Saturday, December 7, 2019

பொய்யாமொழிப் புலவரும் புதுமைப் பித்தனும்

’ஓகோ உலகத்தீர்,
ஓடாதீர்!
சாகாவரம் பெற்ற
சரஸ்வதியார் அருள்பெற்ற
வன்னக் கவிராயன்
நானல்ல
உன்னிப்பாய்க் கேளுங்கள்,
ஓடாதீர்!’

என்ற சாட்டைக் குரல் புதுமைப் பித்தனிடமிருந்து தொடங்கியதாக நினைத்தால் அது பிழை. இந்தக் குரல் தமிழ் இலக்கியத்தில் தொன்று முதலே பயின்றுவரும் குரல்.

‘உம்மைப்போல் நானும்
ஒருவன் காண்;
உம்மைப் போல் நானும்
ஊக்கம் குறையாமல்
பொய்கள் புனைந்திடுவேன்..’

என்று புதுமைப் பித்தன் கூவியழைத்து ஓடும் உலகத்தாரை நோக்கிக் கூறுவது என்ன?

‘சற்றுப் பொறும் ஐயா
சங்கதியைச் சொல்லுகிறேன்;
இன்றைக்குக் காசு
இருக்கிறது இனிமேலே
என்றைக்கோ எப்போதோ
எதிரில் எனைக்கண்டக்கால்
ஓடி ஒளியாதீர்!
உம்மிடம் நாம் கேட்கவில்லை.’

இத்தனைக்கும் மேலே
இனி ஒன்று: ஐயா, நான்
செத்ததற்குப் பின்னால்
நிதிகள் திரட்டாதீர்!
நினைவை விளிம்புகட்டி,
கல்லில் வடித்து
வையாதீர்;
“வானத்து அமரன்
வந்தான் காண்! வந்தது போல்
போனான் காண்!” என்று
புலம்பாதீர்!
அத்தனையும் வேண்டாம்,
அடியேனை விட்டுவிடும்.”

என்ற விட்டெறிந்த குரலின் ஒரு முற்படிவத்தைப் பொய்யாமொழிப்புலவரிடத்தில் (12 ஆம் நூற்) பார்க்கலாம்.

சங்கப் புலவர்கள்தம் ஆமோதிப்பு வெளியில் தெரியப் பாடவேண்டும் என்று பாண்டியன் கேட்ட பொழுது,

’உங்களிலே யானொருவன் ஒவ்வுவனோ ஒவ்வேனோ
திங்கள் குலனறியச் செப்புங்கள் - சங்கத்தீர்
பாடுகின்ற முத்தமிழுக்கென் பைந்தமிழும் ஒக்குமோ
ஏடெழுதார் ஏழெழுவீர் என்று’

என்று பாடிய குரல்,

சங்கப்பலகையை மிதக்கப் பாடுக என்ற பொழுதும்

‘பூவேந்தர் முன்போல் புரப்பார் இலையெனினும்
பாவேந்தர் உண்டென்னும் பான்மையால் - கோவேந்தன்
மாறன் அறிய மதுராபுரித் தமிழோர்
வீறணையே சற்றே மித’

என்ற மிதப்பின் குரலும்

புலவரின் பேராற்றலைக் கண்ட பாண்டியன் வருந்தித் தன் தவற்றுக்கு மன்னிக்க வேண்டி, புலவரை இறையனார், அகத்தியர், சரஸ்வதி, சங்கப் புலவர்களுக்குச் சமம் என்றெல்லாம் புகழ, அப்பொழுதும் புலவர் அகம் களியாமல் விரத்தியில்

‘அறமுரைத் தானும் புலவன்முப் பாலின்
திறமுரைத் தானும் புலவன் - குறுமுனி
தானும் புலவன் தரணி பொறுக்குமோ
யானும் புலவன் எனின்’

என்று பாடிய எகத்தாளக் குரலும் என்றும் தமிழில் செம்மாந்த புலவர்களின் த்வனியாய், தீர்க்கமான ஒரு குரலாய் ஓங்கியோ ஒதுங்கியோ கேட்கத்தான் செய்கிறது.

***

No comments:

Post a Comment