Wednesday, January 14, 2026

தத்துவ உண்மையைத் தொடர்ந்து சிந்தித்தல் - பிரம்ம அனுசிந்தனம் - 18,19

நாமோ தோன்றிச் சிலநாள் இருந்து மறையும் ஒரு மனித ஜீவன். நம்மைப் பார்த்து ஒருவர் நீ உண்மையில் உலகத் தோற்றத்தையெல்லாம் கடந்த என்றும் நிலைத்த, எங்கும் பரந்து அறிவுருவான பிரம்மமே ஆக இருக்கிறாய்! அவ்வாறே மனனம், சிந்திப்பாயாக என்று சொன்னால் அது துணிச்சலான வார்த்தைதானே? அதை எப்படிக் கருணையின் உச்சம் என்று சொல்ல முடியும்? அப்படிப் பார்த்தால் யாரைப் பற்றியும் யாரும் வாய்க்கு வந்தபடியெல்லாம் புகழ்ந்துவிட்டு அதைக் கருணை, தயை என்று சொல்லலாமே? என்றுதான் நமக்குத் தோன்றும். ஆனால் சங்கரருக்கு நம்மை இப்படியெல்லாம் புகழ்வதற்கு ஒரு காரணமும் இல்லை. அவர் சொல்ல வருவது அருளியல் வரலாற்றிலேயே அதுவரை யாரும் சொல்லத் துணியாத மிகவும் ரகசியமான ஒன்று. 

பகவான் புத்தர் கூட மனிதரைப் பார்த்து ஆத்மா என்றெல்லாம் எதுவும் இல்லை. எனவே பார்க்கின்ற ஆள் என்பவர் ஒரு பரஸ்பரச் சார்புத் தோற்றமே; அடிப்படையான சத்யம் என்று ஆத்மா எதுவும் கிடையாது. அதைப் போல் வெளியில் பார்க்கப்படும் உலகில் மாற்றங்களுக்கிடையில் மாறாத அடிப்படைப் பொருள் என்று ஸத்யம் எதுவும் இல்லை. பார்க்கும்  முனையிலும் எதுவும் இல்லை. பார்க்கப்படும் முனையிலும் எதுவும் இல்லை. இருப்பதாக நடைமுறையில் வியாவகார நிலையில் தோன்றுவதெல்லாம் ஒன்றை ஒன்று சார்ந்து இருப்பதாகத் தோன்றும் தோற்றம் மட்டுமே. இந்த உண்மையை நன்கு உணர்ந்துவிட்டால் ‘பட்’ என்று தீபத்தின் பிழம்பு அணைந்தால் எல்லாம் ஒன்றும் இல்லாது போய்விடுவதைப் போல முடிவு அதுதான் நிர்வாணம் என்று சொல்லிப் போனார். 

அதாவது அடிப்படையான சத்யம் என்று எதுவும் உள்ளேயும் வெளியேயும் இல்லாத நிலையைச் சொன்ன அவருடைய உபதேசத்தைத்தான் மாயாவாதம் என்று சொல்ல வேண்டும். மாறாத சத்யமான பிரம்மமே இருக்கிறது. ஜீவன் உண்மையில் பிரம்மமாகவே இருக்கிறது. இந்த உலகம் இருப்பது போன்ற தோற்றம் மித்யை. என்று சொன்ன ஸ்ரீஆதிசங்கரர் ஒருநாளும் மாயாவாதி என்று எப்படிச் சொல்ல முடியும்? சத்யைக வாதி (சத்யம் ஒன்றே உள்ளது) அல்லது சத்யைவ வாதி (சத்யம் ஒன்றே இருப்பது) என்றெல்லாம் சொல்லப்பட வேண்டியவர் சங்கரர். அவர் நம்மைப் பார்த்துச் சொன்னது ஏன் கருணையின் வெளிப்பாடு என்பதைப் புரிந்துகொள்ள ஒரு விஷயத்தை நாம் முதலில் தெரிந்துகொள்வோம். 

