விமரிசனத்தையும், கண்டனத்தையும் தவிர்த்து ஆக்கபூர்வமாக எழுது, பாஸிடிவா எத்தனையோ இருக்கே அதையெல்லாம் எழுதலாமே என்று சொல்லும் போது அழகாக இருக்கிறது. ஆனால் அதன் பின்னால் பல நுண்ணரசியலான, உள்நோக்கம் புதைந்த போக்குகள் இருக்கின்றன. முதலில் விமரிசனமாக எழுதப்படுவதைத் தவிர்க்க வேண்டித்தான் அவ்விதம் சொல்லப்படுகிறது. பிறகு அவ்விதம் ஆக்கபூர்வமாக எழுதவேண்டி உபதேசம் செய்த மனங்கள் அடுத்த கட்டத்தில் தங்கள் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகின்றன.
உதாரணத்திற்கு ஒரு பழம் நூலில் இன்னவிதமான தீய கருத்துகளும், மொழிவுகளும் இடம் பெற்றிருக்கின்றன என்று எடுத்து எழுதும் போது ‘ஏன் இதுதான் கண்ணில் படுகிறதா? பழம் நூல்களில் பல நல்லதும் அல்லாததும் கலந்து இருக்கலாம். இன்றைக்கு எடுத்து எழுதுவோர் அதில் இருக்கும் நல்ல கருத்துகளை எடுத்து எழுதுவதுதானே ஆக்கபூர்வமானது. அதை விடுத்து என்றோ பழைய காலங்களில் எழுதப்பட்டவற்றை ஏன் விமரிசனம் என்ற ரீதியில் இப்பொழுதும் தூக்கிச் சுமக்க வேண்டும் என்று அன்று விவேகாநந்தர் கருதியது மட்டுமல்லாமல் இன்றும் பலரும் உபதேசம் செய்வார்கள். அல்லது கால ஓட்டத்தில் பல தேவையற்ற கெட்டதுகள் இடைச்செருகலாய்க் கலந்து வந்திருக்கலாம் என்று சமாதானம் சொல்வார்கள். சரியென்று நீங்கள் நல்ல கருத்தைத் தேடி எடுத்து அதைக் குறித்து எழுதினால் சிறிது காலம் சென்று, முன்னர் உபதேசம் செய்தவர்களே இப்பொழுது வேறு ஒரு ரீதியில் பேசுவார்கள். என்னவென்றால், ‘இதை மட்டும் நல்லது என்று காண்பிக்கிறாயே? இந்தக் கருத்தைச் சொன்னவர்தானே அந்தக் கருத்தையும் (அதாவது தீயது என்று எதைக் கருதுகிறோமோ, மனிதாபிமானத்திற்குப் பகையானது என்று கருதுவதை) அதே அருள்வாய்ந்த பெரியவர்தானே, அவர் முனிவரோ, அவதாரமோ, அவர்தானே தாமே சொல்லியிருக்கிறார். அவர் சொன்னவற்றில் ஒன்றை மட்டும் எடுத்து நல்லது என்று ரசித்துச் சிலாகித்து நீ எழுதுவதற்கும், மற்றதைக் குறித்து தீது என்று காட்டிக் கண்டிப்பதற்கும், விமரிசித்து எழுதுவதற்கும் நாம் யார்? நீ என்ன அவரைவிடப் பெரியவராக ஆகிவிட்டாயா? உனக்கு இன்று புரியாமல் இருக்கலாம். நாளை பின்னொரு காலத்தில் புரியவரலாம். எனவே பழம் நூல்களில் பெரியவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் நாம் விமரிசனம் செய்ய முடியாது என்று மேட்டிமையோடு பேசுவார்கள்.
எனவே விவேகாநந்தர் சொல்வது போல் பார்த்தால் என்றும் கண்டனம் அற்ற வளர்ச்சிமுறை அணுகுமுறை என்பது சும்மாவேனும் மாற விருப்பமில்லாதார், சமுதாயம் தீய கருத்துகளினின்றும் மாறி உண்மையான மாற்றமும், முன்னேற்றமும் அடைவதை உள்ளூற வெறுப்பவர்களின் சூழ்ச்சிகளுக்கு ஒத்துழைக்கும் பேதைமையாய் ஆகிவிடுவதைத்தான் வரலாறும், அனுபவங்களும் நமக்கு உணர்த்துகின்றன. கண்டித்தால் மட்டும், விமரிசித்தால் மட்டும் உடனே எல்லாம் மாறிவிடுமா என்று கேட்டால் மாறினாலும், மாறாவிட்டாலும் இவை மாற வேண்டியவை, மறைய வேண்டியவை, கைவிடப்பட வேண்டியவை இன்னது, கைக்கொள்ளப் பட வேண்டிய வழி இன்னது என்பதில் விமரிசனம், கண்டனம் என்பது குழப்பமில்லாமல் தெளிவாக இருப்பதால் நிச்சயம் சிறந்த வழி. இந்த விதத்தில் பார்த்தால் காரல் மார்க்ஸ் சொன்ன கருத்து மிகவும் பொருத்தம் உடையது. அதாவது ‘அறிவு என்பது நிலைமையைப் புரிந்துகொள்வதோடு நிற்பது மட்டுமன்று. மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்’ என்ற கருத்தில் எனக்கு உடன்பாடு இருக்கிறது. அறிவு மாற்றத்தை ஏற்படுத்தும் அறிவாக இருக்க வேண்டும் என்றால் அஃது விமரிசன மயமான, கண்டிக்கத் தவறாத, க்ரிடிஸிஸம் ரீதியிலான அறிவாக இருத்தல் முக்கியம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
Pessimists will always find a way to criticize.
ReplyDeleterajasundararajan
ReplyDeleteநல்லது கெட்டது இன்னினதென்று அறிவதுதானே விவேகம்? அப்புறம் கெட்டதை நாடக்கூடாது. அது வைராக்கியம். இது என் புரிதல். களைகளை அகற்றாமல் நாற்று வளர்ந்து மகசூல் தருமோ? நல்லவற்றை வளர்த்தெடுக்க வேண்டும் என்பது நீரும் உரமும் இடுதல், சரிதானே?
சரியே ஐயா. -- மோகனரங்கன்
ReplyDelete