ஏற்ற நலங்கள் இயல்வாகித் தாம்சுடர
மாற்றா மதிநலத்தால் பேருரைகள் தாமொளிரப்
போற்றியாம் பாடத் திருப்பாவை தந்தருளி
ஆற்றப் படைத்தவர் அஞ்சுகுடிக் கோர்மகளாய்
ஊற்ற முடைய உத்தமனைத் தான்வரித்தாள்;
நாற்றத் துழாய்முடி நாரணனை நாம்பெறவே
தோற்றே அவள்தமிழில் தொல்புகழ் பாடிப்போய்
ஆற்றா தடிபணிந்தே ஆழ்ந்திடுவோ மெம்பாவாய்.
*
பொதுவாக வாழ்க்கையில் தோல்வியும், துயரமும் நலமின்மையும் இயல்பு என்றே அனைவரும் நினைக்கின்றோம். உயர்ந்த நலங்களே இயல்பாக இருக்கும் நிலையைப் பற்றி ஏதோ அவ்வப்பொழுது கொஞ்சம் கற்பனை என்று செய்தாலும் அதெல்லாம் அவ்வளவு இயல்பு இல்லை போல் தோன்றுகிறது. ஆனால் ஆண்டாளின் திருப்பாவையில் ஈடுபட்டுக் கற்றுத் தெளியும் போதோ உயர்ந்த நலங்களே வாழ்க்கைக்கு இயல்பு என்று உணரத் தொடங்குகிறோம். சஞ்சலமில்லாத பக்தி, ஞானமே பக்தியாகக் கனிந்த மதிநலம். அந்த மதிநலத்தால் உண்டானவையே பேருரைகள். அவையெல்லாம் அப்பொழுது புதுப்புது அர்த்தங்கள் தந்து ஒளிர்கின்றன. நம் வாயிலோ ஆண்டாளின் போற்றியே திருப்பாவையின் மணமே ஒலிக்கிறது. பகவானுக்கே பல்லாண்டு பாடும் பெரும் செல்வம் வாய்ந்த ஆற்றப் படைத்த பிரான் பெரியாழ்வார். ஆழ்வார்களின் தத்துவசாரம் என்று உருவெடுத்தவள் ஆண்டாள். படைப்பிற்கு முன்பிருந்து இந்த ஜீவர்களைக் காக்கவே முனைந்து நிற்கும் உத்தமனின் ஊற்றம் நினைத்தற்கரியது. அந்த உத்தமனைத் தான் தனக்கு மணாளனாக வரித்தாள். துளசிமணமே கமழும் கேச அழகு உடைய நாராயணனை நாம் பெற வேண்டுமெனில் ஆண்டாளின் தமிழில் நாம் தோற்றுப் போக வேண்டும். அவள் தமிழுக்குள் நாம் தோற்பதே நமக்கு ஆதிமுதல் விதித்த உண்மைப் புகழ். அதில் விலகி நாம் அடைவதாகக் கருதும் வெற்றியெல்லாம் உயிர் நாசமே. இவ்வளவு நாள் இழந்தோமே என்ற ஏக்கம் ஆற்றாது அவள் அடிபணிதலே, பகவத் விஷயத்தில் ஆழ்தலே வாழ்வின் தொடக்கம்.
ஸ்ரீரங்கம் மோகனரங்கன்
***
No comments:
Post a Comment