ஒருவர். மனநிலை பாதிக்கப்பட்டுத் தம்மையே ஒரு குட்டி எலியாகக் கருதத் தொடங்கிவிட்டார். அவருடைய வீட்டில் நடுக்கூடத்தில் கூட வரமாட்டார். ஓர் அறையில் இரண்டு மூன்று சேர்களுக்குப் பின்னர் ஒரு ஒண்டும் பொந்து போன்று அமைத்து அங்குதான் புகுந்துகொள்வார். சத்தமும் எலியைப் போலவே போடுவார். அவரிடம் போய் நீங்கள் மனிதர் என்றால் போதும் கடுமையாக எதிர்ப்பார். பார்த்தார்கள். பலரிடமும் அதற்குப் பரிகாரம் பெறப் பார்த்தார்கள். சிலர் வந்தனர். அவருக்கு இருந்த இடத்தைச் சற்று அகலப்படுத்தி, அங்கேயே சௌகரியம் சில செய்துகொடுத்து, அவருடைய எண்ணத்தைத் திடீரென்று மாற்றக் கூடாது. பல வருஷங்கள் அப்படியே கருதி வந்திருக்கிறார். படிப்படியாகத்தான் அவர் வழியிலேயே போய், அதை வெளிப்படையாக மறுக்காமல் சிறிது சிறிதாகக் கொண்டு வர முடியும் என்று ஒருவர் சொன்னார். இன்னொருவர் சொன்னார், ‘அப்படி இல்லை. நாம் யார் என்று மனிதர் நாம்தான் கற்பனை செய்து கொள்கிறோம். அவருக்கு அது பிடித்திருக்கிறது என்றால் அவருடைய உரிமை அது. அதில் ஏன் தலையிட வேண்டும்? இதைப் போல் கருதுகிறவர்களை ஒன்று கூட்டி ‘எலியார் சங்கம்’ என்பது போல் அமைத்துக் கொடுத்தால், இவருக்குத் தான் மட்டும் தனிமைப் படுத்தப் பட்டோம் என்ற எண்ணம் ஒழிந்து இயல்பான நிலை வரும். அப்படி இயல்பாகவே அவர் தாம் ஓர் எலி என்று கருதி வாழ்ந்து போனாலே போதும். அவருக்குத் திருப்தியாக இருக்கிறதா என்பதுதான் முக்கியம் என்று ஆலோசனை சொன்னார். 

இப்படிப் பல யோசனைகள். ஒரு மன இயல் நிபுணர் வந்தார். நபரிடம் பொறுமையாகப் பல முறை பேசி அவருக்கு விஷயங்களைப் புரிய வைத்து, மனித உயிர் என்பது என்ன, ஏன் அவர் தம்மை ஒரு மனிதர் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்றெல்லாம் விளக்கி, அவரையும் உணரச் செய்து, அவரை மீட்டுத் தாம் ஒரு மனிதர், இன்னார் என்று உணரக் கூடிய நிலைக்குக் கொண்டு வந்தார். இதில் அந்த நபரிடம் கருணையோடு நடந்து கொண்டவர் யார்? ‘எலியார் சங்கம்’ அமைத்து அதில் சேர்க்கலாம் என்று சொன்னவரைப் போன்ற மற்றவர்களா அல்லது நீ உண்மையில் இன்னவாக இருக்கிறாய் என்று உணர்த்தி உணர வைத்த மன இயல் நிபுணரா? அந்த நபரே உணர்ந்த பின்னர் ‘ஆஹா நாம் எலி நிலையிலிருந்து உயர்ந்து ஒரு மனித ஜீவனாக ஆகிவிட்டேன்’ என்றா நினைப்பார்? இல்லையே. இதுதான் தம் இயல்பு நிலை. இப்படித்தான் தாம் எப்பொழுதும் இருந்து வந்திருக்கிறோம். ஏனோ பின்னர்த் தாம் முன்னர் இடைப்பட்ட காலத்தில் அப்படி நினைத்துப் பிரமித்தோம்? என்றுதானே சிரிப்பார். அவரை அந்த இயல்பான சகஜ  நிலைக்குக் கொண்டு வருவதுதானே உண்மையான கருணை? 

அந்த மன இயல் நிபுணரின் வேலையைத்தான் ஸ்ரீசங்கரர் நமக்குச் செய்கிறார். ‘இல்லை. நான் இப்படித்தான் அன்றாடம் இருக்கிறதாக நினைத்துக் கொள்கிறேன். அதை டிஸ்டர்பு செய்துகொள்ள நான் விரும்பவில்லை. மற்றவர்கள் பரவாயில்லை. என் மனத்திற்கு ஷாக் எதுவும் தராமல் நான் சொல்வதைப் பெரிதும் மறுக்காமல் இணக்கமாகப் பேசுகிறார்கள்’ என்று முரண்டு பிடித்து அடம் பிடிக்காமல் இருந்தால் அதுவன்றோ நம் நல்ல காலம்? 

