ஒருவர் மற்றவர்களை நியமிக்கிறார். தந்தை குழந்தைகளை நியமிக்கிறார். ராஜா மக்களை நியமிக்கிறார். ஆசிரியர் மாணவர்களை நியமிக்கிறார். ஒரு கம்பெனியின் முதலாளி தொழிலாளிகளை நியமிக்கிறார். நியமித்தல் என்றால் என்ன? ஓர் ஒழுங்கையும், நெறிமுறையையும் நடைமுறைப்படுத்தி, நல்ல நிலைமைக்குத் தூண்டி நடத்துதல். வழிமாறிப் போகும் போது தடுத்து நல்வழியில் செலுத்துவது.
யார் நல்ல நியமன சாமர்த்தியம் உடையவர்? யார் தாம் இருப்பதாலேயே தம்மைச் சுற்றிலும் ஓர் ஒழுங்கில் நடைபெறுமாறு செய்கிறாரோ அவரே மிகச் சாமர்த்தியமான நியமனம் செய்பவர். அப்படிப் பார்த்தால் பிறந்த குழந்தை ஒன்றுதான் மிகத் திறமையான நியமனம் செய்வது. அந்தக் குழந்தைக்குத் தேவையானதைத் தாய் செய்கிறாள். தந்தை கூடவே பார்த்துக் கொள்கிறார். வீட்டில் இருக்கும் அனைவரும் அந்தக் குழந்தை மீது கண் வைத்தபடியே இருக்கின்றனர். அது சிறிது சிணுங்கினாலும் மற்ற காரியங்கள் நின்று அது என்ன என்று பார்க்கப் படுகிறது. இத்தனைக்கும் அந்தக் குழந்தை இவ்வளவு பேர்களைத் தான் கட்டி ஆள்கிறோம் என்றே தனக்குத் தெரியாது. மேலும் அவ்வாறு அந்தக் குழந்தையை சூழ்நிலையின் யஜமானராக ஏற்ற அனைவரும் அந்த யஜமானரைக் கண்டு சலித்துக் கொள்வதில்லை. அவர் ஆள்வதைக் குறித்துக் கோபம் அடைவதில்லை. அந்தக் குழந்தை தங்களை ஆட்டிப் படைப்பதில் மிகுந்த ஆனந்தம் அடைகின்றனர். அப்படி ஆட்டி படைக்க ஒருவர் வேண்டும் என்றுதானே கோயில் கோயிலாக ஆண்டவனை வரமாக வேண்டி வந்தனர்? உச்சபட்சமாக நியமிப்பவர் எவரோ அவரே ஈசன். ஈசத்தன்மை முற்றிலும் உடையவரே ஈச்வரன். நம் நடைமுறை வாழ்க்கையில் ஈசத்தன்மைக்கு முற்றிலும் பொருந்தும் உதாரணம் ஒரு குழந்தை.
அந்தக் குழந்தையும் புறத்தில் நின்றுதான் ஆளமுடியும். நம் அகவாழ்க்கையை ஆள்வது என்பது முடியாது. நம்முடைய புறச்செய்கை, அகநிகழ்வுகள், உணர்ச்சிகள், சிந்தனைகள், நனவில், கனவில், ஆழ்துயிலில் என்று எப்பொழுதும், எல்லாவிதத்திலும் நம்மை நியமித்து, செலுத்தி, ஆண்டு இருக்கும் ஒருவர் உண்டு என்றால் அதுவே நமக்குள் இருக்கும் நம்முடைய ஆத்மா. இத்தனைக்கும் அந்த ஆத்மா ஒரு செயலும் செய்வதில்லை. ஒரு போகத்தையும் அது துய்ப்பதில்லை. நம்முள் உடல் மனம் சொல் உணர்ச்சி என்று எதனோடும் ஒட்டிக்கொள்ளாமல் தான் தானாகவே இருக்கிறது. ஆனால் நம்முடைய வாழ்க்கை முழுவதும் கணம்தோறும் அந்த ஆத்மாவிற்காகவே தான், அந்த ஆத்மாவினாலேதான் நடக்கிறது. பரம ஈசுவரன் என்றால் ஆத்மாவைத்தான் சொல்ல வேண்டும். அந்த ஆத்மா வேறுமனே இருப்பதாலேயே, அதனுடைய சாந்நித்யத்தின் மகிமையாலேயே அனைத்தும் நடைபெறுகின்றன. நம் அனுபவங்களே அதனால்தான் நமக்குக் கிடைக்கின்றன. நம் உலகம், அதனுடைய காட்சி என்று அனைத்தும் ஆத்மாவினால் அல்லவோ!
அந்த ஆத்மாதான் நான் உண்மையில் என்றே ஒவ்வொருவரும் பிரம்மத்தைத் தம்முள் சிந்தனை செய்ய வேண்டும். பாடுகிறார் ஸ்ரீஆதிசங்கரர்:
‘நான் செய்பவன் அன்று; போகம் துய்ப்போன் அன்று;
எதனோடும் தொடர்பு அற்றவன்; பரம ஈசுவரன்;
எப்பொழுதும் என் சந்நிதியாலேயே இந்திரியங்கள்
அனைத்தும் செயல்புரிந்து இயங்குகின்றன.’
(அகர்தா அஹம் அபோக்தா அஹம் அஸங்க: பரமேச்வர: |
ஸதா மத்ஸந்நிதாநேந சேஷ்டதே ஸர்வம் இந்த்ரியம் ||)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment