Saturday, May 4, 2019

ஜீவனுடன் ஒரு வழக்கு - தனிச்செய்யுள்

பராசர பட்டரின் ஈடுபாடு அழகியமணவாளனிடத்தில் என்பது மிகவும் சிறப்பானது. அவருடைய மிஸ்டிக் தளத்தில் அரங்கனோடு பேசுவது, நகையாடுவது போன்ற அளவிற்கு மிக உன்னதமான அருளாளர் அவர். ஸ்ரீரங்கநாதருக்கு நடக்கும் திருமஞ்சனம் என்பதைக் காண்பது கண்ணின் பயன் எனலாம். அவ்வாறு ஒரு சமயத்தில் நடந்த திருமஞ்சனத்தின் போது அங்கு இருந்த பராசர பட்டர் தம்முடைய பரவச நிலையில் அரங்கனோடு நடத்திய சம்பாஷணை இதுவாகும். அதைப் பின் வந்தோரும் துய்க்கும்வகையில் ஒரு தனிச்செய்யுளாக ஆக்கித் தந்துள்ளார். இந்தச் செய்யுளுக்கு உள் பாங்கு என்பது ஜீவனுக்கும் பரமாத்மாவிற்கும் நடக்கும் கோர்ட் கேஸ் போன்று இந்தச் செய்யுளின் தாத்பர்யத்தை அமைத்துள்ளார். இதை நான் புரிந்துகொள்வதற்குத் துணையாக இருந்தது ஸ்ரீ உ வே பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் அவர்களின் விளக்கங்கள். நான் அறிந்த பொருளைக் கொஞ்சம் இக்கால நடையில் நண்பர்கள் அறிந்து மகிழ இதைத் தருகிறேன். பராசர பட்டரின் சுலோகத்தைத் தாத்பர்யம் உணர்ந்து இரசிப்பதற்கு பயன்படும் என்ற நம்பிக்கையில்.

*
என்னதான் வழக்கு வியாஜ்யம்னு வந்தாலும் நம்ம சைடுல ஒருத்தர் ஜயிச்சார் என்றால் நமக்கு சந்தோஸம்தானே..!

நம்பெருமாளின் திருமஞ்சனம் நடக்கிறது. இடுப்பு வஸ்திரத்தோடு கழுத்தில் துளஸி மாலை அணிந்து அரங்கன் திருமஞ்சனமாடத் தயாராக உள்ளான். அவ்வழியே வந்த ஸ்ரீபராசர பட்டர் அந்தக் காட்சியைப் பார்த்ததும் பொக்கெனச் சிரித்துவிட்டார். அரங்கனுக்கோ பட்டர் சிரித்தால் தாங்காது. 'என்ன சிரிப்பு?'

பட்டர், 'இல்லையப்பா! உன் சொத்து கை நழுவும்போது நீ படுகின்ற அவஸ்தைபோல் இருக்கிறது நீ நிற்கும் கோலம்!’

'ஓய்! புதிர் போடாமல் விளக்கமாகச் சொல்லும்.'

'இல்லை ஐயனே! பிரபஞ்சமாகிய நீதிமன்றம். நீர்தாம் வாதி. பிரதிவாதி ஜீவன். உங்கள் இருவருக்குள் தீரா வழக்கு ஒன்று. அந்தக் காட்சியைச் சொல்கிறேன்:
*

வாதி(அரங்கன்) --- ஜீவனாகிய நீர் என்னைச் சேர்ந்தவன்.

(பிரதிவாதி எதற்கெடுத்தாலும் குதர்க்கம் பேசுபவன். ஏதி என்றால் ப்ரேதி என்பவன். பரமனுக்கு படுகுஷி. இப்பொழுது ஜீவன் தாம் விரித்த வலையில் விழுந்தே தீருவான். தாம் 'நீ என்னைச் சேர்ந்தவன்' என்றதும் பதிலுக்கு அந்தப் பைத்தியம், 'நோ நோ அதெல்லாம் கிடையாது. நீர்தாம் என்னைச் சேர்ந்தவர்' என்று வாதம் பண்ணத் தொடங்கும். உடனே தாம் 'ததாஸ்து' 'உண்மை முக்காலும் உண்மை. நான் உம்மைச் சேர்ந்தவந்தான். இந்தாரும் எழுதி நானும் கையெழுத்திடுகிறேன். நீரும் கையெழுத்திடும்.' என்று சொல்லிவிட வேண்டியது - என்பது பரமனின் திட்டம். ஆனால் ஜீவன் எவ்வளவு பெரிய எத்தன்? நம்மாளு இல்ல. கொஞ்சமாவது நிதானம் தவறுவானா? பதில் சொல்கிறான் பாருங்கள்....!)

பிரதிவாதி (ஜீவன்) -- நான் உம்மைச் சேர்ந்தவன் அன்று. நீர் என்னைச் சேர்ந்தவரும் அன்று. நான் என்னைச் சேர்ந்தவன்.

(பரமன் --- ஐயோ கெடுத்தானே பாவி!)

வாதி (அரங்கன்) -- நீர் சொல்வதற்கு என்ன அத்தாட்சி?

பிரதிவாதி(ஜீவன்) -- நீர் சொல்வதற்கு என்ன அத்தாட்சி?

வாதி (அரங்கன்) --- வேதமே நான் சொல்வதற்கு அத்தாட்சி.

பிரதிவாதி(ஜீவன்) --- ஹஹ்ஹா! எழுத்தில் வராத பிரமாணம். வாய் வார்த்தை. காதால் கேட்டது. என்ன ஓய்? நீதிமன்ற நெறிகள் தெரியாதா? வாய்மொழிப் பிரமாணத்தை வைத்துக்கொண்டு வழக்குத் தொடுக்க வந்தீரே! ஹஹ

வாதி(அரங்கன்) -- ஹாங்! வாய்மொழிப் பிரமாணமா? அப்படியென்றால் நீர் உம்மைச் சேர்ந்தவர் என்று நீர் கூறிக்கொள்வதற்கும் என்ன எழுத்துப் பிரமாணம் இருக்கிறது காட்ட? எங்கே கொண்டு வாரும்.

பிரதிவாதி(ஜீவன்) -- ஐயோ ஐயோ. பாவங்காணும் நீர். ஓய் அனுபவ பாத்யதை என்று கேள்விப் பட்டிருக்கீரா? அதாவது ஒருவன் எந்த எழுத்து மூல ஆவணம் இல்லாது போயினும், நெடுநாள் ஒரு சொத்தை அனுபவிப்பானே ஆனால், தொடர்ந்து இடைவிடாமல், அப்பொழுது அந்த அனுபவ பிரமாணமே போதிய சான்று ஆகும் தன் கட்சிக்கு ஆதாரம் காட்ட. அநாதி காலம் எனக்கு அனுபவமே நான் எனக்கு உரியவன் என்றுதான் இருக்கிறது. அது எந்தக் கோர்ட்டிலும் செல்லுபடியாகுங்காணும்.

வாதி (அரங்கன்) -- (கொஞ்சம் தெம்புடன்) சரி அய்யா! அனுபவம் பற்றி நானும் அறிவேன். ஆனால் அனுபவ பாத்யதை செல்லுபடியாக வேண்டும் என்றால் அந்த அனுபவத்திற்கு யாரும் அதன் காலத்தில் ஆட்சேபணை தெரிவித்திருக்கக் கூடாது தெரியுமா? முக்கியமாக அதன் உரிமையாளர் தெரிவித்திருக்கக் கூடாது.

பிரதிவாதி(ஜீவன்) --- (கலக்கத்துடன்) ஆட்சேபணையா? யார்? எங்கு? நீரா? எந்த இடத்தில்?

வாதி (அரங்கன்) -- கீதா சாஸ்திரத்தில். பாண்டவ கௌரவ உபயோர் ஸேனையோர் மத்யே. இரு படைகளுக்கு நடுவில். உம்ம இனத்து ஆளு ஒத்தனையே முன்னாடி வைத்துக்கொண்டு (முழிக்கற முழியைப் பாரு)

பிரதிவாதி(ஜீவன்) -- ஆஹா! அதுவா? என்ன ஓய்? ஒரு நிமிஷம் கலக்கிப் புட்டீரு? ஏனய்யா, யுத்த களத்தில் ஆயுத இரைச்சலில், போர்க்கூச்சலில் சொல்லியதெல்லாம் சான்றுக்கு உதவாது என்று உமக்குத் தெரியாது. உம்ம பக்ஷத்துல சேர்ந்த உமக்கு அடியவன் ஒருவனை வைத்துக்கொண்டுதானே நீர் அதையும் சொன்னது? யார் அங்க வேற சாக்ஷி?

வாதி(அரங்கன்) -- கீதா சாஸ்திரம் தெரியாத உலகம் இல்லை. ஆளும் இல்லை. அனைவரும் அறிந்ததுதான்.

(ஜீவன் புன்னகைக்கிறான். அரங்கன் சிந்திக்கிறான். ஏதோ இந்தப் பயல் உள்ளே வைத்துக்கொண்டு இருக்கிறான். யார் சாக்ஷி? என்று கேட்கிறான் துணிச்சலாக. என்னது இது? ஜீவன் உள்ளுக்குள் குஷியாக நினைக்கிறான் -- பாவம் சாக்ஷிக்கு எங்கே போவார் இவர்? இவரைத் தவிர எல்லா சேதன வர்க்கங்களும் ஜீவர்கள் தாமே? ஏனெனில் இவரோ பரம்பொருள், பரமாத்மன், பரம சேதனன் என்ற தன்னைத் தவிர வேறும் யாரும் உறுப்பினர் ஆக முடியாத வகுப்பைச் சேர்ந்தவர். மற்ற அனைவரும் ஜீவனாகிய எனக்கே 'நம்ம இனத்தைச் சேர்ந்தவன்' என்ற அபிமானத்தாலே பரிந்து பேசுவர்களே அன்றி பரமனுக்குப் பரிந்து பேசுவோர் மருந்துக்கும் தேரார்கள். இவர் எங்கே போவார் சாக்ஷிக்கு? பாவம். வழக்கு நம்ம பகக்ம் ஜெயந்தேன்) 

{என்ன நடந்தது? வழக்கின் திருப்பம் என்ன? யார் ஜெயித்தார்கள்?)



வாதி(அரங்கன்) -- சாக்ஷி தானே? ஏன் இல்லை? ஸுதீக்களான ஞானிகள் இருக்கிறார்கள். அவர்கள் கூறுவார்களே யார் யாருக்குச் சொந்தம் என்று.

பிரதிவாதி(ஜீவன்) --- யார்? ஞானிகளா? ஆமாம். அவர்கள் உங்களுக்கு எதிராக என்றேனும் சாக்ஷி சொல்வார்களா? நீங்கள் ஒரு கட்சியில் இருந்தால் உங்களுக்கு எதிர் கக்ஷியில் இருப்பார்களா, மறந்துபோய் கூட?

வாதி(அரங்கன்) -- என்னப்பா? அப்படி இருந்தால் அவர்கள் ஞானிகளே இல்லையே.

பிரதிவாதி (ஜீவன்) --- ஆங். அப்படி வாரும் வழிக்கு. இப்பொழுது தெரிந்ததா? அவர்களின் சாக்ஷி செல்லாது. யாருக்கு எவர் மேல் எந்தத் தனிப்பட்ட சார்பும் இல்லையோ பொதுவானவர்களோ அவர்களின் சாக்ஷிதான் காணும் செல்லுபடியாகும். உம்ம பக்ஷபாதிகளான ஞானிகளை நீர் சாக்ஷியாக நிறுத்த முடியாது. அதுவுமில்லாமல் நீரே என்ன கூறியிருக்கிறீர்.? 'ஞானிகளே என் ஆத்மா ஆவர்' என்று கூறியதுண்டா? பின்? நீரே உமக்கு சாக்ஷி சொல்லிக்க முடியுமா?

வாதி (அரங்கன்) -- (அந்தோ நம்முடைய நெஞ்சிற்கு அணிகலனான சொத்து இந்த ஜீவன் ஆயிற்றே! என்ன செய்தும் இந்த சொத்தை மீட்க முடியாது போல இருக்கிறதே! வேதம் என்றால் வாய்மொழி என்று தள்ளுகிறான். அனுபவ பாத்யதை என்கிறான். ஆக்ஷேபம் என்றால் கூச்சல் என்கிறான். சாக்ஷி கேட்கிறான். சொன்னால் பக்ஷபாதி என்கிறான். இனி என்ன செய்வது? கைகழுவவும் முடியாதே! )

சரி. முள்ளை முள்ளால்தான் எடுக்க வேண்டும். இவன் நீதி நியாயம் சட்டம் என்று பேசுவதை அந்தச் சட்டம் வைத்துத்தான் வெல்ல வேண்டும். சட்ட ரீதியாக ஒருவன் தன் சொத்து கைநழுவிப் போனால், ஒன்றும் பலிக்காது என்று தெரிந்தால், பின்னர் கடைசி பட்சமாக ஒரு வழியைக் கையாளுவர். (அந்தக் காலத்தில்) அது என்னவென்றால், இடுப்பு வஸ்திரம் மானத்தை மட்டும் மறைக்க உடுத்தியபடி, கழுத்தில் துளசி மாலை அணிந்தபடி, தலையில் தண்ணீரைக் கொட்டிக்கொண்டு இருகையும் உயரத் தூக்கிய படி 'அகோர சத்தியம்' என்று ஒன்று செய்வர்கள். அதன்படி இந்தச் சொத்து என்னுடையதே. இது சத்தியம் சத்தியம் புனர் சத்தியம். அப்படிப் பொய் சத்தியம் செய்தேனாகில் இந்தக் கதி அடைவேனாக. என்று, அப்படிச் செய்வது அக்காலத்தில் கடும் சபதமாக நினைக்கப்பட்டது. அதில் ஒருவன் பொய் சொன்னானேயானால் அவன் அவனது குடும்பம், அவன் வாரிசு அனைத்தும் ஜன சமூகத்தால் ஒதுக்கப்பட்டு, அவர்களுக்கு இம்மையும் இல்லை, மறுமையும் இல்லை என்று நிர்கதியாகி விடுவர். இம்மை மறுமை என்ற நம்பிக்கைகள் ஆண்ட காலமாகையால் அத்தகைய சத்தியத்தை அந்தக் காலத்தில் நீதிமன்றங்களும் கடைசி பட்சமான உண்மைக்கான உரைகல்லாய் ஏற்றுக்கொண்டனர்.

அப்படி இருக்கிறது ஐயனே! நீர் திருமஞ்சனத்திற்கு நிற்கும் கோலம். இடுப்பு வஸ்திரத்துடன், கழுத்தில் துளஸி மாலை அணிந்து, திருமுடியில் அபிஷேகமாய்த் தேவரீர் நிற்கும் அவசரம் பார்த்தால் ஜீவனுக்கும் உமக்குமான கேஸில் வழக்குத் தோற்று, வேறு ஒன்றும் செய்யமுடியாத நிர்கதியான நிலையில், அகோர சத்தியம் செய்தாவது நம் அரும் சொத்தான இந்த ஜீவனைத் தக்க வைத்துக்கொள்வோம் என்று நீர் படபடப்புடன் தயாராக இருப்பது போல் உள்ளது, நீர் நிற்கும் கோலம். அதான் சிரிப்பு வந்தது.

முக்தகம் (தனிச்செய்யுள்)

த்வம் மே --- நீ என்னுடையவன்

அஹம் மே ---- நான் என்னுடையவன்

குதஸ்தத் ?--- அது எப்படி?

தத் அபி குத:? --- அதுவும் கூட எப்படி?

இதம் வேத மூல ப்ரமாணாத் --- இது வேதமாகிய மூலச் சான்றின்படி

ஏதச் ச அநாதி சித்தாத் அநுபவ விபவாத் ---- இது அநாதி காலமாக இருப்பதாலும், அனுபவ பாத்யதையினாலும்

ஸோபி ஸாக்ரோச: ஏவ -- அதுவும் ஆக்ஷேபணையுடன் கூடியிருப்பதன்றோ?

க்வாக்ரோச: கஸ்ய? -- யார் ஆக்ஷேபம் செய்தார்கள் எங்கே?

கீதாதிஷு மம விதித: -- கீதாதி சாஸ்திரங்களில், என்னால் ஆக்ஷேபிக்கப்பட்டிருக்கிறது

கோத்ர ஸாக்ஷீ:? -- அங்கு யார் சாக்ஷி?

ஸுதீஸ்யாத் --- ஞானிகளாக இருப்போர்

ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸ -- அய்யோ பாவம்! உமது பக்ஷபாதிகள் அன்றோ அவர்கள்?

இதி ந்ருகலஹே --- இந்த ஜீவனோடு (நரனோடு) ஏற்பட்ட விவகாரத்தில்

த்வம் ம்ருக்யமத்யஸ்தவத் -- துளஸி மாலை அணிந்து முழுக்கிட்டுச் சத்தியம் செய்பவன் போல் நிற்பை நீ !

ஸ்லோகம் –

த்வம் மே அஹம் மே குதஸ்தத் ததபி குத இதம் வேத மூல ப்ரமாணாத்
ஏதச்சாநாதி ஸித்தாத் அநுபவ விபவாத் ஸோபி ஸாக்ரோச ஏவ |
க்வாக்ரோச: கஸ்ய கீதாதிஷு மம விதித: கோத்ர ஸாக்ஷீ ஸூதீஸ்யாத்
ஹந்த த்வத் பக்ஷபாதீ ஸ இதி ந்ருகலஹே ம்ருக்யமத்யஸ்தவத் த்வம்||
(பராசர பட்டர்)

*** 

No comments:

Post a Comment