Monday, November 18, 2024

நிலைப்பாடு 01

" முன்பும் எழுதியிருக்கிறேன். இருந்தாலும் ஒரு விஷயத்தைச் சொல்வது சரி என்று படுகிறது. அதாவது நான் எழுதுகின்ற சில விஷயங்கள் சிலருக்கு அனுஷ்டானம், நம்பிக்கை சார்ந்த விஷயங்களாக இருக்கலாம். ஒரு நெறியில் நம்பிக்கை கொண்டவர்கள் அதிலேயே, அதில் மட்டுமே ஈடுபாடு என்ற ப்ரத்யேக மனப்பான்மை கொண்டும் இருக்கலாம். அவர்கள் நினைக்கக் கூடும். ஒரு சமயம் விஷ்ணுவைப் பற்றியும், ஒரு சமயம் சக்தியைப் பற்றியும், ஒரு சமயம் சிவனைப் பற்றியும், கணபதி, முருகன், அத்வைதம், விசிஷ்டாத்வைதம், வேதம், தந்த்ரம், வேதாந்தம் என்றெல்லாம் பலதையும் தொட்டு எழுதும் என் நிலைப்பாடுதான் என்ன என்ற சங்கடம் ஏற்படக் கூடும். அவர்களுக்காக முன்னரே விரிவாகவும் எழுதியுள்ளேன். இப்பொழுதும் சொல்கிறேன். ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ஸ்ரீரமணர், ஸ்ரீஅரவிந்தர், அன்னை முதலான நம்காலத்து மகான்களின் வழியில் சிரத்தை கொண்ட ஒரு ஹிந்து என்பது என் நிலைப்பாடு. ஹிந்துமதத்தைச் சேர்ந்த பல நெறிகள், அதன் ஞானிகள் அனைவருமே எனக்கு வணக்கத்திற்குரிய பெரியோர்கள். மேலும் நான் அறிந்ததெல்லாம் அச்சுபோட்டு சந்தை விற்பனைக்கு வந்த நூல்களைப் படித்து மட்டுமே. குரு, சீடர் என்ற முறையில் ப்ரத்யேக ரஹஸ்யத்தில் கற்றது எதுவும் என்னிடம் இல்லை. அனைவருக்கும் பொதுவான கடையிலோ அல்லது இணையத்திலோ கிடைக்கும் நூல்கள்தாம் எனக்கும் குறிப்புகள். ஹிந்துமதத்தின் ஞானிகளின் வாக்குகளில் திகழும் ஒற்றுமையைக் கண்டு மகிழ்கிறேன். ப்ரத்யேகமாக ஒரு நெறிதான் சரி. மற்றவை தவறு என்றவிதமான மனநிலை எதிலும் எனக்கு ஈடுபாடு இல்லை. மனிதரிடையே பிறப்பின் அடிப்படையிலான உயர்வு தாழ்வு சார்பான அணுகுமுறைகள், ஆண் பெண் என்ற அடிப்படையிலான உயர்வு தாழ்வு சார்ந்த அணுகுமுறைகள் எதிலும் ஈடுபாடோ, பரிவோ சிறிதும் எனக்கில்லை. வேதங்கள் தொடங்கி இன்றுவரையிலான பல பக்தி நூல்களிலும் காணக்கிடைக்கும் ஒரே படித்தான ஆன்மிக விளக்கமும், உள்ள எழுச்சியும் என்னுடைய ஆர்வம். ஹிந்துமத சாத்திரங்களையும், பண்டைய ஞானாசிரியர்களின் உபதேசங்களையும் தற்காலத்தில் வந்துதித்த அவதார புருஷர்கள், ரிஷிகள், மகான்கள் ஆகிய ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், அன்னை, ஸ்ரீரமண மஹரிஷி போன்றோரின் விளக்கங்கள் மூலமாகவே நான் புரிந்துகொள்கிறேன். இவர்கள் தந்த விளக்கங்கள்தாம் எனக்குச் சனாதன தர்மமாக என் நெஞ்சில் நிலைநிற்பவை. ‘இல்லை; இவர்கள் சொன்ன உபதேசம் வேறு; சனாதன தர்மம் என்பது வேறு’ என்று நீங்கள் கருதி வாதம் செய்வீர்கள் என்றால் பரவாயில்லை, மறக்காமல் என்னை ஸ்ரீராமகிருஷ்ணர், சுவாமி விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், அன்னை, ஸ்ரீரமணமஹரிஷி முதலியோர் உபதேசங்களில் ஈடுபாடு கொண்ட ஒரு சாதாரண ஹிந்து என்று மட்டுமே வகைப்படுத்திக் கொள்ளுங்கள். " 
 
