Saturday, December 14, 2019

பரம்பொருளை உணர்த்த அனுமன் ஒரு குறீயீடு!

பரம்பொருளை உணர்த்த அனுமன் ஒரு குறியீடு !

கம்பன் கவிதையின் மாட்சிக்கு உரைகல்லாக ஓர் இடம் இராமகாதையில். கவிதையை கவிஞன் எழுதுவது என்பது மாறிக் கவிஞனைக் கொண்டு கவிதை தன்னை எழுதிச் செல்லும் இடங்கள் கவியின் பூரிப்பு பூரணம் அடையும் இடங்கள். அப்படி ஓர் இடம். யுத்த காண்டத்தில் அனுமன் மருந்து கொணர அனுப்பப்படும் கட்டம். அனுமன் மருத்து மலையைக் கொணரச் செல்லும் காட்சி.
அண்ணலுக்கான குற்றேவல் என்றதும் தொண்டுக்கே நிலைத்தவன் விரையும் விரைவு எப்படிப்பட்டது என்பதைச் சொல்லவந்த கம்பர், 'மேகத்தின் பதம் கடந்து, வெங்கதிரும், தண்கதிரும் விரைவில் செல்லும் மாகத்தின் நெறிக்கு அப்பால்' செல்லும் வெகத்துடன் செல்லும் சொல்லின் செல்வனைக் கண்டு வியக்கின்றார்கள் வானவர்கள் என்கிறார். வானவரினும் மேல் நிலையில் உள்ளவர்களோ அனுமனைப் பார்த்து 'யாரிவன்?' என மயங்குகிறார்கள். அதைக் கம்பன் விவரிக்கும் கம்பீரம் அழகியது. உலகப் பொருட்களை உவமையாக்கி தத்துவப் பொருட்களை உவமேயமாய் விளக்குதல் வழக்கம். ஆனால் இங்கே கம்பனோ தத்துவப் பொருட்களை உவமானம் ஆக்கி அனுமன் என்னும் உவமேயத்தை விளக்குகிறான்.

அனுமன் சென்ற வேகத்தில் அந்த விரைவும், பொலிவும் மிக்க காட்சியைக் கண்டவர்கள் சிலர் அந்தக் காட்சிக்கு உரு உண்டு என்றார்கள். எதைப்போல்? கடவுள் காட்சிக்கு உரு உண்டு என்று சில முனிவர்கள் சொல்வது போல்.

உரு என்று சொல்ல முடியுமா? அது ஒரே ஒளிமயம் அல்லவா? கடவுளைப் பற்றியும் இப்படித்தானே சொல்வார்கள். அனுமன் சென்ற வேகத்தில் அவனைப் பற்றியும் இப்படித்தான் சொன்னார்கள்.

உரு என்றோ ஒளி என்றோ கூறுவதினும் 'ஒளிர்கின்ற அருவ மேனி' எனலாம் என்றார்கள். கடவுளா? அனுமனா?

சிலர் சொன்னார்கள் - அண்டத்துக்கு அப்புறம் நின்று, அதாவது அண்ட இயக்கத்தில் உள்ளே பற்றாமல் சுதந்திரமாய் நின்று, இந்த உலகத்தை ஆக்குகின்ற மூல காரணமான 'கரு' என்றார்கள். கடவுளையா? அனுமனையா?

சிலரோ 'ம் ம் ம் இதெல்லாம் இல்லை. நாம் சொல்லும் அனைத்தைக் காட்டிலும் வேறான மற்று ஒன்று என்றார்கள்.

சொன்னவர்கள் எல்லாம் யார்? இந்த உலகம் அனைத்தையும் தெரிந்தவர்கள், வான நாட்டினர்க்கும் மேல் உறையும் பெருமை மிக்கோர்.
இவர்களே கடலைக் கடந்து சென்று செரு வென்ற அனுமனைப் பற்றி அவன் நிலை ஒன்றும் தெரியாதவர்களாகிச் சொல்பவர்கள். உலக காரணமான பரம்பொருளைக் காட்டி அனுமனின் பொலிவையும், வேகத்தையும், அவன் தொண்டின் சிறப்பையும் விளக்குவதில் கம்பரின் உள் கருத்து என்னவாக இருக்கும்?

*
உரு என்றார் சிலர் சிலர்கள்;
ஒளி என்றார் சிலர் சிலர்கள்;
ஒளிரும் மேனி அரு என்றார்
சிலர் சிலர்கள்;
அண்டத்துக்கு அப்புறம் நின்று,
உலகை ஆக்கும் 'கரு' என்றார்
சிலர் சிலர்கள்;
'மற்று' என்றார் சிலர் சிலர்கள்;
கடலைத் தாவிச் செரு வென்றான்
நிலை ஒன்றும் தெரியகில்லார் -
உலகு அனைத்தும் தெரியும் செல்வர்.
(யுத்த காண்டம், மருத்துமலைப் படலம் )

*** 

கடவுள் ஒரு வலை!

கடவுள் ஒரு வலை !

கடவுளை ஒவ்வொருவர் ஒவ்வொன்றாக விவரித்துப் பேசியிருக்கின்றனர். ஆனால் கடவுளை யாரேனும் 'வலை' என்று விவரித்துப் பேசியிருக்கிறார்களா தெரியவில்லை. பேசியிருக்கக் கூடும். ஆனால் ஸ்ரீவிஷ்ணு ஸஹஸ்ர நாமத்தில் பேசியிருக்கின்றார்கள். அது போல் ஆழ்வார்கள் பேசியிருக்கின்றார்கள். ஸுதந்து: , தந்துவர்த்தன: என்று இரண்டு திருநாமங்கள் ஸ்ரீமஹாவிஷ்ணுவிற்கு உண்டு எனச் சொல்கிறது ஸ்ரீ விஷ்ணு ஸஹஸ்ர நாமம்.

