Wednesday, November 20, 2024

நிலைப்பாடு 02

இதுவும் முன்னர் எழுதியதுதான். இப்பொழுது பார்க்கும் போது தோன்றுகிறது, ‘பரவாயில்லை; நம்மைக் குறித்து நாமே தெளிவாகத்தான், அதாவது தனக்குள்ள போதாமைகள், இயலாமைகள் குறித்துத் தெளிவாகத்தான் இருந்திருக்கிறோம்’. ஆங்கிலத்தில் சொல்வார்கள் ‘தன் காலைத் தானே சுட்டுக் கொண்டு கிளம்ப யத்தனிப்பது’ என்று. அந்த மாதிரி பைத்தியக்காரத்தனம் இல்லாமல் இருப்பதே எவ்வளவோ மேல், மேற்கொண்டு என்ன அறிவையும், தெளிவையும் அடைகிறோமோ இல்லையோ! முன்னர் எழுதியது என்று குறிப்பிட்டது இதை:

“சாதாரண மனிதராக இருப்பது அவ்வளவு சிறப்பில்லை; ஏதோ சித்தாந்தங்களுக்கோ, சம்ப்ரதாயங்களுக்கோ நம்மை முற்றிலும் ஈடுகொடுத்து விடுவதுதான் சிறப்பு என்ற எண்ணம் எனக்கு ஒரு காலத்தில் உள்ளில் மறைவாக இருந்தது. பிறகு உண்மையில் சாதாரண மனிதராக இருப்பதுதான் இயல்பானதும், சிறந்ததும் ஆகும் என்பது சிறிது சிறிதாகப் புரிந்தது. ஏனெனில் ஒரு நெறியில் நம்மை முற்றிலும் கொடுத்துவிடும் போது, ஒரு சித்தாந்தம் ரீதியாக நாம் முற்றிலும் நம்மை ஒன்றுபடுத்திக் கொள்ளும் போது அது ஏதோ ஒரு வேகத்தை நம்முள் ஏற்படுத்துவது போன்ற ஒரு உணர்வை உண்டாக்குவது. ஆனால் மிகச் சாதாரணமான பல அம்சங்களையும், மிக இயல்பான விஷயங்களையும் கூட நாம் அப்பொழுது உரிய கவனம் கொள்ளத் தவறிவிடுகிறோமோ என்றுதான் தோன்றுகிறது. என் வரையில் பார்க்கும் பொழுது நான் அப்படி உணர்ந்தேன். பிறருக்கு எப்படி இருக்கும் என்பது எனக்குத் தெரியாது.

“ஒன்றுமில்லை. இத்தனைக்கும் பகுத்தறிவை மிகக் கறாராகப் போதிக்கும் சித்தாந்தம்தான் அயின் ரேண்டின் கொள்கைகள். ஆனால் அதில் முற்றிலும் தோய்ந்து ஈடுகொடுக்கும் நிலை வந்த போது என் மனத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், நான் பிறரோடு கொண்ட பரிமாற்றங்கள் எல்லாம் நான் உற்று கவனித்து வந்தேன். இத்தனைக்கும் அயின் ரேண்ட் சித்தாந்தத்தில் யாரையும், எதையும், பண்டைய சான்று என்ற காரணமாக மாறாக்கோள் என்று கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆயினும் ஒரு சித்தாந்தம், ஒரு நெறி என்ற அளவில் ஆகும் பொழுது அவருடைய சித்தாந்தத்தில் தம்மை ஈடுபடுத்தி கொண்ட ஒருவரின் மனத்தளவில் என்ன மாதிரியான பார்வைக் குருடுகள் ஏற்பட முடியும் என்பது எனக்கு மிகவும் அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“’அப்படி அவர் சொன்னாரா? நீயாகச் செய்துகொண்டால் அவர் என்ன பண்ணுவார்?’ இந்த கேள்வி கேட்கப்படலாம் எந்த சித்தாந்தத்தைக் குறித்தும். ஆனால் இந்தக் கேள்விக்கான நியாயம் எந்த சித்தாந்தத்திலும் கிடைக்குமா தெரியாது. ஏனெனில் எந்த சித்தாந்தம் என்பது இல்லை. ஒரு சித்தாந்தம் என்ற அளவில் முற்றிலும் ஈடுகொடுத்துத் தோயும் போது அது மனத்தை எப்படித் தன்வயப் படுத்தும் என்பதுதான் விஷயம். பொது புத்தியில் உறைக்கக் கூடிய பலதும், இயல்பாக அர்த்தம் ஆகக் கூடிய பலதும், ஸ்வாபாவிகமாகப் புரியக் கூடிய மென்மையான பல தர்மசங்கடங்களும் ஏன் ஒரு கோட்பாட்டில் தன்னை முற்றிலும் தோய்த்துக் கொள்ளும் மனத்திற்குக் காண முடியாத, கண்டாலும் உணர்வில் பொருள் கொள்ளாதவைகளாய் ஆகிவிடுகின்றன என்பது நான் உணரும் போது எனக்கு அதிர்ச்சியாகத்தான் இருந்தது.

