Sunday, May 5, 2019

நமது குருநாதர்

"ஐயய்ய....என்னிடம் அதெல்லாம் சொல்லாதீர்கள்...அதெல்லாம் நான் ஒருகாலும் செய்ய மாட்டேன்" என்றார் நரேன் என்ற இளைஞர்.

"காலம் வரும் பொழுது நீயே என்னதான் முடியாது என்று மறுத்தாலும் உன் எலும்புகள் தாமே போதிக்கத் தொடங்கிவிடும்." என்று இளநகை தவழ பதிலளித்தார் குரு ஸ்ரீராமகிருஷ்ணர்.

காலமும் கனிந்தது. அதுவரை வாழ்வின் பண்பாடாகவும், உணர்வுகளின் வெளிப்பாடாகவும் மட்டுமே பெரும்பாலும் உள்கலந்து விரவியிருந்த ஹிந்து மதம் என்ற திட்ட வட்டமான வடிவம் ஓர் இந்திய இளைஞனின் சுய அனுபவத்தில் கனிந்து ஆங்கில மொழியில் அகில உலகும் மாணாக்கர்களாக அமர்ந்து கேட்க, சிகாகோ சபையில் வெளிப்பட்டது. ஆங்கிலம், சம்ஸ்க்ருதம் ஆகிய இரண்டிலும் நிகரற்ற புலமை பெற்ற வங்காள பாரத வாலிபன் பேசினான். நவீன நாகரிகத்தின் கல்வியால் விளைந்த பெரும்பயன் பேசியது. அறிவொன்றையே ஆதிமுதல் தன் அந்திம நாள்வரையில் தன் கவசமாகப் பூண்ட தற்காலச் சிந்தனை விழிப்புற்ற ஹிந்து பேசினான்.

ஹிந்து மதத்தின் உண்மையான பெரும் சிறப்புகள் எல்லாம் வெறுமனே புராணங்களாகவும், பொழுது போவதற்காக மாலை வேளையில் அமர்ந்து சொல்லப்படும் கதைகளாகவும் போய்விடாமல், அந்த அத்தனை சிறப்புகளையும், காலம் காலமாக வந்த ஹிந்து மதப் பெருமைகள் அனைத்தையும் ஒருங்கே தன் உன்னத வாழ்வால் மெய்ப்பித்துக் காட்டிய தக்ஷிணேஸ்வரத்து முனிபுங்கவன் பேசினான்.

"குழந்தாய்! நான் சொன்னேன் என்று எதையும் நம்பிவிடாதே! வியாபாரி ஒவ்வொரு நாணயத்தையும் சுண்டிப் பார்த்து வாங்குவதைப் போல், நான் கூறுவனவற்றை அறிவால் நன்கு ஆராய்ந்து சோதனையிட்டுப் பின் உடன்பட்டால் மட்டுமே ஏற்றுக்கொள்' என்று கூறிய வினோதமான குருநாதன் பேசினான்.

ஹிந்து மதமே தன் சிறப்புகளை உள்ளபடி எடுத்துக்காட்ட ஒரு வாழ்வு பூண்டதைப் போன்று வந்த பரமஹம்ஸரிடம் தான் கண்ட ஹிந்து மதத்தைப் பற்றிய நேரடிக் காட்சிக்குப் பின், காலகதியில் என்னென்ன தீங்குகளும், நோய்களும், சமுதாயக் கொடுமைகளும் ஹிந்து மதத்தில் புகுந்து நிலவுகின்றன என்பதை நேரடியாகக் காணவேண்டியோ என்னவோ பாரத தேசம் அனைத்தும் பரிவ்ராஜகனாக அலைந்த பாரதத் துறவி பேசினான்.

ஆங்கிலம், சம்ஸ்கிருதம் ஆகிய மொழிகளின் மூலம் பெற்ற கல்வி;
ஸ்ரீராமகிருஷ்ணரின் உதாரண வாழ்வால் பெற்ற உணர்வு ரீதியான கல்வி;
பாரத தேசத்தை இண்டு இடுக்கெல்லாம் நேரடியாகக் கண்டு தான் பெற்ற அனுபவக் கல்வி -- ஆகிய இந்த மூன்று கல்விகளும் சேர்ந்த வெளிப்பாடுதான் விவேகாநந்தர் என்கிறார் சகோதரி நிவேதிதா.

சிகாகோ சொற்பொழிவுகள் என்னும் சிறு நூலின் பெரும் விளக்க உரையாகத்தான் விரிந்து கிடக்கின்றன ஹிந்து மத சம்பிரதாயங்கள் அனைத்தின் மொத்த நூல் உலகமே. விவேகாநந்தர் தன்னியல்பாகப் பேசிச் செல்லும் ஒவ்வொரு வரிக்கும் பின்னால் நெடிய கல்வியும், ஆழ்ந்த அனுபவமும் இருப்பதை நாளுக்கு நாள் வளரும் அதிசய விளக்கமாய் வியந்து கொண்டிருக்கிறேன். நான் விவேகாநந்தரை வெறுமனே வழிபாடு செய்பவன் அல்லன். அவர் கூறுவனவற்றைக் கண்மூடித் தனமாக ஏற்றுக் கொள்ளும் தன்மையும் எனக்கு இல்லை. ஆனால் ஹிந்து மத சம்பிரதாயங்களின் மூல நூல்கள், ஹிந்து மத வரலாறு இவற்றில் ஆழ்ந்து போகப்போக எத்தனை பெரிய வேலை! எப்படி அந்த மனிதனால் செய்ய முடிந்தது! -- இந்தப் புதிருக்கு என்னிடம் விடையில்லை.

இப்படி ஒரு மனிதன் எழுவதற்கான முன் காரணங்கள் அன்றைய சமுதாயத்திலும் இருந்திருக்கவில்லை. ஸ்ரீராமகிருஷ்ணருக்கும் அவ்வாறே. அவர் தோன்றுவதற்கான கருத்தியல் காரணங்கள் எதுவும் அன்று இல்லை. அப்படி இருந்தால் சொல்லிவிடலாம் -- இந்தக் காரணங்களால் இவர்களது தோற்றம் பொருத்தம் என்று.

ஹிந்து மதமே தன் சிறப்புகளை வாழ்ந்து காட்டினால் எப்படி இருக்கும் என்பதை குரு காட்டினார்.

ஹிந்து மதமே தன்னைத் தெள்ளத் தெளிவாக உலகிற்கு எடுத்துரைத்தால் எப்படி இருக்கும் என்பதை சீடர் காட்டினார். 


ஜூலை 4, 1907ல் நான்கு தொகுதிகளாக விவேகாநந்தரின் நூல்கள் அன்று கிடைத்தவை வரையில் வந்த போது, அதற்கு முன்னுரை எழுதியவர் சகோதரி நிவேதிதா அவர்கள். அதில் அவர்கள் கூறுவது :

In the ... volumes of the works of the Swami Vivekananda which are to compose the present edition, we have what is not only a gospel to the world at large, but also to its own children, the Charter of the Hindu Faith. 

What Hinduism needed, amidst the general disintegration of the modern era, was a rock where she could lie at anchor, an authoritative utterance in which she might recognise her self. And this was given to her, in these words and writings of the Swami Vivekananda. For the first time in history, as has been said elsewhere, Hinduism itself forms here the subject of generalisation of a Hindu mind of the highest order. For ages to come the Hindu man who would verify, the Hindu mother who would teach her children, what was the faith of their ancestors will turn to the pages of these books for assurance and light. Long after the English language has disappeared from India, the gift that has here been made, through that language, to the world, will remain and bear its fruit in East and West alike.

What Hinduism had needed, was the organising and consolidating of its own idea. What the world had needed was a faith that had no fear of truth. Both these are found here. 

நல்ல வேளை விவேகாநந்தரின் முழு நூல் தொகுதிகளையும் வலையேற்றி வைத்திருக்கிறார்கள்.

***

நல்வாழ்விற்கு இன்றியமையா மூன்று அம்சங்கள்

மனிதருக்கான நல்வாழ்விற்கான முக்கியமான மூன்று அம்சங்கள் என்ன என்று பார்த்தால் அது தனி மனிதர் தம்மைப் பக்குவப்படுத்திப் பயிற்றித் தகவுடையோராக வளர்த்துக் கொள்ளுதல்; மனிதர் சமுதாயமாகப் பங்கு கொள்ளும் போது தம் தகவுடைமையால் மனித கூட்டு வாழ்க்கை மேம்பாடு அடையும் விதத்தில் ஒத்திசைந்து, ஒருங்கிணைந்து பணியாற்றும் வல்லமை; தனி மனித முயற்சியிலும், ஒருங்கிணைந்த கூட்டு வாழ்விலும் நிறைந்தவர்கள் குறைந்தவர்களுக்கு உதவி அவர்களும் தகவுடைமையும், தக்க கூட்டுவாழ்வின் ஒருங்கிணைப்பும் அடையும் விதத்தில் பகிர்ந்துதவிக் கொண்டு செல்லுதல் ஆகிய மூன்றும் ஆகும். இந்த மூன்று அம்சங்களையும் ஸ்ரீகிருஷ்ணன் மனித வாழ்க்கையைத் தனி அளவிலும், சமுதாய அளவிலும் தூய்மையும், சிறப்பும் அடையச் செய்யும் காரணிகள் என்கிறார். இந்த மூன்று அம்சங்களுக்கும் அவர் இடும் பெயர் தவம், யக்ஞம், தாநம் என்பன. தவம், யக்ஞம், தாநம் ஆகிய இந்த மூன்றையும் யாரும் செய்யாமல் விட்டுவிடக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

தனிவாழ்க்கையின் ஆன்மிகம், மக்களுடன் கூட்டு வாழ்க்கையின் ஆன்மிகம், சமுதாயத்தின் வழிவழி ஆன்மிகம் ஆகிய அனைத்து ஆன்மிக உணர்வுச் செழுமைகளையும் இந்த மூன்று வார்த்தைகளில் அடக்கிவிடலாம். தன் வாழ்க்கையை ஆன்மிக முன்னேற்றம் உடையதாய்ச் செய்வது தவம். கூட்டு வாழ்க்கையில் ஆன்மிக முன்னேற்றம் பெற முயல்வது யக்ஞம். வழிவழி சமுதாய ஆன்மிகச் செல்வத்தை வளர்த்தல் தாநம். தீ மூட்டி அமர்ந்து சிலர் அதில் ஏதோ போடுவது யக்ஞம்; தனி ஆளாய்க் கண்ணை மூடி அமர்ந்து மூச்சு இழுத்து இழுத்து விடுதல் தவம்; பிச்சை போடுவது தாநம் -- இவ்வாறுதான் என்று நினைப்பது கருத்துகளை நன்கு உணராமையேயாகும். வேதக் கதைகளில் ஒன்று சொல்கிறது -- தேவர்கள் முன்னொரு காலத்தில் மனிதர்களாக இருந்தவர்தாமாம். மனித நிலையிலிருந்து உயர்ந்து தேவ நிலைக்குச் சென்றார்களாம். தமக்குப் பின்னால் வரும் மனிதர்கள் ஒரு சமுதாயமாக உயர்நிலையை அடையவேண்டுமானால் அதற்கு வழியாக யக்ஞம் என்ற பாதையை வைத்துவிட்டுப் போனார்களாம். கதைதான். கதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் கதை என்னும் சலாகை போர்த்திய உண்மை உள்ளேயிருந்து புன்னகை பூக்கிறது. 

சமுதாய ஆன்மிக உயர்வின் வழி யக்ஞம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் யக்ஞம் என்றால் நமக்கு இதுவரை அளிக்கப்பட்ட புறச் சடங்கு, அது பொருளாக இருக்க முடியாது. அப்படி என்றால் யக்ஞம் என்பதுதான் என்ன? பெரும் தீ. அதில் ஆஹுதியாக த்ரவ்யங்களை விடுதல்; உயர்ந்த சக்திகளைக் கூவியழைத்தல்; அவற்றுக்கு வாக் என்னும் குப்பிகளில், கவிதை செறிந்த, உன்னத ப்ரார்த்தனைகளைச் சோம ரஸமாக ஊற்றி வைத்தல்; தன் கருவி கரணங்கள் அனைத்தையும் அந்த சக்திகள் குடிகொள்ளத் தக்கவாறு தான் எனும் பிடிப்பிலிருந்து விடுவித்துத் தந்து விடுதல். -- இந்தக் கருத்துகளின் மூலம் யக்ஞம் நமக்கு உணர்த்தும் அதன் உண்மை என்ன? 

தான் என்பதோடு உலகு அனைத்தையும் உடமையாக ஆக்கிக்கொள்ள முயலும் வரை மனிதனின் வாழ்க்கை அசுரமாக இருக்கிறது. தான் என்பதையும், தனது என்பதையும் முழுமை என்ற உலக பூர்ணமானப் பார்வையில் ஆஹுதி செய்யும் பொழுது உலகம் ஏற்கனவே சொந்தமாக இருப்பதை மட்டும் உணர்வதில்லை மனிதன், தான் மனிதனிலும் மிக்கு உயர்ந்து தேவ நிலையை எய்திய அமைதி அவன் மூச்சில் இழையோடுகிறது. அப்பொழுது சுயநலம் துறத்தல், அதுதான் யக்ஞமா? இல்லை. ஏனெனில் யக்ஞத்தில் பெரிதினும் பெரிது கேள் என்பது பால பாடம். பூமா என்னும் மிகப்பெரியது எதுவோ அதையே மனிதன் என்றும் விரும்ப வேண்டும் என்பது உபநிஷதம் கூறும் கருத்து. சுயநலம் துறத்தல் என்பதில் பெரிது என்பதைச் சிறிது என்பதற்காகத் துறத்தல் என்பதுதான் உள்ளுறை அர்த்தம். எனவே யக்ஞம் என்பது வேறு; சுயநலம் துறத்தல் என்பது வேறு.

மனிதனின் அறிவு கணக்குப் போடுகிறது. அடையப் போகும் நிலை, இப்பொழுது இருக்கும் நிலையை விட போதிய அளவு சுகமும் லாபமும் உடையதாக இருக்குமா? அதற்காக இதை விடத் துணியலாமா? லாப நஷ்டக் கணக்கில் உலகின் உயர்வுப் பாதைகள் கட்டப்படவில்லை என்கின்றன ஹிந்து மத சாத்திரங்கள். லாப நஷ்டக் கணக்கு பார்த்து, விடலாமா என்று யோசிக்க முடியாது. தான் என்பதையும், தனது என்பதையும் துணிந்து விட்டபின்னர்தான் புதிய கணக்குகள் திறந்துகொள்கின்றன. விட்டது அல்பம்; பெற்றது மஹத் என்று அப்பொழுதுதான் புரியத் தொடங்குகிறது. 

எனவேதான் மனிதன் தான் எனும் தூணைப் பிளந்த நரசிம்ஹமாய் வெளிவர வேண்டும் என்று யக்ஞங்கள் வழிகாட்டுகின்றன. மனிதன் மனிதனாக இருப்பதே பிரத்யேக முயற்சியால்தான் என்றபடிதான் மனித வாழ்வின் இயல்பு அமைந்திருக்கிறது. என்னும் பொழுது, மனிதர் தம்மினும் உயர்ந்த தரத்தினராய் ஆவது என்பது தொடர்ந்த சுய உணர்வில் முயற்சி என்பதாலேயே ஆகுவதொன்று. முழு விழிப்பு நிலையே முத்தி மார்க்கத்தின் முதல் படி. அந்த விழிப்பு நிலையின் சடங்காகிவிடாத சைதன்யம் மிக்க பயிற்சிதான் தவம் என்பது. 

மனிதன் பிறந்தான் என்ற காரணத்தாலேயே பெரும் கடனாளியாக இருக்கிறான். அவன் அவனாக உருப்பெற்றதற்கு உதவிய உலகக் கூறுகள் ஏராளம். அவனது சுய விழிப்பு முழுமை அடைய அடைய அவன் உணரும் கனமான கடனாக இந்தக் காரண நன்மைகள் கவனத்திற்கு வருகின்றன. இவற்றுக்கு அவன் பிரதி கொடுத்தாக வேண்டும். திருப்பியாக வேண்டிய கடன்கள் பல உண்டு. அவன் அவற்றைத் திருப்பி அளிப்பதுதான் தாநம். சமுதாயத்திலிருந்து பலவற்றைப் பெற்றான். அதற்கு அவன் திருப்பி அளிக்க வேண்டியவை தாநம். இயற்கையிலிருந்து பலதும் பெற்றான். அதற்கு அவன் திருப்பி அளிப்பது தாநம். தன் முன்னோரிடமிருந்து பலவற்றைப் பெற்றான். அவர்க்குத் திருப்பி அளிக்க வேண்டியவை தாநம். எதிர்காலத்தில் மனித குலம் இஹபர வாழ்க்கைகள் இரண்டும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்த மனிதன் எதிர்காலத்திற்கு அளிப்பது தாநம். சக மனிதன் கஷ்டப் படுவதைக் கண்டு இரக்கம் கொண்டு அளிப்பது என்பது அவன் இயல்பில் வருவது. அதை தாநம் என்று பெரும்பான்மை கருதுவது வழக்கம். 

இந்த யக்ஞம், தவம், தாநம் என்ற மூன்றும் கலவாத மனித வாழ்க்கையே இல்லை. நன்கு உணர்ந்து நேர்கொடு நேர் ஆற்றப்படவில்லை என்பதுதான் வித்யாசம். யக்ஞம், தவம், தாநம் ஆகிய இந்த மூன்றும் ஹிந்து மதத்தின் உள்ளமைப்பின் குருத்து போன்ற கருத்துகள். இவற்றைச் சரிவரப் புரிந்துகொண்டால் இவை எப்படி மனித வாழ்க்கையின் இயல்பிலேயே பொதிந்திருக்கின்றன என்பது விளங்காமல் போகாது. 

யக்ஞம் என்பதன் உள்ளர்த்தமே இல்லாமையிலிருந்து இருப்பது என்ற நிலைக்கு ஏகுதல்; இருளிலிருந்து ஒளி என்ற நிலைக்கு ஏகுதல்; இறப்பிலிருந்து இறப்பில்லாத நிலையை அடைதல் என்ற இந்த மூன்றும் தான். உபநிஷதம் எதைப் பிரார்த்தனையாக மனிதர்க்குச் சொல்லிக் கொடுக்கிறதோ அதை மனித சமுதாயம் ஒருங்கிணைந்து ஆற்றும் முறையைத் தான் யக்ஞம் என்று கற்றுத் தருகிறது. இன்று நம் உலகளாவிய முன்னேற்றம் என்பது எத்தனை ஆழ்ந்த யக்ஞமாக உருப்பெற்றிருக்கிறது என்பதை உணர்ந்தாலே நாம் யக்ஞம் என்ற பெருங்கருத்தின் தன்மைகளைப் புரிந்து கொள்ளலாம். 

நமது காலம், நமது சுக சௌகரியங்கள், நமது இஷ்டம் என்ற அனைத்தையும் சில ப்ராஜக்ட்ஸ் என்பதற்காகத் தியாகம் செய்கிறோம். அவ்வாறு தியாகம் செய்து நாம் அடையப் போகும் நன்மையோ நிலையோ இன்று ப்ரத்யக்ஷமாக நம் கண்ணுக்குப் புலப்படாதது. நம் கண்ணுக்குப் புலப்படவில்லை, இன்று நான் காணும் படியாக எதுவும் என் முன் இல்லை, எனவே நான் அதை நம்பி நான் எதிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளேன் என்று சொல்லும் எவரும் இன்றைய தொழில் நுட்பப் பணிவாழில் உலக அளவிலோ, அல்லது நம் கிராம அளவிலோ கூட எங்கும் இடம் பெறுதல் முடியாத காரியம். இன்று மனித குலமே பிரத்யக்ஷமாக இல்லாதவைகளைப் பிரமாணமாகக் கொண்டுதான் அடிப்படை வாழ்க்கையிலேயே கூட இயங்குகிறது. 

காடு கெடுத்து நாடாக்கி -- என்பது ஒரு காலத்தில் முக்கியமாக இருந்தது. காடுகளை உண்டாக்குதல் இன்று முக்கியமானதாகக் கருதப்படுகிறது. நம் வீட்டு வாசலில், நம் வீட்டுக் கொல்லையில், நம்ம ஊரில் இருக்கும் மரங்களை நம் சௌகரியத்திற்காக வெட்டிச் சாய்த்தால் இவனுகளுக்கு என்ன என்ற டீக்கடை வெட்டிப் பேச்சு மறைந்தே போய்விட்டது. காரணம் சுற்றுச் சூழல், உலக தட்ப வெப்பச் சுழற்சிகள், காடு, மழை, மேகம், காற்று என்றபடி அனைத்தும் ஒன்றை ஒன்று நம்பியுள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று ஒன்றைப் பெற்று ஒன்றைப் பிரதியாகத் தருகின்றன. அனைவரும் கூடி இணையத்தில் பேசும் அரட்டைகள் மனித குலத்தின் ஏதோ ஒரு பகுதியில் சென்று சேர்ந்து மாற்ற அலைகளை, நல்லவற்றிற்கோ, தீயவற்றிற்கோ ஏற்படுத்துகிறது. ஒரு விதத்தில் அண்டமும், பிண்டமும் இன்று நெருங்கி வந்து தமக்குள் உரையாடுவது போன்ற ஒரு தோற்றம், வெறும் தோற்றரவு இல்லை, உண்மைதான் என்பதை உலகம் மேலும் மேலும் உணர்ந்து வருகிறது. 

இந்த பிரபஞ்சம் தழுவிய, பிரதேச வேர்களைக் கொண்ட பார்வை பல விதத்தில் பேச முயற்சி செய்கின்ற மொழியே யக்ஞம் என்பது. யக்ஞம் என்பது என்ன என்று அறிந்தவன் ஒரே வீச்சில் இன்று அண்டத்தையும், பிண்டத்தையும் அறிகிறான். எங்கும் நீக்கமற நிறைந்த ருதமாக விளங்குவது இந்த யக்ஞம் என்ற காரணம் பற்றியே வேதம் இந்த யக்ஞம் என்பது விஷ்ணுவே என்று முழங்குகிறது. 'யக்ஞோ வை விஷ்ணு:' எங்கும் நீக்கமற நிறைந்த ஆதி தத்வம் விஷ்ணு. 

