குழந்தை ஒன்று திண்ணைக் குறட்டில் விளையாடிக் கொண்டிருக்கிறது. தெருவை ஒட்டிய அடைப்புக் கதவில் இரும்புக் கிராதிகளை மறைத்து ஒரு திரை தொங்குகிறது. அதில் மூன்று ஓட்டைகள். காலையில் கிழக்குப் பார்த்த வீட்டில் சூரிய உதயம் அந்த மூன்று ஓட்டைகள் வழியே திண்ணையின் இப்பக்கச் சுவரில் விழுகிறது. விளையாடிக் கொண்டிருந்த குழந்தைக்குத் திடீரென்று கவனம் இந்த மூன்று ஒளிவட்டங்கள் மேல் விழுந்தது. அதற்கு என்ன ஆச்சரியம் என்றால் அந்த மூன்று ஓட்டைகள் வழியே தெரிவதும் அதே சூரியன்தானா? ‘இது ஒரு சூரியன், இது ஒரு சூரியன், இது சூரியன்’ என்று எண்ணித் தந்தையிடம் ‘அப்பா! மொத்தம் மூன்று சூரியன் இருக்குப்பா.’ என்றது. தந்தை கூறினார்: ‘இல்லை குழந்தாய். ஒரே சூரியன் தான் மூன்று ஓட்டைகளிலும் தெரிகிறது’ என்றார். அதற்கு வியப்பு தாங்கவில்லை. ஒவ்வொரு ஓட்டையின் வழியேயும் பார்த்து ‘ஆம் அதே சூரியன் தான்’ என்று வியந்தது. அப்படித்தான் நமக்குச் சொல்கிறார் ஸ்ரீஆதிசங்கரர்.
குழந்தைகள் நிலையில் இருக்கும் நாம் என்ன நினைக்கிறோம்? ‘பழைய காலத்தில் பந்தத்தில், இந்த ஸம்ஸாரத்தில் கட்டுண்டேன்’ இப்பொழுது அரும்பாடு பட்டு முயல்கிறேன். கடவுளைப் பிரார்த்திக்கிறேன். நிச்சயம் அருள் புரிவார். எதிர்காலத்தில் நான் முக்தனாக ஆவேன்’ இதுதான் உலகில் அனைத்து ஆத்ம சாதகர்களும் சொல்லும் வார்த்தை. இந்தக் கருத்து மக்கள் சமுதாயத்தில் வலுவாக இருப்பதால்தான் மதங்கள், மடாலயங்கள், உபதேசம், குருமார் பீடங்கள், சீடர்கள் என்று பெரும் நிறுவனங்கள் நடைபெறுகின்றன. ‘இன்ன இன்ன செய்யுங்கள். கடவுள் அருள் அப்பொழுதுதான் கிடைக்கும்’ என்று வழிமுறை, குறிப்புகள் ஆணைகள் என்று பல நூலகங்கள் இருக்கின்றன. நெடுநாள் கழித்தும் ஒன்றும் முன்னேற்றம் இல்லையே, அருள் கிடைக்கவில்லையே என்று அங்கலாய்த்துக் கேட்கும் சீடர்களுக்குத் தரப்படும் பதில், ‘உங்களுடைய கடந்தகால கர்மம் அவ்வளவு கடுமையாக இருக்கிறது. எவ்வளவு ஜன்மத்து மூட்டைகளோ? அவ்வளவு லேசில் விடுமா? அசராமல் பொறுமையாகத் தொடர்ந்து செய்யுங்கள்’. பல தலைமுறைகள் தாண்டியும் மனிதர்கள்தாம் வேறு வேறு. வார்த்தை அதே சொல்லாடல்தான்.
