வங்கக் கடல்கிளர்ந்த மாவுரைகள் காட்டுபொருள்
திங்கள் முழுதும் திருப்பாவை தான்விளங்க
எங்கள் இயல்வும் எமைக்காக்கும் தன்னியல்வும்
மங்காப் புகழ்பறையாம் மாதவனார் சேவடியும்
சங்கத் தமிழிசைத்து நங்கள் குலம்வாழ
அங்கத் திருப்பாவை ஆண்டாள் அருளியவா
பொங்கு மலியுவகை பூரிப்பத் தாம்சொல்வார்
எங்கும் திருவருளால் தாம்மகிழ்வ ரெம்பாவாய்.
*
கப்பல்கள் நிறைந்து விளங்குவது கடலுக்கே ஒரு தனி அழகு. அருளிச்செயல் என்பது ஆழம் காண முடியாத கடல் போன்றது. ஆனால் கப்பல்களும், நாவாய்களும் நம்மைக் கடலின் நடுப்பகுதிக்கு அழைத்துச் சென்று அதன் அழகையும், ஆக்கங்களையும் காட்ட இயலும். அவ்வாறு நமக்கு உதவியாய் இருப்பன உரைகள். மார்கழி மாதமே திருப்பாவை மாதம் என்று சொல்லலாம் அளவிற்கு ஆண்டாளின் கிருபையால் நமக்கு வாய்த்தது. திருப்பாவையில் இருக்கும் ஆழ்பொருட்கள் எத்துணையோ! ஆயினும் முக்கியமாக நமக்குத் திருப்பாவை அறிவிப்பதோ ஜீவர்களாகிய நம்முடைய இயல்பையும், நம்மைக் காக்கும் பரம்பொருளின் இயல்பையும், பறை என்று குறிப்புச் சொல்லால் காட்டப்படும் கைங்கரியம், தொண்டு நாம் செய்ய வேண்டியதான மாதவனார் சேவடியையும் சங்கத் தமிழாக இசைத்து அருளியவள் ஆண்டாள். ஏன் சங்கத் தமிழ்? பரிபாடல் சொல்கிறது: ‘நாறிணர்த் துழாயோன் நல்கின் அல்லதை ஏறுதல் எளிதோ வீறுபெறு துறக்கம்?’ என்று. ’வாலறிவன் நற்றாள் தொழார் எனின் கல்வியால் என்ன பயன்?’ என்று கேட்கிறார் திருவள்ளுவர். பிரபன்ன குலம் என்பதற்கு உலகில் எந்த வேலிகளும், விலக்குகளும் கிடையாது. அந்த நம் பிரபன்ன குலத்திற்கு ஸ்ரீஆண்டாள் திருப்பாவையை அருளியிருக்கிறார் என்பதை நினைக்கும் தோறும் உளம்மலி உவகை நமக்கு விஞ்சுகிறது. அவ்வாறு உவகை மீதூறத் திருபபாவையைச் சொல்வோர் எங்கிருந்தாலும், இங்கு உலகில் இருக்கும் காலத்திலும், அங்கு ஸ்ரீவைகுண்டத்தில் இருக்கும் காலத்திலும், இவ்வுலகில் எந்நாட்டில் எந்நிலையில் இருந்தாலும், அங்கிங்கென்னாதபடி எங்கும் சூழ்ந்த திருவருளால் ஆனந்தமயமாகவே வாழ்வார்கள்.
*
திருப்பாவை முப்பதில் தீந்தமிழால் வீட்டை
அருள்பாவை போற்றிப் புனைந்தேன் - மருள்தீர
மார்கழியில் ஆண்டாளம் மாதவனை மன்னியசீர்
ஆரமுதப் பாவின் அருள்.
*
அருளிச் செயலாகி ஆண்டாள் அளித்தாள்
மருள்மதியேன் நானும் மொழிந்தேன் - சிறுவர்தாம்
அன்னைசொலப் பின்னால் மழலை அரற்றுவதைப்
புன்சொல் எனவோ புகல்.
*
ஸ்ரீஆண்டாளின் திருப்பாவை முப்பதையும் அந்தந்தப் பாடலை அந்தந்த வார்த்தைகளே ஒலிக்கும் வண்ணம் இரசிக்க வேண்டும். அதில் ஆண்டாளைப் பற்றிப் போற்ற வேண்டும். திருப்பாவையின் அர்த்தங்கள் தெரியும்படி இருக்க வேண்டும் என்று ஏதோ ஓர் ஆசையில் இந்த முயற்சி. அன்னை சொல்கின்ற வார்த்தைகளைக் குழந்தைகள் திருப்பிச் சொல்லும் போது மழலையாகக் குதப்பும். இருந்தாலும் அன்னை அதைக் கண்டு கோபிப்பதில்லை. அதனால் ஆண்டாள் கோபிக்க மாட்டாள் என்று தெரியும். அதனால் நீங்களும் கோபப் படுவதை விட்டுவிட்டு ஏதோ உற்சாகம் என்று இரசிப்பீர்களாக!
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***