இவ்வாறு முன்னர் எழுதியிருந்தேன். இந்த நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை. பார்க்கப் போனால் இன்னும் சில விஷயங்கள் தீவிரப் பட்டிருக்கின்றன. கல்லூரி நாட்களிலேயே சுவாமி விவேகாநந்தரின் வாழ்க்கைச் சரிதத்தைப் படித்து அதன் விளைவாக ஓர் ஈடுபாடு, தாமஸ் எ கெம்பிஸ் என்பார் எழுதிய ‘இமிடேஷன்ஸ் ஆஃப் க்ரைஸ்ட்’ என்ற நூல். டிசம்பர் 25 க்ரிஸ்ட்மஸ் என்றால் அதன் முதல் நாள் இரவு க்ரிஸ்ட்மஸ் ஈவ் சமயம் ஸ்ரீராமகிருஷ்ணரின் நேரடிச் சீடர்கள் அனைவரும் சேர்ந்து அமர்ந்து துறவறம் மேற்கொண்டார்கள் என்பது நினைவுக்கு வரும். அந்த ஆரம்ப நாட்களில் அவர்களிடம் இருந்த சில நூல்களில் ஒன்று இமிடேஷன்ஸ் ஆஃப் க்ரைஸ்ட். சிறு வயதிலேயே கூட பைபிள் (கிங் ஜேம்ஸ் வர்ஷன்) படித்த ஈடுபாடு. பிறகு பல ஆய்வுத் துல்லியம் மிக்க ஆங்கில மொழிபெயர்ப்புகளில் வந்த பைபிள்.
இதனோடு நிற்காமல் ஜலாலுதீன் ரூமியின் மஸ்னாவிஸ், அதனுடைய விளக்கங்கள் (நிகல்ஸனுடையவை, ஆர்பரியும் உண்டு). பிறகு உலகின் பல மிஸ்டிக்ஸ், நியோப்ளாடோனிஸ மிஸ்டிக்குகள். மிஸ்டிக் என்பது மொழிபெயர்க்க முடியாத ஒரு வார்த்தை என்று நினைக்கிறேன். நானும் என்ன என்னவோ செய்து பார்த்தேன். மிஸ்டிக் என்பதுதான் சரி. சூஃபிக்களின் மிஸ்டிக் கருத்துகள், ஸென் மிஸ்டிக் கருத்துகள், ஸ்பானிஷ், ரஷ்ய மிஸ்டிக் கருத்துகள் என்று மிஸ்டிக்குகளின் உலகம் கொஞ்சம் யார் கண்ணிலும் படாத ஏகாந்த உலகம். காரணம் மிஸ்டிஸிஸத்தை வைத்து நிறுவனம் ஆக்க முடியாது. அனுஷ்டானம், ஒழுகுமுறை, ஆம்னாயம் எதற்கும் ஒத்துவராது. மிஸ்டிஸிஸத்தில்தான் என்னுடைய அந்தரங்க சஞ்சாரம். 
 
அயின் ராண்ட் படித்துக் கடும் பகுத்தறிவு, நாத்திகம் என்று இருந்த காலத்தில் மிஸ்டிக் என்றால் ஆகாது, ப்ளாட்டோ என்றால் ஆகாது, காரல் மார்க்ஸ் என்றால்.. இப்படி இருந்தது மன நிலைமை. பிறகு ஐடியாலஜி என்பது எப்படி மனத்தைக் குறுக்கிவிடுகிறது என்பதை உணர்ந்து வெளிவந்தேன். மீண்டும் மிஸ்டிஸிஸம் ஈடுபாடு. ப்ளாட்டோவில் ஆழ்ந்து போக முடிந்தது. காரல் மார்க்ஸின் கருத்துகளில் நன்கு ஈடுபட முடிந்தது. இந்தப் பலவித ஈடுபாடுகளைக் கண்டு நண்பர் ஒருவர் சந்தேகப்பட ஆரம்பித்தார். ‘மறைமுக கிருத்தவரோ? கம்யூனிஸ்டோ? இதுவோ அதுவோ என்று அவர் படும் பாட்டைப் பார்த்து நானே அவரிடம் ஒரு நாள் சொன்னேன். ‘நண்பரே! மிகவும் கஷ்டப் படாதீங்க. சீக்கிரமா ஒரு முத்திரை குத்துங்க. மறைமுக கிருத்தவர் என்றாலும் சரி, கம்யூனிஸ்ட் என்றாலும் சரி, நோ ப்ராப்ளம். ஆனால் எனக்கு முற்றிலும் பிடிக்காத கருத்துகள் மூன்று. வர்ணதர்மம், சாதி, பிறப்பினால் ஏற்றத் தாழ்வு என்னும் கருத்தியல் அது எந்த வடிவத்தில் எந்த ஆள் சொல்லியிருந்தாலும் சரி, அது எனக்குப் பிடிக்காத, நான் வெறுக்கும் கருத்து. அதை யார் சொன்னாலும் மறுக்கிறேன். அடுத்தது, ஆண், பெண் உயர்வு, தாழ்வு என்னும் கருத்து. அது எனக்குப் பிடிக்காத ஒன்று. அடுத்தது மதங்கள் காரணமாகப் பிரிவினைப் படுத்திப் பார்த்தல். அதனால், இந்தக் கருத்துகள்தாம் உயர்ந்த தர்மம் என்று நீர் சொன்னால் அதை நீரே வைத்துக் கொள்ளும். எனக்கு வேண்டாம்.’ இப்படிச் சொன்னதும் தொடர்ந்து நண்பராக இருக்க அவர் என்ன அவ்வளவு முட்டாளா.. நிச்சயம் இல்லை. (ஒரு வடை போச்சே --- மொமெண்ட்)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 
 
***


1 comment: