’உந்துமத களிற்றன் ஓடாத தோள்வலியன்..’
ஓடாத தோள்வலியன் என்று ஏன் ஸ்ரீஆண்டாள் நாச்சியார் சொற்கோவை இட்டருளினார் என்பது விசாரம். ஓடுதல் என்றாலே தோற்றோடுதல் என்பது புழக்கத்தில் தோன்றும் பொருளாயிருக்க அப்படியே எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு யோசனை. ஓடாத தோள் என்று சொல்லலாமா? தோள் ஓடுவதற்கு உரிய அங்கம் அன்றே என்று ஒரு கேள்வி. இந்த அடிப்படையில் வியக்கியானங்கள் அளிக்கும் விளக்கமும் அதை நாம் புரிந்துகொள்ள ஓர் உழைப்பைத் தந்தே பெற வேண்டும் என்பதையும் எடுத்துக்க்கட்ட வேண்டி என் அபிப்ராயம் இங்கே --
ஓடா மறவர் என்றபடி ஓடா என்ற பயன்பாடு சங்க இலக்கியம், குறிப்பாக கலித்தொகை, பத்துப்பாட்டு ஆகியவற்றில் இருக்கிறது. அங்கெல்லாம் ஓடா என்பது கெடாத என்னும் பொருளில் வருகிறது. அவ்விதம் பொருள் கொண்டால் ’கெடாத தோள்வலியன்’ என்னும் பொருள் சிறப்பு வரும். அதாவது குன்றாத தோள், ஓயாத தோள் என்னும் பொருளில். வியாக்கியானங்கள் இந்தப் பொருளை முதலில் காட்டுகின்றன.
இத்தகைய தோள்வலியன் உடையவனாகப் பாடப்படுவது நந்தகோபன். அவனுக்கு மகனான காரணம் பற்றியே ஸ்ரீகிருஷ்ணனுக்கும் அத்தகைய கெடாத தோள்வலி வாய்த்தது என்று சொல்லும் அளவிற்குக் கேடில்லாத தோள்வலி நந்தபோபனுடையது என்பது வியாக்கியான ஆசிரியர் காட்டும் சிறப்பு. மேலும் ஒரு சிறப்பு சொல்கிறார். -- இந்தத் தோள்வலியின் காரணமாகத்தான் கம்சன் ஊருக்குள் தைரியமாகப் புகுந்து அடிக்கவராமல், திருட்டுத்தனமாக மாய வழிகளில் இம்சை பண்ண முயன்றான் தான் முடியுமட்டும் என்று அவர் காட்டும் பொருள் நம்மை நெகிழச் செய்வது. எனவே சங்க இலக்கியப் பயன்பாட்டின் படியான ஓடா = கெடாத என்ற பொருளை அக்கா பொதிந்து பாடுகிறார் என்று தெரிகிறதா? ஆம் சங்கத் தமிழ் மாலையன்றோ?
அடுத்து, மேலும் ஒரு சிறப்பு. இதை நான் மட்டும்தான் யோசித்தேன் என்று அல்ப நேரம் மகிழ்ந்தேன். ஆனால் நமது முன்னோர்களாகிய வியாக்கியானப் பெரும் ஆசான்களிடமா அது நடக்கும்? ‘தம்புடு! உனக்கும் முன்னால் நாங்கள் இங்கே எழுதிவிட்டோம் பாரும் பிள்ளாய்!’ என்று சொல்வது போல் நான் உணர்ந்த தருணம். --
ஓட என்பது உவம உருபாகவும் கொள்ளலாம் என்று தொல்காப்பியம், உவம இயலில் காட்டுகிறார் தொல்காப்பியர். ஓட என்பது ‘போல’ என்னும் பொருளது. எனவே ஓடாத தோள்வலி என்றால் உவமையாகப் போல என்று ஒன்றைச் சொல்ல முடியாத அளவிற்கும் ஒப்பில்லாத தோள்வலி என்றும் சொல்லலாமே என்று நினைத்தேன். கொஞ்ச நேரம்தான் அல்ப சந்தோஷம் நீடித்தது. நீங்களே பாருங்கள் --
”நாட்டில் நடையாடாத தோள்வலியை உடையவன் என்னவுமாம்.” -- இது வியாக்கியானங்களில்!
கையைக் கூப்புவதை விட வேறு என்ன செய்ய? அதாவது அவர்களோடு போட்டி போட வேண்டும். நாம் தோற்க வேண்டும். அது ஒரு தனி சுகம். அந்தச் சுகத்தை எனக்குக் குறைவில்லாமல் அளிக்கும் அந்த பூர்வாசாரியர்களுக்கு நன்றி என்று உணர்வதே நான் அறிந்த பூஜை புரஸ்காரம் எல்லாம்.
*
ஓடாத தோள்வலியன் - என்பதைப் பார்த்தோம் அல்லவா! ஒரு பொழுதும் கெடாத ஒப்பற்ற தோள்வலி கொண்டவன் நந்தகோபன் என்றால், அது என்ன பெரும் தேகாப்பியாசத்தால் வந்த வலிமையா? இல்லை இந்த நந்தகோபனோ மிகவும் சாதுப் பிராணி. அப்புராணி என்பார்களே அந்த வகை. பின்னர் எப்படி இவ்வளவு வலிமை? அங்குதான் இருக்கிறது உண்மையான பக்தியின் மகிமை. அவன் வலிமைக்கு வேர் Transcendental தளத்தில் இருக்கிறது. அதீந்திரியத்தில் வேர்கொண்டு பிரகிருதியில் பொலியும் வலிமைக்கு பக்திதான் சாட்சி.
திருப்பாவையில் முதல் பாட்டான மார்கழித்திங்கள் பாசுரத்தில் வரும் வரிகள்,
’கூர்வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்;
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்’
இதற்கு வியாக்யானங்களில் ஒரு நயவுரை காணப்படுகிறது. இதில் இருக்கும் முதல் வரியின் சொற்களைத் தனித்தனியாகப் பார்த்து ஏன் இந்தச் சொல் இங்கு வரவேண்டும் என்று அதற்கான அழகியல் நியாயங்களுடன் கவிதையின் தர்க்கத்தை வெளிக்கொணர்கிறார் மூவாயிரப்படியின் ஆசிரியரான ஸ்ரீ பெரியவாச்சான் பிள்ளை அவர்கள்.
’கூர்வேல்’ என்பதில் உள்ள கூர்மையும், ‘கொடுந்தொழிலன்’ என்பதில் உள்ள கொடுமையும், ‘நந்தகோபன்’ என்பதில் உள்ள மகிழ்ச்சி என்பதைக் குறிக்கும் நந்த என்ற பகுதியும், ‘குமரன்’ என்பதின் பொருளும் அவர்களுடைய கவிதையாட்கொண்ட கண்களுக்குத் தனிப்பொருள் பெய்து நிற்கின்றன.
நந்தகோபன் ரொம்ப சாது. அவனைப் பார்த்தால் கோப தலைவன் என்பதே தெரியாது. பாடியில் இருக்கும் அத்தனைச் சிறார்களும், சிறுமியரும் அவனுக்குச் செல்லம். தங்கள் வீட்டில் கிடைக்காத பாசமும் அரவணைப்பும் அவன் ஒருவனிடத்திலே அவர்களுக்குக் கிடைத்தன. ஊருக்கே ஏதோ ஏவினதைச் செய்யும் வேலைக்காரன் போன்றுதான் அவன் பழக்கம். ஒருவர் துன்பத்தையும் காணப் பொறாதவன். இவ்வளவு நளினமானவன் என்பதை எப்படிச் சொல்வது? ‘நந்தகோபன் பசும்புல் சாவ மிதியாதவராய்த்து நம் சிறியாத்தானைப் போலே’ என்கிறார் வியாக்யான ஆசிரியர்.
சிறியாத்தான் என்பவர் அப்பொழுது வாழ்ந்த ஸ்ரீவைஷ்ணவ ஆசாரியர் ஒருவர். கல்வியும், கடவுட்காதலும், மன்னுயிர்பால் பெருகும் அருளும் அவரது அன்றாட நடவடிக்கைகளையே முற்றிலும் மாற்றிவிட்டது என்கிறார். அவர் பாட்டையில் நடக்கும் பொழுது அவர் நடப்பதே வினோதமாக இருக்கும். இங்கு ஒரு கால் வைப்பர். பிறகு பூச்சி புழு ஏதேனும் இல்லாத இடமாகத் தேடி அடுத்த காலடி வைப்பர். பசும்புல் தலை தூக்கியிருந்தாலும் போச்சு, வேறு இடம்தான் பார்க்கவேண்டும் அடுத்த அடி வைப்பதற்கு. நினைத்துப்பாருங்கள். பெரும் வேடிக்கையாக இருக்கும்.
இவ்வாறு இவர் உயிர் திகழ்ச்சி இருக்கும் இடத்தையெல்லாம் கண்டு அருளால் அஞ்சி ஒதுங்கித் தன்னால் அவ்வுயிருக்கு என் வருகிறதோ என்று பெருங்கவலையுடன் அன்றாடப் பொழுதைக் கழிப்பவரானால் அவரது மனப்பாங்கு எத்தனை மிருதுவானதாக, நளினமாக மாறியிருக்க வேண்டும். நம் கண்ணுக்குப் பழைய பைத்தியங்களில் இதுவும் ஒன்று என்று தோன்றினாலும்!
அந்தச் சிறியாத்தானைப் போன்றவராம் நந்தகோபன். அத்தகைய சாத்வி, அமைதியும், இரக்கமும், உயிர்பால் சுரந்த அருளும் வடிவுகொண்டு இலகும் நந்தகோபன் திடீரென்று கொடுந்தொழிலன் ஆகிவிட்டார்!! அப்புறம்தான் அவருக்கு ஞாபகம் வருகிறது. இந்தக் கையில் ஏதோ குச்சி போன்று வைத்திருப்பார்களே முனையில் உலோகத்தில் கூர்மையாக ஹாங் ... வேல்!. அது எங்கே போட்டோம்? என்று பரண் ஒன்று விடாமல் தேடுகிறார். இது எதற்குத் தனக்கு? என்று தலைவன் ஆன அன்று ஏதோ மரியாதைக்குச் சடங்கிற்காக கையில் வைத்துக்கொண்டு நின்றது. பின்னர் விட்டு எறிந்ததுதான். இங்குதான் எந்தப் பரணிலாவது இருக்கவேண்டும். அ.. அ..ம் இதோ என்று தேடிப்பிடித்து மும்முரமாக சாணை பிடித்துக் கொண்டிருக்கிறார். எறிந்தால் தப்பக் கூடாது. பட்டால் விழக்கூடாது. தைத்தால் நிற்கக் கூடாது. அப்படி இருக்க வேண்டும்!
என்ன ஆயிற்று இந்த ஆளுக்கு? எப்படி இருந்தவர் இப்படி ஆகிவிட்டார்? சரி வேலைக் கையில் பிடித்தபடி என்ன செய்கிறார்? அங்கு கிருஷ்ணன் இருக்கும் தொட்டில் பக்கம் ஏதாவது எறும்பு போனாலும் போதும் உடனே பாய்ந்து வேல் முதலிலா இவர் முதலிலா என்று தெரியாதபடி கொடுந்தொழில்!. வெறும் புல் பூண்டு வண்டி பறவை என்று எந்த உருவிலும் கம்சன் ஏவிவிடும் அரக்கர்கள் வந்து தாக்கலாம் அல்லவா? இது எறும்புதானே என்று எப்படி விடுவது? எந்த அரக்கன் இந்த உருவில் கிருஷ்ணனை அண்ட முயற்சிக்கின்றானோ? சரி கிருஷ்ணன் தான் கடவுள் ஆயிற்றே? அனைவருள்ளும் இருந்து அனைத்தையும் காக்கும் கரம் அவனுடையதாய் இருக்க,....இதோ பாருங்கள் உங்களோடு வெட்டிப்பேச்சு பேச நேரம் இல்லை. இந்த இடைவெளியில் எந்த அரக்கன், ஏவல் பூதம், கிருஷ்ணனுக்கு ஊறு செய்யத் தேடுகிறதோ?
கிருஷ்ணன் மேல் பாசம் இவனைப் படுத்தும் படி! ஏன்தான் நந்தகோபன் ஓடாத தோள்வலியன் ஆகமாட்டான்?
***
No comments:
Post a Comment