Saturday, January 7, 2023

திருப்பாவைக்கான இரசனைப் பாடல் - 22

அங்கண்மா கர்வத் தகங்காரம் விட்டகன்று
செங்கமலை தானருளச் செய்யதிருப் பாவைக்கே
எங்கள் இதயமெலாம் ஏக்கமும் கொண்டதுவால்
மங்காப் புகழுடைய மாகுரவோர் தம்முரையால்
சங்கத் தமிழ்மாலைச் செய்யபொருள் போந்ததுவால்
திங்களும் ஒண்சுடரும் தண்கதிர் கண்மலர
எங்கள்மேல் சாபம் இழிந்து திருமாலும்
அங்கண்ணால் நோக்கி அருளேலோ ரெம்பாவாய்.

அங்கண் மாஞாலாத்து அரசர் - என்று திருப்பாவையில் வருவதற்கு வியாக்கியானத்தில் ஸ்ரீஅழகியமணவாளப் பெருமாள் நாயனார் உரைக்கும் அழகிய பொருள். அம் என்றால் அழகிய; கண் என்றால் இடம்; அழகிய இடங்களை உடைத்தான இந்த ஞாலத்திற்குத் தாம் தாமே ஈச்வரர்கள் என்று அபிமாநித்திருக்கும் அரசர்கள்; அவரவர் ஏதோ சில மைல் சுற்றளவே சிலகாலத்திற்கு ஆண்டாலும், அதுவும் நித்யகண்டமாய், தம்மை அனைத்தும் வல்ல அரசர்களாய் அபிமாநித்திருக்கும் அழகு! நான்முகனைக் கேட்டால் ‘நான்’ என்கிறான். ஒரு சிற்றெறும்பைக் கேட்டால் ‘நான்’ என்கிறது. அவன் நான் என்று சொல்வதற்கும், இது நான் என்று சொல்வதற்கும் ஒரு வித்யாசமும் இல்லை. இங்கே அங்கண்மா என்று, கர்வம் கொள்ளும் அகங்காரத்திற்கே அடைமொழியாகக் கூறப்படுகிறது. 

ஒரு கதை சொல்வார்கள். ஒரு பெரும் யானை வழியே போய்க் கொண்டிருந்தது. திடீரென்று ஒரு தவளைத் தன் குழியிலிருந்து வெளிப்பட்டு வந்து யானையைப் பார்த்துச் சகட்டுமேனிக்குக் கத்தியது: ‘கொஞ்சமாவது அறிவு வேண்டாம்; ஆள் தூங்கிக் கொண்டிருக்கும் போது இப்படியா தொம் தொம் என்று அதிர நடந்து செல்வது?’ என்று அது போட்ட அதட்டலைக் கேட்டு அவ்வழியே வந்து கொண்டிருந்த யோகியும் அவரது சீடரும் சிரித்து விட்டார்கள். சீடர் யோகியைக் கேட்டார்: ‘ஏன் இந்தத் தவளை இப்படி நடந்து கொள்கிறது?’ யோகி சொன்னார்: ‘நீ போய் அதன் குழியில் என்ன இருக்கிறது என்று பார்.!’ சீடர் பார்த்தார். ‘ஒன்றுமில்லை. ஒரு பழைய ஒரு ரூபாய் நாணயம் உள்ளே கிடக்கிறது. அதன் மேல் சில இலைகள். அதைப் படுக்கை போல் கொண்டு இது தூங்குகிறது போலும்!’ யோகி சொன்னார்: ‘அதுதான். ஒரு ரூபாய் நாணயத்திற்கே என்ன கர்வம் அகங்காரம் பார்த்தாயா ஒரு தவளைக்கு?’ இப்படி இருக்கிறது அம் கண் மா கர்வத்து அகங்காரம். யாருடையது? நம்முடையதுதான். 

ஆண்டாள் அருளால் இந்த அகங்காரம், கர்வம் நம்மை விட்டகன்று, திருமகளின் அருள் கனிய, திருப்பாவையிலேயே நம் இதயமெல்லாம் ஏக்கத்துடன் தோய்ந்தது. பெரும் ஞானிகளான ஆசிரியர்களின் உரைகளால் திருப்பாவையின் ஆழ்பொருள்கள் புரிய வந்தன. திருப்பாவை நிறைந்த நெஞ்சத்தால் நம் மேல் விழுந்த சாபம் அகன்றது. சிருட்டிக்கு முன்பிருந்தே காத்திருக்கும் செல்வத் திருமாலும் கண்குளிர நோக்கி அருள்கிறார். 

ஸ்ரீரங்கம் மோகனரங்கன் 

***

No comments:

Post a Comment