இந்த யக்ஞத்தில் யார் பங்கெடுத்துக்கொள்ள முடியும்? முயற்சி இல்லாதவர்கள் ஒரு நாளும் பங்கெடுக்க இயலாது. அகம்பாவம் கொண்ட அசுரர்கள் ஒரு நாளும் பங்கெடுக்க இயலாது. தவம் செய்தோரே யக்ஞத்திலும் தம்மை ஈடுபடுத்த முடியும். ஒரு மனிதன் தன் அளவில் எத்துணை தவம் மிக்கவனாய் இருக்கிறானோ அத்துணையே அவன் பங்களிப்பும் யக்ஞத்திலும் சிறக்கிறது. தவம் என்பதால் மனிதர் புழு நிலையிலிருந்து பிரபஞ்சப் புள்ளாக மாறிப் பறக்கின்றனர். தவம் என்பதால் மனிதருக்குள் பலமுகமான பார்வைகளை குடியமர்த்துதல் சாத்தியமாக ஆகிறது. பலமுகப் பார்வைகளைப் பார்ப்பவன் மனித கோணங்களை விஞ்சிப் போகிறான். பன்முகமான பார்வைகளைத் தன்னுள் பெறுவது தவத்தாலாய பயனாம். பன்முகமான செயல் முனைப்புகளில் தான் என்பதைக் கடந்து தன் பன்முகமான பார்வைத் திறன் கொண்டு பங்கு பெறுதல் யக்ஞமாம்.  
மனிதர்க்கு இந்த Individual Capacity and Social Felicity என்ற இரண்டையும் வாழ்நெறியாக்கி வைத்தல் தாநம் என்பதன் தாத்பர்யமாகும். இக்காரணம் பற்றியே ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் மனிதர் எவரும் இந்த மூன்றான யக்ஞம், தவம், தாநம் ஆகியவற்றைச் செய்யாமல் விடக்கூடாது என்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் இந்த மூன்றும் மனித குலத்தை அனைத்து விதங்களிலும் தூய்மையும், புனிதமும் கொண்டதுவாய் ஆக்குகின்றன என்பதாகும் 

*** 

Saturday, May 4, 2019

ஸ்ரீராமகிருஷ்ணரும் கவிதையும்

’அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன்’ என்ற தொடருக்குப் பின் எனக்கே பல சிந்தனைகள். நண்பர்களின் வாதங்கள். எனவே இந்தக் கட்டுரையை அந்தத் தொடருக்கான பிற்றைநிலை சிந்தனைகளின் பதிவாய் எழுத எண்ணினேன். நுண்ணியல் கருத்துகள் சார்ந்த விஷயத்தில் எப்பொழுதுமே ஒருவன் அறுதியான எழுத்தை எழுதிவிட முடியுமா தெரியவில்லை. தெரிந்துதான் எழுதுகிறோம். தீர்மானம் வந்த பின்னர்தான் எழுதவே துணிகிறோம். ஆயினும் எழுதி முடித்தபின் நன்கு தெரிந்த விஷயங்களிலேயே கதவுகள் திறக்கின்றன. முன் எழுதியவைகள் வெளியிலும் போகாமல், உள்ளேயும் போகாமல் ஆசார வாசலிலேயே நின்று தியங்குகின்றன. இந்த delicate balance ஒரு விதத்தில் நன்றாகத்தான் இருக்கிறது. எழுதுபவன்தான் முதலில் கற்கிறான் என்ற அக அடக்கத்தை எழுபவனுக்கு உணர்த்தும் குமிண் சிரிப்புதான் இந்தத் தியக்கம் எனில் இது நன்றே.

சில கேள்விகள் ஸ்ரீராமகிருஷ்ணரைப் படிக்கும் பொழுது, படித்த பின்னர், படித்த நினைவில் எழுவன. ஏதோ கிராமத்தில் வங்காளத்தில் பிறந்தார். அவருக்கு அவ்வளவாகக் கல்வியறிவு கிடையாது. பள்ளிக்கூடம், உத்யோகம், குடும்பம் என்ற கவலைகள் இன்றி ‘கடவுள்’ என்ற ஒன்றிற்கே காதலாகித் தன்னையிழந்து அதிலேயே ஒன்றிய மனத்தராய் வாழ்ந்தார்.-- இது ஏன் எனக்குச் சங்கடமாக இருக்க வேண்டும். அவர் சொன்னது ஏதோ கற்பனையாக ஏன் இருந்துவிடக்கூடாது? கடவுளாவது ஒன்றாவது? எந்த யுகத்தில் இருந்துகொண்டு எதைப்பற்றிச் சிந்தித்துக்கொண்டு இருக்கிறேன்.? வங்காளத்தைச் சேர்ந்த ஏதோ கிராமத்துப் பெரியவர் பல ஆண்டுகளுக்கு முன்னால் ஏதோ தோன்றியதைச் சொல்லிவைக்கப் பின் வந்தோர் அதைப் பற்றிச் சொல்லிச் சொல்லி, என் குழந்தைபருவம் தொட்டே எந்தையார் காரணமாக எனக்குப் படிந்து, ஏதோ தன்னைப்போல் உண்மை போன்று நான் நினைத்துக்கொண்டிருக்கிறேன் அவ்வளவுதான் --இப்படி நினைப்பது எவ்வளவு சௌகரியமாக இருக்கிறது என்று நினைக்கிறீர்கள்! சுகம் !

ஆனால் இந்தச் சுகத்திற்கும், எந்த மெய்மையை நோக்கி நாம் பயணிக்கிறோமோ, அந்த மெய்மைக்கும் ஏதாவது சம்பந்தம் இருக்குமா? சிறு வயதில் நாம் கட்ட கடைசியான சாதனை என்றும், முழுதிருப்தி தரும் அறுதியான பேறு என்றும் நினைத்தவையே ஒரு சில ஆண்டுகளில் வாழ்வின் நிலைப் பாட்டின் வளர்ச்சி மாற்றங்களில் முற்றிலும் அர்த்தம் இழந்து, கடந்த கால பட்டாம் பூச்சிகளாய் நினைவில் பரந்து மறதியில் சென்று மறையவே காண்கிறோம். என்றால் அறிவு, அறிபடுபொருள், அறிவோன் என்ற திரிபுடியின் அனைத்துச் சாத்தியங்களையும் தீர்த்துவிட்டோம் என எவ்வாறு கூற இயலும்? ஸ்ரீராமகிருஷ்ணரை முற்றிலுமாக நம்பிக்கையின் அணியில் வைத்துவிட்டு, விவேகாநந்தரை அறிவின் முனைப்பில் வைத்துப் பார்க்கும் வாய்ப்பாடு சௌகரியமாகத்தான் இருக்கிறது. ஆனால் அஃது உண்மையா? அல்லது நியாயமா? என்ற கேள்வியை மீள்வாசித்தலின் சில கணங்கள் ஏற்படுத்தாமல் இல்லை.

சரி அப்படி என்றால், அறிவுக்கும் மேற்பட்ட, அறிய இயலாத பல மெய்மைத் தளங்கள் இருக்கின்றன என்று கொள்ள வேண்டியதற்கான நியாயம் இருக்கிறதா? அவ்வாறில்லை என்பதுதான் நாம் அன்றாட வாழ்க்கையில் கூட உலகத்தில் அறிந்து, செயல்படுகிறோம் என்பதற்கான அடிப்படையே. ஆனால் அறிவோன்~அறிபடுபொருள்~அறியும்நெறி என்ற முப்புரிக்குள் அறியப் படவேண்டிய அனைத்தின் ஆழ அகலமும், அறிபவனின் இயல்பு முழ்தும், அறிவு நெறியின் சாத்தியப் பாடுகள் முழுமையும் அடங்கிவிடுகிறது என்று ஒருவிதத்தில் நாம் நம்பினாலும், ஒரு குறிப்பிட்ட கால தேச வர்த்தமானம் என்ற சூழ்வரம்பிட்ட ஒரு குறிப்பிட்ட நிலையில் பயின்றே நம் வாழ்வு என்னும் நத்தை ஊறும்போது முழுமையான பார்வை என்பது நமக்குப் பெரும்பாலும் மூடித்தானே கிடக்கிறது? நாம் பகுதிக்குள் ஒரு புள்ளியில் சமைந்து எடுக்கும் தீர்மானம், முழுமையின் பார்வையில் நமக்கே என்ன பொருள்படும்? அந்த முழுமையின் பார்வையிலேயே தன் கூடாரத்தை அடித்துக்கொண்டு ஒரு ஜீவன் தன் பகுதியின் பாற்பட்ட புள்ளிவிட்டுப் புள்ளிக்கு ஊரும் வாழ்வின் கணங்களைக் கணக்கிடுமானால் அஃது நம் குட்டைக்குறு பார்வையிலிருந்து எங்ஙனம் வேறுபடும்? மாறுபடும் என்பது இல்லையாயினும் கூட.?

ஆனால் இஃது இவ்வாறுதானோ? அவருடைய காலத்திலேயே, அதாவது 1885ல் ஸ்ரீராமகிருஷ்ணர் சமாதி அடைந்தார் என்றால், 1879லேயே அவரைப்பற்றி, பிரம்மஸமாஜத்து ப்ரதாப் சந்திர மஜூம்தார் எழுதிய கட்டுரை என்னைக் கவலை கொள்ள வைக்கிறது. என் சுகமான சமாதானக் கோட்டையை வெறும் பேப்பர் கோட்டையாக ஆக்கிவிடுகிறது. காரணம் மஜூம்தார் ஸ்ரீராமகிருஷ்ணரை உயர்வாகவோ, ஒரு பொருட்டாகவோ கருதும் எந்த முன்னெண்ணமும் இல்லாதவர். அதுவுமின்றி ப்ரம்மஸமாஜம் ஹிந்துமதத்தின் ஏதோ ஒரு பக்தி பைத்தியமான ஒரு கிராமத்துக் கிழவரை ஒரு பொருட்டாகவே கணக்கில் எடுக்கவேண்டிய அவசியமில்லை. அதுவும் ஹிந்துமதம் பற்றிய விமரிசனமே தன் தோற்றத்திற்கான பிரதான ஊக்கம் என்று எழுந்த ஓர் இயக்கம் அது. அதைச் சேர்ந்தவர் எவ்வளவு கறாராக இப்படிப்பட்ட ஒருவரை எந்தக் காரணத்திலாவது தள்ளுபடி பண்ணவே முனைப்பு கொண்டிருப்பாரே அன்றி ஒரு நாளும் பெரும் மதிப்பான வார்த்தைகள் எழுதும் வாய்ப்பு உள்ள மனநிலையைக் கொண்டிருக்க மாட்டார். ஆனால் 1879ல் அவர் எழுதிய கட்டுரை என்னைப் பாடாய்ப் படுத்துகிறது. அதற்கு அந்த மஜூம்தாரே கருதாத அளவிற்கான சான்றாம் தன்மை காலத்தின் அமைப்பினால் வாய்ந்து எனக்குப் பல சௌகரியங்களைக் கெடுக்கின்றது. இதே மஜூம்தார் பின்னாளில் விவேகாநந்தர் அமெரிக்க சபையில் பெரும் வெற்றியடைந்த பின்னர் மிகக் கடுமையான அவதூறுகளை விவேகாநந்தர் மீது பரப்பினவரேதான். பின்னால் 1900க்குப் பிறகுதான் மடம், பதிப்பகம் என்று நிறுவனமயமாக்கம் என்பது ஸ்ரீராமகிருஷ்ணரைப் பொறுத்தவரையில் ஏற்படப் போகிறது. இத்தகைய மஜூம்தார் ஸ்ரீராமகிருஷ்ணரைப்பற்றி எழுதியவை எனக்கு உரைக்கும் செய்திகள் பல. கிட்டத்தட்ட antogonistic mind தரும் சாட்சியாக மஜூம்தாரின் எழுத்து நிற்கிறது. விவேகாநந்தர் உரைத்தவற்றைக்கூட அவர்பால் மனம் தோய்ந்த ஒருவர் எழுதுகின்ற ஆர்வ எழுத்து என்று கருதிவிடுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. ஆனால் மஜூம்தாரின் எழுத்து எந்த விதத்திலும் நாம் தள்ளிவிடுவதற்கான உளவியல், சூழ்நிலைக் காரணங்கள் அற்ற எழுத்து.

அவர் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றி எழுதுங்கால் கூறுவது --

If all his utterances could be recorded they would form a volume of strange and wonderful wisdom. If all his observations on men and things could be reproduced, people might think that the days of prophecy, of primeval, unlearned wisdom had returned. But it is most difficult to render his sayings in English. A living evidence of the depth and sweetness of Hindu religion is this good and holy man. He has wholly controlled his flesh. It is full of soul, full of the reality of religion, full of joy, full of blessed purity. As a Siddha Hindu ascetic he is a witness of the falsehood and emptiness of the world. His witness appeals to the profoundest heart of every Hindu. He has no other thought, no other occupation, no other relation, no other friend in his humble life than his God. That God is more than sufficient for him. His spotless holiness, his deep unspeakable blessedness, his unstudied, endless wisdom, his childlike peacefulness and affection towards all men, his consuming, all-absorbing love for God are his only reward. And may he long continue to enjoy that reward! Our own ideal of religious life is different, but so long as he is spared to us, gladly shall we sit at his feet to learn from him the sublime precepts of purity, unworldliness, spirituality and inebriation in the love of God.
(Protap Chunder Mazoomdar - Paramhamsa Srimat Ramakrishna: Theistic Quarterly Review, October, 1879.)

ஆனால் ஸ்ரீராமகிருஷ்ணர் தாம் அடைந்ததாகச் சொன்ன அனுபவங்களின் மெய்மை என்ன? அவை உண்மை அனுபவங்கள் என்றால் எதை வைத்து உண்மை? அல்லது கற்பனை என்றால் வெறும் கற்பனைகளை நம்பி, சொல்லி வாழ்ந்த ஒருவர் மஜூம்தார் மாதிரியான ஆட்களிடம் இத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியிருக்க இயலுமா? இல்லை ஏதோ ஒரு விதத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் சொன்னது உண்மையாக இருக்கக்கூடும் என்றால் அது எந்த விதத்தில்?

உழக்குல கிழக்கு மேற்கு என்ன? தாங்களும் நம்பி ஏமாறினார்கள்; மற்றவர்களைத் தாம் நம்பியதைக் கூறி தாம் அறிந்தோ அறியாமலோ ஏமாற்றினார்கள் -- இந்த நிலைப்பாடு மிகவும் சௌகரியமானது. இல்லையேல் அதெல்லாம் நம்மால் அறிந்துகொள்ள இயலாத ஒரு மெய்மைத் தளம். நாம் அதற்கு எப்பொழுது நம்மை ஏற்புடையவர்களாக ஆக்கிக் கொள்கிறோமோ அப்பொழுதுதான் நமக்கு அது புரியும். அதுவரை ஆதிகாலத்திலிருந்து பல ஆன்மிகச் சான்றோர்களும், இறையியல் பெரியோரும் கூறியதை நம்புவதே வழி. -- இந்த நிலைப்பாடு அல்லது முன்னர் கூறிய நிலைப்பாடு இரண்டில் ஒன்று என்றபடிதான் அறிவுலகத்திற்கு இந்த பிரசசனை அறிமுகம் ஆகியுள்ளது.

இந்தப் புதைகுழியான இரட்டையைத் தவிர வேறு ஒரு வழியும் உண்டு என்பதை எனக்கு வேதாந்தம்தான் காட்டுகிறது. வேதாந்த தீபத்தில் அறிவு ரீதியான தேட்டம் கூர்மை பெறுவது போலவே, ஆன்மிக ரீதியான நாட்டமும் அறிவின் தெளிவைப் பெறுகிறது. ’பனுவல்’ என்பதை இற்றைய இலக்கியத் திறனாய்வுக் கொள்கைகள் ஆழ்ந்து ஆய்வதைக் காணும் போது, நமது அறிவு ஈட்டமான முன்னேற்றம் நேர்கோடான பாதை உடையதா? அன்றேல் மண்டலித்தல் (வட்டச் சுழற்சி) என்னும் வகைப்பட்டதா? என்ற சந்தேகம் எழுகிறது.

இத்தகைய அறிவின் உச்சமும், ஆன்மிக வீச்சும் தம்முள் ஒத்திசையக் கண்ட பெருநெறி எதிர்காலத்தில்தான் ஏற்பட முடியும் என்று நினைப்பு ஒரு பக்கம் எழும் போதே மறுபக்கம் அத்தகைய பெரும் நிகழ்வு ஏற்கனவே மானுட ஆய்வுக்கூடத்தின் மாதிரியாக நம்மாழ்வார் என்ற மகத்தான திருமாலவன் கவியால் பல நூற்றாண்டுகள் முன்னரே இயன்றிருக்கிறது என்பதும், வேதாந்தம், பக்தி, அறிவின் அணுகுமுறையின் தத்வார்த்தங்கள் அனைத்தும் தம்முள் ஒரு பெரும் சமன்பாட்டைச் சாதித்த பெட்டகமாகத்தான் ஸ்ரீராமானுஜரின் நூல்களும், திருவாய்மொழிக்குத் தொடர்ந்து பல தலைமுறைகள் கண்ட உரைக் களஞ்சியமாக பகவத் விஷயம் என்ற பெருந்தனமும் திகழ்கின்றன என்ற மறுக்க இயலாத உண்மையும் கருத்தைக் கட்டிக்கொண்டு நிற்கின்றன.

எனவே இப்படியா அப்படியா என்று தீர்ந்துவிடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்துகொண்டு நோக்குங்கால் ஸ்ரீராமகிருஷ்ணர் எனக்கு ஆன்மிகத்தின் பெரும் கவிதையாகத் தோன்றுகிறார். கற்பனை என்றவிதத்தில் அன்று. கற்பனை கடந்த, காலம் கடந்த, கால தேச வர்த்தமானத்தின் ஊடேயும், கடந்தும் நின்று பொலியும் முழுமையை உண்மை என்று சான்று பகரும் பெரும் கவிதையாக எனக்கு அர்த்தம் ஆகின்றவர் ஸ்ரீராமகிருஷ்ணர். அளவையியலால் அகப்படாத உண்மைகளை எப்படியோ நமக்கு உணர்த்தும் வல்லமை கொண்டது கவிதை என்னும் பொருளில் நான் பார்க்கிறேன். அதுவும் கவிதையின் ஆகமுழுமையான சாத்யவடிவம் மந்திரம் என்னும் நோக்கில் எனது தாத்பர்யம் இருக்கிறது. இந்த இடத்தில் ஸ்ரீஅரவிந்தரின் கவிதையின் மந்திரம் என்னும் உச்சபட்ச வடிவம் என்னும் கருத்து என் மனத்தில் இருக்கிறது.

ஸ்ரீராமகிருஷ்ணரும் அளவை இயலால் கடவுளைப் பற்றிப் புரியவைத்தவர் அன்று. தம் உள்ளார்ந்த நிலையின் உண்மையால். இப்படிச் சொன்னால் நான் அவர் எப்படி உணர்த்தினார் என்பதைப் புரிந்துகொண்டு விட்டேன் என்பதன்று. அவர் எப்படி உணர்த்தினார் என்பது மதவாதிகளே கூட அறிந்திராத ஒன்று. அவர் மதவாதிகள் கற்கும் பல சாத்திரங்களின் உட்கருத்துகளையும் பேசினார். ஆனால் அவர் அவற்றைக் கையாளும் போது நிஜத்தின் ஒளி அந்தக் கணத்திலும், அவரிடமிருந்து பொழிந்த வாக்கிலும் இருந்தது. அவரிடம் மொழி அதீதத்தைப் புலப்படுத்தும் ஒளியாய் ஆனது. அதுவே கவிதையின் உச்சபட்ச சாத்யதை. மொழியில் அவருக்குப் பெரும் கற்றறி புலமை என்பது இல்லை. அவர் தமக்கு இயல்பாகத் தம் வாழ்க்கையின் சூழலால் நேர்ந்த கிராமத்தார் பேச்சுநடையையே கையாண்டார். ஆனாலும் அது மொழித்திறன் முற்றிய புலவர்களின், மத்துறை கற்ற வல்லுநர்களின், நவீன கல்வியின் நயம்தெரி அறிஞர்களின் புதிராக, அவர்களை நிசப்தப்படுத்தும் ஒப்பனையற்ற அதீத உண்மைகளின் பொழிவாக நடந்தவண்ணம் இருந்தது. எனவேதான் அவருடைய முழு ஆளுமையே, வாழ்க்கையே எனக்கு கவிதையின் ஆத்மாவாக, கவிதையின் ஆக உயர்ந்த, பொலிந்த நிசத்தின் வடிவாம் மந்திரம் என்பதின் வடிவாகத் தோன்றுகிறது.

***

ஜீவனுடன் ஒரு வழக்கு - தனிச்செய்யுள்

பராசர பட்டரின் ஈடுபாடு அழகியமணவாளனிடத்தில் என்பது மிகவும் சிறப்பானது. அவருடைய மிஸ்டிக் தளத்தில் அரங்கனோடு பேசுவது, நகையாடுவது போன்ற அளவிற்கு மிக உன்னதமான அருளாளர் அவர். ஸ்ரீரங்கநாதருக்கு நடக்கும் திருமஞ்சனம் என்பதைக் காண்பது கண்ணின் பயன் எனலாம். அவ்வாறு ஒரு சமயத்தில் நடந்த திருமஞ்சனத்தின் போது அங்கு இருந்த பராசர பட்டர் தம்முடைய பரவச நிலையில் அரங்கனோடு நடத்திய சம்பாஷணை இதுவாகும். அதைப் பின் வந்தோரும் துய்க்கும்வகையில் ஒரு தனிச்செய்யுளாக ஆக்கித் தந்துள்ளார். இந்தச் செய்யுளுக்கு உள் பாங்கு என்பது ஜீவனுக்கும் பரமாத்மாவிற்கும் நடக்கும் கோர்ட் கேஸ் போன்று இந்தச் செய்யுளின் தாத்பர்யத்தை அமைத்துள்ளார். இதை நான் புரிந்துகொள்வதற்குத் துணையாக இருந்தது ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் அவர்களின் விளக்கங்கள். நான் அறிந்த பொருளைக் கொஞ்சம் இக்கால நடையில் நண்பர்கள் அறிந்து மகிழ இதைத் தருகிறேன். பராசர பட்டரின் சுலோகத்தைத் தாத்பர்யம் உணர்ந்து இரசிப்பதற்கு பயன்படும் என்ற நம்பிக்கையில்.

*
என்னதான் வழக்கு வியாஜ்யம்னு வந்தாலும் நம்ம சைடுல ஒருத்தர் ஜயிச்சார் என்றால் நமக்கு சந்தோஸம்தானே..!

நம்பெருமாளின் திருமஞ்சனம் நடக்கிறது. இடுப்பு வஸ்திரத்தோடு கழுத்தில் துளஸி மாலை அணிந்து அரங்கன் திருமஞ்சனமாடத் தயாராக உள்ளான். அவ்வழியே வந்த ஸ்ரீபராசர பட்டர் அந்தக் காட்சியைப் பார்த்ததும் பொக்கெனச் சிரித்துவிட்டார். அரங்கனுக்கோ பட்டர் சிரித்தால் தாங்காது. 'என்ன சிரிப்பு?'

பட்டர், 'இல்லையப்பா! உன் சொத்து கை நழுவும்போது நீ படுகின்ற அவஸ்தைபோல் இருக்கிறது நீ நிற்கும் கோலம்!’

'ஓய்! புதிர் போடாமல் விளக்கமாகச் சொல்லும்.'

'இல்லை ஐயனே! பிரபஞ்சமாகிய நீதிமன்றம். நீர்தாம் வாதி. பிரதிவாதி ஜீவன். உங்கள் இருவருக்குள் தீரா வழக்கு ஒன்று. அந்தக் காட்சியைச் சொல்கிறேன்:
*

வாதி(அரங்கன்) --- ஜீவனாகிய நீர் என்னைச் சேர்ந்தவன்.

(பிரதிவாதி எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசுபவன். ஏதி என்றால் ப்ரேதி என்பவன். பரமனுக்கு படுகுஷி. இப்பொழுது ஜீவன் தாம் விரித்த வலையில் விழுந்தே தீருவான். தாம் 'நீ என்னைச் சேர்ந்தவன்' என்றதும் பதிலுக்கு அந்தப் பைத்தியம், 'நோ நோ அதெல்லாம் கிடையாது. நீர்தாம் என்னைச் சேர்ந்தவர்' என்று வாதம் பண்ணத் தொடங்கும். உடனே தாம் 'ததாஸ்து' 'உண்மை முக்காலும் உண்மை. நான் உம்மைச் சேர்ந்தவந்தான். இந்தாரும் எழுதி நானும் கையெழுத்திடுகிறேன். நீரும் கையெழுத்திடும்.' என்று சொல்லிவிட வேண்டியது - என்பது பரமனின் திட்டம். ஆனால் ஜீவன் எவ்வளவு பெரிய எத்தன்? நம்மாளு இல்ல. கொஞ்சமாவது நிதானம் தவறுவானா? பதில் சொல்கிறான் பாருங்கள்....!)

பிரதிவாதி (ஜீவன்) -- நான் உம்மைச் சேர்ந்தவன் அன்று. நீர் என்னைச் சேர்ந்தவரும் அன்று. நான் என்னைச் சேர்ந்தவன்.

(பரமன் --- ஐயோ கெடுத்தானே பாவி!)

வாதி (அரங்கன்) -- நீர் சொல்வதற்கு என்ன அத்தாட்சி?

பிரதிவாதி(ஜீவன்) -- நீர் சொல்வதற்கு என்ன அத்தாட்சி?

வாதி (அரங்கன்) --- வேதமே நான் சொல்வதற்கு அத்தாட்சி.

பிரதிவாதி(ஜீவன்) --- ஹஹ்ஹா! எழுத்தில் வராத பிரமாணம். வாய் வார்த்தை. காதால் கேட்டது. என்ன ஓய்? நீதிமன்ற நெறிகள் தெரியாதா? வாய்மொழிப் பிரமாணத்தை வைத்துக்கொண்டு வழக்குத் தொடுக்க வந்தீரே! ஹஹ

வாதி(அரங்கன்) -- ஹாங்! வாய்மொழிப் பிரமாணமா? அப்படியென்றால் நீர் உம்மைச் சேர்ந்தவர் என்று நீர் கூறிக்கொள்வதற்கும் என்ன எழுத்துப் பிரமாணம் இருக்கிறது காட்ட? எங்கே கொண்டு வாரும்.

பிரதிவாதி(ஜீவன்) -- ஐயோ ஐயோ. பாவங்காணும் நீர். ஓய் அனுபவ பாத்யதை என்று கேள்விப் பட்டிருக்கீரா? அதாவது ஒருவன் எந்த எழுத்து மூல ஆவணம் இல்லாது போயினும், நெடுநாள் ஒரு சொத்தை அனுபவிப்பானே ஆனால், தொடர்ந்து இடைவிடாமல், அப்பொழுது அந்த அனுபவ பிரமாணமே போதிய சான்று ஆகும் தன் கட்சிக்கு ஆதாரம் காட்ட. அநாதி காலம் எனக்கு அனுபவமே நான் எனக்கு உரியவன் என்றுதான் இருக்கிறது. அது எந்தக் கோர்ட்டிலும் செல்லுபடியாகுங்காணும்.

வாதி (அரங்கன்) -- (கொஞ்சம் தெம்புடன்) சரி அய்யா! அனுபவம் பற்றி நானும் அறிவேன். ஆனால் அனுபவ பாத்யதை செல்லுபடியாக வேண்டும் என்றால் அந்த அனுபவத்திற்கு யாரும் அதன் காலத்தில் ஆட்சேபணை தெரிவித்திருக்கக் கூடாது தெரியுமா? முக்கியமாக அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கக் கூடாது.

பிரதிவாதி(ஜீவன்) --- (கலக்கத்துடன்) ஆட்சேபணையா? யார்? எங்கு? நீரா? எந்த இடத்தில்?

வாதி (அரங்கன்) -- கீதா சாஸ்திரத்தில். பாண்டவ கௌரவ உபயோர் ஸேனையோர் மத்யே. இரு படைகளுக்கு நடுவில். உம்ம இனத்து ஆளு ஒத்தனையே முன்னாடி வைத்துக்கொண்டு (முழிக்கற முழியைப் பாரு)

பிரதிவாதி(ஜீவன்) -- ஆஹா! அதுவா? என்ன ஓய்? ஒரு நிமிஷம் கலக்கிப் புட்டீரு? ஏனய்யா, யுத்த களத்தில் ஆயுத இரைச்சலில், போர்க்கூச்சலில் சொல்லியதெல்லாம் சான்றுக்கு உதவாது என்று உமக்குத் தெரியாது. உம்ம பக்ஷத்துல சேர்ந்த உமக்கு அடியவன் ஒருவனை வைத்துக்கொண்டுதானே நீர் அதையும் சொன்னது? யார் அங்க வேற சாக்ஷி?

வாதி(அரங்கன்) -- கீதா சாஸ்திரம் தெரியாத உலகம் இல்லை. ஆளும் இல்லை. அனைவரும் அறிந்ததுதான்.

(ஜீவன் புன்னகைக்கிறான். அரங்கன் சிந்திக்கிறான். ஏதோ இந்தப் பயல் உள்ளே வைத்துக்கொண்டு இருக்கிறான். யார் சாக்ஷி? என்று கேட்கிறான் துணிச்சலாக. என்னது இது? ஜீவன் உள்ளுக்குள் குஷியாக நினைக்கிறான் -- பாவம் சாக்ஷிக்கு எங்கே போவார் இவர்? இவரைத் தவிர எல்லா சேதன வர்க்கங்களும் ஜீவர்கள் தாமே? ஏனெனில் இவரோ பரம்பொருள், பரமாத்மன், பரம சேதனன் என்ற தன்னைத் தவிர வேறும் யாரும் உறுப்பினர் ஆக முடியாத வகுப்பைச் சேர்ந்தவர். மற்ற அனைவரும் ஜீவனாகிய எனக்கே 'நம்ம இனத்தைச் சேர்ந்தவன்' என்ற அபிமானத்தாலே பரிந்து பேசுவர்களே அன்றி பரமனுக்குப் பரிந்து பேசுவோர் மருந்துக்கும் தேரார்கள். இவர் எங்கே போவார் சாக்ஷிக்கு? பாவம். வழக்கு நம்ம பகக்ம் ஜெயந்தேன்) 

{என்ன நடந்தது? வழக்கின் திருப்பம் என்ன? யார் ஜெயித்தார்கள்?)



வாதி(அரங்கன்) -- சாக்ஷி தானே? ஏன் இல்லை? ஸுதீக்களான ஞானிகள் இருக்கிறார்கள். அவர்கள் கூறுவார்களே யார் யாருக்குச் சொந்தம் என்று.

பிரதிவாதி(ஜீவன்) --- யார்? ஞானிகளா? ஆமாம். அவர்கள் உங்களுக்கு எதிராக என்றேனும் சாக்ஷி சொல்வார்களா? நீங்கள் ஒரு கட்சியில் இருந்தால் உங்களுக்கு எதிர் கக்ஷியில் இருப்பார்களா, மறந்துபோய் கூட?

வாதி(அரங்கன்) -- என்னப்பா? அப்படி இருந்தால் அவர்கள் ஞானிகளே இல்லையே.

பிரதிவாதி (ஜீவன்) --- ஆங். அப்படி வாரும் வழிக்கு. இப்பொழுது தெரிந்ததா? அவர்களின் சாக்ஷி செல்லாது. யாருக்கு எவர் மேல் எந்தத் தனிப்பட்ட சார்பும் இல்லையோ பொதுவானவர்களோ அவர்களின் சாக்ஷிதான் காணும் செல்லுபடியாகும். உம்ம பக்ஷபாதிகளான ஞானிகளை நீர் சாக்ஷியாக நிறுத்த முடியாது. அதுவுமில்லாமல் நீரே என்ன கூறியிருக்கிறீர்.? 'ஞானிகளே என் ஆத்மா ஆவர்' என்று கூறியதுண்டா? பின்? நீரே உமக்கு சாக்ஷி சொல்லிக்க முடியுமா?

வாதி (அரங்கன்) -- (அந்தோ நம்முடைய நெஞ்சிற்கு அணிகலனான சொத்து இந்த ஜீவன் ஆயிற்றே! என்ன செய்தும் இந்த சொத்தை மீட்க முடியாது போல இருக்கிறதே! வேதம் என்றால் வாய்மொழி என்று தள்ளுகிறான். அனுபவ பாத்யதை என்கிறான். ஆக்ஷேபம் என்றால் கூச்சல் என்கிறான். சாக்ஷி கேட்கிறான். சொன்னால் பக்ஷபாதி என்கிறான். இனி என்ன செய்வது? கைகழுவவும் முடியாதே! )

சரி. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இவன் நீதி நியாயம் சட்டம் என்று பேசுவதை அந்தச் சட்டம் வைத்துத்தான் வெல்ல வேண்டும். சட்ட ரீதியாக ஒருவன் தன் சொத்து கைநழுவிப் போனால், ஒன்றும் பலிக்காது என்று தெரிந்தால், பின்னர் கடைசி பட்சமாக ஒரு வழியைக் கையாளுவர். (அந்தக் காலத்தில்) அது என்னவென்றால், இடுப்பு வஸ்திரம் மானத்தை மட்டும் மறைக்க உடுத்தியபடி, கழுத்தில் துளசி மாலை அணிந்தபடி, தலையில் தண்ணீரைக் கொட்டிக்கொண்டு இருகையும் உயரத் தூக்கிய படி 'அகோர சத்தியம்' என்று ஒன்று செய்வர்கள். அதன்படி இந்தச் சொத்து என்னுடையதே. இது சத்தியம் சத்தியம் புனர் சத்தியம். அப்படிப் பொய் சத்தியம் செய்தேனாகில் இந்தக் கதி அடைவேனாக. என்று, அப்படிச் செய்வது அக்காலத்தில் கடும் சபதமாக நினைக்கப்பட்டது. அதில் ஒருவன் பொய் சொன்னானேயானால் அவன் அவனது குடும்பம், அவன் வாரிசு அனைத்தும் ஜன சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு இம்மையும் இல்லை, மறுமையும் இல்லை என்று நிர்கதியாகி விடுவர். இம்மை மறுமை என்ற நம்பிக்கைகள் ஆண்ட காலமாகையால் அத்தகைய சத்தியத்தை அந்தக் காலத்தில் நீதிமன்றங்களும் கடைசி பட்சமான உண்மைக்கான உரைகல்லாய் ஏற்றுக்கொண்டனர்.

அப்படி இருக்கிறது ஐயனே! நீர் திருமஞ்சனத்திற்கு நிற்கும் கோலம். இடுப்பு வஸ்திரத்துடன், கழுத்தில் துளஸி மாலை அணிந்து, திருமுடியில் அபிஷேகமாய்த் தேவரீர் நிற்கும் அவசரம் பார்த்தால் ஜீவனுக்கும் உமக்குமான கேஸில் வழக்குத் தோற்று, வேறு ஒன்றும் செய்யமுடியாத நிர்கதியான நிலையில், அகோர சத்தியம் செய்தாவது நம் அரும் சொத்தான இந்த ஜீவனைத் தக்க வைத்துக்கொள்வோம் என்று நீர் படபடப்புடன் தயாராக இருப்பது போல் உள்ளது, நீர் நிற்கும் கோலம். அதான் சிரிப்பு வந்தது.

முக்தகம் (தனிச்செய்யுள்)

த்வம் மே --- நீ என்னுடையவன்

அஹம் மே ---- நான் என்னுடையவன்

குதஸ்தத் ?--- அது எப்படி?

தத் அபி குத:? --- அதுவும் கூட எப்படி?

இதம் வேத மூல ப்ரமாணாத் --- இது வேதமாகிய மூலச் சான்றின்படி

ஏதச் ச அநாதி சித்தாத் அநுபவ விபவாத் ---- இது அநாதி காலமாக இருப்பதாலும், அனுபவ பாத்யதையினாலும்

ஸோபி ஸாக்ரோச: ஏவ -- அதுவும் ஆக்ஷேபணையுடன் கூடியிருப்பதன்றோ?

க்வாக்ரோச: கஸ்ய? -- யார் ஆக்ஷேபம் செய்தார்கள் எங்கே?

கீதாதிஷு மம விதித: -- கீதாதி சாஸ்திரங்களில், என்னால் ஆக்ஷேபிக்கப்பட்டிருக்கிறது

கோத்ர ஸாக்ஷீ:? -- அங்கு யார் சாக்ஷி?

ஸுதீஸ்யாத் --- ஞானிகளாக இருப்போர்

ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸ -- அய்யோ பாவம்! உமது பக்ஷபாதிகள் அன்றோ அவர்கள்?

இதி ந்ருகலஹே --- இந்த ஜீவனோடு (நரனோடு) ஏற்பட்ட விவகாரத்தில்

த்வம் ம்ருக்யமத்யஸ்தவத் -- துளஸி மாலை அணிந்து முழுக்கிட்டுச் சத்தியம் செய்பவன் போல் நிற்பை நீ !

ஸ்லோகம் –

த்வம் மே அஹம் மே குதஸ்தத் ததபி குத இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சாநாதி ஸித்தாத் அநுபவ விபவாத் ஸோபி ஸாக்ரோச ஏவ |
க்வாக்ரோச: கஸ்ய கீதாதிஷு மம விதித: கோத்ர ஸாக்ஷீ ஸூதீஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸ இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்தவத் த்வம்||
(பராசர பட்டர்)

*** 

ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையில் ஒரு மூலையில்...


எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது என்ன என்று அப்புறம் சொல்கிறேன். ஆகஸ்டு மாதம் 1871 கி பி. நிச்சயமாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது. ஜூலை 1871 கி பி., ஸ்ரீராமகிருஷ்ணரின் போஷகராகவும், மெய்க்காப்பாளராகவும் இருந்த ராணி ராஸமணியின் மருமகனான மதுர் காலமாகிவிட்டார். ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் திருப்பங்கள் தொடங்கின. மதுர் எங்கு போயிருப்பார் என்ற கேள்வியைச் சிலர் எழுப்பினர். மறுபடியும் ஏதாவது இளவ்ரசராகப் பிறந்திருப்பார் என்று தாகுர் முடித்துவிட்டார் அந்தப் பேச்சை. அன்னை சாரதாமணி தேவியார் இன்னும் அண்ணலிடம் வந்து சேரவில்லை. பைத்தியமாகிவிட்டார் என்கிறார்களே, அப்படியெல்லாம் இருக்குமா, என்று உள்ளம் கவன்ற வண்ணம் எப்படியாவது தக்ஷிணேஸ்வரம் வந்துவிட நினைத்த அன்னையார் மார்ச் 1872தான் வந்து சேரப் போகிறார்.

ஆனால் ஆகஸ்ட் 1871 சென்னையில் ஒரு விஷயம் நடந்திருந்திருக்கிறது. திருவாய்மொழிக்கான ஐந்து வியாக்கியானங்கள், மூன்று அரும்பதங்கள், ஈட்டில் உதாஹரிக்கப்பட்ட மற்ற மூவாயிரங்களின் பாசுரங்களுக்கான வியாக்கியானங்கள், ஒவ்வொரு தசகச் சுருக்கமான த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, அதன் வியாக்கியானம், திருவாய்மொழி நூற்றந்தாதி, அதன் வியாக்கியானம் என்று மொத்தம் 15 நூல்கள் அடங்கிய ஸ்ரீபகவத்விஷயம் பெரிய ஸெட் புத்தகம், முதல் பத்துக்கான நூல் ஆகஸ்டு மாதம் 1871 ஆம் வருடம் சென்னையில் வெளிவந்தது. 1876 ஆம் வருடம் 10 ஆம் பத்து வெளிவந்து நிறைவடைந்தது. மணிப்ரவாள மொழியில் தெலுங்கு லிபியில் அச்சு. சென்னைப் பட்டணம் சூளை வேப்பேரி ரொட்டிக் கிடங்கு திருவேங்கடமுதலி தெருவில் ஸ்தாபிக்கப்பட்ட முத்ராக்ஷர சாலையில் பதிப்பிக்கப்பட்டது. 4800 சொச்சம் பக்க பத்து வால்யூம்களில் மொத்தம் அச்சுப் பிழை இரண்டு இலக்கத்தை எட்டவில்லை. அதாவது அதிகபட்சம் 7 அல்லது 8. அவ்வளவுதான்.

1875
ஆம் ஆண்டுதான் முதன்முதலாக ஸ்ரீ தாகுர் ஸ்ரீகேசவசந்திர ஸென் அவர்களைப் போய்ப் பார்க்கிறார். இன்னும் நரேந்திரர் என்னும் நொரேன் வந்து சேரவில்லை. ஹைஸ்கூல் மாணவன் தான்.

மார்ச் 1880 கி பி ஒரு விஷயம் நடந்திருக்கிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி, ஈடு என்னும் மூன்று வியாக்கியானங்களும், ஜீயர் அரும்பதமும், திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும், திருவாய்மொழி நூற்றந்தாதியும் அடங்கிய மூன்றாம் பத்து, ஸ்ரீஆழ்வார்திருநகரி வடபத்ரசாயி அரையர் ஸவாமி அவர்களாலும், ஸ்ரீ கா ராமஸ்வாமி நாயுடு அவர்களாலும் மார்ச் 1880 சென்னை ஆதிகலாநிதி அச்சுக் கூடத்தில் அச்சடிக்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

1880
வருஷம்தான் வங்காளத்தில் நரேன் என்னும் கல்லூரி இளைஞன் ஒவ்வொரு மகானையும் 'நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?' என்று கேட்டு அலைந்து ஸ்ரீதாகுரிடம் வந்து சேருகிறான், அதே கேள்வியைக் கேட்க.

1892
ஆம் ஆண்டு அதே சென்னையில்தான் திருவல்லிக்கேணி ஸ்ரீஅழகியசிங்கமய்யங்கார் முன்னெடுத்து நரேந்திரரை விவேகாநந்தராக சிகாகோவுக்கு அனுப்புகிறார்கள்.
ஸ்ரீஅழகியசிங்கமய்யங்காரைத்தான் 1906ல் சகோதரி நிவேதிதா பாரதியாருக்கு எடுத்துச்சொல்லிப் புரியவைக்கிறார். 'எங்களுக்கு அரசியல், சமுதாய பிரச்சனைகளில் வழிகாட்ட சென்னையில் யாரும் இல்லையே!' என்று அங்கலாய்த்த பாரதியாருக்கு 'ஏன் இல்லை? எந்த பிரச்சனை என்றாலும் அளசிங்கரைக் கேட்டுத் தெளியலாமே' என்று குருமணி சொன்னதும்தான் உள்ளூர் பெருமை புரிந்தது பாரதியாருக்கு.
அதான்.. என்னோட கெட்ட பழக்கம்னு சொன்னேனே.. எதையாவது ஒன்றோட ஒன்று தொடர்பு உள்ளவற்றை யோசித்துக்கொண்டிருப்பேன். அதுதான். நமக்கு இருக்கவே இருக்கிறது நம்ம பாதி இருட்டு மூலை. பகவானும் பலரோடு பேசிக்கொண்டிருக்கிறார். இன்னும் என்னைத் துரத்தவில்லை. ஏதோ அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது.

*

என்னதான் சுற்றினாலும், என்ன சாத்திரம், புராணம், இதிகாசம் எல்லாம் நோண்டினாலும் எதுவும் இந்த காளிகோவில் பூசாரியின் உபதேசக் கதைகளுக்கு முன் எம்மாத்திரம்! என்ன அழகு ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசக் கதை ஒவ்வொன்றும்! அதுவும் புராணங்களிலும், இதிகாசங்களிலும் நல்ல ஆன்மிகக் கருத்து போதிக்கும் கதைகளுக்குத் தேடித் தேடி அலுக்கும் பொழுது, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் கதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணி, முத்து, மாணிக்கமாகச் சுடர் விடுவது கண்ணுக்குப் புலனாகிறது.

ரொம்ப பழைய தொகுப்புதான் - Tales and Parables of Sri Ramakrishna. 2013ல் அச்சு போட்டவர்கள் கணக்குப்படி 112000 காப்பிகள் இதுவரை அச்சேறிய கணக்கு. சிறுவயதிலிருந்து எத்தனை முறை இந்த நூல் எனக்குப் பெரிய ஆதரவாய் இருந்திருக்கிறது! எத்தனை பெரிய உண்மைகளை அப்படியே சர்வ எளிமையாக விளக்கிவிடுகிறார் தக்ஷிணேஸ்வரத்துக் கிழவனார்! அவர் எங்கே கிழவனாக ஆகிறார்? என்றும் புதுமையுடன் தான் பொலிகிறார். எனக்கு என்னவோ எங்கு சுற்றினாலும் அந்தத் தக்ஷிணேஸ்வரத்து அறையில் ஓரமாகப் பாதி இருட்டு, பாதி ஒளி மூலையில்தான் யதாஸ்தானம் போலும்!

வெறுமனே ஹடயோகம், தியானம், மூச்சுப் பயிற்சி என்றெல்லாம் இருப்பது பெரிய நிலைக்கு ஆளை உயர்த்திவிடாது என்று ஒரு கதை. யாரோ ஒரு வித்தை காட்டும் மாயாஜாலக் காரர். 'மாயம் பாரு! மந்திரம் பாரு! மயக்கும் இந்திர ஜாலம் பாரு! ராஜா பாருங்கோ ராணி பாருங்கோ! ஜோரா கைதட்டி எனக்குச் சோறு போடுங்கோ! துணிமணி கொடுங்கோ! காசு கொடுங்கோ!' என்று கத்தியபடி வித்தை காட்டிக் கொண்டிருந்தானாம் ஒரு மந்திரவாதி. ஏதோ கத்தும் போது திடீரென்று நாக்குப் பிறண்டு மூச்சுக் குழாயில் அடைத்து விட்டது. மூச்சு பேச்சு இல்லை. ஆள் சாகவும் இல்லை. என்ன ஆயிற்றோ, மக்கள் பொறுத்துப் பார்த்துப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்து, அந்த மந்திரவாதி பெரிய மகான், யோகி என்று முடிவு கட்டினர். அவனுக்கு என்று பாதாள அறை அமைத்து, எல்லாரும் போய்ப் பார்த்து வந்தனர். பெரிய யோகி மூச்சு பேச்சு இன்றி சமாதியில் ஆழ்ந்துள்ளார் என்று அக்கம் பக்கம் ஜனங்கள், வெளியூரில் இருந்தெல்லாம் ஏகப்பட்ட பிரபலமாகி, பல வருஷங்கள் கடந்தன. அவர் அங்கிருந்ததையே கூட ஒரு கட்டத்தில் மக்கள் மறந்து போய்விட்டனர் போலும்.

ஒரு நாள் ஏதோ சுரங்கம் தோண்டுபவர்கள் உள்ளே இறங்கி ஏதோ நகர்த்தவும், இந்த மந்திரவாதி ஆடாமல் அசங்காமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, ஆள் உயிரோடு இருக்கிறானா என்று பார்க்க உலுக்கிப் பார்த்திருக்கின்றனர். அவர்கள் உலுக்கியதில் எதேச்சையாக அவனுடைய ஒட்டிப் போன உள்நாக்கு மூச்சுக் குழாய் வழியிலிருந்து விலகிவிடவும், அவனுக்கு சுய உணர்வு வந்து, சுற்றி முற்றி முழித்து உடனே ஜிவ்வென்று குதித்துக் கத்த ஆரம்பித்து விட்டானாம்: 'மாயம் பாரு! மந்திரம் பாரு! மயக்கும் இந்திர ஜாலம் பாரு! ராஜா பாருங்கோ ராணி பாருங்கோ! ஜோரா கைதட்டி எனக்குச் சோறு போடுங்கோ! துணிமணி கொடுங்கோ! காசு கொடுங்கோ!' என்ன நகைச்சுவை! என்ன ஆழ்ந்த கருத்து! தக்ஷிணேஸ்வரத்தாரின் உலகமே தனி!
* 
என்ன வேதனை! எத்தனை அவஸ்தை! அறியாமையைப் போல் சுகமானது வேறு இல்லை என்பதை நினைக்க வைக்கும் அளவிற்கு மட்டும் விழித்தும் விழிக்காமலும் இருக்கும் நிலையில் படும் வேதனை! அனைத்தும் அறிந்தவர்கள் பாடு ஆனந்தக் களிப்பு. ஒன்றும் அறியார் பாடு ஏக குஷி. ஆனால் ஒளியா இருட்டா என்று தெரியாமல் இருக்கும் நிலைக்கு நரகம் கூட இணையாகாது. ஆனால் இந்த வேதனைதான் எத்தகையது என்றால் 
என்பு உருகி நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்து 
அன்பு உருவாய் நிற்க அலந்தேன் 
பாராயோ என்னை முகம் பார்த்து ஒருகால் என்கவலை 
தீராயோ வாய்திறந்து செப்பாய் 
ஓயாதோ என் கவலை உள்ளே 
ஆனந்த வெள்ளம் பாயாதோ
கடலே அமுதே தேனே என் கண்ணே 
கவலைப்பட முடியாது என்னை முகம் பார் நீ
ஓ கொடுமையிலும் கொடுமை --
எண்ணாத எண்ணம் எலாம் எண்ணி எண்ணி 
ஏழை நெஞ்சம் புண் ஆகச் செய்தது 
இனிப் போதும்

துன்பக் கண்ணீரில் துளைந்தேற்கு உன் ஆனந்த 
இன்பக் கண்ணீர் வருவது எந்நாள் 
வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் 
உளறும் நெஞ்சனுக்கும் உண்டோ நெறி
நன்று அறியேன் தீது அறியேன்
நான் என்று நின்றவன் ஆர் 
என்று அறியேன் 
நான் ஏழை 
என்னே
உற்று உற்று நாடி உளம் மருண்ட பாவியை நீ 
சற்று இரங்கி ஆளத் தகாதோ
எள் அளவும் நின்னைவிட இல்லா எனை மயக்கில் 
தள்ளுதலால் என்ன பலன் சாற்றாய்
பாடிப் படித்து உலகில் பாராட்டி நிற்பதற்கோ 
தேடி எனை அடிமை சேர்த்தாய்
உற்று நினைக்கில் துயரம் உள் உள்ளே 
செந்தீயாய்ப் பற்ற நொந்தேன்
பொய்யன் இவன் என்று மெள்ளப் போதிப்பார் 
சொல்கேட்டுக் கைவிடவும் வேண்டாம்
-- என்று தாயுமானவர் பாடிய பராபரக் கண்ணிக்கு இலக்கு பராபரம் மட்டுமன்று, நானும் தான் என்பது எத்தனை உண்மை! அங்கோ பராபரம் ஆனந்தமாக சமாதி நிலையில் தோய்ந்து எழுந்து தோய்ந்து சிரிக்கிறது! 

*
அறிவு பூர்வமாகக் கேள்வி கேட்பது நாம் மட்டும்தான் என்பது இல்லை. சமயத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் கேட்பதைப் பார்த்தால் அவர் பக்தரா அல்லது அறிவு வாதியா தெரியவில்லை. அவர் சொல்லும் ஒரு கதை மிகவும் சிந்திக்க வைப்பது.
ஒரு நோயாளி எப்படிக் குணமாகிறான் என்பதே கொஞ்சம் விந்தையாக இருக்கிறது என்கிறார். அவன் குணமாகும் நேரத்தில் மருந்து வந்து வாய்க்கிறதா அல்லது மருந்து போய்க் கலந்து அதனால் குணம் ஏற்படுகிறதா? அதாவது என்ன என்னவோ மருந்து மாயம் எல்லாம் பண்ணிப் பார்த்தாச்சு சார்! ஒன்றும் பயனில்லை என்று சொல்வதையும் பார்க்கிறோம். சார் அந்த மருந்து இரண்டு சிட்டிகை போட்டார். உடனே நோய் எங்க போச்சுன்னு தெரியல்ல -- இப்படிச் சில அநுபவங்கள் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும்.
லக்ஷ்மணன் லவ குசர்களிடம் கூறினானாம்: 'ராமனுடைய பராக்கிரமம் எப்படிப்பட்டது தெரியுமா? ராமனுடைய காலடி பட்டதும் கல்லாக இருந்தது பெண்ணாக மாறிவிட்டது தெரியுமா?' அதற்கு குச லவர்கள் கூறினார்களாம்: 'தெரியும் தெரியும் அந்த ராமன் கதையெல்லாம். ஐயா நாங்களும் கேள்வி பட்டிருக்கிறோம். அது எப்படி நடந்தது என்கிறீர்? ரிஷி கௌதமர் சொன்னார், 'திரேதா யுகத்தில் ராமன் வரும் போது அவனுடைய காலடி பட்டு நீ எழுவாய்' என்றார். அவருடைய வார்த்தையின் சக்தியால் அது அப்படியே நடந்தது. அதை ராமனின் பராக்கிரமம் என்பதா? ரிஷியின் வார்த்தையின் சக்தி என்பதா? 
என்று கேட்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

கதையின் மாந்தர்களை விடுவோம். விஷயம் என்னவென்றால் ஒரு செயல் நடக்கும் போது அது பல காரணங்களைக் கொண்டு நடக்கிறது. ஒரு நிகழ்ச்சி குறிப்பாக இந்தக் காரணத்தினால்தான் நடந்தது என்று சொல்வது கடினம் என்கிறார். அதுதான் விஷயம். அதாவது காரண காரிய நியதியை நடக்கும் நிகழ்ச்சிகளுக்குத் துல்லியமாக நிர்ணயித்துவிட முடியுமா என்பது வாதத்திற்குரிய விஷயம். இப்படிச் சில சமயம் அவரே சில வாதத்திற்கான விஷயங்களைக் கிளப்பிவிட்டு நரேந்திரரும், மற்றவர்களும் வாதம் புரிவதை ஆர்வமுடன் கேட்பதுண்டு என்று 'ம' அவர்களின் குறிப்புகள் காட்டுகின்றன.

*
நிராசை என்பது மனத்தில் உறைத்த பின்னர்தான் ஆன்மிகம், கடவுள், பக்தி என்பதெல்லாம் ஏதாவது அர்த்தமுள்ளதாக ஆகும் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். Freedom sprouts in the awareness about slavery. அங்கு சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்தச் சிரிப்பு.!
*
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் வாழ்க்கையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையும், அந்தப் புனிதமான மண்ணில் ஒரு முறையாவது நிற்க வேண்டும் என்றும் ஆர்வமும் கிளர்ந்து எழும். ஒருவருக்கு ஹிமாலய மலைக்குப் போனால் அப்பாடா வாழ்க்கை நிறைவு என்று தோன்றும். ஒரு சிலருக்குக் காசிக்குப் போக வேண்டும். சிலருக்கோ ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் பிறந்த நாதியா அல்லது பிருந்தாவனம், அல்லது பூரி ஜகந்நாதம். பொதுவாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு, கோயில் என்றாலே அது ஸ்ரீரங்கம் ஒன்றைத்தான் குறிக்கும். நந்தனார் சிதம்பரம் போகாமல் இருப்பேனோ என்பார். இன்னும் மற்ற மதங்கள் என்றால் கேட்க வேண்டாம். 


எனக்கு அப்படி எதுவும் அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும் என்ற பெரும் ஆசை எதுவும் உண்டா தெரியவில்லை. எங்கு போனாலும் என்ன? என்ற எண்ணம். எனக்கு அதிகமாக புத்தக மயக்கம் ஏற்பட்டதால் நூலின் மூலமாகக் காணும் உலகங்கள் பெரும் பரவசம் ஆகப் போயிற்று எனலாம். ஆனாலும் ஸ்ரீரங்கம் என்றால் சொந்த இடமாகப் போயிற்றா அது மட்டும் ஒரு வாஞ்சையாகத் தோன்றும். 

மற்றபடி ஓரிடத்தை வாழ்க்கையில் பார்த்தே ஆக வேண்டும் என்று மனத்தில் ஊக்கமும் உவகையும் குமிழிடும் என்றால் எனக்கு அது கல்கத்தா தக்ஷிணேஸ்வரம், ஸ்ரீராமகிருஷ்ணரின் அறை, காமர்புகூரில் அவரது பிறந்த இடம், விவேகாநந்தர் வாழ்ந்த இடங்கள், பேலூர் மடம் இப்படித்தான் அடிக்கடி கனவு. ஆனால் வாழ்க்கையில் இதுவரை ஒரு தடவை கூட அங்கு போனதில்லை. போவது கஷ்டமா என்றால் இல்லை. இவ்வளவு ஆண்டுகளில் எப்பொழுது வேண்டுமானாலும் ரயிலேறிப் போயிருக்கலாம். ஆனாலும் ஏக்கத்தில்தான் இருக்கத் தோன்றியதே அன்றி, முனைந்து போவோமே என்று தோன்றவில்லை. ஒரு விதத்தில் பயமாகவும் இருக்கிறது. போய்ப் பார்த்துவிட்டு இருக்கிற நடைமுறை ஏதாவது என்னடா இது இதற்கா இப்படி ஏங்கினோம் என்று எங்காவது தோன்றிவிட்டால் என்ன செய்வது என்று ஒரு பயம். மனிதனுக்கு வாழ்க்கையில் ஏதாவது நப்புக் கொட்டுவதற்கு அஜெண்டா ஒன்று கையிருப்பில் வேண்டும் போலும். ஆனாலும் கூடிய சீக்கிரம் போய்ப் பார்த்து விடுவேன் என்றுதான் நினைக்கிறேன்.

அதாவது மாக்ஸ் முல்லருக்கு இந்தியா எப்படிக் கனவுலகமாகவே இருந்ததோ அப்படியே இருந்து விடாது எனக்கும். அந்த நப்பாசைதான் இப்படி அவ்வப்பொழுது அக்கடா என்று இங்கு வந்து உட்கார்ந்து கொள்வது. இது வரையில் அந்தப் பூசாரி என்னைத் துரத்தவில்லை என்பது நிதர்சனம். இங்கு வந்து உட்கார்ந்து விட்டால் ஒரு பழைய உலகமே மீண்டும் எனக்கு என் கண்முன் நடைபெறத் தொடங்கிவிடுகிறது. பொரொமொஹொம்ஸோ தேப், அப்படித்தான் நானும் சொல்லியிருப்பேனாக இருந்திருக்கும் அவர் மொழியிலேயே பிறந்திருந்தால்.

அவருடைய நிலையைப் பாருங்கள். வினோதம். மற்றவர்களுக்கெல்லாம் நிச்சயமாய் இருக்கும் உலகம் அவருக்கு அவ்வளவு நிச்சயம் இல்லை. ஏனெனில் பல வேளைகளில் இடுப்புத் துணி அவிழ்வது கூட தெரியாமல் பக்திப் பரவசம், அழுகை, ஆழ்ந்த சமாதி. ஆனால் நமக்கு, சாரி, எனக்கு நிச்சயமே இல்லாத ஒன்று அவருக்குப் படு நிச்சயம், ஏன் கண்கூடு. அதுதான் கடவுள். நான் கடவுளைப் பற்றிப் பேசுவேன். அவரோ கடவுளோடு பேசுவார். இந்த இரண்டிற்கும் இடையில் எவ்வளவு பெரும் வித்யாசம் பாருங்கள்!

கடவுள் என்ற ஒன்று, உண்மையாக நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், என்ன என்று புரிகிறதா? சும்மா கதை கேட்டது எல்லாம் வைத்து அப்படி இப்படி என்று சொல்லக் கூடாது. அப்படிப் பார்த்தால் கடவுள் என்றால் விளக்கங்களைச் சும்மா வண்டியில் கொண்டு வந்து நூலகமே என்னால் அடுக்க முடியும். அது பதிலில்லை. ஹானஸ்டாகச் சொன்னால் உள்ளத்துக்கு உண்மையாக, கடவுள் என்றால் என்ன என்று புரியவில்லை. கடவுளின் நாமம்தான் பழக்கம். அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும் - என்று ஏன் சொன்னார்கள் என்பது இப்பொழுது புரிகிறது. ஆமாம். நமக்குத் தெரிய வருவதெல்லாம் கடவுளின் வெவ்வேறு நாமங்கள்தாம்.

ஆனால் அவருக்கோ கடவுள்தான் நிச்சயம். இந்த உலகம் ஏனோ தானோ, நினைவிருக்கும்வரை நிச்சயம் அப்படித்தான். அவருடைய மன நிலையும், வாழ்க்கையும் எப்படி இருந்திருக்கும்? நம்மைப் போல அவருக்கும் சித்திரம் தோன்றியிருக்குமா அல்லது அங்கு முற்றிலும் வித்யாசமா, இப்பொழுது எனக்கு நான் என்றால் இதோ இந்தப் பேர்வழிதான் பலக்க பலக்க முழித்துகொண்டு நிற்கிறான். அவருக்கு எப்படி இருந்திருக்கும்? அவருடைய நான் என்பது அவருக்கு என்ன பொருளில் பட்டிருக்கும்? இல்லை அங்கு நான் என்று ஒன்றும் இருந்திருக்காதா? அப்படி என்றால் எப்படி வியக்தி நிற்கும்? வாழ்வது?

சும்மா அவரும் நம்மை மாதிரிதான் சார். ஏதோ நம்பிக்கிட்டு இருந்தாரு. அப்படியே அவர் வாழ்க்கை போச்சு. அவ்வளவுதான் என்று சொல்வது சுலபம், ஒரு விதத்தில் நிம்மதி. ஏனெனில் நான் இப்பொழுது படும் தொந்தரவுகள் இருக்காது. ஆனால் இல்லை. அவர் விஷயம் முடிவு கட்டுவது அவ்வளவு சுலபம் இல்லை. பாருங்களேன். அங்கும் 'ம' என்பவரிடம் அவர் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதாவது தாம் யார் என்று அடையாளம் காண்பது இயலாத காரியம் என்று.

அதாவது புராணங்களில் ஒரு மரம் சொல்லப் பட்டிருக்கிறதாம். 'என்னன்னு தெரியாது' அப்படீன்னு ஒரு மரம். தாம் அந்த வகையைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். யாரோ ஒருவர் அவரிடம் வந்து கடவுளைப் பற்றி ஏதோ கேட்கிறார். ஸ்ரீராமகிருஷ்ணரோ அவரிடம் கடவுளிடம் பக்தி செலுத்துவது, பரிந்தழைப்பது என்றெல்லாம் சொல்லுகிறார். வந்தவரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, 'ஐயா! எனக்குக் கடவுளை நாடி ஓர் ஈர்ப்போ அல்லது அவரிடம் ஈடுபாடோ இல்லையே என்ன செய்வது?' என்கிறார். எப்படி இருக்கிறது கதை? மற்ற சாமியார் யாரிடமாவது இந்த ஆள் போயிருந்தால், இப்படி சொல்லியிருந்தால் தெரிந்திருக்கும் கதை. பாவி! நீ உருப்பட வழியில்லை. இதை வேறு என்னிடமே சொல்கிறாயா? போ வெளியே.- என்றுதான் கத்தியிருப்பார்கள்.

ஆனால் இங்கோ, ம் ம் அதற்கும் ஆர்வமாக அவரிடம் அப்படியா என்று கதை கேட்டுக்கொண்டு இருந்து விட்டு, 'உனக்கு எதில் ஈடுபாடு இருக்கிறது?' என்று கேட்கிறார். அதற்கு அந்த ஆள், 'ஐயா! எனக்கு நான் வளர்க்கும் ஆட்டின் மேல்தான் ஈடுபாடு இருக்கிறது. என்ன செய்வேன்?' என்று சொல்ல,

ஸ்ரீராமகிருஷ்ணர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், 'அப்படியென்றால் நீ ஒன்று செய். அந்த ஆட்டை மிகவும் அன்புடன் பராமரித்து வா. உன் அன்பையெல்லாம் அதன் மேல் பொழிந்து, அதற்குப் பாராமரிப்புப் பண்ணும் போதெல்லாம் கடவுளுக்கே நீ தொண்டு செய்கிறாய் என்று மனத்தால் நம்பு. எல்லாம் சரியாகி விடும்' என்று யோசனை சொல்கிறார்.
* 

மனிதம் முழுதும் 
கடவுள் முழுதும் 
கலந்த வியப்பே அவதாரமோ? 
மானிடம் வாழும் 
மகத்துவம் என்றும் 
மண்ணில் வந்த 
தெய்விகம் என்றும் 
மயக்கும் இயல்பே அவதாரமோ? 
என்னில் ஒன்றும் 
உன்னில் என்றும் 
என்னைக் கரைத்த வெளிப்பாடோ? 
எண்ணில் கலந்து 
ஏக்கம் புலர்ந்த 
கண்ணின் விடியல் என்பேனோ? 
விண்ணை ஈன்ற 
மண்ணின் தாய்மை 
மண்ணில் விளைந்த 
விண்ணின் சேய்மை 
உண்ணின்றுலாவும் 
அருளின் அண்மை. 

*