Sunday, May 5, 2019

நல்வாழ்விற்கு இன்றியமையா மூன்று அம்சங்கள்

மனிதருக்கான நல்வாழ்விற்கான முக்கியமான மூன்று அம்சங்கள் என்ன என்று பார்த்தால் அது தனி மனிதர் தம்மைப் பக்குவப்படுத்திப் பயிற்றித் தகவுடையோராக வளர்த்துக் கொள்ளுதல்; மனிதர் சமுதாயமாகப் பங்கு கொள்ளும் போது தம் தகவுடைமையால் மனித கூட்டு வாழ்க்கை மேம்பாடு அடையும் விதத்தில் ஒத்திசைந்து, ஒருங்கிணைந்து பணியாற்றும் வல்லமை; தனி மனித முயற்சியிலும், ஒருங்கிணைந்த கூட்டு வாழ்விலும் நிறைந்தவர்கள் குறைந்தவர்களுக்கு உதவி அவர்களும் தகவுடைமையும், தக்க கூட்டுவாழ்வின் ஒருங்கிணைப்பும் அடையும் விதத்தில் பகிர்ந்துதவிக் கொண்டு செல்லுதல் ஆகிய மூன்றும் ஆகும். இந்த மூன்று அம்சங்களையும் ஸ்ரீகிருஷ்ணன் மனித வாழ்க்கையைத் தனி அளவிலும், சமுதாய அளவிலும் தூய்மையும், சிறப்பும் அடையச் செய்யும் காரணிகள் என்கிறார். இந்த மூன்று அம்சங்களுக்கும் அவர் இடும் பெயர் தவம், யக்ஞம், தாநம் என்பன. தவம், யக்ஞம், தாநம் ஆகிய இந்த மூன்றையும் யாரும் செய்யாமல் விட்டுவிடக் கூடாது என்றும் வலியுறுத்துகிறார்.

தனிவாழ்க்கையின் ஆன்மிகம், மக்களுடன் கூட்டு வாழ்க்கையின் ஆன்மிகம், சமுதாயத்தின் வழிவழி ஆன்மிகம் ஆகிய அனைத்து ஆன்மிக உணர்வுச் செழுமைகளையும் இந்த மூன்று வார்த்தைகளில் அடக்கிவிடலாம். தன் வாழ்க்கையை ஆன்மிக முன்னேற்றம் உடையதாய்ச் செய்வது தவம். கூட்டு வாழ்க்கையில் ஆன்மிக முன்னேற்றம் பெற முயல்வது யக்ஞம். வழிவழி சமுதாய ஆன்மிகச் செல்வத்தை வளர்த்தல் தாநம். தீ மூட்டி அமர்ந்து சிலர் அதில் ஏதோ போடுவது யக்ஞம்; தனி ஆளாய்க் கண்ணை மூடி அமர்ந்து மூச்சு இழுத்து இழுத்து விடுதல் தவம்; பிச்சை போடுவது தாநம் -- இவ்வாறுதான் என்று நினைப்பது கருத்துகளை நன்கு உணராமையேயாகும். வேதக் கதைகளில் ஒன்று சொல்கிறது -- தேவர்கள் முன்னொரு காலத்தில் மனிதர்களாக இருந்தவர்தாமாம். மனித நிலையிலிருந்து உயர்ந்து தேவ நிலைக்குச் சென்றார்களாம். தமக்குப் பின்னால் வரும் மனிதர்கள் ஒரு சமுதாயமாக உயர்நிலையை அடையவேண்டுமானால் அதற்கு வழியாக யக்ஞம் என்ற பாதையை வைத்துவிட்டுப் போனார்களாம். கதைதான். கதையாகத்தான் இருக்க வேண்டும். ஆனாலும் கதை என்னும் சலாகை போர்த்திய உண்மை உள்ளேயிருந்து புன்னகை பூக்கிறது. 

சமுதாய ஆன்மிக உயர்வின் வழி யக்ஞம் என்பதைப் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் யக்ஞம் என்றால் நமக்கு இதுவரை அளிக்கப்பட்ட புறச் சடங்கு, அது பொருளாக இருக்க முடியாது. அப்படி என்றால் யக்ஞம் என்பதுதான் என்ன? பெரும் தீ. அதில் ஆஹுதியாக த்ரவ்யங்களை விடுதல்; உயர்ந்த சக்திகளைக் கூவியழைத்தல்; அவற்றுக்கு வாக் என்னும் குப்பிகளில், கவிதை செறிந்த, உன்னத ப்ரார்த்தனைகளைச் சோம ரஸமாக ஊற்றி வைத்தல்; தன் கருவி கரணங்கள் அனைத்தையும் அந்த சக்திகள் குடிகொள்ளத் தக்கவாறு தான் எனும் பிடிப்பிலிருந்து விடுவித்துத் தந்து விடுதல். -- இந்தக் கருத்துகளின் மூலம் யக்ஞம் நமக்கு உணர்த்தும் அதன் உண்மை என்ன? 

தான் என்பதோடு உலகு அனைத்தையும் உடமையாக ஆக்கிக்கொள்ள முயலும் வரை மனிதனின் வாழ்க்கை அசுரமாக இருக்கிறது. தான் என்பதையும், தனது என்பதையும் முழுமை என்ற உலக பூர்ணமானப் பார்வையில் ஆஹுதி செய்யும் பொழுது உலகம் ஏற்கனவே சொந்தமாக இருப்பதை மட்டும் உணர்வதில்லை மனிதன், தான் மனிதனிலும் மிக்கு உயர்ந்து தேவ நிலையை எய்திய அமைதி அவன் மூச்சில் இழையோடுகிறது. அப்பொழுது சுயநலம் துறத்தல், அதுதான் யக்ஞமா? இல்லை. ஏனெனில் யக்ஞத்தில் பெரிதினும் பெரிது கேள் என்பது பால பாடம். பூமா என்னும் மிகப்பெரியது எதுவோ அதையே மனிதன் என்றும் விரும்ப வேண்டும் என்பது உபநிஷதம் கூறும் கருத்து. சுயநலம் துறத்தல் என்பதில் பெரிது என்பதைச் சிறிது என்பதற்காகத் துறத்தல் என்பதுதான் உள்ளுறை அர்த்தம். எனவே யக்ஞம் என்பது வேறு; சுயநலம் துறத்தல் என்பது வேறு.

மனிதனின் அறிவு கணக்குப் போடுகிறது. அடையப் போகும் நிலை, இப்பொழுது இருக்கும் நிலையை விட போதிய அளவு சுகமும் லாபமும் உடையதாக இருக்குமா? அதற்காக இதை விடத் துணியலாமா? லாப நஷ்டக் கணக்கில் உலகின் உயர்வுப் பாதைகள் கட்டப்படவில்லை என்கின்றன ஹிந்து மத சாத்திரங்கள். லாப நஷ்டக் கணக்கு பார்த்து, விடலாமா என்று யோசிக்க முடியாது. தான் என்பதையும், தனது என்பதையும் துணிந்து விட்டபின்னர்தான் புதிய கணக்குகள் திறந்துகொள்கின்றன. விட்டது அல்பம்; பெற்றது மஹத் என்று அப்பொழுதுதான் புரியத் தொடங்குகிறது. 

எனவேதான் மனிதன் தான் எனும் தூணைப் பிளந்த நரசிம்ஹமாய் வெளிவர வேண்டும் என்று யக்ஞங்கள் வழிகாட்டுகின்றன. மனிதன் மனிதனாக இருப்பதே பிரத்யேக முயற்சியால்தான் என்றபடிதான் மனித வாழ்வின் இயல்பு அமைந்திருக்கிறது. என்னும் பொழுது, மனிதர் தம்மினும் உயர்ந்த தரத்தினராய் ஆவது என்பது தொடர்ந்த சுய உணர்வில் முயற்சி என்பதாலேயே ஆகுவதொன்று. முழு விழிப்பு நிலையே முத்தி மார்க்கத்தின் முதல் படி. அந்த விழிப்பு நிலையின் சடங்காகிவிடாத சைதன்யம் மிக்க பயிற்சிதான் தவம் என்பது. 

மனிதன் பிறந்தான் என்ற காரணத்தாலேயே பெரும் கடனாளியாக இருக்கிறான். அவன் அவனாக உருப்பெற்றதற்கு உதவிய உலகக் கூறுகள் ஏராளம். அவனது சுய விழிப்பு முழுமை அடைய அடைய அவன் உணரும் கனமான கடனாக இந்தக் காரண நன்மைகள் கவனத்திற்கு வருகின்றன. இவற்றுக்கு அவன் பிரதி கொடுத்தாக வேண்டும். திருப்பியாக வேண்டிய கடன்கள் பல உண்டு. அவன் அவற்றைத் திருப்பி அளிப்பதுதான் தாநம். சமுதாயத்திலிருந்து பலவற்றைப் பெற்றான். அதற்கு அவன் திருப்பி அளிக்க வேண்டியவை தாநம். இயற்கையிலிருந்து பலதும் பெற்றான். அதற்கு அவன் திருப்பி அளிப்பது தாநம். தன் முன்னோரிடமிருந்து பலவற்றைப் பெற்றான். அவர்க்குத் திருப்பி அளிக்க வேண்டியவை தாநம். எதிர்காலத்தில் மனித குலம் இஹபர வாழ்க்கைகள் இரண்டும் சிறந்து விளங்க வேண்டும் என்று நினைத்த மனிதன் எதிர்காலத்திற்கு அளிப்பது தாநம். சக மனிதன் கஷ்டப் படுவதைக் கண்டு இரக்கம் கொண்டு அளிப்பது என்பது அவன் இயல்பில் வருவது. அதை தாநம் என்று பெரும்பான்மை கருதுவது வழக்கம். 

இந்த யக்ஞம், தவம், தாநம் என்ற மூன்றும் கலவாத மனித வாழ்க்கையே இல்லை. நன்கு உணர்ந்து நேர்கொடு நேர் ஆற்றப்படவில்லை என்பதுதான் வித்யாசம். யக்ஞம், தவம், தாநம் ஆகிய இந்த மூன்றும் ஹிந்து மதத்தின் உள்ளமைப்பின் குருத்து போன்ற கருத்துகள். இவற்றைச் சரிவரப் புரிந்துகொண்டால் இவை எப்படி மனித வாழ்க்கையின் இயல்பிலேயே பொதிந்திருக்கின்றன என்பது விளங்காமல் போகாது. 

யக்ஞம் என்பதன் உள்ளர்த்தமே இல்லாமையிலிருந்து இருப்பது என்ற நிலைக்கு ஏகுதல்; இருளிலிருந்து ஒளி என்ற நிலைக்கு ஏகுதல்; இறப்பிலிருந்து இறப்பில்லாத நிலையை அடைதல் என்ற இந்த மூன்றும் தான்உபநிஷதம் எதைப் பிரார்த்தனையாக மனிதர்க்குச் சொல்லிக் கொடுக்கிறதோ அதை மனித சமுதாயம் ஒருங்கிணைந்து ஆற்றும் முறையைத் தான் யக்ஞம் என்று கற்றுத் தருகிறதுஇன்று நம் உலகளாவிய முன்னேற்றம் என்பது எத்தனை ஆழ்ந்த யக்ஞமாக உருப்பெற்றிருக்கிறது என்பதை உணர்ந்தாலே நாம் யக்ஞம் என்ற பெருங்கருத்தின் தன்மைகளைப் புரிந்து கொள்ளலாம்

நமது காலம், நமது சுக சௌகரியங்கள், நமது இஷ்டம் என்ற அனைத்தையும் சில ப்ராஜக்ட்ஸ் என்பதற்காகத் தியாகம் செய்கிறோம். அவ்வாறு தியாகம் செய்து நாம் அடையப் போகும் நன்மையோ நிலையோ இன்று ப்ரத்யக்ஷமாக நம் கண்ணுக்குப் புலப்படாததுநம் கண்ணுக்குப் புலப்படவில்லை, இன்று நான் காணும் படியாக எதுவும் என் முன் இல்லை, எனவே நான் அதை நம்பி நான் எதிலும் என்னை ஈடுபடுத்திக்கொள்ளேன் என்று சொல்லும் எவரும் இன்றைய தொழில் நுட்பப் பணிவாழில் உலக அளவிலோ, அல்லது நம் கிராம அளவிலோ கூட எங்கும் இடம் பெறுதல் முடியாத காரியம்இன்று மனித குலமே பிரத்யக்ஷமாக இல்லாதவைகளைப் பிரமாணமாகக் கொண்டுதான் அடிப்படை வாழ்க்கையிலேயே கூட இயங்குகிறது

காடு கெடுத்து நாடாக்கி -- என்பது ஒரு காலத்தில் முக்கியமாக இருந்தது. காடுகளை உண்டாக்குதல் இன்று முக்கியமானதாகக் கருதப்படுகிறதுநம் வீட்டு வாசலில், நம் வீட்டுக் கொல்லையில், நம்ம ஊரில் இருக்கும் மரங்களை நம் சௌகரியத்திற்காக வெட்டிச் சாய்த்தால் இவனுகளுக்கு என்ன என்ற டீக்கடை வெட்டிப் பேச்சு மறைந்தே போய்விட்டதுகாரணம் சுற்றுச் சூழல், உலக தட்ப வெப்பச் சுழற்சிகள், காடு, மழை, மேகம், காற்று என்றபடி அனைத்தும் ஒன்றை ஒன்று நம்பியுள்ளன. ஒன்றிலிருந்து ஒன்று ஒன்றைப் பெற்று ஒன்றைப் பிரதியாகத் தருகின்றனஅனைவரும் கூடி இணையத்தில் பேசும் அரட்டைகள் மனித குலத்தின் ஏதோ ஒரு பகுதியில் சென்று சேர்ந்து மாற்ற அலைகளை, நல்லவற்றிற்கோ, தீயவற்றிற்கோ ஏற்படுத்துகிறதுஒரு விதத்தில் அண்டமும், பிண்டமும் இன்று நெருங்கி வந்து தமக்குள் உரையாடுவது போன்ற ஒரு தோற்றம், வெறும் தோற்றரவு இல்லை, உண்மைதான் என்பதை உலகம் மேலும் மேலும் உணர்ந்து வருகிறது

இந்த பிரபஞ்சம் தழுவிய, பிரதேச வேர்களைக் கொண்ட பார்வை பல விதத்தில் பேச முயற்சி செய்கின்ற மொழியே யக்ஞம் என்பதுயக்ஞம் என்பது என்ன என்று அறிந்தவன் ஒரே வீச்சில் இன்று அண்டத்தையும், பிண்டத்தையும் அறிகிறான்எங்கும் நீக்கமற நிறைந்த ருதமாக விளங்குவது இந்த யக்ஞம் என்ற காரணம் பற்றியே வேதம் இந்த யக்ஞம் என்பது விஷ்ணுவே என்று முழங்குகிறது. 'யக்ஞோ வை விஷ்ணு:' எங்கும் நீக்கமற நிறைந்த ஆதி தத்வம் விஷ்ணு

இந்த யக்ஞத்தில் யார் பங்கெடுத்துக்கொள்ள முடியும்? முயற்சி இல்லாதவர்கள் ஒரு நாளும் பங்கெடுக்க இயலாது. அகம்பாவம் கொண்ட அசுரர்கள் ஒரு நாளும் பங்கெடுக்க இயலாது. தவம் செய்தோரே யக்ஞத்திலும் தம்மை ஈடுபடுத்த முடியும்ஒரு மனிதன் தன் அளவில் எத்துணை தவம் மிக்கவனாய் இருக்கிறானோ அத்துணையே அவன் பங்களிப்பும் யக்ஞத்திலும் சிறக்கிறதுதவம் என்பதால் மனிதர் புழு நிலையிலிருந்து பிரபஞ்சப் புள்ளாக மாறிப் பறக்கின்றனர்தவம் என்பதால் மனிதருக்குள் பலமுகமான பார்வைகளை குடியமர்த்துதல் சாத்தியமாக ஆகிறது. பலமுகப் பார்வைகளைப் பார்ப்பவன் மனித கோணங்களை விஞ்சிப் போகிறான்பன்முகமான பார்வைகளைத் தன்னுள் பெறுவது தவத்தாலாய பயனாம்பன்முகமான செயல் முனைப்புகளில் தான் என்பதைக் கடந்து தன் பன்முகமான பார்வைத் திறன் கொண்டு பங்கு பெறுதல் யக்ஞமாம் 
மனிதர்க்கு இந்த Individual Capacity and Social Felicity என்ற இரண்டையும் வாழ்நெறியாக்கி வைத்தல் தாநம் என்பதன் தாத்பர்யமாகும்இக்காரணம் பற்றியே ஸ்ரீமத் பகவத் கீதையில் ஸ்ரீகிருஷ்ணர் மனிதர் எவரும் இந்த மூன்றான யக்ஞம், தவம், தாநம் ஆகியவற்றைச் செய்யாமல் விடக்கூடாது என்கிறார். அதற்கு அவர் கூறும் காரணம் இந்த மூன்றும் மனித குலத்தை அனைத்து விதங்களிலும் தூய்மையும், புனிதமும் கொண்டதுவாய் ஆக்குகின்றன என்பதாகும் 

*** 

No comments:

Post a Comment