ஸுதந்து: அழகிய வலை,
தந்து வர்த்தன: - வலையை வளரச் செய்வோன், பெருகச் செய்வோன். அல்லது பெருகிய, வளர்ந்த, நீளும் வலையே அவன் என்கிறது.

யோசித்துப் பாருங்கள் - GOD IS A WEB and that too A WEB THAT IS GOING STRONGER AND STRONGER.

ஆழ்வாருடைய பாடல் -

தன்னுள்ளே திரைத்தெழும்
தரங்க வெண் தடங்கடல்
தன்னுளே திரைத்தெழுந்து
அடங்குகின்ற தன்மை போல்
நின்னுளே பிறந்து இறந்து
நிற்பவும் திரிபவும்
நின்னுளே அடங்குகின்ற
நீர்மை நின்கண் நின்றதே.
(திருச்சந்தவிருத்தம்)

பீட்டர் ஸ்டெர்ரி என்பார் கூறுவார் - படைப்பு என்பது கடவுளின் முகம் போர்த்திய சலாகை. சலாகையில் அந்த முகத்தின் சாயல் படிந்துள்ளது.

ஷ்வாங்ஸீ கூறுகிறார் தாவோ பற்றி -

கடலினும் அளத்தற்கரியது
கணம் தொறும் முடிவில் தொடக்கம்
அனைத்துக்கும் அறிவீந்தும் அந்தம் அறியா நெறி
முழுமையானவரின் தாவோ
இயல்பு மங்காது திகழும் தன் இயக்கத்தில்.

*** 

ஸ்ரீ அநந்தாழ்வான் இயற்றிய ஸ்ரீராமாநுஜ சதுச்லோகி

ஓர் உபந்யாஸ கோஷ்டி. ஸ்ரீராமாநுஜர் 'ஒழிவில் காலமெல்லாம் உடனாய் மன்னி வழுவிலா அடிமை செய்ய வேண்டும் நாம்' என்னும் பாசுரத்திற்கு விளக்கம் சொல்லிக் கொண்டிருந்தவர். திருவேங்கடமலையில் பூந்தோட்டம் வளர்த்து புஷ்ப கைங்கர்யம் பண்ண யாரேனும் துணிச்சல் மிக்க ஆண்பிள்ளை இந்தக் கோஷ்டியில் உள்ளனரோ என்று கேட்க ஒருவர் எழுந்தார். அவரே ஸ்ரீஅநந்தாழ்வான். அன்று இருந்த திருவேங்கட மலையின் சென்றணுக அருமைப்பாடு அப்படி இருந்தது போலும்! திருமலைக்குப் போய்விட்டாரே அன்றி ஸ்ரீராமானுஜ கோஷ்டியை இழந்தோமே என்று வருத்தம். அந்த வருத்தம் ஆறும்படியாக நான்கு செய்யுட்கள் பாடினார் ஸ்ரீஅநந்தாழ்வான்.

ஸ்ரீராமாநுஜ சதுஸ்ச்லோகி

அநிசம் பஜதாம் அநந்ய பாஜாம்
சரணாம் போருஹம் ஆதரேண பும்ஸாம்
விதரந் நியதம் விபூதிம் இஷ்டாம்
ஜய ராமாநுஜ ரங்கதாம்நி நித்யம்

புவி நோ விமதாந் த்வதீய ஸூக்தி:
குலிசீபூய குத்ருஷ்டிபிஸ் ஸமேதாந்
சகலீகுருதே விபச்சித் ஈட்யா
ஜய ராமாநுஜ சேஷசைல ச்ருங்கே

ச்ருதிஷு ஸ்ம்ருதிஷு ப்ரமாணதத்த்வம்
க்ருபயாலோக்ய விசுத்தயா ஹி புத்த்யா
அக்ருதாஸ் ஸ்வத ஏவ பாஷ்யரத்நம்
ஜய ராமாநுஜ ஹஸ்திதாம்நி நித்யம்

ஜய மாயிமதாந்தகார பாநோ
ஜய பாஹ்ய ப்ரமுகாடவீ க்ருசாநோ
ஜய ஸம்ச்ரித ஸிந்து சீத பாநோ
ஜய ராமாநுஜ யாதவாத்ரி ச்ருங்கே

ராமாநுஜ சதுஸ்ச்லோகீம் ய: படேந் நியதஸ் ஸதா
ப்ராப்நுயாத் பரமாம் பக்திம் யதிராஜ பதாப்ஜயோ:

இதை தமிழ்ப் படுத்தியிருக்கிறேன்.

தமிழாக்கம்

அன்பினால் அடியவர் என்றும் ஏற்றும்
மன்னும் திருவடி மலரே கதியாம்
உன்னும் உயருலகு உவப்பத் தருவாய்
மன்னும் அரங்கம் ஜயரா மாநுஜ!

அறிஞர் போற்றுநின் அருள்மிகு வாக்கு
மறித்திவ் வுலகில் மாற்றார் கருத்தைக்
குறியழித் திடுமோர் குலிசமாய் விளங்க
நெறிவாசல் வேங்கடம் ஜயரா மாநுஜ!