“இத்தனைக்கும் நான் அயின் ரேண்ட் சித்தாந்தத்தில் ஈடுபட்டது வாழ்வில் படிப்பு முடிந்து வேலைக்குப் போன காலத்தில்தான். அந்த நிலையிலும் ஒரு சித்தாந்தத்தில் முற்றிலும் ஈடுகொடுத்தல் என்பதன் விளைவு அத்தகையதாகத்தான் இருந்தது. அதேபோல் சம்ப்ரதாயங்களை அவற்றின் மூல நூல்கள், பண்டைய ஆசிரியர்களின் விளக்கங்கள் என்ற ரீதியில் உடன்பாட்டோடு தோய்ந்து ஈடுபடும் நிலையில் மனத்தளவில் எழுந்த மாற்றங்கள், ‘நாம் சிறப்பானவர்கள்; இதை இழந்த பிறர் ஐயோ பாவம்’ என்றவிதமான நாம்>< பிறர் என்ற மனப்பிளவு, பார்வையை எவ்வளவு தூரம் மாற்றும் என்பதைக் கவனத்தில் உணர்ந்தேன். ஆனால் இந்த கவனம் என்பதை அந்த நேரத்தில் ஏற்படுத்திக் கொள்வது மிகவும் கடினமாக இருந்தது. சம்ப்ரதாயம் சார்ந்த பார்வைதான் இயல்பானதாக மனம் கருதியது. ‘கொடுத்து வைத்தவர்கள் >< இழந்து போனவர்கள்’ என்ற எதிர்புதிர் இல்லாமல் பார்ப்பது மிகவும் கஷ்டமாக இருந்தது. அதற்குப் பின்னர்தான் ஸ்ரீராமகிருஷ்ணரின் 'உண்மையைப் பல நிலைப்பாடுகளில் நின்றும் பார்க்கப் பழகுவது' என்ற அணுகுமுறையின் உன்னத தாத்பர்யம் சிறிது சிறிதாக விளங்கியது. இது என் அனுபவம். மற்றவர்களுக்கு இது என்ன பயன்படும் என்பதை அறியேன். ஆனால் என் வாழ்க்கை இனிமையாய் இருக்கிறது. என் வாழ்க்கை, என்னுடைய வாழ்க்கையாக எனக்குக் கிடைக்கிறது என்பது சந்தோஷம்தானே! ”

அது என்ன சாதாரண ஹிந்து என்று சொல்லிக் கொள்கிறாயே, என்ன அர்த்தம் என்று கேட்கிறார் நண்பர் ஒருவர். நல்ல கேள்வி. ஏனென்றால் நான் ஸ்ரீராமகிருஷ்ணர், விவேகாநந்தர், ஸ்ரீஅரவிந்தர், அன்னை, பாரதி, ஸ்ரீரமணர் என்றெல்லாம் சொன்னவுடனே சிலர் கஷ்டப்பட்டு அவர்களின் நூலைக் குடைந்து அவர்களே சில சூழல்களிலோ, அல்லது அவர்கள் சொன்னதாக, கூட இருந்தவர்கள் தங்களுக்குப் புரிந்தவகையில் ஏதோ பதிவு செய்தோ வைத்ததை எடுத்து வந்து ‘பார்! அவர்கள் கூட இன்ன வகைக் கருத்தை மறுக்கவில்லை; வெறுத்து ஒன்றும் சொல்லவில்லை. அவர்களைப் பின்பற்றுகிறேன் பேர்வழி என்று சொல்லிவிட்டு நீ என்னமோ பெரிய பிடுங்கி போல் பேசுகிறாய்’ என்றெல்லாம் மடக்குவதுண்டு. அவர்கள் எல்லாம் என்ன சொன்னார்கள், எதற்கு, எந்த வாதத்திற்காகச் சொன்னார்கள் என்று அவர்களின் எழுத்துகளை முழுவதும் வாசிக்கும் எனக்குப் புரிகிறது. அப்படியே அவர்கள் கவனமின்றிப் பிழையான கருத்துகளைச் சிலசமயம் சொல்லக் கூடும். எதை விட்டு எதைக் கொள்ள வேண்டும் என்பது எனக்குப் புரிந்த விஷயம். ஆனால் மடக்க வேண்டும் என்று ஆத்திரத்தில் பேசும் ஒருவரிடம் நான் என்றும் எதிர்வாதம் செய்வதில்லை. ‘மடமை வாழ்க’ என்று கடந்து போய்விடுவதுதான் வழக்கம். ஏனென்றால் நான் ஒரு சாதாரண ஹிந்து.

அதாவது எனக்குப் பொது புத்தியில், மானிட நன்மை என்னும் உணர்வில் எது சரி, எது தவறு என்று சிம்பிளாக முடிவு செய்து கொண்டு போகின்றவன். நல்ல கருத்தாக ஒன்று பழைமையில் இருந்தால் அதை ரசிப்பதும், பொருந்தாத, மானிடத்திற்கு முரணான கருத்தாக இருந்தால் அதை விமரிசன புத்தியோடு விட்டுவிட்டு வேலையைப் பார்ப்பதும் செய்வதால் சாதாரண ஹிந்து என்று சொல்லிக் கொண்டேன் என்று சொல்லி நண்பருக்குப் புரிய வைக்க வேண்டியிருக்கிறது. ஒரு வேளை அவர் மனத்தில் ‘ஒரு வடை போச்சே’ என்ற மோமெண்டாக இருக்கலாம். யார் கண்டது?

ஸ்ரீரங்கம் மோகனரங்கன்

***

1 comment: