Thursday, November 21, 2024

நிலைப்பாடு 03

பொதுவாகவே எழுத்து என்பதே விமரிசனமயமாகத்தான் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. ஒரு விஷயத்தின் அவலத்தையும், சீர்கேட்டையும் உரித்து எழுதுவதுதான் உண்மையில் நல்லது. பிறர் உணர்கிறார்களோ இல்லையோ, நாம் நம் கருத்தைப் பதிவு செய்தோம் என்பது நிம்மதி. பழம் நூல்களைக் குறித்தும், அதன் கருத்துகளைக் குறித்தும் எழுதும் போது ஒரு பாணியைக் கையாண்டேன். அதில் இருக்கும் சாதகமான, பாஸிடிவ் ஆன அம்சங்களைக் குறித்து மட்டும் எழுதுவது; அதில் காணப்படும் ஒவ்வாத கருத்துகளை ஒதுக்கிவிடுவது என்பது நான் பொதுவாகக் கையாளும் முறை. இது சரியான முறை என்று சொல்லமாட்டேன். ஒரு வேளை விவேகாநந்தரைப் படிக்கும் போது அவர் கருத்தைக் கண்டு ஈர்க்கப்பட்டு இவ்வாறு ஒரு போக்கு என்னுள் படிந்தது என்றுதான் நினைக்கிறேன். விவேகாநந்தர் சமுதாய சீர்திருத்தம் குறித்தும், சமுதாய சீர்திருத்தவாதிகள் குறித்தும் சொன்னவற்றோடு நான் முரண்படுகிறேன். எதையும் கண்டிக்காதே, எதையும் சீர்திருத்தாதே என்று அவர் சொல்வது என்ன பயனுடையது? 

“To the reformers I will point out, that I am a greater reformer than any one of them. They want to reform only little bits. I want root-and-branch reform. Where we differ is in the method Theirs is the method of destruction, mine is that of construction, I do not believe in reform ; I believe in growth. I do not dare to put myself in the position of God and dictate to our society, ‘This way thou shouldst move and not that.’ I simply want to be like the squirrel in the building of Rama’s bridge, who was quite content to put on the bridge his little quota of sand-dust. That is my position.” 

சும்மாவாக நான் அணிலாக இருக்க விரும்புகிறேன் என்றேல்லாம் சொல்வது கேட்பதற்கு இனிமையாய், கவிதையாய் இருக்கலாம். ஆனால் காரியத்தில் உதவாது. மேலும் கூறுகிறார், ஸ்ரீராமானுஜர் பற்றியும், ஸ்ரீசங்கரர் பற்றியும். அவர்கள் எல்லாம் எவ்வளவு விசால இதயம் கொண்டவர்களாய் இருந்தனர் என்கிறார். விசால இதயம் என்றால் என்ன? ஸ்ரீராமானுஜரைப் பற்றிக் குறிப்பிடும் இடத்து அவர் சாதி வேறுபாடு கருதாது அனைவரையும் தம் மார்க்கத்தில் அணைத்துக் கொண்டார் என்கிறார். அது எப்படி அவருக்குத் தெரிந்தது? ஸ்ரீராமானுஜருடைய நூல்களில் எங்கேனும் அவர் அங்ஙனம் அனைவரையும் அணைத்து விசால இதயம் வெளிப்படும்படியாக எழுதியுள்ளாரா? அவரைப் பற்றிய சமத்துவ சித்திரமே அவரைப் பற்றிய மணிப்பிரவாள நூல்களில் தெரிய வருவதுதான். அந்த மணிப்பிரவாள நூல்களுக்கு என்ன சான்றுத்தன்மை ஸ்ரீராமானுஜரின் வழிவந்தோர் தருகின்றனர்? விவேகானந்தரின் காலத்தில் இருந்தோர் என்ன சான்றுத்தன்மை தந்தனர்? ஸ்ரீராமானுஜர் தாம் எழுதிய நூல்களில் என்ன வெளிப்படுத்தியிருக்கிறாரோ அந்தக் கருத்துகள்தாம் அவருடையவை. அவர் காலத்திற்குப் பின்னால் வந்தவர்கள் மணிப்பிரவாள நடையில் எழுதியிருக்கும் நூல்களில் இருக்கும் கருத்துகளை ஸ்ரீராமானுஜர் தாமே எழுதிய நூல்களில் நேரடியாக என்ன சொல்லியிருக்கிறாரோ அந்தக் கருத்துகளுக்கு ஏற்றபடிதான் அர்த்தம் செய்ய வேண்டும் என்று வாதிப்பவர்கள்தான் அதிகம் அன்றும் சரி; இன்றும் சரி. 

அப்படியே ஸ்ரீராமானுஜர் விஷயத்தில் சமத்துவம் என்பதை மணிப்பிரவாள நூல்களின்படிச் சொன்னாலும் கூட அது பிரபத்தி என்னும் மார்க்கத்தை ஏற்றுக்கொண்ட பாகவதர்கள் என்ற எல்லைக்குள்தான். பொதுவான மக்களுக்கு என்ன கருத்தைக் கையாண்டார் ஸ்ரீராமானுஜர் என்று விவேகானந்தர் கருதுவது யாது? பொதுவான மக்களுக்குக் கூட வர்ண தர்மம் என்ற பிறப்பில் அடிப்படையான பிரிவினை நெறிகள் கிடையாது என்று மணிப்பிரவாள நூல்கள் எழுதிய வைணவ ஆசிரியர்களும் கூட சொல்லவில்லையே. ஸ்ரீராமானுஜரின் உரைகளாகிய ஸ்ரீபாஷ்யம் முதலானவற்றில் வர்ண தர்மத்தை ஏற்றுதான் எழுதுகிறாரே அன்றி மறுத்து அல்லவே. ஸ்ரீராமானுஜர் விஷயத்திலேயே இப்படி என்றால் ஸ்ரீசங்கரர் விஷயத்தில் கேட்க வேண்டியதில்லையே. சமுதாய சீர்திருத்தவாதிகளை நோக்கி விவேகானந்தர் கேட்கிறார், ஸ்ரீராமானுஜர் என்ன செய்தார்? ஸ்ரீசங்கரர் என்ன செய்தார்? அவர்களுடைய செயல்பாட்டு முறைக்கும், சீர்திருத்தக்காரர்களின் செயல்பாட்டு முறைக்கும் உள்ள வித்யாசம் என்று சொல்லிவிட்டுக் கூறுகிறார்: 

“The difference in this. They had not the fanfaronade of the reformers of to-day ; they had no curses on their lips as modem reformers have ; their lips pronounced only blessings. They never condemned. They said to the people that the race must always grow. They looked back and they said, “O Hindus, what you have done is good, but, my brothers, let us do better.” They did not say. You have been
wicked, now let us be good. ” They said. You have been good, but let us now be better.” That makes a whole world of difference.” 

வளர்ச்சி முறையால் என்ன பலன்? நீங்கள் நன்றாகச் செய்தீர்கள்; இன்னும் நன்றாகச் செய்வோம் என்றதும் எது மாறிவிட்டது? இவர் சீர்திருத்தக்காரர்களின் கண்டன வழி என்று எதை மறுக்கிறாரோ அந்த வழியால்தானே மாற்றங்கள் விளைந்தன. இல்லை இவரே சொல்வது போல் ‘முதலில் மக்களைக் கல்வியில் உயரச் செய்யுங்கள்; அனைவருக்கும் கல்வி கொடுங்கள்’ என்றால் கல்வியின் விளைவு ஏன் எதற்கு என்ற சீர்திருத்தமும், சரியல்லாத நிலையை மாற்றி அமைப்பதும்தானே? 

எதற்குச் சொல்கிறேன் என்றால் இவ்விதம் எல்லாம் சிந்திப்பதும், செயல்படுவதும் சாதாரண ஹிந்துவாய் இருக்கும் போது மறுத்து, விமரிசனம் செய்து எதையும் பொருந்தாது என்றால் விட்டுவிட்டு முன்னேற முடியும். அதுவே ஒரு ஐடியாலஜி என்று கடிவாளம் போட்டுக் கொண்டால் கண்ணில் தெரியும் நிதரிசனம், பொது புத்திக்குப் புரிகின்ற மனித நியாயம் எல்லாவற்றையும் திரித்து மாற்றி தாம் ஏற்றுக் கொண்ட ஐடியாலஜிக்கு விரோதம் இல்லாமல் பார்த்துக் கொள்ளும் போக்கே நிலவும். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

1 comment: