய திருமால் அடியார்கள் என்னும் ஆம்பல் மலர எழுகின்ற இனிய குளிர்நிலவம் போன்றும் திகழ்கிறது. அந்தச் சடத்தின் பகையாகிய நம்மாழ்வாரின் கைமுத்திரை எப்படியாவது என்னுடைய அக இருளைப் போக்கியருள வேண்டும். 
(குறிப்புகள் : ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியரின் ஸ்ரீராமானுஜன் இதழ்கள்) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***


No comments:

Post a Comment