இருந்தாலும் திடீரென்று எப்படி இப்படி நினைக்க முடியும்? ஆரம்ப நிலையில் ஒரு படிப்படி என்று வேண்டாமா? அதற்கும் தமக்கே உரிய முறையில் வழியைக் காட்டுகிறார் ஸ்ரீஆதிசங்கரர். 

பிரம்மமாகவே நான் இருக்கிறேன். மாறி மாறித் தோற்றச் சுழலாகச் சுழலும் ஸம்ஸாரி அன்று நான். (ஸம்ஸாரம் என்றால் தோற்ற மயக்குகளால் ஆன சுழல், அதனோடு ஐக்கியப்படுத்திக் கருதிக்கொள்ளும் நிலை என்று புரிந்ந்துகொள்க.) முக்தனாகவே, தோற்றங்களில் தோய்ந்து என்னை மறந்த பந்தமுற்றவனாக நான் இல்லை. என்று எப்போதும் தியானம் செய்க. அவ்வாறு தியானம் செய்ய ஆரம்பத்தில் முடியவில்லையெனில் இந்த வாக்கியங்களை, இந்தச் சுலோகத்தை எப்பொழுதும் மனத்தில் சொல்லியவண்ணம் இருப்பாயாக. அப்படிச் சொன்னால் என்ன ஆகும்? எதை மீண்டும் மீண்டும் அப்யாசம் செய்கிறாயோ அதுவாகவே நீ ஆகிறாய் அன்றோ? குளவியால் கொட்டப்பட்டுக் கூட்டில் வைக்கப்படும் புழு ஒன்று அதையே நினைத்திருந்து அந்தக் குளவி போலவே ஆகிவிடுகிறது என்று கேட்டிருக்கிறாய்தானே? எனவே ஆரம்பத்தில் முடியவில்லை என்பதால், சௌகரியமாக இருக்கும் நொய்ந்த, அன்னியமான நிலையைக் கற்பனை செய்துகொண்டு வளர்த்துக் கொள்வதற்குப் பதிலாக உன் இயல்பான உண்மைநிலையையே மீண்டும் மீண்டும் மனத்தில் சந்தேகத்தை ஒழித்துத் திடமாக அப்யாசம் செய். 

இதைக் கருணை என்னாமல் வேறு என்னவென்று சொல்வது? 

சுவாமி விவேகானந்தரின் இந்த வார்த்தைகள் மிக முக்கியமானவை: 

“Sometimes I agree that there is some good in the dualistic method: it helps many who are weak. If a man wants you to show him the polar star, you first point out to him a bright star near it, then a less bright star, then a dim star, and then the polar star. This process makes it easy for him to see it. All the
various practices and trainings, Bibles and Gods, are but the rudiments of religion, the kindergartens of religion. But then I think of the other side. How long will the world have to wait to reach the truth if it follows this slow, gradual process? How long? And where is the surety that it will ever succeed to any appreciable degree? It has not so far. After all, gradual or not gradual, easy or not easy to the weak, Is not the dualistic method based on falsehood? Are not all the prevalent religious practices often weakening and therefore wrong? They are based on a wrong idea, a wrong view of man. Would two wrong make one right? Would the lie become truth? Would darkness become light?" 

(Is Vedanta the Future Religion? Full lecture is here -- https://www.ramakrishnavivekananda.info/vivekananda/volume_8/lectures_and_discourses/is_vedanta_the_future.htm ) 

'பிரம்மமே நான் ஸம்ஸாரி அன்று; 

முக்தனாகவே இருக்கின்றேன் என்று எப்பொழுதும் தியானம் செய்; 

தியானம் செய்ய இயலும்வரை 

இந்த வாக்கியத்தை எப்பொழுதும் அப்யாஸம் செய் 

அப்யாஸத்தால் எதைப் பாவிக்கிறோமோ 

அதுவாகவே ஆகிறோம் குளவியின் புழுவைப் போல்; 

அதில் சந்தேகம் நீக்கித் திடமான முடிவுடன் 

அப்யாஸம் செய்வாய்’ 

(ப்ரஹ்மைவாஹம் ந ஸம்ஸாரீ முக்தோஹம் இதி பாவயேத் | 

அசக்நுவந் பாவயிதும் வாக்யமேதத் ஸதாப்யஸேத் || 

யதப்யாஸேந தத்பாவோ பவேத் ப்ரமரகீடவத் | 

அத்ராபஹாய ஸந்தேஹம் அப்யஸேத் க்ருதநிச்சய: ||) 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment