Saturday, May 4, 2019

ஸ்ரீராமகிருஷ்ணரின் அறையில் ஒரு மூலையில்...


எனக்கு ஒரு கெட்ட பழக்கம் இருக்கிறது. அது என்ன என்று அப்புறம் சொல்கிறேன். ஆகஸ்டு மாதம் 1871 கி பி. நிச்சயமாக ஒரு விஷயம் நடந்திருக்கிறது. ஜூலை 1871 கி பி., ஸ்ரீராமகிருஷ்ணரின் போஷகராகவும், மெய்க்காப்பாளராகவும் இருந்த ராணி ராஸமணியின் மருமகனான மதுர் காலமாகிவிட்டார். ஸ்ரீராமகிருஷ்ணரின் வாழ்க்கையில் திருப்பங்கள் தொடங்கின. மதுர் எங்கு போயிருப்பார் என்ற கேள்வியைச் சிலர் எழுப்பினர். மறுபடியும் ஏதாவது இளவ்ரசராகப் பிறந்திருப்பார் என்று தாகுர் முடித்துவிட்டார் அந்தப் பேச்சை. அன்னை சாரதாமணி தேவியார் இன்னும் அண்ணலிடம் வந்து சேரவில்லை. பைத்தியமாகிவிட்டார் என்கிறார்களே, அப்படியெல்லாம் இருக்குமா, என்று உள்ளம் கவன்ற வண்ணம் எப்படியாவது தக்ஷிணேஸ்வரம் வந்துவிட நினைத்த அன்னையார் மார்ச் 1872தான் வந்து சேரப் போகிறார்.

ஆனால் ஆகஸ்ட் 1871 சென்னையில் ஒரு விஷயம் நடந்திருந்திருக்கிறது. திருவாய்மொழிக்கான ஐந்து வியாக்கியானங்கள், மூன்று அரும்பதங்கள், ஈட்டில் உதாஹரிக்கப்பட்ட மற்ற மூவாயிரங்களின் பாசுரங்களுக்கான வியாக்கியானங்கள், ஒவ்வொரு தசகச் சுருக்கமான த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளி, அதன் வியாக்கியானம், திருவாய்மொழி நூற்றந்தாதி, அதன் வியாக்கியானம் என்று மொத்தம் 15 நூல்கள் அடங்கிய ஸ்ரீபகவத்விஷயம் பெரிய ஸெட் புத்தகம், முதல் பத்துக்கான நூல் ஆகஸ்டு மாதம் 1871 ஆம் வருடம் சென்னையில் வெளிவந்தது. 1876 ஆம் வருடம் 10 ஆம் பத்து வெளிவந்து நிறைவடைந்தது. மணிப்ரவாள மொழியில் தெலுங்கு லிபியில் அச்சு. சென்னைப் பட்டணம் சூளை வேப்பேரி ரொட்டிக் கிடங்கு திருவேங்கடமுதலி தெருவில் ஸ்தாபிக்கப்பட்ட முத்ராக்ஷர சாலையில் பதிப்பிக்கப்பட்டது. 4800 சொச்சம் பக்க பத்து வால்யூம்களில் மொத்தம் அச்சுப் பிழை இரண்டு இலக்கத்தை எட்டவில்லை. அதாவது அதிகபட்சம் 7 அல்லது 8. அவ்வளவுதான்.

1875
ஆம் ஆண்டுதான் முதன்முதலாக ஸ்ரீ தாகுர் ஸ்ரீகேசவசந்திர ஸென் அவர்களைப் போய்ப் பார்க்கிறார். இன்னும் நரேந்திரர் என்னும் நொரேன் வந்து சேரவில்லை. ஹைஸ்கூல் மாணவன் தான்.

மார்ச் 1880 கி பி ஒரு விஷயம் நடந்திருக்கிறது. நம்மாழ்வாரின் திருவாய்மொழிக்கு ஆறாயிரப்படி, பன்னீராயிரப்படி, ஈடு என்னும் மூன்று வியாக்கியானங்களும், ஜீயர் அரும்பதமும், திரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்நாவளியும், திருவாய்மொழி நூற்றந்தாதியும் அடங்கிய மூன்றாம் பத்து, ஸ்ரீஆழ்வார்திருநகரி வடபத்ரசாயி அரையர் ஸவாமி அவர்களாலும், ஸ்ரீ கா ராமஸ்வாமி நாயுடு அவர்களாலும் மார்ச் 1880 சென்னை ஆதிகலாநிதி அச்சுக் கூடத்தில் அச்சடிக்கப்பட்டு வெளிக்கொணரப்பட்டிருக்கிறது.

1880
வருஷம்தான் வங்காளத்தில் நரேன் என்னும் கல்லூரி இளைஞன் ஒவ்வொரு மகானையும் 'நீங்கள் கடவுளைக் கண்டிருக்கிறீர்களா?' என்று கேட்டு அலைந்து ஸ்ரீதாகுரிடம் வந்து சேருகிறான், அதே கேள்வியைக் கேட்க.

1892
ஆம் ஆண்டு அதே சென்னையில்தான் திருவல்லிக்கேணி ஸ்ரீஅழகியசிங்கமய்யங்கார் முன்னெடுத்து நரேந்திரரை விவேகாநந்தராக சிகாகோவுக்கு அனுப்புகிறார்கள்.
ஸ்ரீஅழகியசிங்கமய்யங்காரைத்தான் 1906ல் சகோதரி நிவேதிதா பாரதியாருக்கு எடுத்துச்சொல்லிப் புரியவைக்கிறார். 'எங்களுக்கு அரசியல், சமுதாய பிரச்சனைகளில் வழிகாட்ட சென்னையில் யாரும் இல்லையே!' என்று அங்கலாய்த்த பாரதியாருக்கு 'ஏன் இல்லை? எந்த பிரச்சனை என்றாலும் அளசிங்கரைக் கேட்டுத் தெளியலாமே' என்று குருமணி சொன்னதும்தான் உள்ளூர் பெருமை புரிந்தது பாரதியாருக்கு.
அதான்.. என்னோட கெட்ட பழக்கம்னு சொன்னேனே.. எதையாவது ஒன்றோட ஒன்று தொடர்பு உள்ளவற்றை யோசித்துக்கொண்டிருப்பேன். அதுதான். நமக்கு இருக்கவே இருக்கிறது நம்ம பாதி இருட்டு மூலை. பகவானும் பலரோடு பேசிக்கொண்டிருக்கிறார். இன்னும் என்னைத் துரத்தவில்லை. ஏதோ அப்படியே ஓடிக்கொண்டிருக்கிறது.

*

என்னதான் சுற்றினாலும், என்ன சாத்திரம், புராணம், இதிகாசம் எல்லாம் நோண்டினாலும் எதுவும் இந்த காளிகோவில் பூசாரியின் உபதேசக் கதைகளுக்கு முன் எம்மாத்திரம்! என்ன அழகு ஸ்ரீராமகிருஷ்ணரின் உபதேசக் கதை ஒவ்வொன்றும்! அதுவும் புராணங்களிலும், இதிகாசங்களிலும் நல்ல ஆன்மிகக் கருத்து போதிக்கும் கதைகளுக்குத் தேடித் தேடி அலுக்கும் பொழுது, ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்ஸரின் கதை ஒவ்வொன்றும் ஒவ்வொரு மணி, முத்து, மாணிக்கமாகச் சுடர் விடுவது கண்ணுக்குப் புலனாகிறது.

ரொம்ப பழைய தொகுப்புதான் - Tales and Parables of Sri Ramakrishna. 2013ல் அச்சு போட்டவர்கள் கணக்குப்படி 112000 காப்பிகள் இதுவரை அச்சேறிய கணக்கு. சிறுவயதிலிருந்து எத்தனை முறை இந்த நூல் எனக்குப் பெரிய ஆதரவாய் இருந்திருக்கிறது! எத்தனை பெரிய உண்மைகளை அப்படியே சர்வ எளிமையாக விளக்கிவிடுகிறார் தக்ஷிணேஸ்வரத்துக் கிழவனார்! அவர் எங்கே கிழவனாக ஆகிறார்? என்றும் புதுமையுடன் தான் பொலிகிறார்எனக்கு என்னவோ எங்கு சுற்றினாலும் அந்தத் தக்ஷிணேஸ்வரத்து அறையில் ஓரமாகப் பாதி இருட்டு, பாதி ஒளி மூலையில்தான் யதாஸ்தானம் போலும்!

வெறுமனே ஹடயோகம், தியானம், மூச்சுப் பயிற்சி என்றெல்லாம் இருப்பது பெரிய நிலைக்கு ஆளை உயர்த்திவிடாது என்று ஒரு கதை. யாரோ ஒரு வித்தை காட்டும் மாயாஜாலக் காரர். 'மாயம் பாரு! மந்திரம் பாரு! மயக்கும் இந்திர ஜாலம் பாரு! ராஜா பாருங்கோ ராணி பாருங்கோ! ஜோரா கைதட்டி எனக்குச் சோறு போடுங்கோ! துணிமணி கொடுங்கோ! காசு கொடுங்கோ!' என்று கத்தியபடி வித்தை காட்டிக் கொண்டிருந்தானாம் ஒரு மந்திரவாதி. ஏதோ கத்தும் போது திடீரென்று நாக்குப் பிறண்டு மூச்சுக் குழாயில் அடைத்து விட்டது. மூச்சு பேச்சு இல்லை. ஆள் சாகவும் இல்லை. என்ன ஆயிற்றோ, மக்கள் பொறுத்துப் பார்த்துப் பின்னர் ஒரு முடிவுக்கு வந்து, அந்த மந்திரவாதி பெரிய மகான், யோகி என்று முடிவு கட்டினர். அவனுக்கு என்று பாதாள அறை அமைத்து, எல்லாரும் போய்ப் பார்த்து வந்தனர். பெரிய யோகி மூச்சு பேச்சு இன்றி சமாதியில் ஆழ்ந்துள்ளார் என்று அக்கம் பக்கம் ஜனங்கள், வெளியூரில் இருந்தெல்லாம் ஏகப்பட்ட பிரபலமாகி, பல வருஷங்கள் கடந்தன. அவர் அங்கிருந்ததையே கூட ஒரு கட்டத்தில் மக்கள் மறந்து போய்விட்டனர் போலும்.

ஒரு நாள் ஏதோ சுரங்கம் தோண்டுபவர்கள் உள்ளே இறங்கி ஏதோ நகர்த்தவும், இந்த மந்திரவாதி ஆடாமல் அசங்காமல் உட்கார்ந்திருந்ததைப் பார்த்து, ஆள் உயிரோடு இருக்கிறானா என்று பார்க்க உலுக்கிப் பார்த்திருக்கின்றனர். அவர்கள் உலுக்கியதில் எதேச்சையாக அவனுடைய ஒட்டிப் போன உள்நாக்கு மூச்சுக் குழாய் வழியிலிருந்து விலகிவிடவும், அவனுக்கு சுய உணர்வு வந்து, சுற்றி முற்றி முழித்து உடனே ஜிவ்வென்று குதித்துக் கத்த ஆரம்பித்து விட்டானாம்: 'மாயம் பாரு! மந்திரம் பாரு! மயக்கும் இந்திர ஜாலம் பாரு! ராஜா பாருங்கோ ராணி பாருங்கோ! ஜோரா கைதட்டி எனக்குச் சோறு போடுங்கோ! துணிமணி கொடுங்கோ! காசு கொடுங்கோ!' என்ன நகைச்சுவை! என்ன ஆழ்ந்த கருத்து! தக்ஷிணேஸ்வரத்தாரின் உலகமே தனி!
என்ன வேதனை! எத்தனை அவஸ்தை! அறியாமையைப் போல் சுகமானது வேறு இல்லை என்பதை நினைக்க வைக்கும் அளவிற்கு மட்டும் விழித்தும் விழிக்காமலும் இருக்கும் நிலையில் படும் வேதனை! அனைத்தும் அறிந்தவர்கள் பாடு ஆனந்தக் களிப்புஒன்றும் அறியார் பாடு ஏக குஷிஆனால் ஒளியா இருட்டா என்று தெரியாமல் இருக்கும் நிலைக்கு நரகம் கூட இணையாகாது. ஆனால் இந்த வேதனைதான் எத்தகையது என்றால் 
என்பு உருகி நெஞ்சம் இளகிக் கரைந்து கரைந்து 
அன்பு உருவாய் நிற்க அலந்தேன் 
பாராயோ என்னை முகம் பார்த்து ஒருகால் என்கவலை 
தீராயோ வாய்திறந்து செப்பாய் 
ஓயாதோ என் கவலை உள்ளே 
ஆனந்த வெள்ளம் பாயாதோ
கடலே அமுதே தேனே என் கண்ணே 
கவலைப்பட முடியாது என்னை முகம் பார் நீ
கொடுமையிலும் கொடுமை --
எண்ணாத எண்ணம் எலாம் எண்ணி எண்ணி 
ஏழை நெஞ்சம் புண் ஆகச் செய்தது 
இனிப் போதும்

துன்பக் கண்ணீரில் துளைந்தேற்கு உன் ஆனந்த 
இன்பக் கண்ணீர் வருவது எந்நாள் 
வஞ்சனையும் பொய்யும் உள்ளே வைத்து அழுக்காறாய் 
உளறும் நெஞ்சனுக்கும் உண்டோ நெறி
நன்று அறியேன் தீது அறியேன்
நான் என்று நின்றவன் ஆர் 
என்று அறியேன் 
நான் ஏழை 
என்னே
உற்று உற்று நாடி உளம் மருண்ட பாவியை நீ 
சற்று இரங்கி ஆளத் தகாதோ
எள் அளவும் நின்னைவிட இல்லா எனை மயக்கில் 
தள்ளுதலால் என்ன பலன் சாற்றாய்
பாடிப் படித்து உலகில் பாராட்டி நிற்பதற்கோ 
தேடி எனை அடிமை சேர்த்தாய்
உற்று நினைக்கில் துயரம் உள் உள்ளே 
செந்தீயாய்ப் பற்ற நொந்தேன்
பொய்யன் இவன் என்று மெள்ளப் போதிப்பார் 
சொல்கேட்டுக் கைவிடவும் வேண்டாம்
-- என்று தாயுமானவர் பாடிய பராபரக் கண்ணிக்கு இலக்கு பராபரம் மட்டுமன்று, நானும் தான் என்பது எத்தனை உண்மை! அங்கோ பராபரம் ஆனந்தமாக சமாதி நிலையில் தோய்ந்து எழுந்து தோய்ந்து சிரிக்கிறது

*
அறிவு பூர்வமாகக் கேள்வி கேட்பது நாம் மட்டும்தான் என்பது இல்லை. சமயத்தில் ஸ்ரீராமகிருஷ்ணர் கேட்பதைப் பார்த்தால் அவர் பக்தரா அல்லது அறிவு வாதியா தெரியவில்லை. அவர் சொல்லும் ஒரு கதை மிகவும் சிந்திக்க வைப்பது.
ஒரு நோயாளி எப்படிக் குணமாகிறான் என்பதே கொஞ்சம் விந்தையாக இருக்கிறது என்கிறார். அவன் குணமாகும் நேரத்தில் மருந்து வந்து வாய்க்கிறதா அல்லது மருந்து போய்க் கலந்து அதனால் குணம் ஏற்படுகிறதா? அதாவது என்ன என்னவோ மருந்து மாயம் எல்லாம் பண்ணிப் பார்த்தாச்சு சார்! ஒன்றும் பயனில்லை என்று சொல்வதையும் பார்க்கிறோம். சார் அந்த மருந்து இரண்டு சிட்டிகை போட்டார். உடனே நோய் எங்க போச்சுன்னு தெரியல்ல -- இப்படிச் சில அநுபவங்கள் எல்லார் வாழ்க்கையிலும் இருக்கும்.
லக்ஷ்மணன் லவ குசர்களிடம் கூறினானாம்: 'ராமனுடைய பராக்கிரமம் எப்படிப்பட்டது தெரியுமா? ராமனுடைய காலடி பட்டதும் கல்லாக இருந்தது பெண்ணாக மாறிவிட்டது தெரியுமா?' அதற்கு குச லவர்கள் கூறினார்களாம்: 'தெரியும் தெரியும் அந்த ராமன் கதையெல்லாம். ஐயா நாங்களும் கேள்வி பட்டிருக்கிறோம். அது எப்படி நடந்தது என்கிறீர்? ரிஷி கௌதமர் சொன்னார், 'திரேதா யுகத்தில் ராமன் வரும் போது அவனுடைய காலடி பட்டு நீ எழுவாய்' என்றார். அவருடைய வார்த்தையின் சக்தியால் அது அப்படியே நடந்தது. அதை ராமனின் பராக்கிரமம் என்பதா? ரிஷியின் வார்த்தையின் சக்தி என்பதா
என்று கேட்கிறார் ஸ்ரீராமகிருஷ்ணர்.

கதையின் மாந்தர்களை விடுவோம். விஷயம் என்னவென்றால் ஒரு செயல் நடக்கும் போது அது பல காரணங்களைக் கொண்டு நடக்கிறது. ஒரு நிகழ்ச்சி குறிப்பாக இந்தக் காரணத்தினால்தான் நடந்தது என்று சொல்வது கடினம் என்கிறார். அதுதான் விஷயம்அதாவது காரண காரிய நியதியை நடக்கும் நிகழ்ச்சிகளுக்குத் துல்லியமாக நிர்ணயித்துவிட முடியுமா என்பது வாதத்திற்குரிய விஷயம். இப்படிச் சில சமயம் அவரே சில வாதத்திற்கான விஷயங்களைக் கிளப்பிவிட்டு நரேந்திரரும், மற்றவர்களும் வாதம் புரிவதை ஆர்வமுடன் கேட்பதுண்டு என்று '' அவர்களின் குறிப்புகள் காட்டுகின்றன.

*
நிராசை என்பது மனத்தில் உறைத்த பின்னர்தான் ஆன்மிகம், கடவுள், பக்தி என்பதெல்லாம் ஏதாவது அர்த்தமுள்ளதாக ஆகும் என்பதை உணர்ந்துகொண்டிருக்கிறேன். Freedom sprouts in the awareness about slavery. அங்கு சிரிப்பவர்கள் சிரிக்கட்டும் அது ஆனந்தச் சிரிப்பு.!
*
ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு இடம் வாழ்க்கையில் பார்க்க வேண்டும் என்ற ஆசையும், அந்தப் புனிதமான மண்ணில் ஒரு முறையாவது நிற்க வேண்டும் என்றும் ஆர்வமும் கிளர்ந்து எழும். ஒருவருக்கு ஹிமாலய மலைக்குப் போனால் அப்பாடா வாழ்க்கை நிறைவு என்று தோன்றும். ஒரு சிலருக்குக் காசிக்குப் போக வேண்டும். சிலருக்கோ ஸ்ரீகிருஷ்ண சைதன்யர் பிறந்த நாதியா அல்லது பிருந்தாவனம், அல்லது பூரி ஜகந்நாதம். பொதுவாக ஸ்ரீவைஷ்ணவர்களுக்கு, கோயில் என்றாலே அது ஸ்ரீரங்கம் ஒன்றைத்தான் குறிக்கும். நந்தனார் சிதம்பரம் போகாமல் இருப்பேனோ என்பார். இன்னும் மற்ற மதங்கள் என்றால் கேட்க வேண்டாம்


எனக்கு அப்படி எதுவும் அங்கு போக வேண்டும், இங்கு போக வேண்டும் என்ற பெரும் ஆசை எதுவும் உண்டா தெரியவில்லை. எங்கு போனாலும் என்ன? என்ற எண்ணம். எனக்கு அதிகமாக புத்தக மயக்கம் ஏற்பட்டதால் நூலின் மூலமாகக் காணும் உலகங்கள் பெரும் பரவசம் ஆகப் போயிற்று எனலாம். ஆனாலும் ஸ்ரீரங்கம் என்றால் சொந்த இடமாகப் போயிற்றா அது மட்டும் ஒரு வாஞ்சையாகத் தோன்றும்

மற்றபடி ஓரிடத்தை வாழ்க்கையில் பார்த்தே ஆக வேண்டும் என்று மனத்தில் ஊக்கமும் உவகையும் குமிழிடும் என்றால் எனக்கு அது கல்கத்தா தக்ஷிணேஸ்வரம், ஸ்ரீராமகிருஷ்ணரின் அறை, காமர்புகூரில் அவரது பிறந்த இடம், விவேகாநந்தர் வாழ்ந்த இடங்கள், பேலூர் மடம் இப்படித்தான் அடிக்கடி கனவு. ஆனால் வாழ்க்கையில் இதுவரை ஒரு தடவை கூட அங்கு போனதில்லை. போவது கஷ்டமா என்றால் இல்லை. இவ்வளவு ஆண்டுகளில் எப்பொழுது வேண்டுமானாலும் ரயிலேறிப் போயிருக்கலாம். ஆனாலும் ஏக்கத்தில்தான் இருக்கத் தோன்றியதே அன்றி, முனைந்து போவோமே என்று தோன்றவில்லை. ஒரு விதத்தில் பயமாகவும் இருக்கிறது. போய்ப் பார்த்துவிட்டு இருக்கிற நடைமுறை ஏதாவது என்னடா இது இதற்கா இப்படி ஏங்கினோம் என்று எங்காவது தோன்றிவிட்டால் என்ன செய்வது என்று ஒரு பயம். மனிதனுக்கு வாழ்க்கையில் ஏதாவது நப்புக் கொட்டுவதற்கு அஜெண்டா ஒன்று கையிருப்பில் வேண்டும் போலும். ஆனாலும் கூடிய சீக்கிரம் போய்ப் பார்த்து விடுவேன் என்றுதான் நினைக்கிறேன்.

அதாவது மாக்ஸ் முல்லருக்கு இந்தியா எப்படிக் கனவுலகமாகவே இருந்ததோ அப்படியே இருந்து விடாது எனக்கும். அந்த நப்பாசைதான் இப்படி அவ்வப்பொழுது அக்கடா என்று இங்கு வந்து உட்கார்ந்து கொள்வது. இது வரையில் அந்தப் பூசாரி என்னைத் துரத்தவில்லை என்பது நிதர்சனம். இங்கு வந்து உட்கார்ந்து விட்டால் ஒரு பழைய உலகமே மீண்டும் எனக்கு என் கண்முன் நடைபெறத் தொடங்கிவிடுகிறது. பொரொமொஹொம்ஸோ தேப், அப்படித்தான் நானும் சொல்லியிருப்பேனாக இருந்திருக்கும் அவர் மொழியிலேயே பிறந்திருந்தால்.

அவருடைய நிலையைப் பாருங்கள். வினோதம். மற்றவர்களுக்கெல்லாம் நிச்சயமாய் இருக்கும் உலகம் அவருக்கு அவ்வளவு நிச்சயம் இல்லை. ஏனெனில் பல வேளைகளில் இடுப்புத் துணி அவிழ்வது கூட தெரியாமல் பக்திப் பரவசம், அழுகை, ஆழ்ந்த சமாதி. ஆனால் நமக்கு, சாரி, எனக்கு நிச்சயமே இல்லாத ஒன்று அவருக்குப் படு நிச்சயம், ஏன் கண்கூடு. அதுதான் கடவுள். நான் கடவுளைப் பற்றிப் பேசுவேன். அவரோ கடவுளோடு பேசுவார். இந்த இரண்டிற்கும் இடையில் எவ்வளவு பெரும் வித்யாசம் பாருங்கள்!

கடவுள் என்ற ஒன்று, உண்மையாக நெஞ்சைத் தொட்டுச் சொல்லுங்கள், என்ன என்று புரிகிறதா? சும்மா கதை கேட்டது எல்லாம் வைத்து அப்படி இப்படி என்று சொல்லக் கூடாது. அப்படிப் பார்த்தால் கடவுள் என்றால் விளக்கங்களைச் சும்மா வண்டியில் கொண்டு வந்து நூலகமே என்னால் அடுக்க முடியும். அது பதிலில்லை. ஹானஸ்டாகச் சொன்னால் உள்ளத்துக்கு உண்மையாக, கடவுள் என்றால் என்ன என்று புரியவில்லை. கடவுளின் நாமம்தான் பழக்கம். அவன் தூரஸ்தன் ஆனாலும் இது கிட்டி நின்று உதவும் - என்று ஏன் சொன்னார்கள் என்பது இப்பொழுது புரிகிறது. ஆமாம். நமக்குத் தெரிய வருவதெல்லாம் கடவுளின் வெவ்வேறு நாமங்கள்தாம்.

ஆனால் அவருக்கோ கடவுள்தான் நிச்சயம். இந்த உலகம் ஏனோ தானோ, நினைவிருக்கும்வரை நிச்சயம் அப்படித்தான். அவருடைய மன நிலையும், வாழ்க்கையும் எப்படி இருந்திருக்கும்? நம்மைப் போல அவருக்கும் சித்திரம் தோன்றியிருக்குமா அல்லது அங்கு முற்றிலும் வித்யாசமா, இப்பொழுது எனக்கு நான் என்றால் இதோ இந்தப் பேர்வழிதான் பலக்க பலக்க முழித்துகொண்டு நிற்கிறான். அவருக்கு எப்படி இருந்திருக்கும்? அவருடைய நான் என்பது அவருக்கு என்ன பொருளில் பட்டிருக்கும்? இல்லை அங்கு நான் என்று ஒன்றும் இருந்திருக்காதா? அப்படி என்றால் எப்படி வியக்தி நிற்கும்? வாழ்வது?

சும்மா அவரும் நம்மை மாதிரிதான் சார். ஏதோ நம்பிக்கிட்டு இருந்தாரு. அப்படியே அவர் வாழ்க்கை போச்சு. அவ்வளவுதான் என்று சொல்வது சுலபம், ஒரு விதத்தில் நிம்மதி. ஏனெனில் நான் இப்பொழுது படும் தொந்தரவுகள் இருக்காது. ஆனால் இல்லை. அவர் விஷயம் முடிவு கட்டுவது அவ்வளவு சுலபம் இல்லைபாருங்களேன். அங்கும் '' என்பவரிடம் அவர் இதையேதான் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதாவது தாம் யார் என்று அடையாளம் காண்பது இயலாத காரியம் என்று.

அதாவது புராணங்களில் ஒரு மரம் சொல்லப் பட்டிருக்கிறதாம். 'என்னன்னு தெரியாது' அப்படீன்னு ஒரு மரம். தாம் அந்த வகையைச் சேர்ந்தவர் என்று சொல்லிக்கொண்டு இருக்கிறார். யாரோ ஒருவர் அவரிடம் வந்து கடவுளைப் பற்றி ஏதோ கேட்கிறார். ஸ்ரீராமகிருஷ்ணரோ அவரிடம் கடவுளிடம் பக்தி செலுத்துவது, பரிந்தழைப்பது என்றெல்லாம் சொல்லுகிறார். வந்தவரோ எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, 'ஐயா! எனக்குக் கடவுளை நாடி ஓர் ஈர்ப்போ அல்லது அவரிடம் ஈடுபாடோ இல்லையே என்ன செய்வது?' என்கிறார். எப்படி இருக்கிறது கதை? மற்ற சாமியார் யாரிடமாவது இந்த ஆள் போயிருந்தால், இப்படி சொல்லியிருந்தால் தெரிந்திருக்கும் கதை. பாவி! நீ உருப்பட வழியில்லை. இதை வேறு என்னிடமே சொல்கிறாயா? போ வெளியே.- என்றுதான் கத்தியிருப்பார்கள்.

ஆனால் இங்கோ, ம் ம் அதற்கும் ஆர்வமாக அவரிடம் அப்படியா என்று கதை கேட்டுக்கொண்டு இருந்து விட்டு, 'உனக்கு எதில் ஈடுபாடு இருக்கிறது?' என்று கேட்கிறார். அதற்கு அந்த ஆள், 'ஐயா! எனக்கு நான் வளர்க்கும் ஆட்டின் மேல்தான் ஈடுபாடு இருக்கிறது. என்ன செய்வேன்?' என்று சொல்ல,

ஸ்ரீராமகிருஷ்ணர் கொஞ்சம் கூட அலட்டிக் கொள்ளாமல், 'அப்படியென்றால் நீ ஒன்று செய். அந்த ஆட்டை மிகவும் அன்புடன் பராமரித்து வா. உன் அன்பையெல்லாம் அதன் மேல் பொழிந்து, அதற்குப் பாராமரிப்புப் பண்ணும் போதெல்லாம் கடவுளுக்கே நீ தொண்டு செய்கிறாய் என்று மனத்தால் நம்பு. எல்லாம் சரியாகி விடும்' என்று யோசனை சொல்கிறார்.

மனிதம் முழுதும் 
கடவுள் முழுதும் 
கலந்த வியப்பே அவதாரமோ
மானிடம் வாழும் 
மகத்துவம் என்றும் 
மண்ணில் வந்த 
தெய்விகம் என்றும் 
மயக்கும் இயல்பே அவதாரமோ
என்னில் ஒன்றும் 
உன்னில் என்றும் 
என்னைக் கரைத்த வெளிப்பாடோ
எண்ணில் கலந்து 
ஏக்கம் புலர்ந்த 
கண்ணின் விடியல் என்பேனோ
விண்ணை ஈன்ற 
மண்ணின் தாய்மை 
மண்ணில் விளைந்த 
விண்ணின் சேய்மை 
உண்ணின்றுலாவும் 
அருளின் அண்மை



No comments:

Post a Comment