சுருதியும் மிருதியும் சுடர்மான தத்துவம்
கிருபையினால் ஆய்ந்து கலக்கமில் மதியினால்
அருள்சுரக்கு மணியதாய் அருளினாய் பாடியம்
அருளத்தி மலையதே ஜயரா மாநுஜ!

மாயாவாத இருளுக்கு பானுவே ஜயஜய
அயலார்வாத அடவிக்கு நெருப்பே ஜயஜய
அடியாரென்னும் கடல்பொங்கும் திங்களே ஜயஜய
முடியாதவ மலைமேல் மருவிடும் ஜயரா மாநுஜ!

நலந்திகழ் செய்யுள் நான்கிவை நித்தம்
உளங்கலந் துரைப்போர் உறுவது திண்ணம்
யதிரா சர்தம் இணைமல ரென்றும்
வதியும் புகலரு பரம பத்தியே.

ஸ்ரீராமாநுஜரின் பெருமை விளங்குவதாகுக.

*** 

நல்லவனாக இரு; நன்மையைச் செய்!

நன்மையைச் செய்தவருக்கு நாசம் இல்லை :

‘நல்லவனாக இரு; நன்மையைச் செய்; இதுவே மதம் என்பதன் திரண்ட பயன்’ என்னும் கருத்துப்பட கூறுகிறார் சுவாமி விவேகாநந்தர்.

நன்மை என்றால் என்ன? நல்லவர் என்கிறோம். யாரை, எதற்காக அவ்வண்ணம் கூறுகிறோம் என்று நம்மால் சொல்ல முடியுமா? ஏதோ ஓரளவிற்குத் தொல்லைதராதவர் என்று இருப்போரை, மக்களுக்கு உதவிகள் செய்வோரை, பிறரை ஏமாற்றாதவர்களை, பிறருடைய பொருட்களைத் திருடாதவர்களை நாம் சொல்கிறோம் என்று சொல்லலாம். இதுதான் நன்மை என்று யாராவது வரையறுக்க முயன்றுள்ளார்களா? அவ்வாறு ஒரு வரையறை இருக்குமானால் அதற்கு என்ன அடிப்படை? இது போல் பல கேள்விகள் எழுகின்றன ‘நன்மை’ என்னும் ஒரு விஷயத்தைப் பற்றிச் சிந்தனை செய்யும் பொழுது. இதைத்தவிர ஒரு கருத்தும் நம்மிடையே நிலவுகிறது பொதுவாக. நல்லவராய் இருந்தால் என்ன பயன்? நல்லவர்கள்தாம் நற்கதி அடைவார்கள் என்பதற்கு என்ன உத்திரவாதம்? கெட்டவர்கள் பலகாலம் கையோங்கி இருப்பதைப் பொதுவாகப் பார்க்கும் பொழுது பலருக்கும் இந்த மயக்கம் எழும். ஆனால் உலக நன்மைக்கே ஒரு பெரும் உத்திரவாதமும் அளித்து, நல்லவராக இருங்கள், இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி உங்களுக்கு நாசம் என்பது இல்லை, துர்க்கதி என்பது ஒரு நாளும் கிடையாது என்று உலக அளவில் தேடினாலும் யாரேனும் நிச்சயமாக உறுதிபடக் கூறியதுண்டா என்று பார்த்தால் ஒரே ஒருவர் மட்டும் ஐயத்திற்கே இடமின்றிக் கூறுகிறார். அவர்தாம் ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீமத் பகவத் கீதையில்.

6ஆம் அத்தியாயத்தில் அர்ச்சுனன் ஒரு கேள்வி கேட்கிறான். ‘கிருஷ்ணா! பாதியில் முன்னேறி இன்னும் இலக்கை எட்டாமல் இருக்கும் ஒருவன் என்ன கதியை அடைகிறான்? காற்றில் சிதறுண்ட மேகம் போல் அவன் கதி கலைந்து அலைந்து நிலை குலைந்து அவன் நாசமாகி விடுகிறான் என்ற சந்தேகம் எனக்கு இருக்கிறது. இதைவிட வாட்டும் சந்தேகமும் இல்லை. இந்தச் சந்தேகத்தைத் தீர்க்க உன்னை விட்டால் ஆளும் இல்லை’ என்று கூறுகிறான். அதற்கு ஸ்ரீகிருஷ்ணன் வெறுமனே உண்டு இல்லை என்று பொதுவாகப் பதில் சொல்லி விட்டுப் போகலாம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதில் பெரும் உலகப் பிரகடனமாக ஒலிக்கிறது, இன்னார் இனையார் என்ற பாகுபாடின்றி, அனைவருக்கும் பெரும் உறுதியை அளித்தவண்ணம்.

பார்த்தா! இந்த உலகிலோ, அல்லது மறுமையிலோ நல்வழியில் முனைந்தவனுக்கு, நல்லதைச் செய்யத் துணிந்தவனுக்கு நாசம் என்பதே கிடையாது. நன்மை செய்தவன் என்பவன் ஒரு நாளும் துர்க்கதிக்குப் போவது என்பதே கிடையாது -

பார்த்த! ந இவ இஹ, ந அமுத்ர விநாச: தஸ்ய வித்யதே | ந ஹி கல்யாணக்ருத் கச்சித் துர்க்கதிம் தாத கச்சதி ||

ந இவ இஹ - இந்த உலகிலோ,
ந அமுத்ர - அல்லது மறுமையிலோ
தஸ்ய - அவனுக்கு
நாச: - நாசம் என்பது
(ந) வித்யதே - ஏற்படவே செய்யாது.

இம்பாசிபிலிட்டி என்கிறான். பிறகு வருவது உத்தமமான கருத்து

’தாத! கல்யாணக்ருத் துர்க்கதிம் ந ஹி கச்சதி- அப்பா! நன்மையை (கல்யாணம்) செய்தவன் ஒரு போதும் துர்க்கதியை அடைவதில்லை, இம்மையிலும் சரி, மறுமையிலும் சரி.’

அனைத்து சமுதாய, மனித குலத்திற்கும் அடிப்படையான ஆக்க பூர்வமான கருத்து இதுவாகும்.

’நன்மையைச் செய்தோருக்கு நாசம் இல்லை’ என்ற உத்தரவாதத்தை ஸ்ரீகிருஷ்ணன் அளிக்கிறார் என்று பார்த்தோம். நன்மை என்ற பொருள் ‘கல்யாணம்’ என்னும் சொல்லால் ஸ்ரீகீதையில் குறிக்கப்பட்டது என்பதையும் பார்த்தோம். அப்படியென்றால் நன்மை என்பது என்ன? ‘கல்யாணம்’ என்பதற்கு என்ன பொருள் என்று யாரேனும் விளக்கம் தந்துள்ளனரா? ஆம். அரிய விளக்கம் தந்திருப்பது ஸ்ரீராமாநுஜரும், அவரை அடியொற்றி சுதர்சன பட்டர் எனப்படும் ச்ருதப்ரகாசிகாசாரியார் என்பவரும். மிகத் தெளிவான விளக்கங்களைத் தந்துள்ளனர்.

யோக ப்ரஷ்டன் அதாவது யோக மார்க்கத்தில் முயன்று கொண்டிருப்பவன் இலக்கை அடையாமல் நட்ட நடுவில் அவன் வாழ்க்கை முடிந்து போகும் என்றால் அவன் கதி என்ன? பாதி முடிந்து எல்லாம் வேஸ்ட், அவ்வளவுதானா? என்பதுதான் உண்மையில் அர்ஜுனனின் கேள்வி. அதற்கு மட்டும்தான் பதிலை நாம் படிக்கும் போது ஸ்ரீகிருஷ்ணனிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஆனால் ஸ்ரீகிருஷ்ணனின் பதிலோ உலகெங்கும் நன்மை செய்யும் மாந்தருக்கு உறுதிப்பாடு அளிப்பதாக வருகிறது. ஸ்ரீகிருஷ்ணன் கூறுவதோ - ந ஹி கல்யாணக்ருத் துர்கதிம் தாத கச்சதி - கல்யாணம் என்ற சொல் நன்மை என்பதை மட்டும் குறிக்கும் பொதுமைச் சொல்.

ஸ்ரீராமாநுஜர் ஆன்மிக வழியில் முயல்பவனுக்கு அடிப்படையாக இருக்க வேண்டிய ஆத்ம குணங்களாகச் சிலவற்றைச் சொல்வார், அதில் ஒன்று இந்த கல்யாணம் - நன்மையைச் செய்யும் மனநிலை, நன்மையை விரும்பும் மனநிலை என்பது. அந்த விதத்தில் தேர்ந்து ஜகதாசாரியனாகிய ஸ்ரீகிருஷ்ணன் - நன்மையைச் செய்பவன் (கல்யாண க்ருத்) ஒரு நாளும் துர்க்கதியை அடைவதில்லை என்று ஓர் உலக நன்மைப் பிரகடனமாக ஒரு சுலோகத்தைச் சொல்கிறான்.

இதில் ’கல்யாணம்’ என்ற சொல் என்ன அர்த்தம் உடையது? ‘கல்யாணம்’ என்பதை ஆத்ம சாதகர்க்கு இருக்க வேண்டிய அடிப்படையான ஆத்ம குணங்களில் ஒன்றாக ஸ்ரீராமாநுஜர் குறிக்கிறார் வேதாந்த ஸூத்ரங்கள் என்னும் ப்ருஹ்ம ஸூத்ரங்களுக்குத் தாம் எழுதிய மிகச் சிறந்த உரையான ஸ்ரீபாஷ்யம் என்பதில் (I.64) என்னும் இடத்தில் குறிப்பிடுகிறார்:

‘ஸத்யார்ஜவதயாதாநாஹிம்ஸாநபித்யா: கல்யாணாநி’.

அதாவது கல்யாணங்கள், நன்மைகள் என்றால் என்ன என்ன? ‘ஸத்யம், ஆர்ஜவம், தயை, தாநம், அஹிம்ஸை, அநபித்யை ஆகியன கல்யாணங்கள் என்று கூறப்படும்’ என்பது அவர் எழுதியுள்ள வடமொழித் தொடருக்கான பொருள். அவருக்குப் பின் வந்து ஸ்ரீராமாநுஜர் எழுதிய அரிய பெரிய உரையாம் ஸ்ரீபாஷ்யம் என்னும் வேதாந்த விளக்கத்திற்கு மேலும் ஐயமே எழ வாய்ப்பின்றிப் பெரும் விரிவாக சுருதப்பிரகாசிகை என்னும் அரும் பொக்கிஷத்தைத் தந்த ஆசாரியர் இவ்வாறு கல்யாணங்கள் என்று யதிராஜரால் குறிக்கப்பட்ட குணங்களான ஸத்யம் முதலிய குணங்கள் ஒவ்வொன்றுக்கும் என்ன பொருள் என்று பிடித்துப் பிடித்து எழுதியுள்ளார்.

’ஸத்யம்’ என்றால் என்ன? எழுதுகிறார் ஸ்ரீச்ருதப்பிரகாசிகாசாரியர்: ’ஸத்யம் பூதஹிதம்.’ உண்மை என்றால் என்ன? எது உயிர்க்கு ஹிதம் பயக்குமோ, நன்மை செய்யுமோ அது சத்யம். பூத என்றால் மனிதர் மட்டும் இல்லை, தோன்றிய உயிர்க்குலம் முழுமையும்!

ஆர்ஜவம் என்றால் என்ன? ’மனோவாக்காயாநாம் ஏக ரூப்யம்’ – மனம், வாக்கு, உடல் அதாவது உள்ளம், உரை, செயல் ஆகிய மூன்றும் ஒன்றாக இருக்கை என்னும் குணத்திற்குப் பெயர்தான் ஆர்ஜவம்.

தயை என்றால் ’ஸ்வார்த்தநிரபேக்ஷ பரதுக்காஸஹிஷ்ணுத்வம்’ – தன்னுடைய லாபத்தைக் கருதாமல், பிறருடைய துக்கம் கண்டு பொறுக்கமாட்டாத குணம்.

அஹிம்ஸை என்றால் ’கரணத்ரயேணாபி பரபீடாநிவ்ருத்தி:’ - உள்ளம், உரை, செயல் மூன்றினாலும் பிற உயிர்களைப் பாதிக்காமல் இருப்பதும், அறியாமல் நடந்ததை உணரவரும் பொழுது தன்னை உடனே திருத்திக் கொள்ளுதலும் ஆகிய குணம்.

தாநம் என்றால் ’லோபராஹித்யம்’ – உலோப குணம் தவிருதல் ஆகிய குணம். தாநத்திற்கு அர்த்தமே வெறுமனே கொடுத்தல் மட்டும் அன்று, முக்கியமாக லோபம் இல்லாமல் இருத்தல்.

அநபித்யை என்பது சுருக்கமாக ’பரக்ருத அபகார சிந்தா ராஹித்யம்’ – பிறர் செய்த கேட்டைப் பற்றிய நினைவு கொள்ளாமை. (அபித்யை என்றால் பிறர் செய்த கேட்டையே நினைத்துக் கொண்டிருத்தல்; அது இல்லாமல் இருத்தல் அந் + அபித்யை = அநபித்யை)

இவ்வளவும் சுருதப்பிரகாசிகையில் காணும் விளக்கம். இப்படிப்பட்ட குணங்களான ஸத்யம், ஆர்ஜவம், தயை, அஹிம்ஸை, தாநம், அநபித்யை ஆகிய ஆறுகுணங்களுக்குப் பெயர் கல்யாணங்கள் என்பதாகும். இந்தக் கல்யாணங்கள் ஆகிய குணங்கள் ஓர் ஆத்ம சாதகனுக்கு இருக்க வேண்டிய முதன்முன்னம் அடிப்படைகள் என்கிறார் ஸ்ரீராமாநுஜர். ஒவ்வொரு குணத்திற்கும் என்ன என்ன பொருள் என்று விளக்கம் கண்டார் சுருதப்பிரகாசிகை அருளிய ஆசாரியர். நன்மை என்பதற்கு உலகப் பொதுவான விளக்கம் நமக்குக் கிடைத்ததா? இத்தகைய ’கல்யாணக்ருத்’ – நன்மையைச்செய்தவர் யாரும் ஒரு போதும் நாசம் அடைவதில்லை; துர்க்கதி அடைவதே இல்லை என்று சர்வநிச்சயமாக உறுதி கூறுகிறான் உலகிற்கெல்லாம் உடையவனான ஸ்ரீகீதாசார்யன்.

சுற்றியெங்கும் பரிதவிப்பும், ஐயமும், பயமும், அவமும் சூழ்ந்துள்ள போதும் உலகில் நம் உள்ளமாகிய சிறு பறவைக் குஞ்சை, கடும் பனியில், கொடிய அச்சத்தில் அது நடுங்கி வெடவெடக்கும் போது யாரோ ஹிதமாகக் கையில் எடுத்துப் பதமாகத் தடவி விடுவது போன்றும், அதனால் நடுக்கமும், அச்சமும் தொலைந்தொழிவது போன்றும் இருக்கிறது இந்த ஸ்ரீகிருஷ்ண ஸ்பரிசம்.

*** 

Saturday, December 7, 2019

சவ்வாதும் சர்க்கரையும்

புலவர்கள் ஒருவருக்கொருவர் பொறாமையில் சண்டை போட்டாலும் ஒரு நயம் இருந்தது அந்தக் காலம். 250 வருடங்களுக்கு முன் நடந்ததாம். சர்க்கரைப் புலவர், சவ்வாதுப் புலவர் என இருவர். சர்க்கரைப் புலவரைச் சேதுபதிகள் மிகவும் ஆதரித்தமையைக் கண்ட சவ்வாதுப் புலவர் ஓர் உள்குத்துடன் வார்த்தை ஒன்று சொல்லுகிறார்.

‘சர்க்கரை கழுத்து மட்டும்தான். ஆனால் சவ்வாதோ கண்ட மட்டும் அன்றோ!’

அதற்கு சர்க்கரைப் புலவர் விடுவாரா?

‘அதுவும் அந்த மட்டும்தான் ஓய்!’

புரியவில்லையா? கழுத்து = கண்டம், இரண்டும் ஒருபொருள் மொழிகள்தாமே!