அந்த எதிர்பார்ப்புடன் தான் நாம் ஸ்ரீஆதிசங்கரரிடமும் கேட்கிறோம். ஆதியில் பந்தம், நடுவில் அவஸ்தை. இனியாவது விடியுமா? அவர் சொல்லும் பதில்தான் நமக்குத் தூக்கிவாரிப் போடுகிறது. அப்பா! நீ உண்மையில் ஆத்மாவாக, பிரம்மமாக இருக்கிறாய். கடந்தகாலத்தும் நீ பந்தத்தில் ஸம்ஸாரத்தில் கட்டுண்டவன் இல்லை. நடுவில் காலத்தும் இப்பொழுதும் பந்தப்பட்டவன் அன்று. இனிவரும்காலத்தும் ஒரு போதும் பந்தத்தில் விழப்போவதும் இல்லை. முக்காலத்தும், எப்பொழுதும் நீ முக்தனே ஆக இருக்கிறாய். அப்படியே நீ பிரமத்தைக் குறித்துச் சிந்தனை செய்வாயாக. நான் எக்காலத்தும், கடந்த காலத்தும், இப்பொழுதும், இனியும் முக்தனாகவே இருக்கிறேன் என்று. ஆத்மாவாகிய நீ உன் இயல்பிலேயே எப்பொழுதும் சிறிதும் களங்கம் அற்றவனாக, நிர்மலனாக இருக்கிறாய். அகங்காரம் என்ற மலம் சிறிதும் உன்னைத் தீண்டுவதில்லை. உபாதிகள் உன்னை ஒருகாலும் சிறை பிடிப்பதில்லை. அவித்யை என்பதன் லவலேசமும் ஒட்டாத சுத்தமான உணர்வாக, சித்தாகவே நீ இருக்கிறாய். அவ்வண்ணமே இருக்கும் அந்தப் பரமாத்மாவே நான் என்று எப்பொழுதும் ஆத்ம சிந்தனை செய்வாயாக!.
என்ன துணிச்சலான வார்த்தைகள் என்று நாம் நினைக்கிறோம். ஆனால் உண்மையில் என்ன கருணைமயமான வார்த்தைகள் என்பது நமக்குப் போகப் போகத்தான் புரியும்.
‘ஆதியிலும், நடுவிலும், முடிவிலும் நான் முக்தனே.
ஒருபோதும் பந்தப்பட்டவன் அன்று.
இயல்பிலேயே நிர்மலனும், சுத்தனும் ஆன
அந்தப் பரமாத்மாவே நான் என்றும்.
ஐயமில்லை’
(ஆதிமத்யாந்த முக்தோஹம் ந பத்தோஹம் கதாசந |
ஸ்வபாவ நிர்மல: சுத்த: ஸ ஏவாஹம் ந ஸம்சய: ||)
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
🙏
ReplyDeleteவாழ்வின் சுவை (The Essence of Life)
ReplyDeleteவாழ்க்கை என்பது ஒரு பழத்தைப் போன்றது:
வெளிப்புற ஓடு: கடினமான உழைப்பு மற்றும் சவால்கள்.
உட்புறக் கொட்டை: ஆழமான நோக்கம் மற்றும் நிலையான உண்மை.
இடைப்பட்ட கனி: நாம் அனுபவிக்க வேண்டிய வாழ்க்கை.
தெளிவான செய்தி:
"வெளியே இருக்கும் போராட்டத்திற்கும் (ஓடு), உள்ளே இருக்கும் ரகசியத்திற்கும் (கொட்டை) இடையில் இருக்கும் அந்த இனிமையான பகுதியைச் சுவைப்பதே வாழ்க்கை. கஷ்டங்களுக்கும் முடிவுகளுக்கும் நடுவில் இருக்கும் இந்தத் தருணத்தைக் கொண்டாடுங்கள்."
சுருக்கமான வாசகம் (Mantra):
"கடினமான உழைப்புக்கும், ஆழமான தேடலுக்கும் இடையில் இருக்கும் இனிமையே வாழ்க்கை – அதை ரசித்து வாழுங்கள்!"