***

பொய்யாமொழிப் புலவரும் புதுமைப் பித்தனும்

’ஓகோ உலகத்தீர்,
ஓடாதீர்!
சாகாவரம் பெற்ற
சரஸ்வதியார் அருள்பெற்ற
வன்னக் கவிராயன்
நானல்ல
உன்னிப்பாய்க் கேளுங்கள்,
ஓடாதீர்!’

என்ற சாட்டைக் குரல் புதுமைப் பித்தனிடமிருந்து தொடங்கியதாக நினைத்தால் அது பிழை. இந்தக் குரல் தமிழ் இலக்கியத்தில் தொன்று முதலே பயின்றுவரும் குரல்.

‘உம்மைப்போல் நானும்
ஒருவன் காண்;
உம்மைப் போல் நானும்
ஊக்கம் குறையாமல்
பொய்கள் புனைந்திடுவேன்..’

என்று புதுமைப் பித்தன் கூவியழைத்து ஓடும் உலகத்தாரை நோக்கிக் கூறுவது என்ன?

‘சற்றுப் பொறும் ஐயா
சங்கதியைச் சொல்லுகிறேன்;
இன்றைக்குக் காசு
இருக்கிறது இனிமேலே
என்றைக்கோ எப்போதோ
எதிரில் எனைக்கண்டக்கால்
ஓடி ஒளியாதீர்!
உம்மிடம் நாம் கேட்கவில்லை.’

இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று: ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்புகட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
“வானத்து அமரன்
வந்தான் காண்! வந்தது போல்
போனான் காண்!” என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்,
அடியேனை விட்டுவிடும்.”

என்ற விட்டெறிந்த குரலின் ஒரு முற்படிவத்தைப் பொய்யாமொழிப்புலவரிடத்தில் (12 ஆம் நூற்) பார்க்கலாம்.

சங்கப் புலவர்கள்தம் ஆமோதிப்பு வெளியில் தெரியப் பாடவேண்டும் என்று பாண்டியன் கேட்ட பொழுது,

’உங்களிலே யானொருவன் ஒவ்வுவனோ ஒவ்வேனோ
திங்கள் குலனறியச் செப்புங்கள் - சங்கத்தீர்
பாடுகின்ற முத்தமிழுக்கென் பைந்தமிழும் ஒக்குமோ
ஏடெழுதார் ஏழெழுவீர் என்று’

என்று பாடிய குரல்,

சங்கப்பலகையை மிதக்கப் பாடுக என்ற பொழுதும்

‘பூவேந்தர் முன்போல் புரப்பார் இலையெனினும்
பாவேந்தர் உண்டென்னும் பான்மையால் - கோவேந்தன்
மாறன் அறிய மதுராபுரித் தமிழோர்
வீறணையே சற்றே மித’

என்ற மிதப்பின் குரலும்

புலவரின் பேராற்றலைக் கண்ட பாண்டியன் வருந்தித் தன் தவற்றுக்கு மன்னிக்க வேண்டி, புலவரை இறையனார், அகத்தியர், சரஸ்வதி, சங்கப் புலவர்களுக்குச் சமம் என்றெல்லாம் புகழ, அப்பொழுதும் புலவர் அகம் களியாமல் விரத்தியில்

‘அறமுரைத் தானும் புலவன்முப் பாலின்
திறமுரைத் தானும் புலவன் - குறுமுனி
தானும் புலவன் தரணி பொறுக்குமோ
யானும் புலவன் எனின்’

என்று பாடிய எகத்தாளக் குரலும் என்றும் தமிழில் செம்மாந்த புலவர்களின் த்வனியாய், தீர்க்கமான ஒரு குரலாய் ஓங்கியோ ஒதுங்கியோ கேட்கத்தான் செய்கிறது.

***

ஓடாத தோள்வலியன்

திருப்பாவையில் ‘உந்துமதகளிற்றன் ஓடாத தோள்வலியன் நந்தகோபாலன் மருமகளே! நப்பின்னாய்!’ என்று வருகிறது. இதில் ’ஓடாத தோள்வலியன்’ என்றால் என்ன பொருள்? புறங்காட்டாதவன் என்றால் ஓடாத கால்வலியன் சரி. ஆனால் தோள் ஓடப்போவதில்லை. ஓயாத தோள்வலியன் என்றும் சொல்லியிருக்கலாம். ஆனால் அக்கா சொல்வதோ ஓடாத தோள்வலியன். தோளுக்கு ஏன் ஓடாத என்று அடைமொழி போட்டார்?

’உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்..’

ஓடாத தோள்வலியன் என்று ஏன் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சொற்கோவை இட்டருளினார் என்பது விசாரம். ஓடுதல் என்றாலே தோற்றோடுதல் என்பது புழக்கத்தில் தோன்றும் பொருளாயிருக்க அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு யோசனை. ஓடாத தோள் என்று சொல்லலாமா? தோள் ஓடுவதற்கு உரிய அங்கம் அன்றே என்று ஒரு கேள்வி. இந்த அடிப்படையில் வியக்கியானங்கள் அளிக்கும் விளக்கமும் அதை நாம் புரிந்துகொள்ள ஓர் உழைப்பைத் தந்தே பெற வேண்டும் என்பதையும் எடுத்துக்க்கட்ட வேண்டி என் அபிப்ராயம் இங்கே --

ஓடா மறவர் என்றபடி ஓடா என்ற பயன்பாடு சங்க இலக்கியம், குறிப்பாக கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் இருக்கிறது. அங்கெல்லாம் ஓடா என்பது கெடாத என்னும் பொருளில் வருகிறது. அவ்விதம் பொருள் கொண்டால் ’கெடாத தோள்வலியன்’ என்னும் பொருள் சிறப்பு வரும். அதாவது குன்றாத தோள், ஓயாத தோள் என்னும் பொருளில். வியாக்கியானங்கள் இந்தப் பொருளை முதலில் காட்டுகின்றன. 

இத்தகைய தோள்வலியன் உடையவனாகப் பாடப்படுவது நந்தகோபன். அவனுக்கு மகனான காரணம் பற்றியே ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அத்தகைய கெடாத தோள்வலி வாய்த்தது என்று சொல்லும் அளவிற்குக் கேடில்லாத தோள்வலி நந்தபோபனுடையது என்பது வியாக்கியான ஆசிரியர் காட்டும் சிறப்பு. மேலும் ஒரு சிறப்பு சொல்கிறார். -- இந்தத் தோள்வலியின் காரணமாகத்தான் கம்சன் ஊருக்குள் தைரியமாகப் புகுந்து அடிக்கவராமல், திருட்டுத்தனமாக மாய வழிகளில் இம்சை பண்ண முயன்றான் தான் முடியுமட்டும் என்று அவர் காட்டும் பொருள் நம்மை நெகிழச் செய்வது. எனவே சங்க இலக்கியப் பயன்பாட்டின் படியான ஓடா = கெடாத என்ற பொருளை அக்கா பொதிந்து பாடுகிறார் என்று தெரிகிறதா? ஆம் சங்கத் தமிழ் மாலையன்றோ?

அடுத்து, மேலும் ஒரு சிறப்பு. இதை நான் மட்டும்தான் யோசித்தேன் என்று அல்ப நேரம் மகிழ்ந்தேன். ஆனால் நமது முன்னோர்களாகிய வியாக்கியானப் பெரும் ஆசான்களிடமா அது நடக்கும்? ‘தம்புடு! உனக்கும் முன்னால் நாங்கள் இங்கே எழுதிவிட்டோம் பாரும் பிள்ளாய்!’ என்று சொல்வது போல் நான் உணர்ந்த தருணம். --

ஓட என்பது உவம உருபாகவும் கொள்ளலாம் என்று தொல்காப்பியம், உவம இயலில் காட்டுகிறார் தொல்காப்பியர். ஓட என்பது ‘போல’ என்னும் பொருளது. எனவே ஓடாத தோள்வலி என்றால் உவமையாகப் போல என்று ஒன்றைச் சொல்ல முடியாத அளவிற்கும் ஒப்பில்லாத தோள்வலி என்றும் சொல்லலாமே என்று நினைத்தேன். கொஞ்ச நேரம்தான் அல்ப சந்தோஷம் நீடித்தது. நீங்களே பாருங்கள் --

”நாட்டில் நடையாடாத தோள்வலியை உடையவன் என்னவுமாம்.” -- இது வியாக்கியானங்களில்!

கையைக் கூப்புவதை விட வேறு என்ன செய்ய? அதாவது அவர்களோடு போட்டி போட வேண்டும். நாம் தோற்க வேண்டும். அது ஒரு தனி சுகம். அந்தச் சுகத்தை எனக்குக் குறைவில்லாமல் அளிக்கும் அந்த பூர்வாசாரியர்களுக்கு நன்றி என்று உணர்வதே நான் அறிந்த பூஜை புரஸ்காரம் எல்லாம். 

*
ஓடாத தோள்வலியன் - என்பதைப் பார்த்தோம் அல்லவா! ஒரு பொழுதும் கெடாத ஒப்பற்ற தோள்வலி கொண்டவன் நந்தகோபன் என்றால், அது என்ன பெரும் தேகாப்பியாசத்தால் வந்த வலிமையா? இல்லை இந்த நந்தகோபனோ மிகவும் சாதுப் பிராணி. அப்புராணி என்பார்களே அந்த வகை. பின்னர் எப்படி இவ்வளவு வலிமை? அங்குதான் இருக்கிறது உண்மையான பக்தியின் மகிமை. அவன் வலிமைக்கு வேர் Transcendental தளத்தில் இருக்கிறது. அதீந்திரியத்தில் வேர்கொண்டு பிரகிருதியில் பொலியும் வலிமைக்கு பக்திதான் சாட்சி.

திருப்பாவையில் முதல் பாட்டான மார்கழித்திங்கள் பாசுரத்தில் வரும் வரிகள்,

’கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்;
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்’

இதற்கு வியாக்யானங்களில் ஒரு நயவுரை காணப்படுகிறது. இதில் இருக்கும் முதல் வரியின் சொற்களைத் தனித்தனியாகப் பார்த்து ஏன் இந்தச் சொல் இங்கு வரவேண்டும் என்று அதற்கான அழகியல் நியாயங்களுடன் கவிதையின் தர்க்கத்தை வெளிக்கொணர்கிறார் மூவாயிரப்படியின் ஆசிரியரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவர்கள்.

’கூர்வேல்’ என்பதில் உள்ள கூர்மையும், ‘கொடுந்தொழிலன்’ என்பதில் உள்ள கொடுமையும், ‘நந்தகோபன்’ என்பதில் உள்ள மகிழ்ச்சி என்பதைக் குறிக்கும் நந்த என்ற பகுதியும், ‘குமரன்’ என்பதின் பொருளும் அவர்களுடைய கவிதையாட்கொண்ட கண்களுக்குத் தனிப்பொருள் பெய்து நிற்கின்றன.
நந்தகோபன் ரொம்ப சாது. அவனைப் பார்த்தால் கோப தலைவன் என்பதே தெரியாது. பாடியில் இருக்கும் அத்தனைச் சிறார்களும், சிறுமியரும் அவனுக்குச் செல்லம். தங்கள் வீட்டில் கிடைக்காத பாசமும் அரவணைப்பும் அவன் ஒருவனிடத்திலே அவர்களுக்குக் கிடைத்தன. ஊருக்கே ஏதோ ஏவினதைச் செய்யும் வேலைக்காரன் போன்றுதான் அவன் பழக்கம். ஒருவர் துன்பத்தையும் காணப் பொறாதவன். இவ்வளவு நளினமானவன் என்பதை எப்படிச் சொல்வது? ‘நந்தகோபன் பசும்புல் சாவ மிதியாதவராய்த்து நம் சிறியாத்தானைப் போலே’ என்கிறார் வியாக்யான ஆசிரியர்.

சிறியாத்தான் என்பவர் அப்பொழுது வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர் ஒருவர். கல்வியும், கடவுட்காதலும், மன்னுயிர்பால் பெருகும் அருளும் அவரது அன்றாட நடவடிக்கைகளையே முற்றிலும் மாற்றிவிட்டது என்கிறார். அவர் பாட்டையில் நடக்கும் பொழுது அவர் நடப்பதே வினோதமாக இருக்கும். இங்கு ஒரு கால் வைப்பர். பிறகு பூச்சி புழு ஏதேனும் இல்லாத இடமாகத் தேடி அடுத்த காலடி வைப்பர். பசும்புல் தலை தூக்கியிருந்தாலும் போச்சு, வேறு இடம்தான் பார்க்கவேண்டும் அடுத்த அடி வைப்பதற்கு. நினைத்துப்பாருங்கள். பெரும் வேடிக்கையாக இருக்கும்.

இவ்வாறு இவர் உயிர் திகழ்ச்சி இருக்கும் இடத்தையெல்லாம் கண்டு அருளால் அஞ்சி ஒதுங்கித் தன்னால் அவ்வுயிருக்கு என் வருகிறதோ என்று பெருங்கவலையுடன் அன்றாடப் பொழுதைக் கழிப்பவரானால் அவரது மனப்பாங்கு எத்தனை மிருதுவானதாக, நளினமாக மாறியிருக்க வேண்டும். நம் கண்ணுக்குப் பழைய பைத்தியங்களில் இதுவும் ஒன்று என்று தோன்றினாலும்!

அந்தச் சிறியாத்தானைப் போன்றவராம் நந்தகோபன். அத்தகைய சாத்வி, அமைதியும், இரக்கமும், உயிர்பால் சுரந்த அருளும் வடிவுகொண்டு இலகும் நந்தகோபன் திடீரென்று கொடுந்தொழிலன் ஆகிவிட்டார்!! அப்புறம்தான் அவருக்கு ஞாபகம் வருகிறது. இந்தக் கையில் ஏதோ குச்சி போன்று வைத்திருப்பார்களே முனையில் உலோகத்தில் கூர்மையாக ஹாங் ... வேல்!. அது எங்கே போட்டோம்? என்று பரண் ஒன்று விடாமல் தேடுகிறார். இது எதற்குத் தனக்கு? என்று தலைவன் ஆன அன்று ஏதோ மரியாதைக்குச் சடங்கிற்காக கையில் வைத்துக்கொண்டு நின்றது. பின்னர் விட்டு எறிந்ததுதான். இங்குதான் எந்தப் பரணிலாவது இருக்கவேண்டும். அ.. அ..ம் இதோ என்று தேடிப்பிடித்து மும்முரமாக சாணை பிடித்துக் கொண்டிருக்கிறார். எறிந்தால் தப்பக் கூடாது. பட்டால் விழக்கூடாது. தைத்தால் நிற்கக் கூடாது. அப்படி இருக்க வேண்டும்!

என்ன ஆயிற்று இந்த ஆளுக்கு? எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்? சரி வேலைக் கையில் பிடித்தபடி என்ன செய்கிறார்? அங்கு கிருஷ்ணன் இருக்கும் தொட்டில் பக்கம் ஏதாவது எறும்பு போனாலும் போதும் உடனே பாய்ந்து வேல் முதலிலா இவர் முதலிலா என்று தெரியாதபடி கொடுந்தொழில்!. வெறும் புல் பூண்டு வண்டி பறவை என்று எந்த உருவிலும் கம்சன் ஏவிவிடும் அரக்கர்கள் வந்து தாக்கலாம் அல்லவா? இது எறும்புதானே என்று எப்படி விடுவது? எந்த அரக்கன் இந்த உருவில் கிருஷ்ணனை அண்ட முயற்சிக்கின்றானோ? சரி கிருஷ்ணன் தான் கடவுள் ஆயிற்றே? அனைவருள்ளும் இருந்து அனைத்தையும் காக்கும் கரம் அவனுடையதாய் இருக்க,....இதோ பாருங்கள் உங்களோடு வெட்டிப்பேச்சு பேச நேரம் இல்லை. இந்த இடைவெளியில் எந்த அரக்கன், ஏவல் பூதம், கிருஷ்ணனுக்கு ஊறு செய்யத் தேடுகிறதோ?

கிருஷ்ணன் மேல் பாசம் இவனைப் படுத்தும் படி! ஏன்தான் நந்தகோபன் ஓடாத தோள்வலியன் ஆகமாட்டான்? 

***